Thursday, September 06, 2012

கியூபாவில் ஜனநாயக தேர்தல்கள் - ஒரு பார்வை


  • கியூபாவில் தேர்தல்கள் நடக்கின்றனவா? 
  • அதுவும் ஜனநாயக தேர்தல்? 

கியூபா, "கடுமையான அடக்குமுறை கொண்ட சர்வாதிகார ஆட்சி" நடக்கும் நாடு. அங்கே  சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?  

எங்களது சிந்தனை மேற்கத்திய போதனைகள் ஆக்கிரமித்துள்ளதால், இது போன்ற கேள்விகள் எழுவது சகஜம்.  ஜனநாயகம் என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? இந்த வார்த்தைகளை கேட்டவுடன், எல்லோருக்கும் "பல கட்சிகள் கலந்து கொள்ளும் தேர்தல்கள்" தான் நினைவுக்கு வரும்.

நாங்கள் ஜனநாயக நாடுகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் நாடுகளில், புராதன காலத்தில் இருந்தே பல கட்சி தேர்தல்கள் நடத்தப் படுகின்றனவா? இல்லை. 20 ம் நூற்றாண்டிலிருந்து தான் இந்த முறை நடைமுறைக்கு வந்தது. 19 ம் நூற்றாண்டு வரையில், அநேகமாக எல்லா "ஜனநாயக" நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சி நிலவியது.

சில சமயம், இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. உதாரணத்திற்கு, அமெரிக்கா, பிரிட்டன். ஆனால், அந்த இரு கட்சிகளும் மேல்தட்டு வர்க்க பிரதிகளுக்கான கட்சிகளாக, அதாவது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிரிவுகளாக இருந்துள்ளன.  மேலும், தேர்தலில் வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், ஒரு நாட்டில் சிறுபான்மையாக உள்ள, மேட்டுக்குடியும், மத்தியதர வர்க்கமும் மட்டுமே அந்த தேர்தல்களில் பங்குபற்றினார்கள். பெரும்பான்மை மக்களுக்கு வாக்குரிமையே கிடையாது. 20 ம் நூற்றாண்டிலும், நிலைமை பெரிதாக மாறி விடவில்லை. அனைத்து பிரஜைகளுக்கும் வாக்குரிமை கிடைத்தது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு கை நிறையப் பணம் தேவை. ஒரு வேட்பாளர் எந்தளவு பணத்தை வீசுகிறாரோ, அந்தளவு வெற்றி வாய்ப்பு அதிகம். 

கியூபாவில் தேர்தல்கள் நடத்தப்படும் முறையை பார்ப்பதற்கு முன்னர், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி ( comités de defensa de la revolución ) பற்றி அறிந்து கொள்வது அவசியம். 28 .09 .1960 , இந்தக் கமிட்டி உருவாக்கப் பட்டது. அப்போது தான் நடந்து முடிந்திருந்த, "பன்றி வளைகுடா" படையெடுப்புக்குப் பின்னர், மக்கள் படை ஒன்றை அமைக்க வேண்டிய தேவையை அரசு உணர்ந்தது. இனிமேலும், அமெரிக்காவில் இருந்து படையெடுப்பு நடந்தால், அதனை முறியடிப்பதற்காக அந்தப் படை அமைக்கப் பட்டது. 

இந்த மக்கள் படையை சாதாரண துணைப்படையாக கருத முடியாது. ஏற்கனவே, கியூப இராணுவம், அதற்கான துணைப்படைகள் எல்லாம் இருக்கின்றன. ஆகவே, புரட்சியை பாதுகாக்கும் கமிட்டியின் நோக்கம், யுத்தம் செய்வது மட்டுமல்ல. அது பல அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக் கமிட்டியில் அங்கம் வகிக்கும் எல்லோரும் சாதாரண உழைக்கும் மக்கள். சமூகத்தில் பலதரப் பட்ட தொழில்களை செய்பவர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என்று பலதரப் பட்ட மக்கள். கமிட்டியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகளாவன: குறைந்தது 14 வயது, சுய விருப்புடன் சேர வேண்டும், புரட்சியை பாதுகாக்க வேண்டும்.

இன்று கியூபாவில், குறைந்தது 8.000.000  பேராவது இந்த கமிட்டி உறுப்பினராக உள்ளனர். கியூபாவின் மொத்த சனத்தொகை 11 மில்லியன். 14 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளில், 93 % மானோர் கமிட்டியில் பங்குபற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை படிப்படியான வளர்ச்சி காரணமாக ஏற்பட்டது.  கடந்த பல தசாப்தங்களாக உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டு வருகின்றனர். யாருமே கட்டாயப் படுத்தப் படுவதில்லை. 

இன்றைக்கும் அரசியலில் எந்த வித ஆர்வமும் இல்லாத ஆயிரக் கணக்கான கியூபர்கள், கமிட்டிப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு, மாதமொரு தடவை, ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று, இராணுவ பயிற்சி வழங்கப் படும்.  இராணுவ பயிற்சியை பூர்த்தி செய்த கமிட்டி உறுப்புனர் ஒவ்வொருவருக்கும் ஒரு ரைபிள் துப்பாக்கி வழங்கப் படும். அவர்கள் அந்த ஆயுதங்களை தமது வீடுகளில் வைத்திருக்கலாம். கியூபாவில் இலட்சக் கணக்கான சிறு ஆயுதங்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. 

ஆயுதங்கள் வைத்திருப்பதால், கமிட்டி உறுப்பினர்கள் அதிகாரன தோரணையுடன் நடந்து கொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். ஏனெனில், இராணுவப் பயிற்சியானது, பாதுகாப்பு கமிட்டியின் பல கடமைகளில் ஒன்றாகும். வேறு சில பணிகளைப் பற்றிக் கேள்விப் பட்டால், நமது மத்தியதர வர்க்க நண்பர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். 

சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது, அவர்களின் கடமைகளில் ஒன்று. கிராமங்கள், நகரங்கள் தோறும் வீசப்படும் வெறுமையான போத்தல்கள், டின்கள், மற்றும் குப்பையில் போடப்பட்ட காகிதம், அலுமினியம், இரும்பு போன்றனவற்றை சேகரித்துக் கொடுக்க வேண்டும்.  தெருக்களை, பொது இடங்களை கூட்டிப் பெருக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

பத்து வருடங்ககளுக்கு முன்னர், டெங்குக் காய்ச்சல் பரவியதால், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை கண்டுபிடித்து துப்பரவாக்கினார்கள். விரைவிலேயே டெங்கு காய்ச்சலுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப் பட்டு விட்டதால், அந்த நோய் கியூபாவை விட்டே விரட்டப் பட்டது. 

ஒரு ஏழை நாடாக இருந்தாலும், மிகவும் சுத்தமாக காணப்படுவதாக, கியூபா செல்லும் உல்லாசப்பயணிகள்  பாராட்டுகின்றனர்.  சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மரம் நடுகைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும். ஒவ்வொரு கமிட்டியும், தாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் கிராமம், நகரத்தில் குறிப்பிட்டளவு மரக் கன்றுகளை நட வேண்டும். மேலும், கமிட்டி உறுப்பினர்கள், தேவைப்படும் பொழுது இரத்த தானம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ மனைகளுக்கு இரத்தம் தேவைப் படும் பொழுதெல்லாம், கமிட்டியை தொடர்பு கொள்ளும்.

கியூபாவில் அதிகளவு மக்கள் இரத்த தானம் செய்வதாக, உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இரத்த தானம் செய்பவர் சுயவிருப்புடன் முன்வர வேண்டும் என்பது மட்டுமல்ல, அதற்காக காசு கிடைக்காது. ஏனெனில், ஒரு சக மனிதனுக்கு ஆபத்துக் காலத்தில் உதவும் மனிதநேயமாக கருதப்படுகின்றது. மனிதநேயத்தை பணத்தால் விலை பேச முடியாது. 

கியூபாவில் நடக்கும் தேர்தல்களில், புரட்சியை பாதுகாக்கும் கமிட்டியின் பங்களிப்பு இன்றியமையாதது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயிப்பதில்லை! அது சட்டத்தால் தடுக்கப் பட்டுள்ளது. இதன் அர்த்தம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்பதல்ல. தேர்தலில் பங்குபற்றும் அனைவரும் கட்சி உறுப்பினரல்ல. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், கட்சியை சேராத சுயேச்சை வேட்பாளரும் தேர்தலில் பங்குபற்றலாம். எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப் படும்.  உள்ளூராட்சி மட்டத்தில் மட்டுமல்ல, பாராளுமன்ற தேர்தல்களிலும் அது தான் நிலைமை. 

எது எப்படி இருப்பினும், பெரும்பாலான வேட்பாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்கின்றனர். (இவர்கள் ஏற்கனவே கட்சிக்குள் நடந்த உட்கட்சித் தேர்தலில் தெரிவானவர்கள். கட்சித் தேர்தலும், பொதுத் தேர்தலும் வேறு வேறு) கம்யூனிஸ்ட் கட்சி தவிர, வேறு கட்சிகள் எதுவும் அந்த நாட்டில் இல்லை என்பதும் உண்மை தான். ஆனால், குறிப்பிட்டளவு சுயேச்சை வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர். 

ஒரு வேட்பாளர் கட்சி சார்ந்தவரா, இல்லையா என்பது வாக்காளர்களுக்கு முக்கியமில்லை. அனைத்து வேட்பாளர்களையும் பாதுகாப்புக் கமிட்டி தெரிவு செய்கின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுக் கட்டாக பணம் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பாதுகாப்புக் கமிட்டி, வேட்பாளர்களின் பட்டியலை தொகுப்பது மட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தேதியையும் தீர்மானிக்கும். 

தேர்தல் நடப்பதற்கு முன்னர், ஒவ்வொரு வேட்பாளரும் பிரச்சாரம் செய்வதற்கு சம அளவிலான நேரம் ஒதுக்கப் படும். ஒவ்வொரு வேட்பாளரின் புகைப்படம், அவரைப் பற்றிய சுயசரிதை, மற்றும் அவரது கொள்கை விளக்கமும் கொண்ட சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப்படும். தேர்தலில் பங்குபற்றுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்துவதும் பாதுகாப்புக் கமிட்டியின் கடமை ஆகும். தேர்தல் எதற்கு நடக்கிறது? ஏன் ஓட்டுப் போட வேண்டும்? அதனால் வாக்காளருக்கு கிடைக்கும் பயன் என்ன? போன்ற தகவல்களை வழங்கி, வாக்காளர்களை ஊக்குவிக்கின்றது.

தேர்தலுக்கு முன்னர், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான சந்திப்புகள் ஒழுங்கு படுத்தப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தனது தனித்துவமான கொள்கையை நியாயப் படுத்தி வாதாடலாம். ஆனால், வாக்காளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளூராட்சி அல்லது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் நபர்கள், அதற்குப் பிறகும் நிம்மதியாக ஆசனத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு எதிர்பார்க்கப் படுவார். தனது வாக்குறுதியில் தவறும் உறுப்பினர், மக்களினால் நிராகரிக்கப் படலாம்.

ஒவ்வொரு உள்ளூராட்சி/நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கடமையை சரிவர செய்கிறாரா என்று பார்ப்பதற்காக, மக்களை சந்திக்க வேண்டும். நாடாளுமன்ற அல்லது மாகாண சபை உறுப்பினர்கள், வருடத்திற்கு இரண்டு தடவைகள் மக்களை சந்திக்க வேண்டும். கிராம அல்லது நகர சபை உறுப்பினர்கள், ஒவ்வொரு வாரமும் மக்களுடன் கலந்துரையாட வேண்டும். புரட்சியை பாதுகாக்கும் கமிட்டி, சந்திப்புக்கு வேண்டிய ஒழுங்குகளை செய்து கொடுக்கும். அந்த சந்திப்பில் ஒவ்வொருவரும் தனது குறைகளை தெரிவிக்கலாம். 

கியூபாவில் ஜனநாயக நாடாக வேண்டும் என்று, மேற்கத்திய நாடுகள் ஒவ்வொரு வருடமும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அப்போதெல்லாம் பிடல் காஸ்ட்ரோ பின்வருமாறு கூறுவார்: "நாம் உலகிலேயே சிறந்த ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கிறோம். கியூபாவில் ஜனநாயகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அறிய விரும்புவோர், இங்கே நேரடியாக வந்து பார்க்கலாம்." ஜனநாயகம் பற்றி, காஸ்ட்ரோவின் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள, இந்த இணைய இணைப்பில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்:     

Fidel Castro :: What is a Real Democracy,  http://radicaljournal.com/essays/what_is_a_real_democracy.html


கியூபா பயணக் கட்டுரை கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

3 comments:

சந்தானம் said...

good article

valibar said...

இனிய வேண்டு கோள்....
இயேசுவின் வருகை இதோ மனம் திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்
Place Visit:
http://valibar.blogspot.in/

baappu said...

nice info