Sunday, December 30, 2018

ரோமப் பேரரசில் நடந்த வர்க்கப் போராட்டம்


"இதுவரை இருந்து வரும் சமுதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே." - கார்ல் மார்க்ஸ்

கி.மு. 509 ம் ஆண்டிலிருந்து ரோமாபுரியில், மன்னராட்சிக்கு பதிலாக குடியரசு ஆட்சி முறை வந்தது. உண்மையில் அது ஒரு மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. செனட் சபை எனப்படும் ரோம நாடாளுமன்றத்தில், செனட்டர்கள் எனப்படும் பிரதிநிதிகள் ஆயுட்கால உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் ஒன்று கூடி கொன்சுல் (Consul) எனப்படும் இரண்டு ஆட்சித் தலைவர்களை தெரிவு செய்தனர். இவர்கள் அரசனுக்கு பதிலீடாக இருந்தமை மட்டுமல்லாது, யுத்தப் பிரகடனம் செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர்.

ரோமா நகரில் வாழ்ந்த வசதிபடைத்த பணக்கார குடும்பங்களில் இருந்து தான் செனட்டர்கள் உருவானார்கள். இதே மேட்டுக்குடியினர், தமக்கு கீழே இருந்த நடுத்தர வர்க்க, அடித்தட்டு மக்களுடன் குறிப்பிடத்தக்க தொடர்பைப் பேணி வந்தனர். இது கிலியேன்தலா(Clientela) சமுதாய அமைப்பு என அழைக்கப் பட்டது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக ஒரு மேட்டுக்குடி எஜமானுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, கஷ்ட காலத்தில் நிதியுதவி செய்வது, பிரச்சினைகளில் சட்ட உதவி செய்வது போன்ற பொறுப்புகளை அந்த எஜமான் ஏற்றிருப்பார்.

மேட்டுக்குடி எஜமான் பத்ரோனஸ்(Patrones) என்றும், அவருக்கு கீழ்ப்படிவான குடியானவர்கள் கிலியேன்டேஸ் (Clientes) என்றும் அழைக்கப் பட்டனர். கிலியன்ட்களின் அன்றாட பிரச்சனைகளை கேட்டறிவதற்காக பத்ரோன் அடிக்கடி கூட்டம் கூடுவார். சிலநேரம் அந்தப் பத்ரோன் செனேட் சபை தேர்தலுக்கு போட்டியிட்டால், கிளியன்ட்கள் அவரை ஆதரிக்க வேண்டும். இது நமது காலத்தில், அரை நிலப்பிரபுத்துவ சமுதாயங்களை கொண்ட நாடுகளில் இன்றைக்கும் நடக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிலவுடைமையாளர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு விசுவாசமான குடியானவர்கள் அவருக்கே ஆதரிக்க வேண்டும். அதே மாதிரித் தான், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதும் நடக்கிறது.

ரோமர்களின் பத்ரோன் - கிலியன்ட் உறவு முறை, சிலநேரம் சாதி அமைப்பை ஒத்துள்ளது. சமூகத்தில் ஓரளவு வசதி படைத்த நடுத்தர வர்க்க கிலியன்ட், தனக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு பத்ரோனாக செயற்படலாம். இந்த கட்டுக்கோப்பான அமைப்பின் மூலம், ஏற்றத்தாழ்வான வர்க்கங்களை சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் தங்கியிருக்க வேண்டி இருந்தது. இது ஓரளவு இறுக்கமான சாதிய சமூகத்தை பிரதிபலித்த போதிலும், ஒரு கட்டத்தில் வர்க்க முரண்பாடுகள் கொந்தளித்து கொதி நிலைக்கு வந்தது.

பண்டைய ரோம சமுதாயத்தில் பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர் "பட்ரீசியர்கள்"(Patricier) என அழைக்கப் பட்டனர். ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் "பிலேபியர்கள்" (Plebis) என அழைக்கப் பட்டனர். பிற்காலத்தில் ரோம- கத்தோலிக்க கிறிஸ்தவ மத பரம்பல் காரணமாக, பட்ரீசியா (பணக்காரி) என்ற பெயரை பலர் தமது பெண் பிள்ளைகளுக்கு சூட்டிக் கொள்கிறார்கள். ஆனால், யாரும் பிலேபியா(ஏழை) என்று பெயர் வைப்பதில்லை.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் ரோம நகரம் பெரும் செல்வத்தில் திளைத்தது. ஆனால், சுமார் ஐம்பது பணக்கார குடும்பங்கள் மட்டுமே செல்வத்திற்கு அதிபதிகளாக இருந்தனர். இதனால் வசதியற்ற பிலேபியர்கள் அதிருப்தி அடைந்தனர். இது பணக்கார வர்க்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு, அதாவது வர்க்கப் போராட்டத்திற்கு தூண்டுதலாக அமைந்தது.

ரோமாபுரியில் பணக்கார பட்ரீசியர்கள் செல்வச் செழிப்பில் மிதந்த நேரம், ஏழை பிலேபியர்கள் பணக் கஷ்டத்தில் வாடினார்கள். பண்டைய ரோமப் பேரரசில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சுருக்கமாக, போர்வீரர்களும், விவசாயிகளும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். நீண்ட காலம் இராணுவ சேவையில் இருந்தவர்களால், விவசாயத்தை கவனிக்க முடியவில்லை. விவசாய நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்த படியால், அளவுக்கு மீறி கடன் வாங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதே நேரம், ஏதென்ஸ் நகரில் இருந்த கிரேக்க ஜனநாயகம் பற்றிய கதைகளையும் பிலேபியர்கள் கேள்விப் பட்டிருந்தனர். ஏதென்ஸ் நகர ஜனநாயகத்தில் அனைத்து சுதந்திரப் பிரஜைகளும் வாக்குரிமை பெற்றிருந்தனர். (அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஆனால், அந்தக் காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.) அதற்கு மாறாக, ரோமாபுரி பிலேபியர்கள் சுதந்திரமான ரோமப் பிரஜைகளாக இருந்த போதிலும் வாக்குரிமை இருக்கவில்லை. செனட்டர் பதவி பரம்பரை பரம்பரையாக கிடைக்கும் உரிமையான படியால், ரோமாபுரியில் யாரும் வாக்குப் போட்டு தெரிவு செய்யப் படவில்லை.

கி.மு. 494 ம் ஆண்டு, ரோமாபுரியில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ரோம அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பிலேபியர்கள், ஆயுதமேந்திப் போராடவில்லை. ஒற்றுமையாக சேர்ந்து வேலைநிறுத்தம் செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள். அத்துடன் தமது குடும்பங்களை கூட்டிக் கொண்டு ரோம நகரை விட்டு வெளியேறினார்கள். அவர்களது போராட்டம் வெற்றி பெற்றது. ரோமப் பேரரசு நிலைகுலைந்தது. இறுதியில் பணக்கார மேட்டுக்குடி வர்க்கம், ஏழை பிலேபியர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்தது.

இந்த வர்க்கப் போராட்டம் எப்படி வெற்றி பெற்றது? போராட்டம் தொடங்க முன்னர், அனைத்து பிலேபியர்களும் ஒன்று கூடி கொன்சுலியும் பிலேபிஸ் (Consilium Plebis) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனை இருபதாம் நூற்றாண்டில் உருவான சோவியத் அமைப்புடன் அல்லது தொழிற்சங்கத்துடன் ஒப்பிடலாம். அதாவது, உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகளை கொண்ட சபையானது போராட்டத்தில் ஈடுபடுவோரின் நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்டது. அரசால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் பிலேபியர்களின் வழக்கு செலவுகளை பொறுப்பெடுத்தது. அவ்வாறு குற்றம் சாட்டப் பட்டவர் நீதிவிசாரணை இன்றி மரணதண்டனை நிறைவேற்றப் பட்டால், அதைத் தடுத்து நிறுத்தி வழக்கில் நீதியான தீர்ப்பை வழங்குவதற்கு பாடுபட்டது.

(பிற்குறிப்பு:"Rome, Supermacht van de oudheid" நூலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.)

Saturday, December 29, 2018

வலதுசாரி தேசியவாதம் ஓர் இளம்பருவக் கோளாறு - ஜான் மாஸ்டருடன் ஒரு விவாதம்


தோழர் சி.க. செந்தில்வேல் எழுதிய "வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை" நூல் வெளியீடு, கனடாவில் தேடகம் அமைப்பினரால் நடத்தப் பட்டது. அங்கே கலந்து கொண்டு பேசிய ஜான் மாஸ்டர், தனது உரையில் கூடுதலான நேரம் மார்க்சிய லெனினிச மாவோவாத சித்தாந்தம் மீது சேறடிப்பதற்கு ஒதுக்கினார். தன்னையும் ஒரு மார்க்சியவாதி என அறிமுகப் படுத்திக் கொண்டே, இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் "வறட்டுவாத சூத்திரத்தை" பிடித்துக் கொண்டு தொங்குவதாக சாடினார். (பார்க்க வீடியோ: சி.கா.செந்திவேல் நூல் வெளியீடு) அவரது உரை முழுவதும் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தன. 

"தமிழ் இடதுசாரிகள் வறட்டு சூத்திரத்தை பிடித்து தொங்குவதாக..." ஜான் மாஸ்டர் குற்றம் சாட்டினார். தமிழ்த்தேசியம் என்றால் அதற்குள் தமிழ் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? அதற்கு அவரே ஓர் உதாரணம். அவரது உரை முழுவதும் தமிழ்த்தேசியத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரம் தன்னை ஒரு மார்க்சியவாதி என்றும் அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஜான் மாஸ்டர் மார்க்சியத்தை தான் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறார் என்றால், முதலாளித்துவம் பற்றியும் அவ்வாறே தவறான தகவல்களை வழங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழர்கள் முதலாளிகளாக இருந்தனர் என்றார். அதற்கு உதாரணமாக, கேரளா சந்தைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புகையிலை ஏற்றுமதி செய்யப் பட்ட வரலாறை சுட்டிக் காட்டினார். அவரது உரையின் இன்னொரு இடத்தில், இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசு தான் முதலாளித்துவத்தை உருவாக்கியது என்கிறார். ஏனிந்த முரண்பாடு ஐயா?

இலங்கை ஆங்கிலேய காலனியாக இருந்த காலத்தில் தான், முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்ற உண்மையை இவர் வசதியாக மறந்து விடுகிறார். அல்லது மறைத்து விடுகிறார். அதற்கு ஒரு காரணம் உள்ளது. இவர் "வரட்டுச் சூத்திரவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டும் தமிழ் இடதுசாரிகள் அடிக்கடி தரகு முதலாளித்துவம் பற்றிப் பேசுகின்றனராம். அப்படியெதுவும் இல்லை என்று சாதிக்கிறார்.

ஜான் மாஸ்டர் சொல்ல விரும்புவது போன்று, யாழ்ப்பாணத்தில் தமிழ் முதலாளித்துவம் தானாக தோன்றவில்லை. அது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நிழலில் தோன்றியது. அந்தக் காலத்தில் இந்தியாவும் இலங்கையும் அகண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்கள் போன்று ஆளப் பட்டன. இன்றுள்ள இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பும், ஏன் இராணுவம் கூட ஆங்கிலேயர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற காலனிய எச்சங்கள் தான்.

ஆங்கிலேய காலனிய காலத்தில் நடந்த வர்த்தகம் லண்டன் சந்தையை நோக்கியதாக இருந்தது. அது ஒன்றும் சர்வதேச வர்த்தகம் அல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற "ஒரே நாட்டுக்குள்" நடந்த வர்த்தகம். அன்று ஆங்கிலேயர்கள் பெரும் நிறுவனங்களின் அதிபதிகளாக இருந்தாலும், உள்ளூர் முதலாளிகளையும் ஊக்குவித்து வளர்த்தனர். அதனால் தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அவர்கள் தரகு முதலாளிகளாக கருதப்பட்டனர்.

மூலதனம், பிரித்தானியா போன்ற மேற்கத்திய நாடுகளில் குவிக்கப் பட்டிருப்பதால் தான், நவகாலனிய சுரண்டல் எந்தத் தடங்கலும் இன்றி தொடர முடிகிறது. அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் தான் தரகு முதலாளிகள். அவர்கள் ஒரு வர்க்கமாக உள்ளனர். அவர்கள் ஒரு பக்கம் சிங்களத் தேசியத்திற்கும், மறுபக்கம் தமிழ்த்தேசியத்திற்கும் ஆதரவளிப்பார்கள்.

தரகு முதலாளிகளின் இறுதி இலக்கு இலங்கையை மறுபடியும் மேற்கத்திய காலனியாக்குவதாக இருக்கும். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்களக் கட்சிகளில் எவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், அவை தனியார்மயத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலிடுவதை ஊக்குவிக்கின்றன. IMF, உலகவங்கி போன்ற நிதி மூலதன ஏகாதிபத்தியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகின்றன. இவை எல்லாம் தரகு முதலாளித்துவத்தின் தோற்றப்பாடுகள் இல்லையா?

ஜான் மாஸ்டர், "மார்க்சியத்தின் பேரால் விமர்சிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே, அதைக் கொச்சைப் படுத்தும் வேலைகளை செவ்வனே செய்கிறார். அறிவுஜீவி மனப்பான்மையுடன் மார்க்சியத்தை திரிக்கத் தொடங்கி விடுகிறார். அதற்கு ஆதாரமாக "அல்தூசர் படித்தீர்களா? கிராம்சி படித்தீர்களா?" என்று கேட்கிறார். ஒரு நீதிக் கதையில் வரும் படகுக்காரனிடம் "வேதங்கள் படித்தாயா?" என்று கேட்ட பிராமணனை நினைவுபடுத்துகிறது.

மார்க்ஸ் "முதலாளித்துவத்தின் இயங்கு விதிகள்" பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததாகவும், அது அந்தக் காலத்தில் "மிக முன்னேறிய கோட்பாடாக" இருந்ததாகவும் ஜான் மாஸ்டர் கூறுகிறார். உண்மையில், முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் பற்றி ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்கள் ஏற்கனவே எழுதி விட்டனர்.

முதலாளித்துவத்தில் மூலதனம் எவ்வாறு குவிக்கப் படுகிறது என்பது பற்றித் தான் மார்க்ஸ் ஆராய்ந்தார். உழைப்பில் உபரிமதிப்பு இருப்பதை கண்டுணர்ந்து கூறினார். ஆனால், மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே அதைப் பலர் கண்டுகொள்ளவில்லை. இன்று ஜான் மாஸ்டர் மாதிரி, அன்றும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் மார்க்ஸ் "ஒரு வரட்டு சூத்திரவாதி" என்று பரிகசித்தனர்.

இனி, ஜான் மாஸ்டர் லெனின் பற்றி அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளை பார்ப்போம். ஏகாதிபத்தியம் லெனினின் காலத்தில் தானாம் வந்தது. (அதற்கு முன்னர் அப்படி ஒன்றே இருக்கவில்லை?) ஜெர்மனி போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் தான் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தார் என்றும் அதை லெனின் "ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் கூறுகின்றார். அதனால் தான், லெனின் "ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும்" என்று கூறி அதற்கான தயார்படுத்தல்களை செய்தாராம். அடேங்கப்பா! ஜான் மாஸ்டர் நமது காதுகளில் முழம் முழமாக பூச் சுற்றுகிறார்.

ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் தான் வந்ததா? மார்க்ஸ் காலத்தில் இருக்கவில்லையா? மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த, கிழக்கிந்திய கம்பனி, மேற்கிந்தியக் கம்பனி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இவையெல்லாம் ஏகாதிபத்தியம் இல்லையா? அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் காலனி பிடிப்பதற்காக போரிட்டுக் கொள்ளவில்லையா? ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், மார்க்ஸ் காலத்தில் தொழிற்துறை சார்ந்ததாகவும், லெனின் காலத்தில் நிதிமூலதனம் சார்ந்ததாகவும் இருந்தது. அது மட்டுமே வித்தியாசம்.

ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தது உண்மை தான். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், மார்க்ஸ் தவறு செய்து விட்டார் என்று வாதிடுவது உள்நோக்கம் கொண்டது. முதலாம் உலகப்போர் முடிந்தவுடன் ஜெர்மனியின் பல நகரங்களில் புரட்சி வெடித்தது.

பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய இடங்களில் தோன்றிய சோவியத் அமைப்புகள் ஒரு மாதம் அளவில் நின்று பிடித்தன. ஆனால், பலமான ஜெர்மன் இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக புரட்சி தோற்கடிக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், புரட்சியில் ஈடுபட்ட மக்களும் நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

அன்றிருந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளிவர்க்க புரட்சிக்கு தலைமையேற்க வேண்டிய தனது பொறுப்பில் இருந்து நழுவியது. புரட்சியை காட்டிக் கொடுத்தது. அது பல வருடங்களுக்கு முன்னரே முதலாளித்துவத்துடன் சமரசவாத போக்கில் சென்று கொண்டிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் தேசியத்தை பாதுகாத்தது. இது தான் லெனின், ரோசா லக்சம்பேர்க் போன்ற பலர் முரண்படக் காரணம்.

சமூக ஜனநாயகக் கட்சியின் திரிபுவாதப் போக்கையும், தேர்தல் பாதையையும் நிராகரித்து உருவானவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர். லெனின் தலைமையிலான போல்ஷெவிக் பிரிவினரும் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியுடன் முரண்பட்டு விலகிச் சென்றவர்கள் தான். முதலாம் உலகப்போரில் தோற்கடிக்கப் பட்டு நட்டமடைந்த சார் மன்னன் பதவி விலகியதால், ரஷ்யாவில் பாராளுமன்ற ஆட்சி வந்தது.

சார் மன்னனிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய முதலாளித்துவ பாராளுமன்ற அரசு பலவீனமாக இருந்த படியால், போல்ஷெவிக் கட்சி அக்டோபர் புரட்சியில் அதிக இழப்புகள் இன்றி ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. அதைவிட பாரிஸ் கம்யூன் தோற்கடிக்கப் பட்ட வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்ட பாடமும் புரட்சியின் வெற்றிக்கு காரணம். அதாவது, போல்ஷெவிக்குகள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக நீண்ட கால போருக்கு தயாராக இருந்தனர். புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னதையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் பொருளியலை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று ஜான் மாஸ்டர் குற்றஞ்சாட்டுகிறார். இது ஒரு விடயத்தை எளிமைப் படுத்தப் படுத்தி புரிந்து கொள்வதால் ஏற்படும் தவறு. அக்டோபர் புரட்சிக்கு முன்னர், ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் பொருளியல்வாதிகள் என்று ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களை நிராகரித்து உருவானது தான் லெனினிசம். இது போல்ஷெவிக் கட்சியின் வரலாறு எனும் நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

மார்க்சிய லெனினிசம் என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடு அல்ல. அது மிக முக்கியமாக வர்க்க அடிப்படை கொண்டது. மனித குல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறு தான் என்று மார்க்ஸ் சொன்னார். அதாவது எதையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அதையே தான் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரும் முன்னெடுத்தனர். அதனால் தான் இன்றைக்கும் சில கட்சிகள் தம்மை மார்க்சிய லெனினிச அல்லது மாவோயிச கோட்பாட்டின் படி நடப்பதாக அறிவித்துக் கொள்கின்றன.

ஜான் மாஸ்டர் கிண்டல் அடிப்பது போன்று, இது "மாவோவின் மேற்கோள்கள் நூலில் எல்லாம் இருக்கிறது" என நினைக்கும் வரட்டுச் சூத்திரம் அல்ல. அதிலும் வர்க்கப் போராட்டம் பற்றித் தான் விலாவாரியாக எழுதி இருக்கிறது.

ஜான் மாஸ்டரின் உரையில் எந்த இடத்திலும் வர்க்கப் போராட்டம் பற்றி பேசப் படவில்லை. இது ஒன்றும் கவனிக்காமல் விடும் தவறு அல்ல. வர்க்க முரண்பாடுகளை பேசாமல் விடுவதன் மூலம் முதலாளித்துவ ஒடுக்குமுறை மூடி மறைக்கப் படுகின்றது.

அவரது உரையில் பேசப்பட்ட எந்த ஒரு விடயத்திலும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. வர்க்கம் என்ற சொல்லை உச்சரிக்கவே தயங்குகிறார். அப்படியான ஒருவர் எவ்வாறு ஒரு மார்க்சிய லெனினிச மாவோயிச கட்சி மீது விமர்சனம் வைக்க முடியும்? அதையும் மார்க்சியத்தின் பேரால் செய்வதைப் போன்ற கயமைத்தனம் வேறெதுவும் கிடையாது. அதை விட நேரடியாகவே முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் நேர்மையாளர்கள்.

******** 

கனடாவில் நடந்த நூல் விமர்சனக் கூட்டம் ஒன்றை பயன்படுத்தி, ஜான் மாஸ்டர் எனும் ரகுமான் ஜான் மார்க்சியத்தை திரிபுபடுத்தி பேசியதை விமர்சித்து முகநூலில் எதிர்வினையாற்றி இருந்தேன். மேற்கொண்டு நிறைய எழுத வேண்டி இருந்த படியால், நேரமின்மை காரணமாக தொடரும் என்று போட்டிருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் ஜான் மாஸ்டர் எனக்கு நீண்டதொரு எதிர்வினையாற்றி உள்ளார். அதில் நான் "ஸ்டாலின் தேசியவாதம் பேசியது குறித்து" எதுவும் எழுதவில்லை என்றும், இதனால் கருத்தாடலில் அர்த்தம் இல்லை என்றும் தொடங்கி உள்ளார். (பார்க்க:கலையரசனுடைய விமர்சனங்களுக்கான எதிர்வினை...

மன்னிக்கவும், கிழமைக்கு நாற்பது மணிநேரம் உடல் உழைப்பை செலவிட வேண்டியுள்ள சாதாரண தொழிலாளியான எனக்கு, "அறிவுஜீவிகள்" போன்று புத்தகங்களை தேடி வாசிக்கவும், அவற்றை மேற்கோள் காட்டி எழுதவும் நேரம் கிடைப்பதில்லை. இப்போதும் முன்பு கற்ற அறிவை வைத்து தான் பதில் எழுதுகிறேன். ஆதாரம் தேடுவதற்கு எனக்கு நேரமில்லை. அதற்காக எனது எதிர்வினையை அவர் "பொதுப்புத்தி" என்று புறக்கணிக்கலாம். அது அவரது அறிவுஜீவித்தனத்தை (Intellectualism) காட்டுகின்றது. மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளி வர்க்க கோட்பாடு. அதைப் புரிந்து கொள்வதற்கு பாட்டாளிவர்க்க உணர்வும் அவசியம். அதை அறிவுஜீவி மேட்டிமைத்தனத்துடன் புரிந்து கொள்ள முடியாது. கோட்பாடுகளை எமது வார்த்தைகளில் விளக்குவதற்கு முன்னர், நாம் அதை உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பாடுகளையும், பார்முலாக்களையும் இரைமீட்பதால் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. அது போன்ற தவறுகளை தான் ரகுமான் ஜானின் எதிர்வினையில் நான் காண்கிறேன்.

ஜான் மாஸ்டர் எழுப்பிய கேள்விகளுக்கான எனது பதில்கள்:


ஸ்டாலின் ஒரு தேசியவாதியா?

//ஸ்டாலினே சில குறிப்பான சந்தர்ப்பங்களில், பழம்பெருமை பேசி, தேசியவாதத்தை துணைக்கு அழைக்கிறார் என்பதை நிறுவும் வகையில் எனது ஆதாரத்தை வழங்கியிருந்தேன்// - ரகுமான் ஜான்

1941 ம் ஆண்டில் செஞ்சேனை படை வீரர்கள் தமது பயிற்சி முடித்து வெளியேறும் ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஸ்டாலின், சார் மன்னர் காலத்து (தேசிய)வீரர்களை பற்றிக் குறிப்பிட்டு "தேசியவாதத்தை" உயர்த்திப் பிடித்தார் என்பது அவர் தரும் முதலாவது "ஆதாரம்".

1931 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி, ஸ்டாலின் சோவியத் யூனியனது முதன்மையான தொழிற்சாலை நிர்வாகிகளுடன் உரையாடிய போது,மொங்கோலியர்கள், துருக்கியர்கள், லிதுவேனியர்கள் ஆகிய அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்பை குறிப்பிட்டுப் பேசி, தற்போது எமக்கொரு சோஷலிச தந்தையர் நாடு இருக்கிறது என்று ஸ்டாலின் "தேசியவாத" அறைகூவல் விடுத்தார் என்பது அவர் தரும் இரண்டாவது "ஆதாரம்".

ஜான் மாஸ்டர் உண்மையில் தேசியத்தையும், தேசியவாதத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார். உலகில் முதல் தடவையாக ஐரோப்பாவில், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசிய அரசுகள் தோன்றின. அதற்கு முன்னர் மன்னராட்சி இருந்த இடத்தில் குடியரசுகள் உருவாகின. அவை முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றின. அவற்றின் வளர்ச்சிக் கட்டத்தில் தான் சோஷலிச அரசுகள் தோன்றுகின்றன. ஒரு முதலாளித்துவ அமைப்பினுள் சோஷலிசத்திற்கான கரு அடங்கியுள்ளது.

அன்றைய காலங்களில், தேசிய அரசுக்களை அமைத்தவர்களின் அரசியல் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது. அதற்காக ஒரு குறிப்பிட்ட தேசியத்திற்குள் அடங்குவோர் எல்லோரும், அங்குள்ள தேசியவாத அரசியலை ஏற்றுக்கொண்டனர் என்று அர்த்தம் அல்ல. அங்கு தேசியவாதத்தை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதே மாதிரி, தேசங்களின் எல்லைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும் (உதாரணம்: அனார்க்கிஸ்ட்) இருப்பார்கள்.

மேலும், ஸ்டாலின் போன்ற ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கும், பிற நிகழ்வுகளில் பேசுவதற்கும் இடையிலான வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதன் தத்துவார்த்த அடிப்படையை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், வெளி இடங்களில் நடக்கும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. அரசியல் ஆர்வமில்லாதவர்களும் இருப்பார்கள்.

ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிட்ட இரண்டு "ஆதாரங்களும்" பொது நிகழ்வுகளில் ஆற்றிய உரைகள் தான். அங்கு சமூகமளித்த அனைவரும் மார்க்சிய லெனினிசவாதிகள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களில் பலர் தேசப் பற்றாளர்களாக, தேசியவாதிகளாக கூட இருக்கலாம். ஏன் மத நம்பிக்கையாளர்களும் இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால், பெரியளவு அரசியல் ஈடுபாடற்ற சாதாரண மக்கள். அதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவதும் அவசியமாகிறது.

அதே நேரம், மொங்கோலியர்கள், பிரெஞ்சியர்கள், ஜப்பானியர்கள், லிதுவேனியர்கள் ரஷ்யா மீது படையெடுத்தனர் என்று கூறி விட்டால் அது ஒரு "தேசியவாத அறைகூவல்" ஆகி விடுமா? இவை எல்லாம் யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். எல்லா நாடுகளிலும் வாழும் மக்களின் நினைவுகளில் இது போன்ற வரலாற்றுக் கதைகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்டு பேசுவதில் என்ன தவறு? இலங்கையை, இந்தியாவை எந்தவொரு அந்நிய நாடும் ஆக்கிரமிக்கவில்லையா? அதைப் பற்றிக் கேட்டால் அங்குள்ள மக்கள் கதை கதையாக சொல்வார்களே?

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்தன. அப்போது அமெரிக்காவில் "ரஷ்யா ஏன் போரிடுகிறது?" என்று ஒரு ஆவணப் படம் தயாரித்து வெளியிட்டனர். அதிலும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டது போன்ற வரலாற்று சம்பவங்கள் குறிப்பிடப் படுகின்றன. "கடந்த காலங்களில், பிரெஞ்சியர், ஜப்பானியர் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ரஷ்யாவின் வளங்களை அபகரிக்கப் பார்த்தனர். தற்போது (நாஸி) ஜெர்மனி அந்த நோக்கத்தில் படையெடுக்கிறது..." என்று அமெரிக்க ஆவணப் படத்திலும் கூறுகின்றனர். அந்த வரலாறு உண்மை தானே? அது எப்படி "தேசியவாத அறைகூவல்" ஆகும்? நான் நினைக்கிறேன், ஜான் மாஸ்டர் எப்போதும் தேசியவாதக் கண்ணாடி அணிந்து கொண்டு தான் எல்லாவற்றையும் பார்க்கிறார். அதனால் காண்பதெல்லாம் தேசியவாதமாகத் தெரிகின்றது.

ரகுமான் ஜான் இங்கே ஒரு முரண்நகையை கவனிக்கத் தவறி விடுகிறார். ஒரு ஜார்ஜியரான ஸ்டாலின் ரஷ்ய தேசியவாதம் பேசுவது வேடிக்கையானது. அதை எந்தவொரு ரஷ்ய தேசியவாதியும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆகையினால், இது அனைத்து மக்களையும் கவர்வதற்கான அலங்காரப் பேச்சு என்பது எடுத்தவுடனே புரிந்து விடும். மேலும், செம்படையில் போர்வீரர்களாக சேர்ந்த எல்லோரும் ஸ்டாலினுக்காக அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்காக போருக்கு செல்லவில்லை. நிறையப் பேர் தாய் நாட்டுப்பற்றுக் காரணமாகவும் யுத்தமுனைக்கு சென்றனர்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னரான காலங்களில் தேவாலயங்கள் மூடப் பட்டமை உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் அவை மீண்டும் திறக்கப் பட்டன. மத வழிபாடுகள், சடங்குகள் தாராளமாக அனுமதிக்கப் பட்டன. பைபிள் படிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. தேவாலயங்கள் சொத்து வைத்திருக்கவும் அனுமதிக்கப் பட்டது.

இதெல்லாம் அன்று சோவியத் யூனியனில் இருந்த மத நம்பிக்கையாளர்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள். அதனால் நன்மையே உண்டானது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த இலட்சக்கணக்கான ரூபிள்களை யுத்த நிதியாக வழங்கின. மதகுருக்கள் யுத்தமுனைக்கு சென்று பூசை செய்தனர். இந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி, ஸ்டாலின் "கிறிஸ்தவ மத போதனை செய்தார்" என்று கூறுவது எத்தனை அபத்தமானது?

ஸ்டாலின், மத்திய ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களை கவரும் வகையிலும் நடந்து கொண்டார் என்பது தெரியுமா? டாகெஸ்தான் மாநிலத்தில் ஷரியா சட்டம் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் ஆதரவு வழங்கினார். அதற்கான ஆதாரம் இதோ:

ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்: //"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை.

ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."//

இதைக் கண்டால் ஜான் மாஸ்டர் என்ன சொல்வார்? "ஸ்டாலின் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசினார்" என்று சொல்வாரா? யானை பார்த்த குருடர்கள் கதை மாதிரித் தான் ஜான் மாஸ்டரின் "ஸ்டாலின் தேசியவாதம் பேசினார்" என்ற வாதமும் அமைந்துள்ளது. 


ஏகாதிபத்தியம் எப்போது தோன்றியது?

ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்) தனது உரையில் ஏகாதிபத்திய காலகட்டம் பற்றி கூறிய தகவல் தான் பிழை என்று எனது எதிர்வினையில் எழுதி இருந்தேன். அதாவது ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் வந்தது என்று நினைத்துக் கொள்வது தவறு என்றும், அது காலனிய காலகட்டத்தில் இருந்து தொடர்கிறது என்று எழுதினேன். அதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், கிழக்கிந்திய/ மேற்கிந்தியக் கம்பனிகளை உதாரணம் காட்டினேன்.

அதற்குப் பதிலளித்த ரகுமான் ஜான் பின்வருமாறு எழுதி உள்ளார்: //பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏன் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்றுகூட குறிப்பிட்ட காலம் வரையில் பேசி வந்துள்ளார்கள் அப்போது இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்தியதை கடுமையாக கேலி செய்தவர்கள் இதே இடதுசாரிகள்தான். ஆனால் வரலாற்று முரண்நகை என்னவென்றால் கலையரசனும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான். ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், கோட்பாட்டுரீதியாக அது எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதுதான்//

"கோட்பாடு" என்று பொதுவாக ஒன்றும் இல்லை. அது ஒவ்வொருவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து மாறுபடுகிறது. ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சிய கோட்பாட்டுக்கும், லிபரல் கோட்பாட்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. மார்க்சியம் சர்வதேச மூலதன திரட்சியை கவனத்தில் எடுக்கிறது. அந்தக் கோட்பாட்டை புறக்கணிக்கும் லிபரலிசம், பிற நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகளை மட்டும் கவனத்தில் எடுக்கிறது.

இரண்டுமே சந்தைகளின் விரிவாக்கம் குறித்து பேசுகின்றன. ஆனால், லிபரல் ஏகாதிபத்திய கோட்பாடானது, ஏகாதிபத்தியத்தால் காலனிப் படுத்தப் பட்ட மக்களுக்கும் நன்மை உண்டாகிறது என்று வாதிடுகின்றது. அதற்கு மாறாக, மார்க்சிய ஏகாதிபத்திய கோட்பாடு வளங்களின் சுரண்டல் காரணமாக காலனிப் படுத்தப் பட்ட மக்கள் வறுமைக்குள் தள்ளப் பட்டதை கவனிக்கிறது. அதற்குக் காரணம் காலனிகளில் சுரண்டி சேர்க்கப் பட்ட மூலதனம் காலனியாதிக்க அரசின் தாயகத்திற்கு கொண்டு செல்லப் படுவது தான் என்று வாதிடுகிறது.

அந்த வகையில் கிழக்கிந்திய/மேற்கிந்திய கம்பனிகளை ஏகாதிபத்தியம் என்று அழைப்பதில் தவறில்லை. அவை இன்றைய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் முன்னோடிகள் எனலாம். அன்று அந்தக் கம்பனிகள் உலகம் முழுவதும் வைத்திருந்த காலனிகளை சுரண்டி கிடைத்த இலாபப் பணம் கம்பனி பங்குதாரர்களிடையே பங்கிடப் பட்டது. இதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வறட்டுத்தனமான வாதம். நாம் மார்க்ஸ் எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு உலக நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் பற்றிய லிபரலிசக் கோட்பாடு, ஜான் மாஸ்டரால் "பொதுப் புத்தி" என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அதற்கு உதாரணமாக, "தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்று குறிப்பிட்டனர்" என்கிறார். மன்னிக்கவும், அவர்கள் "தமிழ் அரசியல்வாதிகள்" அல்ல, லிபரலிச கோட்பாட்டை பின்பற்றும் தமிழ் (தேசிய) வலதுசாரிகள். அவர்களுக்கு சிங்கள- தமிழ் இன முரண்பாட்டுக்கு அப்பால் உலகில் வேறெந்த விடயமும் தெரியாது. அவற்றில் அக்கறை இல்லை என்று கூறலாம்.

இதே மாதிரி, காஷ்மீர் அல்லது அசாம் தேசியவாதிகள் இந்திய ஏகாதிபத்தியம் பற்றி குறிப்பிடுவார்கள். உக்ரைனிய தேசியவாதிகள் ரஷ்ய ஏகாதிபத்தியம் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.// என்று ஜான் மாஸ்டர் கூறுகிறார். இங்கே அவர் தமிழ்த்தேசியவாதிகளையும் சேர்த்துத் தான் பொதுப் புத்தியில் பேசுவதாக சாடுகிறார். மன்னிக்கவும், தேசியவாதம் எப்போதும் குறுகிய மனப்பான்மை கொண்டது. அது தனது இனம் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறது.

அந்த அடிப்படையில், தமிழ் வலதுசாரிகளின் குறுந் தேசியவாதக் கோட்பாட்டின் படி, "தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு தான் ஏகாதிபத்தியம்" என்று புரிந்து கொள்கிறார்கள். தமிழ் வலதுசாரிகளால், பெரும்பாலான அரசியல் கலைச் சொற்கள் இவ்வாறு மாறுபட்ட அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் படுவதற்கு பல உதாரணங்களை காட்டலாம். உதாரணத்திற்கு வர்க்கம் என்ற சொல் முற்றிலும் பிழையான அர்த்தத்துடன் பயன்படுத்தப் படுகின்றது. தமிழ்த்தேசியவாதிகள் சிங்களவர்களை ஒடுக்கும் வர்க்கம் என்றும், தமிழர்களை ஒடுக்கப்படும் வர்க்கம் என்றும் சொல்வார்கள். அதே மாதிரி, சுயநிர்ணயம் என்றால் அது தனிநாடு மட்டுமே என்று புரிந்து கொள்வார்கள். இது தமிழ்த் தேசிய அரசியலின் கோட்பாடு பற்றிய விளக்கம் இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பாக தமிழ் வலதுசாரிகள் எதையும் ஆழமாக பார்ப்பதில்லை.

ரகுமான் ஜான்: //ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்தவமானது, 1870 வரையில் சுதந்திரமான போட்டியை அடிப்படையாகக்கொண்ட முறைமையாக இருந்தது. இதன் பின்பே முதலாளித்துவமானது ஏகபோகமாக மாறி ஏகாதிபத்தியமாகிறது. கலையரசன் கூறுவதுபோல ஏகாதிபத்தியம் என்பது பழையது என்றால் மார்க்சின் மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றிய குறிப்புகள் நிறைந்து இருந்திருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம்.//

ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்துவம் ஆரம்பத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டிருந்ததையும், பின்னர் ஏகபோகமாக மாறியதையும் நான் மறுக்கவில்லை. அதற்காக, ஏகபோக முதலாளித்துவம் தான் ஏகாதிபத்தியமாக மாறுகிறது என்பது ஒரு மேம்போக்கான வாதம். காலனிய சுரண்டல் ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்ததை லெனின் தனது ஏகாதிபத்தியம் பற்றிய நூலில் குறிப்பிடுகிறார். //காலனிய கொள்கையில் இருந்து ஏகபோகம் வளர்ந்தது. காலனிய கொள்கையின் "பழைய" நோக்கங்களுடன், நிதி மூலதனமானது இயற்கை வளங்களுக்கான போட்டியை சேர்த்துக் கொண்டது.// - லெனின்

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனும் நூலில் லெனின் பழைய எகாதிபத்தியத்திற்கும் (ஜான் மாஸ்டர் இதைத் தான் "பொதுப்புத்தி" என்றார்) புதிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை சில உதராணங்கள் மூலம் விளக்குகிறார். போர்த்துக்கல் ஸ்பெயினுடன் போரிட்டு தனி நாடான பின்னர் போர்த்துக்கல்லின் காலனிகளும் பிரித்தானியாவால் பாதுகாக்கப் பட்டன. அதற்குக் காரணம், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியன பிரித்தானியாவின் எதிரி நாடுகள் என்பதே. பெரிய நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் இடையிலான இத்தகைய உறவு எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால், முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தில் இது பொதுவான அமைப்பு வடிவம் பெறுகிறது. அவர்கள் உலகத்தை தமக்குள் பங்கிடுவதன் மூலம் நிதி மூலதன சங்கிலியில் பிணைக்கின்றனர்.

ரகுமான் ஜான்: //மூலதனத்தின் மூன்று அத்தியாயங்களினதும் Index ஐ பரிசீலித்தால் அவற்றில் Imperialism என்ற வார்த்தையே காணப்படவில்லை என்பது தெரியவரும்.// கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்ற ஒரு புத்தகம் மட்டும் தானா எழுதினார்? ஜான் மாஸ்டர் அந்த நூலை வாசிக்காமல் அதன் "Index ஐ மட்டும் பரிசீலித்து" விட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்!

ஆங்கில மொழியில் ஏகாதிபத்தியத்தை குறிக்கும் "இம்பீரியலிசம்" ( Imperialism) என்பது உண்மையில் ஒரு பிரெஞ்சு சொல். 1852- 1870 வரையிலான நெப்போலியனின் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தில் இருந்து அந்தச் சொல் பயன்பாட்டில் வந்தது. அன்றைய காலத்தில் அதைப் பலர் நெப்போலியனின் பெயரில் "போனபார்ட்டிட்சம்" என்றும் குறிப்பிட்டு வந்தனர். இம்பீரியலிசம், போனபார்ட்டிசம் இரண்டு சொற்களும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டன. "லூயிஸ் போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமியர்" என்ற நூலில் மார்க்ஸ் இவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்தி உள்ளார்.

மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது உண்மை தான். அதே நேரம், பிரிட்டனின் இந்தியா காலனி மீதான சுரண்டல் பற்றியும், அங்கிருந்து உபரிமதிப்பு ஏற்றுமதியாவது பற்றியும் எழுதியுள்ளார். மார்க்ஸ் எழுதிய நூல்களில் மிகவும் பிரபலமான "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும்" ஏகாதிபத்திய நடைமுறை பற்றிய குறிப்புகள் உள்ளன. "நகரமயமாக்கப் பட்ட மூலதனம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகிறது. அதற்காக இவ்வளவு காலமும் இருந்த சமுதாயங்களின் "சீன மதில்கள்" உடைக்கப் படுகின்றன." என்று மார்க்ஸ் எழுதினார். அதாவது, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகின்றது எனும் விடயம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே பேசப் பட்டு வந்துள்ளது.

ஜான் மாஸ்டர் ஏகாதிபத்தியம் என்ற தோற்றப்பாட்டின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆராயாமால், அந்தச் சொல் எப்படி வந்தது என்று கேட்டு தலையைப் போட்டு உடைக்கிறார். இந்தக் காலத்தில், ஏகாதிபத்தியம் சொல்லை எதிர்மறையான அர்த்தத்துடன் புரிந்து கொள்கிறோம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அப்படி இருந்ததில்லை. பிரித்தானியாவை விக்டோரியா மகாராணி ஆண்ட காலத்தில் ஏகாதிபத்தியம் என்பது பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளும், ஏற்கனவே பிரான்ஸில் இருந்த நெப்போலியனின் ஏகாதிபத்தியத்தை பார்த்துக் கற்றுக் கொண்டவர்கள் தான்.

பிற்காலத்தில் தெற்கு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய சிசில் ரோட்ஸ் "சமூக- ஏகாதிபத்தியம்" என்ற கொள்கையை முன்னெடுத்தார். அதாவது, பிரிட்டிஷ் வெள்ளையின ஏழைகளை ஆப்பிரிக்காவில் குடியேற்றி வளங்களை அபகரிப்பதன் மூலம் பிரித்தானியாவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றார். இருபதாம் நூற்றாண்டு, ஸ்பானிஷ் - அமெரிக்க யுத்தத்துடன் தொடங்கியது. அந்தக் காலத்தில், அமெரிக்க நிதி ஆலோசகரும், வங்கியாளருமான சார்ல்ஸ் ஆர்தர், "North American Review" எனும் சஞ்சிகையில், அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக, "ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படைகள்" என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சந்தைகளை விரிவுபடுத்துவது பற்றியும், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது பற்றியும் விரிவாக எழுதி இருந்தார்.

உண்மையில், அமெரிக்க, ஐரோப்பிய இடதுசாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், ஏகாதிபத்தியம் என்ற சொல்லிற்கு எதிர்மறையான அர்த்தம் கொடுத்தது. முன்பு ஸ்பெயின் வசமிருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்க காலனியாக மாறிய பொழுது, அமெரிக்க இடதுசாரிகள் அதை "கொடூரமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சித்தாந்தம்" என்று கூறி கண்டித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி, பிரான்ஸ் தொழிலாளர் கட்சி ஆகியன தத்தமது நாட்டு அரசுக்களின் காலனிய விரிவாக்க கொள்கையை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 


கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தாரா?

மார்க்சியத்தை பற்றி மட்டுமல்லாது முதலாளித்துவத்தை பற்றிக் கூட தவறாகப் புரிந்து கொண்டுள்ள ஜான் மாஸ்டர், "மார்க்ஸ் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்ததாக" திரிபுபடுத்துகிறார்.

அவரது விளக்கம் பின்வருமாறு: // அடம் ஸ்மித் உம், டேவிட் ரெக்கார்டோ உம் அடிப்படையில் முதலாளித்துவத்தை நியாயப்படுத்தியே எழுதினார்கள்.... இந்த வகையில் இந்த இருவரதும் படைப்புகளில் வெளிப்படுவது ‘முதலாளித்துவ சித்தாந்தம்’ ஆகுமேயன்றி, எந்த வகையிலும் ஒரு விஞ்ஞானபூர்வமான - கோட்பாட்டுரீதியான கருத்தல்ல. கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக ‘உபரி மதிப்பு’ பற்றிய கண்டுபிடிப்பின் மூலமாக முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதலை முன்வைக்கிறார்//

அடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்றோர் முதலாளிதத்துவத்தை நியாயப் படுத்தி எழுதினார்கள்... இருவரது படைப்புகளிலும் வெளிப்படுவது முதலாளித்துவ சித்தாந்தம்" என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டளவில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அப்போது ஐரோப்பிய அரசுக்களால் முதலாளித்துவம் மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட பொருளாதாரமாக இருந்தது. அன்று அது முற்போக்கானதாகவும், மனித குலத்திற்கு நன்மை பயப்பதாகவும் கருதப்பட்டது.

அந்தக் காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக, முதலாளித்துவமானது "அரசியல் பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. பின்னர் அதுவே ஒரேயொரு பொருளாதாரமாக இன்று வரை கருதப் பட்டு வருகின்றது. முதலாளித்துவமானது கேள்வி, வழங்கல் எனும் சந்தை விதிகளுக்கு அமைய இயற்கையாக தோன்றிய பொருளாதாரம் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அரசு தலையிட்டு சந்தையை ஒழுங்கமைக்கும் வரையில், முதலாளித்துவம் எப்படி இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவத்தின் இயற்கையான தோற்றத்தை "காட்டு முதலாளித்துவம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு காட்டுக்குள் சட்டமோ ஒழுங்கோ கிடையாது. யாரும் என்னவும் செய்யலாம். கேட்பதற்கு ஆளில்லை. உதாரணமாக, சோமாலியாவில் குறிப்பிட்ட காலம் அரசு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் அங்கு காட்டு முதலாளித்துவமே இருந்தது.

பெரும்பாலான உலக நாடுகளில் பொருளியல், வணிகத் துறைகளில் முதலாளித்துவப் பொருளாதாரமே பாடமாக கற்பிக்கப் படுகின்றது. அதில் தவறாமல் அடம் ஸ்மித்தின் கோட்பாடுகள் குறிப்பிடப்படும். சுருக்கமாக சொன்னால், அடம் ஸ்மித் ஒரு முதலாளித்துவ கோட்பாட்டாளராக தான் இன்று வரை அறியப் படுகின்றார். ஆகவே, "அடம் ஸ்மித் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தார்" என பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டால், அதில் எந்தத் தவறும் இல்லை.

இதில் கார்ல் மார்க்ஸின் பாத்திரம் என்ன? அவர் முதலாளித்துவத்தின் சிறந்த விமர்சகராக இருந்தார். அவர் தனது விமர்சனக் கட்டுரைகளால் முதலாளித்துவத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தார். அவருக்கு முன்னர், முதலாளித்துவத்தால் விளையும் தீமைகள் பற்றி யாரும் எழுதி இருக்கவில்லை. ஒரு பொருளின் பெறுமதி குறித்து மார்க்ஸ் வேறொரு கோணத்தில் சிந்தித்தார். மனித உழைப்பு தான் ஒரு பொருளின் பெறுமதியை அல்லது விலையை தீர்மானிக்கிறது என்றார். இதை, மார்க்சுக்கு முன்னரும் பின்னரும், எந்தவொரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பொருளில் மறைந்துள்ள உழைப்பின் பெறுமதியை புறக்கணித்து வந்துள்ளனர். இதைவிட மார்க்ஸ் கண்டுபிடித்த உபரிமதிப்பு கோட்பாடும் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களால் நிராகரிக்கப் பட்டு வந்துள்ளது.

ஆகவே, ஜான் மாஸ்டர் தவறாகக் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் முன்வைத்தது "முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதல்" அல்ல. அது முதலாளித்துவத்தால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் பற்றிய விமர்சனம். அவருக்கு முந்திய (முதலாளித்துவ) பொருளாதார அறிஞர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மனித உழைப்பின் பெறுமதி பற்றிய விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டு விளக்கங்களை மார்க்ஸ் கண்டுபிடித்து எழுதினார் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். 


தேசியவாதம் எப்போதும் முற்போக்கானதா?


முன்னொருகாலத்தில் இடதுசாரி தமிழ்த்தேசியவாதியாக இருந்த ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்), பின்னர் ஒரு வலதுசாரி தமிழ்த்தேசியவாதியாக மாறினார். அதிலிருந்தே என் மீதான எதிர்வினையை வைக்கிறார். அதில் அவர் தேசியவாதம் என்ற அரசியல் கொள்கையையும், சுயநிர்ணயம் என்ற அரசமைப்புச் சட்டத்தையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறார். இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரகுமான் ஜான்: //தேசியவாதம் பற்றி அடுத்த குழறுபடியை கலையரசன் மேற்கொள்கிறார். அதாவது, ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் சுயநிர்ணய உரிமையை, அதன் விடுதலைப் போராட்டத்தை அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியின் பண்பை கொண்டே ஒருவர் அந்த போராட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்ற தீர்மானிக்லாமாம்..... பலஸ்தீன போராட்டத்தின் தலைமை PFLP ஆக இருந்தால் ஆதரிப்பாராம். ஹமாஸ் தலைமை ஏற்றால் ஆதரிக்க முடியாதாம்.//

இது முழுக்க முழுக்க திரிபுபடுத்தப் பட்ட வாதம். கனடாவில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் ஜான் மாஸ்டர் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். //பால‌ஸ்தீன‌ம், குர்திஸ்தான், காஷ்மீரை ஆத‌ரிக்கும் த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஈழ‌ம் என்றால் ம‌ட்டும் இட‌றுகிறார்க‌ள்...//

அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன்: //இது த‌மிழ் வ‌ல‌துசாரிக‌ளால் விஷமத்தனமாக ப‌ர‌ப்புரை செய்ய‌ப்ப‌டும், உண்மைக்கு முர‌ணான‌, திரிபுப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ வாத‌ம்.

இட‌துசாரிக‌ள் எங்காவ‌து வ‌ல‌துசாரிக‌ளை ஆத‌ரித்தால் ம‌ட்டுமே அது த‌வ‌றாகும். அப்ப‌டி ந‌ட‌ந்திருந்தால் நிரூபிக்க‌ட்டும். உதார‌ண‌த்திற்கு பால‌ஸ்தீன‌ இட‌துசாரி இய‌க்க‌மான‌ PLFP இருக்கையில், த‌மிழ் இட‌துசாரிக‌ள் அதை விட்டு விட்டு வ‌ல‌துசாரி இய‌க்க‌மான‌ ஹமாசை ஆத‌ரித்தாக‌ இந்த‌ அறிவுஜீவியால் நிரூபிக்க‌ முடியுமா?

அது தான் போக‌ட்டும். ஈழ‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஏராள‌ம் இருந்தார்க‌ளே? அது இந்த‌ அறிஞ‌ருக்கு தெரியாதா? இவ‌ரே அப்ப‌டியான‌ வ‌ர‌லாற்றுப் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் தான். ஏனோ அதை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விட்டார்.//

எனது பதிலில் குறிப்பிட்ட " ஈழ‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஏராள‌ம் இருந்தார்க‌ளே? இவ‌ரே அப்ப‌டியான‌ வ‌ர‌லாற்றுப் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் தான்." என்ற வாதத்தை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார்.அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்து வீசி விட்டு, மிகுதிப் பகுதியை திரித்து அவதூறு செய்கிறார்.

"ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும்" என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல, உலக வழமையும் அப்படித் தான் உள்ளது. ஒரு நாட்டின் இடதுசாரிகள் பிற உலக நாடுகளில் இருக்கும் இடதுசாரி அமைப்புகளை ஆதரிப்பார்கள். அதே மாதிரித் தான் வலதுசாரிகளும் நடந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழ் வலதுசாரிகளின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசின் பாரபட்சமான நிலைப்பாட்டை குறிப்பிடலாம்.

தெற்கு சூடான் சுதந்திரத் தனிநாடான நேரம் அதை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள். ஆனால், அதே காலகட்டத்தில் தான் அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியனவும் சுதந்திரத் தனிநாடுகளாக அறிவித்துக் கொண்டன. ஆனால், அவர்கள் அவற்றை ஆதரிக்கவில்லை! தெற்கு சூடானை ஆதரித்த நாடுகடந்த தமிழீழ அரசு, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்தது. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. தெற்கு சூடானின் எண்ணை வளம் காரணமாக அமெரிக்காவின் அல்லது மேற்குலகின் ஆதரவுடன் தனிநாடாகியது. மேற்குலக ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அதை முன்மொழிய வேண்டாமா?

இது எப்போதும் நடப்பது தான். மேற்குலக தலையீட்டால் சுதந்திரம் அடைந்த கொசோவோ, கிழக்கு தீமோர் ஆகியவற்றையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள். ஆனால் நீண்ட காலமாக விடுதலை கோரி ஆயுதப்போராட்டம் நடத்தும் பாஸ்க், கோர்சிகா, வட அயர்லாந்து ஆதரவு பற்றிக் கேட்டால் நழுவி ஓடுவார்கள். அதிகம் பேசுவானேன். கனடாவில் கியூபெக் மாநிலம் பிரிந்து தனிநாடாவதற்காக நடந்த பொது வாக்கெடுப்பில், அங்கு வாழ்ந்த வாக்குரிமை பெற்ற தமிழர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆமாம், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் கியூபெக் விடுதலையை எதிர்த்தார்கள்! இதற்குக் காரணம் மேற்கத்திய எஜமான விசுவாசம் அன்றி வேறென்ன?

சொன்னால் வெட்கக் கேடு. ஒரு காலத்தில் சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்த ஐ.எஸ். இயக்கத்தையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள்! ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் தாராளமாக உதவின. அப்போது ஐ.எஸ். இயக்கத்தினர் விடுதலைப் போராளிகள் என்று அழைக்கப் பட்டனர். குறிப்பிட்ட காலத்தின் பின்னர், அவர்களது கொடூரச் செயல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்ற பின்னர் தான் பயங்கரவாதிகள் என அழைக்கப் பட்டனர்.

ஜான் மாஸ்டரின் வாதப்படி, சிரியாவிலும், ஈராக்கிலும் உருவான ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபியரின் தாயகமான இஸ்லாமிய தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கக் கூடாதா என்றும் வாதாடலாம். தாராளமாக. சிரியாவிலும், ஈராக்கிலும் ஷியா முஸ்லிம் சமூகம் ஒடுக்கும் இனமாகவும், சன்னி முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படும் இனமாகவும் உள்ளது. சன்னி முஸ்லிம் அரேபியரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்கான இஸ்லாமிய தேசம் ஒன்றுக்காக போராடும் ஐ.எஸ். தலைமையை ஜான் மாஸ்டர் தாராளமாக ஆதரிக்கலாம்.

//குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தலைமை யாரென்பதை தீர்மானிப்பது அந்த சமூகமேயன்றி வேறு யாருமல்லர். இது அக்கள் மக்கள்திரளின் அந்நியப்படுத்த முடியாத உரிமையாகும்.// - ரகுமான் ஜான்

ஆமாம், யார் இல்லையென்றார்கள்? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்திற்கு அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திரளின் ஆதரவு இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபிய சமூகம் தனது தலைமையை தீர்மானித்து இருந்தது. அது அவர்களது அந்நியப்படுத்த முடியாத உரிமை தானே?

ரகுமான் ஜான்: //பலஸ்தீன மக்கள் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டட ஒரு தேசம் என்ற வகையில் அவர்களை ஆதரிப்பது உலகெங்கும் உள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகளதும் கடமையாகம். அந்த வகையில்தான் இன்று உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஆதரிக்கின்றனர்//

ஜான் மாஸ்டர் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதால் அவரது பார்வையில் பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு தேசியவாதப் பிரச்சினை. அதனால் அவர் "ஒடுக்கப்பட்ட தேசம்" என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு இஸ்லாமிய மதவாதியின் பார்வையில் இது ஒரு இஸ்லாமிய மதப் பிரச்சினை. அவர் இதை "ஒடுக்கப்பட்ட மதம்" என்று கூறுவார். நீங்கள் எந்த நிறக் கண்ணாடி அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும்.

உண்மையில், பாலஸ்தீன விவகாரம் ஒரு தனித்துவமான சர்வதேச பிரச்சினை. அதனை உலகின் பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மேற்கத்திய காலனியாதிக்கத்தின் கருவியாகவும், மேற்கத்திய நலன்களை பாதுகாக்கும் மதிலாகவும் இஸ்ரேல் உள்ளது. ஐ.நா. சபையும் யூதர்கள், அரேபியர்களுக்கு தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களை கொண்ட தீர்வை பிரேரித்த போதிலும், அதை நடைமுறைப் படுத்த தவறி விட்டது. பாலஸ்தீன அரேபியரின் போராட்டம் மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிரானதே. அந்த வகையில் உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதும் புரிந்து கொள்ளத் தக்கதே. பாலஸ்தீனம் விடுதலையானால் அது மேற்கத்திய காலனியாதிக்கத்தின் முடிவாகவும் கருதப்படும்.

ரகுமான் ஜான்: //இவரது நிபந்தனையின்படி பார்த்தால் உலகிலுள்ள எந்தவொரு தேசத்தின் விடுதலையையும் ஆதரிக்காமல் இருப்பதற்கு பல சாக்குபோக்குகளை நாம் கண்டறியலாம். பலஸ்தீனம் மட்டுமல்ல, கட்டலான், ஸகொட்லாணட், கஷ்மீர், குர்திஷ் … போன்ற எந்தவொரு தேசிய விடுதலை போராட்டத்திலும் நாம் இது போன்ற குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியும்.//

ஐயா, உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உங்களால் இஸ்லாமிய தேசத்தின் விடுதலையை ஆதரிக்க முடியுமா? சரி, அது மதப் பிரச்சினை என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள். நான் முன்னர் குறிப்பிட்ட அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியன தேசிய இனப் பிரச்சினைகள் தானே? அவற்றை ஏன் ஆதரிக்கவில்லை என்று தமிழ் வலதுசாரிகளை பார்த்து கேட்டால் ஏதாவது குறைபாடுகளை கண்டுபிடித்துக் கூறுவார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் ஆதரிப்பதில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை.

ரகுமான் ஜான்: //இவை மாத்திரமன்றி கடந்த காலத்தில் பல்வேறு முற்போக்கு, புரட்சிகர சக்திகளினால் ஆதரிக்கப்பட்டு, வெற்றி பெற்ற பல சுதந்திர போராட்டங்கள் தொடர்பான ஆதரவும் கேள்விக்குள்ளாகும். ஜேர்மனி, இத்தாலியின் இணைப்பு, அயர்லாந்து விடுதலை போராட்டம், இந்திய சுதந்திர போராட்டம் உட்பட, உலகலாவியரீதியில் பல்வேறு மக்கள் தரப்பினராலும், முற்போக்கு புரட்சிகர சக்திகளினாலும் ஆதரிக்கப்பட்ட பல்வேறு தேசிய இயக்கங்கள் தொடர்பாக ஆதரவு நிலைப்பாட்டை இவர் நிராகரிப்பதில் போய் முடியும்.//

உலகில் யாரும் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதில்லை. இது தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, போலந்து சுதந்திரம் தொடர்பான பிரச்சினையில் லெனினுக்கும், ரோசா லக்சம்பெர்க்கிற்கும் இடையில் நடந்த விவாதங்களை குறிப்பிடலாம். ரோசா லக்சம்பேர்க் ஒரு போலிஷ் இனத்தவராக இருந்த போதிலும், பிற்போக்கான தேசியவாத தலைமையின் கீழ் போலந்து சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். அதற்கு மாறாக, சுதந்திர போலந்தில் தேசியவாத பிற்போக்காளர்கள் அரசமைப்பது பற்றி லெனின் கவலையடையவில்லை. அதே நேரம், போலிஷ் தேசியவாதிகள் யூத சிறுபான்மையினரை ஒடுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

ஆகவே, போலந்து சுதந்திரம் தொடர்பாக லெனின் வழங்கியதும் நிபந்தனையுடனான ஆதரவு தான். அப்போதும் ஸ்டாலின் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். போலிஷ் தேசியவாதிகள் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளாக இருப்பது மட்டுமல்லாது, பாட்டாளிவர்க்க புரட்சிக்கும் எதிரானவர்கள் என்று எச்சரித்தார். அன்று ஸ்டாலின் எச்சரித்த மாதிரியே நடந்தது. மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சியை கொண்டு வரும் நோக்குடன் லெனின் அனுப்பிய செம்படை, போலந்து தேசிய இராணுவத்தால் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டது.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை கார்ல் மார்க்ஸ் ஆதரித்தார். அதுவும் நிபந்தனையற்ற ஆதரவு அல்ல. அன்று மார்க்ஸ் கூறிய விளக்கத்தை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அயர்லாந்தில் நிலவுடமையாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்தனர். ஐரிஷ் மக்கள் விவசாயக் கூலிகளாக, பாட்டாளி வர்க்கமாக இருந்தனர். ஆரம்ப காலங்களில் ஐரிஷ் விடுதலைப் போராட்டம் சோஷலிசவாதிகளால் முன்னெடுக்கப் பட்டது. அயர்லாந்தின் விடுதலை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பலவீனப் படுத்தும் என்று மார்க்ஸ் நம்பினார். அதே மாதிரி, இந்தியா போன்ற காலனிகளின் விடுதலையை ஆதரிப்பதன் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கம் முடிவுக்கு வரும் என்று லெனின் நம்பினார்.

இங்கே ஜான் மாஸ்டர் குறிப்பிடும், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒன்றிணைவு எந்த வகையிலும் முற்போக்கான தேசியவாதம் அல்ல. அவை அப்போதே பேரினவாத சிந்தனையுடன் முன்னெடுக்கப் பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பிரஷிய ராஜ்ஜியம், மேற்கு ஜெர்மன் பிரதேசங்களை சேர்த்துக் கொண்டு அகண்ட ஜெர்மனி ஆகியது. (அன்றிருந்த ஜெர்மனி ரஷ்ய எல்லையில் இருந்து பிரெஞ்சு எல்லை வரை விரிந்திருந்தது.) இதுவே பிற்காலத்தில் ஹிட்லரின் நாஸிச கொள்கைக்கு அடிப்படையானது.

கரிபால்டி தலைமையிலான இத்தாலியின் ஒன்றிணைவு, இத்தாலி பேரினவாத வெறியுடன் அங்கிருந்த பல்லின சமூகங்களை அடக்கி ஒடுக்கியது. அதற்கு முன்னர் ரோமை அண்டிய பகுதிகளை தவிர, ஒவ்வொரு மாகாணமும் தனக்கென தனித்துவமான மொழியை கொண்டிருந்தது. இன்றைக்கும் வெனிஸ், சார்டினியா, சிசிலி ஆகிய பிரதேசங்களில் தனியான மொழிகள் பேசப் படுகின்றன. தெற்கில் கிரேக்கர்களும், வடக்கில் ஜெர்மனியர்களும் சிறுபான்மையினர்.

சுருக்கமாக சொன்னால், இத்தாலி பேரினவாத அரசு அங்கிருந்த சிறுபான்மையின மொழிகள் பலவற்றை ஒடுக்கி அழித்து விட்டது. எஞ்சியவர்கள் தமது மொழியை புறக்கணித்து விட்டு, இத்தாலி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவலம். அத்தகைய ஒரு கொடூரமான பேரினவாத இத்தாலியை ஆதரிக்க வேண்டும் என்று ஜான் மாஸ்டர் எதிர்பார்க்கிறார். இதைத் தான் அவர் "மக்களது சுயநிர்ணய உரிமை" என்கிறார். ஆமாம், பேரினவாத வெறியுடன் ஒடுக்கும் பெருந்தேசிய இனத்திற்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது தான். அவற்றை ஜான் மாஸ்டர் போன்றவர்கள் ஆதரிக்கலாம். தாராளமாக.

தேசியவாதம் எப்போதும் முற்போக்கானது அல்ல. அது பல இடங்களில் தனது பிற்போக்குத்தனங்களையும் காட்டியுள்ளது. ஒரு நாட்டில் தோன்றும் தேசியவாதம் குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் பேரினவாதமாக உருமாறுவதையும் கண்கூடாகக் காணலாம். அது மட்டுமல்லாது தேசியவாதம் உலகம் முழுவதும் போர்களுக்கும், பேரழிவுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. சிலநேரம் கிட்டத்தட்ட ஒரே மொழி பேசுவோரும் (உதாரணம்: செர்பியர், குரோவாசியர்), தனித்தனி தேசியங்களாக பிரிந்து போரிட்டு மாண்டு போயிருக்கிறார்கள்.


யார் மார்க்சியவாதி? 


ரகுமான் ஜான்: // கிராம்சி, அல்தூசர்… பற்றி பேசும்போது யூரோ கொம்யூனிச பயப்பிராந்தி எழுப்பும் கலையரசன், மூன்றாம் உலகைச் சேர்ந்த முக்கியமான கோட்பாட்டாளர்களான பெனான், அமில்கார் கப்ரால், சமீர் அமின், அந்தர் குந்தர் பிராங், சேகுவேரா போன்றவர்களையும் நிராகரிப்பது ஏன்//

ஒரு நீதிக்கதையில் வரும் பிராமணன் பரிசலில் ஆற்றைக் கடக்கும் போது ஒடக்காரனிடம் கேட்டானாம் "நீ வேதங்கள், இதிகாசங்கள் படித்திருக்கிறாயா?" அதே மாதிரி ஜான் மாஸ்டர் என்னிடம் கேட்கிறார். "அல்தூசர், கிராம்சி, பேனான், அமில் கப்ரால் எழுதிய கோட்பாட்டு நூல்களை படித்திருக்கிறாயா?" கனடாவில் நடந்த கூட்டத்தில் "ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேலான மார்க்சிய சஞ்சிகைகள் வெளிவருகின்றன... அவற்றை எல்லாம் படித்தீர்களா?" என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பெயர் அறிவுஜீவித்தனம். மேலைத்தேய கதிரை மார்க்சிஸ்டுகள் பலரிடம் இத்தகைய போக்கு உள்ளது. கல்லூரியில் பேராசிரியர் வேலை அல்லது வேறெதாவது உத்தியோகம் பார்ப்பவர்கள், வீட்டுக்கு வந்து கட்டுக்கட்டான புத்தகங்களை படித்து விட்டு மேதைமைத்தனத்துடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவர்களும் வழமையான முதலாளித்துவ அறிவுஜீவிகள் போன்று தான் நடந்து கொள்வார்கள்.

நான் யாரையும் நிராகரிக்கவில்லை. கிராம்சி முதல் சேகுவேரா வரை யார் எழுதிய புத்தகத்தையும் யாரும் வாசிக்கலாம். அதில் தவறில்லை. அவற்றை எல்லாம் நானும் வாசித்து இருக்கிறேன். அதைத் தவிர, ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிடாமல் விட்ட, பகுனின், புருதோன், போன்ற அனார்க்கிச கோட்பாட்டாளர்களின் நூல்களையும் வாசித்து இருக்கிறேன். இங்கே கவனத்தில் எடுக்க வேண்டியது வெறும் நூல்களோ, அவற்றை எழுதியவர்களோ அல்ல. அதற்கு மாறாக, பாட்டாளிவர்க்க புரட்சிக்கு, வர்க்கப் போராட்டத்திற்கு யார் சரியான பாதையை காட்டுகிறார்கள் என்பதே முக்கியம். இது ஒரு நடைமுறை சார்ந்த விடயம்.

கிராம்சி, அல்தூசர் போன்றவர்களது எழுத்துக்கள் யூரோ கம்யூனிசத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்த படியால் நிராகரிக்கப் படுவதை மறுக்கவில்லை. அவர்களது நூல்களை வாசிப்பது தவறல்ல. ஆனால், யூரோ கம்யூனிசம் பேசிய ஐரோப்பியக் கட்சிகள், அவற்றை தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது போன்று, நாமும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் தவறென்கிறேன்.

யூரோ கம்யூனிசம் என்றால் என்ன? நாம் முதலில் இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஐம்பதுகளில் ஐரோப்பாவில் பனிப்போர் தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடந்தன. "ஸ்டாலினின் கொடுங்கோன்மை, குலாக் சிறைகள், இலட்சக் கணக்கான கொலைகள்..." இவ்வாறு எதிர்மறையான பிரச்சாரங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிசம் அடக்கப் பட்ட காரணத்தால், பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்க விடாமல் முடக்கப் பட்டன. அந்த தருணத்தில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தன. அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கிய திருத்தல்வாதக் கோட்பாடு தான் "யூரோ கம்யூனிசம்".

இரண்டாம் உலகப்போர் முடிவில், இத்தாலியின் பெரும் பகுதி கம்யூனிஸ்ட் கெரில்லாக்களால் விடுதலை செய்யப் பட்டது. போர்க்குணாம்சம் கொண்ட கட்சி உறுப்பினர்கள் ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயாராக இருந்தனர். இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி சரியாக நடந்து கொண்டிருந்தால், அன்றே இத்தாலி ஒரு சோஷலிச நாடாக வந்திருக்கும். ஆனால், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிப் பாதையை நிராகரித்தது. அமெரிக்கப் படைகளுடன் ஒத்துழைத்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விரும்பி ஏற்றுக் கொண்டது.

யூரோ கம்யூனிசம் என்பது ஒரு திரிபுவாதக் கொள்கை. வர்க்கப்போராட்டத்தை ஒதுக்கி விட்டு, முதலாளித்துவ அதிகார வர்க்கத்துடன் ஒத்துழைக்கும் அரசியல். முதலாளித்துவ சக்திகளுடனான பாட்டாளிவர்க்க பகை முரண்பாட்டை மறுதலித்து விட்டு, அதனோடு ஒத்தோடும் அரசியலுக்கு என்ன பெயர்? அதை "புலிகளின் மொழியில் சொன்னால் ஒட்டுக்குழு அரசியல்" என்று குறிப்பிட்டு இருந்தேன்.

ரகுமான் ஜான்: //தம் கைவசமுள்ள சில வறட்டுச்சூத்திரங்களில் மூழ்கி, அவற்றிற்கு வெளியில் ஒரு பிரமாண்டமான அறிவுலகமும், அதில் நடைபெறும் தீவிரமான விவாதங்களும் பற்றி அறியாதவர்களாக, தமது வறட்டுச்சூத்திர தூக்கத்தில் (Dogmatic Slumber) சுகம் காண்பவர்களாக உள்ளார்கள். வறட்டுச்சூத்திரத்தில் சிக்கியுள்ள இவர்கள் அதற்கு வௌியில் வர மறுப்பதுதான் காரணமாக இருக்க முடியும் அல்லவா//

இது ஏற்கனவே முதலாளித்துவவாதிகளால் செய்யப்பட்டு வந்த கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம். மேற்குலகம் நீண்ட காலமாகவே ட்ராஸ்கிசம், யூரோ கம்யூனிசம், பின் நவீனத்துவம் போன்ற திரிபுவாத போக்குகளை ஆதரித்து வந்துள்ளது. இத்தகைய திரிபுவாத, திருத்தல்வாதக் கொள்கைகளால் முதலாளித்துவ அதிகார வர்க்கத்திற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை. இவற்றை விரும்பியவாறு கையாள முடியும். எக்காலத்திலும் வன்முறைப் பாதையை நிராகரிக்கும், மகாத்மா காந்தி போன்ற அஹிம்சாவாதிகளை அரசுகள் அங்கீகரிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அதனால் தான் இதனை "ஒட்டுக்குழு அரசியல்" என்றேன். சரியாகத் தானே சொல்லி இருக்கிறேன்?

அத்துடன், ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் தொனிக்கும் அறிவுஜீவி மேட்டிமைத்தனத்தை கவனிக்கவும். "ஒரு பிரமாண்டமான அறிவுலகம்", "தீவிரமான விவாதங்கள்", "வறட்டு சூத்திர தூக்கம்".... ஆஹா! சான்றோரின் சபைகளில் நடக்கும் விவாதங்களை புரிந்து கொள்ள முடியாத பாமரர்கள் கூனிக்குறுகி கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும். நான் பல தடவைகள் ஜான் மாஸ்டரின் அறிவுஜீவி மனப்பான்மையை எதிர்மறையான அர்த்தத்தில் குற்றம் சாட்டி வந்துள்ளேன். அவரோ திரும்பத் திரும்ப நான் சொன்னது சரியென நிரூபித்த வண்ணமே உள்ளார்.

ஐயா, பெரியவரே! மார்க்சியம் என்பது தங்களைப் போன்ற மெத்தப் படித்த அறிவுஜீவிகளின் விளையாட்டுப் பொருள் அல்ல. அது அதிகம் படிக்காத பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலைக் கோட்பாடு. தொழிற்சாலையில் நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்து விட்டு வரும் தொழிலாளிகளிடம், அல்தூசர், கிராம்சி, பெனான், அமில்கார் கப்ரல் எல்லாம் கொடுத்து படிக்க சொல்லிக் கட்டாயப் படுத்த முடியாது. இன்று பல பல்கலைக்கழக பட்டதாரிகளே இந்தப் பெயர்களை கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள்.

எமது பிரதானமான குறிக்கோள் வர்க்கப்போராட்டம். மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புதிய ஜனநாயகப் பாதையில் பாட்டாளிவர்க்க்கத்தை வழிநடத்த வேண்டும். படிப்பறிவில்லாத பாமர மக்களையும் வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துவதற்கு சில தத்துவார்த்த நூல்கள் இருக்க வேண்டியது அவசியம். அவற்றை நீங்கள் "வறட்டு சூத்திரம்" என்று புறக்கணிக்கலாம். ஆனால், உழைக்கும் மக்கள் அவற்றை தமது தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

கனடாவில் ஆற்றிய உரையில், மாவோவின் மேற்கோள்கள் என்ற சிறு கைநூலை கிண்டல் அடித்து தங்களது அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தினீர்கள். வயலில் சேற்றுக்குள் நாற்று நடும் விவசாயிகளும், தொழிற்சாலையில் இயந்திரங்களுடன் மாரடிக்கும் தொழிலாளிகளும், உங்கள் அளவிற்கு படிக்கவில்லை என்பது உண்மை தான். அதற்காக அவர்களுக்கு சமூக- அரசியல் அறிவு தெரியக் கூடாது என்பதில்லையே? அவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளும் உரிமையை மறுப்பதற்கு நீங்கள் யார்?

"மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார் மாவோ. அவர் எழுதிய பல்வேறு கோட்பாட்டு நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மேற்கோள்கள் கொண்ட சிறு கைநூல், பாட்டாளிவர்க்க கல்வியை நோக்கமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. பாடசாலை, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளுடன் சேர்ந்து பகல் முழுவதும் வயலில் வேலை செய்தனர். மாலை நேரங்களில் மாவோவின் மேற்கோள்கள் நூலில் இருந்து சிலவற்றை கற்று தெளிவு படுத்திக் கொண்டனர்.

ஜான் மாஸ்டர் என்ற மெத்தப் படித்த அறிவுஜீவி கிண்டல் அடிக்கும் "மாசேதுங் மேற்கோள்கள்" நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது? ஒருவர் மேலோட்டாமாக உள்ளடக்கத்தை பார்த்தாலே புரியும். கம்யூனிஸ்ட் கட்சி ஏன் அவசியம்? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? முரண்பாடுகளை கையாள்வது எப்படி? மக்கள் யுத்தம் எப்படி நடத்தப் பட வேண்டும்? இவற்றைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தல், படிப்பு, வேலை முறைகள், ஜனநாயகம், கலை, கலாச்சாரம் என்று பல்வேறு விடயங்ளை பற்றி எழுதப் பட்டுள்ளது. ஜான் மாஸ்டர் இவை எதையும் படிக்காமலே "வறட்டு சூத்திரம்" என்று நிராகரித்து விடுகிறார்.

ரகுமான் ஜான்: //கலையரசன் என்னை ஒரு மார்க்சியவாதி இல்லை என்கிறார். ஒட்டுக்குழு மார்க்சியவாதி என்கிறார். சரி, ஒருவர் மார்க்சியவாதியா, இல்லையா என்பதை யார், எந்த அடிப்படையில் தீர்மானிப்பதாம்? இதற்கு ஏதாவது நிறுவனம், அல்லது நபர்கள் உரிமம் பெற்றவர்களா? இந்த அதிகாரத்தை கலையரசனுக்கு கொடுத்தது யார்?//

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளிவர்க்க விடுதலைக் கோட்பாடு. அதன் தத்துவார்த்த அடிப்படை வர்க்கம் போராட்டம். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ வர்க்க சர்வாதிகார அரசை ஒரு வர்க்கப் புரட்சி மூலம் தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதை குறிக்கோளாகக் கொண்டது. இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஒருவர் மார்க்சியவாதியாக இருக்க முடியாது.

ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் எந்தவொரு இடத்திலாவது வர்க்கப்போராட்டம் பற்றிய சிறு குறிப்பு வருகிறதா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை. கனடாவில் அவர் நிகழ்த்திய உரையிலும் வர்க்கம் பற்றி எதுவும் பேசவில்லை. இதை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். சரி, அது போகட்டும். எனக்கான எதிர்வினையிலாவது வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றி பெயருக்கு ஓரிரு வார்த்தைகள் எழுதி இருக்கலாம். அதுவும் இல்லை.

இதுவரையில் ஜான் மாஸ்டர் வர்க்கபோராட்டம் பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. அவர் இப்போது ஒரு முழுமையான வலதுசாரி- தேசியவாதி. வலதுசாரிகள் வர்க்கங்களுக்கு இடையிலான பகை முரண்பாட்டை புறக்கணித்து, தேசியத்தின் பெயரில் வர்க்க சமரசத்தை போதிப்பார்கள். குறிப்பாக, முதலாளிகளுடன் முரண்பட மாட்டார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத ஒட்டுக்குழு அரசியலுக்கு என்ன பெயர் வைக்கலாம்? இதைத் தீர்மானிப்பவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள். வர்க்கப் போராட்டம் கூர்மையடையும் காலத்தில் தங்கள் பக்கம் நிற்பவர்கள் யார், எதிரிகளின் பக்கம் நிற்பவர்கள் யார் என்பதை வைத்து தீர்மானிப்பார்கள்.

 *******

Monday, December 24, 2018

மஞ்சள் சீருடை - புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி


17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப் படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் "குட்டி முதலாளித்துவ வர்க்கம்" என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றனர். 

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான் போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும் மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப் பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப் பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப் பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப் பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப் பட்டு, ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக, பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது. 

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர். "நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்..." என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது..

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப் படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள இனப் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப் பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் "புரட்சிக்கு முந்திய காலகட்டம்" என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் "நலன்புரி அரசுகள்" இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுக்களாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள் மெல்ல மெல்ல அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அறவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


- கலையரசன் -

Saturday, December 22, 2018

அரசியல் பழமொழிகள் - ஒரு பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டம்


"ப‌ந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" - ப‌ண்டைய‌ த‌மிழ் பாட்டாளி வ‌ர்க்க‌ போர் எதிர்ப்புக் கோஷ‌ம்.

மேற்ப‌டி ப‌ழ‌மொழியின் நேர‌டி அர்த்த‌ம் சில‌ருக்கு ஏற்க‌ முடியாதுள்ள‌து. குறிப்பாக‌ த‌மிழ் மேட்டுக்குடி பூர்ஷுவா வர்க்க‌த்தின‌ர், "இந்த‌ப் ப‌ழ‌மொழி த‌மிழ‌ர்க‌ளை தேச‌ப் ப‌ற்று இல்லாத‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிக்கிற‌து" என்று ப‌த‌றுகிறார்க‌ள். அத‌னால் ப‌ல‌ வ‌கையான‌ விள‌க்க‌ங்க‌ள் கொடுத்து ப‌ழ‌மொழிக்கு வேறு அர்த்த‌ம் க‌ற்பிக்க‌ முனைகிறார்க‌ள். அவை பெரும்பாலும் வ‌லிந்து புகுத்திய‌, இட்டுக் க‌ட்டிய‌ க‌ற்ப‌னைக‌ளாக‌ உள்ள‌ன‌.

உண்மையில் இந்த‌ப் ப‌ழ‌மொழி ப‌ண்டைய‌ த‌மிழ் உழைக்கும் ம‌க்க‌ளை நோக்கி சொல்ல‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும். இன்றுள்ள‌தை போன்றே அன்றும் வ‌றுமையில் வாழும் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ளில் இருந்தே காலாட் ப‌டைக்கு ஆட்க‌ள் சேர்க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அன்றிருந்த‌வை எல்லாம் கூலிப் ப‌டைக‌ளே. வாழ் நாள் முழுவ‌தும் ப‌ட்டினி கிட‌க்கும் ம‌க்க‌ள் ம‌த்தியில் கூலிக்கு போரிட‌ ஆள் திர‌ட்டுவ‌து மிக‌ச் சுல‌ப‌ம்.

வ‌றுமையில் வாடும் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள், வ‌ழ‌மையாக‌ கோயில்க‌ளில் கொடுக்க‌ப் ப‌டும் அன்ன‌தான‌ ப‌ந்திக‌ளில் முண்டிய‌டிப்ப‌து வ‌ழ‌மை. இது ஒரு வ‌கையில் அவ‌ர்களை ப‌ட்டினி கிட‌ந்து சாக‌ விடாம‌ல் பாதுகாக்கும் அர‌ச‌ மானிய‌மாக‌ செய‌ற்ப‌ட்ட‌து. அன்றாட‌ம் அரைப் ப‌ட்டினியுடன் ப‌டுப்ப‌வ‌ர்க‌ள் அன்ன‌தான‌ங்க‌ளில் வ‌யிறாற‌ உண்டு ம‌கிழ்ந்த‌ன‌ர். எண் சாண் உட‌ம்பிற்கு உண‌வே பிர‌தான‌ம் என்ப‌தால் "ப‌ந்திக்கு முந்து" என்று சொல்லி வைத்த‌ன‌ர்.

ப‌ண்டைய‌ கால‌ங்க‌ளில் தேசிய‌ இராணுவ‌ம் இருக்க‌வில்லை. ப‌ண‌ம் கொடுக்கும் அர‌ச‌ர்க‌ளுக்கு விசுவாச‌மான‌ கூலிப் ப‌டைக‌ளே இருந்த‌ன‌. காலாட் ப‌டையின‌ராக‌ சேர்த்துக் கொள்ளப் ப‌டும் உழைக்கும் வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ வீர‌ர்க‌ள், பீர‌ங்கித் தீனியாக‌ ப‌லி கொடுக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அத‌னால் தான் "ப‌டைக்கு பிந்து" என்று சொல்லி வைத்த‌ன‌ர்.

உல‌கில் இது வ‌ரையான‌ வ‌ர‌லாறுக‌ள் யாவும் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ வ‌ர‌லாறு என்றார் கார்ல் மார்க்ஸ். அத‌ன் ப‌டி ப‌ண்டைய‌ த‌மிழ‌ர் ம‌த்தியிலும் வ‌ர்க்க‌ விழிப்புண‌ர்வு இருந்திருக்க‌ வேண்டும்.

செல்வ‌ச் செழிப்புட‌ன் வாழ்ந்த‌ ம‌ன்ன‌ர், நில‌ப்பிர‌புக்க‌ள், ம‌ற்றும் அவ‌ர்க‌ளுடைய‌ குடும்ப‌ங்க‌ளும் எத‌ற்காக‌ ப‌ந்திக்கு முந்த‌ வேண்டும்? அவ‌ர்க‌ளுக்குத் தான் இருந்த‌ இட‌த்தில் அறு சுவை உண‌வு உண்ணும் வ‌ச‌தி இருக்கிற‌தே?

அதே மாதிரி, மேல்த‌ட்டு வ‌ர்க்க‌த்தின‌ர் ப‌டைக்கு முந்துவ‌தில்லை. காலாட் ப‌டையின‌ரை முன்செல்ல‌ விட்டு, இவ‌ர்க‌ள் பாதுகாப்பாக‌ பின்னால் செல்வார்க‌ள். சாதார‌ண‌ வ‌றிய‌ குடும்ப‌ப் பின்ன‌ணி கொண்ட‌ ப‌டைவீர‌ர்க‌ள் தான் போரில் பெரும‌ள‌வில் கொல்ல‌ப் ப‌டுவார்க‌ள். ஆகையினால், ப‌டைக்கு பிந்து என்ப‌து அவ‌ர்க‌ளுக்காக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌ அறிவுரை.

********

த‌மிழ் பேசும் பூர்ஷுவாக்க‌ள், த‌மிழ்ப் ப‌ழ‌மொழிக‌ளையும் த‌ம‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளுக்கு ஏற்ற‌வாறு திரித்து, வேடிக்கையான‌ விள‌க்க‌ம் கூறிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். "ப‌ழ‌மொழியும் (பிழையான‌) பொருளும்" என்ற‌ த‌லைப்பில் அவ‌ற்றிற்கு வேடிக்கையான‌ அர்த்த‌ங்க‌ள் க‌ற்பித்து, நூல்க‌ளாக‌ அச்சிட்டும், ஊட‌க‌ங்க‌ளிலும் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

அந்த‌ வ‌ரிசையில் இன்று இன்னொரு ப‌ழ‌மொழி: //வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி//

இத‌ற்கு த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள் கூறும் வேடிக்கையான‌ ஆன்மீக‌ விள‌க்க‌ம்: 
//மேன்மையான‌ வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மீக‌ம் என்னும் வீடு தான் வாச‌ற்ப‌டி என்ப‌தே ச‌ரியான‌ பொருள்.//

இது மிக‌வும் அப‌த்த‌மான‌ பொருள். பொதுவாக‌ ப‌ழ‌மொழிக‌ள் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் இருந்தே உருவாகின்ற‌ன‌. அத‌னால் தான் அவை இல‌குவாக‌ புரிந்து கொள்ள‌க் கூடிய‌ மொழி ந‌டை கொண்டுள்ள‌ன‌.

அன்றும் இன்றும் ஆன்மீக‌ம் சார்ந்த‌ சிக்க‌லான க‌தையாட‌ல்க‌ள் மேட்டுக்குடியின‌ர் க‌லாச்சார‌மாக‌வே இருந்து வ‌ருகின்ற‌ன‌. சாதார‌ண‌ உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்த‌ள‌வு ஆழ‌மான‌ ஆன்மீக‌த் தேட‌ல் இருப்ப‌தில்லை.

வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி இருப்ப‌து போன்று, உல‌கில் உள்ள‌ எல்லாக் குடும்ப‌ங்க‌ளிலும் ஒரே மாதிரியான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தைத் தான் ப‌ழ‌மொழி கூறுகின்ற‌து. அது தான் உண்மையும் கூட‌.

த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள் இந்த‌ப் ப‌ழ‌மொழியை திரிக்க‌ வேண்டிய‌ கார‌ண‌ம் என்ன‌? அங்கே தான் அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன் ம‌றைந்துள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு, ஒரு ச‌ராச‌ரி த‌மிழ்க் குடும்ப‌ம் எதிர்நோக்கும் அதே பிர‌ச்சினைக‌ளைத் தான் ச‌ராச‌ரி சிங்க‌ள‌க் குடும்ப‌மும் எதிர்கொள்கிற‌து. அதே பிர‌ச்சினைக‌ள் ஐரோப்பிய‌, ஆப்பிரிக்க‌க் குடும்ப‌ங்க‌ளிலும் காண‌ப் ப‌டும்.

சுருக்க‌மாக‌: உல‌கில் உள்ள‌ அத்த‌னை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ளுக்கும் ஒரே மாதிரியான‌ பிர‌ச்சினைக‌ள் உள்ள‌ன‌.

உல‌க‌ளாவிய‌ பாட்டாளிவ‌ர்க்க‌ ஒருமைப் பாட்டை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌ மேற்ப‌டி சிந்த‌னை ப‌ண்டைய‌ த‌மிழ‌ர்க‌ள் மத்தியிலும் இருந்திருக்க‌ வேண்டும். அத‌னால் "வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி" என்ற‌ சுலோக‌ம் மூல‌ம் வ‌ர்க்க‌ ஒற்றுமையை வ‌லியுறுத்தி வ‌ந்த‌ன‌ர்.

த‌ம‌து சுய‌ந‌ல‌ன்க‌ளுக்காக‌ தேசிய‌வாத‌, இன‌வாத‌க் க‌ருத்துக்க‌ளை காவித் திரியும் மேட்டுக்குடி த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள், இது போன்ற‌ ப‌ழ‌மொழிக‌ளை திரிப்ப‌து எதிர்பார்க்க‌த் த‌க்க‌தே. உழைக்கும் ம‌க்க‌ளை பிரித்தாள்வ‌தை குறிக்கோளாக‌ கொண்ட‌வ‌ர்க‌ள், ப‌ழ‌மொழியின் உண்மையான‌ அர்த்த‌த்தை சிதைத்து, ஆன்மீக‌ வ‌ர்ண‌ம் பூசி ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌ன‌ர்.

*******

ப‌ழ‌மொழிக‌ளுக்கு த‌மிழ் பூர்ஷுவாக்க‌ளின் த‌வ‌றான‌ விள‌க்க‌ம்....

இந்த‌ வ‌ரிசையில் இன்னொரு ப‌ழ‌மொழி: "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்."

இத‌ற்கு முத‌லாளிய‌வாதிக‌ள் க‌ற்பிக்கும் பிழையான‌ பொருள்:
//ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே "உண்மையான"(?) பொருள்.//

இதுவும் ஒரு பொருத்த‌ம‌ற்ற‌ வேடிக்கையான‌ க‌ற்ப‌னை. அத்துட‌ன் த‌ற்கால‌ முத‌லாளிய‌ கோட்பாட்டுக்கு அமைய‌ த‌னிந‌ப‌ர் வாத‌த்தை தூக்கிப் பிடிக்கிற‌து. மேற்ப‌டி ப‌ழ‌மொழி ப‌கிர‌ங்க‌மாக‌ பொதுவுடைமை பேசுவ‌தால், அத‌ற்கு மாற்றாக‌ த‌னியுடைமை கொள்கையை திணிக்கிற‌து.

"அனைவ‌ரும் ஒருவ‌ருக்காக‌, ஒருவ‌ர் அனைவ‌ருக்குமாக‌" என்ற‌ பொதுவுடைமைக் க‌ருத்து மேற்ப‌டி ப‌ழ‌மொழியில் எதிரொலிக்கிற‌து. ப‌ண்டைய‌ கால‌த் த‌மிழ‌ர்க‌ள் ஒரு பொதுவுடைமை ச‌முதாய‌த்தில் வாழ்ந்த‌ன‌ர். அதில் சில‌ர் "ஊரான் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்க்கும்" க‌ட‌மையில் இருந்த‌ன‌ர். அதே நேர‌ம் த‌ன் பிள்ளையை த‌னியாக‌ப் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்க‌வில்லை. ஒட்டு மொத்த‌ ச‌முதாய‌மும் அந்த‌ப் பிள்ளைக்கு பாதுகாவ‌ல‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.

இது போன்ற‌ ச‌மூக‌ அமைப்பு அமெரிக்க‌ செவ்விந்திய‌ர் ம‌த்தியிலும் காண‌ப் ப‌ட்ட‌து. அதைப் ப‌ல‌ மானிடவிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் எழுதி உள்ள‌ன‌ர். இங்கே நான் கூறும் விள‌க்க‌த்தை ஏற்றுக் கொள்ள‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள், செவ்விந்திய‌ர் ப‌ற்றிய‌ ச‌மூக‌விய‌ல் நூல்க‌ளில் வாசித்து அறிய‌லாம்.

எது எப்ப‌டியோ, 2000 வ‌ருட‌ கால‌ நில‌ப்பிர‌புத்துவ‌ அமைப்பும், 150 வ‌ருட‌ கால‌ முத‌லாளிய‌ அமைப்பும், ப‌ழ‌ந்த‌மிழ‌ரின் பொதுவுடைமை வாழ்க்கை முறையை அந்நிய‌ப் ப‌டுத்தி விட்ட‌ன‌. த‌ற்கால‌த்தில் "நான், என‌து குடும்ப‌ம்" என்று சுய‌ந‌ல‌மாக‌ சிந்திக்கும் போக்கு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து.

த‌ற்கால‌ முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்திற்கு ஏற்ற‌வாறு "ஊரான் வீட்டுப் பிள்ளையான‌ க‌ர்ப்பிணி ம‌னைவி" என்று த‌லைகீழாக‌ சிந்திக்கிறார்க‌ள். ப‌ண்டைய‌ கால‌த்தில் யாரும் க‌ட்டிய‌ ம‌னைவியை ஊரான் வீட்டுப் பிள்ளையாக க‌ருதுவ‌தில்லை. ஏனெனில் ஒரு பொதுவுடைமை ச‌முதாய‌த்தில் எல்லோரும் ஒரே குடும்ப‌மாக‌ வாழ்ந்த‌ன‌ர்.

********