Monday, June 25, 2012

சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்


[நாம் கறுப்பர்!
நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா!]


(மூன்றாம் பாகம்)
________________________________________________________________________
சோமாலியா என்ற பெயரைக் கேட்டவுடன் பலர் முகத்தை சுழிப்பார்கள். கடும்போக்கு தமிழினவாதிகள் கூட, பழந்தமிழன் பெருமையை சோமாலியாவுடன் இணைத்துப் பார்க்க விரும்ப மாட்டார்கள். சோமாலியா என்றால், "தினம் தினம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க மக்களின் நாடு," என்ற வல்லாதிக்க பிரச்சார விதிகளுக்கு உட்பட்டு தான், தமிழனின் பெருமை பேசப்படுகின்றது. இதனால் தமிழன், தனது முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க தாயகத்தை மறக்க விரும்புகின்றான். அதற்குப் பதிலாக, "குமரி கண்டம்" என்ற கற்பனையான தாயகத்தை, தானே உருவாக்கிக் கொள்கிறான். "தனது சொந்த தாய் ஏழையாக இருப்பதால்", அவளை "அம்மா" என்று அழைக்க விரும்பாத பிள்ளை, இன்னொரு கற்பனைத் தாயை மனதில் வரித்துக் கொள்வது போன்றது இது. தங்களை ஆப்பிரிக்காவுடன் இனங் காண விரும்பாத தன்மை, தமிழின வாதிகளுக்கு மட்டுமே உரிய குறைபாடு அல்ல. தூய ஆரிய பூர்வீகத்தை புனைவதற்காக, சிங்கள இனவாதிகள் விஜயனின் வருகையுடன் தமது வரலாற்றை தொடங்குகின்றனர். ஒரு காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் மூதாதையர் ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தனர். அவர்களது தாயகம், சஹாரா பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. அங்கிருந்து அரேபியா சென்று, ஈரான் வழியாக இந்தியா வந்து சேர்ந்தார்கள். புராதன ஆப்பிரிக்க-திராவிட இன மக்கள் தங்கி வாழ்ந்த இடங்களில் விட்டுச் சென்ற சாட்சியங்களின் அடிப்படையில், இந்தக் கட்டுரைத் தொடர் எழுதப் படுகின்றது.

தமிழ் மக்களுக்கும், சோமாலிய மக்களுக்கும் பொதுவான கலாச்சார ஒற்றுமைகள் நிறைய உள்ளன. ஊறுகாயுடன் சோறு உண்பது முதல், சாப்பிட்டு விட்டு வெற்றிலை போடுவது வரையில், ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைப் பிடிக்கின்றனர். சில சொற்களும் இந்தியாவை நினைவு படுத்துகின்றன. உதாரணத்திற்கு, பரிஸ் பிலாவ் (பிலாவு அரிசி), பான் (பீடா) என்பன. இந்த ஒற்றுமையை, 1330 ம் ஆண்டில் இருந்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த மொரோக்கோ நாட்டை சேர்ந்த யாத்திரீகர் இபுன் பதூதா, பயணக் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். சோமாலியாவில், மொகாடிஷு அரசரின் விருந்தாளியாக சென்ற இபுன் பதூதா, "ஒரு தட்டில் பாக்கு, வெற்றிலை வைத்துக் கொடுத்து" வரவேற்கப் பட்டார். இந்தியாவில், விருந்தாளிகளை கௌரவிப்பதற்காக பாக்கு, வெற்றிலை கொடுக்கும் பழக்கத்தை இபுன் பதூதா அறிந்து வைத்துள்ளார். அது மட்டுமல்ல, சோமாலியர்களின் உணவுப் பழக்கம் கூட இந்தியர்களை ஒத்திருந்ததை சிலாகித்து பேசுகின்றார். (As soon as he was settled in Mogadishu, the sultan sent him two small welcoming gifts: a plate of betel leaves and areca nuts, and a vial of Damascus rosewater. http://www.saudiaramcoworld.com/issue/200504/the.traveler.ibn.battuta.htm)  தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும் இடையிலான இன்னொரு பொதுவான அம்சம், பாரம்பரிய உடை. ஆண்கள், வேட்டி, சாரம் உடுப்பதும், பெண்கள் சேலை உடுப்பதும், இரண்டு கலாச்சாரங்களுக்கும் பொதுவானது.

இபுன் பதூதா சுற்றுப் பயணம் செய்த காலங்களில், கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரையில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிந்திருந்தது. அதனால் ஏற்பட்ட வர்த்தகத் தொடர்புகளையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், பல உணவுப் பதார்த்தங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகி இருக்க வாய்ப்பில்லை. அவை யாவும், ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயிரிடப் பட்டுக் கொண்டிருந்தன. வெற்றிலை போன்றதொரு இலைவகை, அந்தப் பிராந்தியத்தில் போதைவஸ்தாக பயன்படுத்தப் படுகின்றது. "காட்" (Khat, Qat, http://en.wikipedia.org/wiki/Khat) வெற்றிலையை விட சிறிய இலை வகை தாவரம். ஆனால், காரம் அதிகமானது. அதன் சாறு தரும் போதை, ஒருவரை மயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. காட் இலை சாப்பிடும் பழக்கம், எத்தியோப்பியா, சோமாலியா, யேமன் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அந்தப் பிராந்தியத்தின் சரித்திரக் காலகட்டத்திற்கு முன்பிருந்தே, காட் இலை உமிழும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட இன மக்கள், குடியேறிய நாடுகளில் எல்லாம் வெற்றிலை உமிழும் பழக்கமும் தொடர்ந்து சென்றது. இபுன் பதூதா காலத்தில், "ஆதித் திராவிடரின் இடப்பெயர்வு" பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஆராய்ச்சி செய்யவுமில்லை. அதனால், சோமாலியர்களின், யேமனியர்களின் அரிசி உண்ணும் பழக்கும் கூட, இந்தியாவில் இருந்து சென்றதாக கருதினார்.

தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான காலை உணவுகளில் ஒன்று, "அப்பம்". வட இந்தியாவில் கூட அந்த உணவை கேள்விப் பட்டிருக்க முடியாது. ஆனால், ஆயிரம் மைல்களுப்பால், சோமாலியாவிலும், எத்தியோப்பியாவிலும் வாழும் மக்கள் காலை உணவாக அப்பத்தை உட்கொள்கின்றனர் என்பது வியப்பல்லவா? (injera,http://en.wikipedia.org/wiki/Injera)  தமிழர்களுக்கும், எத்தியோப்பிய, சோமாலிய மக்களுக்கும் இடையிலான, இது போன்ற கலாச்சார ஒற்றுமைகளை அடுக்கிச் சென்றால், அதற்கென தனியாக புத்தகம் எழுத வேண்டி இருக்கும். தமிழ் மொழிக்கும், சோமாலி மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை சிறிது பார்ப்போம்.

சோமாலிய மொழி - தமிழ் மொழி
பரஸ் - பரி (குதிரை)
ப(B)ரிஸ் - அரிசி
ஆப்பா - அப்பா
யரான் - சிறுவன்
ஹிந்டிஸ் - சிந்துதல்
அலோல் - அல்குல் (பெண்குறி)
குன் - உண்

சோமாலிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்கு ஆப்பிரிக்க மொழிகளான, செனகல், புலானி மொழிகளுக்கும் இடையில் கூட சில ஒற்றுமைகள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு: கண், வாய், கல், குட்டி.... இது குறித்து மேலும் அறிய விரும்புவோர் இந்த நூலை வாங்கி வாசிக்கவும். (Africans In The Americas Our Journey Throughout The World: The Long African Journey Throughout The World Our History A Short Stop In The Americas, http://www.amazon.com/Africans-Americas-Journey-Throughout-World/dp/0595302475)

கிழக்கே சோமாலியா முதல், மேற்கே செனகல் வரையிலான ஆப்பிரிக்க மொழிகளுக்கும், தமிழ் மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமையானது, ஒரு அடிப்படை உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. தமிழர்களின் மூதாதையரான ஆதித் திராவிடர்கள், அந்தப் பிராந்தியத்தில் தான் தோன்றி இருக்க வேண்டும். அதாவது, இன்று சஹாரா பாலைவனம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் செழிப்பான மண் வளம் கொண்ட பூமியாக இருந்துள்ளது. அங்கு பிற ஆப்பிரிக்க பகுதிகளை விட, நாகரீகம் அடைந்த மக்கள் கூட்டம் வாழ்ந்து வந்தது. பூகோள வெப்பம் அதிகரித்த காரணத்தால், சஹாரா பாலைவனம் விரிவடைந்து கொண்டு சென்ற காலத்தில், அவர்களது வாழ்விடங்களும் மண்ணுக்குள் புதையுண்டு போயின. இதனால் அடிக்கடி இடப்பெயர்வுக்கு ஆளான மக்கள், முதலில் அரேபிய தீபகற்பத்திற்கும், பின்னர் ஆசியாவுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இன்று இந்தப் பிராந்தியத்தில் பேசப்படும் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை அதற்கு சாட்சியம். ஏற்கனவே வட ஆப்பிரிக்காவின் துவாரக் (பேர்பர்) பழங்குடி இன மக்கள் பேசும் மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். (பார்க்க :ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.no/2012/05/blog-post_21.html) இன்றைய சூடானில், ஒரு காலத்தில் அங்கிருந்த கறுப்பின மக்களின் ராஜ்யமான நுபியாவின் அழிவுற்ற நகரங்களை இன்றும் காணலாம். இன்று அவை, மனிதர்கள் வாழ முடியாத பாலைவனமாக காணப்படுகின்றன. நுபிய ராஜ்யத்தில் வாழ்ந்த மக்களை, கூஷி இனத்தவர்கள் என்று அழைப்பர். அவர்கள் பேசிய கூஷி மொழி இன்றைக்கு அழிந்து விட்டது.

பண்டைய எகிப்திய சாம்ராஜ்யமும், பண்டைய நுபியாவும் அயல் நாடுகள். இரண்டுக்கும் இடையில் நிறைய கலாச்சார பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரச நிர்வாகம், மதம், கட்டிடக் கலை என்பன மட்டுமல்ல, மொழி கூட ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டுக் காணப் படுகின்றது. உதாரணத்திற்கு: பண்டைய எகிப்திய "அனி" என்ற சொல்லை எடுத்து ஒப்பிட்டுப் பார்ப்போம். கூஷி மொழியிலும் "அனி", சோமாலிய மொழியில் "மான்", தமிழ் மொழியில் "நான்"!
இந்த மொழிகளை ஆராய்ந்து கொண்டே போனால், இது போன்ற நிறைய ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். ஆகவே, தமிழர்களுக்கும், சோமாலியர்களுக்கும், எகிப்து அல்லது நுபியா பொதுவான தாயகமாக இருந்திருக்க வேண்டும். புராணக் கதைகள், மத நம்பிக்கைகள் கொண்டும் இந்தத் தொடர்பை விளக்கலாம். அதற்கு, இன்றைய சோமாலிய இனத்தவர்கள் அதிகம் உதவப் போவதில்லை. ஏனெனில், பிற்காலத்தில் நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக மாறி விட்ட சோமாலிய மக்கள், தங்களது பாரம்பரிய மத நம்பிக்கைகளை மறந்து விட்டனர். இன்றைய சோமாலிய மொழியில் அரைவாசியாவது அரபுச் சொற்களின் கலப்பு காணப்படுகின்றது. அதனால், "தமது மொழியானது, இஸ்லாமிய மதத்தோடு சேர்ந்து இறக்குமதியான அரபி மொழிப் பாதிப்பால் புதிதாக உருவானது" என்று, சோமாலிய மக்களே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரபி, ஹீபுரு, மற்றும் இயேசு கிறிஸ்து பேசிய அரேமிய மொழி என்பன, செமிட்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இந்தத் தகவல் உலகம் முழுவதும் தெரிந்தளவுக்கு, ஆப்பிரிக்க செமிட்டிக் மொழிகள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. பிற்காலத்தில், செங்கடலை கறுப்பின ஆப்பிரிக்காவின் எல்லையாக வகுப்பதற்காக, மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய பிழையான படம் ஒன்று காட்டப் பட்டது. இன்றைக்கும் நாங்கள் அந்த பிழையான உலக வரைபடத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், அரபி, ஹீபுரு, அரமிக் மொழிகளை பேசும் மக்கள் "வெள்ளை இனத்தவர்கள்" என்ற இனவாதக் கருத்துகளை பரப்புவதாகும். ஆனால், ஒரு காலத்தில், இவை எல்லாம் கறுப்பின மக்களின் மொழிகளாக இருந்துள்ளன. இந்திய உபகண்டத்திற்குள் வெள்ளை நிற ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளையும் ஆக்கிரமித்தார்கள். இந்திய ஆரியர்கள், திராவிடர்களின் பிராமி மொழியை தமதாக்கி, சமஸ்கிருதம் என்ற புதிய மொழியை உருவாக்கினார்கள். அதே போன்று, அரேபிய தீபகற்பத்திற்குள் நுழைந்த வெள்ளைநிற ஆரியர்கள், உள்ளூர் மக்கள் பேசிய, ஹீபுரு, அரபி, அராமி ஆகிய மொழிகளை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். பின்னர், அந்த மொழிகளை செழுமைப் படுத்தி வளர்த்தெடுத்தார்கள்.

எத்தியோப்பியா/எரித்திரியாவில் பேசப்படும் அம்ஹாரி மொழி, சோமாலி மொழி என்பன, செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். ஆனால், அவர்களின் மொழிகள் பிற்காலத்தில், ஹீபுரு, அரபி மொழிகளின் செல்வாக்குக்கு உட்பட்டது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், யூத மதமும், கிறிஸ்தவ மதமும் அபிசீனியாவில் (இன்றைய எத்தியோப்பியா) பரவின. சில நூறாண்டுகளுக்குப் பின்னர் இஸ்லாமிய மதம், எத்தியோப்பியாவிலும், சோமாலியாவிலும் பரவியது. அதனால், அந்தப் பிராந்திய மக்கள் புதிய நாகரீகங்களை பின்பற்றத் தொடங்கினார்கள். அவர்கள் பேசிய மொழிகளும் மாற்றமடைந்தன. கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத தாக்கத்தின் காரணமாக, தமது மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான கிளை மொழிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். அதாவது, பிற்காலத்தில் உருவான மதங்களின் பாதிப்பு காரணமாக, மக்கள் தமது பூர்வீகத்தையே மறந்து விடுகின்றனர். எந்த மதமும், தான் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் திரளை நூறு சதவீதம் மாற்றுவதில் வெற்றி பெறவில்லை. எங்காவது ஒரு மூலையில், சில ஆயிரம் பேராவது பழைய மத நம்பிக்கைகளை பின்பற்றுவார்கள். அந்த நூலிழையை பிடித்துச் சென்று தான், நாம் அந்த மக்களின் வேர்களைத் தேட முடியும்.

தமிழர்களின், அதாவது ஆதி திராவிடர்களின் தாயகமான, வட-கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்கள், மத நம்பிக்கையிலும் வளர்ச்சியடைந்த தத்துவத்தைக் கொண்டிருந்தனர். யூதர்களின் தீர்க்கதரிசி மோசஸ் யூத மதத்தை தோற்றுவிக்கும் முன்னர், உலகில் எங்குமே ஓரிறை வழிபாடு இருக்கவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும், "ஒரே கடவுள்" கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இந்த மூன்று மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே, ஆப்பிரிக்காவில் ஒரே கடவுளை வழிபடும் மதங்கள் இருந்துள்ளன. இப்பொழுதும் இருக்கிறது. மோசஸ் யார்? எகிப்திய பரோ மன்னனின் அரண்மனையில் வளர்ந்த, ஒரு கறுப்பின தீர்க்கதரிசி அல்லவா? "கடவுள்" என்ற தமிழ்ச் சொல் எங்கே தோன்றியது? அது ஒரு ஆப்பிரிக்க கடவுளின் பெயரா?

(தொடரும்)

19 comments:

கவி அழகன் said...

அழகான படைப்பு

saajith said...

//யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மூன்றும், "ஒரே கடவுள்" கொள்கையை பின்பற்றுவதாக மார்தட்டிக் கொள்கின்றன. ஆனால், உலக வரலாற்றில் இந்த மூன்று மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே, ஆப்பிரிக்காவில் ஒரே கடவுளை வழிபடும் மதங்கள் இருந்துள்ளன//

இது நீங்கள் இஸ்லாத்தை பிழையாக புரிந்துகொள்ளும் இடம். இஸ்லாம் என்பது முஹம்மது நபியின் காலத்தில் இருந்து உருவானதல்ல. முஹம்மது நபி இஸ்லாத்தின் இறுதி இறை தூதர். முதல் இறைதூதரும் முதல் மனிதருமான ஆதம் நபியின் காலத்தில் இருந்தே இஸ்லாம் மார்க்கம் போதிக்கபடுகிறது. யூத கிறிஸ்தவ மதங்களும் முஹம்மது நபிக்கு முன்னர் இஸ்லாம் மதமாகவே இருந்தது. யூத கிறிஸ்தவர்கள் என்று இன்று அழைகப்படுபவர்களின் இறைதூதர்களும் இஸ்லாத்தையே போதித்தனர். அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் இன்று அவற்றின் தூய வடிவில் இல்லாததால் அல்-குர்ஆன் இறுதி வேதமானது.

therealfacts2u said...

//யூத கிறிஸ்தவ மதங்களும் முஹம்மது நபிக்கு முன்னர் இஸ்லாம் மதமாகவே இருந்தது.//
என்ன ஆதாரம்?

//அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் இன்று அவற்றின் தூய வடிவில் இல்லாததால் அல்-குர்ஆன் இறுதி வேதமானது.//
அல்-குர்ஆன் எப்படி தூய வேதமாகலாம்? அது ஒரு 3வது நகல்தானே?

செங்கதிரோன் said...

//இந்திய உபகண்டத்திற்குள் வெள்ளை நிற ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளையும் ஆக்கிரமித்தார்கள்//

வெள்ளை நிற ஆரியர்கள் என்பவர்கள் யார் அவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள் என்று சற்று விரிவாக விளக்க முடியுமா

கலையரசன் said...

//வெள்ளை நிற ஆரியர்கள் என்பவர்கள் யார் அவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள் என்று சற்று விரிவாக விளக்க முடியுமா //


மத்திய ஆசியா, அல்லது இன்றைய ரஷ்யாவின் தெற்கே அமைந்துள்ள கொகேசிய மலைப்பகுதியில் தோன்றி, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து சென்றார்கள்.

செங்கதிரோன் said...

பதிலளித்ததற்கு நன்றி கலை.. ஆனாலும் ஆரியர்கள் சரியாக எந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தனர் எனபதற்கு சரியான ஆதாரம் ஏதேனும் உள்ளதா மற்றும் தமிழ் இலக்கியங்களில் ஆரியர்கள் வருகை பதிவு செய்யப்பட்டிருக்கின்றதா

கலையரசன் said...

ஆரியரின் வருகை பற்றி ஏற்கனவே பல நூல்கள் வெளிவந்துள்ளன. ரிக்வேதம் எழுதப்பட்ட காலம் என்று நினைக்கிறார்கள். ஆனால், பிராமணீயம், இந்து மதம், சமஸ்கிருதம் போன்ற கலாச்சாரக் கூறுகள் ஆரியர்களுடையவை என்று தான் பலர் நம்புகின்றனர். அது எந்தளவு சரி என்பது இன்னும் நிரூபிக்கப் படவில்லை. தமிழ் இலக்கியமான புறநானூறு ஆரியருடன் நடந்த போர்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இது குறித்து நான் இன்னும் நிறைய ஆராய வேண்டியுள்ளது.

செங்கதிரோன் said...

மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி.. தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இது போன்ற செய்திகளை திட்டமிட்டு மறைக்கின்றன.

Madhu said...

அருமையான பதிவு. பிலிப்பின்சில் உள்ள விசயா மாகாணத்துக்கு சென்ற போது பல ஆச்சரியங்கள். பல வார்த்தைகள் தமிழுடன் ஒத்திருந்தது. உதாரனத்திற்க்கு , கா உண் - உணவு உண்ணுதல் , மருங்கா - முருங்கை , மணி - வேர்க்கடலை, மங்கா - மாங்கா..இப்படி நிறைய.இது குறித்த ஆதாரங்கள்-ஆராய்சிகள் தங்களிடம் ஏதும் இருக்கிறதா.

கலையரசன் said...

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, மது.
ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளின் ஆய்வு முடிந்த பின்னர், பிலிப்பைன்ஸ் போன்ற தூர கிழக்காசிய நாடுகளைப் பற்றிய ஆய்வொன்றை செய்யவிருக்கிறேன். அதற்கான தரவுகளை இப்போதிருந்தே சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த தொடரில் இது போன்ற தகவல்கள் பல கிடைக்கலாம்.

Vijithan said...

தமிழ் மொழிக்கும் பல மொழிகளிற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன என்பது உன்மைதான்.உதாரண்மாக ஜப்பானிய கொரிய தாய்லாந் நாட்டு மொழிகளை குறிப்பிடலாம்.இவை தவிர வேறும் பல ஒற்றுமைகள் உள்ளன.ஆனால் இவர்களிற்கும் எமக்கும்
உருவ உற்றுமை இல்லை.ஆகவே இவை வியாபாரத் தொடர்புகளால் உருவாகியிருக்கலாம்.ஆரம்ப காலம் தொட்டே தமிழன் வியாபாரத் தொடர்புகளை கடல் மார்க்கமாகக் கொண்டிருந்தான்.இது போன்றதொரு தொடர்பே ஆபிரிக்க நாடுகளுடனும் உருவாகியுருக்கலாம்.தமிழர்கள் வீரர்கள் சிறந்த உழைப்பாளிகள்.ஆனால் சோமாலியர்களோ வெறும் சோம்பேறிகள்.இது அவர்கள் புலம் பெயர்ந்து வாழுகினற நாடுகளிலேயே கண் கூடாக பார்க்க முடிகின்றது.வர்த்தக தொடர்புகள் மூலமாக கலந்திருக்கலாம். ஆனால் தமிழனின் பூர்வீகம் ஆபிரிக்கா கிடையாது.

Suji Sittampalam said...

சோமாலிய மொழியில் பாவிக்கப்படும் சொற்களுக்கு இணைவான சொற்கள் தமிழில் இருப்பதால், தமிழர் சோமாலியாவிலிருந்து வந்தது என நீங்கள் சொல்வதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.
Wikipediaவை ஆதாரமாகக் கொள்வதை நான் விரும்புவதில்லை.
இருப்பினும் நானிருக்கும் நோர்வேயில், ஆய்வுக்கான தமிழ்ப்புராதன நூல்களை பெறுவது கடினமாக இருப்பதாலும், நீங்களே Wikipediaவை ஆதாரமாக வைத்து இந்த ஆய்வை நடாத்தியதாலும். இங்கே நானும் அதே Wikipediaவை துணைக்கழைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Somali_language
இங்கே சோமாலி மொழி எப்போ பிறந்தது எனக்கூறியிருக்கிறார்கள். அது 19ம் நூற்றாண்டாகும்.
ஆனால், தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் 1st century BC, என அடையாளம் காணப்படுகிறதாம்.
http://en.wikipedia.org/wiki/Tamil_language
முதலாவது நூற்றாண்டிலேயே தமிழில் ஒரு காப்பியம்; கவிதை அல்லது செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கிறதென்றால், தமிழ் முதலாவது நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் தோன்றியிருக்க வேண்டும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். Wikipediaவில், தமிழின் தோற்றம் தெரியாது என்றிருக்கிறார்கள். தொல்காப்பியரும், அவருடன் ஏனையோரும் தொல்காப்பியமும் தோன்றியது இந்தியாவில், இன்று எதைத் தமிழகம் என்கிறோமோ அங்கேதான். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.
Rev. G.U. Pope என்பவர் இங்கிலாந்திலிருந்து 1839ம் ஆண்டு இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு மதம் பரப்ப எண்ணி வந்தவர். அவரது கண்களில்ப் பட்டது, காலத்தால் அழியாத வாழ்க்கைக்கு வழிகாட்டியான திருக்குறள். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதைவிட இன்னும் பல அரும் பெரும் தமிழ் நூல்களோடு திருவாசகத்தையும் மொழி பெயர்த்தார்.
இவரது கல்லறையில், 'ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.' என பொறிக்குமாறு வேண்டிக்கொண்டாராம். இன்றும் அவரது கல்லறையில் அந்த வாசகம் காணப்படுகிறதாம். இப்படியானவற்றைத்தான் நான் ஆதாரம் எனக் கொள்வது.
இப்படியான பழைமையும் புராதன சரித்திரமும் கொண்டதுதான் தமிழும் தமிழினமும். 18ம் 19ம் நூற்றாண்டில் தோன்றிய சோமாலிய மொழியில் காணப்படும் சொற்களை வைத்து நாம் சோமாலிய வாரிசுகள் என்பது ஏற்க முடியத ஒரு ஆழமில்லாத ஆய்வாகும்.

தமிழில் "திரைகடலோடியும் திரவியம் தேடு" என ஒரு பழமொழி உள்ளது. அதற்கேற்ப இந்தியத் தமிழர் நாலா புறமும் சென்றிருக்கலாம். அதே போல ஆபிரிக்காவுக்கும் தமிழன் வந்ததால் தமிழ்க் கலாச்சாரத்தோடு தமிழ்மொழியும் அங்கே கலந்திருக்கின்றன.
அங்கே சென்ற இஸ்லாமிய யாத்திரிகர் 14ம் நூற்றாண்டில்த்தானே சென்றிருக்கிறார். இந்தியாவில் தமிழில் தொல்காப்பியமே முதலாம் நூற்றாண்டில் வெளிவந்துவிட்டது.

இப்படியான ஆதாரங்கள் விரல் நுனியிலேயே இருக்கும் போது. ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத வெண்டும் என்பதற்காக தவறுகளை அள்ளியிறைத்திருக்க வேண்டாம்.

நான் சோமாலியர்களோடு ஏறத்தாழ 20 வருடங்களாக வாழ்ந்துவருகிறேன். அவர்களிடம் நான் கண்ட பல தவிர்க்கப்பட வேண்டியவற்றுள் முக்கியமானதும் முறைகேடானதுமானது, உணவுண்ணும் முறை. தமிழர்களது உணவு வழக்கத்தோடு சோமாலியரின் உணவு வழக்கத்தை ஒப்பீடு செய்து பார்க்கும் நீங்கள்; நிட்சயமாக இதையும் கவனித்திருப்பீர்கள். தமிழர்களைப் போலவே அவர்களும் சோறும் கறியும் உண்டாலும். கறியில்க் கறியின் சுவை இருக்காது. அதாவது தமிழர் ஆக்கும் கறி போல இருக்காது. அது போகட்டும். இந்தியச் சிறுகுழந்தை கூட வெகு அழகாக சோற்றையும் கறியையும் விரல் நுனிகளால் பிசைந்து அழகாக சாப்பிடும்.
ஆனால், சோமாலியர் சாப்பிடுவதைப் பார்க்கவே முடியாமலிருக்கும்.
தோசை மா கரைப்பது போல மணிக்கட்டு வரை சாதக் கலவை சாப்பாட்டுத் தட்டிலிருந்து வந்துவிடும். முழுக் கையினாலும் சாதத்தைப் பிசைந்து கொண்டிருப்பார்கள். அதைவிட சகிக்க முடியாதது, சாதத்தை வாயில் வைக்கும் போது, மூக்கிலிருந்து நாடி வரையிலும், வாயிலிருந்து இரு கன்னங்கள் வரை சாதப்பருக்கைகளோடு கறியின் கலவை பூசியபடி உண்பார்கள்.
இங்கே நான் கேட்பது இதுதான். தமிழர்கள் உணவுண்பதில், தயாரிப்பதில் எவ்வளவோ முன்னேறியிருக்கிறார்கள். சோமாலியர் ஏன் அப்படி உணவுண்பதில் முன்னேறவில்லை. இதற்கும் பொருளாதரத்திற்கும் சம்பந்தமில்லை.

ஆகவே தயவு செய்து "முழங்காலுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவது." என்பார்களே அதுபோல முடிச்சுப் போடாதேங்கோ.


நாலு சோமாலியரை பார்த்ததும் கட்டுரை எழுத ஆரம்பித்தால், அது தமிழையும் பாதித்து,இழிவு செய்து, தமிழரையும் இழிவுரைத்து, இவ்வளவு தூரம் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியோரையும் இழிவு படுத்துவதாகும்.

கலையரசன் said...

Suji Sittampalam,

நண்பரே, உங்களது பதில் திருப்தியளிப்பதாக இல்லை. உங்கள் மனதில் உள்ள இனவாத உணர்வு காரணமாக, சோமாலியர்களிடம் இருந்து அந்நியப் படும் அவசரம் தான் தெரிகின்றது. உணவுப் பழக்கத்தை நீங்கள் வர்ணிக்கும் முறையே, வர்க்கு வரி, சொல்லுக்கு சொல், இனவாதத் தொனியில் அமைந்துள்ளது. தமிழர்களை ஏதாவது ஒரு ஐரோப்பிய இனத்துடன் ஒப்பிட்டால், அல்லது யூதர்களுடன் ஒப்பிட்டால், உங்களுக்கு அது "மொட்டந் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக" தெரிவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு ஆப்பிரிக்க இனத்துடன் ஒப்பிட்டால் மட்டும், உங்கள் மனதில் மறைந்திருக்கும் இனவாத உணர்வு அதற்கு தடை போடுகின்றது.

சோமாலிய மொழி, 19 ம் நூற்றாண்டில் உருவானதாக, நீங்கள் கொடுத்த விக்கிபீடியா இணைப்பில் எழுதி இருக்கவில்லை. அது உங்களது கற்பனையாகத் தெரிகின்றது. 19 ம் நூற்றாண்டில் தான், தமிழ் மொழிக்கு, தமிழ் என்ற பெயர் வந்ததாகத் தெரிகின்றது. அதற்கு உங்களது கூற்றில் இருந்து ஆதாரத்தைக் காட்டலாம்.
//Rev. G.U. Pope என்பவர் இங்கிலாந்திலிருந்து 1839ம் ஆண்டு இந்தியாவில் தமிழ் நாட்டுக்கு மதம் பரப்ப எண்ணி வந்தவர். அவரது கண்களில்ப் பட்டது, காலத்தால் அழியாத வாழ்க்கைக்கு வழிகாட்டியான திருக்குறள். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதைவிட இன்னும் பல அரும் பெரும் தமிழ் நூல்களோடு திருவாசகத்தையும் மொழி பெயர்த்தார்.
இவரது கல்லறையில், 'ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.' என பொறிக்குமாறு வேண்டிக்கொண்டாராம். இன்றும் அவரது கல்லறையில் அந்த வாசகம் காணப்படுகிறதாம்.// இப்படியானவற்றைத்தான் நான் ஆதாரம் எனக் கொள்வது. அதாவது, ஆங்கிலேயர்களின் காலனிய காலத்திற்குப் பின்னர் தான், தமிழுக்கு தமிழ் என்ற பெயர் பரவலாக பயன்படுத்தப் பட்டது.
நீங்கள் குறிப்பிடும் தொல்காப்பியர் காலத்தில் எல்லாம், தமிழ் என்பது தமிழ் நாட்டில் பேசப் பட்ட பல மொழிகளில் ஒன்றாக இருந்துள்ளது. அநேகமாக, பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியின் (அதன் பெயர் தமிழா என்பது தெரியாது) மேலாதிக்கம் காரணமாக மற்ற தமிழ் மொழிகள் அழிந்து விட்டன.

கலையரசன் said...

Suji Sittampalam,

திரை கடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. உலகில் உள்ள பெரும்பான்மையான இன மக்கள், பல ஆயிரம் வருட காலமாக திரை கடலோடி திரவியம் தேடி வருகின்றார்கள். சோமாலியர்கள் தமிழகம் வந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால், தமிழர்கள் சோமாலியா சென்றிருக்கலாம் என்ற கருதுகோள் ஒரு அப்பட்டமான தமிழ்ப் பேரினவாதம். மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் கூட, உலகில் பல நாடுகள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தன. அதனால், தமிழர்கள் சோமாலியா சென்றிருக்கலாம். அதே மாதிரி, சோமாலியர்கள் தமிழகம் வந்திருக்கலாம்.

மனித சமுதாயம் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தது என்பதை இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை. ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் கூட, ஆப்பிரிக்காவில் இருந்து தான் சென்றனர். அப்படியானால், தமிழர்களின் மூதாதையர் சோமாலியர்கள் என்றால் என்ன தவறு?

அது போகட்டும், நீங்கள் இங்கே மொழியையும், உணவு உண்ணும் பழக்கத்தையும் மட்டுமே குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள். நான் வெற்றிலை போடும் பழக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். ஆண்கள் சாரம் கட்டும் பழக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாததில் வியப்பில்லை.

அது எல்லாவற்றையும் விட, சோமாலியர்கள், தமிழர்களுக்கு இடையிலான உருவ ஒற்றுமை முக்கியமானது. சில நேரம், வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். உங்களது தோற்றம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. சில நேரம், உங்களைப் பார்த்தால் கூட ஒரு சோமாலியர் போன்று தெரியலாம். உங்களது DNA யை எடுத்து, ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களது மூதாதையர் சோமாலியாவில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மை தெரிய வரலாம். மேலும், நீங்கள் இங்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட (தமிழ்) மொழி பேசும் மக்களை தனியான இனமாக கருத முடியாது. பல இனங்களின் கலவை தான் தமிழ் மக்கள். அவர்களில் சோமாலியர்களும் கலந்திருக்கலாம். அதில் எந்த அதிசயமும் இல்லை. அந்த உண்மையை மறுப்பதும், தமிழ் மொழி பேசுவதால் தமிழர்களை தனியான இனமாக வரையறுப்பதும் இனவாதம் ஆகும். அது ஒரு இருபதாம் நூற்றாண்டு அரசியல் சித்தாந்தம்.

தமிழ்த் தேசியம் said...

கலையரசன் உங்களுக்கு என்னதான் பிரச்சினை? நீங்கள் விகிபெடியாவில் இருந்து எடுத்தால் அதற்கு பெயர் "ஆய்"வு அதை மற்றவர்கள் செய்தால் இனவாதமா? அப்படி DNA சோதனை எடுப்பதற்கு முன்பே எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?

Kalaiyarasan said...

தமிழ் தேசியம் உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? நான் எதையும் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கவில்லை. நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. ஒருவர் பேசுவது இனவாதம் என்றால் இனவாதம் என்று தான் சொல்ல வேண்டும். அதை வேறெப்படி அழைக்க முடியும்? இனவாதம் என்பதற்கு உங்களது வரைவிலக்கணம் என்ன? DNA சோதனை ஏற்கனவே பலரிடம் செய்யப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விருமாண்டி என்பவற்றின் DNA, அவர் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபித்தது. இது சம்பந்தமான ஆவணப் படம், "தமிழ் இன உணர்வாளர்கள்" மத்தியில் பிரபலமாக பகிர்ந்து கொள்ளப் பட்டது.

Arun S said...

நண்பரே நன்றி
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை .!உங்கள் கருத்து என்ன ?
http://www.dinamani.com/editorial_articles/article948777.ece?service=print
http://blackrajaa.blogspot.in/2012/05/blog-post_333.html

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு.
இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு
ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால்
பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி
என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில்
இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை
வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது
மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்
என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி பகவதி ராமன்.

silambarasan.n said...

தமிழனை பற்றி நான் ஒரு தமிழனாய் படித்ததில் பெருமை. ஆனால் மனிதன் உணவு இல்லாமல் இறப்பது ஆட்சி அதிகாரம் கெட்டவன் கையில் இருபது தான் காரணம்.
இவன்
செங்கை. சிலம்புர். ந

ruby trading company said...

டேய் வெண்ண நம்முடைய முன்னோர்கள் ஆட்சி செய்த இடங்களில் ஒன்று சோமாலியா அதற்கு பல ஆதாரங்கள் உள்ளன இது தவிர மேலும் பல வெளிநாடுகளை தமிழன் ஆட்சி செய்துள்ளனர் நீர் கூரிய ஆதாரங்கள் அனைத்தும் உண்மைதான் ஆனால் நாம் அங்கு ஆட்சி அமைத்திருந்ததால் தான் நமது அடையாளங்கள் அங்கு உள்ளதே தவிர வேற எந்த காரணமும் இல்லை இனிமேல் இது போன்ற பதிவுகளை நிறுத்திக் கொள்ளுங்கள் தமிழன் பெருமையை கெடுப்பதை நிறுத்திக் கொள்ளவும். மிக மிக கேவலமான கற்பனை பதிவு