Wednesday, October 17, 2012

ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"

நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா!

 (பண்டைய தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு )

  (ஏழாம் பாகம்)


"  பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக அழுது கொண்டிருந்தனர். அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய்" என்றார். அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்."   
- விவிலியம், எசேக்கியேல், அதிகாரம் 8 (14-16)
"ஆடி மாதத்தில், திருமணம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவதில்லை" என்பது, இன்றைக்கும் தமிழர்கள் பின்பற்றும் வழக்கமாகும். அது ஏன் என்ற காரணம் பலருக்கு தெரியாது. அதே நேரம், "ஆடிப் பட்டம் தேடி விதை"  என்ற பழமொழி ஒன்றுண்டு. விவசாயிகளுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதம், எதற்காக அப்படி ஒரு கெட்ட  பெயரை சம்பாதித்துள்ளது? நாங்கள் தமிழ் மொழி பேசும் ஆப்பிரிக்க கருப்பர்கள் என்பதால், எமது முன்னோரின் பழக்க வழக்கங்களை விடாமல் பின்பற்றி வருகின்றோம்.

ஆடி மாதம்,தமிழர்களின் அறுந்து போன தொடர்பு ஒன்றை இன்றைக்கும் நினைவுபடுத்துகின்றது. உலகில் முன்தோன்றிய மூத்தகுடி என்ற பெருமை பாடுவதில் தமிழன் சளைத்தவன் அல்ல. ஆயினும், அந்த மூத்த குடிக்கு அன்றிருந்த பெயர் வேறு. அதிலிருந்து கிளைகளாக பிரிந்தவை இன்று பல்வேறு திராவிட மொழிகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நமது முன்னோர்கள், இன்றைய ஈராக் பிரதேசத்தில் குடியேறிய பின்னர் தான் நாகரீகமடைந்தனர். அங்கே "ஊர்"  என்ற பெயரில் நகரங்களை அமைத்து, தேச பரிபாலனம் செய்தனர். பேச்சு மொழிக்கு எழுத்து வடிவத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில், இயற்கையோடொன்றி வழிபட்டு வந்த தெய்வங்களுக்கு, பல்வேறு புராணக் கதைகளை உருவாக்கினார்கள். அந்தக் கதைகளின் மூலம், சிக்கலான தத்துவார்த்த கேள்விகளுக்கு விடை காண முயற்சித்தார்கள். தமது தெய்வங்களை வழிபடுவதற்காக, அவற்றை போற்றிப் புகழ் பாடும் செய்யுள்களை இயற்றினார்கள். இந்த செய்யுள் இயற்றும் கலை, வட இந்தியாவில் வேத காலத்திலும், தென் இந்தியாவில் சங்க காலத்திலும் தொடர்ந்தது. 

ஈராக்கில் வாழ்ந்த தமிழர்களினதும், பிற திராவிட இனங்களினதும் மூதாதையரின் பெயர் சுமேரியர்கள். உலகில் முதல் தோன்றிய நாகரீகத்தைக் கொண்டவர்கள். சுமேரிய நாகரீகம், ஹரப்பா நாகரீகத்திற்கும் முந்தியது. சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் அது பாபிலோனிய நாகரீகமாக உருமாறியது. கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில், ஒரு சிறுபான்மையினமான யூதர்களின் நாகரீகமும் துளிர் விட்டிருந்தது. பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்த யூதர்கள், அன்று நிலவிய முக்கிய கதைகளை விவிலிய நூலில் (யூத மதப்பெயர் "தோரா") பதிவு செய்தனர். அதனால், அன்றைய ஈராக்கிய நாகரீகம் பற்றி நாம் சிறிதளவேனும் அறிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், யூதர்களின் புனித நூல் உருவான காலத்தில், பல பெயர்கள் மாறி விட்டிருந்தன. குறிப்பாக தெய்வங்களின், இடங்களின் பெயர்கள், அவற்றின் மூலப் பெயர்களில் இருந்து பெருமளவு மாறுபட்டிருந்தன. பாபிலோனியர்கள், அசிரியர்கள்  தமது மொழிகளில் இட்ட பெயர்கள் அப்படியே பைபிளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆயினும், அதே தெய்வங்களுக்கு, அதே இடங்களுக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், சுமேரியர்கள் வைத்த பெயர்கள் மறைந்து விட்டன. அதே போன்று, சுமேரியர்களின் புராணக் கதைகள், பிற்காலத்தில் பாபிலோனியர்களால் சிறிய மாற்றங்களுடன் பாதுகாக்கப் பட்டு வந்தன. யூதர்கள், அவற்றை "ஆண்டவரால் அருளிச் செய்யப்பட்ட"  கதைகளாக விவிலிய நூலில் எழுதி வைத்து விட்டனர். கிறிஸ்தவர்களும் தம் பங்கிற்கு சிலவற்றை பயன்படுத்த தொடங்கினார்கள். 

உதாரணத்திற்கு, ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கதையும், அதிலிருந்து தப்புவதற்கு நோவா கப்பல் ஒன்றை தயாரித்த கதையும் விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. அதே ஊழிப் பெருவெள்ளம்  மாதிரியான கதை, யூத மதம் தோன்றுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களினால் பாடப் பட்டு வந்த புராணக் கதையை நினைவு படுத்துகின்றது.  சுமேரியர்கள் தமது தெய்வங்களின் கதைகளை களிமண் தட்டுகளில் எழுதி வைத்துள்ளனர். அவை இன்றைக்கும் ஈராக் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அட்ராகாசிஸ் என்ற கதை, விவிலிய நோவா கதையுடன் பெருமளவு ஒத்துப் போகின்றது. (The Story of Atrahasishttp://faculty.gvsu.edu/websterm/Atrahasi.htm ) நமது காலத்தில் இதனை ஒரு மோசடி, இலக்கியத் திருட்டு என்றெல்லாம் கூறலாம். ஆனால், அனைத்து மதங்களும், அனைத்து இனங்களும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை நாங்கள் மறந்து விட்டதால் ஏற்பட்ட குழப்பம் இது. நாகரிக வளர்ச்சி காரணமாக, தமக்கென தனியான மதங்களையும், மொழிகளையும் உருவாக்கிக் கொண்ட மக்கள், ஒரே பூர்வீகத்தை கொண்ட சகோதர இனங்களை,எதிரிகளாக கருதும் குறுகிய மனப்பான்மை, இன்றைக்கும் காணப்படுகின்றது. தான் மட்டுமே சிறந்தவன் என்ற அகந்தையும், தன் முனைப்பும் இல்லாதவர்கள் மட்டுமே மூத்தகுடிப் பெருமை பேச தகுதியுடையவர்கள். மத்திய கிழக்கை சேர்ந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கதைகளை தமது புனித நூல்களில் எழுதி வைத்திருப்பது தற்செயலானதல்ல. இந்த மும்மதங்களுக்கும் மூலம் ஒன்று தான். ஈராக்கில் தோன்றிய நாகரீகத்தில் இருந்து தான் அந்த நதிமூலம் தொடங்குகின்றது. அந்த நாகரீகம் கறுப்பின மக்களுடையது என்பதை நாம் மறந்து விடலாகாது. 

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை, பாபிலோனியர்களின் இஷ்தார் தெய்வத்திற்கான பண்டிகை என்பதனை ஏற்கனவே பார்த்தோம். பாபிலோனியர்களின் வேறெந்தக் கலாச்சாரக் கூறுகள், கிறிஸ்தவ மதத்தில் காணப்படுகின்றன என்பதனை, நாம் இப்போது பார்ப்போம். இந்துப் புராணக் கதைகள் போன்று, சுமேரியர்களின் அல்லது பாபிலோனியர்களின் கடவுளரும் மனித வடிவில் அவதாரம் எடுப்பதுண்டு. சுமேரியர்களால் தமுசி என்றும், பாபிலோனியர்களால்  தம்முஸ் என்றும் அழைக்கப்பட்ட அவதார புருஷனின் கதை மிகவும் பிரபலமானது. அந்த தெய்வத்தை போற்றிப் பாடும் செய்யுள்கள் அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றன. குழந்தையாக அவதரித்த தினத்தில் இருந்து மரணமடைந்த இறுதிக் கணம் வரை ஒரு தனி மனிதனின் காவியம் போன்று பாடப் பட்டு வந்தது. அந்தக் கதையில், தமுசி/தம்முஸ் ஒரு ஆடு, மாடு மேய்க்கும் இடையனாக அறிமுகமாகிறார். பருவ வயதை அடைந்ததும், அவரை மணம் முடிக்க காத்திருக்கும் அரசனின் மகளாக, இஷ்தார் கடவுள் அவதாரம் எடுத்துள்ளார். இருவரையும் சுற்றி புனையப் பட்ட காதல் காவியம், ரோமியோ-ஜூலியட் கதையை விடப் பழமையானது.  தம்முஸ், தனக்கேற்ற கணவனா என்று கண்டறிவதற்காக , இஷ்தார் பல சோதனைகளை வைக்கிறார். அதிலே கேட்கப்படும் கேள்விகள், விவசாய சமூகம் சம்பந்தமானவை. அதாவது, கால்நடைகளை மேய்த்து வந்த புராதன கால சமுதாயத்திற்கும், விவசாய தொழில்நுட்பம் தெரிந்த நவீன கால சமுதாயத்திற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளை அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விவசாய சமூகம், தன்னை நாகரீகமடைந்த சமூகமாக கருதிக் கொண்ட காலத்தில் இந்தப் புராணக் கதை தோன்றியுள்ளது. இஷ்தாரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தம்முஸ், கால்நடை வளர்ப்பின் சிறப்பைப் பற்றிப் பாடுகின்றார். இறுதியில், இருவரும் திருமணம் செய்து கொள்வதன் மூலம், புராதன சமுதாயமும், நவீன சமுதாயமும் ஒன்று சேருகின்றன. 

தம்முஸ்-இஷ்தார் காதல் ஜோடியின் இல்லற வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. தம்முசை ஒரு காட்டுப் பன்றி அடித்துக் கொன்று விடுகின்றது. செய்தி கேள்விப்பட்ட இஷ்தார், கணவன் இறந்ததால் ஏற்பட்ட  துயரத்தால் தவிக்கிறார். தனது பிரியத்திற்குரிய கணவனை உயிர்ப்பிப்பதற்காக, எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராகிறார். அதற்காக பாதாள உலகம் நோக்கி பயணிக்கிறார். பாதாள லோகத்தில் உள்ள ஏழு வாயில்களிலும், ஆபரணங்களையும் உடைகளையும் களைந்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இறுதியில், பாதாள லோகத்தின் அதிபதி விதிக்கும் சோதனைகளை எல்லாம் கடந்து, கணவனின் உயிரை மீட்கிறார். மரணித்து ஆறு மாதங்களுக்குப் பின்னர், தம்முஸ் உயிர்த்தெழுகின்றார்.  இந்தக் கதை, எகிப்தியரின் "இஸ்ரிஸ்-இசிஸ் கதை"  போன்றுள்ளது. அந்தக் கதையை ஏற்கனவே எழுதியுள்ளேன். (பார்க்க: தொடரின் இரண்டாம் பாகம்: பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம் கண்ணகி அம்மன்) இந்தியாவைப் பொறுத்த வரையில், அதனை கோவலன் - கண்ணகி கதை, அல்லது சத்தியவான்-சாவித்திரி கதையுடன் ஒப்பிடலாம். அந்தக் கதைகளிலும், பிரிவுத் துயரால் வாடும் மனைவி, இறந்த கணவனை உயிர்ப்பிக்க முயல்வதாக கூறப்படுகின்றது. ஆனால், "தம்முஸ் - இஷ்தார்" கதை இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. கணவனின் மரணம் தொடர்பாக, இஷ்தார் பிறப்பித்த உத்தரவுகள், மக்களால் பல ஆயிரம் வருடங்களாக பின்பற்றப் பட்டு வந்துள்ளன. அந்தப் பழக்கங்கள் இன்றைய உலகில் மறைந்து விடவில்லை. இன்றைக்கும் வேறு வடிவில் தொடர்கின்றன என்பது ஆச்சரியத்திற்குரியது. 

தம்முஸ் ஒரு ஆடி மாதத்தில் கொல்லப் பட்டதால், ஆடி மாதம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். சுமேரியரின் நாட்காட்டியில், ஆடி மாதம் என்பது, ஜூலையில் அரைவாசி, ஆகஸ்டில் அரைவாசி நாட்களைக் கொண்டது. தமிழ் நாட்காட்டியிலும், ஆடிமாதம் கிட்டத்தட்ட அதே காலப் பகுதியில் தான் வருகின்றது. தமிழர்கள் எதற்காக, ஆடி மாதத்தில் எந்தவித நல்ல காரியங்களிலும் ஈடுபடுவதில்லை என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். தமிழர்களுக்கும், சுமேரியர்களுக்கும் இடையிலான பிணைப்பை இனி வரும் பகுதிகளில் விளக்குகிறேன். உங்களை ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்குமளவிற்கு, இதை விட இன்னும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் பார்ப்போம். அன்றைய சுமேரிய/பாபிலோனிய மக்கள் ஆடி மாதம் முழுவதும் கோயிலில் இருந்து அழுது, ஒப்பாரி வைப்பது வழக்கம். பைபிளில்  பழைய ஏற்பாட்டில் அது குறிப்பிடப் பட்டுள்ளது. (பார்க்கவும்: எசேக்கியேல்) அனேகமாக, பிற்காலத்தில் பரவிய, யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அந்தப் பழக்கத்தை அடியோடு அழித்து விட்டன. (அழும் வழிபாட்டாளர்களை ஆண்டவரின் உத்தரவுப் படி கொன்றதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது.) ஆனாலும், பிற்காலத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், தம்முஸ் வழிபாட்டில் இருந்து பலவற்றை கடன்வாங்கிக் கொண்டது. தம்முசின் மரணத்தை நினைவுகூரும் வகையில், ஈச்சமர ஓலையை எரித்த சாம்பலை எடுத்து நெற்றியில் திலகமிட வேண்டும். ஒவ்வொரு பக்தரும், தம்முஸ் தெய்வத்தின் சின்னமான சிலுவையை தமது நெற்றியில் சாம்பலால் இட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இன்றைக்கும் கிறிஸ்தவர்களால், "சாம்பல் புதன்"  என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. (Ash Wednesdayhttp://en.wikipedia.org/wiki/Ash_Wednesday)  சைவ சமயத்தை சேர்ந்தவர்கள், சாம்பலை திருநீறாக பூசிக் கொள்ளும் வழக்கமும் சுமேரியாவில் இருந்து வந்திருக்க வேண்டும்.

சிலுவைக் குறியை வழிபடுவது, இயேசு கிறிஸ்துவுடன் ஆரம்பித்த வழக்கம் அல்ல. அது தம்முஸ் தெய்வத்தின் சின்னம். தம்முஸ் என்ற பெயரைக் குறிக்கும் எழுத்து சிலுவை அல்லது சக அடையாளம் போன்றிருக்கும். அன்றைய சுமேரியர்களும், பாபிலோனியர்களும் அதனை தம்முஸ் கடவுளைக் குறிக்கும் மதச் சின்னமாக வழிபட்டு வந்தார்கள். (The Sign of the  Crosshttp://www.piney.com/His56.htmlகொஞ்சம் அமைதியாக இருங்கள். சுமேரியரின் தம்முஸ் வழிபாட்டிற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. தம்முஸ் மரணமடைந்ததும், "அவர் தனது தந்தையிடம் சென்று விட்டார்." என்று இஷ்தார் மக்களுக்கு தெரிவித்தார். அந்தப் புராணக் கதையில், "எயா அல்லது என்கி" என்ற கடவுளின் குமாரனாகவே தம்முஸ் பூமியில் அவதரிக்கின்றார். அதனைக் குறிப்பிடும் இஷ்தார், "தந்தையையும், தனயனையும் ஒன்று சேர்க்கும் பரிசுத்த ஆவியைக் குறிக்கும் விளக்கு ஏற்றப்பட வேண்டும்"  என்று இஷ்தார் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதாவது, கிறிஸ்தவ சமயத்தில் "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்று இன்று பலரையும் குழப்பிக் கொண்டிருக்கும் கோட்பாடு சுமேரியர்களுடையது.  இயேசு கிறிஸ்துவை, "ஒரு நல்ல மேய்ப்பராக"  கிறிஸ்தவ மதம் சித்தரிக்கின்றது. தம்முஸ் கூட, ஆடுகளை மேய்ப்பவராக எமக்கு அறிமுகமாகின்றார். மரணமடைந்த யாரும் உயிர்த்தெழுவதில்லை என்பது உலக நியதியாக இருக்கையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து சுவர்க்கத்தை அடைந்ததாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. தம்முஸ் பற்றிய கதையிலும், உயிர்த்தெழுந்து சுவர்க்கம் செல்வது முக்கியமாக குறிப்பிடப் படுகின்றது. என்ன அதிசயம்!  

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்று, எமது முன்னோர்கள் காரணமில்லாமல் கூறவில்லை. தமிழரின் மூதாதையர் வாழ்ந்த பண்டைய ஈராக்கில், அடுத்த போகத்திற்கு தேவையான தானியங்களை விதைப்பது ஆடி மாதத்தில் தான். தம்முஸ் ஒரு விவசாயக் கடவுளாகும். சுமேரியர்களின் கதை ஒன்று அவரை சூரியக் கடவுளின் குமாரராக சித்தரிக்கின்றது. ஆண்டவரின் குமாரனான ஏசு கிறிஸ்துவை பெற்றெடுத்த கன்னி மரியாள் போன்று, தம்முஸ் ஒரு கன்னித்தாய்க்கு  (அதுவும் இஷ்தார் தெய்வம் தான்)  மகனாகப் பிறக்கிறார்.   இஷ்தார்-தம்முஸ் வழிபாடு ஈராக்குடன் மட்டும் நின்று விடவில்லை. சிரியா, ஜெருசலேம் வரை பரவியிருந்தது. பாபிலோனியாவில் இருந்து விடுதலையாகி ஜெருசலேம் வந்த யூதர்கள், அங்கேயும் தம்முஸ்-இஷ்தார் தெய்வங்களை வழிபட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. ஹீபுரு மொழியில் தமுசுக்கு "பக்குஸ்" (அழுபவர்களின் கடவுள் என்ற அர்த்தம்) என்று பெயரிட்டிருந்தனர். கிரேக்கர்கள் தமது மொழியில், தம்முசை அடோனிஸ் என்றும், இஷ்தாரை அப்ரோடித் என்றும் பெயரிட்டார்கள். அதே போன்று, இஷ்தாரின் பெயரும் மாரி என்று மாறியிருக்கலாம். இன்றைய சிரியாவில், மாரி என்ற பெயரில் பண்டைய நகரம் ஒன்றிருந்தது. (Mari, Syria, http://en.wikipedia.org/wiki/Mari,_Syria )  அந்த நகரத்தில் இஷ்தார் தெய்வத்திற்கு மிகப்பெரிய கோயில் கட்டப் பட்டிருந்தது. மேலும், மாரி நகர பெண் தெய்வம், உயிர்களின் பிறப்புக்கு காரணமான தாய்த் தெய்வமாக வழிபடப் பட்டு வந்தது. மேலும் தம்முஸின் தாயாகவும், மனைவியாகவும் இஷ்தார் குறிப்பிடப் படுவதைப் போன்று, இயேசு கிறிஸ்துவின் தாயாகவும், சிஷ்யையாகவும் (மனைவி என்று ஒரு சுவிஷேசம் கூறுகின்றது.) மரியா என்ற ஒரே பெயரைக் கொண்ட இரண்டு பெண்களைக் குறிப்பிடுவது தற்செயலானதா? 

உலகின் மூத்தகுடி இனங்களான, தமிழர்கள், அரேபியர்கள், ஹீபுருக்கள் எல்லாம், ஒரு காலத்தில் ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்து பிரிந்திருக்க வேண்டும். பண்டைய சுமேரியர்களின் சொற்கள் தமிழ் மொழியில் மட்டுமல்ல, அரபு, ஹீபுரு மொழிகளிலும் காணப்படுகின்றன.  தம்மூஸ் என்பது, அரபு, ஹீபுரு மொழிகளில் ஆடி மாதத்தை குறிக்கும் சொல்லாகும். சுமேரியர்கள், ஹீபுருக்கள், அரேபியர்கள், தமிழர்கள், எல்லோரும் சந்திரக் கலண்டரை பயன்படுத்தி வந்துள்ளனர். (Lunar Calendarhttp://en.wikipedia.org/wiki/Lunar_calendar) அதாவது, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை வருவதைக் கணிப்பிட்டு மாதங்களை உருவாக்கினார்கள். எமது முன்னோர்களான சுமேரியர்கள், ஒரு வருடத்திற்கு 12 மாதங்களையும், 365 நாட்களையும் சரியாகக் கணித்து வைத்திருந்தார்கள். ஐரோப்பியர்கள் சூரியக் கலண்டரை பயன்படுத்தியதால், அவர்களின் மாதத்தின் நடுப்பகுதியில் சுமேரியரின் மாதம் தொடங்குகின்றது. சுமேரியரின் நாட்காட்டியை பின்பற்றித் தான், தமிழர்கள் சித்திரை 15 அன்று, புது வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட அதே சித்திரை மாத காலத்தில், சுமேரியர்கள் "அகிது" என்ற பெயரில் புதுவருடப் பிறப்பைக் கொண்டாடினார்கள். அன்றைய தினம், பண்டைய சுமேரியாவில் அறுவடைக் காலமாகும். சுமேரியர்களின் நாட்காட்டியின் படி, நான்காவது மாதமான ஆடி மாதமே, தம்முஸ் தெய்வத்தின் மரணமும், உயிர்த்தெழுதலும் நிகழ்ந்த மாதமாகும். ஐரோப்பியரின் நாட்காட்டியில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறியப் பட்டதும், உயிர்த்தெழுந்ததும்  நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் வருகின்றது. எல்லாமே தற்செயலாக நடந்திருக்க முடியுமா?

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம் _____________________________________________________________________ உசாத்துணை நூல்கள்: 
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton

7 comments:

harigaran said...

பிரமணர்கள் ஆடியில் திருமணம் செய்கின்றனரே,அவர்கள் தமிழர் இல்லையா?

கலையரசன் said...

ஆதியில் இருந்த பிராமணர்கள் தமிழர்கள் அல்லர். அவர்களது பூர்வீகம் சைபீரியா (ரஷ்யா), அல்லது மத்திய ஆசியா. ஆனால், இன்றுள்ள பிராமணர்களில் பெரும்பாலானோர் இந்தியத் திராவிடர்களுடன் ஒன்று கலந்துள்ளனர். இருப்பினும் தமது மூதாதையரின் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனார்.

ஹரிஹரன் said...

//தமிழர்கள் சித்திரை 15 அன்று, புது வருடப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட அதே சித்திரை மாத காலத்தில், சுமேரியர்கள் "அகிது" என்ற பெயரில் புதுவருடப் பிறப்பைக் கொண்டாடினார்கள். அன்றைய தினம், பண்டைய சுமேரியாவில் அறுவடைக் காலமாகு//

ஜனவரி 15 ம்தேதி யை சொல்கிரீர்களா? ஏனென்றால் சித்திரை 1 ம்தேதி அல்லது தை 1 ம்தேதி யா? என பாடாஇ படுகிறது.

கலையரசன் said...

சித்திரை முதலாம் தேதி. சுமேரியர்களின் மாதம், மார்ச், ஏப்ரலில் வரும்.

sindra said...

Very nice..

Priya said...

If you google for Mother and Child worship or Mother and Child gods you will come across the god of India and what name Ishtar and tamus goes by in India. That is besides the point. You had mentioned that the story of the flood was recorded by Sumerians first and then by the Hebrews(Jews) and that it was a story adopted from them. The one aspect I would like to point out is that Noah's grandson is Nimrod. Genesis 10:8. You might want to look into some of the key aspects. There is a lot of evidence to denote that Tamil is one of the early languages. The whole of human race did start off from Africa. After Nimrod's desire to establish a great nation even better than God Almighty did the languages split. Read Genesis 11.

Kalaiyarasan said...

தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, பிரியா.