Sunday, October 18, 2009

ஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்

ஐரோப்பாவில் வெள்ளையின மேலாண்மையை நிறுவ போராடும் (வலதுசாரி) பயங்கரவாத குழு ஒன்று இயங்கி வருகின்றது. Blood & Honour , உலகின் மிகப்பெரிய தலைமறைவு நவ நாஸிஸ இயக்கம். அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் இள வயதினர். ஹிட்லர் இவர்களின் ஆதர்ச நாயகன். பெல்ஜியத்தில் 'ஆர்டணன்' பகுதியில் இடம்பெறும் வருடாந்த ஒன்றுகூடல் பற்றிய ஆவணப்படம் இது.

நெதர்லாந்து/பெல்ஜிய ஊடகவியலாளர் சிலர் நவ நாஸி உறுப்பினர் போல நடித்து, இரகசிய ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை படமாக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் நவ நாசிகள், ஆர்டணன் பகுதியில் பாசறை அமைக்கின்றனர். ஆர்டணன் பகுதியில் 2 ம் உலகப்போரில் மரணமுற்ற ஜெர்மன் நாசிப் படையினரின் கல்லறைகள் உள்ளன. இந்தக் கல்லறைகளுக்கு மலர்வளையம் சாத்தி, நினைவுகூருகின்றனர். நிகழ்வின் சிறப்பம்சமாக ஹிட்லரைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் உரையாற்றுகின்றார்.

"நெதர்லாந்தில் தூய வெள்ளை இனத்தவர்கள் அருகி வருகின்றனர். மொரோக்கர்கள், துருக்கியர்கள் போன்ற அந்நியர்கள் அதிகரித்து வருகின்றனர். நெதர்லாந்து வெள்ளையர்களில் அநேகமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள்." என்ற உரைக்கு கூடியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது. "அந்தந்த இனங்கள் அவரவர்க்கு என ஒதுக்கிய தேசங்களில் வாழ வேண்டும். பல்லின கலாச்சார சமூகம் நடைமுறைச் சாத்தியமில்லை. இதை ஹிட்லர் அன்றே பறைசாற்றினார்." இவ்வாறு கூறுகின்றார், நவ நாஸி உறுப்பினர் ஒருவர். பாசறையில் நாஸிஸ சின்னங்கள் பொறித்த டி-சேர்ட்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் வெள்ளையின மேலாண்மையை புகழும் பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் விற்பனையாகின்றன.

Blood & Honour உறுப்பினர்கள், இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர். நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட தலைமைக்குழு உறுப்பினரிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. நாஸிஸ சித்தாந்தம், இரகசிய கூட்டங்கள், ஆயுதப் பயிற்சி பெறுதல், ஆயுதங்கள் சேகரித்தல், இவை யாவும் Blood & Honour ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இதுவரை குறிப்பிடத்தக்க பயங்கரவாத செயல் எதிலும் ஈடுபடாத போதிலும், வருங்காலத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நெதர்லாந்தும் Blood & Honour அமைப்பை தடை செய்ய ஆலோசித்து வருகின்றது.
(குறிப்பு: வீடியோ நெதர்லாந்து மொழி பேசுவதால், தமிழில் மேலோட்டமாக மொழிபெயர்த்துள்ளேன். )

sitestat


No comments:

Post a Comment