Saturday, May 10, 2008

லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.

லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.

அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.

மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.

"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.

இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.

தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

__________________________________________________

2 comments:

  1. எங்கே கலையரசன் இன்னமும் இந்த விடயம் குறித்து எழுதவில்லையே என எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

    நன்றி.

    இதில் எனக்கு விளக்கம் சற்றுக்குறைவாக இருக்கும் பகுதி, ஹெஸ்புல்லா பின்வாங்கியமைதான். இந்த தந்திரோபாய பின்வாங்கல், இனிவரும் போருக்கான ஒத்திகை என்பது போல் அநீங்கள் கருத்துச்சொல்லி இருக்கிறீர்கள். அந்த "இனி வரும் போர்" எதுவாக இருக்க முடியும்?

    ReplyDelete
  2. நன்றி, மயூரன்,

    லெபனான் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் அளவு பலத்துடன் ஹிஸ்புல்லா இருந்த போதிலும், இப்போது அப்படி நடக்கும் சாத்தியம் இல்லை. ஷியா முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரும் மட்டுமே ஹிஸ்புல்லாவை ஆதரிக்கின்றனர். மறுபக்கம் சுன்னி முஸ்லிம்களும், (இஸ்லாமின் ஒரு பிரிவாக இருந்தாலும், தம்மை தனித்துவ மதமாக கருதும்) டுரூசியர்களும், காலம்சென்ற பாசிஸ்ட் ஜெனரல் அவொன் ஆதரவு கிறிஸ்தவர்களும் ஹிஸ்புல்லாவை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து போருக்குள் (தற்போது நடப்பவை சிறியளவு ஆயுத மோதல்கள் மட்டுமே) தள்ளி விட அமெரிக்காவும், (முன்னாள் காலனியாதிக்க) பிரான்சும் மறைமுகமாக முயற்சி செய்கின்றனர். தேவைபட்டால் இஸ்ரேல் நேரடியாக களத்தில் இறங்கும். "நிகழ்கால லெபனான் அரசாங்கம் இஸ்ரேலிய உளவாளிகளை கொண்டுள்ளது" என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்ச்சிகளுக்கு பினால் இருக்கும் ஒரே நோக்கம் ஹிஸ்புல்லாவை இராணுவரீதியாக செயலிழக்க செய்வது. அதற்கு காரணம், "யாராலும் வெல்லமுடியாத" இஸ்ரேலை,ஹிஸ்புல்லா இரண்டு தடவை தோற்கடித்தது. இது மத்தியகிழக்கில் பிற ஆயுதபாணி இயக்கங்களுக்கு ஊக்குவிக்கும் காரணியாக இருக்ககூடாது என்பது தான் அவர்களின் கவலை. மேலும் சிரியா மற்றும் ஈரானின் லெபனான் வரை நீளும் கையை வெட்டி அடக்கி வைக்கும் நோக்கமும் உள்ளது. மேலும் ஈரானில் வைத்து, ஈராக்கின் ஷியா போராளிகளுக்கு, ஹிஸ்புல்லாவினர் பயிற்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே விரைவில் பேரழிவை உண்டாக்கும் போரை லெபனான் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

    -கலையரசன்-

    ReplyDelete