Sunday, June 14, 2009

ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"


"ஈரானிய அதிபர் தேர்தலில் அஹமதிநிஜாத் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிவை ஏற்க மறுத்து தெஹ்ரான் வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன."

மேற்குலகுடன் மோதல் போக்கை பின்பற்றும் கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் அஹ்மதின்ஜாத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார் என மேற்கத்திய ஊடகங்கள் பல ஆரூடம் கூறி வந்தன. அவருக்கு எதிராக போட்டியிட்ட முசாவி ஒரு சீர்திருத்தவாதியாக (அதாவது லிபரல் போக்கு) ஊடகங்களால் காண்பிக்கப்பட்டார். முசாவிக்கு பின்னால் திரண்டிருந்த இளைஞர் பட்டாளத்தை படம் பிடித்துக் காட்டி, முசாவிக்கு நாடு முழுவதும் ஆதரவு இருப்பதாக கூறிக்கொண்டன. பொதுவாக தமது அரசியல் கொள்கை சார்ந்த ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அபிலாஷை காரணமாக இந்த முறையும் சற்று அதிகமாகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

பொதுவாகவே மத்திய கிழக்கு நாடுகளைக் குறித்த புரிந்துணர்வு, மேற்குலகில் குறைவு. அதிலும் ஈரானின் உள்நாட்டு விவகாரம் பற்றி எப்போதும் தவறாகவே கற்றுக் கொள்கின்றனர். ஈரானில் இருந்து அமெரிக்காவிற்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பின்வருமாறு தெரிவித்தார். ஈரானில் பெண்கள் பல்கலைக்கழக கல்வி கற்றிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அப்போது தான் சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் தெரிந்து கொண்டார்களாம். ஈரான் இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடு என்பதால், அங்கே பெண் கல்விக்கு தடை உள்ளதாக "அனைத்தையும் அறிந்த" அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். ஈரான் அரசியல் பற்றிய புரிதலும் அவ்வாறே பத்தாம்பசலித்தனமாக உள்ளது.

ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சர்வாதிகாரம் நிலவுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது. அப்படியானால் எதற்காக தேர்தல் முடிவுகளை ஆர்வமாக அவதானிக்கிறார்கள்? இதில் இருக்கும் முரண்பாட்டை பலர் உணர்வதில்லை. சாதாரண மக்களுக்கு அரசியல் தெளிவின்மை இருக்கலாம். மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கும், ஊடகவியலாளருக்கும் அரசியல் விஞ்ஞானம் தெரியாது என்று சொல்ல முடியாது. அவர்கள் தமக்குத் தெரிந்த ஒரு உண்மையை மக்களுக்கு மறைக்கிறார்கள். அந்த உண்மை "அரசியல் நிர்ணயச் சட்டம்". ஆம், ஈரானில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் இருக்கின்றது. சர்வாதிகாரம் இருக்கின்றது. ஆனால்... அவையெல்லாம் மிக நுட்பமாக கையாளப்படுகின்றது. இதை பொது இடங்களில் வெளிப்படும் சில அசம்பாவிதங்களை மட்டும் வைத்துக் கொண்டு எடை போட முடியாது.

இன்றைய ஈரானின் அரசியல் கட்டமைப்பு 1979 ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியுடன் ஆரம்பமாகியது. புரட்சியை பாதுகாக்க அமைக்கப்பட்ட காவல்படை தேசத்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்து. ஆயத்துல்லா என அழைக்கப்படும் மதத்தலைவரான கொமெய்னி தேசத்தின் தலைவரானார். அமைச்சர்களும் அரசாங்கத்தை நடத்தியவர்களும் மதத் தலைவர்கள் தாம். இதை வைத்துக் கொண்டு, ஈரானில் மதம் அரியணை ஏறியிருந்தது என்று சொல்லப்படுவது உண்மை தான். ஆனால் குறிப்பிட்ட காலம் மட்டுமே மதத் தலைவர்கள் நேரடி நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த சில வருடங்களுக்குள், "புரட்சியை காக்கும் படை" எதிர்ப்பாளர்களை அழித்தொழித்து விட்டது. புதியதோர் அரசியல் நிர்ணயச் சட்டம் எழுதப்பட்டு விட்டது. கடைசியாக சொன்ன வரிகளை தொடர்ந்து நினைவில் வைத்திருங்கள்.

ஆகவே, இப்போது அரசியல் களத்தில் குதிக்கும், தேர்தலில் எதிரும் புதிருமாக நிற்கும் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் புரட்சிக்குப் பின்னர் புதிதாக தோன்றியவர்கள். அதற்கான வழிகளை மதத் தலைவர்களே ஏற்படுத்திக் கொடுத்தனர். அதாவது தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, அதற்கென திறமையுள்ள மத்தியதர வர்க்கம் ஒன்றிடம் கையளித்து விட்டு, மதத்தலைவர்கள் ஒதுங்கி விட்டனர். ஈரானின் அரசியல், பொருளாதார தலைநகரம் எப்போதும் போல தெஹ்ரான் தான். இருப்பினும் தெற்கில் அமைந்திருக்கும் "கோம்" என்ற நகரம் மதத்தலைவர்களின் நிர்வாகத் தலைமையகமாக செயற்படுகின்றது. மதத்தலைவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடவில்லை.மாறாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டமும் மதத் தலைவர்களின் ஒப்புதல் இன்றி நடைமுறைக்கு வராது.

ஜனநாயகத் தேர்தல் கூட, மதத் தலைவர்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் எழுதி வைத்தவை தாம். மேற்குலக நாடுகள், தமது அழுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பது போல பெருமை பேசுகின்றன. உண்மை அதுவல்ல. இஸ்லாமியப் புரட்சியின் பரணாம வளர்ச்சி இந்த ஜனாயகத் தேர்தல். ஒன்றுமே புரியவில்லையே, தலையைச் சொரிபவர்களுக்காக ஒரு ஒப்பீடு. இங்கிலாந்து நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவ மத அடிப்படைவாத புரட்சி ஏற்பட்டது. அதற்குப் பின்னர் பாராளுமன்றமும், முடியாட்சியும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் அரசியல் நிர்ணயச் சட்டம் தோன்றியது. இன்று பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், நோர்வே போன்ற நாடுகளில் அது போன்ற அரசியல் அலகு நடைமுறையில் உள்ளது. இந்த நாடுகளில் சோஷலிசக் கட்சி போன்ற "சீர்திருத்தவாதக் கட்சிகள்" தேர்தலில் போட்டியிடவும் ஆட்சியமைக்கவும் முடியும். எந்தவொரு கட்சியும் அரசியல் சட்டத்தை மாற்ற, மன்னர் குடும்பத்தின் அதிகாரத்தை நீக்குவதற்கு விரும்பினால், அது பெரும் வில்லங்கத்தில் போய் முடியும்.

முடிக்குரிய ஜனநாயகம் போலத்தான், ஈரானின் மதவாத ஜனநாயகமும். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அஹ்மதின்ஜாத்தின் கட்சியினர், மேற்கத்திய நாடுகளில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடத் தக்கது. சீர்திருத்தவாதியான முசாவி (முன்பு கத்தாமி) ஆகியோரின் கட்சியினர், லிபரல்கள் (அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி) அல்லது சமூக ஜனநாயகவாதிகள் (ஐரோப்பாவில் சோஷலிஸ்ட் கட்சி) ஆகியோருடன் ஒப்பிடத் தக்கவர்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், எந்தக் கட்சி தேர்தலில் வென்றாலும் "கோம்"மில் உள்ள மதத்தலைவர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாது. வேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாம். அஹ்மதின்ஜாத் பகுதி, மதத் தலைவர்களுக்கு "பிரியமான பிள்ளைகளாகவும்", சீர்திருத்தவாதிகள் "தறுதலைப் பிள்ளைகள்" போலவும் நோக்கப்படுகின்றனர். அது மட்டும் தான் வித்தியாசம்.

மேற்குலகில் பிரச்சாரம் செய்யப்படுவதைப் போல ஈரானில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தேசத்தை தலைகீழாக புரட்டிப் போடும் வல்லமை கிடையாது. அஹமதிநஜாத் மதத்தலைவர்களுக்கு நெருக்கமானவராக காட்டப்பட்டாலும், இராணுவத்தை போருக்கு தயார் படுத்தும் அதிகாரம் கூட அவருக்கு இல்லை. ஈரானில் சர்வ வல்லமை பொருந்திய சிறப்புப் படையணியான "புரட்சிக் காவல்படை" கூட அஹமதிநஜாத் சொல் கேட்டு நடப்பதில்லை. ஈரானில் அனைத்துப் பாதுகாப்புப் படைகளின் தளபதியாக, உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா கொமெய்னி அதிகாரம் செலுத்துகிறார்.

பொதுத் தேர்தலில் அஹமதிநஜாத் குழுவிற்கும், முசாவி குழுவிற்கும் இடையில் நிலவும் போட்டியும், முரண்பாடுகளும் ஈரானில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவரப் போவதில்லை. இதனை தமிழ் நாடு மாநிலத்தில், இரு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நடக்கும் பூசல்களுடன் ஒப்பிடலாம். நிச்சயமாக, ஈரானிலும் இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று விமர்சிப்பதுடன் நில்லாது, அவதூறுகளையும் அள்ளி வீசுகின்றன. தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க பாணியில் இரு வேட்பாளருக்கும் இடையில் பகிரங்க தொலைக்காட்சி விவாதம் இடம்பெற்றது. இதில் எதிர்த் தரப்பு வேட்பாளர் மீது தனிநபர் தாக்குதல் நடந்ததையும் காண முடிந்தது. முசாவியின் ஆதரவாளர்கள் நாசிச பாணியில் பச்சை வர்ண(கட்சியின் நிறம்) அணிவகுப்புகளை நடத்துவதாக அஹமதிநஜாத் பிரச்சாரம் செய்தார். அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு எல்லாம் அஹமதிந்ஜாத் நிர்வாகம் பொறுப்பெடுக்க வேண்டும் என்று முசாவி குற்றம் சுமத்தினார். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பகிரங்கமாக குறை சொல்லுமளவிற்கு அங்கே ஜனநாயகம் நிலவுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ஈரானில் நடப்பது ஒரு வகை வர்க்கப் போராட்டம். முசாவியின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் மாநகரங்களில் வாழும் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள். அதற்கு மாறாக அஹமதிநஜாத் ஆதரவாளர்கள் நாட்டுப்புறங்களில் வாழும் வசதியற்ற ஏழை மக்கள். இந்தத் தேர்தலில் 85 வீதமனோர் வாக்களித்துள்ளனர். (ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட 43வீதமானோர் மட்டுமே வாக்களித்தனர்.) மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஏழை வாக்களார்கள் அஹமதினஜாத்திற்கு வாக்களித்திருப்பார்கள், என்பதைப் புரிந்து கொள்ள ராக்கெட் விஞ்ஞானம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்தவாதி முசாவி வெற்றி பெற வேண்டுமாயின் முழு நடுத்தர வர்க்கமும், ஒரு பகுதி உழைப்பாளர் வர்க்கமும் வாக்குப் போட்டிருக்க வேண்டும். ஆனால் முசாவியின் தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க நடுத்தர வர்க்க நலன்களை குறிவைத்தே செய்யப்பட்டன. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்கள், நாளாந்தம் உயரும் விலைவாசியால் வாழ்வதற்கு அல்லல் பட வேண்டியுள்ளது. அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும் என்பது அவர்களது பிரச்சினை. அதற்கு மாறாக தின்று கொழுத்து, ஆடம்பரக் கார்களும், அமெரிக்க கலாச்சாரமாக வாழ்க்கையை அனுபவிக்கும் நடுத்தர வர்க்க ஈரானியர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அஹமதிநஜாத் பதவியில் இருக்கும் காலத்தில் நடந்த உலக காற்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் அணி வெற்றிக் கிண்ணத்தை பெறவில்லையாம். அதற்கு முன்னர் இருந்த சீர்திருத்தவாதி கத்தாமியின் ஆட்சிக்காலத்தில் ஈரான் உதைபந்தாட்ட அணி பல போட்டிகளில் ஜெயித்ததாம். (தி கார்டியன் வீக்லி 12-6-09) நடுத்தர வரக்கத்திற்கு இவையெல்லாம் முக்கியமான பிரச்சினைகள். உதைபந்தாட்ட விளையாட்டு வெறி பொதுத் தேர்தலில் எதிரொலிக்கின்றது.

1979 ம் ஆண்டு, ஷா மன்னருக்கு எதிரான இஸ்லாமியப் புரட்சி உழைக்கும் மக்களின் ஆதரவின்றி வென்றிருக்க முடியாது. நாட்டுப்புற உழைக்கும் மக்கள் ஒன்றில் கொமெய்னி தலைமையிலான இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள், அல்லது "துடே கட்சி" என அழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். இவ்விரண்டு சக்திகளும் ஒன்று சேர்ந்து, கொடுங்கோல் ஷா மன்னர் ஆட்சியை கவிழ்த்த புரட்சியை தலைமை தாங்கி நடத்தின. புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தை கையில் எடுத்த மதவாதிகள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி அழித்தார்கள். தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

தேசிய முதலாளிகளின் வளர்ச்சிக்கு, மதத் தலைவர்கள் ஒரு நாளும் குறுக்கே நிற்கவில்லை. ஈரானில் பொருளாதாரம் முழுவதும் புரட்சிக்குப் பின்னர் தோன்றிய தேசிய முதலாளிகளின் கைகளில் உள்ளது. கூடவே முதலாளித்துவத்திற்கு சேவை செய்து கைநிறைய பணம் சம்பாதிக்கும் மத்திய தர வர்க்கம் ஒன்றும் உருவானது. மத்திய தர வர்க்கத்தின் ஆடம்பர மோகத்தையும், கலாச்சார சீரழிவையும் ஆட்சியிலிருந்த மதத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. பங்களாவில் நான்கு சுவர்களுக்குள் இளவயதினரின் நடன விருந்துகள் நடக்கின்றன. சுற்றுலா மையங்களில் 'பிக்னிக்' போகும் இளஞ்ஜோடிகள் உல்லாசமாக பொழுது போக்குகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாத ஈரானில் இப்படி எல்லாம் நடக்கின்றது என்று சொன்னால் வெளியுலகில் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதையெல்லாம் அனுபவிப்பது, மொத்த சனத்தொகையில் 20 % மும் இல்லாத பணக்கார நடுத்தர வர்க்கம்.

நடுத்தர வர்க்கத்தில் இயல்பாகவே காணப்படும் மேலைத்தேய மோகம், அமெரிக்க அரசியல் சார்ந்ததாக இருப்பதில் வியப்பில்லை. மேற்குலக ஊடகங்கள் அதை அடிப்படையாக வைத்து பிரமைகளை தோற்றுவிக்கின்றன. ஈரானிய மக்கள் முழுவதும் அமெரிக்கா தங்களை வந்து விடுதலை செய்ய வேண்டும் என்று காத்திருப்பதைப் போல கதைகளை கட்டி விடுகின்றன. இந்தப் பின்னணியிலேயே ஈரான் தேர்தல் குறித்த மேற்கத்திய பரப்புரைகளையும் எடை போட வேண்டும்.

தேர்தல் முடிந்தவுடன் வந்த செய்தித் தலைப்புக்கள் இவை: "... தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்தேகம்" (டைம்ஸ்) "வாக்குகள் களவாடப்பட்டு விட்டன என எதிர்க்கட்சி வேட்பாளர் முசாவி தெரிவிக்கிறார்."(நியூ யார்க் டைம்ஸ்) "அமெரிக்க அரசியல் அவதானிகள் நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்." (பாக்ஸ் நியூஸ்)

ம்ம்ம்... பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.

5 comments:

  1. ஈரானின் நிலை பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
    ஈரான் ஏழை மக்கள் பற்றி நீங்கள் எழுதியதை படிக்கும் போது தின்று கொழுப்பெடுத்த புலம் பெயர் தமிழர்கள் பலர் தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் உள்ள தமிழர்கள் பலரை அடுத்த வேளை உணவு கையேந்தும் நிலமையை ஏற்படுத்தியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

    ReplyDelete
  2. இத்துடன் தொடர்புடைய, இந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையான பெட்ரோ டாலர் அரசியல் குறித்தும் இங்கு பேசியிருக்கலாம்...

    //பாராளுமன்ற தேர்தல் மூலம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்று மேற்குலக அறிவுஜீவிகள் செய்து வந்த பிரச்சாரத்தை தற்போது தாமே நம்பத் தொடங்கி விட்டனர்.//

    சரியான கருத்துக்கள்....

    ஊடகன்

    ReplyDelete
  3. நன்றி, ஊடகன்.
    இந்தக் கட்டுரை ஈரான் தேர்தல் முடிந்த அடுந்த நாளே எழுந்த பிரச்சினைகளை வைத்து, அவசர அவசரமாக எழுதப்பட்டது. அதனால் ஈரானில் தாக்கம் செலுத்தும் வேறு பிரச்சினைகள் பற்றி எழுதப்படவில்லை. அவற்றை அடுத்து வரும் ஈரான் கட்டுரைகளில் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை.வாக்களிப்பின் முடிவுக்குப் பிறகே மேற்கத்திய ஊடகங்கள் இதில் தலை காட்ட முற்பட்டன.இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு இதுவரை இப்படியான எதிர்ப்புக் குரல் கேட்கவில்லை என்பதிலிருந்து தெரிவது இரு விசயங்கள்.

    1.மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

    2.மாற்றுக் கருத்துக்களையும் ஈரான் உள்வாங்கிக் கொள்கிறது.

    ReplyDelete
  5. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜ நடராஜன்.

    தனது நாட்டினுள் மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு பகுதி ஈரானியர்கள் இருப்பதை அரசு ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அந்த மாற்றம் மேற்குலக நலன் சார்ந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கானல் நீர் தான்.

    ReplyDelete