Wednesday, February 26, 2020

நூல் அறிமுகம்: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி


நூல் அறிமுகம்: "ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி". காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் "ஈழத்து தலித்திய" நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. "சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே..." என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.

இதை எழுதிய ரகுநாதன் ஐம்பதுகள், அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளை தனது அனுபவத்தில் கண்டவற்றை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரே காரணத்திற்காக, வகுப்பறையில் ஆதிக்கசாதி ஆசிரியர்களும், மாணவர்களும் பிரயோகிக்கும் வன்முறைகளை பதிவு செய்துள்ளார். இதுவும் ஒரு வகையில் ராக்கிங் கொடுமை தான்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பெற்றோரின் எழுத்தறிவின்மையை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள், பிறப்புச் சான்றிதழில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பிள்ளைகளின் பெயரை மாற்றி எழுதும் கொடுமை பற்றி இந்த நூலில் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. பிறப்பு பதிவு செய்யும் கச்சேரியில் பெற்றோர் ஒரு பெயரை சொன்னாலும், அதை எழுதாமல் வேறொரு பெயரை எழுதி விடுகிறார்கள். சாதியப் பாகுபாடு காட்டும் வன்கொடுமைக் குற்றமானது, இனப் பாகுபாட்டுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல.

இந்த நூலின் கதாநாயகன் ரவீந்திரனும் பாடசாலை பதிவுகளில் தனது பெயர் கணபதி என்றிருப்பதை அறிந்து திகைத்துப் போகிறான். வீட்டில் வந்து பெற்றோரை விசாரித்தால் அவர்கள் அந்தப் பெயர் சூட்டவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். அப்போது தான் ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள் பிறப்புச் சான்றிதழ் பதிவில் செய்யும் மோசடி தெரிய வருகின்றது.

ஒரு காலத்தில் அடிமைகளாக வாழ்ந்த சமூகம் எவ்வாறு இலவசக் கல்வியால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியது என்பது இந்த நூலில் தெளிவாக விளக்கப் படுகின்றது. ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சியானது பல வகையான போராட்டங்களின் ஊடாக நடக்கிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம் ஒருபுறம், தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராட்டம் மறுபுறமும் நடக்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் போராட்டங்களின் ஊடாக தன்னை உயர்த்திக் கொள்கிறது. இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆதரவு சக்திகளாக இருந்துள்ளனர். உண்மையில் இடதுசாரிகளே தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டங்களை ஒழுங்கு படுத்தினர் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறார்.

அதே நேரம் தமிழ்த்தேசியவாதிகள் ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் நின்றுள்ளனர். இந்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம் சாதிவெறி கொண்டு திரிந்ததை குறிப்பிடலாம். மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் நந்தி மாதிரி குறுக்கே நின்று தடுத்த சம்பவம், ஒரு கணித மேதையான சுந்தரலிங்கத்தின் இழி குணத்திற்கு சான்று பகர்கின்றது.

சிலநேரம் மதம் மாறச் சொல்லிக் கேட்டாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் படித்து முன்னேற வசதி செய்து கொடுத்துள்ளன. எந்தெந்த பாடசாலைகளில் எந்தெந்த மாணவர்களை அனுமதித்தார்கள் என்பதை விபரமாக பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் சைவப் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளாள சாதிவெறியர்களின் கோட்டைகளாக இருந்துள்ளன.

நூலாசிரியர் என்.கே. ரகுநாதன் தான் பிறந்து வளர்ந்த நளவர் சாதிய சமூகம் குறித்தே இந்த நூலில் அதிகம் கவனம் செலுத்தி உள்ளார். பனையேறி கள்ளிறக்கும் தொழில் செய்து வந்த நளவர் சமூகம், எவ்வாறு ஒடுக்கப் பட்டு வந்தது என்பதை நூலின் முன்பாதியில் பதிவு செய்துள்ளார்.

பனஞ் சோலைக் கிராமத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பொருளாதார வளங்கள், அவற்றை பயன்படுத்தும் தொழில்நுட்பம் போன்றன குறித்து விரிவாக எழுதப் பட்டுள்ளது. பனை மரத்தில் கள் வடிக்க பயன்படுத்தப் படும் கருவிகளின் பெயர் விபரம், மற்றும் தொழில் நுணுக்கங்கள் அற்புதமாக விளக்கப் பட்டுள்ளன. அத்துடன் கள்ளிறக்கும் தொழிலாளர் படும் கஷ்டங்கள், சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள் ஆகியன பற்றிய தகவல்களும் உள்ளன.

நூலின் பின்பாதியில் ரவீந்திரனின் ஆசியர் தொழிலில் கிடைத்த அனுபவங்களுடன், நளவர் சமூகத்தில் படித்து முன்னேறிய தனிநபர்கள் பற்றிய ஆவணப் படுத்தல்கள் அடங்கியுள்ளன. இதனால் நூலின் முன்பாதி சுவையாக, விறுவிறுப்பாக எழுதப் பட்டிருந்தாலும், அது பின்பாதியில் காணாமல் போய் விடுகின்றது. நூலின் பின்னிணைப்பாக நளவர் சமூகத்தின் வரலாறு, அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பன குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கிராமிய மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் பற்றிய வர்ணனைகள், அவற்றை நாம் நேரில் பார்ப்பது போன்று எழுதப் பட்டுள்ளன. ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக விவரித்து எழுதியுள்ள எழுத்தாளரின் திறமை மெச்சத்தக்கது. 22 ம் நூற்றாண்டிலும் இந்த நூலை வாசிப்பவர்கள் அந்தக் காலத்து வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்த நூலை எழுதிய ரகுநாதன் இறுதிக் காலங்களில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அங்கேயே காலமானார். இந்த அற்புதமான புதினத்தை எழுதிய ஒருவரை அவர் வாழும் காலத்தில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரது பூதவுடல் மறைந்தாலும் காலத்தால் அழியாத எழுத்துக்கள் மூலம் உயிர்வாழ்கிறார்.

கருப்புப் பிரதிகள், உயிர்மெய் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளது. ஈழத்து தலித்திய இலக்கியங்களை வாசிக்க விரும்புவோருக்கு இந்த நூலை பரிந்துரைக்கிறேன்.



No comments: