Tuesday, September 22, 2009

தமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன? - நேர்காணல்


இலங்கையின் கடந்த மூன்று தசாப்த கால பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் அதன் மத்தியிலான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என்பனவற்றின் ஊடே ஒரு மாக்சிச கட்சியாகப் புதிய – ஜனநாயகக் கட்சி செயல்பட்டு வந்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள் இனியொரு..வுக்கு வழங்கிய பேட்டி. அதனை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
_____________________________________________________________________________________

இனியொரு : இலங்கையில் கடந்த மே 19ம் திகதியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதையும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பிரகடனப்படுத்திக் கொண்டனர். யுத்த முடிவிற்குப் பின்னான இலங்கையின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது?

தோழர் செந்திவேல் : இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்தயுத்தம் முடிவுக்கு வந்துள்ளதும் தமிழ் மக்களிடையே முன்னெடுக்கப்பட்டு வந்தஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமையும் உண்மையே. ஆனால் அத்துடன் யுத்தம் போராட்டம் என்பனவற்றோடு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்று கூறிவிட முடியாது. தேசிய இனப்பிரச்சினை யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் விரிவு பெற்றுச்செல்வதற்கு அடிப்படையாக அமைந்த இன முரண்பாட்டு விரிசலும் பேரினவாத ஒடுக்கு முறையும் தொடரவே செய்கிறது. அதாவது இரத்தம் சிந்தும் யுத்தம்முடிவுக்கு வந்திருக்கிறதே தவிர இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் தொடரவேசெய்கிறது. அவ்வாறே பொருளாதார நெருக்கடிகளும் அவற்றின் பாரியசுமைகளும் அனைத்து மக்கள் மீதும் பாரிய சுமைகளாக ஏற்றப்பட்டுள்ளன.

இனியொரு : அவ்வாறாயின் “மகிந்த சிந்தனை” அரசாங்கம், நீங்கள் கூறும் அரசியல் யுத்தத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது என்று கருதுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசிய இனத்தின் மீதும் அவர்களது பாரம்பரியபிரதேசங்கள் மீதும் ஆயுத அடக்கு முறையைப் பேணிவருவதானது அரசியல்யுத்தத்தின் ஒரு பிரதான பகுதியாகும். அதே போன்று வடக்கில் மூன்று லட்சம்மக்களை முட்கம்பி முகாம்களில் அடைத்து வைத்து தண்டனைக் கைதிகளைவிட மோசமாக நடாத்தி வருவதும் அரசியல் யுத்த அடிப்படையிலேயேயாகும். அத்துடன் இன்றுவரை அதிகாரப் பகிர்விற்கான எந்தவொரு அரசியல் தீர்வையும்முன்வைக்காமலே காலத்தைக் கடத்திச் செல்வதும் அரசியல் யுத்தமாகவேஉள்ளது. “கிழக்கின் உதயம்” “வடக்கின் வசந்தம்என்பன அரசியல் தீர்வைமறுக்கும் வெறும் கண்துடைப்புக்கள் மட்டுமேயாகும்.

இனியொரு : போருக்குப் பின்பான தென்னிலங்கைச் சூழல் எவ்வாறு காணப்படுகிறது? சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் மனநிலை எத்தகையதாக உள்ளது?

தோழர் செந்திவேல் : போரின் வெற்றியும் விடுதலைப் புலிகளின் தலைமைஅழிக்கப்பட்டமையையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் பொதுவானவரவேற்பைப் பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாகும். அதற்குக் காரணங்கள்இரண்டு. ஒன்று, தமிழர்கள் நாட்டைப் பிரித்து தனித் தமிழ் ஈழத்தை அமைக்கமுற்பட்டுள்ளனர் என்ற அச்சம் முன்பிருந்தே இருந்து வந்துள்ளமை. இரண்டாவது, புலிகள் இயக்கம் சிங்களக்குடி மக்கள் மீதும் அவர்களது பிரதேசங்களிலும் தொடுத்து வந்த ஆயுதத் தாக்குதல்கள். இவற்றின் காரணமாகமகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுத்த யுத்தத்தையும் அவர்கள் கூறி நின்ற பயங்கரவாத ஒழிப்பு என்பதையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ஏற்றுக் கொள்ளவே செய்தனர். அதேவேளை தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வுநியாயமானதாக வழங்கப்பட வேண்டும் என்பதைச் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதியினர் விரும்புகின்றனர் என்பதும் நிராகரிக்கக்கூடியதொன்றல்ல. இருப்பினும் போரின் வெற்றி ஊடாக தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தி தொடர்ந்தும் பதவிகளில் இருந்து வருவதைக்குறிக்கோளாகக் கொண்டே ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் செயல்பட்டு வருகின்ற பிரதான போக்கே தென்னிலங்கையில் காணப்படுகிறது. போரின் வெற்றி கொடுத்துள்ள மகிழ்ச்சி மயக்கத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதாகவே உள்ளது. இப்போரின் மூலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசு யந்திரத்தின் கோரக்கரங்கள் சிங்கள மக்கள் மீது தமது வலிமையைக்காட்டி அடக்குமுறைகள் நிகழ்த்தப்படும் போதே அவற்றின் தாக்கத்தையும் வெற்றிக்கொண்டாட்டங்களின் எதிர் விளைவுகளையும் மக்கள் காண்பர்.

இனியொரு : தென்னிலங்கைச் சூழல் அவ்வாறெனில் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு இருந்து வருகின்றது என்பதைக் கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : பொதுவாகவே தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தின் தோல்வியானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்ட பிரிவினர் புலிகள் இயக்கத்தின் மீதான அனுதாபமாகவும் கடுமையானவிமர்சனமாகவும் மக்கள் பார்க்கின்றனர். அதே வேளை தங்களை இவ்வாறு ஒருமோசமான அடக்குமுறைக்குள் தள்ளிவிட்டார்களே என்ற வெறுப்பும் ஆத்திரமும் இருக்கவே செய்கிறது. வவுனியா மெனிக் தடை முகாமிலிருந்துஅறுபது வயதிற்கு மேற்பட்டவர் என்பதற்காக வெளியே வந்த ஒரு முதியவரைச்சந்தித்தபோது மேற்கூறிய போக்கின் அம்சங்களை அவர் கொண்டிருந்ததைஅவதானிக்க முடிந்தது. அவர் ஒரு முது மொழியையும் கூறிவைத்தார். பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையும் இழந்துவிட்டோம். முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் உள்ள சுமார் மூன்று லட்சம்மக்களுக்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கின் தமிழ்த் தேசிய இனம் முழுவதற்கும்பொருந்தக் கூடிய ஒரு எதிர்மறைக் கூற்றாகவே கொள்ளமுடியும்.

இனியொரு : இந்நிலைக்கு யார் யார் காரண கர்த்தாக்கள் என நீங்கள், எவ்வாறு மாக்சிச லெனினிச நிலைப்பாட்டின் ஊடாகக் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இது தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளாக மட்டும்பார்க்கக் கூடாது. அது நமது நாட்டின் சமூக அமைப்பினதும் ஆளும் வர்க்கம்ஆளப்படும் வர்க்கங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆனால் இதில்தனிநபர்களாகவும் ஆளும் தரப்பு தலைமையாளர்களாகவும் இருந்துவந்தவர்களின் பங்கினையும் பாத்திரத்தையும் நிராகரித்து விடமுடியாது. கடந்தநூற்றாண்டின் ஆரம்பம் முதலே இன்றைய பேரினவாத நச்சு விருட்சத்திற்கானவிதைகள் நாட்டப்பட்டு தகுந்த வழிகளில் தண்ணீர் ஊற்றிப் பராமரித்துவளர்க்கப்பட்டது. அதற்குரிய சூழலையும் நல்ல பசளையும் வழங்கியவர்கள்கொலனித்துவ ஏகாதிபத்திய வாதிகள் அதனை வளர்த்து ஆளும் வர்க்கப்பலாபலன்களைப் பெற்று வந்தவர்கள் நிலவுடைமை வழிவந்த சிங்கள பௌத்தமேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர். மறுதரப்பில் தமிழர் மேட்டுக்குடியினர் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி உயர்வர்க்க அரசியலையே நடாத்தி வந்தனர். மேற் கூறிய இரு தரப்பினரும் சிங்கள தமிழ் உழைக்கும்மக்களின் அபிலாஷகளைக் கவனத்தில் கொள்ளாது விட்டது மட்டுமன்றிஅவற்றிலிருந்து தேசியவாதக் கூக்குரல்களின் மூலம் மக்களைத்திசைதிருப்பியும் கொண்டனர். அவற்றின் எதிர் விளைவுகளையே தமிழ் மக்கள்நேரடியாகவும் சிங்கள மக்கள் மறைமுகமாகவும் அனுபவித்து வருகின்றனர் என்பதே யாதார்த்தமாக உள்ளது.

இனியொரு : இன முரண்பாட்டையும் அதன் காரணமான பேரினவாத ஒடுக்குமுறையையும் அடையாளம் காணும் நீங்கள் அதற்கு எதிரான தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கிறீர்கள். இது ஏன் என்பதை விளக்கிக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : நாங்கள் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை அடையாளம்காண்பதும் எதிர்ப்பதும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயேயாகும். எந்தவொரு தேசிய வாதத்திற்கும் அதாவது பெருந்தேசியவாதமாகிலும்குறுந்தேசிய வாதமாகிலும் அவற்றுக்கு வர்க்க அடிப்படைகள் இருந்துவருகின்றன. அவற்றை மறைத்துக் கொண்டு தேசியவாதம் பேசுவது தவறானநிலைப்பாடு மட்டுமன்றி அபாயகரமானதுமாகும். இதுவே இலங்கையின்துயரமாக கடந்த நூற்றாண்டிலும் இன்றும் தொடர்ந்து வருகின்ற யதார்த்தமாகஉள்ளது. எனவே தேசிய வாதத்தை யார் எத்தகைய நோக்கங்களுக்காககொண்டிருக்கின்றார் என்று பார்ப்பது அவசியம் என்பதே நமது நிலைப்பாடாகும்.

இனியொரு : அவ்வாறாயின் தமிழ்த் தேசியவாதம் கடந்த காலத்திலும் சமகாலத்திலும் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்து நிற்கவோ போராடவோ இல்லை என்று கூற முற்படுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : எதிர்த்து நிற்கவில்லை என்றோ போராடவில்லை என்றோ கூறமுற்படுவது முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முற்படும்முட்டாள் தனமாகும். நாம் கூறுவதும் ஏற்கனவே சுட்டிக் காட்டி வந்ததும்என்னவெனில் தமிழ்த் தேசிய வாதம் என்றுமே முற்போக்கான திசையில் பயணித்து அதற்குரிய பாதையில் உரிய கொள்கைகளை வகுத்து முன்செல்லவில்லை என்பதையேயாகும். நமது கண்ணோட்டத்தில்தேசியவாதம் என்பது முதலாளித்துவ அடிப்படைகளைக் கொண்டதும் மக்களைத்தவறான வழிகளில் இட்டுச் செல்லக் கூடியதுமாகும். நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று இலங்கையில் இன்று சிங்கள தமிழ் முஸ்லீம்தேசியவாதங்கள் யாவும் மேற்கூறிய அடிப்படைகளிலேயேமுன்னெடுக்கப்படுகிறது. இவற்றால் உழைக்கும் மக்கள் பிளவுபடுத்தப்படுவதுமட்டுமன்றி இன மொழி மத பிரதேச நிலைகளின் ஊடாக ஒருவரோடு ஒருவரைமோத வைக்கவும் முடிகிறது. இந்தப் போக்கின் ஊடாகவே தமிழ்த்தேசிய வாதப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது தவறானதும் பிற்போக்கானதுமாகும். அதுவே இன்றைய அவல நிலைவரை கொண்டு வந்துவிட்டுள்ளது.

இனியொரு : அப்படியானால் தேசியவாதத்தில் முற்போக்கான கூறுகளோ அவற்றை முன்னெடுக்கும் நிலைப்பாடுகளோ இல்லை என வாதிடுகிறீர்களா?

தோழர் செந்திவேல் : இல்லை அப்படி வாதிடுவது அறிவீலித்தனமாகும். தேசியவாதத்திற்கு சில அடிப்படைகள் இருப்பது போன்று குறிப்பிட்ட தூரஎல்லைகளும் உண்டு. எனவே பிற்போக்கான கூறுகளைக் கொண்ட தேசியவாதத்தால் அவ் எல்லைகளைச் சென்றடையவோ அன்றி அதனைத் தாண்டிப்பயணிக்கவோ முடியாது. ஆனால் முற்போக்கான கூறுகளைக்கொண்டுள்ளதேசிய வாதத்தால் முன்னோக்கிச் சென்று அதன் எல்லைகளைத் தாண்டியும் சோசலிசப் பரப்புக்குள்ளும் பிரவேசிக்க முடியும். அத்தகைய தேசியவாதம் எதிரியார் நண்பன் யார் என்பதைக் கண்டு பொது எதிரியை எதிர்ப்பதில் ஏனையசக்திகளுடன் ஏற்படுத்தவே செய்யும்.

இனியொரு : நீங்கள் கூறும் முற்போக்கான கூறுகளுடனும் எல்லைகளைத் தாண்டும் பாதையிலும் தமிழ்த் தேசிய வாதம் பயணிக்கவில்லை என்று கூறினால் அது பழைய பாராளுமன்றத் தலைமைகளுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ்ப் போராளி இளைஞர் இயக்கங்கள் நீங்கள் கூறும் முற்போக்கான தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதையிட்டு என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழ்த் தேசியவாதத்தை முன்னெடுத்ததாக நீங்கள் கூறும்தமிழ்ப் போராளி இயக்கங்கள் சில ஆரம்பத்தில் முற்போக்கான கூறுகளைஅடையாளம் காட்டுவனவாகத் தோற்றம் தந்தனவே தவிர அவர்களது கொள்கைகோட்பாடுகளில் தெளிவின்மையும் ஊசலாட்டங்களும் இருக்கவே செய்தன. தமிழ் மக்களிடையே காணப்பட்ட உள் முரண்பாடுகளிலும் சிங்கள மக்களைப்பார்த்த பார்வைகளிலும் இந்தியாவை அனுகிய முறையிலும் அவர்களின்நிலைப்பாடு தெளிவற்றதாகி விரைவாகவே பிற்போக்கான நிலைகளுக்குசென்றடைந்தது. இந்தியாவையோ அன்றி மேற்குலகத்தையோ தாங்கள்பயன்படுத்துவதாகக் கூறி இறுதியில் இவர்களே அந்நிய சக்திகளால்பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்களாகினர். ஆதலினால் அவர்கள் பெயரளவில்ஆரம்ப நிலையில் முன்வைத்த முற்போக்கானவை என்று கூறப்படும்சகலவற்றையும் தமிழ்த்தேசிய வாதத்தில் இருந்து வந்த பிற்போக்கானகூறுகளுடன் சமரசமாகி அதற்குள் மூழ்கிப் போகினர். இறுதியில் ஒருவரோடுஒருவர் மோதியதுடன் வழமையான தமிழ் தேசிய பாராளுமன்றசந்தர்ப்பவாதத்துடன் புதிய முகவர்களாகவும் மாற்றமடைந்தனர். இவர்கள்பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுடன் சமரசமாகிக் கொள்ளவும் செய்தனர்.

இனியொரு : நீங்கள் மேற்கூறியது போன்று பல தமிழ் இளைஞர் இயக்கங்கள் சீரழிந்து கொண்டமை போல் அல்லாது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்த் தேசியத்தை வித்தியாசமாக முன்னெடுத்து வந்தது என்று கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கான கூறுகளில் பெரும்பாலானவற்றைக் தங்களுடன்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழீழக் கோரிக்கையை பழைமைவாதப் பிற்போக்குவாத தமிழ்த்தேசியப் பாராளுமன்றத் தலைமையிடம் இருந்தேகையேற்றிருந்தனர். அதேபோன்று சகல பழைமை வாதக்கருத்தியல் நடைமுறைகளையும் உள்ளுரக் கொண்டிருந்தனர். சில விடயங்களில் குறிப்பாக சாதிய முரண்பாட்டில் தாம் முற்போக்கானவர்கள் போன்று காட்ட முற்பட்டனரேதவிர தமிழ் மக்கள் மத்தியில் அந்த முரண்பாட்டை உரியவாறு அனுகவோ தீர்க்கவோ முற்படவில்லை. அப்படிச் செய்வது தமது பலத்திற்குபலவீனமாகிவிடும் என்றே நம்பினர். மேலும் அவர்கள் இறுதிவரை நம்பியது அமெரிக்க மேற்குலக சக்திகளையேயாகும். உலகில் எங்காவது தேசியவிடுதலையை நேர்மையாக விரும்பிய மக்களும் விடுதலை இயக்கங்களும்ஏகாதிபத்தியங்களை நம்பிக்கையான நண்பர்களாகக் கொண்டுள்ளனராஎன்பதைக் காணத்தவறினர். புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரிடம் தனிப்பட்ட முற்போக்கான சிந்தனைகளோநடைமுறைகளோ ஏகாதிபத்திய எதிர்ப்போ இருந்திருக்கக் கூடும். ஆனால்தலைமையின் நோக்கிலும் போக்கிலும் தமிழ்த்தேசிய வாதத்தின் பிற்போக்கானஅம்சங்களே மேலோங்கி இருந்தன. தமிழ்த்தேசிய வாதத்தின் ஆண்ட பரம்பரை அகங்காரம் புலிகள் இயக்கத்திடம் வாரிசுரிமையாகப் பெறப்பட்டிருந்தது. இதனைத் தமிழ்த்தேசியவாதத்தின் பிற்போக்கு அம்சங்களை அகங்காரமாக முன்னெடுத்த அமிர்தலிங்கத்திடமும் அவரின் தொடர்ச்சியாகப் பின்பற்றிய பிரபாகரனிடமும் காணக்கூடியதாக இருந்தது. அமிர்தலிங்கம் ஆயுதம் தரிக்காதபிரபாகரன். பிரபாகரனோ ஆயுதம் தரித்த அமிர்தலிங்கம் என்பதாகக் காண்பது பொருத்தமானதாகும். இதன் ஊடாக புலிகள் இயக்கத்தின் பிற்போக்கான தமிழ்த்தேசிய வாதத்தினை அடையாளம் காணலாம். ஆதலால் முப்பது வருடகாலத்தமிழர்போராட்ட வரலாற்றின் ஊடாகக் காணமுடிவது பாராளுமன்றப்பாதையில் இருந்து ஆயுதப் போராட்டத் தடத்திற்கு மாறிய பின்பும் பிற்போக்கான தமிழ்த்தேசியமே முனைப்பாக இருந்து வந்துள்ளது என்பதேயாகும்.

இனியொரு : தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதி நேர நம்பிக்கையான அமெரிக்காவின் தயவை எதிர்பார்த்திருந்த நிகழ்வை நீங்கள் ஏலவே கூறிய கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ள முடியுமா?

தோழர் செந்திவேல் : விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும்மேற்குலகையும் அரவணைத்து நிற்கின்றது என்ற கண்ணோட்டம் முன்பிருந்தேபரவலாக இருந்து வந்த ஒன்று தான். அதற்கு அந்நாடுகளில் வசித்து வரும்தமிழர் மேட்டுக்குடி வழிவந்த உயர் வர்க்கத்தினர் ஒரு காரணமாவர். அதற்குஅப்பால் யூதர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற எண்கருபோன்றஒன்றை தமிழீழமாக உருவகப்படுத்தி அதனை அமெரிக்க மேற்குலக ஆதரவோடுவென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை புலிகளின் கொள்கை வகுப்பாளர்களிடமும் தலைமையிடமும் உறுதியானதாக இருந்து வந்தது. அதற்கான ஒரு வலுவானஆதாரமாகவே போர்க்களத்தின் இறுதி நாட்களில் அவர்கள் அமெரிக்காவின்ஓபாமா நிர்வாகத்திற்கு விடுத்த பணிவான வேண்டுகோள் அமைந்திருந்தது. இதற்கு மேல் அவர்களது அமெரிக்க விசுவாச நிலைபற்றிக் கூற அதிகம் தேவைஇல்லை.

இனியொரு : தமிழ் ஈழக் கோரிக்கை சாத்தியமற்றது. அது அந்நிய ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தை ஏற்கனவே நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைத்து வந்த நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : மாக்சிச லெனினிச வாதிகளாகிய நாம் இது பற்றி அண்மைக்காலத்தில் மட்டும் எதிர்க் கருத்து முன்வைத்தவர்கள் அல்லர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இந்தியா முன்னின்று பங்காளதேசத்தை பாகிஸ்தானிடமிருந்து பிரித்தெடுத்து தனிநாடாக்கியமை போன்று இலங்கையிலும் தமிழீழத்தை உருவாக்கலாம் கருத்து நிலை உருவாக்கப்பட்டது. அதனை இந்தியாவின் மூலமாகவோ அல்லது மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்ஊடாகவோ வென்றெடுக்கலாம் என்ற பெரு நம்பிக்கை ஊட்டப்பட்டது. அவ்வேளை இதனுள் உள்ளடங்கியுள்ள அந்நிய ஊடுருவல் பற்றிய அபாயத்தைமுன்னெச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டி தமிழீழம் சாத்தியம் அற்ற ஒன்று என்றும்எடுத்துக் கூறினோம். ஆனால் தமிழ்த்தேசிய வாதத் தலைமைகள் தமதுபாராளுமன்ற ஆசனங்களை அதிகரிக்கும் நோக்கில் இன மொழி உணர்ச்சிகளைமுறுக்கேற்றி இளந் தலைமுறையினருக்கு தமிழீழக் கனவை ஊட்டினர். அவர்களும் யூதர்களையும் இஸ்ரேலையும் முன்னுதாரணமாகக் கொண்டுதமிழீழ மாயையைக் கட்டியெழுப்பினர்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கை பற்றி அன்று நீங்கள் எதிர்க்கருத்தைக் கொண்டிருந்த போதிலும் அதனை மக்கள் மத்திக்கு எந்தளவிற்கு பரப்புரை ரீதியாகக் கொண்டு சென்றீர்கள்?

தோழர் செந்திவேல் : எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழீழம் என்ற கருத்துநிலை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட சூழலில் மாக்சிச லெனினிசவாதிகளாகிய நாம் அதன் அரசியல் பிற்போக்குத் தனத்தையும் சாத்தியமற்றதன்மைகளையும் மக்கள் முன் பரந்தளவில் பரப்புரை செய்தோம். அன்று தோழர்நா. சண்முகதாசன் தலைமையிலான எமது மாக்சிச லெனினிசக் கட்சி தமிழ்மக்களிடையே கணிசமான செல்வாக்குடைய கட்சியாகக் காணப்பட்டதும் , தொழிற்சங்கப் போராட்டங்களும் காரணம். அறுபதுகளின் நடுக் கூறில் இருந்துஎழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை கட்சியின் தலைமையில் சாதியத்திற்கும்தீண்டாமைக்கும் எதிரான வெகுஜனப் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்த சூழலாகும். அக்கால கட்டத்தில் தமிழீழம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தி பல கூட்டங்கள் கருத்தரங்குகள் விவாதங்களை எமது கட்சி முன்னெடுத்துவந்தது. அதில் இரண்டு சந்தர்ப்பங்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவையாகும். முதலாவது விவாதம் ஆனைக்கோட்டையில் பாரதிசனசமூக நிலையத்தினர் ஒழுங்கு செய்த விவாத மேடையில் இடம்பெற்றது. தமிழீழம் சாத்தியம் / சாத்தியமில்லை என்பதே தொனிப்பொருளாகும். சாத்தியம் எனக் கூறி ..ஈழவேந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி சார்பான குழுவும், சாத்தியம் இல்லை என்பதை முன்வைத்து சி.கா.செந்திவேல் தலைமையிலான மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சார்பான குழுவும் கடுமையானவிவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குத் தலைமை தாங்கிய அவ்வூர் தமிழ்ப் பண்டிதர்ஒருவர் மேற்படி விவாதத்தில் முன்வைக்கப்பட்ட தர்க்க நியாயங்களின் படிதமிழீழம் சாத்தியமற்றது எனவாதிட்ட குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர் எனஅறிவித்தார். இதனால் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படவும்செய்தது. அடுத்த விவாதம் சுன்னாகம் சந்தை மைதானத்தில் தோழர் நா.சண்முகதாசனுக்கும் அன்றைய உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.தருமலிங்கத்திற்கும் இடையில் இடம்பெற்றது. இதற்கு பிரபல கல்வியாளரும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபருமான ஒரேற்றர் சி.சுப்பிரமணியம்தலைமை தாங்கினார். அவ்விவாதத்தில் தோழர் சண் தமிழீழம் என்பது தமிழ்மக்களுக்கு கண்ணாடியில் நிலாவைக்காட்டி ஏமாற்றுவது போன்றதாகும் எனச்சுட்டிக் காட்டி அதன் சாத்தியமற்ற அம்சங்களைச் கோடிட்டுக் காட்டியிருந்தார். இவ்விரண்டு விவாதங்களும் 1975ஆம் ஆண்டில் இடம்பெற்றன. அதாவது தமிழீழப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பாகவே அதன்சாத்தியமின்மையையும் அந்நிய சக்திகளின் தலையீடுகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது.

இனியொரு : இவ்வாறு நீங்களும் உங்கள் கட்சியும் தமிழீழக்கோரிக்கையை நிராகரித்த சூழலில் எத்தகைய தீர்வை தமிழர் பிரச்சினைக்கு முன்வைத்தீர்கள்?

தோழர் செந்திவேல் : எமது கட்சி தமிழ் மக்களின் இனமொழி பண்பாட்டுத்தனித்துவங்களை ஏற்றுக்கொண்டு பிரதேச சுயாட்சி அமைப்பின் மூலம் இனப்பிரச்சினையை வளரவிடாமல் தடுத்து நிறுத்தி தீர்வு காணலாம்என்பதையே வற்புறுத்தி வந்தோம். பிரதேச சுயாட்சிக் கொள்கையை கம்யூனிஸ்ட்கட்சி முன்பிருந்தே பின் பற்றி வந்தது. தமிழரசுக்கட்சி சமஷ்டிக்கொள்கையை முன்வைத்த காலத்தில் 1954ல் கம்யூனிஸ்ட் கட்சியின்வல்வெட்டித்துறை மாநாடு பிரதேச சுயாட்சிக் கொள்கைத்திட்டத்தை நிறைவேற்றியது. இதுவே முழுக் கட்சியின் கொள்கையாகவும் பின்பற்றப்பட்டது. அக் கருத்து பரவுவதை தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் தீவிர உணர்வுப்பிரசாரத்தால் முறியடித்தன. பிரதேச சுயாட்சியை ஐக்கியப்பட்டஇலங்கைக்குள் இனவாதத்தை வளர்க்காது முன்னெடுக்க வேண்டும்என்பதையே பொதுவாகவே இடதுசாரிகள் அனைவரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பாராளுமன்ற அதிகாரத்திற்குப் போட்டியிட்டு வந்த இரண்டு பேரினவாதமுதலாளித்துவக் கட்சிகள் சிங்கள பௌத்த அத்தகைய தீர்வு ஏற்படுவதை நாசப்படுத்தியே வந்துள்ளமை தான் வரலாறாகும்.

இனியொரு : இலங்கையின் இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினையில் நேர்மையாக நடக்கவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகிறதே அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : பொத்தாம் பொதுவாக இடதுசாரிகள் என்று கூறப்படுவது வலதுசாரித் தமிழ்த்தேசியவாத சக்திகளது குற்றச் சாட்டாகும். இந்த நாட்டில்இடதுசாரி இயக்கம் பொதுவாகவே அறுபதுகளின் நடுக் கூறுவரை இனப்பிரச்சினையில் நேர்மையாகவே நடந்து வந்துள்ளன. மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட வேளையிலும் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்னும் பிற தமிழ் முஸ்லீம் மலையக மக்களுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகளின் போதும் இம் மக்களின் பக்கமேஇடதுசாரிகள் உரத்துக் குரல் கொடுத்து வந்தனர். அவ்வேளைகளில் எல்லாம் இடதுசாரிகளுடன் இணைந்து நிற்கவோ ஆதரவு தரவோ தமிழர் தலைமைகள்முன்வரவில்லை. அதன் பின் இடதுசாரிகள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத வழியில் செயல்படத் தொடங்கிய காலம் முதல் தேசிய இனப்பிரச்சினையில் சறுக்கல்களையும் ஊசலாட்டங்களையும் கடைப்பிடித்து பேரினவாத சக்திகளின்முன் குரலற்றவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது நிலைப்பாட்டிற்கு அப்பால்நேர்மையான இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு அப்பால் தேசியஇனப்பிரச்சினையில் உறுதியாகவும் நேர்மையாகவும் வழிநடந்து வந்துள்ளனர்என்பது திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இலங்கையின் தேசியஇனப்பிரச்சினையில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டினை கனடாவின் மின்ரொபாபல்கலைக்கழகப் பேராசிரியரான ரவி வைத்தீஸ்பரா ஆய்வு செய்த நூல் ஒன்றுபல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனியொரு : உங்களுடைய கட்சி தேசின இனப்பிரச்சினையில் முன்வைத்த கொள்கை நிலைப்பாடும் நடைமுறை வேலைகள் பற்றியும் சுருக்கமாகக் கூறமுடியுமா?

தோழர் செந்திவேல் : எங்களுடைய கட்சியான புதிய ஜனநாயக கட்சி 1978ஆம்ஆண்டிலேயே தோற்றம் பெற்றது. அது தோற்றம் பெற்ற சூழலானது பௌத்தசிங்களப் பேரினவாதம் ஜே.ஆரின் தலைமையில் ராணுவ ஒடுக்குமுறையாக முன்தள்ளப்பட்ட காலப்பகுதியாகும். அதேபோன்று தமிழ்த் தேசியவாததலைமையிடம் இருந்து ஆயுதப்போராட்ட இளைஞர் இயக்கங்கள் தமிழீழக்கோரிக்கையை தமதாக்கி முன்னெடுத்து வந்த காலமுமாகும். இந்நிலையில்எமது கட்சி ஒடுக்கப்படும் அனைத்து உழைக்கும் மக்களின் கட்சி என்பதால்தேசிய இன ஒடுக்கு முறையையும் எதிர்த்தே நின்றது. அதேவேளைபிரிவினையின் அடிப்படையிலான தமிழீழக் கோரிக்கையை சாத்தியமற்ற ஒன்றுஎன்றும் பிற்போக்கானதென்றும் நிராகரித்துக் கொண்டது. இதன் காரணமாக தேசிய இனப்பிரச்சினையில் சுய நிர்ணய உரிமை பற்றிய வரையறைகளைவளர்த்தெடுப்பதில் தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை யதார்த்தத்தின்வாயிலாகவும் கட்சி தனது நிலைப்பாட்டை முன்வைத்து வலியுறுத்தி வந்தது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு இணைந்தபிரதேசத்தில் சுயாட்சியை கட்சி வலியுறுத்தியது. அத்தகைய சுயாட்சிஅமைப்பின் கீழ் முஸ்லீம் மக்களின் தனித்துவங்களையும் தன்னடையாளங்களையும் பேணரக் கூடிய சுயாட்சி உள்ளமைப்பை ஒருஅலகாகக் கொள்ளல் வேண்டும் என்பதையும் முன்வைத்தது. அவ்வாறேமலையக மக்களுக்கான சுயாட்சி உள் அமைப்புகளை சுயாட்சி அலகுகளாகமலையகப் பிரதேசத்தில் உருவாக்குவதையும் கட்சி முன்வைத்தது. இத்தகையசுயாட்சியானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்த் தேசிய இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கட்சி தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் வலியுறுத்தி நின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

இனியொரு : இவ்விடத்தில் உங்கள் கட்சி முன்வைத்துள்ள தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருந்து வருகின்றது என்ற வரையறை எந்தளவுக்கு சரியானது என்பதை விளக்க முடியுமா?

தோழர் செந்திவேல் : தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக வளர்ச்சிபெற்றுள்ளது என்ற எமது நான்காவது தேசிய மாநாட்டின் வரையறுப்பானதுஇலங்கையின் சமூக முரண்பாடுகளினதும் அவை தோற்றுவித்த பாரியபிரச்சினைகளிலிருந்தும் பெறப்பட்ட ஒன்றாகும். அதாவது இலங்கையின் அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாட்டின் வளர்ச்சியையும்முனைப்பையும் மழுங்கடிக்கும் வகையில் இனமுரண்பாடு யுத்தமாக்கப்பட்டும் அரசியல் தீர்வு இன்றியும் தொடரப்படுகிறது. சகல முனைகளிலும் தேசியஇனப்பிரச்சினை கூர்மையாக்கப்பட்டுள்ள சூழலிலேயே அது பிரதானமுரண்பாடாகியது. வெறுமனே புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையிலான போராட்டத்தால் மட்டும் அது பிரதான முரண்பாடாகவில்லை. அவ்வாறு யாராவது பார்த்தால் தேசிய இனமுரண்பாட்டின் அடிப்படைகளை மறுத்து தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சினையையும் இருப்பையும் எதிர்காலத்தையும் குறுக்கிப்பதாகும். இன்றும்கூட அதாவது யுத்தம் முடிவுற்று புலிகள் இயக்கத்தலைமை அழிக்கப்பட்டபின்பும் கூட இப்பிரதான முரண்பாடு என்பது நீடித்துவரவே செய்கின்றது. இது இன்றைய அரசியல் யதார்த்தமாகவே உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான அரசியல் தீர்வுமுன்வைக்கப்பட்டு அரசியல் அமைப்பு வாயிலாகவும் நடைமுறை வழிகளிலும்செயல்படுத்தப்படும் சூழலிலேயே தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடுஎன்ற இடத்திலிருந்து கீழிறங்கி தாழ்நிலைக்கு வர முடியும். அப்போதேஅடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு முனைப்படைந்து அனைத்துஉழைக்கும் மக்களும் தமது வர்க்க ஐக்கியத்தின் மூலம் வெகுஜனப் போராட்டப்பாதையில் முன்சென்று கொள்ள முடியும்.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பிரதான முரண்பாடாகவும் யுத்தமாகவும் ஆயுதப் போராட்டமாகவும் வளர்ச்சிபெற மூன்று சக்திகள் காரணமாக நின்றன பற்றி நீங்கள் முன்னைய அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதுபற்றி சிறிது கூற முடியுமா?

தோழர் செந்திவேல் : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை கடந்த முப்பதுஆண்டுகளாகக் கொடிய யுத்தமாகவும் அழிகரமான ஆயுதப் போராட்டமாகவும்நீடித்து வந்ததில் மூன்று தரப்பினர் முக்கிய பங்குதாரர்கள் ஆவர். 1 – இலங்கையின் நிலவுடைமை வழிவந்த பௌத்த சிங்களப் பேரினவாதமுதலாளித்துவ மேட்டுக்குடி உயர்வர்க்க ஆளும் வர்க்க சக்திகள். 2 – தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் தொடர்ந்து முன்னெடுத்து வந்த குறுந்தேசியவாதநிலைப்பாடு. 3 – இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் அமெரிக்கமேற்குலகஏகாதிபத்திய சக்திகளும் பின்னால் இருந்து செயற்பட்டு வந்தமையாகும். அதன்மூலம் இம் மூன்று தரப்பினரும் தத்தமது வர்க்க நலன்கள் தேவைகள்தத்தமக்குரிய இருப்பு எதிர்காலம் என்பனவற்றைப் பேணிப்பாதுகாத்தும்கொண்டனர். அதேநேரம் கடந்த முப்பது வருடகால யுத்தம் போரட்டத்தில் ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள்தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் மக்களே இழப்புக்களையும் அழிவுகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையானது பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் முரண்பாடுகளை மேலும் வளர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ் முஸ்லீம் உறவுகள் சீர்குலைந்துள்ளன. இவற்றுக்கான காரணங்களை எவ்வாறு இனம் காண்கிறீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கைத்தீவில் ஏற்கனவே இனமுரண்பாட்டின் தீவிரத்தாலும் பேரினவா ஒடுக்குமுறையாலும் அதை எதிர்ப்பதாகக் கூறி நின்றனர். தமிழ்த் தேசியத்தின் குறுநிலைக் நிலைப்பாடுகளாலும் தமிழ் சிங்கள உறவுகள் உடைந்து பகைநிலையாக்கப்பட்டன. அதன்பின் தமிழ் முஸ்லீம் உறவு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. இதில் பிரித்தாளும் ஆளும் வர்க்க சூழ்ச்சி ஒருபுறம் என்றால் தமிழ்த் தேசியத்தின் குறுந்தேசிய நிலைப்பாடு குறிப்பாக தமிழீழப் புலிகளின் செயற்பாட்டால் அந்த உறவு உடைக்கப்பட்டது. பலைநிலைக்குத் தள்ளப்பட்டது என்பதே உண்மை நிலையாகும். மேலும் தமிழ் சிங்களமுஸ்லீம் மலையகத் தேசியங்கள் ஒவ்வொன்றும் தம்முள் கொண்டுள்ள பிற்போக்கான கூறுகளை முன் தள்ளியவாறே தேசிய இனப்பிரச்சினையில்கொள்கை வகுத்து நிற்கின்றன. அத்தகைய கொள்கைகள் உயர்வர்க்கவசதிபடைத்தவர்களின் பதவிகளுக்கும் சொத்து சுகபோக வாழ்வுக்குமே வசதியளிப்பனவாக உள்ளனவே அன்றி அனைத்து மக்களினதும் நல்வாழ்வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அல்ல என்பதே உண்மையாகும்.

இனியொரு : தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களின் ஊடாகத் தமிழ்த்தேசிய இனத்தின் மத்தியில் சாதிய வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது?

தோழர் செந்திவேல் : தமிழீழக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தியவர்களின்பிள்ளைகளும் அதற்கு ஆதரவாக வேகமான இன உணர்வை முறுக்கிக் கொண்டவசதி வாய்ப்புகள் பெற்றவர்களும்ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறைஆளவேண்டும்என முழக்கமிட்டவர்களும் வேளைக்கே புலம்பெயர்ந்துகொண்டனர். அவர்களுக்கென்ன போய்விட்டார்கள் அகப்பட்டவர்கள்நாங்களல்லோ என்ற நிலைக்கே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளானார்கள். அவர்களே தமிழீழப் போராட்டத்தின் இடி தாங்கிகளாகுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அழிவுகளையும் இழப்புக்களையும் அதிகளவிற்கு அம்மக்களே பெறவேண்டியதாயிற்று. இதனை தழிழ்த் தேசியவாதத்தின் போலி முழக்கங்களுக்கு அப்பால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று சாதிய வர்க்க நிலைகளின் ஊடேகாண்கின்றனர்.

இனியொரு : நீங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் கூறினீர்கள். அப்படியானால் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகின்றீர்களா? அப்படி இல்லையெனில் புலம் பெயர்ந்ததன் மூலம் ஏற்பட்ட சாதக பாதக நிலை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே கூறிய பிரிவினர் தமிழர்கள்மத்தியிலிருந்து சென்ற வசதி வாய்ப்புக்கள் கொண்ட மேட்டுக்குடித் தமிழர்கள்பற்றியே அன்றி நாட்டின் ஒடுக்கு முறையினாலும் குடும்ப சூழலாலும் பல்வேறுதுன்ப துயரங்களுடன் புலம் பெயர்ந்த தமிழர்களை அல்ல என்பது புரியப்படவேண்டும். கடந்த முப்பது வருடகால யுத்த சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்தம் உறவுகளுக்கும் பொது நன்மைகளுக்கும் தாராளமாக உதவி வந்தனர். அதன்மூலம் பட்டினிச் சாவு ஏற்படும் சூழல்கள் தவிர்க்கப்பட்டமை சாதகமான அச்சமேயாகும். அதேவேளை போராட்டத்தின் பெயரால் புலப்பெயர்ந்த மக்களிடமிருந்து நிர்ப்பந்தப்படுத்திப் பெறப்பட்ட பெருந்தொகையான பணம்தேவையற்ற வழிகளில் சமூகப் பயன்பாடற்ற விதத்தில் அழிவுகரமானசெயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டமை பாதகமான அம்சமாகும். புலம்பெயர்வு தனிப்பட்ட குடும்பங்களின் உயர்சிக்கு உதவிய அதேவேளை தமிழ்த்தேசிய இனத்தின் இழப்புக்கும் எதிர்காலத்திற்குமான வேர்களை அறுபடவைத்துள்ளமை பாதகமானதாகும்.

இனியொரு : இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறைக்கு முகம்கொடுத்து வரும் முஸ்லீம் மலையக மக்களின் விடுதலைக்குத் தீர்வாக நீங்கள் எதனை முன்வைக்கின்றீர்கள்?

தோழர் செந்திவேல் : இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறை காரணமான தேசிய இனப்பிரச்சினை என்பது தனியே தமிழ்த்தேசிய இனத்திற்குரியபிரச்சினையாக மட்டும் நாம் பார்க்கவில்லை. முஸ்லீம் தேசிய இனத்தையும் மலையகத் தேசிய இனத்தையும் உள்ளடக்கியுள்ள பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. எனவே தேசிய இனப்பிரச்சினையின் தீர்வு என்பது அவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; என்பது தீர்வின் முன்நிபந்தனையாகும் என்பதே எமது நிலைப்பாடாகும். அத்தீர்வு நிச்சயம் சுயநிர்ணய உரிமைக்குட்பட்ட சுயாட்சித் தீர்வாகவே இருக்க வேண்டும்.

இனியொரு : சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் பேரினவாத மாயைக்குள் சிக்கியிருப்பதால் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமற்றது என்கிற கருத்து நிலைபற்றி உங்கள் கண்ணோட்டம் எத்தகையது?

தோழர் செந்திவேல் : சிங்கள மக்கள் அவ்வாறு பேரினவாத மாயைக்குள் சிக்குண்டு இருப்பதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் பிரதான காரணம். புவிசார் அரசியல் காரணங்களும் அவற்றை ஊதிப் பெருப்பித்து வரும் பேரினவாதசக்திகளின் பரப்புரைகளும் அடுத்த காரணமாகவுள்ளன. இந்நிலையில் இன மதமொழி நிலைகள் சார்ந்த கொள்கை நடைமுறைகளுக்கு அப்பாலான அனைவரும் இலங்கை மக்கள் இலங்கையின் சுபீட்சமும் எதிர்காலம் என்னும்அடிப்படையிலான கொள்கையினை முன்னெடுக்க வேண்டும். இது கடினமானகாரியமாகிலும் சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் புதிய அடித்தளம் பழைய பட்டறிவுகள் மூலம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது பல்லினத் தேசியமாகவும் அதனை ஏற்றுக்கொண்ட நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையும்முயற்சியும் அவசியம்.

இனியொரு : நீங்கள் கடந்த முப்பது வருட யுத்தத்திற்கு பங்களித்த மூன்று சக்திகள் பற்றி ஏலவே கூறியிருந்தீர்கள். அதில் ஒன்றான இந்திய அமெரிக்க மேற்குலக சக்திகளின் பாத்திரம் பற்றிக் கூறுவீர்களா?

தோழர் செந்திவேல் : அன்று 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக தமிழ்ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே அதனை வென்றெடுக்கும் பிரதானநம்பிக்கையாக இந்தியாவே கொள்ளப்பட்டது. அத்துடன் அமெரிக்க மேற்குலக ஆதரவும் அரவணைப்பும் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இக்கோரிக்கையையும் அதற்கு பின்னால் இளைஞர் சக்தி ஆயுதம் தூக்கிநிற்பதையும் வெகுவாக ஆனால் மறைமுகமாக ஆதரித்தன. அதன் மூலம் தமது நீண்டகால உட்கிடக்கைகளை நடைமுறையாக்கி அறுவடையாக்கிக்கொண்டனர். 1. தமிழர்கள் மத்தியில் அறுபதுகளில் உருவாகி வந்த இடதுசாரிப்புரட்சிகரப் போராட்ட சிந்தனையில் இருந்து தமிழ் இளைஞர்களைத் திசைதிருப்புவது. 2. தூர நோக்கில் புரட்சிகர சக்திகளாக வளரக்கூடிய தமிழ்மக்களிடையேயான இளந் தலைமுறையினரை அழிவுகளுக்கு உள்ளாக்குவது. 3. இனமோதலை உக்கிரப்படுத்தி அதன் ஊடாகத் தத்தமது பொருளாதார அரசியல்பண்பாட்டு ஆதிக்கங்களை நிலை நிறுத்துதல். 4 ஆயுத விற்பனையை அதிகரித்தல் முப்பது வருடகால யுத்தத்தை ஒருவர், சமூக நிலைசார்ந்தும்வரலாற்று நோக்கில் காண்பாரானால் மேற்கூறியவற்றை அடையாளம்காண்பதில் சிரமம் இருக்காது.

இனியொரு: சீனாவின் பங்களிப்பு அல்லது உள்நுழைதல் பற்றி என்ன கூறுகிறீர்கள்.

தோழர் செந்திவேல் : நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையின்முப்பது வருட யுத்தத்தில் இந்திய அமெரிக்க மேற்குலக ஆதிக்கப் போட்டியேமுக்கியமானதாகும். அதே வேளை சீனா தடம்மாறிய சோஷலிசப் பொருளாதாரப்பிறள்வுகளுக்கு ஏற்ப தனது பங்கிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாகத்தன்னை வலுப்படுத்தி ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த இடத்தைத்தக்கவைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டது என்பது ஏற்கக் கூடியதாகும். ஆயுதவிற்பனை முதல் அபிவிருத்தித் திட்டங்கள் வரை ஒரு தொடர்ச்சியைச் சீனாகொண்டிருந்தது. அவை இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளின் நோக்கையும், போக்கையும் கொண்டிருந்த அளவுக்கு அல்ல என்பதே இதுவரையானமதிப்பீடாகும். ஆனால் மேற்கூறிய சீனப் பூச்சாண்டியைப் பெரிதாகக் காட்டியேதத்தமது கால்களை மிக உறுதியாக இலங்கையில் பதித்து வருகின்றன என்பதுகாணக் கூடியதேயாகும். எம்மைப் பொறுத்தவரை எத்தகைய அந்நிய ஆதிக்கசக்திகளும் எந்த வடிவில் இலங்கைக்குள் ஊடுருவல் செய்தாலும் அதனை நிராகரிப்பதும் எதிர்ப்பதுமே எமது நிலைப்பாடாகும். அதற்கு சீனாவோ அன்றி பாகிஸ்தானோ எவ்வகையிலும் விதிவிலக்காக இருக்க முடியாது.

இனியொரு : இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் மாக்சிச லெனினிச அடிப்படையிலான கொள்கையும் நடைமுறையும் பற்றிக் கூறுங்கள்.

தோழர் செந்திவேல் : இவ்விடயத்தை எமது கட்சி ஏற்கனவே தனது மாக்சிசலெனினிச நிலைப்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் மூலம் தேசியஇனப்பிரச்சினையின் தீர்வுக்குரிய மார்க்கத்தையும் வகுத்து முன்வைத்துள்ளது. கடந்த நூற்றாண்டிலிருந்து இன்று வரையான தமிழர் போராட்ட வரலாற்றை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தி நான்காவது கால கட்டத்திற்கான பாதையையும் சுட்டிக் காட்டியுள்ளது. 1. பொன்னம்பலம் சகோதரர்களின் காலம்முதல் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முன்வைக்கப்பட்டு வெற்றிபெற முடியாது போன காலம்வரை முதலாவது காலகட்டமாகும். 2. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அது வெற்றியளிக்காது தமிழீழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலம் வரை இரண்டாவதுகாலகட்டமாகும். 3. தமிழீழக் கோரிக்கையை தமிழ் இளைஞர் இயக்கங்கள்ஆயுதம் போராட்டம் மூலம் வென்றெடுக்க முற்பட்டு இறுதியில் வே.பிரபாகரன்தலைமையில் போராடி அண்மையில் அழிவுற்றது வரையான முப்பதுஆண்டுகள் மூன்றாவது கால கட்டமாகும். 4. எனவே நான்காவது காலகட்டமாகஅமைய வேண்டியதும் செல்ல வேண்டியதும் தொழிலாளர்கள் விவசாயிகள்மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள்தலைமையிலான கொள்கையும் வெகுஜனப் போராட்ட மார்க்கமுமேயாகும். இப்போராட்டத்தின் இலக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயநிர்ணயஉரிமை அடிப்படையிலான சுயாட்சியை வென்றெடுக்க மக்களை ஐக்கியப்படுத்திமுன் செல்வதாகவே அமைய முடியும். தமது சொந்தத் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் இவ் நான்காம் கட்டப்போராட்ட மார்க்கத்தில் சுயாட்சி என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் பிரிவினை அல்ல. அவை சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் முழு இலங்கையின் சுதந்திரத்தையும் சுபீட்சத்தையும் அடிஆதாரமாகக் கொண்டவை என்பதை சிங்கள மக்கள் மத்தியில் விளக்கிப்பதியவைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் வாழ்வுரிமைகளையும் அபிலாஷைகளையும் உள்ளடக்கி நிற்பதனையும் விளங்க வைக்க வேண்டும். இதில் சிங்கள மக்கள் மத்தியிலான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் முக்கிய பாத்திரம் வகிக்குமாறு இணைத்துச் செல்லப்பட வேண்டும். இதனையே எமது கட்சி தேசிய இனப்பிரச்சினைக்குரியதும் தமிழ் மக்கள் பயணிக்க வேண்டியதுமான அரசியல்பாதை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

இனியொரு : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் “நாடு கடந்த தமிழீழ அரசு ” பற்றி முன்வைக்கப்படும் கொள்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில்நாடு கடந்த தமிழீழஅரசுஉருவாக்குவது என்ற எண்ணக்கரு புலம்பெயர்ந்த தமிழர்கள்அனைவரினதும் விருப்பம் அன்று. அது அங்கு வாழும் மேட்டுக்குடி ஆண்டபரம்பரையினராகத் தம்மைக் கருதும் உயர் வர்க்கத்தினரின் ஆழ்மனவிருப்பேயாகும். இது யூத சியோனிச வழியில் இஸ்ரேலை உருவாக்கியசிந்தனை மரபுக்கு உட்பட்டதாகும். அவ்வாறாயின் அத்தகைய எண்ணக்கருவிற்கு ஏகாதிபத்திய அரவணைப்பும் உள்ளார்ந்த சதி ஆலோசனைகளும் இருக்கவே செய்யும். இத்தகைய போக்கு இலங்கைத் தமிழர்களை அபாயகரமானநிலைக்கு மீண்டும் தள்ளிக் கொள்வதாக அமைவதுடன் நியாயமான அவர்களதுசுயாட்சிக்கான போராட்டத்தையும் அதன் மூலமாகக் கிடைக்கக் கூடியநியாயமான அரசியல் தீர்வையும் இல்லாமல் செய்யக் கூடியதுமாகும். தமிழ்மக்கள் தமது விடுதலைக்கான எதிர்காலக் கொள்கையையும் போராட்ட மார்க்கத்தினையும் தமது சொந்த மண்ணில் கடந்த காலப் பட்டறிவின் ஊடாகத் தீர்மானிக்க வேண்டுமே தவிர புலம் பெயர்ந்த மேட்டுக்குடித் தமிழ்க்கனவான்களும் கனவாட்டிகளும் தீர்மானித்து திணிக்கக் கூடிய ஒன்றாக. இருக்கமுடியாது. சாத்தியமற்ற தமிழீழக் கோரிக்கைக்காகத் தமிழ் மக்கள் கடந்த முப்பதுஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் வரையான உயிர்களை இழந்துள்னர். சுமார் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் விடுதலையின் பெயரால் சகல இயக்கங்களினதும் போராளிகளாகி மடிந்து கொண்டனர். பல ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். ஐந்து லட்சம் பேர்வரை ஏற்கனவே இடம்பெயர்ந்து சொந்த இடங்களை இழந்துள்ளனர். தற்போது மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி முகாம்களில் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். முப்பது வருடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் பெறுமதியுள்ள தமது வாழ்வாதாரச்சொத்துக்களை இழந்துள்ளனர். சுமார் ஒரு இலட்சம் கணவன்மாரையும், பிள்ளைகளையும் இழந்து பெண்களின் அவலக்குரல்கள் இன்னும் வடக்குகிழக்கில் கேட்ட வண்ணமே உள்ளன. அங்கவீனர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் பேராக உள்ளனர். இத்தனை அழிவுகளின் அவலங்களும்தாக்கங்களும் இரத்தக்கறைகளும் மாறவோ அல்லது மாறுவதற்கான எவ்வித தீர்வோ திட்டமோ ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த அழிவுக்கு வழிகோலும்ஒன்றாகவேநாடுகடந்த தமிழீழ அரசைபுலம்பெயர்ந்த சிலர் முன்வைக்கிறார்கள். இதனை இவர்கள் ஒருமுறை இந்த மண்ணில் வந்து வவுனியாவிலோ வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்கள் மத்தியில் முன்வைப்பார்களானால் என்ன இடம்பெறும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

இனியொரு : இப்பேட்டியின் முடிவாக நீங்களும் உங்கள் கட்சியும் முன்வைக்கும் கொள்கைகளை தமிழ் மக்கள் எந்தளவிற்கு ஏற்று செயல்படுத்த முன்வருவார்கள் என்று நம்புகிறீர்கள்?

தோழர் செந்திவேல் : தமிழர்கள் மத்தியில் இறுகிப்போன பழைமைவாதச்சூழலில் நிலவுடைமை வழிவந்த முதலாளித்துவ உயர் வர்க்கச் சிந்தனையின்தாக்கம் அரசியலிலும் இருந்து வருவது உண்மையேயாகும். இருப்பினும்அவர்கள் மத்தியில் சுரண்டப்படும் உழைக்கும் மக்களும் சாதியரீதியில்அடக்கப்படும் சமூக நீதி மறுக்கப்படும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். அத்தகைய மக்கள் மத்தியில் ஏற்கனவே எமது கட்சிக்கு பரவலான ஆதரவுத்தளம்இருந்து வருகிறது. அதனை விஸ்தரித்து எமது கொள்கைகளை அனைத்து மக்கள் மத்திக்கும் எடுத்துச் செல்வோம் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறது. எனினும் இது கடுமையான எதிர் நீச்சலும் சவாலுமாகும். சமூக முரண்பாடுகளை சரியான படி அடையாளம் கண்டு உரிய கொள்கைகள் மூலம் போராட்டமார்க்கத்தை முன்வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒருமாக்சிச லெனினிசக் கட்சி என்ற நிலையில் எமக்குரியதாகும். அதனை ஏற்பதும்முன்னெடுத்துச் செல்ல முன்வருவதும் மக்களைப் பெறுத்த விடயமாகும் இதில் தமிழ் இளைஞர் இயக்கங்கள் போன்றோ புலிகள் இயக்கம் போன்றோ நாம்மக்களுடன் நடந்து கொள்ள முடியாது. அது நமது மாக்சிச லெனினிசவழிமுறையும் அல்ல நெறிமுறையும் ஆகாது. பொறுமையாகவும் நிதானமாகவும் மக்கள் மத்தியில் கடந்த கால அனுபவாயிலாகவும் பட்டறிவுகளின் ஊடாகவும் வெகுஜன அடிப்படையிலான அரசியல் வேலைகளை முன்னெடுத்துச் செல்வோம் இதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

(நன்றி: தோழர் செந்திவேல் & இனியொரு இணையத்தளம்)


No comments:

Post a Comment