Saturday, November 17, 2012

பண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்


மாரிப் ஆலயம் 
நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 14

(பதினான்காம் பாகம்)
____________________________________________
இஸ்லாமிய மதத்திற்கும், இந்து மதத்திற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன. உதாரணத்திற்கு, புனிதமான நாளான வெள்ளிக்கிழமை.  சாமி கும்பிடுவது எப்படி என்று, இந்து மத நூல்களில் எழுதப் பட்ட விதிகளில் ஒன்று: "பஞ்சாங்க நமஸ்காரம்". அதாவது, முழந்தாளிட்டு, நெற்றி நிலத்தில் படுமாறு இறைவனை வணங்குதல்.  இந்துக் கோயில்களில் பெண்கள் இவ்வாறு சாமி கும்பிடுவதைக் காணலாம்.  முழந்தாளிட்டு, நெற்றி நிலத்தில் படுமாறு இறைவனை தொழுவதை முஸ்லிம்களும் பின்பற்றுகின்றனர். ஆகவே, அந்த தொழுகை முறை, இஸ்லாத்திற்கு முன்பிருந்த அரேபியாவிலும் இருந்திருக்க வேண்டும். தொழுகை மட்டுமல்ல, பிறைச்சந்திரன் கூட, இஸ்லாத்திற்கு முந்திய அரேபியாவில் கடவுளின் சின்னமாக இருந்துள்ளது. ஆதி கால அரேபியர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் சந்திரனுக்கு கோயில் கட்டி வழிபட்டனர்.  

பண்டைய அரேபியரின் மத சம்பிரதாயங்களை பின்பற்றினாலும், இஸ்லாம் ஒரு புரட்சிகரமான புதிய மதமாகும். விக்கிரக வழிபாட்டை ஒழித்துக் கட்டியது மட்டுமல்ல, அரேபியர் வழிபட்ட பல தெய்வங்களில் ஒன்றான அல்லாவை, ஒரேயொரு இறைவனாக ஆக்கியமை, அந்தக் காலத்தில் நடந்த மாபெரும் கலாச்சாரப் புரட்சி ஆகும். மோசேஸ் (யூதர்கள்), இயேசு (கிறிஸ்தவர்கள்), அகநாதன் (எகிப்தியர்கள்), சரதூசர் (ஈரானியர்கள்) ஆகிய தீர்க்கதரிசிகளும், முகமதுவுக்கு முன்னரே அது போன்ற மதப் புரட்சிகளை நடத்தி உள்ளனர். ஆகவே, இஸ்லாத்தையும், அதன் இறைதூதர் முகமதுவையும், மேற்குறிப்பிட்ட மதப்புரட்சிகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். அதனை இந்து மதம் போன்ற இன்னொரு மதமாக ஒப்பிடுவது அபத்தமானது. இருப்பினும், பண்டைய அரேபியரின் மத நம்பிக்கைகள், எந்தளவு தூரம் பண்டைய தமிழரின் அல்லது இந்துக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது என்று பார்ப்பதில் தவறில்லை. வரலாற்று உண்மைகளை நாங்கள் இலகுவாக புறக்கணித்து விட முடியாது.   

யேமனில் குடியேறிய எத்தியோப்பியர்கள், அரேபிய - திராவிடர்களாக மாறினார்கள் என்பதை முன்னைய கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், அரேபிய - திராவிடர்களின் மத நம்பிக்கையை பார்ப்போம். 5000 வருடங்களுக்கு முன்னர், யேமன் "சபியர்களின் ராஜ்ஜியம்"  என்று அழைக்கப்பட்டு வந்தது. விவிலிய நூலில் குறிப்பிடப்படும், ஷீபா (அரபியில் சபா) வின் வழித்தோன்றல்கள் சபிய அரச வம்சத்தை உருவாக்கினார்கள். 20 ம்  நூற்றாண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மன்னர்களும், சபிய அரச வம்சம் என்று தான் கூறிக் கொண்டனர். 

சபியர்களின் பிரதான தெய்வமாக சந்திரக் கடவுள் இருந்தது. அதற்கு நீங்கள் ஆதாரம் தேடி அலையத் தேவையில்லை. யேமன் சென்றால், அங்கே மாரிப் (Maribhttp://www.yementourism.com/tourism2009/destinations/index.php?ELEMENT_ID=2668) என்ற இடத்தில், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, சந்திரக் கடவுளுக்கு கட்டப்பட்ட அழகிய தூண்களைக் கொண்ட கோயிலைக் கண்டு களிக்கலாம்.  சபியர்கள் சந்திர தெய்வத்தை, "இலு முகா" என்று அழைத்தனர். இலு என்பது அக்காடியர்கள் காலத்திலும், பிரதான தெய்வத்தைக் குறித்தது. அல்லா என்ற சொல்லின் மூலம், "இலு" விலும் இருக்கலாம். ஆனால், அல்லா என்ற சொல் கூட இஸ்லாத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. 

அரேபியாவைப் பற்றி, நமக்குத் தான் பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால், பண்டைய இந்தியர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். வாயு புராணத்தில், ஏழு கண்டங்கள் பற்றிய குறிப்பு ஒன்று வருகின்றது. சப்த துவீபங்கள் என்று அவற்றைக் குறிப்பிடுகின்றது. அதில் ஒன்று, கூஷ துவீபம், இன்றைக்கு அது அரேபியா என்று அழைக்கப் படுகின்றது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அரேபியர் என்ற இனம் இருக்கவில்லை. ஆனால், அரபு மொழி போன்ற மொழிகளைப் பேசிய, பல்வேறு இனக்குழுக்கள் இருந்துள்ளன. சந்திரக் கடவுளுக்கு, அவர்களின் மொழிகளில் பெயரிட்டிருந்தனர். ஆச்சரியப் படத் தக்கவாறு, அந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் போன்றுள்ளன. 

கதாபானியன் (Qatabanian) என்ற  அரபி இனக்குழு, சந்திரனை "அம், அம்பை" என்ற பெயர்களில் வணங்கியது.  அம்மா, அம்பை என்ற பெயரில், இந்து மத பெண் தெய்வங்கள் இருப்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவயில்லை. அரேபியர்கள், சந்திரனை சில சமயம்  ஆணாகவும், சில சமயம் பெண்ணாகவும் கருதி வழிபட்டு வந்தனர். ஆகவே, ஹடாமிஸ் என்ற இன்னொரு அரபி இனக்குழு, "சின்" என்ற பெயரில் ஆண் தெய்வமாக வழிபட்டதில் வியப்பில்லை. 

சின் என்ற சொல் பாபிலோனியர்கள் காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. அவர்களது மத நம்பிக்கையின் படி, என்லில், நின்லில் கடவுளரின் மகன் தான் சின் என்ற சந்திரக் கடவுள். சின் என்ற சொல்லில் இருந்து தான், சமஸ்கிருதச் சொல்லான சந்திரன் தோன்றியது. தமிழர்களும் அந்தக் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர்.  உதாரணத்திற்கு, நிலா என்பது பெண். சந்திரன் என்பது ஆண். பண்டைய தமிழர்களும், சந்திரனை ஒரு பெண் தெய்வமாக வழிபட்டு வந்தமை தொல்காப்பியத்தில் எழுதப் பட்டுள்ளது. அது பற்றிய விபரங்களை, இன்னொரு இடத்தில் ஆராய்வோம்.   

இனி, சந்திரக் கடவுளின் பூர்வீகம் பற்றி அறிந்து கொள்வோம். மாரிப் கோயில் இடிபாடுகளில், அந்தக் கடவுளைக் குறிக்கும் பின்வரும் சொல் கண்டுபிடிக்கப்  பட்டது: "LMQH".  இதனை "அல்மகா" என்றும் "இல்முகா" என்றும் மொழிபெயர்க்கின்றனர்.  அல்லா என்ற சொல் கூட அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்பது சில அறிஞர்களது வாதம். 

அல்மகா என்பதை, முழுக்க முழுக்க சந்திரக் கடவுளாக புரிந்து கொள்ள முடியாது. அல்மகா தெய்வம், மாரிப்  கோயிலுக்கு அருகில் உள்ள தடாகத்தில் நீராடுவதாக ஐதீகம். அந்தக் கோயிலில் திருவிழாக்கள் நடைபெற்ற காலங்களில், மூலமூர்த்தி சிலையை எடுத்து வந்து தீர்த்தக் கேணியில் நீராட்டி எடுத்துச் செல்வார்கள். அது இந்துக் கோயில்களில் சாமி தீர்ததமாடுவதைப் போன்று அதே நடைமுறை தான். இது பண்டைய எகிப்தியரின், சூடானியரின் எருமை மாட்டு தெய்வம் நீராடும் மத நம்பிக்கையை ஒத்திருக்கின்றது. 

இன்றைக்கும், சூடானில், கென்யாவில் வாழும் மாசாய் என்ற ஆப்பிரிக்க இனத்தவர் வாழ்வில், மாடு இன்றியமையாத விலங்கு. தமிழர்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதைப் போன்று, ஆப்பிரிக்கர்கள் மாட்டுக்கு மரியாதை கொடுத்து வந்தனர். பண்டைய கால ஆபிரிக்க மக்கள், எருமை மாடு குளத்தில் நீராடுவதை புனிதமாக கருதினார்கள். அதிலிருந்து அவர்களின் மத நம்பிக்கை உருவானது. "ஒரு மாட்டை கடவுளாக வழிபடலாமா?"  என்று நாகரீகமடைந்த சமூகத்தை சேர்ந்த நாங்கள் வியப்படைகிறோம். 

அந்த எண்ணம், அன்றைய அரேபிய - திராவிடர்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம். அதனால், பண்டைய யேமனில் வாழ்ந்த மக்கள், மாட்டுத் தெய்வத்தை வெறும் குறியீட்டுடன் மட்டும் நிறுத்திக் கொண்டார்கள். ("இந்துக்கள்" அதனை சிவபெருமானின் வாகனமாக்கினார்கள்) அதாவது, ஆப்பிரிக்கர்களின் பூர்வீக மத நம்பிக்கை, வேறு வடிவம் எடுத்தது. கடவுள் குழந்தையாக அவதரித்து நீராடுவதாக காட்டும் திருவிழாக்கள், அரேபியா தீபகற்பம் முழுவதும் நடந்துள்ளன. 

முருகன் ஒரு தமிழ்க் கடவுள் என்று கூறுகின்றார்கள். முருகக் கடவுள், குழந்தையாக சரவணப் பொய்கையில் நீராடுவதாக இந்துக்கள் நம்புகின்றனர். சரவணப் பொய்கையில் நீராடும் முருகனின் கதையும், யேமன் அல்மகா தெய்வத்தின் கதையும் ஒரே மாதிரியாக உள்ளன. மேலும் பெயர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளன. பண்டைய யேமனியர்கள் வழிபட்ட, அல்மகா அல்லது இல்முகா என்ற சொல்லும், ஷண்முகா என்ற சொல்லும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. சின் என்பது ஷன் என்றும் மாறியிருக்கலாம். அதனை நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

இருப்பினும், தமிழர்களும், அரேபியரும் ஒரே இடத்தில் இருந்து குடிபெயர்ந்த ஓரின மக்கள் என்றால், அவர்களது தெய்வ நம்பிக்கையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதற்கான ஆதாரங்கள் தாராளமாகவே கிடைக்கின்றன. சங்க காலத் தமிழர்கள், சேயோன் என்ற குழந்தைக் கடவுளை வழிபட்டனர். சேயோனும், முருகனும் ஒன்று என தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர்கள், கொற்றவை என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர். கொற்றவையின் மகன் தான் சேயோன் அல்லது முருகன். சங்ககாலத்திற்கு பிந்திய இலக்கியங்களான, கலித்தொகை, திருமுருகாற்றுப் படையில் மட்டுமே, முருகன், சிவனுக்கும், பார்வதிக்கும் மகனாக குறிப்பிடப் படுகின்றது. ஆகவே, தாயும், மகனுமான கொற்றவையும், சேயோனும் தமிழர்களின் தெய்வங்கள் என்றால், அவை அரேபியாவிலும் இருந்திருக்க வேண்டுமல்லவா? 

பண்டைய தமிழகத்தில், அரசர்களும் படையினரும், போருக்கு போவதற்கு முன்னர், கொற்றவையை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். ஈராக்கில் வாழ்ந்த எமது முன்னோர்கள் காவிக் கொண்டு வந்த சம்பிரதாயங்களில் ஒன்றாக அது இருக்கலாம். ஏனெனில், பண்டைய ஈராக்கில், போருக்கு புறப்படுவதற்கு முன்னர், சுமேரிய அல்லது பாபிலோனிய அரசர்களும், படையினரும் இஷ்தார் அல்லது இனானா என்ற பெண் தெய்வத்திற்கு பூஜை செய்யும் சம்பிரதாயம் நிலவியது. கொற்றவை, அரபு நாடுகளில் வழிபடப் பட்டு வந்தமைக்கு,  இன்னொரு ஆதாரமும் உண்டு. பண்டைய அரேபியர்கள், "அல் குற்றவை" (Al Kutbay ) என்ற தெய்வத்தை வழிபட்டனர். இது இந்துக்களின் சரஸ்வதி போன்று, கல்வித் தெய்வமாகும். அந்த தெய்வத்தின் பெயரில் இருந்து தான், கிதாப் (ktb) என்ற அரபிச் சொல் வந்தது. அரபி மொழியில் கிதாப் என்றால், எழுதுதல் என்ற வினைச் சொல்லுக்கும், புத்தகம் என்ற பெயர்ச் சொல்லுக்கும் வரும். தமிழ் மொழியில், கற்றல், புத்தகம் ஆகிய சொற்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதை அவதானிக்கவும். தமிழ் பண்பாட்டுக்கும், அரபி பண்பாட்டுக்கும் இடையிலான அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள், இத்துடன் முடியவில்லை. இன்னும் நிறைய இருக்கின்றன. 

நமது காலக் கணிப்பில் (கி.பி.) 4 ம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. முதன்முதலாக கிறிஸ்தவமயமான நாடுகளில் சைப்பிரசும் ஒன்று. சைப்பிரசில் சலாமிஸ் என்ற நகரில் இருந்த தலைமை மதகுரு (பிஷப்) எபிபானியுஸ் (Epiphanius), அரேபியரின் மத நம்பிக்கைகள் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். (http://en.wikipedia.org/wiki/Epiphanius_of_Salamis)  இன்றைய ஜோர்டானில் வாழ்ந்த நபெத்தியர்கள், அல்லாவின் பிறப்பைக் கொண்டாடும் திருவிழா பற்றிய குறிப்புகள் அவை. அந்தக் குறிப்புகள் எமக்கு குழந்தை ஏசுவை நினைவு படுத்துகின்றன. கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த குழந்தைக் கடவுளின் சிலையை, வெளியே எடுத்துக் கொண்டு வந்து, பக்தர்கள் வணங்குவதற்கு வைத்து விட்டு, பின்னர் உள்ளே கொண்டு செல்வார்கள். இன்றைய இந்துக் கோயில்களில் நடப்பதைப் போன்ற, தீர்த்தத் திருவிழா, தேர்த் திருவிழா எல்லாம் பண்டைய ஜோர்டான் நாட்டில் நடந்துள்ளன. (இந்துக் கோயில்களில் நடைபெறும் சடங்குகளான, சுவாமி வீதி உலா வருதல், தீர்த்தமாடுதல் போன்ற திருவிழாக்களின் தாயகம் எகிப்து ஆகும்.)  

அல்லா என்ற குழந்தைக் கடவுளின், தாய்க் கடவுளின் பெயர்: "அல் லாத்". பண்டைய அரேபியரின் மத நம்பிக்கையில், அல்லா என்பது ஆண் தெய்வத்தையும், அல் லாத் என்பது பெண் தெய்வத்தையும் குறிக்கும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, தாய் வழிச் சமுதாயம் நிலவியதால், "தகப்பன் கடவுள்" இருக்கவில்லை. அதனால் அல் லாத் என்ற பெண் தெய்வத்தையும், அதன் மகனான  அல்லா என்ற குழந்தைத் தெய்வத்தையும் மட்டுமே பிரதானமாக கருதினார்கள். தமிழர்கள் கொற்றவையையும், அந்த தெய்வத்தின் மகனான சேயோனையும் பிரதானமாக கருதி வழிபட்டனர். பண்டைய அரேபியர் போன்று, பண்டைய தமிழர்களும் தாய் வழிச் சமுதாயத்தை நீண்ட காலத்திற்கு பின்பற்றி வந்தனர். இந்தியாவில் தந்தை வழிச் சமூக அமைப்பு வந்த பின்னர் தான், அதாவது  சங்க காலத்திற்கு பிந்திய காலம், முருகனுக்கு சிவன் தகப்பனாக மாறினார். அதே போன்ற ஒரு பண்பாட்டு மாற்றம் அரேபியாவிலும் இடம்பெற்றது. பெண் தெய்வமான அல் லாத் பின்தள்ளப் பட்டு, ஆண் தெய்வமான அல்லா முக்கியத்துவம் பெற்றது. 

தென்னிந்தியாவில், முருகக் கடவுளை குழந்தை தெய்வமாக வழிபடுவது குறிப்பிடத் தக்கது. குழந்தை முருகன், குழந்தை ஏசு, குழந்தை அல்லா, எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த மத நம்பிக்கைகள் தான். பண்டைய ஜோர்டான் நாட்டில் வாழ்ந்த நபெத்தியர்கள், குழந்தை அல்லாவை, "துஷாரா" என்று பெயரிட்டு அழைத்தனர். துஷாரா என்பது, அந்தப் பிரதேசத்தில் உள்ள மலையில் (ஷாரா) வாழும் கடவுள் ஆகும். (Dhu i Shara) தமிழர்கள் முருகனை மலை வாழ் தெய்வமாக, குறிஞ்சிக் கடவுள் என்று வழிபடுவது குறிப்பிடத் தக்கது.  துஷாரா என்ற மலைக் கடவுள் சிவனையும் குறிக்கலாம். ஏனெனில், நபெத்தியர்கள் துஷாராவை குறிக்க மாட்டையும் சின்னமாக பயன்படுத்தினார்கள். ஆப்பிரிக்க மக்கள் புனிதமாக கருதி வழிபட்ட மாடு, நபெத்தியர்களால் துஷாராவாகவும், இந்துக்களால் நந்தியாகவும் கருதப் பட்டது. ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட, மாட்டு சின்னம் பொறித்த முத்திரையை இங்கே நினைவு படுத்திக் கொள்வோம். தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள் ஆகிய "மூவினத்தவர்களும்", ஒரே நாகரீகத்தை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதற்கு, இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இப்போதும் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக, இன்னும் தேடுவோம். 

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"


  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

7 comments:

selvaraj said...

நண்பரே நல்ல முயற்சி மட்டுமல்ல, சரியான திசையில் போகிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழகம், ஆப்பிரிக்கா, அரேபியா, ஐரோப்பா, இவைகளுக்குள் ஒற்றுமை இருக்கும். தொடக்கமாக ஆஸ்த்ரேலியாவை வைத்து கொஞ்சம் முயற்சியுங்களேன். நானும் தேடி சில கண்டுபிடித்து இருக்கிறேன். உங்கள் தேடலும் தமிழருக்கு நலன் பயக்கும். பலரை சென்றடையும்.

சுவனப் பிரியன் said...

இங்கு சவுதியில் ஹிந்த் என்ற பெயரும் சாமி என்ற பெயரும் பல அரபுகளுக்கு உள்ளது. இதுவம் கூட இந்த தொடர்பில் வந்திருக்கலாம். ஏமன் தேசத்து அரபுகள் நமது தமிழர்களைப் போலவே கைலி உடுத்துவது. சோறு சாப்பிடுவது. விவசாயத்தை அதிகம் சார்ந்திருப்பது. உடல் உழைப்பை அதிகம் விரும்புவது. முக சாயலில் கூட நம்மவர்களை ஒத்திருப்பர்.

கலையரசன் said...

நன்றி, செல்வராஜ்.
கிழக்கு ஆசிய நாடுகள் பற்றி விபரமாக இன்னொரு தொடர் எழுத இருக்கிறேன். அதற்கான உசாத்துணைகளை இப்போதிருந்தே சேர்த்து வருகிறேன். விரைவில் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.

கலையரசன் said...

தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, சுவனப் பிரியன். ஹிந்த் அல்லது சிந்த் என்ற பெயர்ச் சொல் பண்டைய அரேபியாவிலும், ஈராக்கிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. யேமன் நாட்டவரின் பழக்க வழக்கங்கள் பற்றி இதற்கு முந்திய பகுதியில் எழுதி இருக்கிறேன்

வழக்கமாகவே எனது தொடர்களுக்கு வாசகர்களும் தகவல்களை தந்துதவி இருக்கின்றனர். இந்தக் கட்டுரைகளை நான் எழுதினாலும், இதிலே வாசகர்கள் சிலரின் பங்களிப்பும் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். தமிழில் இதுவரை எழுதப்படாத தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது அவா.

ஆதித்த கரிகாலன் said...

முழந்தாளிட்டு வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம். ஆண்கள் உடலின் எட்டு உறுப்புகள் பட விழுந்து வணங்குவதே அட்டாங்க நமஸ்காரம்.

கலையரசன் said...

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, ஆதித்த கரிகாலன். திருத்திக் கொண்டேன்.

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,

1. // அல்லா என்ற குழந்தைக் கடவுளின், தாய்க் கடவுளின் பெயர்: "அல் லாத்". //
அல்லாத் என்பது குரான்& இதர சான்றுகளின் படி அல்லாவின் மகள்,தாய் அல்ல.
http://en.wikipedia.org/wiki/Al-l%C4%81t
Allāt or al-Lāt (Arabic: اللات‎) was a Pre-Islamic Arabian goddess who was one of the three chief goddesses of Mecca. She is mentioned in the Qur'an (Sura 53:19), which indicates that pre-Islamic Arabs considered her as one of the daughters of Allah along with Manāt and al-‘Uzzá.
The shrine and temple dedicated to al-Lat in Taif was demolished by Abu Sufyan ibn Harb, on the orders of Muhammad, during the Expedition of Abu Sufyan ibn Harb, in the same year as the Battle of Tabuk[1] (which occurred in October 630 AD).[2][3] The destruction of the idol was a demand by Muhammad before any reconciliation could take place with the citizens of Taif who were under constant attack.[4]

2. // பண்டைய அரேபியரின் மத சம்பிரதாயங்களை பின்பற்றினாலும், இஸ்லாம் ஒரு புரட்சிகரமான புதிய மதமாகும். விக்கிரக வழிபாட்டை ஒழித்துக் கட்டியது மட்டுமல்ல, அரேபியர் வழிபட்ட பல தெய்வங்களில் ஒன்றான அல்லாவை, ஒரேயொரு இறைவனாக ஆக்கியமை, அந்தக் காலத்தில் நடந்த மாபெரும் கலாச்சாரப் புரட்சி ஆகும்.//
இஸ்லாம் என்பது பல் தெய்வ வழிபாட்டை ஓரிறை ஆக்கியதால் புரட்சியா? அப்ப்டி எனில் பல் தெய்வ இந்து மதத்தை கிருஷ்ன பக்தி ஆக்கிய ஓரிறை இஸ்க்கானும் புரட்சியா!!!
http://www.religionfacts.com/a-z-religion-index/hare-krishna-iskcon.htm
Hare Krishna is the popular name for the International Society of Krishna Consciousness (or ISKCON), a new religious movement based in Hinduism.
Established in America in 1965, the Hare Krishna worship the Hindu god Krishna as the one Supreme God.
இஸ்லாம் இன்னும் பல மாற்றங்களை,சீர்திருத்தங்களை நோக்கி வளர வேண்டிய மதம். பிற மதங்கள் போல் மட்டுமே.

நன்றி!!