ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.
டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.
இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பெட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய "அரசியல் ஆய்வாளர்கள்" மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் "மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?" என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.
உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்,ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.
டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.
முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.
ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.
ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.
தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.
ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.
இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூளுகின்றன என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.
கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.
போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.
இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.
அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.
அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, "ஜென்ம விரோதிகளான" இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "கடைசி ஐரோப்பிய காலனியான" இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி- இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.
அதற்கு மாறாக, ஷியா- இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.
இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.
அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். "அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்" என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.
ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற "இஸ்லாமிய" நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, "கிறிஸ்தவ" ரஷ்யாவுடனும், "நாஸ்திக" சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.
- கலையரசன்
14-05-2018
******