Saturday, August 25, 2018

"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" - நேர்காணல்

இலங்கையில் வெளிவரும் தேசம் (ஓகஸ்ட் 2018) பத்திரிகையில் பிரசுரமான எனது நேர்காணல்.  



"இனப்பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" 
- எழுத்தாளர் கலை மார்க்ஸ் -  

கேள்வி: அரசியற் செயற்பாடுகளுடனும், கலை இலக்கியத்துறைக்குள்ளும் செயற்பட்டுவரும் நீங்கள் தேசம் வாசகர்களுக்காக வேண்டி உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்க முடியுமா?

பதில்:
நிச்சயமாக, நான் சிறுவயதில் கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கை யாழ்ப்பாண வாழ்க்கை. அதனால் அனைத்து சமூகங்களுடனும் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கு சிறு வயதிலிருந்தே கிடைத்துள்ளது.

எனது குடும்பம் இடதுசாரி குடும்பமல்ல. அவர்கள் வலதுசாரீய தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள். அன்றையக் காலகட்டத்தில் கொழும்பில் தான் தமிழ் தேசிய அரசியல் தொடங்கியதென்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் தான் இது சம்பந்தமான கூட்டங்கள், பிரிவினைக்காக தமிழினத்திற்கான கோஷங்கள் அதிகமாக எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட மத்தியத்தர கொழும்புத் தமிழர்கள் இவ்வாறான கோஷங்களை முன்வைத்து தங்களது வர்க்க நலனுக்காகவும், அரசியற் தேவைகளுக்கும் முன்வைத்தனர். கொழும்பு சார்ந்த தலைமைகளும் இதைத்தான் செய்தனர். இவர்களுக்கான ஆதரவு மக்கள் தளம் யாழ்ப்பாணத்திலிருந்தது. எனது பெற்றோர்கள் மூலம் சிறுவயதிலிருந்து இதைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

எனது பெற்றோர்கள் படித்த மத்தியத்தர வர்க்க சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தனர். எனது தந்தை கொழும்பு நூலகத்தில் விற்பதற்கிருந்த பழைய புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருவார். என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம் என்று அவருக்கே தெரியாது. அதில் கார்ல் மார்க்ஸ் இனுடைய புத்தகங்கள், பெரியாருடைய புத்தகங்கள், மாக்சிம் கோர்கியின் 'நான் பயின்ற பல்கலைக்கழகம்", லெனின் 'ஏழை மக்களுக்கு" போன்ற பல புத்தகங்கள் இருந்தன. அந்த வாசிப்பு எனக்கு வேறுபட்ட அறிவைக் கொடுத்தது.

என்னுடைய 24 வயதில் (1991 ஆம் ஆண்டு) நான் வெளிநாடு சென்றேன். நான் முதலாவதாக சுவிசர்லாந்திற்கே சென்றேன். நான் ஒரு முறை வெளிநாடு செல்லும் போது பிரித்தானிய பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் தமிழ், தமிழர், பண்பாடு, கலாசாரம், மூத்தமொழி என்றெல்லாம் பேசினேன். நான் தமிழ் தேசிய சூழலில் வாழ்ந்திருந்ததால் தேசியவாதியாக பேசினேன். அவர் எல்லாவற்றையும் கேட்டு விட்டு போகும்போது, என்னிடம் ஐரோப்பியர்களுக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஐரோப்பியர்களுக்கென்று வரலாறும் உள்ளது. முதலாவது அதைப் படியுங்கள் என்றார். இவ்வாறான தேசியவாதக் கருத்துக்களினால் தொடர்பு அறுந்துபோனது.

நான் ஐரோப்பாவிற்கு சென்ற காலத்தில் உலகில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அன்றையக்கால கட்டத்தில் தான் பெர்லின் சுவர் விழுந்தது. சோவியத் யூனியன் உடைந்தது. அன்றைய தொலைக்காட்சிகளில் அவை தான் முக்கியமானச் செய்தி. ரோமானியாவின் சதிபுரட்சிக் காரணமாக இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. நான் ரோமானிய விமான நிலையத்திலிருக்கும்போது சுற்றிலும் நிறைய இராணுவத்தினர் இருந்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு எல்லோரும் சோஷலிசம் விழுந்ததென்று மாற்று வழி தேடினர். 

அந்த நேரத்தில் நான் அனாகிட்ஸ்களோடு இணைந்து கொண்டேன். அடுத்ததாக ட்ரொஸ்க்கி அமைப்பினரோடு சேர்ந்தேன். அதன்போது நான் துருக்கி அகதி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ட்ரொஸ்க்கிவாதி. டொனிகிலிப்ட்டின் புத்தகத்தை அவர் துருக்கி மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அதில் லெனின் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் இருந்தன. இவருக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலின் செய்த கொலைகளையெல்லாம் லெனின் செய்த கொலைகள் போன்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். நானும் அவர்களுடைய தொடர்பை விட்டுவிட்டேன்.

நான் 1995 ஆம் ஆண்டு நெதர்லாந்து வந்தேன். நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் உள்நாட்டு அரசியலை மட்டுமன்றி சர்வதேச அரசியலைப் பற்றியும் பேசினர். நான் இக்கட்சியில் கூட்டம் நடாத்தி, ஊர்வலம் சென்று பத்திரிகை விற்று எழுத்துலகிற்குள் பிரவேசித்தேன்.

கேள்வி: இன்றைய பொதுநல இலக்கியப் படைப்புகளுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான உறவு எப்படியாக உள்ளது?

பதில்:
இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் மிக மிகக்குறைந்து போயுள்ளது. அநேகமாக சினிமாவில் தான் மூழ்கிபோயுள்ளார்கள். குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களை மட்டுமே பார்க்கின்ற நிலைமைகளே உள்ளன. இளைஞர்கள் மத்தியில் தேடல் குறைந்து போய் விட்டதாக நான் நினைக்கிறேன். யுத்த நேரத்திலும் குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களையே பார்த்தனர். அவர்களுக்கு அதுபோதும் என்பதுபோல் இருந்து கொள்வார்கள். 

சமூகம் சார்ந்த வாசிப்பு எதுவுமே இல்லை. படித்தவர்கள் மத்தியிலும் வாசிப்பு குறைந்துபோய் விட்டது. இந்த முதலாளித்துவ சிந்தனை சரியானவற்றைத் தெரிந்துக் கொள்ள விடாது. அதேபோல் வாசிக்கவும் விடாது. உழைப்பு, பணம், களிக் கொண்டாட்டத்திற்குள்ளேயே இளைய தலைமுறைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

கேள்வி:
முன்பு சமூகத்தையே புரட்டிப்போட்ட எழுத்தாக்கங்கள் படைக்கப்பட்டன. இன்று அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்:
மார்க்சிம் கோர்க்கியினுடைய காலத்திற் கூட நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அநேகமாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் படித்திருந்தார்கள். அன்றைய மக்களின் சிந்தனை முறை வித்தியாசம். அதைப் புரட்சிகர காலகட்டம் என்றும் சொல்லலாம். லெனின் கூட மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் தான். அவருடைய உறவினர்களும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி வந்தவர் ஏன் இப்படி சிந்திக்க வேண்டும்?

அந்தக் காலக்கட்டமும் வேறு. அந்த நிலைமை இன்று இல்லையென்று சொல்ல முடியாது. மழுங்கடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே அதை செய்திருக்கிறார்கள். முதலாளித்துவ வாதிகளும் முட்டாள்கள் கிடையாது. புரட்சிகள் ஏற்படும்போது எப்படி தடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதை தடுப்பதற்கான திட்டங்களை சிந்தித்து வகுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கான அவர்களின் ஒரு தந்திரோபாயம் தான் வசதி வாய்ப்புகளைக் காட்டி விடுதல்.

ஐரோப்பியர்கள் இலங்கையை வறுமையான நாடாகவே பார்க்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் வசதியான குடும்ப வாழ்க்கையை வாழ்கிறோம் என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையாக எல்லா வீடுகளிலும் மோட்டார் வாகனங்கள் உள்ளன. முதலாளித்துவம் இப்படியான கட்டுக்குள் மக்களை வைத்துள்ளது. முதலாளித்துவத் திட்டம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. வறுமையான குடும்பத்தில் உள்ள ஒருவரை வசதியான ஒரு இடத்தில் விடும்போது, அவர் ஒரே நாளில் மாறிவிடுவார். முதலாளித்துவ வசதிகளை காட்டிவிடுகின்றது.

கேள்வி:
வாசிப்பு பழக்கம் புத்தகத்தில் இருந்து நகர்ந்து சமூக வளைத்தளங்களுக்கூடாக முக நூல் என்று நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இடதுசாரிகளுடைய செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில்:
இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயம். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லலாம். இணையத்தை ஆரம்பிப்பதிலிருந்தே பயன்படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். 1992 இல் இணையம் வந்தது. அந்த நேரம் இணையம் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இணைய பாவனை குறைவாக இருந்த காலத்திலேயே இடதுசாரீய கருத்துக்களும், மார்க்ஸிசம், லெனினிசம் என்று எல்லாவற்றையும் புகுத்திவிட்டன. வர்த்தக மயப்படுத்தி வந்த முதலாளித்துவத் தளத்தை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த தளம் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை இணைக்கிறது.

மக்கள் மத்தியில் பொதுவுடமைச் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்கள். இன்று நிலவும் அரசியல் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை. வர்க்கப் போராட்டத்தை நாம் தெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு ஊடகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மிக இலகுவானதுதான் சமூக வலைத்தளம்.

பத்திரிகையை எங்கு அச்சடிக்கிறார்கள்? எங்கு செல்கிறது? எங்கு வருகிறார்கள்? என்றெல்லாம் தெரியாது. சமூக வலைத்தளங்களை அரசாங்கத்தால் முடக்கமுடியும். அதுவரையில் அதன் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம். மக்கள் மத்தியில் ஊடுருவிச் செல்வோம். ஆனால் இதை அதிகமாக வலதுசாரிகள் தான் பயன்படுத்துகிறார்கள். 'ப்ளொக்" மூலம் பதிவுகளை பதிவிட்டு இத்தாலியில் வலதுசாரிகள் பெரிய கட்சியையே உருவாக்கியுள்ளார்கள். இதுபோன்று இடதுசாரிகளுக்கும் முடியும்.

எங்களுடைய கருத்துக்களை நாம் கதைக்க வேண்டும். அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது முரண்பாடு அதிகரித்து வெடிக்கும்போது தான் போராட்டங்கள் வெடிக்கும். அதுவரைக்கும் இவ்வாறான முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் வெளியில் கொண்டுவர வேண்டும்.

கேள்வி :
புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவும் அரசியற் சிந்தனையும் எவ்வாறு உள்ளது?

பதில்:
உண்மையாக சொல்லப் போனால் அவர்களுக்கு எந்த வித அரசியலும் கிடையாது. யுத்த சூழலில் இருந்து வந்ததால் தமிழ் தேசிய அரசியலோடு நெருக்கம் அதிகம். ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன? அதன் மூலம் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுக்கூட தெரியாதவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார்கள். தனி நாடு வேண்டுமென்றார்கள். தனி நாடு கிடைத்திருந்தாலும் அவர்கள் மறுபடியும் இலங்கைக்கு வரமாட்டார்கள். எரித்திரியாவை உதாரணமாக சொல்லலாம்.

கேள்வி:
இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்:
அவர்கள் பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் இலாபத்திற்கே ஆகும். தீர்க்கவேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ தீர்த்திருக்கலாம். இந்த பிரச்சனைகளினால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இருந்தாலும் அவர்களுடைய இலாபம் கருதி அவர்கள் செய்கிறார்கள். இது ஒரு செயற்பாடு (system)  

கேள்வி:
எவ்வாறானதொரு அரசியலை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:
முதலாளித்துவ ஆட்சியில் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இது இருக்கிறது தான் அவர்களுக்கு சாதகம். இது மாறாது. சிலர் கேட்கலாம் சிங்கப்பூர் மாறவில்லையா? ஹொங்கொங் மாறவில்லையா? என்று. இங்கு நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சீனாவிற்கு பக்கத்தில் ஹொங்கொங் உள்ளது. வியட்நாமிற்கு பக்கத்தில் தான் சிங்கப்பூர் உள்ளது. ஆகவே சோஷலிச நாடுகளுக்கு போட்டியாக ஏகாதிபத்திய நாடுகளால் இந்நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேறொன்றும் அந்த நாடுகளின் மேல் கொண்ட பாசத்தால் அல்ல. ஒரு வேளை இந்தியா சோஷலிச நாடாக இருந்திருந்தால் இலங்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது முதலாளித்துவ ஆட்சியில் ஊழல் என்பது அவர்களுக்குச் சரியானது இங்கு பொருளாதாரத்தை கவனிக்கமாட்டார்கள். இதனால் கடன் வழங்குபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். வட்டிக் கிடைக்கும் என்பதால் வழங்கிய பணத்தில் ஊழல் செய்தாலும் வழங்கியவர்களுக்கு கவலையில்லை. அவர்கள் கேள்வி கேட்காது மறுபடி மறுபடி கடன் வழங்குவார்கள். ஊழல் தொடரும். இவ்வாறான கடன் வழங்கல் மூலம் நாட்டை மறு காலனியாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிர்மறையான சோஷலிச ஆட்சி மலரவேண்டுமென்பதே எங்கள் கனவு.

[நேர்கண்டவர்: சதீஷ்]


Thursday, August 09, 2018

"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்" கலைஞருக்கு அஞ்சலி


தமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். "ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக" பார்ப்பன அடிமைகள் செய்து வரும் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் முகமாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். அகண்ட பாரதக் கனவு காணும் இந்துத்துவா- சமஸ்கிருத பேரினவாதிகளின் தீய நோக்கம் நிறைவேறுவதற்கு தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இன்று கலைஞரது சாவிலும் வன்மம் கொண்டு தூற்றும் விஷமிகள், அதை ஈழத்தமிழர் பெயரில் செய்வது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர்களில் பலர் புலி ஆதரவு வேடம் போடும் போலித் தமிழ்த்தேசியவாதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. "ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி." - இவ்வாறு சொன்னவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். வன்னிக் காடுகளுக்குள் இந்திய இராணுவத்துடன் உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர் கருணாநிதி ஈழம் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை. அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக மாயையில் திளைத்திருந்த நடுத்தர வர்க்க ஈழத் தமிழர்கள், ஒரு இந்திய மாநில முதலமைச்சரின் அதிகார வரம்பு பற்றி அறியாதிருந்தனர். சிலர் அந்த அறியாமையை மூலதனமாக்கி கலைஞர் மீது வசைபாடுகின்றனர்.

எண்பதுகளில், எம்ஜிஆர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தான், பெருமளவு ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றனர். அந்தக் காலத்தில் ஈழ அகதிகளுக்கு பல உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அவர்கள் படிக்க முடியாது, வேலை செய்ய முடியாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர்களை அங்கு தற்காலிகமாக தங்க வைத்திருப்பதாகக் கூறி, 1987 இல் இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டவுடன் திருப்பி அனுப்பினார்கள்.

அதே வருடம் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தப் போர் அடுத்து வந்த இரண்டாண்டுகள் நீடித்தது. அப்போது மீண்டும் பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடினார்கள். ஒப்பந்தக் காலத்தில் திருப்பி அனுப்பப் படாமல் தமிழ்நாட்டில் தங்கி விட்ட அகதிகளும் இருந்தனர். அந்த நேரத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். ஈழத்தமிழ் அகதிகளை வரவேற்று அரவணைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.

"கலைஞரின் காலம் பொற்காலம்" என்று இன்றும் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நன்றியுடன் நினைவுகூருகின்றனர். இது மிகைப்படுத்தல் அல்ல. முன்பு என்றும் இல்லாதவாறு ஈழ அகதிகள் படிக்கவும், வேலை செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். அத்துடன் பணக் கொடுப்பனவுகளும் கூட்டிக் கொடுக்கப் பட்டன. அதற்கு முன்னர், (எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்) மிகவும் சொற்பமான தொகையே கிடைத்து வந்தது. அது கால் வயிற்றுக்கு கஞ்சி ஊத்தவும் போதாது என்று சொல்லியும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்தனர்.

"எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் புலிகளுக்கு நிதியுதவி வழங்கினார்" என்ற காரணத்தால், கருணாநிதி வெறுப்பாளர்கள் எம்ஜிஆரை வானளாவ புகழ்கின்றனர். அந்தக் காலகட்டம் முற்றிலும் மாறுபட்டது. எத்தனை ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அத்தனைக்கும் தமிழ்நாட்டில் அடைக்கலம் வழங்கப் பட்டது. அவர்கள் அங்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும் அனுமதிக்கப் பட்டது. இதெல்லாம் இந்திய மத்திய அரசின் ஒப்புதல் இன்றி நடக்கவில்லை.

அப்போது இரண்டு பெரிய வலதுசாரிய இயக்கங்கள் இந்திய அதிகார வர்க்கத்தினரால் இனங் காணப்பட்டன. ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகள். மற்றது, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ). முன்னையதற்கு எம்ஜிஆரும், பின்னையதற்கு கருணாநிதியும் புரவலர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் இந்திய மத்திய அரசுக்கு தொடர்பாளர்களாக இருந்தனர். புலிகளுக்கு எம்ஜிஆரும், டெலோவுக்கு கருணாநிதியும் அள்ளிக் கொடுப்பதாக, ஏனைய இயக்கங்களை சேர்ந்தவர்கள் சொல்லிப் பொறாமைப் பட்டனர்.

புலிகளால் டெலோ அழிக்கப் பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக கலைஞர் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், அதுவே உண்மையான காரணம் அல்ல. ஏனெனில், சகோதர யுத்தத்தில் சிந்தப் பட்ட இரத்தம் காய்வதற்கு முன்னரே, கலைஞர் டெலோவை கைவிட்டு விட்டு, புலிகளை ஆதரித்து வந்தார். தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை நியாயப் படுத்துவதற்காக, புலிகளால் கொல்லப் பட்ட ஒரு டெலோ போராளியின் சகோதரி எழுதிய கடிதம் ஒன்றை முரசொலி பத்திரிகையில் பிரசுரிக்க வைத்தார். "இன்றைய சூழ்நிலையில் ஈழத்தமிழரின் நன்மை கருதி புலிகளை ஆதரிக்க வேண்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுப்பதாக அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. அது பின்னர் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் மீள்பிரசுரம் செய்யப் பட்டது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். யுத்தம் முடிந்து திரும்பி வந்த இந்தியப் படையினருக்கு வரவேற்பளிக்க மறுக்கும் அளவிற்கு கலைஞருக்கு துணிச்சல் இருந்தது. இப்படியான நிலைப்பாடு, இந்தியப் பெருந்தேசியக் கண்ணோட்டத்தில் தேசத் துரோகமாக கருதப் படும் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான். இந்திய மத்திய அரசின் பாசிச அடக்குமுறை காரணமாக, தீவிர புலி ஆதரவாளர்களாக இருந்த திமுகவினர், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக மாற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பிற்காலத்தில் இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி, மதிமுக, பாமக, விசிக போன்ற சிறிய கட்சிகள் புலி ஆதரவு அரசியலை கையில் எடுத்தன. ஆனால், அவர்கள் எல்லோரும் புலனாய்வுத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருந்தனர்.

எந்தக் கட்டத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது. முந்திய காலங்களில் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறை சென்ற நேரம், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தொண்டர்கள் பலர் இருந்தனர். இருப்பினும் உயிரையும் கொடுக்கத் தயாரான தொண்டர்கள் தலைமை வழிபாட்டுக்கு பயன்படுத்தப் பட்டனரே அன்றி, தமிழ் நாட்டை தனி நாடாக்கும் போராட்டத்திற்காக வழிநடத்தப் படவில்லை.

1963 ல் பிரிவினை பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், இந்திய அரசு “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா” வை அறிவித்தது. அப்போதே திராவிட நாடு எனும் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டவர் கலைஞர். அது நடந்து ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு தான், இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வட்டுக்கோட்டை தீர்மானமாக அறிவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு ஆயுதப் போராட்டம் நடந்ததும், அது பேரழிவில் முடிந்ததும் வரலாறு.

அறுபதுகளில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டு, இந்திய பெருந்தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்ட கலைஞர், 2009 ம் ஆண்டு "ஈழம் வாங்கித் தரவில்லை" என்ற மாதிரி பேசுவது பேதைமை. அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை. இது போன்ற அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் கலைஞர் சாதித்தது என்ன என்பதைப் பார்க்க வேண்டும். 

கலைஞர் குடும்பத்தினரின் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் பற்றிய விபரம், கருணாநிதிக்கு மட்டுமே உரிய  விசேட குணம் அல்ல. அது இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு அரசியல்வாதிகளுக்கு வழங்கும் "சலுகை".  முதலாளித்துவ கட்டமைப்பினுள் நடக்கும் "ஜனநாயக" பொதுத் தேர்தல்கள், மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்த பிரதிநிதிகளை பணத்தாசை காட்டி வளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குப் பலியானவர் கலைஞர் மட்டுமல்ல.

இலட்சிய தாகம் கொண்ட ஆரம்ப காலங்களில், தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக காட்டிக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், பதவியில் அமர்ந்ததும் ஊழல்களில் மாட்டிக் கொண்டு சீரழிந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி, ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக மாறியது. இதுவும் திமுக வுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம் அல்ல. பிரிட்டனில் தொழிற்கட்சி, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி எதுவும் இந்த சீரழிவில் இருந்து தப்பவில்லை.

சிலநேரம் முதலாளித்துவக் கட்சிகளும் மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுண்டு. அவற்றையும் நாம் நன்றியுடன் குறிப்பிட வேண்டும். கலைஞரின் திமுக ஆட்சிக் காலத்தில், சேரிகளில் வாழ்ந்தவர்கள் அரசு கட்டிக் கொடுத்த அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியமர்த்தப் பட்டனர். குறிப்பிட்ட சமூக மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு கொண்டுவரப் பட்டது. அதே நேரம், தமிழ்த் தேசியம் பேசியவர்களின் ஆட்சியில், பாடசாலைகளில் தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப் படவில்லை என்ற குறையும் உள்ளது.

தேர்தலில் போட்டியிடாத சமூக நீதி இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து, அண்ணாதுரை தலைமையில் பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய கட்சி தான் திமுக. அதாவது, தேர்தலில் போட்டியிட்டு சமூக மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நம்பினார்கள். அரசியலில் இதை சமூக ஜனநாயகப் பாதை என்று அழைக்கலாம்.

அன்றைய காலத்தில் இருந்த திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் இடதுசாரிகள் என்றால், திமுகவினர் மத்திய இடது அரசியலை பின்பற்றினார்கள். அந்தக் கொள்கை அடிப்படையில், திமுக தனது நட்பு சக்திகளை தெரிவு செய்தது. அது உண்மையில் வாக்கு வங்கிகளை குறிவைத்த சுயநல அரசியல் என்பதையும் மறுக்க முடியாது.

கலைஞர் கருணாநிதி என்றொருவர் இருந்திரா விட்டால், தமிழ்த் தேசியம் ஒரு விருட்சமாக வளர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி. திராவிட நாடு கேட்பதாக சொன்னாலும், அதன் அடிநாதமாக தமிழ்த் தேசியமே இருந்தது. (பெயரில் என்ன இருக்கிறது?) அதனால் தான், பிற மொழிகளை பேசும் அயல் மாநில மக்கள் அதில் இணைந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர். அன்றைய காலத்து கலைஞரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் தமிழ் உணர்வை தட்டியெழுப்புவதாக இருந்தன.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாத்துறையில் புராண காலக் கதைகளும், பாடல்களும் மலிந்திருந்தன. பார்ப்பன- சம்ஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீட்டவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. திமுக வினர், தமது கட்சியின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான ஊடகமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். அவற்றில் கலைஞரின் வசனங்கள் தவறாமல் இடம்பெறும். சமூக விழிப்புணர்வு ஊட்டும் கதையம்சம் கொண்டதாக, பாத்திரங்கள் அழகான அடுக்குமொழி தமிழ் வசனங்கள் பேசுவதாக அமைக்கப் பட்டிருக்கும்.

கலைஞர் எழுதிய அடுக்குமொழி வசனங்கள் பட்டிதொட்டி எங்கும் பரவின. சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை விரும்பி இரசித்தனர். சாதாரண மக்கள் அவற்றை நினைவில் வைத்திருந்து பேசி மகிழ்ந்தனர். இதன் மூலம் தமிழ் வளர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரில்லாத இடம் பிடித்தவர் கலைஞர் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தம்மை தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலைஞருக்கு கடமைப் பட்டுள்ளனர்.

இலக்கியவாதியான கருணாநிதிக்கும், அரசியல்வாதியான கருணாநிதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் கலைஞரின் குடும்பமும் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. பிற்காலத்தில் அரசியல் வாரிசு தொடர்பான சர்ச்சை உருவான நேரம், எமெர்ஜென்சி காலகட்டம் தான் தனது மகன் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தது என்று வாதிட்டு வந்தார். இந்திரா காந்தியால் பாதிக்கப் பட்ட கலைஞர், பிற்காலத்தில் அதே இந்திரா காந்தியுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டார். அதற்கும் ஒரு நியாயம் கற்பித்தார்.

"கலைஞர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து விட்டார்" என்று புலம்புவோர், அவர் ஏற்கனவே தனது கட்சித் தொண்டர்களுக்கும் "துரோகம்" செய்தவர் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. "அரசியல் என்பது எத்தகைய திருகுதாளம் செய்தேனும் அதிகாரத்தை தக்க வைப்பது" என்ற மாக்கியவல்லியின் கூற்றுக்கு ஏற்றவாறு, கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதியாக நடந்து கொண்டார். தேர்தல் ஜனநாயக அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லி நாம் இதைக் கடந்து சென்று விடலாம்.

அதை விட நாஸ்திகம் பேசிக் கொண்டிருந்த கலைஞர், பதவிக்கு வந்ததும் ஆஸ்திகவாதிகளை அரவணைத்துக் கொண்ட "துரோகத்தையும்" இங்கே குறிப்பிடலாம். தாழ்த்தப் பட்ட சாதியினரை முன்னேற்றுவதற்காக சமநீதி பேசிய கலைஞரின் ஆட்சியில் தான் தாமிரபரணி படுகொலை நடந்தது. இது போன்று கலைஞர் தான் வரித்துக் கொண்ட கொள்கைக்கே செய்த "துரோகங்கள்" ஏராளம். இருப்பினும், ஒரு மிதவாத தேர்தல் அரசியல்வாதியிடம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த முதலாளித்துவ - ஜனநாயக அமைப்பு எப்படி இயங்குகின்றதோ, அதற்கு ஏற்றவாறு தான் ஒரு மாநில முதலைமைச்சரும் நடந்து கொள்வார்.

இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு தான், 2009 ம் ஆண்டு ஈழத்திற்காக நடந்த இறுதிப்போர் காலத்தில் கலைஞர் எடுத்த முடிவுகளையும் கணிப்பிட வேண்டும். அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் என்றெல்லாம் "அறிவுரை" கூறியோர் பலருண்டு. அது அரசுக்கும், அரசாங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் எதிர்பார்ப்பு.

இறுதிப்போர் காலத்தில், வெளிவிவகார கொள்கையை கையில் வைத்திருந்த இந்திய மத்திய அரசு(அரசாங்கம் அல்ல) தான் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசு, இலங்கை அரசுக்கு பூரண ஆதரவு வழங்கி வந்தது. இந்திய இராணுவ ஆலோசகர்கள் கூட வன்னிப் போர்க்களத்தில் நின்றனர் என்பது பகிரங்கமாக தெரிந்த விடயம். அந்த நேரத்தில் கலைஞரின் "உண்ணாவிரத நாடகம்" அழுத்தம் கொடுப்பதற்கு போதாது என்பது உண்மை தான். ஆனால், அன்று சர்வதேச பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் - இராணுவ நகர்வுகளை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன. கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது. இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமமானது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.

இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார். அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர். புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்த மர்மமும் துலங்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், "அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்" என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள். இவர்களுடன் பிலிப்பைன்ஸில் வெரித்தாஸ் வானொலி நடத்திய காஸ்பர் அடிகளார் போன்றவர்களின் காட்டிக் கொடுப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாக் குற்றங்களையும் ஒருவர் மீது பழி சுமத்துவதற்கு ஒரு பாவி தேவைப் பட்டது. அவர் தான் கலைஞர் கருணாநிதி. "அனைவரது பாவங்களையும் தனது சிலுவையில் சுமந்து மரித்த இயேசு பிரான் போன்று கலைஞர் மறைந்தார். அவருடன் கூடவே தமிழ்த்தேசியமும் மறைந்தது." என்று பார்ப்பன அடிமைகள் குதூகலிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டை காவிமயமாக்கும் இந்துத்துவா அடிவருடிகளின் நோக்கம் என்றைக்குமே பலிக்கப் போவதில்லை.

Tuesday, August 07, 2018

யாழ்ப்பாணத்தில் இருபதுகளில் உருவான இடதுசாரி இளைஞர் காங்கிரஸ்

இருபதுகளில் யாழ் குடாநாட்டில் தோன்றிய இடதுசாரி அரசியல் இயக்கமான இளைஞர் காங்கிரஸ், இன்றைய வலதுசாரி தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு காலத்தால் முந்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் சமத்துவம், உள்நாட்டு உற்பத்தி போன்ற பல முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த, யாழ்ப்பாணத் தமிழரின் இடதுசாரி பாரம்பரியம் பற்றிய வரலாறு, தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றது. அதை முறியடிக்கும் வகையில், சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய "யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்" என்ற நூலை இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன்.

இன்றைக்கும் "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று வலதுசாரிகள் விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸை உடைப்பதற்கு இனவாதிகள் முயற்சி செய்துள்ளனர். வட இலங்கையில் தமிழினவாதம் பேசிய ஜி.ஜி. பொன்னம்பலம், தென்னிலங்கையில் சிங்கள இனவாதம் பேசிய SWRD பண்டாரநாயக்கே ஆகியோர் அதில் முக்கியமானவர்கள். இவர்கள் ஒரு பக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு; இனவாதம் பேசி சிங்கள, தமிழ் மக்களை பிரித்து வைக்க முயற்சித்தனர். அதன் விளைவுகளை, இலங்கையின் மூவின மக்கள் இன்று வரைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் பல முற்போக்கான தீர்மானங்களை எடுத்த யாழ் இளைஞர் காங்கிரஸ் ஒரு மார்க்ஸிய இயக்கம் அல்ல. அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மார்க்ஸிய சமூக விஞ்ஞானம் பற்றியும் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் கல்விகற்ற படியால், உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தனர். அயர்லாந்து விடுதலைப் போராட்டம் உட்பட உலகில் நடந்த காலனிய எதிர்ப்புப் போராட்டங்களை அறிந்து வைத்திருந்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டம், இருபதுகளில் வாழ்ந்த யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. வட்டுக்கோட்டையில் இருந்த யாழ்ப்பாணக் கல்லூரி, அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியால் நடத்தப் பட்டாலும், மாணவர்களுக்கு சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் தாராளமாக வழங்கப் பட்டிருந்தது. கூட்டங்கள் நடைபெறும் நேரம் தலைமை தாங்கும் மாணவரின் சொல்லுக்கு பாடசாலை அதிபரும் கட்டுப்படும் அளவிற்கு ஜனநாயகம் இருந்தது.

அப்போது இலக்கியக் கூட்டங்களில் நடந்த விவாதங்கள் தான், பிற்காலத்தில் இளைஞர் காங்கிரஸ் தோன்றக் காரணமாக இருந்தது. இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட வேண்டும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை வேண்டும், என்பன போன்ற முற்போக்கான விடயங்கள் விவாதிக்கப் பட்டன. ஐரோப்பிய மையவாத கல்விக்கு பதிலாக, இலங்கை, இந்திய வரலாறுகள் போதிக்கப் பட வேண்டும் என்று வாதிட்டனர்.

அன்றிருந்த மாணவர்கள் இலட்சியவாதிகளாக நீதியான சமுதாயத்திற்காக கனவு கண்டனர். காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதுடன், இறுக்கமான சாதியமைப்பு கொண்ட நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை தம்மால் மாற்ற முடியும் என்று நம்பினார்கள். இருப்பினும், அவர்களது தத்துவார்த்த வழிகாட்டிகளாக காந்தி, நேரு போன்றோரே இருந்தனர். 1927 ம் ஆண்டு, இளைஞர் காங்கிரஸ் அழைப்பின் பேரில் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

அந்தக் காலத்து யாழ்ப்பாணத்தில் சாதித் தீண்டாமை தலைவிரித்தாடியது. பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் சரிசமமாக உட்கார முடியாது. ஒரே இடத்தில் உணவருந்த முடியாது. இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராட வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் முடிவெடுக்கப் பட்டது. அன்றைய ஆங்கிலேய காலனிய அரசும் பாடசாலைகளில் சரியாசன முறையை அமுல்படுத்த தீர்மானித்தது.

சரியாசன முறை அமுல்படுத்துவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த உயர்த்தப்பட்ட சாதியினர், அது "யாழ்ப்பாண சமூக ஒழுங்கை பாதிக்கும்" என்று வாதிட்டனர். சரியாசனத்தை நடைமுறைப் படுத்திய பாடசாலைகளை கொளுத்தினார்கள். இரு மாதங்களில் யாழ்ப்பாணம் முழுவதும் ஒரு டசின் பாடசாலைகள் எரிக்கப் பட்டன. அதற்கு எதிர்வினையாக, தீண்டாமையை கடைப்பிடித்த பாடசாலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் எரித்தனர். இதனால் சில பாடசாலைகள் "நடுநிலையான" முடிவெடுத்தன. தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு தனியான வாங்குகள் ஒதுக்க முன்வந்தன.

சுதந்திரத்திற்கு முந்திய இலங்கைக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வதற்காக டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தது. அப்போது அது முன்மொழிந்த திட்டங்கள் சுயாட்சி அமைக்கும் அளவிற்கு போதுமானதல்ல என்று இளைஞர் காங்கிரஸ் நினைத்தது. அதனால் 1930ம் ஆண்டு நடந்த அரச சபை தேர்தலை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தது. இது "சிங்களவர்களுக்கு எதிரான தமிழரின் இனவாத நடவடிக்கை" என்று SWRD பண்டாரநாயக்கே விமர்சித்தார். அதேநேரம், ஜி.ஜி. பொன்னம்பலமும் காரசாரமாக கண்டித்திருந்தார்.

இதன் விளைவாக, இளைஞர் காங்கிரசின் நிலைப்பாட்டைக் கூறும் "இனவாதமா? தேசியவாதமா?" என்ற நூல் வெளியிடப் பட்டது. அதில் அவர்கள் சிங்கள இனவாதத்தையும், தமிழ் இனவாதத்தையும் நிராகரித்து, இலங்கைத் தேசியத்தை வலியுறுத்தி இருந்தனர். அந்தக் காலத்தில் வெளியான ஈழகேசரி வாரப் பத்திரிகையும் இளைஞர் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது.

1931 ம் ஆண்டு நடந்த, இளைஞர் காங்கிரஸின் ஏழாவது வருடாந்த அமர்வு கமலாதேவி என்ற ஒரு பெண்ணால் தலைமை தாங்கப் பட்டமை ஒரு சிறப்பம்சம் ஆகும். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற சரோஜினி நாயுடுவின் மைத்துனி. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான கமலாதேவி தனது நாவன்மையால் பலரைக் கவர்ந்தார். அத்துடன், முதலாளித்துவ சுரண்டல் பற்றிய மார்க்ஸிய விளக்கங்களால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புதிய திசையில் செல்ல வைத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் இருவகையான குணாம்சங்கள் இருப்பதை கமலாதேவி சுட்டிக் காட்டினார். ஏகாதிபத்திய ஆட்சியாளர்களோடு போராடும் குடியேற்ற நாடுகள், தமக்கான ஆட்சியதிகாரத்திற்காக போராடும் சிறிய நாடுகள். பெரும்பான்மையினரின் அட்டகாசத்தை எதிர்த்துப் போராடும் சிறுபான்மையினர். இவற்றுடன் முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான போராட்டத்தையும் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் குடியேற்ற நாடுகளில் உள்ள மக்கள் மீது நடத்தி வரும் சுரண்டல் எத்தகையது என்பதையும் எடுத்துக் காட்டினார்.

முப்பதுகளின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சீர்குலைந்து வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. அது காந்தீய வழியில் இயங்கிய இயக்கமாக இருந்தாலும் இடதுசாரித் தன்மை கொண்டிருந்தது. அதனால், பிற்காலத்தில் பல காங்கிரஸ் உறுப்பினர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்து கொண்டனர். இருப்பினும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் சேர்ந்தனர். அன்று அது ஒரு இலங்கைத் தேசியக் கட்சி என்ற மாயை பலரிடம் இருந்தது.

லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்ப காலங்களில் ஒரு சமூக ஜனநாயக சோஷலிசக் கட்சியாக இருந்தது. தெற்கில் இயங்கிய சூரியமல் இயக்கமும், வடக்கில் இயங்கிய இளைஞர் காங்கிரஸும், இலங்கையில் ஒரு காத்திரமான இடதுசாரிக் கட்சி உருவாகக் காரணமாக இருந்தன. இருப்பினும் அது ட்ராஸ்கிச பாதையில் சென்றதால், பிற்காலத்தில் அதிலிருந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது. ஐம்பதுகளுக்குப் பின்னர் நாட்டில் கூர்மையடைந்த இன முரண்பாடுகள் இடதுசாரி அரசியலை பின்தங்க வைத்தன. அதனால், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இலட்சியவாதிகள் கனவு கண்ட சமநீதி காக்கும் சமுதாயம் இன்னும் உருவாகவில்லை. 


நூலின் பெயர் : யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் 
எழுதியவர் : சாந்தசீலன் கதிர்காமர் 
வெளியீடு : குமரன் புத்தக இல்லம் 
விலை : 400 இலங்கை ரூபாய்கள் 

Kumaran Book House
39, 36th Lane, 
Colombo - 6
Tel. 0112364550
E mail: kumbhlk@gmail.com

Wednesday, August 01, 2018

பாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்



நாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகான கடற்கரைப் பிரதேசமான பாசிக்குடா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அங்கு நான் நேரில் சென்று திரட்டிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட, புலிகளின் வாகரை கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகில் உள்ளது "பாசிக் குடா". குறிப்பாக, வாழைச்சேனை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இன்று இலங்கையின் பிரபலமான சுற்றுலா மையம். சர்வதேச தரத்திற்கு நிகரான ஐந்து நட்சத்திரக் ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்கிருந்து கடல் விமானம் பிடித்து நேரடியாக பாசிக்குடா கடற்கரையில் வந்திறங்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.

தூய்மையான நீல நிறக் கடற்கரை கொண்ட பாசிக் குடா ரிசோர்ட்டில் விடுமுறையை கழிக்க வருமாறு, மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூவிக் கூவி அழைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களும், பாசிக்குடாவை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றன. அதை விட, இலங்கையில் உள்ள பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் அங்கு சென்று விடுமுறையை கழிக்கின்றனர்.

அந்தப் பகுதியில், ஒரு காலத்தில் கடுமையான போர் நடைபெற்றது என்பது, பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது. தமது விடுமுறையை ஆனந்தமாக கழிக்கும் உல்லாசப் பயணிகளுக்கு, அது பிணம் தின்ற பூமி என்பது தெரியாது. அப்படியே தெரிந்தாலும், "நல்ல வேளை, போர் முடிந்தது" என்று நிம்மதியாக விடுமுறையை கழிப்பார்கள்.

அது மட்டுமல்ல, இன்று ஆடம்பர நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்ட இடம், தமிழ்/முஸ்லிம் மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறித்தெடுக்கப் பட்டது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. மெக்சிகோ, எகிப்து என்று பெருமளவு சுற்றுலாப்பயணிகள் செல்லும் நாடுகளில் எல்லாம் நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்ல, இன்று பல தமிழர்களுக்கே இந்த விபரங்கள் தெரியாது. தமிழ் தேசியவாதிகள் கூட, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நில அபகரிப்பில் கவனம் செலுத்துமளவிற்கு, கிழக்கு மாகாண நில அபகரிப்புகள் பற்றி அக்கறை இன்றி இருக்கின்றனர். ஏனென்றால், அது தான் வர்க்க உணர்வு. பாசிக்குடாவில் தமது பாரம்பரிய காணிகளை பறிகொடுத்தவர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்கள். அவர்களின் உரிமைகளுக்காக வாதாடுவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் யாரும் இல்லை. 

பாசிக்குடாவை சுற்றுலா ஸ்தலமாக்கும் திட்டம், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப் பட்டது. சிலநேரம், இயற்கைப் பேரழிவுகளும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. 2004 ம் ஆண்டு, இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி சுனாமி பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதில் பாசிக்குடாவும் ஒன்று. சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மீண்டும் வந்து குடிசைகள் கட்டி வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கம் வேறு திட்டம் வைத்திருந்தது.

பாசிக்குடாவில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழை மீனவக் குடும்பங்கள். காலங் காலமாக மீன்பிடியை தவிர வேறெந்த தொழிலும் தெரிந்திராதவர்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திய அரசாங்கம், அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்பகுதியில் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. தேர்ச்சி பெற்ற தொழிலான மீன்பிடியை விட்டு, அனுபவம் இல்லாத தொழிலான விவசாயம் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அதனை கவனத்தில் எடுக்காமல் மக்களை வெளியேற்றி விட்டது. 

சில குடும்பங்கள், காணி உறுதிப் பத்திரம் வைத்திருந்தன. அவர்களிடம் இருந்து நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். உண்மையில், அங்கு ஆடம்பர ஹோட்டேல்கள் வரப் போகின்றன என்ற விடயம் அந்த மக்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விலையை கூட்டிக் கேட்டிருக்கலாம். தமது காணியை சில இலட்சம் ரூபாய்களுக்கு விற்ற ஒரு தம்பதியினர், கையில் இருந்த காசு முடிந்ததும் ஹோட்டேல் பணியாளர்களாக வேலை செய்யும் அவலமும் நடந்துள்ளது.

ஆடம்பர ஹோட்டேல்கள் கட்டி முடிந்து, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கிய பின்னர், உள்ளூர் மக்கள் பாசிக்குடா செல்வதற்கு பல விதமான தடைகள் விதிக்கப் பட்டன. ஒவ்வொரு ஹோட்டேலும் தனக்கென தனியான கடற்கரை வைத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் நீராடுவதற்காக தனிதனி கடற்கரைகள் ஒதுக்கப் பட்டன.  உள்ளூர் மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீராடும் கடற்கரைக்கு செல்ல முடியாது. 

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடற்கரை

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய அப்பார்ட்ஹைட் இன இனப்பாகுபாடு காலத்தில் இருந்தது போன்று, பாசிக்குடா கடற்கரை கயிறு கட்டி பிரிக்கப் பட்டது. இது ஒரு வர்க்க அடிப்படையிலான பிரிவினை. ஏனெனில், வெளிநாட்டவர் மட்டுமல்லாது, பணக்கார இலங்கையர்களும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள்.

பிற்காலத்தில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த படியால், அந்தக் கயிறு பிரிக்கும் எல்லைக் கோடுகள் அகற்றப் பட்டன. நான் அங்கு சென்றிருந்த நேரம் (ஜூலை 2018), கயிறு எதையும் காணவில்லை. ஹோட்டல்களுக்கு "சொந்தமான" கடற்கரையிலும், காலாற நடந்து சென்று வர முடிந்தது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாசிக்குடா சுற்றுலாத்துறை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. 

பாசிக்குடா ரிசோட்டின் சிறப்பம்சம், மாலைத்தீவில் உள்ளது போல பாரம்பரிய பாணியில் கட்டப் பட்ட நட்சத்திர ஹோட்டல்கள். அதாவது, இயற்கையோடு இணைந்த ஓலைக் குடிசைகள் மாதிரி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அறைகள். குறிப்பாக ஐரோப்பிய உல்லாசப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டப் பட்டுள்ளன. இவற்றைக் கட்டுவதற்கு இலங்கையில் உள்ள ஒப்பந்தக் காரர்கள் அதிக காலம் எடுத்ததாகவும், அதனால் சீன நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகின்றது.


தரகு முதலாளித்துவம் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு பாசிக்குடாவை உதாரணம் காட்டலாம். இலங்கையில் எவ்வாறு அரசாங்கமும், முதலாளித்துவமும் கையோடு கைகோர்த்து நடக்கின்றன என்பதை அங்கு சென்றால் நேரில் காணலாம். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும், சொந்தமாக ஆளுக்கொரு ஹோட்டேல்  வைத்திருக்கிறார்கள். விடுமுறைக்கு பாசிக்குடா கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரும் ஹோட்டேல் முதலாளிகள் தான். அதைவிட சில அமைச்சர்களும் அங்கு முதலிட்டுள்ளனர். சுருங்கக் கூறின், அரசியல் தலைவர்கள் சேர்த்த ஊழல் பணத்தை சுற்றுலாத்துறையில் முதலிட்டு பெரும் முதலாளிகளாகி விட்டார்கள். பாசிக்குடா சுற்றுலா வணிகம் சூடு பிடிக்கும் காலத்தில், ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வார்கள், அல்லது நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் தீட்டுவதில், மகிந்த அரசுக்கும்,மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மகிந்த ஆட்சிக்காலத்தில், தெற்குக் கடற்கரையோரம், அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தள விமான நிலையம் கட்டப் பட்டது. சீன நிதியில் கட்டப்பட்டு, "உலகில் வெறுமையான விமான நிலையம்" என்று எள்ளி நகையாடப் பட்டது. தற்போது மைத்திரி அரசு அதை இந்தியாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், மத்தள விமான நிலையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தங்கும் கடற்கரை ரிசோட்கள், காலியில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசத்தில் உள்ளன. அதே மாதிரி, மட்டக்களப்பு, அம்பாறை கடற்கரைப் பிரதேசத்தையும் சுற்றுலாத்துறையின் கீழ் கொண்டு வரலாம். தற்போதைய நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு திசைகளிலும் பயணம் செய்து தங்குமிடங்களை அடையலாம்.