Sunday, February 15, 2009

நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி


உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா? பகுதி - 2

ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட அந்த மின்சார ரயில்வண்டி, கிரீச் என்ற ஒலியுடன், ஆம்ஸ்டர்டாம் ரயில்நிலையத்தை வந்தடைந்தது. இரண்டுமணி நேரமாக "மின்சாரத் தடை" காரணமாக கதவுகள் திறக்காததால், பயணிகள் கலவரமடைந்தனர். இறுதியில் கதவுகள் திறக்கப்பட்ட போது, மேடையில் காத்திருந்த பொலிஸார் இரண்டு இளைஞர்களை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த பின்னர், அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டனர். அப்படியானால் அவர்களை கைது செய்யக் காரணம் என்ன? ரயிலில் வந்து கொண்டிருந்த தாடி வைத்திருந்த, இஸ்லாமியப் பாணி உடை அணிந்திருந்த அந்த இரு இளைஞர்களும் தொழுகைக்கு முன்னதாக கழிவறை சென்று வந்தது தான். இஸ்லாமியப்பாணி உடை அணிந்திருப்பதும், கழிவறை செல்வதும் தண்டனைக்குரிய குற்றங்கள் அல்ல. ஆனால் அந்த ரயிலில் வந்த மற்ற பயணிகள், அந்த இளைஞர்கள் "குண்டுவைப்பதற்கு தயாராவதாக" தாமாகவே கற்பனை செய்து கொண்டது தான் இவ்வளவு அமர்க்களத்திற்கு காரணம். ஒரு குறிப்பிட்ட இனத்தை, மதத்தை சேர்ந்த காரணத்தாலேயே அனைவரும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவது, ஏதோ இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் நடக்கும் விடயமல்ல, மனித உரிமைகளை இம்மியளவு பிசகாமல் பாதுகாப்பதாக கருதப்படும், மேற்குலக ஜனநாயக நாடுகளிலும் நடந்து வருவதற்கு உதாரணமே, மேற்குறிப்பிட்ட சம்பவம்.

நெதர்லாந்து நகரொன்றில், தொலைத்தொடர்பு நிலையமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த, நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, அந்த எகிப்திய இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டான். அந்த இளைஞன் அல் கைதாவுடன் தொடர்பு வைத்திருந்தாக பொலிஸ் குற்றஞ்சாட்டியது. அதற்கு ஆதாரமாக ஓட்டுக்கேட்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் தம்மிடம் இருப்பதாக கூறியது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். ஆனால் பொலிஸ் மறுநாளே அந்த இளைஞனை பிடித்து விமானத்தில் ஏற்றி அனுப்பி, எகிப்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டது. அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியது அமெரிக்க அரசு. எகிப்திய சிறையில் சித்திரவதைக்குள்ளான அந்த இளைஞன், இறுதியில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டான்.

இது போன்ற கைதுகளும், நாடுகடத்தல்களும் முஸ்லீம் இளைஞர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதில்லை. கனடாவில் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டான். இலங்கையில் கைதிகள் சித்திரவதை செய்வது ஏற்கனவே நிரூபணமான விடயம் என்று கூறி, மனித உரிமை நிறுவனங்கள் சில நாடுகடத்தலை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சி கைகூடவில்லை. இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், இலங்கை, எகிப்து போன்ற நாடுகளில் சித்திரவதை நடப்பது மேற்குலக நாடுகளுக்கு ஒன்றும் தெரியாத விடயமல்ல. உண்மையில் தாம் செய்ய விரும்பாத, தமது நற்பெயருக்கு களங்கம் வரும் என அஞ்சும் "அழுக்கான வேலை"களை, அந்த நாடுகள் பார்த்துக் கொள்ளட்டும் என திருப்தியடைகின்றன.

மேலைத்தேய நாடுகளில் வாழும் (ஐரோப்பிய இனங்களைச் சேராத) வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளில் பிரசாவுரிமையைப் பெற்றிருந்த போதிலும், இரண்டாம்தரப் பிரசைகளாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு "நம்பகத்தன்மை" தேவைப்படும் தொழில்களுக்கு அவர்களை எடுப்பதில்லை. தொழில் இரகசியத்தை வெளிவிடலாம், அல்லது தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தலாம், என்பன தேசநலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களாக பார்க்கப்படுகின்றன. அரசாங்கம், பொலிஸ், இராணுவம், விமானப்படை, மற்றும் அணு மின் உலைகள் போன்றன இந்த வகைக்குள் அடங்கும். இத்தகைய பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களை, பொலிஸ் சோதனை செய்து (screening) நற்சான்றிதழ் கொடுத்தால் தான், வேலையில் சேர்ப்பார்கள். சில நிறுவனங்கள் துப்பறியும் நிபுணர்களை நாடுவதும் உண்டு.

அதே நேரம் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை நிரந்தரம் என எண்ணிவிடக் கூடாது. ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் இரண்டு வெள்ளையின யுவதிகள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். அரசு அவர்களை "பயங்கரவாத சந்தேகநபர்களாக" பார்க்க காரணம்? அந்த யுவதிகள் இருவரினதும் அரசியல் பின்னணி கண்ணை உறுத்தியது தான். "இனவெறி எதிர்ப்பு", "அகதிகளுக்கு உதவுதல்" போன்ற இடதுசாரி அரசியலில் ஈடுபடுபவர்கள் கூட, அரசின் கண்களுக்கு ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். இதே போல, பாரிஸ் விமான நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெருந்தொகையான தமிழ் இளைஞர்களும், ஆபத்தானவர்களாக கருதப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட அரசியல் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பது, 11 செப்டம்பர் 2001 க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நெதர்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பத்து ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. அந்தளவு மக்கள் ஆதரவைக் கூட சகிக்க முடியாத அரசு, மென்மையான அடக்குமுறையை ஏவிவிட்டது. அரச நிர்ப்பந்தம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை யாரும் வேலையில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகியதால், இன்றைய தலைமுறைக்கு அப்படி ஒரு கட்சி இருந்ததே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், பல மேற்குலக நாடுகளில் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்ற பொழுதிலும், நடைமுறையில் கருப்புத்தலையுடன் காணப்படும் வெளிநாட்டவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை காட்டுமாறு கேட்கப்படுகின்றது. இதனை நிறப்பாகுபாடு என்று நீங்கள் கூறலாம், ஆனால் அப்படி செய்யுமாறு தனது மேலதிகாரிகள் அறிவுறுத்துவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். மேற்குலக நாடுகளும் தேச நலன் என்று வரும் போது, மூன்றாம் உலக நாடுகள் அளவிற்கு இறங்கிச் செல்லும் என்பதை இது போன்ற சம்வங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில், அடையாள அட்டை சோதிக்கும் நடைமுறை கூட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நகர வீதிகளில், கட்டடங்களில் பொருத்தப்படும் கமெராக்கள், நீங்கள் சிறுநீர் கழிக்க ஒதுங்கினாலும் காட்டிக் கொடுத்துவிடும். அதைவிட பொதுப் போக்குவரத்து துறையில் பாவிக்கப்படும் மின்னியல் அட்டை மூலம், நீங்கள் எங்கேயெல்லாம் பயணம் செய்கின்றீர்கள் என்பதை இலகுவில் கண்காணிக்கலாம். நீங்கள் தனியாக காரில் பயணம் செய்பவரா? கவலை வேண்டாம். நீங்கள் அறியாமலே உங்கள் வண்டியில் (விமானங்களில் உள்ளத்தைப் போல) "கறுப்புப் பெட்டி" ஒன்று பொருத்தப் படும். நெடுஞ்சாலைகளில் உள்ள நவீன கருவிகள், நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளீர்கள் என்பதை காட்டிக் கொடுத்துவிடும். உண்மையில் பிரத்தியேக வரி அறவிடவே இந்த நடைமுறை வருகின்ற போதிலும், வாகனம் ஓட்டுபவரின் பயண விபரங்களை பதிவு செய்து வைக்கவும் உதவும்.

மேற்குலக நாடுகளுக்கு அரசியல் அகதிகளாக சென்று தஞ்சம் கோருபவர்களை விசாரணை செய்யும் புலனாய்வுத்துறையினர், அவர்களிடமிருந்து பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இது பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

-- தொடரும் --


முன்னைய பதிவு:
உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?

4 comments:

  1. தொடருங்கள் காத்திருக்கிறோம்....
    நல்ல பதிவு

    ReplyDelete
  2. நானும் ஒரு நல்ல இடத்தில தான் வேலை செய்யிறன். ஆனால் கண்காணிக்கப் படுகிறேன் என்று தெரிய வந்ததும் சந்தோசப் பட்டேன். நாமளும் பெரியாளாயிட்டமில்ல. அது சரி இலங்கையில் என் அலுவலகம் மாதிரி ஒன்றுக்கு அருகில் நடந்தாலே உள்ள போட்டிருவாங்கள். இந்தியாவில சான்சே இல்லை. இஞ்சை நம்பி வேலையாவது தந்தாங்களே...

    ReplyDelete
  3. அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, ஆட்காட்டி.

    ReplyDelete