ஏதாவதொரு குற்றச்செயல்களுக்காக சொந்த நாட்டில் தேடப்படும் நபர்களை பிரான்ஸ் வரவேற்கிறது. பிரான்ஸில் வெளிநாட்டவர்களை மட்டுமே கொண்ட கூலிப்படையில் சேர்வதற்கு உலகெங்கும் இருந்து விண்ணப்பதாரிகள் கோரப்படுகின்றனர். உங்கள் கடந்த காலம் பற்றி அக்கறையில்லை. சொந்த நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்முறை போன்ற எந்தவொரு கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்ட நபராயினும் பரவாயில்லை. பிரெஞ்சு இராணுவத்தில் தொழில் வாய்ப்பு உள்ளது. French Foreign Legion என்று அழைக்கப்படும் படைப்பிரிவில் பிரெஞ்சு பிரசையாகவல்லாத வெளிநாட்டவர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். அந்த படைப்பிரிவில் சேரும் நபருக்கு புதியதொரு நாமம் சூட்டப்பட்டு, அந்தப் பெயரிலேயே (பிரெஞ்சு)அடையாள அட்டை வழங்கப்படும். அதற்குப்பிறகு உங்களை உலகில் எந்த மூலையிலும் யாரும் தேட முடியாது.
ஆம், உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கின்றீகளோ, அதற்கு மாறாக தான் இருக்கின்றது. உலகில் பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. அதெல்லாம் சாதாரண மக்களை மந்தைகளாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட வெறும் சொற்கள். தத்துவ ஞானிகள் கூறிய அருள்வாக்குகள் எம் கண்முன்னாலேயே நிரூபணமாகின்றது. கீதையில் கண்ணன் கூறிய அதே கருத்துகளை பிற்காலத்தில் இத்தாலியின் மாகியவல்லியும் கூறிச் சென்றான். பாமரர்கள் தான் அரசு என்றால் அறம் இருக்க வேண்டும் என்று ஏமாந்து போகிறார்கள். ஒரு தனிநபரைப் போலத்தான், ஒவ்வொரு நாட்டிற்கும் அதனது நலன்கள் மட்டுமே முக்கியமானவை. கிரிமினல் குற்றவாளிகளை இராணுவத்தில் சேர்ப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. காலனியாதிக்க காலத்தில் ஐரோப்பாவின் குற்றவாளிகளைப் பிடித்து புதிய காலனிகளுக்கு இராணுவவீரர்களாக அனுப்பிவைத்தார்கள். அதற்கு அவுஸ்திரேலியா மட்டும் ஒரு உதாரணமல்ல, எல்லா காலனிகளிலும் இதுதான் நடந்தது. அந்த பாரம்பரியத்தை பிரான்ஸ் இப்போதும் பின்பற்றி வருகின்றது.
உலகம் முழுவதும் இருந்து 136 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த படைப்பிரிவில் அங்கம் வகிக்கின்றனர். அமெரிக்கர்கள், ரஷ்யர்கள், சீனர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று பலதரப்பட்ட நாடுகளை சேர்ந்தோர் பிரான்சினால் உள்வாங்கப்படுகின்றனர். கடுமையான இராணுவ பயிற்சிக்குப் பிறகு இந்த வீரர்கள் பிரான்சின் நலன்களை பாதுகாக்கும் வெளிநாட்டு நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். அது ஈராக்காக இருக்கலாம், அல்லது ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் முன்னாள் பிரெஞ்சு காலனியாகவும் இருக்கலாம். பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சின் கீழே இயங்கினாலும், பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் இந்த வெளிநாட்டவர் இராணுவப்பிரிவு ஈடுபடுத்தப்படுகின்றது.
உலகில் மிகக் குறைந்த மக்களே அறிந்திருக்கும் இந்த தகவல்களைப் பற்றிய முழுமையான ஆவணப்படம் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் French Foreign Legion இணையத்தளத்தை பார்வையிடலாம்.
French Foreign Legion (Wikipedia)
________________________________________
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
கனம் மிக்க இவ் ஆக்கங்களை தனியே வலைபதிவிற்காகத்தான் எழுதுகிறீர்களா ? நிறைந்த ஆய்வில் அல்லது வாசிப்பில் உருவாகும் இவ்வெழுத்துக்களை சேமிக்கின்றேன். நன்றி
ReplyDeleteபத்திரிகைகளுக்கும் முயற்சிக்கலாமே
நன்றி சயந்தன், நீங்கள் கூறுவது போல இதுபோன்ற கட்டுரைகளை வரைவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகின்றது. பல தரவுகள் திரும்ப திரும்ப சரிபார்க்கப்பட வேண்டியிருக்கிறது. எனது அறிவுக்கெட்டியவரை சாத்தியமானவை என்று கருதுவனவற்றை மட்டுமே சேர்த்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநான் முன்பும், இப்போதும் சிறுபத்திரிகைகளுக்கு நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருகிறேன். பத்திரிகைகளுக்கு எழுவது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம். அச்சில் வரும் இதழ்கள் நீண்ட இடைவேளை விட்டு வருவதாலும், இணையத்தை பயன்படுத்தும் பரந்துபட்ட வாசகர்களுக்கும் பெறுமதிமிக்க தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதாலும் எனது வலைப்பதிவில் எழுதிவருகிறேன். வேறு சில தோழமை இணையத்தளங்கள் எனது பதிவுகளை மறு பிரசுரம் செய்கின்றன, அல்லது சில கட்டுரைகள் அந்த தளங்களில் முதலில் பிரசுரிக்கப்படுகின்றன.
உங்களைப்போன்றவர்கள் கொடுக்கும் ஆதரவு தான் எனது எழுத்துகளுக்கான ஊக்கசக்தி.