Wednesday, March 22, 2017

சேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும்!


இனி வருங்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடும் பணத்திற்கு நாமே வட்டி கட்ட வேண்டி இருக்கும்! சிரிக்காதீர்கள், இது ஜோக் அல்ல! உண்மையில் நடக்கவுள்ளது.

நெதர்லாந்தில் Triodos வங்கி சேமிப்புப் பணத்திற்கு 0% வட்டி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆமாம், சேமிப்புப் பணத்திற்கு ஒரு சதம் கூட வட்டி கிடையாது. ஏற்கனவே பல ஐரோப்பிய வங்கிகள் மிகக் குறைந்த வட்டி கொடுத்து வந்துள்ளன.

இனிமேல் அது எதிர்மறை வட்டியாகவும் இருக்கலாம். அதாவது, நாங்கள் சேமிப்புக் கணக்கில் போடும் பணத்திற்கு நாமே தான் வட்டியும் கட்ட வேண்டும். அந்த வட்டிப் பணம் வங்கிக்கே போய்ச் சேரும்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். உங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் 24.437 யூரோக்களுக்கு அதிகமான பணம் வைப்பில் இட்டுள்ளீர்களா? அப்படியானால் அது உங்கள் சொத்தாக கருதப் படும். அதாவது அந்தப் பணத்திற்காக அரசுக்கு மேலதிகமாக சொத்து வரி கட்ட வேண்டும்!

எதற்காக சேமிப்புக்கான வட்டி குறைந்து கொண்டே செல்கின்றது? அதற்குக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி வீதத்தை குறைத்துள்ளது. வட்டி குறைவாக இருந்தால் மத்திய வங்கியில் இருந்து வர்த்தக வங்கிகள் எடுக்கும் கடன் தொகையும் அதிகரிக்கும். மறுபக்கத்தில் அந்த வங்கிகள் மக்களுக்கு கொடுக்கும் கடனும் அதிகரிக்கும்.

சேமிப்பில் பணத்தை வைப்பிலிடுவதை மத்திய வங்கி ஊக்குவிக்கவில்லை. அதனால் இவ்வளவு காலமும் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த வட்டி கொடுக்கப் பட்டு வந்தது. அதற்குக் காரணம் பணம் சுற்றிச் சுழல வேண்டும். மக்கள் பணத்தை சேமிப்பதை விட, செலவளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது.

சேமிப்பு பணத்திற்கு வட்டி குறைவதற்கு இன்னொரு காரணம் பணவீக்கம். எங்களது சேமிப்புப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பணவீக்கத்தை விட அதிகமாக இருந்தால் தான் நன்மை உண்டு. இல்லாவிட்டால் அந்த வட்டியால் எந்தப் பயனும் இல்லை. உதாரணத்திற்கு, ஆயிரத்திற்கு பத்து ரூபாய் வட்டி சம்பாதித்து விட்டதாக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. பணவீக்கம் காரணமாக அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை.

உண்மையில் நாட்டில் ஓரளவு பணவீக்கம் இருப்பதை வங்கிகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் பணவீக்கம் இருந்தால் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு நல்லது. எப்படி? இன்றைய விலையை விட நாளைய விலை அதிகமாக இருக்கலாம். இனி வருங்காலத்தில் விலை கூடுமே தவிரக் குறையாது என்று நாமாகவே முடிவெடுப்போம். அதை கருத்தில் கொண்டு, நாங்கள் இன்றைக்கே அந்தப் பொருளை வாங்கி விடுவோம். அதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். விற்பனை கூடினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சுருக்கமாக, பணம் ஓரிடத்தில் தேங்காமல் சுற்றிச் சுழல வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. அவ்வாறு சுற்றிச் சுழலும் பணம் எல்லோரிடமும் வந்து சேரும் என்று நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், பணம் இறுதியில் ஒரு சில பணக்காரர்களின் பைகளில் சென்று தேங்கி விடுகின்றது. சாதாரண மக்கள் ஓட்டாண்டிகளாக சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவவழித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலாளிகள் அதை மூலதனமாக திரட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்குப் பெயர் தான்  முதலாளித்துவம்.

உசாத்துணை: 

பிற்குறிப்பு: பெரும்பாலான கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு முதலாளித்துவத்தை பற்றி எதுவும் தெரியாது. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு "பேராசிரியர்"(?) மார்க்சியத்தை ஏட்டுச் சுரைக்காய் என்று கேலி செய்யும் கட்டுரை ஒன்றை எழுதினார். (பார்க்க:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு அதில் அவர் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது கார்ல் மார்க்ஸின் தத்துவம் என்று கட்டுரை முழுக்க எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு டச்சுப் பழமொழி. முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கை. அதை பொதுவுடைமை என்று திரித்துக் கூறுவது மக்களை முட்டாள்களாக்கும் செயல். (வாசிக்கவும்: கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

No comments: