Tuesday, August 31, 2010

செல்வந்த ஈராக் ஏழை நாடானது எப்படி?


(ஈராக் வரலாறு, இறுதிப் பகுதி)

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வரும் வரையில் ஈராக் பத்துக்கும் குறையாத ஆட்சிக் கவிழ்ப்புகளை கண்டு விட்டது. 1958 புரட்சியின் பின் அரசமைத்த பிரிகேடியர் காசிமுக்கு பல எதிர்ப்புகள் வந்தன. பொதுவுடமைவாதிகள், தாராளவாதிகள், தேசியவாதிகள் என்று பல பிரிவுகள் தமக்குள் சண்டையிட்டன. 1959 ம் ஆண்டு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் தேசியவாதிகள் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வட ஈராக்கில் இனக்கலவரம் தோன்றியது. அதனை சாட்டாக வைத்து கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். காசிமின் அரசு ஒடுக்குமுறை இயந்திரமாகியது. இதேவேளை நாட்டில் இன்னொரு புதிய அரசியல் சக்தி தோன்றியது. "பாத்" (Ba'th - மீள் உயிர்ப்பு ) எனப் பெயர் கொண்ட அரசியல் இயக்கம் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது. பாரிஸில் கல்வி கற்ற சிரியா நாட்டு மாணவர்களால், "அரபு தேசியம், சோஷலிசம், மதச்சார்பின்மை" போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்த இயக்கம் உருவானது.

சிரியாவில் பாத் கொள்கைகள் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அங்குள்ள கல்லூரிகளில் பயின்று கொண்டிருந்த ஈராக் மாணவர்களும் கவரப்பட்டனர். அவர்கள் ஈராக்கிலும் வேர் விட்டனர். ஈராக் தொழிலாளரை நிறுவனமயப் படுத்தினர். வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தி காசிமின் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாத் உறுப்பினர்களின் தாக்குதல் குழுவொன்று காசிமை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. தாக்குதல் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தப்பிவிட்டார். அவர் தான் சதாம் ஹுசைன். இந்த சம்பவம் சதாமை ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது. கட்சியின் மத்திய குழுவில் இருந்த உறவினர் ஒருவரின் உதவியால் சதாம் கட்சியின் மேல்மட்டத்திற்கு வர முடிந்தது. 1963 ம் ஆண்டு, இராணுவத்திற்குள் ஊடுருவியிருந்த பாத் கட்சி ஆதரவாளர்கள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது பாத் கட்சி நாட்டின் பிரதான கட்சியாகியது. ஆனால் இராணுவ போக்கிலான ஆட்சியாளருக்கும், கட்சிக்கும் இடையில் ஒத்துப் போகவில்லை. 1968 ம் ஆண்டு, மீண்டும் ஒரு சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை பாத் கட்சி முழுமையான அதிகாரத்தை பெற்றுக் கொண்டது.

பாத் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. தேசத்தின் தலைமை "புரட்சிகர கட்டளைப் பணியகம்" என்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் வந்தது. கட்சியின் பெயர் "அரபு பாத் சோஷலிசக் கட்சி" பெயர் மாற்றப் பட்டது. செயலதிபர் அஹ்மத் ஹசன் அல் பாகிர் ஜனாதிபதியாகவும், இராணுவத் தலைமை அதிகாரியாகவும் பதவியேற்றார். சதாம் ஹுசைன் RCC உப தலைவரானார். அன்றிலிருந்து ஈராக் நிலையான ஆட்சியைக் கண்டது. ஆனால் உள்வீட்டு கணக்குத் தீர்த்தல்கள் தொடர்ந்தன. பாத் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தூக்கிலிடப்பட்டார். சில வருடங்களுக்குப் பின்னர், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்கள் "தேசிய முற்போக்கு முன்னணி" என்ற பெயரில் அரசாங்கத்தில் சேர்ந்தனர். அரபு தேசியத்தை முதன்மையாகக் கொண்ட பாத் கட்சி, அரபு பேரினவாதக் கூறுகளை கொண்டிருந்தது. அது பிற சிறுபான்மை இனங்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக பார்த்தது. வடக்கே உரிமைகளை கோரி எழுச்சி பெற்ற குர்த்தியர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது. குர்தியர்கள் ஆயுதப் போராடத்தை கையிலெடுத்தனர். மலை சார்ந்த பகுதிகளை மறைவிடமாக கொண்ட குர்திய கெரிலாக்களை ஈராக் அரச படைகளால் அடக்க முடியவில்லை. பின்னர் அதுவே சதாம் அரசின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

பாக்தாத்தின் வடக்கே திக்ரித் என்ற சதாமின் பிறப்பிடத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் பாத் கட்சியினுள் பெருகியது. பல முக்கிய அரசுப் பொறுப்புகள் யாவும் திக்ரித்காரருக்கு சென்றன. இருந்தாலும் பிற சமூகங்களை சேர்ந்த விசுவாசிகளுக்கும் பதவிகள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 250 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இருந்தாலும் அவர்களிடம் அதிகாரம் இருக்கவில்லை. அனைத்து முடிவுகளும் RCC மட்டத்திலேயே எடுக்கப்பட்டன.

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்த பின்பு உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருந்தமை ஈராக்கிற்கு சாதகமாகப் போய் விட்டது. எண்ணெய் விற்று வந்த வருமானம், புதிய தொழிற்துறையில் முதலிடப்பட்டது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதன் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயத்தை கவனிக்க ஆளில்லாமல் போனதால், எகிப்தில் இருந்து விவசாயிகளை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக ஈராக் டினாரின் பெறுமதி டாலரை விட அதிகமாக உயர்ந்தது. குவைத் யுத்தம் வரையில், ஈராக் உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது. இன்றைய நிலையுடம் ஒப்பிடும் பொழுது அதை பலரால் நம்பமுடியாது. ஈரானுடனான போர் கூட பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம், குவைத், சவூதி அரேபியா, மேற்குலக நாடுகளில் இருந்து வந்து குவிந்த பணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பாதுகாப்பு வழங்கின. ஈரானுடனான போரை பயன்படுத்தி ஈராக் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றும், டச்சு வர்த்தகர் ஒருவரும் இரசாயன ஆயுதங்களை விற்றார்கள். அப்போதெல்லாம் யாரும் ஆட்சேபிக்கவில்லை. நீண்ட கால போரியல் அனுபவத்தைக் கொண்ட இராணுவம், நவீன ஆயுததளபாடங்கள் என்பன ஈராக்கை பிராந்திய வல்லரசாக்கியது. பிற்காலத்தில் அதுவே செருக்குடன் குவைத் மீது படையெடுக்க தூண்டியது.

ஈராக் என்ற தேசம் உருவான காலத்தில் இருந்து, குவைத் ஈராக்குக்கு சொந்தமான பிரதேசம் என்று பாக்தாத் ஆட்சியாளர்கள் உரிமை கோரி வந்தார்கள். அந்த உரிமை கோரலை அடிப்படையாக கொண்டு, சதாம் உத்தரவின் பேரில் ஈராக் இராணுவம் குவைத் மீது படையெடுத்தது. வளைகுடாவில் ஒரு துறைமுகத்திற்கான தேவையும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையும் பிற காரணங்கள். குவைத் படையெடுப்பு குறித்து அமெரிக்க நண்பனுக்கு ஈராக் அறிவித்திருந்தது. அமெரிக்கா சம்மதிக்கா விட்டாலும், வாஷிங்க்டனில் இருந்து கிடைத்த சமிக்ஞை ஒன்றை தவறாக புரிந்து கொண்ட ஈராக் படையெடுப்பில் இறங்கியது. ஆனால் ஈராக்கை பொறியில் மாட்டி விடும் திட்டம் அது என்பது பின்னர் தெரிய வந்தது. குவைத்தை சேர்த்துக் கொண்டால் தனது வல்லரசு அந்தஸ்து உயரும் என்று ஈராக் கருதியது. அமெரிக்கா மனதில் வேறொரு திட்டம் இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து குவைத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஈராக்கை ஆக்கிரமிக்க வைத்து, போருக்குள் இழுத்து விட்டு, அமெரிக்க இராணுவ உதவியைக் காட்டி, விடுதலையான குவைத்தை தனது செல்வாக்குக்கு உட்படுத்தியது.

சதாம் அன்று குவைத் யுத்தத்தை வரப்போகும் போர்களின் தாய் என்று வர்ணித்தார். அது எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் சொல்லப்பட்ட கூற்று என்பது பின்னர் நிரூபணமானது. குவைத் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் உடைந்தது. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த மக்கள், ஓரிரு வருடங்களில் உணவுக்கே வழியற்ற ஏழைகளானார்கள். பத்து வருடங்கள் கழித்து, மிகவும் பலவீனமடைந்த ஈராக் மீது இன்னொரு போர் திணிக்கப்பட்டது. இம்முறை சதாம் ஹுசைன் அரசைக் கவிழ்க்கும் நோக்குடன் பன்னாட்டுப் படைகள் நுழைந்தன. சதாமும், பிற முக்கியஸ்தர்களும் தூக்கிலிடப்பட்டனர். நாடு நீண்டதொரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
2.பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்
1.ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2003 ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டது. அதனால் கடைசி பந்தியை மட்டும் மாற்றி இத்துடன் முடிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க ஆக்கிரப்பின் பின்னரான ஈராக் தொடர்பான பல பதிவுகள் ஏற்கனவே கலையகத்தில் வந்துள்ளன.)


ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்
ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு
எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது

Sunday, August 29, 2010

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

- ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.
- 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.
- ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
- சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. (பார்க்க:
Mumbai terror suspect David Headley was ‘rogue US secret agent’)

அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:
- 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.
- 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.
- 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.
- 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை... இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.
- 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப் பட்டார்.

மேலதிக விபரங்களுக்கு...

Gladio Terrorism
European Parliament resolution on Gladio

Thursday, August 26, 2010

பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்

பகுதி : இரண்டு)
19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஜேர்மனிய தேசிய அரசுக்கும், ஒஸ்மாமானியர்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்தது. அதன் நிமித்தம் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் வந்தது. அதே காலத்தில் தான், ஜேர்மனிய பெற்றோலிய நிபுணர்கள் ஈராக்கில் செய்த ஆராய்ச்சியின் பயனாக நிலத்தடி எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பானது பிற்கால ஈராக்கின் அரசியல்-பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் எதிர்பாராத விதமாக, முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியுற்றது. போரில் ஜெர்மனியை ஆதரித்ததால் துருக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒஸ்மானிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து, அந்நியரின் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. போரில் வெற்றி வாகை சூடிய பிரிட்டனும், பிரான்சும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ஒஸ்மானிய ஆதிக்கத்தில் இருந்த அரபு பிரதேசங்கள் யாவும், ஒன்றில் ஆங்கிலேயரினால் அல்லது பிரெஞ்சுக்காரரால் ஆக்கிரமிக்கப் பட்டன. அப்படித்தான் ஈராக் ஆங்கிலேயர் காலனியாகியது.

துருக்கியர் காலத்தில் ஈராக் ஒரே தேசமாக கருதப்படவில்லை. அப்போது அங்கே மூன்று மாகாணங்கள் இருந்தன. (தேசம் என்ற சொல் ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை குறிக்கும்.) ஈராக்கின் தென் பகுதி, குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப் படலாயிற்று. மத்திய ஈராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வட ஈராக் மொசுல் மாகாணம். ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்.) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய் விட்டார்கள். குர்தியரின் தனி நாட்டுக் கோரிக்கை குப்பைக் கூடைக்குள் போனது.

1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு, புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார-கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும், லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும் தான். ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 ல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ, பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப் படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள்.

எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் முடிசூட்டிக் கொண்ட இளவரசர் காசியின் காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றின. ஈராக் இராணுவம் அரசியலில் தலையிட ஆரம்பித்தது. இரண்டாவது உலகப்போர் காலத்தில் இராணுவ அதிகாரிகள் பிரிட்டனுடனான உறவை துண்டித்து விட்டு, ஜெர்மனியுடன் உறவை ஏற்படுத்தினார்கள். ஏதோ அவர்கள் விருப்பம், என்று பிரிட்டன் விட்டுக் கொடுக்கவில்லை. ஈராக் மீது படையெடுத்தார்கள். பாக்தாத் கடற்கரையில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், ஒரு மாதத்திற்குள்ளேயே பாக்தாத்தை கைப்பற்றி விட்டன. (2003 ம் ஆண்டு சரித்திரம் திரும்பியது. பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்தன.) பாக்தாத்தில் பிரிட்டிஷ் சார்பு பொம்மை அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஒன்று போடப்பட்டது. அதன் பிரகாரம் ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்துறை துரித கதியில் வளர்ந்தது. நிலங்கள் தொடர்பான புதிய சட்டம் ஒன்று நிலவுடமையாளருக்கு சாதகமாக அமைந்தது. சிறிய விவசாயிகளின் நிலங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்கள் தொழில் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நகரங்கள் பெருகின. கல்வி கற்ற மத்திய தர வர்க்கம் ஒன்று உருவானது. இந்த வர்க்கம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பொழுது, தமது நாடு நிலப்பிரபுக்களால் ஆளப்படுவதை புரிந்து கொண்டனர். அவர்களது மனக்குமுறலை பிரதிபலிக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது.
மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, நகர்ப்புற தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க விடுதலை குறித்து பேசியதால், பெருமளவு ஷியா முஸ்லிம்களும், குர்து இன மக்களும் கவரப்பட்டனர். இதற்கிடையே அரச குடும்பம் அரசியல் செல்வாக்கு இழந்திருந்தாலும், அவர்களது உல்லாச வாழ்வு பறிபோகவில்லை. ஈராக் அரசு நிலவுடமையாளர்களினதும், பிரிட்டிஷாரினதும் நலன்களை மட்டுமே கவனித்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தன. இராணுவத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவியது.

எகிப்தில் நாசர் தொடங்கி வைத்த அரபு தேசிய அலை ஈராக் கரையை அடைந்தது. 14 ஜூலை 1958 ம் ஆண்டு, பிரிகேடியர் காசிம் தலைமையில் "சுதந்திர அதிகாரிகள்" ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். ஈராக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் 1958 ம் ஆண்டு இடம்பெற்ற ஈராக் புரட்சி தான் ஜனநாயகத்திற்கான முதற்படியாகும். அதுவரை காலமும் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்களான பிரிட்டிஷ்காரர்கள், ஈராக்கில் பிற்போக்கு மன்னராட்சியை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் தமது நலன்களைப் பேணும் அரசாங்கத்தை அமைக்கவே விரும்பினார்கள். 1958 ஈராக் புரட்சி ஈராக் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவை மேற்கத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தன.

ஈராக்கில் எண்ணெய் அகழும் தொழிலில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கொள்ளை லாபமீட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு சிறு தொகையை மட்டும் ராயல்ட்டியாக ஈராக் அரசுக்கு வழங்கி வந்தன. அது கூட மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. ஈராக் அரச குடும்பமும், அதிகாரிகளும் எண்ணெய் விற்ற ராயல்ட்டி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தார்கள். புரட்சிக்குப் பின்னர் வந்த அரசாங்கம் ராயல்ட்டி தொகையை அதிகரித்தது. எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உடன்பாட்டுக்கு வரமுடியாமல் போனதால், எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறின. இதனால் ஈராக் அரசு எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது. தகுதியற்ற உள்நாட்டு முகாமைத்துவம் காரணமாக பல பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. பல வருடங்களுக்குப் பின்னர், 1968 ம் ஆண்டு, சோவியத் யூனியன் நிபுணர்களின் வருகைக்கு பின்னரே பெற்றோலிய உற்பத்தி அதிகரித்தது. அதன் பிறகு தான் ஈராக் உலகில் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டது.

1958 புரட்சி ஈராக் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. பெறும் நிலவுடமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. (சதாம் ஹுசைன் காலத்திற்குப் பின்னர் தான் விவசாயத் துறையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தலையெடுத்தன.) பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. பெண்களுக்கு சமவுரிமை கிடைத்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஈராக்கில் மொத்த பணியாட்களில் இருபது வீதமானோர் பெண்கள். இத்தகைய சமூக நலன் சார்ந்த பொருளாதார திட்டங்கள் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை அமுலில் இருந்தன. இடையில் எத்தனையோ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் சமுதாய முன்னேற்றம் தடைப்படவில்லை.

(தொடரும்)

முதலாவது பகுதி:

1. (ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

Wednesday, August 25, 2010

அரபு விலைமாதர்கள் - நுகர்பொருள் பலியாடுகள்

மொரோக்கோவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த நதியா வீதிக்கு வந்த பொழுது அவளுக்கு 15 வயது. பிள்ளைகளை பராமரிக்க முடியாத, மதுவுக்கு அடிமையான தந்தை அவளை வீதிக்கு அனுப்பியிருந்தார். "எப்படியாவது பணம் சம்பாதித்து வாழ்" என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது, ராபாத் நகரின் தெருக்களில் நின்று 20 யூரோக்கு உடலை விலை பேசுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்போது நதியா பன்னிரண்டு வருட அனுபவமுள்ள பாலியல் தொழிலாளி. ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாலிமா ஹோட்டல், பிரெஞ்சு ரெஸ்டாரன்ட் போன்ற இடங்களில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கிறார். நதியாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மொரோக்கோவில் பொதுவாகவே கணவன் துணையின்றி குழந்தை வளர்க்கும் தாய்மாரை விபச்சாரிகளுக்கு சமமாகப் பார்ப்பார்கள். ஒவ்வொரு தடவையும் நதியா வேறு வேலை தேடிச் செல்லும் பொழுது, முதலாளி அவளுடன் படுக்கக் கேட்கிறார். மறுத்தால் வேலை கிடைக்காது.

செனிப்பின் கதை இன்னொரு வகையானது. செனிப் கருவுற்றவுடன் அவளைக் காதலித்தவன் கைவிட்டு விட்டான். கல்யாணமாகாமலே குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் குடும்பத்திற்கு வேண்டப்படாதவள். பெற்றார் அவளைக் குடிமுழுகி விட்டார்கள். வாழ வழியின்றி நிர்க்கதியாக தவித்த நேரம், ஒரு நண்பி விபச்சாரத் தொழிலை அறிமுகப் படுத்தினாள். செனிப்பை பொறுத்தவரை, மொரோக்கோவில் பாலியல் தொழில் செய்வது அப்படி ஒன்றும் கடினமான காரியமல்ல. "நீங்கள் கருதுவது போல அல்லாது, மொரோக்கோ சமூகம் திறந்த மனப்பான்மை கொண்டது. பகிரங்கமாக விளம்பரம் செய்யாத வரையில் இங்கே எல்லாமே சாத்தியம்." என்று கூறினாள். செனிப்புக்கு புதிய காதலன் ஒருவன் மூலம் இரண்டாவது குழந்தையும் பிறந்தது. புதிய காதலன் ஒரு வாடிக்கையாளனாக அறிமுகமானான். அன்பொழுகப் பேசினான். திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தான். ஆனால் மொரோக்கோவில் விபச்சாரிகளை காதலிக்கும் ஆண்கள் பலர் ஒன்றில் இலவச பாலுறவுக்காக, அல்லது பணத்திற்காக சுரண்ட நினைக்கின்றனர்.

மொரோக்கோவின் சமூகவியல் அறிஞர் Soumaya Naamane Guesous, பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார். அவரது நூலான "அனைத்து வெட்கங்களும் போய் விட்டன. மொரோக்கோவில் பெண்களின் பாலுறவு"(Au-dela de toute pudeur, la sexualite feminine au Maroc), இதுவரை பதினேழு பதிப்புகள் வந்து விட்டன. சுமயா கூறுகிறார்: "மறந்து விடாதீர்கள். மொரோக்கோ கடுமையான இஸ்லாமிய சட்டங்களைக் கொண்ட நாடாக பேரெடுத்திருக்கலாம். ஆனால் அதன் பின்னணியில் பல விடயங்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன. அடித்தட்டு ஏழை மக்கள் மத்தியில், இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் சூழலை புரிந்து கொள்ளும் பக்குவம் உள்ளது. இறைவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, அல்லது அவள் ஒருத்தி தானே குடும்பத்தை பார்க்கிறாள் என்றோ பரிதாபப் படுவார்கள்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள், பணக்கார வீட்டு இளைஞர்களின் பாலியல் வெறிக்கு இரையாகின்றனர். அடங்கிப் போக வேண்டிய நிலையில், ஒரு தடவை கர்ப்பமானால் வாழ்க்கையே முடிந்து விடும். அதன் பிறகு, பாலியல் தொழில் செய்து பிழைப்பதை தவிர அந்த அபலைப் பெண்ணுக்கு வேறு வழி இல்லை.

முன்பெல்லாம் ஒரு விபச்சாரியை அடையாளம் கண்டுபிடிப்பது இலகு. கவர்ச்சியான தோற்றத்துடன் நகரங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் காத்திருப்பார்கள். மொரோக்கோவில் அட்லஸ் மலைப் பிரதேசக் கிராமங்கள் சில திறந்த வெளி விபச்சார விடுதிகளாக அறியப்பட்டன. இஸ்லாமிய மத அடிப்படைவாதமும், உலகமயமாக்கலும் மரபுவழி விபச்சாரத்திற்கு முடிவு கட்டின. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு பெருகுவதால் அரசாங்கம் வெளிப்படையான பாலியல் தொழிலை அடக்கி விட்டது. அந்த இடத்தில் மேற்குலக மோகமும், உலகமயமாக்கலும் புதிய வகை விபச்சாரத்தை உருவாக்கியுள்ளது. நவீன விபச்சாரிகளை, மரபு வழி விபச்சாரிகளைப் போல இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஆச்சாரமான குடும்பப் பெண் போல தோற்றமளிப்பார்கள். பாரிலும், டிஸ்கோதேக்கிலும் சந்திக்கும் பெண்ணுடன் சில நிமிட உரையாடலுக்கு பின்னர் தான், அவள் ஒரு விபச்சாரி என்று தெரிய வரும். செல்லிடத் தொலைபேசி, இணையங்களின் பாவனை, பாலியல் சந்தையை பலரறியா வண்ணம் பரப்பி வருகின்றது. தகவல் தொழில்நுட்ப வசதி காரணமாக, பாலியல் தொழில் முன்னரை விட பல்கிப் பெருகியுள்ளது.

உலகமயமாக்கலின் பின்னர் பாலியல் தொழிலாளிகளின் நோக்கமும் மாறியுள்ளது. முன்னரெல்லாம் இந்த தொழிலில் ஈடுபடும் பெண், வறுமை காரணமாக, தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இதை தேர்ந்தெடுத்தாள். நுகர்பொருள் கலாச்சாரம் சராசரி மொரோக்கர்களின் கனவுகளை மாற்றி விட்டது. சந்தையில் கடைசியாக வந்துள்ள செல்லிடத் தொலைபேசிக்காக, அழகான ஆடைக்காக, விலைமதிப்பற்ற நகைகளுக்காக இளம் பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இவற்றை அடைவதற்காக அவர்கள் தமது உடலை விலை பேச தயாராக இருக்கிறார்கள்.

காசாபிளாங்கா நகரில் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்கு போய்ப் பார்த்தால் தெரியும். பணக்கார ஆண்கள் தமது "நண்பிகளுக்கு" நகைகளை பரிசாக வாங்கிக் கொடுக்கிறார்கள். பகுதி நேர பாலியல் தொழிலாளர்கள் பெருகி வருவதால், மொரோக்கோ பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது. டிஸ்கோ நடன விடுதிகள் லாபம் சம்பாதிக்கின்றன. கூட்டிச் செல்லும் டாக்சி ஓட்டுனருக்கு, வழியில் மறிக்கும் போலீஸ்காரருக்கு, அடுக்குமாடி கட்டிட காவலாளிக்கு, ஹோட்டல் வரவேற்ப்பாளருக்கு என்று பலருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இதைவிட கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகள், நகைக் கடைகள் என்பன பக்க விளைவாக லாபம் சம்பாதிக்கின்றன.

இத்தகைய நாகரீக போக்கு வசதியற்ற அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு மட்டும் பொதுவானதல்ல. படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள், தாம் விபச்சாரம் செய்வதாக கூறுவதில்லை. ஆனால் தமது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பணத்திற்காக பல ஆண்களுடன் உறவு கொள்கின்றனர். மனேஜர் மட்டத்தில் தொழில் புரியும் படித்த பெண் ஒருவர், பணத்திற்காக உடல் உறவு கொள்வதை ஏற்றுக் கொண்டார். அவர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார். ஏனென்றால் மேல்தட்டு தோற்றப் பொலிவை பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகின்றது. தனக்கென வாழ்க்கைத்துணையை வைத்திருக்கும் பெண்கள் கூட, மேலதிக பணத் தேவைக்காக வேறு ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர். மாதாந்த ஊதியத்தை விட அதிகம் சம்பாதிக்கலாம் என்றால் அதில் என்ன தவறு? என்று கேட்கின்றனர்.

எண்ணைவள வளைகுடா நாடுகளைச் சேர்ந்த, பணக்கார அரேபிய ஆண்களின் காம வேட்கையை பூர்த்தி செய்யும் இடமாக மொரோக்கோ மாறியுள்ளது. முன்பு லெபனான் அந்தப் பெருமையை பெற்றிருந்தது. தங்களது நாட்டில் தமது பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கும் இந்த வளைகுடா அரேபியர்கள், சுதந்திரமாக திரியும் லெபனான், மொரோக்கோ அழகிகளை வேட்டையாடுகிறார்கள். 1975 ல் இருந்து தீராத உள்நாட்டு யுத்தத்திற்குள் லெபனான் விழுந்து விட்டதால், அவர்கள் தற்போது மொரோக்கொவை குறிவைத்துள்ளனர். இந்த திமிர் பிடித்த பணக்கார வளைகுடா அரேபியர்கள், மொரோக்கோவில் பலரது வெறுப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு முறை இரவு விடுதி ஒன்றினுள் புகுந்த சவூதி பணக்காரன், அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் வெளியேற்ற விரும்பினான். அதற்காக எல்லா நுளைவுச்சீட்டுகளையும் வாங்கினான். நல்ல வேளையாக அங்கிருந்த மொரோக்கோ பணக்காரன் ஒருவன் நுளைவுச்சீட்டுகளுக்கு இரு மடங்கு விலை கொடுத்து சவூதிக்காரனை விரட்டி விட்டான். பாலியல் தொழிலில் ஈடுபடும் மொரோக்கோ பெண்கள் கூட வளைகுடா வாடிக்கையாளர்களை விரும்புவதில்லை. "ஐரோப்பியர்களும், ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ ஆண்களும் கண்ணியமாக நடத்துவார்கள். பணக்கார வளைகுடா ஆண்கள் எங்களை விலங்குகளாக கருதுகிறார்கள். அவர்களிடம் நிறையப் பணம் இருக்கலாம். ஆனால் எங்களை பொம்மை போலத் தான் நடத்துவார்கள்."

(நன்றி : NRC Handelsblad, 24 aug. 2010)

(இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை.)

Monday, August 23, 2010

ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பகுதி : ஒன்று)
ஐரோப்பியர்கள் நாகரீகமடைவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, ஈராக்கியர்கள் நாகரீகமடைந்த மக்களாக வாழ்ந்துள்ளனர். அதனை நிரூபிக்கின்றன ஈராக்கின் புராதன நகரங்கள். இன்று ஈராக் என அறியப்படும் நாடு, கிரேக்கர்களால் "மெசொப்பொத்தாமியா" (இரு நதிகளுக்கு இடைப்பட்ட தேசம்) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. எனினும் அந்தப் பகுதிக்கு கிரேக்கர்கள் வருவதற்கு முன்னமே, அதாவது இற்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்பு, "சுமேரியர்கள்" என்ற பண்டைய நாகரிக சிறப்பு மிக்க மக்கள் அங்கே அரசமைத்திருந்தனர். அந்த சுமேரியரின் நாட்டின் தலைநகரம் "ஊர்" என அழைக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது தொலைவில் "உருக்" என்ற நகரம் இருந்தது. இதனை பைபிள், "எரேக்" என்று குறிப்பிடுகின்றது. அதிலிருந்து தான் ஈராக் என்ற தற்கால பெயர் வந்திருக்க வேண்டும்.

சுமேரியத் தலைநகர் ஊரில் இருந்து தான் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசி ஆப்பிரஹாம் வந்தார். தமது மொழிக்கென எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த சுமேரியர்கள், களி மண் தட்டுகளில் இலக்கியங்களை எழுதி வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் படி, விவிலிய நூலில் ஆதியாகமம் பகுதியில் வரும் பல கதைகள் இந்த சுமேரிய மண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. (ஆனால் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன.) சுமேரிய நாகரீகம் ஈராக்கின் தென் பகுதியில் வளர்ந்து வந்தது. அதே காலகட்டத்தில் வட ஈராக்கில் போர்க்குணம் மிக்க ஒரு புதிய இனம் தோன்றியது. (பைபிளில் வரும்) நோவாவின் மகன் "செம்" மின் வழித்தோன்றல்களே அவர்கள். செம்மில் இருந்து தான் யூத, அரேபிய இனங்களைக் குறிக்கும் செமிட்டியர் என்ற பெயர் வந்தது.

செமிட்டிய இனத்தை சேர்ந்த "சார்கோன்" என்ற மன்னன் தோள் வலிமையால் பிற சிற்றசர்களை வென்று, சுமேரியாவையும் அடிபணிய வைத்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டினான். அதன் தலைநகரம் "அக்காட்". அந்த வெற்றிக்குப் பின்னர் தான் சுமேரியக் கதைகள் பைபிளினால் சுவீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஊகிக்கக்கக் கூடிய ஆதாரங்கள் நிறைய உள்ளன. நோவாவின் கதையில் வரும், ஊழிக்கால கடல் கொந்தளிப்பு கருங்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூகோள வரைபடத்தை பார்த்தால், செம் மன்னனின் ராஜ்ஜியம் கருங்கடலில் இருந்து சிறிது தூரத்திலேயே அமைந்திருந்தது புலப்படும். மேலும் சார்கோன் மன்னனின் பிறப்பு பற்றிய கதை, யூதர்களின் மேசியா மோசஸின் கதையை ஒத்துள்ளது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், சார்கோன் மன்னனின் பிறப்பு வருடாவருடம் கொண்டாடப்பட்டது. செம் மன்னனின் வம்சாவழியினராக தம்மை காட்டிக் கொண்ட யூதர்கள், பண்டைய ஈராக் மண்ணுக்குரிய கதைகளை பைபிளில் எழுதி வைத்தார்கள். பின்னர் அவற்றை தமது பரம்பரைக் கதைகள் என்று உரிமை கோரினார்கள்.

கி.மு. 1500 ஆண்டளவில் "பாபிலோன்" என்ற புதிய அரசு தோன்றியது. இவர்களின் காலத்திலும் நாகரீகம் தழைத்தது. பாபிலோனியர்களால் போற்றப்பட்ட மன்னன் ஹமுராய், மக்கள் நலச் சட்டங்களை இயற்றி, அவற்றின் வாசகங்களை நாடெங்கிலும் தூண்களில் பொறித்து வைத்தான். இதுவே நவீன சட்டங்களின் தோற்றமாக கருதப்படுகின்றது. பபிலோனியர் காலத்தைக் கணிக்கும் கலண்டரும் பாவித்து வந்தார்கள். அவர்களின் நாட்காட்டியில் 12 மாதங்களும், ஒரு மாதத்திற்கு 30 நாட்களும், ஒரு நாளுக்கு 24 மணித்தியாலங்களும் இருந்தன. பபிலோனிய சக்கரவர்த்தி நெபுகாநேசர் காலத்தில் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரை விரிவுபடுத்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, பபிலோனிய தலைநகருக்கு நாடுகடத்தப் பட்டதாக யூத வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தின் கீழ் வாழும் சிறுபான்மை இனத்தவர்களைப் போல, யூதர்களும் பபிலோனிய தலைநகருக்கு இடம்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.

ஈராக்கிற்கு அரேபியர்கள் (முஸ்லிம்கள்) வருவதற்கு முன்னர், அதாவது கி.மு. 331 முதல் கி.பி. 636 வரை, ஈராக் முழுவதும் பாரசீகப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. இடையில் சில காலம் அலெக்சாண்டரின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்து குடியேறிய கிரேக்கர்களும் அங்கே வாழ்ந்தனர். அரேபியரின் படையெடுப்பு இஸ்லாமை கொண்டு வரும் வரை, சாரதூசர் என்ற தத்துவஞானியின் மதம் உத்தியோகபூர்வ மதமாக இருந்தது. "மாஸ்டா" என்ற கடவுளை வழிபாடும் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாக விளங்கியது. (சாரத்தூசரின் ஓரிறைக் கோட்பாடு யூத/கிறிஸ்தவஇஸ்லாமிய மதங்களுக்கு முந்தியது.) பாரசீக சாம்ராஜ்யத்தினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும், உள்நாட்டுக் குழப்பங்களும், அரேபியரின் படையெடுப்புக்கு சாதகமாக அமைந்து விட்டன.

பாரசீகப் படைகள் இஸ்லாமியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, ஈராக்கும் இஸ்லாமியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. அரேபிய தீபகற்பத்தை சேர்ந்தவர்கள் ஈராக்கின் பல பகுதிகளிலும் சென்று குடியேறினார்கள். உள்ளூர் மக்களையும் இஸ்லாமிய மதத்தை தழுவச் செய்தனர். அவ்வாறு மதம் மாறியவர்கள் ஆளுபவர்களின் மொழியாகிய அரபு பேசக் கற்றுக் கொண்டார்கள். பாக்தாத் நகர் விரிவு படுத்தப்பட்டு, பேரரசின் அரசியல்-கலாச்சார மையமாகியது. சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகப் போக்குவரத்தினாலும் பாக்தாத் பலனடைந்தது. மேலும் கீழைத்தேய நூல்கள் பல பாக்தாத் அரசவையில் மொழிபெயர்க்கப் பட்டன. அந்த நூல்களில் சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் லத்தீனிலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

இஸ்லாமியர்கள் தமது மதத்தை நிறுவனப் படுத்திய பொழுது, அதன் தலைமையை "உம்மா" (பாராளுமன்றம்?) என்ற பிரதிநிதிகளின் குழு பொறுப்பேற்றது. உம்மாவின் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்?) நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். உம்மாவின் உறுப்பினர்கள் தமக்குள் கூடி "கலீபா" என்ற பிரதிநிதியை (பிரதம மந்திரி?) தெரிந்தெடுப்பார்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அரசுகளின் கலீபாக்கள் அனைவரும் அவ்வாறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். முகமது நபியின் மருமகன் அலி யை சில பிரதிநிதிகள் உம்மாவின் தலைவராக தெரிவு செய்தனர். ஆனால் இன்னொரு பிரிவு அதனை எதிர்த்தது. கி.பி. 661 ம் ஆண்டு, ஈராக் நகரான கூபா வில் வைத்து அலி படுகொலை செய்யப்பட்டார். இதன் விளைவாக அலியின் ஆதரவாளர்களும், எதிராளிகளும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். அந்த சகோதர யுத்தம் இஸ்லாமிய மதத்தில் பிளவுக்கு வழி வகுத்தது. அன்றிலிருந்து அலியை பின்பற்றியோர் ஷியா (ஷியா அத் அலி - அலியின் கட்சி) முஸ்லிம்கள் என அழைக்கப்பட்டனர். ஏனையோர் சுன்னி முஸ்லிகள் என்று அழைக்கப்படலாயினர்.
ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான பகை இன்று வரை தொடர்கின்றது. இரண்டு பக்கமும் உள்ள மதவெறியர்கள் அந்தத் தணல் அணையாமல் பாதுக்கின்றனர். முதலாவது இஸ்லாமிய சகோதர யுத்தத்திற்கு பின்னர், ஷியா முஸ்லிம்கள் தமக்கென தனியான மதச் சம்பிரதாயங்களை பின்பற்றி தனிச் சமூகமானார்கள். இன்றைய ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், கிராமப்புற விவசாய சமூகமாக வாழ்ந்து வருவதால் அரசியலில் ஒதுக்கப்பட்டனர். சுன்னி முஸ்லிம்கள் பெரு நகரங்களில் வாழ்ந்து வருவதால், நீண்ட காலமாக அரசு நிர்வாகத்தில் கோலோச்சினார்கள்.
16 ம் நூற்றாண்டில், அரேபிய அரச வம்சங்கள் இஸ்லாமியப் பேரரசை கட்டியாள தடுமாறிக் கொண்டிருந்தன. மேற்கில் துருக்கி ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவாகியது. இஸ்லாமிய மதத்தை தழுவியதால், பல்வேறு துருக்கி இனங்கள் ஒன்று சேர்ந்தன. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த துருக்கி இனங்கள், ஈராக்கில் நிலவிய உன்னதமான இஸ்லாமிய நாகரீகத்தை கண்டு வியந்தனர். (நமது நாட்டு மக்கள் ஐரோப்பியரின் நாகரிக வளர்ச்சியை கண்டு வியப்பதற்கு ஒப்பானது.) ஒன்றிணைந்த துருக்கி இனங்களின் அரசியல்-இராணுவ தலைமை ஒஸ்மானியர்கள் (ஆங்கிலத்தில் : ஓட்டோமான்) என்ற அரச வம்சத்தின் கைகளில் இருந்தது. விரைவிலேயே முழு அரபு பிரதேசங்களும் ஒஸ்மானியரின் ஆட்சியின் கீழ் வந்தன. முதலாம் உலகப்போரில் எதிரணியில் நின்ற ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், ஈராக் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியமாக இன்றைக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மையினம் ஈராக்கில் வாழ்கின்றது.

(தொடரும்)