Monday, February 01, 2010

"அகதிகளின் டைட்டானிக்" கப்பலின் சோகக் கதை

(குறிப்பு: 1996 ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். ஐரோப்பியரின் "மனிதாபிமானத்திற்கு" ஓர் எடுத்துக்காட்டு.)

கடைசியில் அந்தக் கப்பல் ஆழ்கடலின் அடியில் கண்டெடுக்கப் பட்ட போது எஞ்சி இருந்தவை, (தெற்காசிய) அகதிகளின் எலும்புக்கூடுகளும், அவர்களின் உடமைகளும் தான். 1996 ம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று இத்தாலிக் கரையை வந்து சேர்ந்த சில அதிர்ஷ்டக்கார அகதிகளே முதன் முதலில் அந்த துயரச் சம்பவத்தை உலகுக்கு அறிவித்தனர்.

இத்தாலி நோக்கி வந்து கொண்டிருந்த அந்தக் கப்பலில், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐரோப்பாவில் அகதி தஞ்சம் கோரும் அல்லது அல்லது வசதியான வாழ்க்கை வாழும் கனவுகளோடு பயணித்தனர். இத்தாலிக் கரையை அண்மிக்கும் பொழுது சில மைல் தொலைவில் நடுக்கடலில் வைத்து 300 க்குமதிகமான கப்பல் பயணிகள் இன்னொரு சிறிய மரக்கப்பலுக்கு மாற்றப்பட்டனர். போக மறுத்தவர்கள் துப்பாக்கி முனையில் ஏற்றப்பட்டனர். பாரந் தாங்காத சிறிய கப்பல் தள்ளாடிய படி, பெரிய கப்பலுடன் மோதிய போது அந்த விபரீதம் நிகழ்ந்தது. உடைந்த கப்பல் 283 பேருடன் ஆழ்கடலின் அடியில் சென்று ஜலசமாதியாகியது. நீந்தத் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே உயிர் தப்பினர்.

ஆனால் உயிர்தப்பியோர் சொன்ன கதைகளை முதலில் யாருமே, குறிப்பாக இத்தாலிய அதிகாரிகள் நம்பவில்லை. இது திருப்பி அனுப்பப்படுவதை தவிர்க்க சொன்ன கட்டுக்கதை என்றனர். கடற்படையினர் தாம் எந்த உயிரற்ற உடலையும் கண்டுபிடிக்கவில்லை என்றனர். இதைதவிர வேறெந்த மீட்புப் பணிகளையும் அரசு முடுக்கி விடவில்லை. காணாமல் போனவர்கள் ஐரோப்பியர்களாக இருந்திருந்தால் அன்று நடந்தது வேறாக இருந்திருக்கும். பெருஞ்செலவில் தேடப் புறப்படும் மீட்புப் படை, உடைந்த கப்பலின் சிறு துண்டை ஆவது கண்டெடுக்காமல் திரும்பியிருக்காது. ஆனால் அகதிக் கப்பலில் இறந்தவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. ஆசியாவை சேர்ந்த விரும்பத்தகாத "பொருளாதார அகதிகள்". ஆகவே இதையிட்டு மேற்கொண்டு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை.

அதே ஆண்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தின் மீது அமெரிக்க விமானம் ஒன்று வெடித்துச் சிதறியது. அமெரிக்க மீட்புப்படை வாரக்கணக்காக இறந்தவர்களின் உடல்களை தேடியது. உலக மக்கள் அனைவரும் (அமெரிக்கர்களுக்கு ஒன்றென்றால், நமக்கும் துக்கம் தானே?) இந்த துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமல்லவா? உலகத் தொலைக்காட்சி CNN மீட்புப் பணி குறித்த செய்திகளை ஒரு மாதம் முழுவதும் ஒளிபரப்பியது. மேற்கத்திய அரசுகள் மட்டுமல்ல, தொடர்பூடக சாதனங்கள் கூட வறிய நாட்டு மக்களை பாரபட்சமாகவே பார்க்கின்றன. நடந்த கப்பல் விபத்தில் தமது பிள்ளைகளை பறிகொடுத்த பாகிஸ்தானிய பெற்றோர், இத்தாலிய அரசுக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், கப்பல் உடைவு சம்பவத்தை தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டார். பொதுவாகவே தஞ்சம் கோரும் அகதிகள் சொல்பவற்றை கட்டுக் கதைகள் என நிராகரிக்கும் மேற்கைரோப்பிய அரசு அதிகாரிகளிடம் இருந்து நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

நீண்ட காலத்திற்கு பின்னர் நிரூபிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் ஜலசமாதி பற்றி இத்தாலியில் எந்தவொரு கட்சியும் வாய் திறக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அரசு இதற்கு பொறுப்பேற்று சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது. ஆனால் பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த வலதுசாரிக் கட்சிகள் வெளிநாட்டவர் எதிர்ப்பை தமது அரசியல் கொலகியாக கொண்டுள்ளன. இந்தக் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் அகதிக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளன.

[உயிர் நிழல் (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் மனிதம். அது தன்பால் சேர்ந்தோருக்கு ஒரு விதமாகவும் ஏனையொருக்கு ஒரு விதமாகவும் அமைந்துள்ளது. இனமானா உணர்வும் இதற்கு முக்கிய காரணமென சொல்லலாம் இல்லையா?

Unknown said...

//
VIKNESHWARAN said...
இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் மனிதம். அது தன்பால் சேர்ந்தோருக்கு ஒரு விதமாகவும் ஏனையொருக்கு ஒரு விதமாகவும் அமைந்துள்ளது. இனமானா உணர்வும் இதற்கு முக்கிய காரணமென சொல்லலாம் இல்லையா?
//

இன உணர்வு இல்லாதவர் யார் தோழா?