Thursday, March 12, 2009

திருமணங்கள் கிரிமினல்களால் நிச்சயிக்கப்படுகின்றன

வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்களைப் பற்றிய செய்திகளை நமது தமிழ் ஊடகங்கள் ஒரு நாளும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் பிடிபட்டால் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. ஆனால் அதற்கு மாறாக இலங்கை அரசு, அல்லது சிங்கள ஊடகங்கள் அவற்றை ஊதிப் பெரிதாக்கி, திரிபுபடுத்தி, கண், மூக்கு வைத்து வெளியிடுகின்றன. அண்மைக்காலமாக வெளிநாடுகளில் போலீசிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைக் கிரிமினல்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் அதற்கு புலிச்சாயம் பூசுவது வாடிக்கையாகி விட்டது. இதுவே இலங்கையில் பிற சமூகங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் அந்த செய்தியே வெளியில் வராது. அண்மையில் சைப்ரசில் நடந்த சம்பவம் ஒன்றை இங்கே விபரிக்கிறேன்.

பெப்ரவரி மாதம் சைப்ரஸ் நாட்டு காவல்துறை ரொஹான் என அழைக்கப்படும் இலங்கைத்தமிழர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ரொஹான் சைப்பிரசில் நடந்த போலித் திருமணங்களுக்காக தேடப்பட்ட சந்தேகநபர். இவரோடு சேர்த்து பல சமூகங்களை(சைப்ரஸ் பிரசைகள் உட்பட) சேர்ந்த நபர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக தேடப்பட்டு வந்தனர். ரொஹானுடன் சேர்த்து ஒரு சிங்களப் பெண்மணியும், கிரேக்க சைப்ரஸ் வக்கீலும் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சைப்ரஸ் நாட்டில் விசா இல்லாமல் தங்கி இருப்போருக்கும், அகதிகளுக்கும் பணம் வாங்கிக் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய ஏழை நாடுகளைச் சேர்ந்த (வெள்ளையின) பெண்களை திருமணம் செய்து வைத்ததாக இவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தனிநபர் வருமானம் இன்னும் உயரவில்லை. குறிப்பாக பல்கேரியா, ருமேனியா போன்ற நாட்டு பிரசைகள் பலரின் ஏழ்மை மறையவில்லை. இந்த நிலை ஐரோப்பாவில் "சட்டவிரோத குடியேற்றக்காரர்கள்" என அழைக்கப்படும் பிரிவினருக்கு புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது. வதிவிட உரிமை கிடைக்கும் என்ற காரணத்திற்காக, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பணத்தைக் கொடுத்து பத்திரத்திற்காக திருமணம் செய்ய விரும்புகின்றனர். இதற்கென இருக்கும் "முகவர்கள்" (அரசாங்க அகராதியின் படி கிரிமினல்கள்) கிழக்கு ஐரோப்பிய பெண்களை ஒழுங்கு படுத்தி பதிவு திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்கு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் ஆணிடம் சுமார் ஐயாயிரம் யூரோக்கள் வசூல் செய்தாலும், திருமணத்திற்கு சம்மதிக்கும் பெண்ணிற்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை மட்டுமே கொடுக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட தொகை அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது போக, மிகுதியை முகவர்கள் சுருட்டிக் கொள்கின்றனர்.

அயர்லாந்தில் பெருமளவு இந்திய, பாகிஸ்தானியர்கள் இவ்வாறு லாட்வியா நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகி, ஐரோப்பிய ஒன்றியம் சட்டங்களை கடுமையாக்கும் படி நாலாபக்கத்தில் இருந்தும் (குறிப்பாக வலதுசாரிகளிடமிருந்து) கோரிக்கைகள் எழுந்தன. அந்த ஆரவாரம் அடங்குவதற்குள், சைப்ரசில் ஆயிரக்கணக்கான போலித் திருமணங்கள் நடந்த செய்தி வெளியாகி, அந்நாட்டில் வெளிநாட்டவர் மீதான போலிஸ் கெடுபிடியை அதிகரித்துள்ளது. இது போன்ற சம்பவங்களால் உண்மையாக திருமணம் செய்யும் தம்பதியினரும் பாதிக்கப்படும் அவலம் நேர்ந்துள்ளது. அண்மையில் பிரெஞ்சு பிரசாவுரிமை பெற்றிருந்த நண்பர் ஒருவர், சைப்ரசில் இருக்கும் பிரெஞ்சு தூதுவரகத்தில் தனது மனைவியை கூட்டிச் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த பொழுது, தூதுவராக ஊழியர்கள் "பணத்திற்காக திருமணம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகள்..." என்ற சாரப்பட நீண்ட விரிவுரை ஆற்றியுள்ளனர்.

போலித் திருமணங்கள் பற்றிய செய்தி, சைப்ரஸ் நாளேடுகளிலும்
(Cyprus Weekly 19/02/09), தொலைக்காட்சியிலும் சில நாட்கள் பரபரப்பாக பேசப்பட்டது. இலங்கையை சேர்ந்த ரொஹான் கைது செய்யப்பட்டதும், ஏதோ கிரிமினல் கோஷ்டித் தலைவனை பிடித்து விட்டது போலத் தான் சைப்ரஸ் ஊடகங்கள் தெரிவித்தன. இதே நேரம் இலங்கை அரசு தனது பங்கிற்கு, விடுதலைப் புலிகளின் முக்கிய சர்வதேச தொடர்பாளர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அதற்கு ஆதாரமாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீட்டில் இருந்த ஆளுயர பிரபாகரன் படத்தையும், புலிக்கொடியையும் முக்கியத்துவம் கொடுத்து கூறியது. சைப்ரஸ் நாட்டில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமை உண்மை தான். இருப்பினும் பெப்ரவரி 4 ம் திகதி, தலைநகர் நிகோசியாவில் இடம்பெற்ற "இலங்கை சுதந்திரதின எதிர்ப்பு" ஊர்வலமே சந்தேகநபரை காட்டிக் கொடுத்த ஆதாரமாக கருதப்படுகின்றது. பிற மேலைநாட்டு நகரங்களில் நடப்பதைப் போல, இலங்கை தூதுவராக ஊழியர்கள் வழமை போல இந்த ஊர்வலத்தையும் வீடியோ எடுத்திருந்தனர். அந்த வீடியோ பின்னர் சைப்ரஸ் போலீசிடம், சந்தேகநபரை இனம்காண சாட்சியமாக ஒப்படைக்கப் பட்டதாக தெரிய வருகின்றது.

இந்த சம்பவங்களின் பின்னணியில் வடிவமைக்கப்பட்ட செய்திகள் இலங்கையில்
டெயிலி நியூஸ் (14/02/09) பத்திரிகையிலும், ஐ.டி.என். தொலைக்காட்சியிலும் தெரிவிக்கப்பட்டது. ஏதாவது ஒரு மேற்குலக நாட்டில் குற்றச் செயல்களில் இலங்கைத்தமிழர்கள் கைது செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மேலதிக விபரங்களுக்காக (குற்றவாளியின் பூர்வீகம்) இலங்கை தூதுவரகத்தை தொடர்பு கொள்வது வழமை. போதுமான ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, குற்றவாளிகளுகளை புலிகளுடன் முடிச்சுப் போடும் காரியம் அப்போது அரங்கேறுகிறது. இப்படியான செய்தியை வழங்குவதில், சிலநேரம் இலங்கையை சேர்ந்த சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முந்திக் கொள்கின்றன. லண்டனில் கிரெடிட் கார்ட் மோசடியில் பலர் கைதான போதும், மோசடி செய்த பணம் புலிகளுக்கு போவதாக கதை பரப்பபட்டது.

எந்தவொரு அரசும், ஊடகமும் பொறுப்பான முறையில் செய்தி வழங்குவதாக தெரியவில்லை. இலங்கை மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் தமது நலன்களை ஒட்டியே இது போன்ற செய்திகளை வழங்குகின்றனர். உதாரணத்திற்கு சைப்ரசை எடுத்துக் கொண்டால், அங்கே வழக்கமாகவே வெளிநாட்டவர் செய்யும் சிறிய குற்றத்தையும் முக்கியத்துவம் கொடுத்து சொல்வார்கள். அந்நாட்டில் வழக்கமாகவே குற்றச் செயல்கள் அரிது என்ற பிம்பத்தை வைத்துக் கொண்டு, எங்காவது சிறு திருட்டு நடந்தாலும் வெளிநாட்டவர்களை சந்தேகப்பட்டு கைது செய்வது வழக்கம். பல குற்றச் செயல்களில் தமது பிரசைகளுக்கு இருக்கும் பங்கை கண்டுகொள்வதில்லை. கைதிகளை மோசமாக நடத்தும் நாடுகளில் சைப்ரஸ் ஒன்று. சிறைச்சாலை காவலர்களால் (வெளிநாட்டு) கைதிகள் அடித்து சித்திரவதை செய்யப்படுவது, வெளி உலகிற்கு தெரியாது. சில சம்பவங்களை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்துள்ளன. கைதிகளை விடுவிக்கும் போது, "மனிதாபிமானத்துடன் நடத்தியதாக" கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொள்கின்றனர்.

2 comments:

  1. ஊடக தர்மம், ஊடகசுதந்திரம் என்பவறறுக்கெல்லாம் இலங்கை அரசு மற்றும் ஊடகங்களின் வரைவிலக்கணம் வேறானவை. ஆனால் நம்மவர்களும் சற்றும் சிந்திப்பதில்லை என்பது தான் வேதனைக்குரியது. சொந்த மண்ணில் வாழ முடியாத நிலையிலேதான் புலம்பெயர்கின்றோம். அப்படி இருக்கையில் அடைக்கலம் கொடுக்கும் நாடுகளின் சட்டங்களை மீறினால் பரலோகத்தில் கூட நம்மவர்களின் இருப்பு கேள்விக்குறிதான்.

    ReplyDelete
  2. ஒரு கூடையில் இருக்கும் அழுகிய பழங்களால், பிற நல்ல பழங்களுக்கும் பாதிப்பு வருவது போன்றது இது. கிரிமினல் வேலையில் ஈடுபடுபவர்கள் முழுச் சமூகத்திற்கும் அவப்பெயரை உண்டாக்குகின்றனர்.

    ReplyDelete