Monday, November 05, 2012

ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 13


(பதின்மூன்றாம் பாகம்)

புராதன குகைக் கோயில்கள்: 1.பெட்ரா (ஜோர்டான்), 2.எல்லோரா (மத்திய இந்தியா), 3.மாமல்லபுரம் (தமிழ் நாடு)
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே, அதாவது கி.மு. 3 ம்  நூற்றாண்டில் இருந்து, தமிழர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் சிறந்த வர்த்தகத் தொடர்பு இருந்தது. ஒமானிலும், எகிப்திலும் கண்டெடுக்கப் பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டங்கள், இதனை உறுதிப் படுத்துகின்றன. (Potsherd with Tamil-Brahmi script found in Oman, http://www.thehindu.com/news/national/potsherd-with-tamilbrahmi-script-found-in-oman/article4038866.ece) இந்து சமுத்திரத்தின் ஊடாக, இரண்டு சமூகங்களும் தமது கலாச்சாரங்களை பரிமாறிக் கொண்டன. இரு நாடுகளின் பொருளாதாரங்களில் மட்டுமல்ல, மொழி, மத நம்பிக்கை ஆகியவற்றில் கூட, ஒன்றின் மேல் மற்றது செல்வாக்கு செலுத்தியது. அது, இரண்டு சகோதர இனங்களுக்கு இடையிலான நட்புறவாக இருந்தது. யாரும் யாரையும் ஆக்கிரமிக்கவில்லை.  

இருபது வருடங்களுக்கு முன்னர், இன்றைய ஓமானின் தென் பகுதி பாலைவன மணலுக்குள் புதையுண்டிருந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. (Atlantis of the Sands, http://en.wikipedia.org/wiki/Atlantis_of_the_Sands) ஒரு காலத்தில் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கிய "உபார்" (Ubar) என்ற பண்டைய நகரம் பற்றிய விபரங்கள், குர்ஆனில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தன. (குர்ஆனில் "இராம்" என்று குறிப்பிடப் பட்டது.) பாலைவனத்தில் புதைந்திருந்த உபார், நாசாவின் செய்மதிப் படங்களின் மூலம், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட நகரம் ஒன்றின் அழிவு பற்றிய கர்ண பரம்பரைக் கதை ஒன்று, அந்த இடத்தில் வாழ்ந்த மக்களிடையே பேசப் பட்டு வந்தது.  ஆதி காலத்தில் வாழ்ந்த, 12 அரேபியப் பழங்குடி இனங்களில் ஒன்றான, "ஆத்" (தமிழில்: ஆதி?)   என்ற பெயரைக் கொண்ட மக்களின் நாடு என்று, குரானில்  குறிப்பிடப் பட்டிருந்தது. "வானுயர கோபுரங்களை கட்டிய ஆத் மக்களும், குகைக் கோயில்களை கட்டிய தம்மூட் மக்களும், அல்லாவை ஒரே இறைவனாக வழிபட மறுத்ததால் அழிக்கப் பட்டனர்."  என்று குரான் கூறுகின்றது. குரான் ஒரு மத நூல் என்பதால், இயற்கை அழிவுக்கு இறைவனை தொடர்பு படுத்திப் பேசுவது எதிர்பார்க்கத் தக்கதே. பல நாட்களாக வீசிய பாலைவனப் புயலினால், உபார் நகரையும், மக்களையும் மணல் மூடியது என்று குர்ஆனில் எழுதப் பட்டுள்ளது. சுனாமி என்ற கடல் பேரலலைகள் அழித்த, தமிழகத்தின் பூம்புகார் நகரம் போன்று, உபார் நகரமும் இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப் பட்டது.   

உபார் (இராம்) தேச மக்கள், ஆயிரம் தூண்களைக் கொண்ட கட்டிடங்களை கட்டியதாக, குரான் தெரிவிக்கின்றது. ("யாருமே உருவாக்கியிராத மகிமை பொருந்திய தூண்களைக் கொண்ட இராம்....."திருக்குர்ஆன், Sura Al Fajr, 6:14)  தமிழகத்தில் இராமேஸ்வரம் (இராம்+ஈஸ்வரம்) கோயிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்,  இலங்கையில்   அனுராதபுரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும், இதே போன்று பல நூறு தூண்களைக் கொண்டு கட்டப் பட்ட உலக அதிசயங்கள் தாம். இராமேஸ்வரம் கோயில் கழட்டிய தமிழ்-திராவிடர்களும், அனுராதபுரத்தில் விகாரை கட்டிய சிங்கள-திராவிடர்களும், உபார் கோயிலைக் கட்டிய அரபு-திராவிடர்களும் ஒரே இனத்தை சேர்ந்த, ஒரு தாய் மக்கள் தான். அதனால் தான், உலகில் வேறெந்த இனமும் அறிந்திராத, பிரமாண்டமான கட்டிடங்களை கட்டும் தொழில்நுட்ப அறிவை பெற்றிருந்தனர். குரான் இன்னொரு நாகரீகமடைத்த இனத்தின் பெயரையும் குறிப்பிடுகின்றது. அரேபியாவில் வாழ்ந்த தம்முத் மக்கள், மலைப் பாறைகளை  குடைந்து அழகிய கோயில்களை கட்டுவதில் வல்லவர்கள். ("திறந்த வெளிகளில் மாளிகைகளையும், கோட்டைகளையும் கட்டினீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளைக் கட்டினீர்கள்." -திருக்குர்ஆன், sura, Al-A'raf 7:74) அவர்களின் குகைக் கோயில் கட்டும் திறமைக்கு சாட்சியமாக, ஜோர்டானில் பேட்ரா, சவூதி அரேபியாவில் மடாயின் சலே,  மத்திய இந்தியாவில் அஜந்தா, எல்லோரா, மற்றும் தமிழ் நாட்டில் மாமல்லபுரம் ஆகிய இடங்கள் சான்று பகர்கின்றன.  இவை எல்லாம் ஒரே மாதிரியான கலை நேர்த்தியுடன் செதுக்கப் பட்டுள்ளதை, இன்றைக்கும் பார்த்து இரசிக்கலாம். 

தமிழ் என்ற பெயர்ச்சொல், அந்நியரால் சூட்டப்பட்டது. அதன் மூலம் அரேபியாவில் இருந்து வந்திருக்கலாம் என்பதை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். (பார்க்க: சிரியாவில் தமிழுக்கு தம்முழ் என்றும் பெயர்) குர்ஆனில் குறிப்பிடப் படும் தம்முட் என்ற இனத்தின் பெயர் மருவி,  தமிழர் என்று வந்திருக்கலாம். ஆனால், அதற்கான  ஆதாரம் எதுவும் கிடையாது.    எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருந்தன என்பது மட்டும் தெளிவானது. குரான் குறிப்பிடும் தம்முட் மக்கள், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து, வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர்.  ஜோர்டானில் பேட்ரா நகரக் கோயில்களைக் கட்டிய நபெத்தியர்களும், தம்முட் என்ற பெயரில் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.  ஏனெனில், குர்ஆனில் எழுதப்பட்ட குறிப்புகள், நபெத்திய நாகரீகத்துடன் பொருந்துகின்றன.  (தம்முத் அல்லது நபெத்தியர்கள், இதில் எந்தச் சொல், அந்த மக்களின் உண்மையான பெயரைக் குறிக்கின்றது என்று தெரியவில்லை.)  

ஒரு காலத்தில், தென் அரேபியப் பகுதி, மேற்கு ஆப்பிரிக்காவுடன் ஒரே நிலப்பகுதியாக சேர்ந்திருந்திருக்க வேண்டும். அதாவது, இன்றைய சோமாலியாவும், யேமனும் ஒன்றாக இணைந்திருந்தன. அப்போது ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அரேபிய தீபகற்பத்தில் குடியேறி வாழ்ந்திருக்கலாம். இன்றைக்கும், சோமாலிய மக்களுக்கும், யேமன் மக்களுக்கும் இடையில், அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தோற்றத்தில், தோல் நிறத்தில் உள்ள ஒற்றுமை முக்கியமானது. அடுத்ததாக, சடங்கு, சம்பிரதாயம், பண்பாடு, உணவுப் பழக்கம் என்பன ஒரே மாதிரியாக உள்ளன. மூன்றாவதாகவும் ஒன்றைக் குறிப்பிடலாம். உலகில் வேறெந்த அரபு நாட்டிலும் இல்லாத சாதி அமைப்பு முறை யேமனில் மட்டுமே உள்ளது. அதே போன்று, முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், சோமாலியாவில் மட்டுமே சாதி ஒரு முக்கியமான சமூகப் பிரிவாக உள்ளது. இந்திய உப கண்டமும், சாதிப் பிரிவினைகளுக்கு பேர் போனது, என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இந்தியர்களும் (குறிப்பாக தென்னிந்தியர்கள்), சோமாலியர்களும், யேமானியர்களும் ஆதியில் ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.  இவர்களுக்கு இடையில் வேறென்ன ஒற்றுமைகள் உள்ளன என்பதைப் பார்ப்போம். 

அரேபியரிலும், யேமன்  நாட்டவர்கள் தான், எம்மைப் போல மூன்று வேளையும் சோற்றை விரும்பி உண்பார்கள். அரபி மொழியில் அதன் பெயர் அரூஸ், சோமாலிய மொழியிலும் அரூஸ் தான். தமிழில் நாங்கள் அரிசி என்று சொல்வோம். அரிசியில் செய்யப்படும் உணவு வகையான பிரியாணியை (ஒரே பெயர்), சோமாலியா, யேமன், ஓமான் ஆகிய நாடுகளில் பிரதான உணவாக விரும்பி உண்பார்கள். சாப்பிட்ட பின்னர் வெற்றிலை போடும் வழக்கம் பற்றி, ஏற்கனவே ஒரு தடவை எழுதி இருக்கிறேன். இந்த மென்மையான போதைவஸ்துக்கு அடிமையாவது, யேமன், சோமாலியாவில் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. உணவில் மட்டுமல்ல, உடையில் கூட ஒற்றுமை உண்டு.  இடுப்பை சுற்றி உடுக்கும் சாரம் (லுங்கி, கைலி) என்ற ஆடையை, ஆண்கள் எல்லோரும் அணிந்து கொள்வார்கள். தினசரி மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம், சோமாலிய, தெனிந்திய, யேமன் பெண்கள் மத்தியில் பிரபலமானது. இப்படிப் பல கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.


மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியாவுக்கும், அரேபியாவுக்கும்  இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்தது. அந்தக் காலத்தில், அரேபியர்கள் இந்தியாவிலும், இந்தியர்கள் அரேபியாவிலும் சென்று குடியேறினார்கள். இது ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பைப் போன்றது. அதற்கு ஆதாரமாக, இந்து சமுத்திரத்தில் உள்ள  சொகொத்ரா தீவை (Socotra Island)   குறிப்பிடலாம். இன்று யேமனுக்கு சொந்தமான தீவில், இன்றைக்கும் அங்கே இந்திய, அரேபிய, ஆப்பிரிக்க கலாச்சாரங்கள் ஒன்று சேர்வதைக் காணலாம். தீவு மக்கள், "சொகொத்ரி மொழி"  என்ற தனியான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். அது அரபி மொழியின் கிளை மொழி அல்ல!  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால், ஒரு காலத்தில் சிங்கப்பூர் போன்று பணக்காரத் தீவாக இருந்தது. இன்று அங்கே, அமெரிக்க இராணுவம் தளம் அமைத்துள்ளது.

சொகொத்ரா  தீவின் பூர்வீகப் பெயர், "சுகாதார தீபம்"! அதன் மூலம் சமஸ்கிருதமா அல்லது தமிழா என்பது எனக்குத் தெரியாது. எது எப்படி இருந்தாலும், தமிழர்களின் அல்லது இந்தியர்களின் மூதாதையருக்கு, அரேபியாவுடன் நெருங்கிய தொடர்பிருந்ததை இது எடுத்துக் காட்டுகின்றது. ஓமானில், ராப் அல் காலி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப் பட்ட புராதன நகரான உபார் (இராம்) கூட, இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்பினால் தான், ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது. இன்றைக்கு இருக்கும் உலக ஒழுங்கிற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு உலகம் அன்றிருந்தது. இன்று நியூ யார்க், லண்டன், டோக்கியோ ஆகிய நகரங்கள் சர்வதேச வர்த்தகத்தை கட்டுப் படுத்துவதைப் போல, அன்று பல வர்த்தக நகரங்கள் மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் இருந்துள்ளன. இவற்றிற்கு இடையிலான நெருங்கிய வர்த்தகத் தொடர்பு காரணமாக, உலகிலேயே அதிகளவு பணம் புரளும் செல்வந்த நகரங்களாக இருந்தன. 

தொன்மையான உபார் நகரம் போன்று, சிரியாவிலும் மறைந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. எப்லா (Ebla) என்ற பெயரைக் கொண்ட நகரம், ஒரு தனி நாடாக விளங்கியது. உபாருக்கும், எப்லாவுக்கும் இடையில் நெருங்கிய வர்த்தகத் தொடர்பிருந்தது. எப்லா நாட்டின் நிர்வாகத்தையும், வணிகத் தொடர்புகளையும் குறிப்பிடும் களிமண்  தட்டுகள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டன. எப்லா அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட களிமண் தட்டுகள், பாபிலோனிய மொழியிலும், அந் நாட்டு மக்கள் பேசிய எப்லா மொழியிலும் எழுதப் பட்டிருந்தன. நவீன செமிட்டிக் மொழிகளான ஹீபுரு, அரமைக், அரபி ஆகிய மொழிகள் தோன்றுவதற்கு, ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, எப்லா மொழி பேசப்பட்டது. அதுவே நவீன செமிட்டிக் மொழிகளின் தாயாக இருந்திருக்கலாம்.  சிரியாவில் பிற்காலத்தில் தோன்றிய கானான் நாட்டு மக்கள், எப்லா தேசத்தவர் பயன்படுத்திய எழுத்துக்களை மேலும் மெருகூட்டினார்கள். அதுவே தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீபுரு, அரபி எல்லாவற்றிற்கும் அடிப்படையான அரிச்சுவடி ஆகும். சிரியாவில், லடாக்கியா நகருக்கு அருகாமையில் உள்ள உகாரிட் (Ugarit) என்ற பண்டைய நகரின் இடிபாடுகளை சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், இது பற்றி நீங்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

ஹீபுரு, அரபி ஆகிய செமிட்டிக் மொழிகளில் நிறைய தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. சாலமன் மன்னன் ஆண்ட இஸ்ரேலுக்கும்,  தமிழகத்தில்  பாண்டிய நாட்டிற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பிருந்தது. இதனை சிலப்பதிகாரமும் பதிவு செய்துள்ளது.  அன்றைய தமிழகத்தில், அரேபியர், ஹீபுருக்கள், கிரேக்கர்கள் எல்லோரும் "யவனர்கள்"  என்றே அழைக்கப் பட்டனர். யூதர்களின் விவிலிய நூலில், "ஆகாஸ்வரோஷ்" என்ற மன்னனின் சாம்ராஜ்யம் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது. ஆகாஸ்வரோஷின் சாம்ராஜ்யம், எத்தியோப்பியாவில் இருந்து இந்தியா வரை  வியாபித்திருந்தது. (Ahasuerus, a Persian king, identical with Xerxes (486-465 B.C.). The Book of Esther deals only with one period of his reign. It tells us that he ruled over one hundred and twenty-seven provinces—"from India, even unto Ethiopia" (Esth. i. 1);  http://www.jewishencyclopedia.com/articles/967-ahasuerus )   உலகின் பெரும்பாலான பகுதிகளில், நாகரீகத்தின் அறிகுறியே தோன்றியிராத காலத்தில், எத்தியோப்பியா தொடக்கம் தென்னிந்தியா வரையிலான பகுதிகள், அதி உன்னத நாகரிக வளர்ச்சி கண்டிருந்தன. அதனை நிரூபிப்பதற்கு, மேற்குறிப்பிட்ட தரவுகள் போதுமானவை.    

கி.மு. 5000 வருடங்களுக்கு முன்னரே, ஆப்பிரிக்க-எத்தியோப்பியர்கள்  தென் அரேபியாவில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தனர். அங்கே அவர்கள் பேசிய மொழிகள், இன்று பழைய அரபு மொழி என்ற பெயரில், குறிப்பிட்ட பிரதேசங்களில் மட்டுமே பேசப்படும் வட்டார மொழிகளாக சுருங்கி விட்டன. மிகவும் தொன்மையான அரேபியர்கள் என்று கருதப்படும் யேமனியர்கள், இன்றுள்ள அரபி எழுத்துக்களை பயன்படுத்தி எழுதவில்லை. வித்தியாசமான எழுத்து வடிவம் ஒன்றைக் கொண்டிருந்தனர். கி.மு. 3 ம்  நூற்றாண்டில் உருவான தமிழ் எழுத்துக்களும், கி.மு. 9 ம் நூற்றாண்டில் உருவான யேமன்  அரபி எழுத்துக்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பது ஒன்றும் தற்செயல் அல்ல. கி.மு. 1000 ம்  ஆண்டளவில், லெபனான் அல்லது சிரியாவை சேர்ந்த  பீனிசியர்கள் அல்லது கானானியர்கள் பயன்படுத்திய எழுத்துக்கள் தான், கிரேக்கர்களாலும், பிற ஐரோப்பிய மொழிகளாலும் கடன்வாங்கப் பட்டன.

"எமது இனத்தவர்கள் மட்டுமே, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ஆண்டார்கள்..."  என்று கூறுவது மடமைத்தனம். அது மட்டுமல்ல, சகோதர இனத்தவர் மத்தியில் வெறுப்பையும் தோற்றுவிக்கும். மொழி என்பது காலத்திற்கு காலம் மாறக் கூடியது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய தமிழைப் பேசும் மக்கள் கூட்டம் ஒன்று, இன்றைக்கும் எம் மத்தியில் வாழ்ந்து வந்தால், அவர்களை வேற்றினமாக கருதி ஒதுக்கி வைத்திருப்போம். ஏனெனில், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட தமிழில் ஒரு சொல் கூட எங்களுக்குப் புரியாது. மேலும், ஒரு மொழியைப் பேசுவதால், அந்த மக்களை தனியான இனமாக கருதுவது தவறானது. எத்தியோப்பியர்கள், யேமனியர்கள், அரேபியர்கள், ஹீபுருக்கள், தமிழர்கள் ஆகியோர், ஆதி காலத்தில் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் தான். ஆனால், காலப்போக்கில் பிற இனங்களுடன் கலந்து, இன்றைய பிரிவினைகள் தோன்றின. மத நம்பிக்கைகள் மட்டுமல்ல, மொழிகள், அரிச்சுவடிகள், கலாச்சாரங்கள் எல்லாவற்றையும், உலக மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொண்டுள்ளனர்.

எத்தியோப்பியர்கள் அல்லது சோமாலியர்கள், யேமனில் அரேபியர்களாக மாறினார்கள். அங்கே அவர்கள் சபா (Sabaen) நாகரீகத்தை உருவாக்கினார்கள். வடக்கு நோக்கி குடிபெயர்ந்தவர்கள், பாலஸ்தீனம், ஜோர்டான், வட சவூதி அரேபியா  ஆகிய இடங்களில் நபெத்திய நாகரீகத்தை உருவாக்கினார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யேமனில் இருந்து இன்னொரு பிரிவினர் ஈராக் நோக்கி குடிபெயர்ந்து சென்றனர். பானு லக்கும் என்ற இனக்குழுத் தலைவனின் தலைமையில், மெசப்பத்தொமியாவில் லக்மிடிய ராஜ்யத்தை உருவாக்கினார்கள். அது ஒரு கிறிஸ்தவ ராஜ்யமாக இருந்தது. அந்த கிறிஸ்தவ நாடு, மேற்கே கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்திற்கும் கிழக்கே பாரசீக சாம்ராஜ்யத்திற்கும் இடையில் நடுநிலை வகித்தது.

பாரசீகர்கள் லக்மிடியர்களின் ராஜ்யத்திற்கு, "அராபிஸ்தான்"  என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்கர்கள், இன்றைய அரேபிய தீபகற்பம் முழுவதையும், "அரேபியா பெலிக்ஸ்"  என்று அழைத்தனர். பிந்திய வரலாற்றில் அரேபியா என்ற பெயர் நிலைத்து விட்டது. அதனால், அரேபியர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் சொல்லாக  நாங்கள்  கருத முடியாது. தற்செயலாக அந்தப் பிரதேசத்தில் தங்கி வாழ நேர்ந்து விட்ட அனைவரும், பிற்காலத்தில் அரேபியர்களாகி விட்டார்கள். அவர்கள் வெள்ளையின கிரேக்கர்களாக இருந்தாலும், அரேபியர்கள் என்றே அழைக்கப் பட்டனர். ஆகவே, அரேபியர்களும், தமிழர்களும், எந்த வித தொடர்புமற்ற வெவ்வேறு இனங்கள் என்று நினைப்பது, எமது அறியாமையின் வெளிப்பாடாகும்.


(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!


  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

4 comments:

சுவனப் பிரியன் said...

சகோ கலையரசன்!

சிறந்த பதிவு. உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மதாயீன் சாலஹ் பற்றி நான் முன்பு அளித்த பதிவையும் பாருங்கள். மேலும் பல விபரங்கள் கிடைக்கலாம்.

http://suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_5666.html

கலையரசன் said...

உங்களது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, சுவனப்பிரியன். எனக்கு இன்னும் சில புதிய தகவல்கள் கிடைத்தன. நான் எழுதி வரும் கட்டுரையில் குறிப்பிடப்படும், ஆதி கால நாகரிக மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உங்கள் பதிவில் கிடைத்தன. அந்தப் புராதன மனிதர்கள் ராட்சத தோற்றம் கொண்டவர்கள் என்பதை பல நாடுகளை சேர்ந்த சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

pradeep said...

பல புதிய தகவல்கள்

"அனுராதபுரத்தில் விகாரை கட்டிய சிங்கள-திராவிடர்களும்,"

சிங்களவர்கள் திராவிடர்களா ?

கலையரசன் said...


//சிங்களவர்கள் திராவிடர்களா ?//
கன்னடர், தெலுங்கர்கள் திராவிடர்கள் என்றால், சிங்களவர்கள் திராவிடர்கள் இல்லையா? அந்த மக்களின் தோற்றமும், அவர்கள் பேசும் மொழியும் பிற திராவிட இனங்களுக்கு நெருக்கமானவை. முன்பொரு தடவை பெரியாரும் அதனை குறிப்பிட்டு பேசி வந்தார். சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும், "சிங்களவர்களும் திராவிடர்கள்" என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றனர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில், "சிங்களவர்கள் ஆரிய இனத்தவர்கள்" என்ற கற்பிதத்தை உருவாக்கினார்கள்.