"இலங்கையில் 1971 ம் ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து அழித்த ஜேவிபி கிளர்ச்சி!"*
Revolution in the Air, Sixties Radicals turn to Lenin, Mao and Che நூலில் எழுதப் பட்டுள்ள வரலாற்றுக் குறிப்பு.
அந்த காலகட்டத்தில் "எதிரி நாடுகளாக" கருதப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய உலக வல்லரசு நாடுகள், இலங்கையில் ஒரு சோஷலிச புரட்சியை நடத்த கிளம்பிய ஜேவிபி இயக்கத்தை ஒன்று சேர்ந்து ஒடுக்கின. சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.
இந்த புரிதல் தமிழர்களிடம் இருந்திருந்தால் "2009 ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து இனவழிப்பு செய்தான..." என்று சொல்ல வேண்டிய தேவை வந்திருக்காது. இவர்கள் ஒருநாளும் வரலாற்றில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ள மாட்டார்கள்.
1971ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தன.
இந்த வல்லரசுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்தன:
1. இந்தியா எப்போதும் தன்னை இலங்கையின் பாதுகாவலனாக கருதி வந்துள்ளது. அங்கு நடக்கும் அரச கவிழ்ப்பு, மார்க்சிய புரட்சி எல்லாம் இந்தியாவுக்கும் ஆபத்தானது.
2. அமெரிக்காவுக்கு இலங்கையில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்ற வெறி காரணம்.
3. பிரித்தானியாவை பொறுத்தவரையில் வழமையான கம்யூனிச எதிர்ப்புடன், முன்னாள் காலனிய நாடு என்ற கூடுதல் அக்கறை.
4. சோவியத் ரஷ்யா மேற்குலகுடன் முரண்பட விரும்பவில்லை. அதனால் சிறிமாவோ தலைமையிலான சமூக- ஜனநாயக அரசை ஆதரித்தது.
4. சீனாவை பொறுத்தவரையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முக்கியம். அவர்கள் ஜேவிபி கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு நட்பு நாட்டை இழக்க விரும்பவில்லை.
இது குறித்து ஒரு தடவை மலேசியாவை சேர்ந்த ஒரு மாவோயிஸ்டுடன் உரையாடிய பொழுது, "சீனாவின் அன்றைய நிலைப்பாடு தவறு தான்" என்பதை ஒத்துக் கொண்டார். அவரும் ஒரு தமிழர் தான்.
ஒரு காலத்தில் சீனா, இந்தியா ஒன்று சேர்ந்து தம்மை அழித்தார்கள் என்பதற்காக, ஜேவிபி எப்போதும் சீன- இந்திய எதிர்ப்பு வன்மத்துடன் அலையவில்லை. இந்த விஷயத்தில் தமிழ்த் தேசியவாதிகள் ஜேவிபி இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
*நாம் வரலாற்றில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.