Friday, May 15, 2009

மதத்தின் பொருளாதார அடிப்படைகள்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 4
"முதலாளித்துவம் ஒரு மேற்கத்திய சித்தாந்தம்" என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்த போதிலும், முதலாளித்துவ பொருளாதாரம் இஸ்லாமின் வருகையின் போதே ஆரம்பமாகி விட்டது. ஐரோப்பிய முதலாளித்துவம் வெனிஸ் நகரத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. வெனிசியர்கள் சிலுவைப்போர் காலத்தில் அரேபியரிடம் இருந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டனர். இஸ்லாம் என்ற மதம் கூட அரேபிய வணிகர் சமூகத்தில் இருந்து தான் தோன்றியது.

சந்தைப் பொருளாதாரத்திற்கு இஸ்லாம் ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய நாகரீகத்தில் சந்தை மேலும் வளம் பெற்றது. சீனா முதல் ஐரோப்பா வரையிலான சர்வதேச சந்தையை தோற்றுவித்தது. இறைத்தூதர் முகமதுவின் பொன்மொழிகள் அடங்கிய "ஹாடித்" தில் "சந்தையில் விலை நிர்ணயம் செய்வது" பற்றிய வசனங்கள் உள்ளன. "விற்பனைப் பண்டங்களின் கேள்வியைப் பொறுத்து, விலையில் ஏற்ற இறக்கம்" இருக்க அனுமதிக்கும் இறைத்தூதர், "பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் விலையை உயர்த்துவதற்கு" சம்மதிக்கவில்லை. வர்ததகர்கள் ஏகபோக உரிமை பெறுவதும், வேண்டுமென்றே விலையை உயர்த்துவதும் போன்ற செயல்களை அன்றைய இஸ்லாமிய அரசாங்கங்கள் கட்டுப்படுத்தின. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் அரசே தலையிட்டு அதிக பட்ச விலையை நிர்ணயித்தது.

மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் சந்தை சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வந்தனர். இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் பகாசுர கம்பெனிகள் ஏகபோக உரிமை பெற்று பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி வந்தன. அப்போது அரசு தலையிட்டு ஏகபோகத்தை உடைக்க வேண்டி வந்தது. இதனால் அரசு தலையீடற்ற தூய சந்தைப் பொருளாதாரம் இருக்கமுடியாது. ஐரோப்பாவில் உருவான "வர்த்தகர் சமூகம்" போன்று இஸ்லாமியப் பேரரசில் உருவாகாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
1. மன்னனின் அதிகாரம் பலமாக நிலைநிறுத்தப் பட்டிருந்தது. வணிகர்களும், புத்திஜீவிகளும் மன்னனுக்கு சேவையாளர்கள் என்ற தரத்தில் இருந்தனர். அவர்கள் பலமான தலைமைச் சமூகமாக உருவாவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டன.
2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி சொத்தின் பெரும்பகுதி தானாகவே மூத்த பிள்ளைக்கு போகாது. அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தனி நபருக்கும், அசையா சொத்துகளுக்குமிடையிலான பலவீனமான தொடர்பு, பெருமளவில் காணி நிலங்களை பாதித்தது. வாரிசு அற்றோர் தமது சொத்துகளை, அல்லது காணிகளை மசூதிக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது.
3. மசூதிகள் வழிபாட்டு ஸ்தலம் என்பதற்கு அப்பால், சிறு கடைகளைக் கொண்ட வியாபார மையமாகவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மத்திய கால ஐரோப்பாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்திருந்தது போல மசூதிகள் வைத்திருக்கவில்லை. அதாவது தேவாலயங்கள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தையும், மசூதிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் பின்பற்றின.

இன்றைய மத அடிப்படைவாதிகள் (உதாரணத்திற்கு ஹமாஸ்) சில நேரம் சோஷலிசம் பேசுகின்றனர். இது குறித்து சில விளக்கங்கள். முதலாவது தலைமுறையை சேர்ந்த வகாபிகளிடம் சோஷலிச போக்குகள் காணப்படவில்லை. கிட்டத்தட்ட இதே காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஜாமாத்-ஏ-இஸ்லாமியும் பகிரங்கமாக முதலாளித்துவத்தை பின்பற்றியது. மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர். அதற்கு மாறாக பாலஸ்தீனம், அல்ஜீரியா, லெபனான் போன்ற நாடுகளில் தோன்றிய போர்க்குணாம்சம் மிக்க மத அடிப்படைவாத அமைப்புகள், ஏழை அடித்தட்டு வர்க்கத்தில் இருந்து தோன்றியிருந்தன. தாம் சார்ந்த வர்க்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால், சோஷலிச பொருளாதார திட்டங்களை முன்மொழிகின்றன. வட்ட்யில்லாத கடன் வழங்கும் இஸ்லாமிய வங்கிகள், ஏழைகளுக்கான இலவச மருத்துவ மனைகள், இலவச பாடசாலைகள் என்பன இவர்களின் முயற்சியால் செயல்வடிவம் பெறுகின்றன.

"வட்டி அறவிடத் தடை" என்பது இஸ்லாம் மட்டும் கொண்டுவந்த விதியல்ல. யூத, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்கள் கூட ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலம் வட்டி அறவிட தடை விதித்திருந்தன. ஆயினும் காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சி இந்தத் தடையை மீறியது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தற்போது யூதர்களை கந்து வட்டிக்காரராகவும், முதலாளிகளாகவும் காட்டி பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்றனர். கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வாங்கி ஏழைகளை வருத்துவதை குர் ஆன் கடுமையாக கண்டிக்கின்றது. இதன் அடிப்படையில் கட்டப்பட்ட இஸ்லாமிய வங்கிகள், சாதாரண மக்களுக்கு வழங்கும் சிறு கடன்களுக்கு வட்டி அறவிடுவதில்லை. எகிப்தில் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய வங்கிகளை நிறுவி ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர். அந்த வங்கிகளுக்கு நன்கொடை வழங்கும் புரவலர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு வந்தவர்கள். அதைவிட பெருமளவு நிதி சவூதி அரேபியாவில் இருந்து வருகின்றது. வேறொருவிதமாக கூறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணக்கார மேற்குலக நாடுகளின் நிதியில் இயங்குவது போல, சவூதி அரேபியா பல ஏழை முஸ்லிம் நாடுகளில் தொண்டு செய்கின்றது.

ஒரு முஸ்லிமின் பிரதான மதக் கடமையான "ஸகாட்" வழங்குவதும், மதவாத சோஷலிசத்திற்கு வலுச் சேர்க்கின்றது. ஸகாட் என்ற, வசதி படைத்தவர்கள் தமது வருமானத்திலிருந்து வழங்கும் சிறு தொகையானது, ஏழை மக்களின் நலன் காக்க பயன்படுத்தப் பட வேண்டும். என்னே அதிசயம்! 20 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸகாட் முறையை தமது நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினர். ஆனால் அவர்களது "நலன்புரி அரசு" தொழில் செய்யும் அனைத்து பிரசைகளிடம் இருந்தும் வரி அறவிட்டது. ஏழை முஸ்லிம் நாடுகள் ஐரோப்பா சொல்லிக் கொடுத்த முதலாளித்துவத்தை பின்பற்றின. ஆனால் இஸ்லாமின் ஸகாட் எவ்வாறு நலன்புரி அரசை கொண்டு வந்தது என்பதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர். இதனால் முதலாளித்துவ தீய விளைவுகளால் ஏழைகள் பாதிக்கப்படும் போது, மேற்குலக கோட்பாடுகளை பின்பற்றுவதே துயரத்திற்கு காரணம் என்று மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாமிய அரசு வந்தால் இந்த நிலை ஒரே இரவில் மாறி விடும் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

அன்றிருந்த இஸ்லாமிய இராச்சியமாகட்டும், வருங்காலத்தில் வரப்போகும் இஸ்லாமிய குடியரசாகட்டும், அது எப்போதும் வர்க்கச் சமூகமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த அரச குடும்பமும், மேட்டுக்குடி பிரபுக்களும், வழக்கம் போல மது, மாது, போன்ற கேளிக்கைகளில் உல்லாசமாகப் பொழுதைக் களித்தனர். அதற்கு மாறாக சாதாரண குடியானவர்கள் வயல்களில் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவர்களின் மனைவி, பிள்ளைகளும் சேர்ந்தே வேலை செய்யுமளவிற்கு குடும்பக் கஷ்டம்.

பல தார மணம் என்பது, அன்றும் இன்றும் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஆடம்பரம். இஸ்லாமிய சட்டப்படி அனைத்து மனைவிகளையும் சமமாகப் பராமரிப்பதென்பது பணக்காரருக்கு மட்டுமே இயலும். திருட்டுக் குற்றத்திற்காக கைகளை இழந்தவர்கள் கூட ஏழை மக்கள் தான். வசதி படைத்த மேட்டுக்குடியினர் பாரதூரமான குற்றம் செய்தாலும் மென்மையான தண்டனைகளுடன் தப்ப முடிந்தது. மேலும் எத்தகைய கடுமையான தண்டனையாலும் சாதாரண திருட்டைக் கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. மனிதாபிமற்ற தண்டனைகளுக்கு பேர் போன சவூதி அரேபியாவிலேயே திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதால், அப்படி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தமில்லை.

நமது காலத்து மத அடிப்படைவாதிகள், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனியுடமை பற்றியோ, அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ மறந்தும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை குர் ஆனில் சொல்லப்பட்ட, இறைவனின் நேரடி ஆட்சிக்கு தம்மை தயார் படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் அதையே இயேசு கிறிஸ்து அரசனின் ஆட்சி என்று சொல்கின்றனர். இந்துக்கள் அதனை கலியுகக் கல்கி அவதாரம் என்றழைக்கின்றனர். எல்லா மதங்களும் தொடங்கும் புள்ளி ஒன்றென்றால், எல்லா மத அடிப்படைவாதங்களும் முடியும் புள்ளியும் ஒன்று தான்.

---(முற்றும்)---

முன்னைய பதிவுகள்:
3.பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்
2.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்
1.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி

8 comments:

  1. அருமையான கருத்துகள் நண்பர் கலை.

    ReplyDelete
  2. நன்றி மதிபாலா

    ReplyDelete
  3. மூலதனம் பெற்ற பிள்ளைதான் கடவுள்,மதம் .
    வர்க்கப்போரே இறுதியானது என்பதனை மிகச்சிறப்பான முறையில் தெளிவு படுத்தியிருக்கிறீர்கள்.

    kalagam.wordpress.com

    ReplyDelete
  4. வணக்கம் தோழர் கலை,

    விரிவான தரவுகளுடன் சரியான அலசலை தந்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள். ஆனாலும் ஒரு மேலோட்டமான உணர்வு தோன்றுகிறது. இஸ்லாமிய விழுமியங்களின் ஆதாரப்புள்ளி அது தோன்றிய காலத்தின் வணிக நலனை குறிப்பாக வணிக மேலோங்கிய அரசமைப்பதின் தேவையை உள்ளடக்கியதில் தொடங்குகிறது என்பதை இன்னும் சற்று கூர்மையாக விவாதித்திருக்கலாம்.

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
  5. கலகம், செங்கொடி தோழர்களுக்கு வணக்கம்,

    மதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவை பலர் ஆராய்வதில்லை. எனது ஆய்வு ஒரு சிறு முயற்சி. இது பற்றி இன்னும் விரிவாக எழுத வேண்டிய தேவை உள்ளது. நேரம் கிடைக்கும் போது முழுமையான ஆய்வுக்கட்டுரை எழுதவிருக்கிறேன். இதுவரை எழுதியவை ஒரு முன்னோட்டம் மட்டுமே.

    ReplyDelete
  6. தற்போது உலகலவில் வெளி தோற்றத்திற்கு யூத இஸ்லாமிய எதிர்ப்பு மீடியாக்களால் காட்ட பட்டாளும், தற்போது அரபு நாட்டு இஸ்லாமிய தொழிலதிபர்களுக்கும் யூத வங்கியாளர்களுக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருக்கிறது. லெக்மென் நிறுவனம் விழும் சில மணி நேரங்கலுக்கு முன் அரேபியாவிற்கு பல மில்லியன் டாலர்கள் கொண்டு செல்லபட்டது. மேலும் உலக நிதி பொருளாதார (financial capitalism)முதலாளித்துவத்தை நடைமுறை படுத்துவதில் இந்த இரு பிரிவினரின் நெருக்கமான உறவு பிரதான காரணம்.

    ReplyDelete
  7. சகோதரா் அவா்களுக்கு
    தங்களது ஆக்கங்கள் மிகசிரந்த முறையில் முன்வைக்கப்படுவதுடன் பயண்களை தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது குறித்து எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றேன்.
    இங்கு தாங்கள் இஸ்லாமிய பொருளாதார கொள்கை குறித்த சில விடயங்களை தொட்டுக்காட்டுயுள்ளீர்கள்.
    முஸ்லிம்கள் பலர் அறியாத விடயங்களையும் தெட்டுக்காட்டியது குறுத்து தங்களை பாராட்டுகின்றேன். அத்துடன் இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கை சற்று திரிபு படுத்தப்பட்ட நிலையிலேயே தங்களது விளக்கம் அமைந்துள்ளது என்பதனை ஒருமுஸ்லிம் என்ற ரீதியில் சுட்டிக்காட்டுவதடன் நடுநிலையாக இருந்து விரிவாக ஆராயுமாறு பணிவாக வேணடுகிறேன்.
    எஸ்.எம்.ராஃபி
    இலங்கை

    ReplyDelete
  8. வணக்கம் தோழர் கலை,
    அருமையான கருத்துகள்.

    ReplyDelete