Saturday, October 20, 2012

வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்

நாம் கறுப்பர்!  நமது மொழி தமிழ்!  
நம் தாயகம்  ஆப்பிரிக்கா!
 (எட்டாம் பாகம்)

Marduk & Murugan

ஒரு காலத்தில், ஈராக், சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த திராவிட இன மக்கள் முருகனை கடவுளாக வழிபட்டு வந்தனர். அவர்கள், அந்தக் கடவுளை பேல் (வேல்)  மார்டுக் (முருகன்) என்ற பெயரில் வழிபட்டு வந்தார்கள். வடக்கே இருந்து படையெடுத்து வந்த வெள்ளையின ஆரியர்கள், மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து, அங்கிருந்த திராவிடர்களின் நாகரீகத்தை அழித்தார்கள். அவர்களின் கோயில்களை சூறையாடி, தெய்வச் சிலைகளை கொள்ளையடித்து சென்றனர். அந்த வரலாற்று உண்மைகள், விவிலிய நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன!

"மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்; பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்; முழக்கம் செய்யுங்கள்; "பாபிலோன் கைப்பற்றப்பட்டது; பேல் சிறுமையுற்றது; மெரோதாக்கு உடைக்கப்பட்டது; அதன் சிலைகள் சிறுமையுற்றன; அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன, "என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள். ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்."
- விவிலியம், எரேமியா (அதிகாரம் 50-2)

கறுப்புத் தலையும், குள்ளமான உருவமும் கொண்ட  சுமேரியர்கள், எங்கேயிருந்து ஈராக்கிற்கு வந்தார்கள் என்று எழுதி வைக்கவில்லை. ஆயினும், அந்தப் பிராந்தியத்தில், அன்றைய காலகட்டத்தில் அறிவில் சிறந்த மக்கள் அவர்களாக இருந்தனர். எந்த மொழிக் குடும்பத்தை சேர்ந்தது என்று இலகுவாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, விசித்திரமான மொழி ஒன்றைப் பேசினார்கள். சுமேரியர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள், சுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சியுடன் அழிந்து விடவில்லை. கிரேக்கர்களாலும், அரேபியர்களாலும் பாதுகாக்கப் பட்டு வந்தன. 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் அவற்றை உலகம் முழுவதும் போதித்தார்கள். அப்போது நாங்கள், ஐரோப்பியர்களின் அறிவியல் திருட்டை தெரிந்து கொள்ளாமல், வெள்ளை இனத்தின் அறிவுக் கூர்மையை எண்ணி மெச்சினோம். ஈராக்கை ஆக்கிரமித்த ஆங்கிலேயர்களும், சிரியாவை ஆக்கிரமித்த பிரெஞ்சுக் காரர்களும், பல அறிவுச் செல்வங்களை கொள்ளையடிச் சென்று விட்டார்கள். சிலவற்றை மட்டும், லண்டன், பாரிஸ் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தார்கள். 

இருப்பினும், 20 ம் நூற்றாண்டு, ஈராக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சில பெறுமதி மிக்க ஆவணங்கள் கிடைத்தன. நிலத்திற்கடியில் புதைந்திருந்த களி மண் தட்டுகளில் இருந்து புதிய தகவல்கள் கிடைத்தன. நாம் கற்று வந்த உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அளவுக்கு முக்கியமான தகவல்களைக் கொண்டிருந்தன. அந்த களிமண் தட்டுகள், சுமேரியர் காலத்தில் நூல்களாகவும், செய்தி மடல்களாகவும் பயன்பட்டன. சுமேரியர்கள் தமது கடவுள்களைப் போற்றும் புராணக் கதைகளை மட்டும் அவற்றில் எழுதி வைக்கவில்லை. பண்டைய சரித்திரம், தற்கால சரித்திரம், இலக்கியம், அறிவியல், வான சாஸ்திரம், கணிதம், சட்டம்..... அதாவது, நவீன உலகில் பல்வேறு புலமை சார் நூல்கள் எழுதப் படுவதைப் போல, ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார்கள். சுமேரியர்கள், 60 என்ற இலக்கத்தை வைத்து அனைத்தையும் கணித்து வந்தனர். 360 பாகையில் அளவிட தெரிந்து வைத்திருந்தனர்.  60 நொடிகள், 60 நிமிடங்கள் என்று நேரத்தை கணக்கிட கற்றிருந்தனர். ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் என்று கணித்திருந்தனர். ஆனால், அவை முற்பகல், பிற்பகல் என்று பிரிக்கப்பட்ட இரட்டை மணித்தியாலங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கின்றன, அதிலும் கால்வாசி, அரைவாசி நாள் மிச்சம் வருகின்றது என்றும் தெரிந்து வைத்திருந்தனர். காலத்தை அத்தனை துல்லியமாக கணக்கிட தெரிந்தவர்கள், அன்றைய உலகில் வேறெங்கும் தோன்றியிருக்கவில்லை. 

ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அறிவியலில் சிறந்து விளங்கிய, புத்திக் கூர்மை மிக்க சுமேரியர்களின் நாகரீகத்தை, பிற இனங்கள் பின்பற்றியதில் வியப்பில்லை. அந்தப் பிராந்தியத்தில், வேறொரு இடத்தில் இராணுவப் பலம் பெற்று, சாம்ராஜ்யங்களை ஸ்தாபித்த அக்காடியர்கள், பாபிலோனியர்கள், அசிரியர்கள்  எல்லோரும் சுமேரிய நாகரீகத்தை பின்பற்றினார்கள். அவர்கள் மட்டுமல்ல, பிற்காலத்தில் மதத்தை முதன்மைப் படுத்தி ஆண்ட, யூதர்கள் அரேபியர்கள் கூட, ஏதோ ஒரு வகையில் சுமேரியர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர். அத்தகைய பெருமைக்குரிய சுமேரியர்கள் யார்? அவர்களது முன்னோர்கள், வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம் என்ற கதை சுமேரியர் காலத்திலேயே பிரபலமாக இருந்தது. கோள்களையும், நட்சத்திரங்களையும் பற்றி விரிவாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், அவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், பண்டைய உலகில் சுமேரியர்கள் மட்டும் வான சாஸ்திர அறிவியல் தெரிந்திருக்கவில்லை. எகிப்தியர்களும் அவற்றை அறிந்திருந்தனர். இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழும், டோகொன்  என்ற பழங்குடி இன மக்கள், வான சாஸ்திரத்தை தமது முன்னோர்களிடம் இருந்து கற்று வந்துள்ளனர். சுமேரியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்று சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வரக் கூடிய ஆதாரங்கள் பலவுள்ளன. 

சுமேரியர்கள் பேசிய மொழியில் காணப்பட்ட சில சொற்கள், மற்றும் மத நம்பிக்கைகள் ஆகியனவற்றை வைத்து, சில முடிவுகளுக்கு வரலாம். அவர்களது மத நம்பிக்கைகள், பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது. மேலும், "என்கி" என்ற முழுமுதற் கடவுட் கோட்பாடும், இன்றைய கென்யாவில் நிலவுவதை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். ஆகையினால், சுமேரியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று, மத்திய கிழக்கில் குடியேறி இருக்கலாம். ஏற்கனவே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த, பல்வேறு செமிட்டிக் மொழிகளைப் பேசும் மக்களும், சுமேரியர்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (அன்றைய காலத்தில் ஹீபுரு, அரபு போன்ற மொழிகள் தோன்றியிருக்கவில்லை.) செமிட்டிக் மொழிகளைப் பேசிய மக்கள், சுமேரியர்களிடம் இருந்து தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். மேலும் இவர்கள் எல்லோரும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து, திராவிடர்களாக மாறிய இனங்களாக இருக்கலாம். அதனால் தான் பிற்காலத்தில் சுமேரியர்களை வென்று, மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அக்காடியர்கள் காலத்திலும், மிகப்பெரிய பண்பாட்டு மாற்றம் எதுவும் நடந்து விடவில்லை. பாபிலோனிய நாகரீகத்திலும் அது தான் நிலைமை. அக்காடிய, பாபிலோனிய ஆளும் வர்க்க பிரதிநிதிகள் பேசிய மொழி ஆட்சி மொழியாகியது. அதனால், தெய்வங்களின் பெயர்களும், புராணக் கதைகளும் சில மாற்றங்களுக்குட்பட்டன. 

பூமி தோன்றியது பற்றிய சுமேரியர்களின் புராணக்கதை சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் ஆகாயம், பூமி, நீர், வளி  மண்டலம் எல்லாம் ஒன்றாக பந்து போல இருந்தனவாம். சமுத்திரத் தேவதை தியாமட்டின் அடாவடித்தனங்களை அடக்குவதற்காக, கடவுளர் எல்லாம் ஒன்று கூடி, மார்டுக் என்ற தெய்வத்திற்கு வல்லமை கொடுத்து அனுப்புகின்றனர். முழுமுதற் கடவுளான என்கிக்கும், அவர் துணைவி தம்கினாவுக்கும் பிறந்த புதல்வன் தான் மார்டுக். ராட்சத தேவதையான தியாமட்டும், மார்டுக்கும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். இந்து புராணங்களில் வரும் அசுரர்களைப் போன்ற தீய சக்திகளைக் கொண்ட படைகளை எதிர்த்துப் போரிட்டு துவம்சம் செய்த மார்டுக், இறுதியில் தியாமட்டை கொல்கிறார். அசுர கணங்களின் தலைவியான  தியாமட்டின் உடல் இரண்டாகப் பிளக்கப் படுகின்றது. அதில் ஒரு பகுதி ஆகாயமாகவும், மறு பகுதி பூமியாகவும் மாறியது. மார்டுக், மும்மூர்த்திகளான அணு, எயா, என்லில் ஆகிய கடவுளர்களை, முறையே ஆகாயம், பூமி, வளிமண்டலம் ஆகிய பகுதிகளுக்கு அதிபதி ஆக்குகிறார்.

சுமேரியாவில் மார்டுக் கடவுளுக்கு பிரதான இடம் கிடைத்திருந்தது. ஏறக்குறைய முழுமுதற் கடவுளாக வழிபடப் பட்டு வந்தது. சுமேரியர்கள் வழிபட்டு வந்த மார்டுக் கடவுளின் கதை, இந்து மதத்தில் முருகக் கடவுளை நினைவு படுத்துகின்றது. கந்தபுராணத்தில் வரும் சூரன் போர் பற்றிய கதை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். மார்டுக், தியாமட்  அனுப்பிய தீய சக்திகளுடன் மோதியதைப் போன்று, முருகனும் சூரனின் படைகளுடன் மோதுகின்றார். இறுதியில், சூரனைக் கொன்று, அவன் உடலை இரண்டாகப் பிளந்து, சேவலும், மயிலுமாக ஆக்குகின்றார். இரண்டு கதைகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சூர சம்ஹாரத்தில், முருகன் வேல் வீசி சூரனைக் கொல்கிறார். சுமேரியரின் கதையில், மார்டுக் சூலம் போன்ற ஆயுதத்தை வீசி தியாமட்டை கொன்றார். 

ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த மார்டுக் சிற்பங்கள் சிலவற்றில், மார்டுக் கையில் உள்ள சூலாயுதம் வேல் போன்று காட்சியளிக்கின்றது. சுமேரியர்கள் பயன்படுத்திய முத்திரைகளிலும், அது வேல் மாதிரியே தெரிகின்றது. சூரனின் உடலைப் பிளந்த முருகன், அதில் ஒரு பகுதியை மயிலாக்கி, தனது வாகனமாக பயன்படுத்தியதாக கந்த புராணம் கூறுகின்றது.  சுமேரியர்களின் புராணக்கதை ஒன்று, தியாமட் ஒரு பறக்கும் டிராகன் என்கிறது. மார்டுக் அதனை ஒரு வாகனமாக பயன்படுத்தி பறந்து திரிவதுண்டு. இது எல்லாவற்றையும் விட, "மார்டுக் - முருகன்" ஆகிய  இரண்டு பெயர்களிலும்  உள்ள ஒற்றுமையைக் கவனிக்கவும். மேலும், சுமேரியர்கள் மார்டுக்கை "பேல்" (Bēl) என்ற பெயராலும் வழிபட்டு வந்துள்ளனர். சுமேரிய மொழியில், பேல்  என்றால் பிரபு  என்று அர்த்தம். அக்காடிய மொழியில் அதனை "பேலு"  என்று அழைத்தார்கள். தமிழ் மொழியில், "B" உச்சரிப்பு கிடையாது. அதற்குப் பதிலாக "வே"  என்ற எழுத்தைப் பாவிப்பதுண்டு. ஆகவே பேல், வேல் என்று மாறியிருக்கும். பேலு, வேலு வாகியிருக்கும். இது போன்ற மாற்றங்கள், வேறு சொற்களிலும் ஏற்பட்டுள்ளன. 

ஆரியர்கள் இமயமலைப் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று கூறப்படும் கோட்பாட்டில், பல குறைபாடுகள் காணப்படுவதை ஏற்கனவே பல தடவைகள் குறிப்பிட்டு எழுதியுள்ளேன். மத்திய ஆசியாவை சேர்ந்த ஆரியர்கள், இடையில் எந்த நாட்டையும் கைப்பற்றாமல், நேராக இந்தியா நோக்கி வந்ததாக சொல்லப்படுவது ஒரு புனைவு ஆகும். ஆரியர்களின் குடிபெயர்தல், இன்றைய துருக்கியில் இருந்து தொடங்கியது என்று, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்தக் கட்டுரையிலும், அந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் சான்றுகளை நாம் தேடலாம். அதாவது, இந்தியா மீதான ஆரியரின் படையெடுப்பு நடப்பதற்கு முன்னர், அல்லது சம காலத்திலாவது, கறுப்பின திராவிடர்களின் ஈராக், வெள்ளையின ஆரியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டது. 

இன்றைய ஈராக் நாட்டிற்கு மேலே, துருக்கி இருப்பது வரைபடத்தை பார்த்தாலே புரியும். இன்றைக்கும், வட ஈராக்கிய பகுதிகளிலும், அதன் எல்லையோரமான கிழக்கு துருக்கியிலும் குர்து மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். குர்து மொழியானது, "ஆரிய மொழிகளான"  பார்சி, சமஸ்கிருதம் போன்றவற்றுடன் தொடர்புடையது. மேலும், 19 ம் நூற்றாண்டு வரையிலும் கூட, கிழக்கு துருக்கியின் சில பகுதிகள் ஆர்மேனியா நாட்டிற்கு சொந்தமாக இருந்தன. கிறிஸ்துவுக்கு முன்னர், இன்றைய சிரியா வரை விரிந்திருந்த மாபெரும் ஆர்மேனிய சாம்ராஜ்யத்தின் எல்லையில், ஈரானிய பார்த்திய சாம்ராஜ்யம் இருந்தது. பார்த்தியர்களும், ஆர்மேனியர்களும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுருக்கமாக, இற்றைக்கு 2500 - 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஈராக், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் வெள்ளையின ஆரியர்களினால் ஆக்கிரமிக்கப் பட்டு விட்டது. அப்படியானால், அதற்கு முன்னர் கூட, ஆரியர்களின் படையெடுப்புகள் நடந்திருக்குமல்லவா?  

கறுப்பின திராவிடர்களான சுமேரியர்களின் நாகரீகம், மெல்ல மெல்ல அக்காடியர்களினால் உள்வாங்கப் பட்டது. அக்காட்  என்ற ஊரை சேர்ந்த அரச பரம்பரை என்பதால், அக்காடியர்கள் என்ற பெயர் வந்தது. இன்று மறைந்து விட்ட செமிட்டிக் மொழி ஒன்றை பேசிய அக்காடியர்களும், உலகில் வேறெங்கும் பேசப்படாத தனித்துவமான மொழி ஒன்றைப் பேசிய சுமேரியர்களும் மொழியால் வேறுபட்டவர்கள். ஆனால் இனத்தால் ஒன்று பட்டவர்கள். அவர்களுக்கு இடையில் கலாச்சார ஒற்றுமைகளும் இருந்தன. உதாரணத்திற்கு, தமிழர்களும், கன்னடர்களும்,சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், அவர்கள் எல்லோரும் ஒரே திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைய ஈராக்கில், இராணுவ பலத்தினால் மாபெரும் சாம்ராஜ்யத்தை கட்டிய அக்காடியர்கள் மட்டுமல்ல, பாபிலோனியர்கள், காசியர்கள் எல்லோருமே ஒரே திராவிட இனத்தை சேர்ந்த, ஆனால் வேறுபட்ட மொழிகளைப் பேசிய மக்களாக இருக்கலாம். காலப்போக்கில், சுமேரியர்கள் தம்மீது மேலாதிக்கம் செலுத்திய அக்காடிய, அல்லது பாபிலோனிய மொழிகளை பேசத் தொடங்கி விட்டனர். அதனால், சுமேரியர்கள் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். காசியர்கள் ஒரு ஆளும் வர்க்கமாக இருந்த போதிலும்,  தமது மொழியை புறக்கணித்து, அக்காடிய மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

காசியர்களின் சாம்ராஜ்ய காலத்தில் தான் ஆரியர்களின் பெருமளவிலான படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில், பாபிலோன் நகரம் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கியது. அன்றிருந்த மத்திய கிழக்கு ஆசியாவிலும், முழு ஐரோப்பாவிலும், பாபிலோன் போன்ற உன்னத நாகரீகமடைந்த நகரம் தோன்றியிருக்கவில்லை. அன்று, மேற்கே துருக்கி பகுதிகளில் வாழ்ந்த, ஹித்தித் இன மக்கள், பாபிலோனியாவின் செழிப்பில் பொறாமை கொண்டிருக்கலாம். பெரும் படையெடுத்து வந்து பாபிலோனியாவை ஆக்கிரமித்தனர். பாபிலோன் நகரத்தை அழித்து  நாசமாக்கினார்கள். அங்கிருந்த, மிகப்பெரிய மார்டுக் தெய்வச் சிலையை கொள்ளையடித்து சென்றார்கள். 

காசி மக்களும் கறுப்பினத் திராவிடர்களாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் பண்டைய குஷ் ராஜ்யத்தின் பெயர், அங்கிருந்து குடிபெயர்ந்த மக்களைக் குறிக்கவும் பயன்பட்டது. அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உச்சரிப்பில் சொல்லப்பட்டாலும், மூலம் ஒன்றாக இருக்கலாம். இன்றைய பாகிஸ்தானில் இருந்த குஷானா சாம்ராஜ்யம், வட இந்தியாவில் காசி நகரம், என்பன ஆப்பிரிக்க குஷ் இன மக்களுடனான தொடர்பை குறிக்கின்றது. காசி அரச பரம்பரையினர், ஹித்தித் ஆக்கிரமிப்பாளர்களுடன் போரிட்டு, பாபிலோனியாவை விடுதலை செய்தது மட்டுமல்ல, கொள்ளையடிக்கப் பட்ட மார்டுக் சிலையையும் மீட்டுக் கொண்டு வந்தனர். பாபிலோன் நகரில் உடைந்த கோயிலை மீண்டும் கட்டி, மார்டுக் சிலையை அதிலே பிரதிஷ்டை செய்து வைத்தனர். இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், காசி மக்கள் வேறு மொழி பேசினாலும், அவர்களும் மார்டுக் போன்ற தெய்வம் ஒன்றை வழிபட்டு வந்தனர். மார்டுக் கடவுளுக்கு அவர்களது மொழியில், ஷுகமுனா என்று பெயர். அந்தப் பெயர்ச்சொல், முருகக் கடவுளின் இன்னொரு பெயரான ஷண்முகனை நினைவு படுத்துகின்றதல்லவா? நிச்சயமாக, வெள்ளையின ஆரியர்கள் திராவிடர்களின் மத நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதனால், படையெடுப்புகளின் பொழுது கோயில்களை சூறையாடினார்கள். அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்தார்கள். அத்தகைய சம்பவம் ஒன்று விவிலிய நூலிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

"மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்; பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்; முழக்கம் செய்யுங்கள்; "பாபிலோன் கைப்பற்றப்பட்டது; பேல் சிறுமையுற்றது; மெரோதாக்கு உடைக்கப்பட்டது; அதன் சிலைகள் சிறுமையுற்றன; அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன, "என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள். ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்." - விவிலியம், எரேமியா (அதிகாரம் 50-2)

விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள "பேல்", மார்டுக் (மெரோதாக்கு) கடவுளைக் குறிக்கும். ஈராக்கில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் அந்தக் காலத்தில் மார்டுக் தெய்வத்திற்கு கோயில்கள் இருந்துள்ளன. அந்த நாடுகளில், மார்டுக் BEL/BAAL  என்று அழைக்கப் பட்டது. பேல் அல்லது பால் என்றால், (எம்மை ஆளும்) பிரபு அல்லது ஆண்டவர் என்று அர்த்தமாகும். பைபிளில் குறிப்பிடப் படும், "பாபிலோனை பாழாக்கிய, வடக்கிலிருந்து வந்த இனம் எது?" உலக வரைபடத்தை எடுத்து பார்த்தால், அதற்கான விடை கிடைக்கிறது. பாபிலோனுக்கு வடக்கே இருந்து வந்தவர்கள், ஆரிய மொழிகளைப் பேசிய வெள்ளையினத்தவர் அன்றி வேறு யார்? அதற்கான சான்றுகள் இன்றைக்கும் உள்ளன. பாபிலோன் அல்லது இன்றைய பாக்தாதிற்கு மேலே, குர்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் குர்து மொழி, இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அங்கிருந்து வடக்கே, ஆர்மேனியா, அசர்பைஜான் போன்ற நாடுகள் உள்ளன. ஆர்மேனியர்கள் ஐரோப்பியர்கள். அசெரிகள் துருக்கியர்கள். இவ்விரண்டுமே வெள்ளையின ஆரிய இனங்கள். அப்படியானால், இந்து மத வேதங்களில் எழுதப்பட்ட, தேவர்கள், அசுரர்களுக்கு இடையிலான போர்களும் பண்டைய ஈராக்கில் நடந்திருக்க வேண்டுமல்லவா?  ஆமாம், அதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.  

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!" _____________________________________________________________________

 உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton
6.Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7.Civilisation One, by Christopher Knight and Alan Butler

3 comments:

varagan said...

http://www.gods-heros-myth.com/godpages/marduk.html
மேற்கண்ட வலைதலத்தில் கீழ்கண்டபகுதி தங்கள் கருத்துக்கு வலுசேர்க்கும்
Other Names: Asarluhi, The Son, The Majesty of the Gods, Marukka, Mershakushu, Lugal-dimmer-ankia, Bel, Nari-lugal-dimmer-ankia, Asarluhi, Namtila, Namru, Asare, Asar-alim, Asar-alim-nuna, Tutu, Zi-ukkina, Ziku, Agaku, Shazu, Zisi, Suhrim, Suhgurim, Zahrim, Zahgurim, Enbilulu, Epadun, Gugal, Hegal, Sirsir, Malah, Gil, Gilima, Agilima, Zulum, Mummu, Zulum-ummu, Gizh- numun-ab, Lugal-ab-dubur, Pagal-guena, Lugal-Durmah, Aranuna, \ Dumu-duku, Lugal-duku, Lugal-shuanna, Iruga, Irqingu, Kinma, E-sizkur, Addu, Asharu, Neberu, Enkukur.
இதில் marukka என்ற வார்த்தை முருகா அல்லது மருகா என்பதை நிணைவுபடுத்துகிறது.

கலையரசன் said...

தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி, Varagan.

M. Shanmugam said...

மிகவும் பயனுள்ள ஆனால் ஆச்சரியம் தரத்தக்க தகவல்கள் பதிவு செய்ய படுகிறது.
மிக்க நன்றி.

Tamil News Service