Thursday, March 19, 2009

வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்



பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை.

 பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றிய ஐரோப்பாவில், 19 ம் நூற்றாண்டு வரை தேர்தலில் வாக்களிப்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. வீட்டுவேலை செய்வதே பெண்களுக்கு விதிக்கப்பட்ட கடமை, என்ற சிந்தனை கோலோச்சிய காலத்தில், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்ற விடயத்தை ஆணாதிக்கம் நிலவிய ஆளும்வர்க்கமும், மத நிறுவனங்களும் நினைத்தே பார்க்கவில்லை. 1901 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சில வருடங்களுக்கு, வாக்குரிமை கோரிப் போராடிய பெண்ணிய அமைப்பொன்று வன்முறை பிரயோகித்த போது, அரசாங்கத்தால் "பயங்கரவாதிகள்" என அடக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் 1903 ம் ஆண்டு, மகளிர் சமூக அரசியல் ஒன்றியம் (WSPU) ஸ்தாபிக்கப்பட்டத்தில் இருந்து, தமது இலக்கை அடைவதற்காக, தீவிரவாத பாதையை தேர்ந்தெடுத்திருந்தனர். ஒரு பக்கம் பெண்கள் மத்தியில் பெண்கள் மத்தியில் கருத்தரங்குகளை நடத்தி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தனர். மறு பக்கம், பெண்விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சில உறுப்பினர்கள், தலைமறைவாக இருந்து கொண்டு அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசாங்க கட்டடங்களின் ஜன்னல்களை உடைக்கும் போராட்டம் தீவிரமடைந்து, ஸ்கொட்லாந்தில் மன்னரின் வாகனத்தை தாக்கும் அளவிற்கு தீவிரமடைந்தது. அதனை அரச குடும்பத்தின் மீதான தாக்குதலாக கண்ட பொது மக்கள் அப்போது கொதிப்படைந்திருந்தனர். போலீசார் கைது செய்யப்பட்ட உறுப்பினரை மக்களின் கோபாவேசத்திலிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது. கிறிஸ்தவ திருச்சபையும் பெண்களின் வாக்குரிமையை எதிர்த்து வந்ததால், சில தேவாலயங்களும் எரிக்கப்பட்டன.

WSPU உறுப்பினர்கள், "The Suffragettes" என அழைக்கப்பட்டனர். 1910 ம் ஆண்டிற்குப் பிறகு Suffragettes போராட்டம் தீவிரமடைந்தது. அரச கட்டடங்களை எரிப்பது, குண்டுகள் வைப்பது பரவலாக நடந்தது. அவர்களின் கட்சிப்பத்திரிகையான The Suffragettes, இதுவரை 337 தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. குண்டுகள் பல அடிப்படைத் தரம் வாய்ந்ததாக இருந்த போதிலும், சில கட்டடங்களை தகர்க்கும் அளவு பாரிய சேதம் விளைவிக்கும் வெடிபொருட்களை (Chlorate based high explosive) கொண்டிருந்தன. எந்தவொரு வெடிகுண்டுத் தாக்குதலும் ஆளரவம் இல்லாத தருணத்திலேயே வெடிக்க வைக்கப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அரசாங்கத்தால் பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் பொது மக்கள் மத்தியில் பெருமளவு மாற்றத்தை உருவாக்கா விட்டாலும், அரசின் பிடி தளர்ந்தது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட WSPU உறுப்பினர்கள், சிறையில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதும், கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடக்க வலுக்கட்டாயமாக உணவு ஊட்டப்பட்ட சம்பவங்களும், பொது மக்கள் மத்தியில் Suffragettes மீது அனுதாப லையை தோற்றுவித்தது. அதைப் பயன்படுத்தி பெண்ணியவாதிகள் மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். தமது போராட்ட தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டனர்.

லண்டன் நகர தெருக்களில், அரச பவனி வரும் வீதியோர மாடி வீடுகளை ஏற்கனவே வாடகைக்கு எடுத்து வைத்திருப்பர். அரசரை வரவேற்க மக்கள் குழுமியிருக்கும் தருணம், மேலே இருந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவர். ஜூன் 1913 ம் ஆண்டு, மன்னரின் குதிரை வண்டிக்கு குறுக்காக ஓடிய WSPU உறுப்பினர் ஒருவர், ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட துயர சம்பவம், போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பின் பெருமளவு மக்கள் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவளித்தனர். ஆளும் லிபரல் கட்சியும் மெல்ல மெல்ல வாக்குரிமைச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் துணிவைப் பெற்றது.

பிரித்தானியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த WSPU அமைப்பினதும், அதன் தலைவி Emmelinne Pankhurst இனதும் பங்களிப்பு வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கத்தக்கவை. பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் Emmelinne க்கு சிலை வைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் எடுத்தன. அனைத்துலக பெண்களும் நன்றியுடன் நினைவு கூற வேண்டிய Emmelinne யார்? அவரும் ஒரு காலத்தில் வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த பெண் தான். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான், என்றும் சொல்லலாம். Emmelinne திருமணம் முடித்த, "சிவப்பு டாக்டர்" என அழைக்கப்பட்ட Richard Marsden Pankhurst தான் அந்த பெருமைக்குரிய ஆண்.

கருத்துரிமைக்காக, அரசியலில் மதத்தின் தலையீட்டை எதிர்த்து, பிரபுக்கள் சபையின் அதிகாரத்திற்கு எதிராக, அயர்லாந்தின் சுயநிர்ணய உரிமைக்காக, இந்தியாவின் சுதந்திரத்திற்காக சளைக்காமல் போராடியவர். ஒரு சோஷலிஸ்ட்டான Richard தனது முற்போக்கு கருத்துகளை ஊருக்கு உபதேசம் செய்வதுடன் நின்றுவிடவில்லை. வீட்டிலும் அதனை நடைமுறைப்படுத்தினார். தனது இளம் மனைவி பிற பெண்களைப் போல வீட்டு வேலை செய்யும் இயந்திரமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. தனது அரசியல் கருத்துகளை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார். பெண்ணுரிமைக்காக பெண்களே போராட வேண்டும் என்ற கருத்தை விதைத்தார். அதன் பலனாக அவரது மனைவி Emmelinne ம், மகள் Christabel ம் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காக போராடும் Women's Political and Social Union என்ற அமைப்பை கட்டி எழுப்பினர். அன்று பெண் விடுதலைக்காக போராடியவர்களை பற்றி, இன்றைய பெண்கள் அறியாதவாறு வரலாறு மறைக்கப்படுகின்றது.



Books:
1. The Act of Militancy: Violence and the  Suffragettes - by Brian Harrison
2. The Women's Suffrage Movement in 
Scotland - By Leah Leneman
3. Emmeline Pankhurst: a Biography - by June Purvis

Web Site:
The Women's Library

6 comments:

  1. பெண்கள் இயக்கம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம். பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் இதழ்களில் இதுபோன்ற தகவல்களை கண்டதுண்டா? சினிமா, ஃபேஷன், சமையல் என்பதோடு அல்லவா அவர்கள் நிறுத்திக்கொண்டுவிடுகிறார்கள்? எப்படிப்பட்ட போராட்டத்தை சரித்திரத்தில் பெண்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் படித்துணர வேண்டியிருக்கிறது

    ReplyDelete
  2. நாடகம்!
    எவ்வளவு நடிகர்கள்?
    அடப்பாவிகளா!
    நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
    பதவி மோகம்.....
    தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

    ReplyDelete
  3. நன்றி, மருதன் & ttpian

    ReplyDelete
  4. //எப்படிப்பட்ட போராட்டத்தை சரித்திரத்தில் பெண்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் படித்துணர வேண்டியிருக்கிறது.//

    ஆமாம், மருதன். போராடாமல் எதையும் பெற முடியாது என்பதை இது உணர்த்துகின்றது.

    ReplyDelete
  5. பெண்கள் இயக்கம் பற்றி அமெரிக்கா வில் நடந்த சரித்திரத்தை
    தந்துளீர்கள் --- நன்றி

    நமது இந்தியாவில் தமிழ் நாட்டில் சற்று தெற்கே இலங்கையில்
    நமது தமிழ் மாகாணங்களில் நடந்தேறிய கதைகளை தந்தால்
    சிறப்பாக இருக்குமல்லவா !

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கு நன்றி benzaloy.

    இந்தக் கட்டுரை பெண்கள் இயக்கம் பற்றியதல்ல. பெண்கள் தேர்தலில் வாக்குப் போடும் உரிமைக்காக, எத்துனை தூரம் போராட வேண்டியிருந்தது என்பதை விளக்குவதே. இதனை தனியே இங்கிலாந்து பெண்களின் போராட்டமாக நான் பார்க்கவில்லை. உலகில் இருக்கும்(இந்திய, இலங்கை உட்பட) அத்தனை பெண்களது ஒட்டு மொத்த போராட்டம் இது. இங்கிலாந்துப் பெண்கள் போராடி வெற்றி பெற்றதன் பயனாக தான் பிற நாட்டு பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

    ReplyDelete