Wednesday, December 03, 2008

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை



எழுபதுகளில் மேற்கு-ஜெர்மனி அரசுடன் போரில் ஈடுபட்டிருந்த, “செம்படைப் பிரிவு”(Red Army Faction,ஜெர்மன் மொழியில் Rotte Armee Fraktion, அல்லது சுருக்கமாக RAF) என்ற மார்க்சிய புரட்சிவாத அமைப்பைப் பற்றிய திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இயக்க வரலாற்றை, ஒரேயடியாக பயங்கரவாதம் என்று நிராகரிக்காமல், சம்பத்தப்பட்ட தீவிரவாத இளைஞர்களின் பார்வையில் இருந்தே சொல்வது போல படக்கதை அமைந்துள்ளது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வந்த,புரூஸ் வில்லீஸ் நடித்த, “Die Hard” ஹோலிவூட் படம் RAF தீவிரவாதிகளை வில்லன்களாக, கிரிமினல்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தது. அது ஒரு கற்பனைக்கதை. ஆனால் தற்போது வந்திருக்கும் “Der Baader Meinhof Komplex” என்ற ஜெர்மன் மொழி திரைப்படம், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டுமே திரைக்கதையாக அமைத்துள்ளது. அமைதியான ஜெர்மனியை மட்டுமே காணும் இன்றைய இளம்தலைமுறைக்கு, கடந்த காலம் இதற்கு முற்றிலும் மாறாக வன்முறைக் கலாச்சாரத்தை கொண்டிருந்ததை நம்பமுடியாது. ஜெர்மனியில் இடதுசாரி தீவிரவாதத்தின் எழுச்சியும், அதற்கு எதிர்வினையாக ஜெர்மன் அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை காரணமாக அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றின் சுருக்கம் இது. ஜனநாயக ஜெர்மனியின் இருண்ட மறுபக்கம் பற்றிய அறிமுகமும் இதுதான்.

சர்வதேச மார்க்சிய புரட்சி இராணுவமான செம்படையின் பிரிவு என்ற அர்த்தத்தில், தமது அமைப்புக்கு “Rotte Armee Fraktion” (Red Army Faction) என்று பெயர் இட்டிருந்தாலும், பொதுமக்கள் அவர்களை “பாடர்-மைன்ஹொப் குழு” என்றே அழைத்தனர். குழுவுக்கு தலைமை வகித்த அன்ட்றெயாஸ் பாடர், மற்றும் இரண்டாவது தலைவராக கருதப்பட்ட, ஆனால் ஏற்கனவே பிரபலமான ஜெர்மன் ஊடகவியலாளர் உல்ரிகெ மைன்ஹொப் ஆகியோரின் பெயரால் அப்படி அழைக்கப்பட்டு வந்தது. அதுவே இந்தப் படத்தின் தலைப்பாக உள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான உல்ரிகெ, குடும்பத்துடன் நிர்வாணிகள் கடற்கரையில் தமது விடுமுறையை கழிப்பதில் இருந்து படம் ஆரம்பமாகின்றது. முதல் காட்சியே, பயங்கரவாதிகள் எனப்படுவோர்,ஒரு காலத்தில் எவ்வாறு அமைதியான,சாதாரண வாழ்க்கை வாழ்ந்தனர், என்பதை இரசிகர்கள் மனதில் பதிய வைக்கின்றது.

அன்றைய ஈரானிய மன்னர் ஷாவும், பட்டத்து அரசியும் மேற்கு பெர்லினுக்கு இராஜாங்க விஜயத்தை மேற்கொள்வதே, படத்தில் வரும் முதலாவது அரசியல் நிகழ்வு. வியட்நாம் யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஏற்கனவே மார்க்சிய, மாவோயிச சிந்தனைகளால் கவரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஏகாதிபத்திய எடுபிடியான ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்போது ஷா ஆதரவாளர்களுடன் கைகலப்பு ஏற்படும் நேரம், வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் போலிஸ், இடதுசாரி மாணவர்களை மட்டும் துரத்தி, துரத்தி வேட்டையாடுகின்றது. (மேற்கு) ஜேர்மனி ஒரு ஜனநாயக நாடல்ல, மாறாக ஒரு “பொலிஸ் தேசம்” என்ற உண்மையை மாணவர்கள் அன்று அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்கின்றனர்.

1967 ம் ஆண்டு, பெர்லின் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் “ரூடி டூச்கே” என்ற பேச்சாற்றல் மிக்க மாணவர் தலைவன் பின்னால் அணிதிரண்டிருந்தனர். அப்போது டூச்கே தலைமையிலான மாணவர்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கியிருக்கவில்லை. ஆனால் பட்டப்பகலில் நடுத்தெருவில் டூச்கே வலதுசாரி தீவிரவாத இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் தான், பாடர்-மைன்ஹொப் குழு உருவாகின்றது. திருட்டுக் கார் வைத்திருந்த குற்றத்தில் போக்குவரத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவிக்கும், அன்ட்றெயாஸ் பாடரை விடுதலை செய்வதற்காக, அவரது காதலி என்சிலின் உல்ரிகேவின் உதவியை நாடுகின்றார். அவர்களது திட்டம் நிறைவேறியதும், அனைவரும் தலைமறைவாகி விடுகின்றனர்.

வக்கீல் நண்பர் ஒருவரின் உதவியுடன் இந்த தீவிரவாத ஜெர்மன் இளைஞர்கள் லிபியா சென்று இராணுவப் பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் நகர்ப்புற கெரில்லாப் போராட்டத்தை தேர்ந்தெடுத்த பாடர் தலைமையிலான குழுவினருக்கு இந்த போர்ப் பயிற்சிகள் அதிக பயனைக் கொடுக்கவில்லை. ஜெர்மனி திரும்பும் குழு, மூன்று வங்கிகளைக் கொள்ளையடித்து தமது ஆயுதபாணி இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். ஊடகவியலாளர் உல்ரிகெ பத்திரிகைகளுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியை அப்போதிருந்தே பொறுப்பேற்கிறார். “வங்கிக் கொள்ளை பொதுமக்களிற்கு எதிரானதல்ல. அது ஆளும்வர்க்கத்தின் சொத்துகளை அபகரிக்கும் புரட்சிகர செயல்” என்று தொடங்கும் நியாயப்படுத்தல், RAF போராட்ட வரலாறு முழுக்க எதிரொலிக்கின்றது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை அந்த மிருகத்தின் வயிற்றுக்குள்ளே நடத்துவதாக கருதிக் கொள்ளும் RAF, பிராங்க்பெர்ட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு குண்டு வைக்கின்றது. தொடர்ந்து ஜேர்மனிய அரச நிறுவனங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. பாடர்-மைன்ஹொப் குழுவினரை “பயங்கரவாதிகள்” என்று அறிவிக்கும் ஜெர்மன் அரசாங்கம், பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிக்கின்றது. அந்த இயக்க உறுப்பினர்களை நேரே கண்டால் சுட்டுக் கொல்லவும் பொலிசிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அப்படியே சாதாரண வீதிச் சோதனையின் போது மாட்டிக் கொள்ளும் இரு RAF உறுப்பினர்களை, போலீசார் நிதானிக்காமல் சுட்டுக் கொல்கின்றனர்.

RAF இயக்க உறுப்பினர்கள் தாம் இப்போது ஜேர்மனிய அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை உணர்கின்றனர். எதிரி கொலை பாதகச் செயலை செய்யவும் அஞ்சாத வேளை, தாமும் இரக்கம் பாராமல் திருப்பித் தாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. அரச எந்திரத்தை வழிநடத்தும் அதிகாரிகள், குண்டுவைத்தோ, அல்லது திடீர் தாக்குதலிலோ குறிவைக்கப்படுகின்றனர். RAF வழங்கிய கொள்கை விளக்கத்தில் மேற்கு ஜெர்மன் அரச அதிகாரிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஹிட்லரின் நாசிக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்த பலர் தற்போதும் ஜனநாயக மேற்கு ஜெர்மன் அரசில் உயர்பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. RAF தலைமுறையினர் “ஹிட்லரின் குழந்தைகள்” என்றும் அழைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களின் பெற்றோர் ஹிட்லரின் அரசில் கடமையில் இருந்த போதும், இந்த புதிய தலைமுறை நாசிசத்தை நிராகரித்து கம்யூனிச சார்பு சித்தாந்தங்களை பின்பற்றினர். கடந்த காலத்துடன் கணக்குத் தீர்க்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக கருதினர்.

பாடர்-மைன்ஹொப் குழுவினர் சில ஆண்டு காலமே(1970-1972) தலைமறைவாக இருந்து கொண்டு தாக்குதல்களை நடத்த முடிந்தது. பொலிஸ் வேட்டையில் அனைத்து உறுப்பினர்களும் சிக்கிக் கொள்ள, மிகுதிக் காலத்தை தனிமைச் சிறைகளில் கழிக்க வேண்டியிருந்தது. (தற்போது மனித உரிமைகளை மதிப்பதாக காட்டிக் கொள்ளும்) ஜெர்மன் பொலிஸ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தது. அவர்களை விசாரணை செய்த நீதிபதிகள், கைதிகளுக்கான பல அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்ததுடன், கிரிமினல்களுக்கு வழங்குவதை விட மோசமான தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். இதனால் RAF கைதிகள் நீதிமன்றத்தை பாசிச நிறுவனமாக கருதி புறக்கணித்தனர். தமது உரிமைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் சிறைக் காவலர்கள் உணவை வற்புறுத்தி திணித்தனர். RAF கைதிகளுக்கு சிறைச் சாலையில் நடக்கும் கொடுமைகள் பற்றிய தகவல்கள் வெளி உலகத்தை அடைந்த போது, பல ஜெர்மன் இளைஞர்கள் சாவீக போராட்டத்தில் ஈடுபட்டனர். RAF கைதிகளை விடுதலை செய்யுமாறு கோஷம் வலுத்து. ஜெர்மன் அரசு இந்த போராட்டத்திற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால், அது இரண்டாவது தலைமுறை RAF உருவாக வழிவகுத்தது.

இரண்டாவது தலைமுறை RAF அமைப்பின் உறுப்பினர் தொகை, பணபலம், தாக்குதல் திறன் என்பன முதலாம் தலைமுறையை விட அதிகரித்து காணப்பட்டது. ஜேர்மனிய அரசை எதிர்த்து சவால் விட்ட, ஒரு சிறு குழுவினரான RAF வீர சாகசங்கள் பல இளைஞர்களை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் இரண்டாம்தலைமுறை RAF இன் போராட்டம் சர்வதேச மயப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய நிதி மற்றும் ஆயுத உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன. லிபியா, (கம்யூனிச) கிழக்கு ஜெர்மனி என்பன குறிப்பிடத்தக்க ஆதரவு சக்திகள். அதே நேரம் பாலஸ்தீன மார்க்சிய புரட்சி அமைப்பான PLFP, கூட்டு நடவடிக்கைக்கு முன்வந்தது. அதன்படி அப்போது ஜெர்மன் நகர் மியூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த சம்பவத்தில், சிறையில் இருக்கும் RAF தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை தோல்வியுற்ற சில நாட்களுக்கு பின்னர், RAF தலைவர்கள் சிறைக் கூண்டுகளுக்குள் பிணமாக காணப்பட்டனர். ஜெர்மன் அரசு அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றது, ஆனால் பிற RAF கைதிகள் அது அரசு நடத்திய படுகொலை என்றனர்.

வெளியே RAF ஆதரவாளர்களும் அது கொலை என்றே நம்பினர். அன்று ஜெர்மன் அரச கணிப்பின் படி, சனத்தொகையில் 30% , பெரும்பாலும் இளைஞர்கள் RAF கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர். இரண்டாவது தலைமுறை RAF, தமது ஆதர்ச நாயகர்களான சிறையில் இருக்கும் RAF உறுப்பினர்களை விடுதலை செய்ய, பல்வேறு திட்டங்களை தீட்டியது. இந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலர், தமது ஆதர்ச நாயகர்களை பார்த்தே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விதிவிலக்காக அதுவரை அகப்படாதிருந்த, அல்லது விடுதலையான முன்னாள் RAF உறுப்பினர்களும் இருந்தனர்.

ஜெர்மன் அரசு சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வைக்கும் பொருட்டு, சில ஆயுதபாணிகள் சுவீடனில் இருந்த ஜெர்மன் தூதுவராலாயத்தை கைப்பற்றி ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். ஆனால் சுவீடன் அதிரடிப்படை தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டதால் அந்த நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது. சிறிது காலத்தின் பின் ஜெர்மனி “லூப்தான்சா” விமானம் ஒன்று கடத்தப்பட்டது. இந்த விமானக் கடத்தலில் PLFP சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் சோமாலியாவில் தரையிறங்க நிர்ப்பந்திக்கப்பட்ட விமானத்தை, ஜெர்மன் கொமாண்டோ படையினர் கைப்பற்றி பயணிகளை விடுவித்து விட்டனர். இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், எஞ்சியிருந்த RAF கைதிகளும் சிறையில் வைத்து கொல்லப்பட்டனர்.

1977 ம் ஆண்டு RAF, ஜெர்மன் அரச நிறுவனம் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியது. டிரெஸ்னெர் வங்கி தலைமை அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆயுததாரிகளில் ஒருவர் அவரது பெறாமகள் என்ற செய்தி, நாடு முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. தொடர்ந்து RAF கைதிகளுக்கு தண்டனை வழங்கிய தலைமை நீதிபதி நடுத்தெருவில், அவரது வாகனத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக வரும் ஜெர்மன் முக்கியபுள்ளியான ஷேய்லரின் துணிகர கடத்தல் நாடகம், அரசாங்க மட்டத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அரசு கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை. “அனைத்து ஜெர்மனி முதலாளிகளின் சங்க” தலைவரான ஷேய்ளர், முன்பு ஹிட்லரின் நாசிக் கட்சியில் முக்கிய பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் அரசு, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பிடிவாதமாக இருந்து விட்டதால், கொலை செய்யப்பட்ட ஷேய்லரின் பிணம் பிரெஞ்சு எல்லையில் கண்டெடுக்கப்பட்டது.

1998 ம் ஆண்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் ஒன்று வந்தது. “சிவப்பு நட்சத்திரத்தின் மீது AK47 துப்பாக்கி சின்னம்”, அது RAF உத்தியோகபூர்வ அறிக்கை என்று பறைசாற்றியது. 28 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தமது இயக்கத்தை கலைத்து விட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த 28 ஆண்டு கால போராட்டத்தில் இரண்டு பக்கத்திலும் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பின் பின்னர், கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த சில RAF உறுப்பினர்கள் பிடிபட்டனர். ஆயினும் ஒரு சிலர் இன்று வரை பிடிபாமல் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது RAF போன்ற அமைப்பு இயங்குவதற்கு ஏதுவான ஆதரவு தளம் இல்லை என்பதாலும், சர்வதேச அரசியல் வெகுவாக மாறிவிட்டதாலும், ஜெர்மன் அரசு RAF இயக்கத்தை பின்தொடர்வதை நிறுத்தி விட்டது.

ஜெர்மன் அரசு, RAF எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு விட்டது. “பொலிஸ் தேசம்” மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அனைத்து வங்கி ஊழியர்களும் தற்போது கண்ணாடி தடுப்புச் சுவருக்கு பின்னால் தான் பணி புரிகின்றனர். காசாளரிடம் இருக்கும் பெருமளவு பணம் கூட உடனுக்குடன் இரகசிய இடத்திற்கு அனுப்பபடுகின்றது. இதனால் பழைய பாணி வங்கிக் கொள்ளை எல்லாம் இனி படங்களில் தான் பார்க்கலாம். அன்று RAF உறுப்பினர்கள் தலைமறைவாயிருந்த காலத்தில், எல்லாவற்றுக்கும் காசுத்தாள்களை பயன்படுத்தியதால், புலனாய்வு செய்வது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அட்டைப்பணம் புழக்கத்தில் இருக்கும் காலம் இது. மேலும் வீட்டு உரிமையாளர்கள் தண்ணீர், எரிவாயு, மின்சார கொடுப்பனவுகளை வங்கி மூலம் செலுத்துமாறு பணிக்கப் படுகின்றனர். நாட்டு மக்கள் எந்த அளவிற்கு அரச கண்காணிப்பின் கீழே வருகின்றனரோ, அந்த அளவிற்கு RAF போன்ற தலைமறைவு ஆயுதபாணி இயக்கத்தின் இருத்தல் மட்டுப்படுத்தப்படுகின்றது.

ஜேர்மனியின் இன்றைய எதிரி இடதுசாரி தீவிரவாதம் அல்ல, அந்த இடத்தை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் பிடித்து விட்டது. ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தத்தின் கொடூரங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய போது, அது ஜேர்மனிய இளைஞர்களை ஆத்திரப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஜெர்மன் அரசின் அமெரிக்க சார்புத் தன்மை என்பன, ஒரு சிலரை தீவிரவாதத்தை நோக்கி தள்ளியது. சரித்திரம் மீண்டும் திரும்புகின்றது. இன்று ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம், மேற்குலகில் வாழும் முஸ்லீம் இளைஞர்களை ஆத்திரப்படுத்தி, சிலரை தீவிரவாதிகளாக்குகிறது. இரண்டு வகை தீவிரவாதங்களையும் உருவாக்கிய மூலம் ஒன்று தான். ஆயினும் அன்று முழு ஜேர்மனிய சமூகமும் வலது-இடது என்று இரண்டாக பிரிந்து நின்றது. இன்று “ஜேர்மனிய பூர்வகுடிகள்”, “இஸ்லாமிய அந்நியர்கள்” என்ற இனரீதியான பிரிவினை காணப்படுகின்றது.


THE RED ARMY FACTION




The Baader Meinhof Complex (movie trailer)



LINKS
Red Army Faction (Wikipedia)
Baader-Meinhof.com
_____________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

2 comments:

  1. //அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது.//
    முற்றிலும் உண்மை.

    உங்களுக்கு வரலாற்றில் நல்ல interest போல இருக்கு. பழைய (கி.மு) history இல் ஆர்வம் இல்லையா?

    RAF பற்றிய தகவலுக்கு நன்றி.
    தொடர்ந்த்து எழுதவும். நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி, வாசுகி,

    வரலாற்றிலிருந்து பாடம் கற்பதன் மூலம் நிகழ்காலத்தை புரிந்துகொள்ளலாம் என்பது எனது கருத்து. பழைய கி.மு. வரலாறு பற்றி கூட நிறைய படித்திருக்கிறேன். அது மட்டுமல்ல, சரித்திர பிரசித்தி வாய்ந்த இடங்களை நேரே சென்று பார்த்து தகவல்களை திரட்டியுள்ளேன். இருப்பினும் நான் எழுதி வரும் கட்டுரைகள் நிகழ்கால பிரச்சினைகளை எடுத்தியம்புவதால், கட்டுரையின் சுருக்கம் கருதி பண்டைய வரலாறு பக்கம் போவதில்லை. "யார் இந்த யூதர்கள்" போன்ற கட்டுரைகள் விதிவிலக்கு.

    ReplyDelete