Tuesday, February 21, 2012

பட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் !

"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி."
"உணவுப் பொருட்களின் விலையேற்றம்."
"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது."
மேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா? படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.
- "சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி."
- "உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை."
-"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை."

அண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.

உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனித் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.

சிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும்? பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.

2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது! அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 மில்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.

Zembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , "ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், "பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை!" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா?

Zembla தயாரிப்பில் உருவான "HANDEL IN HONGER " (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
HANDEL IN HONGER


Get Microsoft Silverlight
Bekijk de video in andere formaten.

4 comments:

aotspr said...

வருந்துகிறேன்...............

"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

kumar said...

சீ இவர்கள் மனிதர்கள்தானா? மனித இனம் இந்த கேடுகெட்ட
நாகரீகத்தை அடையாமலே இருந்திருக்கலாம்.

ஹேமா said...

மனதிற்க்குக் கஸ்டமாயிருக்கு வாசிக்கவே.எங்கள் நாட்டிலும் இதேநிலை வருமோ என்று பயமாவும் இருக்கு !

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப கஷ்டமா இருக்குயா !