துருக்கியில் நடந்த இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்துள்ளது. சதிப்புரட்சி பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வலம் வந்த போதிலும் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாவாவதற்கு ஒரு நாள் எடுத்தது. இருப்பினும், இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், சதிப்புரட்சியை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. துருக்கி அரசு கூட ஊகங்களின் அடிப்படையில் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தது.
15 ஜூலை, துருக்கி நேரம் இரவு ஒன்பதரை மணியளவில், இஸ்தான்புல், அங்காரா போன்ற முக்கிய நகரங்களில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். இலட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களின் மீதும், போர் விமானங்கள் வட்டமிட்டன. யாரும் பயந்த படி குண்டு போடவில்லை. ஆனால், ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. தலைநகர் அங்காராவில், பாராளுமன்றம், அமைச்சுக்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள் யாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தன. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து சதிப்புரட்சியை பிரகடனம் செய்த இராணுவத்தினர், தாம் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்புக் கொடுப்பதாக தெரிவித்தனர்.
இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மூடப் பட்டிருந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. விமான நிலையத்தில் யுத்த தாங்கிகள் நிறுத்தப் பட்டிருந்தன. இஸ்தான்புல் நநகரில் காவல்துறையினர் எதிர்ப்புக் காட்டி உள்ளனர். இராணுவத்தினருக்கும், பொலிசாருக்கும் இடையில் நடந்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். சில மணி நேரத்தின் பின்னர், அதாவது சதிப்புரட்சி தோல்வியுற்றதும், இராணுவத்தினர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.
அன்றைய சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர்கள். பலருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தாம் ஒரு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் படுவதாக நம்பினார்கள். இதுவும் ஓர் ஒத்திகை என்று நினைத்தார்கள். அதனால் தான், சதிப்புரட்சி தோல்வியடைந்த நேரம் மக்களைத் தாக்காமல் சரணடைந்தார்கள். சதிப்புரட்சியாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படலாம்.
தலைநகரில் சதிப்புரட்சி நடந்த நேரம், ஜனாதிபதி எர்டோகன் தென் துருக்கியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமான மார்மாரிஸ் நகரில் இருந்தார். ஆளும்கட்சியான, அவரது AK கட்சிக்கு எதிராகவே சதிப்புரட்சி நடந்துள்ளது. இராணுவத்தினர், அங்காரா நகரில் AK கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்கள் போராட்டங்களை சகித்துக் கொள்ளாத ஜனாதிபதி எர்டோகன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்றதும், மக்களை வீதிக்கு வந்து போராடுமாறு அறைகூவல் விடுத்தார்.
தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஸ்கைப் மூலம் உரையாடிய ஜனாதிபதியின் பேச்சை நேரடி ஒளிபரப்புச் செய்தது. எர்டோகனின் அறைகூவலை செவி மடுத்த அவரது கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியாளர்களுக்கு எதிராக சவால் விட்டனர். யுத்த தாங்கிகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். "இராணுவ சதிப்புரட்சி மக்கள் சக்தி மூலம் முறியடிக்கப் பட்டதாகவும், இராணுவத்தினர் மக்களைக் கொல்லவில்லை..." என்று ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதில் ஒரு பகுதி உண்மை தான் உள்ளது.
உண்மையில் சதிப்புரட்சியின் போது இரத்தக் களறி ஏற்பட்டது. இராணுவம் மக்களை நோக்கி சுட்டது. அதில் பல பொது மக்கள் மரணமடைந்தனர். இதைத் தவிர, பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சமரில், இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப் பட்டனர். சதிப்புரட்சியின் விளைவாக, மொத்தம் 260 பேர் மரணமடைந்ததாக ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சதிப்புரட்சி தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் துருக்கி இராணுவம்! ஆமாம், தொண்ணூறு சதவீத படையினர் சதிப்புரட்சியில் பங்குபற்றவில்லை. அன்று இரவே, "இராணுவத்தில் ஒரு பிரிவினர் மட்டுமே சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டுள்ளதாக" பிரதமர் யில்ட்ரிம் (Yildrim) தெரிவித்திருந்தார். அது உண்மை தான். படையினரே சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை தெருவில் பிடித்து வைத்து அடித்து உதைக்கும் காட்சிகளை அடுத்த நாள் காணக் கூடியதாக இருந்தது.
இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். துருக்கியில் 1960 - 1980 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மூன்று தடவைகள் இராணுவ சதிப்புரட்சிகள் நடந்துள்ளன. பல வருட காலம் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துள்ளது. நவீன துருக்கியின் சிற்பியாக கருதப் படும், "தேசப் பிதா" கெமால் அட்டா துர்க் காலத்தில் இருந்து, துருக்கியில் இராணுவம் ஒரு பலமான ஸ்தாபனம். ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் இராணுவத்துடன் சமரசமாகப் போகவே விரும்பும்.
துருக்கியில் மேலைத்தேய கலாச்சாரத்தை புகுத்தி, அதை ஒரு சராசரி ஐரோப்பிய நாடாக்கிய பெருமை அட்டா துர்க்கையே சேரும். துருக்கி அரசு மதச்சார்பின்மையை கறாராக பின்பற்ற வேண்டும் என்பது அவர் உத்தரவு. அதை இன்றைக்கும் நடைமுறைப் படுத்தி வரும் அரச இயந்திரம் இராணுவம் தான். இஸ்லாமியவாத எர்டோகன், பல தடவைகள் மத நம்பிக்கை சார்ந்த சட்டங்களை கொண்டு வர முயன்றார். அப்போதெல்லாம் இராணுவம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், இந்த தடவை எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதிப்புரட்சியை இராணுவம் ஆதரிக்கவில்லை.
ஆகவே, தற்போது நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சதிப்புரட்சிக்கு மக்கள் மட்டுமல்ல, துருக்கி இராணுவம் கூட ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அப்படியானால் சதிப்புரட்சியை நடத்தியவர்கள் யார்? நிச்சயமாக இராணுவத்தில் ஒரு சிறு பிரிவினர் தான். ஆனால், அவர்களது நோக்கம் என்ன? பின்னணியில் வேறு யார் இருந்துள்ளனர்? இவை இன்னும் மர்மமாகவே உள்ளன.
சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், அதில் ஈடுபட்ட எட்டு இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தப்பியோடி கிரீசில் தரையிறங்கி உள்ளனர். (இஸ்தான்புல் நகரில் இருந்து கிரேக்க நாட்டு எல்லை சில மைல் தூரம் தான்.) அவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கிரேக்க அரசு அவர்களை கைது செய்து விட்டு, ஹெலிகாப்டரை துருக்கிக்கு திருப்பி அனுப்பி விட்டது. ஆனால், அரசியல் தஞ்சம் கோரிய படையினர் திருப்பி அனுப்பப் படுவார்களா என்பது தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மாதிரித் தான், கிரீஸ், துருக்கிக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளும் உள்ளன.
துருக்கியில் இது வரையில் ஜெனரல்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமான படையினர் கைது செய்யப் பட்டுள்ளனர். குறிப்பாக இரண்டாம் படைப்பிரிவு தளபதி ஆதம் ஹுடுத்தி (Adem Huduti), மூன்றாம் படைப்பிரிவு தளபதி எர்டல் எஸ்துர்க் (Erdal Öztürk) ஆகிய தளபதிகளும் கைது செய்யப் பட்ட பெரிய தலைகள் ஆவார்கள். மூன்றாம் படைப்பிரிவு இஸ்தான்புல் மாநகர காவலுக்கும், இரண்டாம் படைப்பிரிவு சிரியா எல்லைக் காவலுக்கும் பொறுப்பான இராணுவப் பிரிவுகள் ஆகும். மேலும், 2745 நீதிபதிகளும், 140 சட்டமா அதிபர்களும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். இன்னும் பலர் தேடப் படுகின்றனர்.
எர்டோகன் அரசு எதற்காக நீதிபதிகளை கைது செய்ய வேண்டும்? அரசு, அரசாங்கம் என்பவற்றிக்கு எதிரான வித்தியாசங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், அது விரும்பும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தடையாக அரசு இருக்கலாம். நீதிபதிகள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசுப் பிரதிநிதிகள். அப்படியானவர்களை அப்புறப் படுத்தினால், தான் விரும்பும் இஸ்லாமிய மதச் சார்பான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது எர்டோகனின் நோக்கம்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியா எல்லைக்கு அருகில் உள்ள இன்சிரில்க் (Incirlic) விமானப் படைத் தளத்தை சேர்ந்தவர்களே இராணுவ சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என்று ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அங்கிருந்து தான் சதிப்புரட்சிக்கு திட்டம் தீட்டப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இதனால், இன்சிரில்க் முகாம்மு சுற்றிவளைக்கப் பட்டது. முகாமுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டது. அங்கிருந்த துருக்கிப் படையினர் விசாரணை செய்யப் பட்டனர். பலர் கைது செய்து காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
இன்சிரில்க் படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் மொத்தம் 2,200 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 1,500 பேர் இன்சிரில்க் முகாமில் உள்ளனர். சிரியாவில் ISIS பிரதேசம் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள் இன்சிரில்க் படைத் தளத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.
அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குய்லன் (Gülen) என்ற அரசியல் தலைவர் தான், தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு காரணம் என்று எடோகன் குற்றம் சாட்டுகின்றார். அவர் ஒரு "பயங்கரவாதி" என்றும், துருக்கிக்கு நாடு கடத்துமாறும் அமெரிக்க அரசை கோரியுள்ளார். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. எர்டோகனும், குய்லனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்! தற்போது ஜென்மப் பகைவர்கள்!
தற்போது ஆளும்கட்சியான AK கட்சி, முதன்முதலாக 2002 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தமைக்கு குய்லன் முக்கிய காரணம். அவரது மேற்பார்வையின் கீழிருந்த குய்லன் இயக்கம் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது. ஆட்சியைப் பிடித்த பின்னர், எர்டோகனுக்கும், குய்லனுக்கும் இடையில் விரிசல் தோன்றியது.
எர்டோகன் தீவிர இஸ்லாமியவாதியாக இருந்தது மட்டுமல்லாது, தனது சர்வாதிகார தலைமையின் கீழ் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தார். அதற்கு மாறாக, குய்லன் மிதவாத இஸ்லாமியவாதியாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து வந்தார். இது மட்டுமே, AK கட்சியின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு. அதைத் தவிர வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.
ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக இருந்த துருக்கி, தொண்ணூறுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி கண்டது. அப்போது தோன்றி வளர்ந்த தேசிய முதலாளிகளின் செல்வாக்கும் அதிகரித்தது. அவர்கள் தான் இஸ்லாமியவாத AK கட்சியின் நிதிப் புரவலர்கள். தேசிய முதலாளித்துவமும், இஸ்லாமியவாதமும் கையோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே பிளவுகள் தோன்றின. அவற்றில் குய்லன் ஆதரவுக் குழுவினர் முக்கியமானவர்கள். இது ஒரு கோஷ்டி மோதல். குய்லன் இயக்கம் என்பது, ஒரு சமூக அரசியல் அமைப்பாக, ஏராளமான உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.
துருக்கியர்கள் ஒரே மொழி பேசினாலும், அவர்கள் ஒரு பிளவு பட்ட சமுதாயம் தான். கொள்கை முரண்பாடு காரணமாக சிலநேரம் உறவினர்களும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நேரில் கண்டால் கடித்து இரத்தம் குடிக்குமளவிற்கு வெறுப்பார்கள். அந்தப் பிரிவினை ஒரு புதினமல்ல. காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால், இஸ்லாமியவாதிகள் (துருக்கி இடதுசாரிகள் அவர்களை "இஸ்லாமிய - பாசிஸ்டுகள்" என்றும் அழைக்கிறார்கள்) தமக்குள் பிளவு பட்டு அடிபடுவது ஒரு புதிய அரசியல் தோற்றப் பாடு என்று தான் சொல்ல வேண்டும்.
தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு குய்லன் தான் காரணம் என்று எர்டோகன் சொல்வது உண்மையானால், இது ஆளும் வர்க்கத்திற்குள் தோன்றிய முரண்பாட்டின் விளைவு என்பது தெளிவாகின்றது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர், நீதித்துறையினரில் பெரும்பான்மையானோர் குய்லன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
குய்லன் இயக்கம் ஒரு சாதாரணமான சமூக அமைப்பு அல்ல. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிலையங்கள் பல குய்லன் இயக்க ஆதரவாளர்களினால் நடத்தப் படுகின்றன. உண்மையில் இன்னும் சில சமூக அமைப்புகள் அவ்வாறு இயங்குகின்றன. ஆனால், எர்டோகனின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக இருப்பது குய்லன் இயக்கம் மட்டும் தான். பிரபல இஸ்லாமிய அறிவுஜீவியான பெதுல்லா குய்லன், அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.
துருக்கி அமைச்சர் சொய்லு, "இராணுவ சதிப்புரட்சியில் அமெரிக்காவுக்கு பங்கிருக்கிறது" என்று தெரிவித்தார். இவ்வாறு துருக்கி அரசு பகிரங்கமாக அமெரிக்காவை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தால், "இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்படும்." என்று அமெரிக்க அமைச்சர் கெரி எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க - துருக்கி உறவில் விரிசல் ஏற்படுமானால், அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். தற்போது நடந்துள்ள நடந்துள்ள இராணுவ சதிப்புரட்சி ஓர் ஒத்திகை மட்டுமே. ஆட்டம் இனித் தான் ஆரம்பமாகவுள்ளது.
துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், மக்கள் சக்தி வெற்றி பெற்று விட்டதாக பலர் நினைக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அப்படிக் கருதவில்லை. "சதிப்புரட்சி அபாயம் இன்னும் நீங்கவில்லை" என்று பிதமர் யில்ட்ரிம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வழமையாக இஸ்லாமியவாத AK கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்படும், MHP (துருக்கி தேசியவாதிகள்), HDP (குர்திய உரிமைப் போராளிகள்) போன்ற எதிர்க்கட்சிகளும் சதிப்புரட்சியை கண்டித்துள்ளன. ஆனால், அமெரிக்க தூதுவராலயம் சதிப்புரட்சியை வரவேற்று அறிக்கை விட்டதாக சொல்லப் படுகின்றது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் "எர்டோகன் ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்கு" மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
துருக்கியில் நடந்த சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்கு என்ன? எர்டோகன் தன்னை ஒரு நவீன சுல்த்தானாக காட்டிக் கொள்வதும், ஓட்டோமான் சாம்ராஜ்யப் பெருமை பேசுவதும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றும் உள்நோக்கம் கொண்டது. எர்டோகனின் இஸ்லாமியவாத அரசியல் கொள்கை அமெரிக்காவை எரிச்சலூட்டி வருகின்றது.
ஐ.எஸ்., அல்கைதா போன்ற தீவிரவாதிகளை விட, எர்டோகன் போன்ற ஜனநாயகவாதிகள் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எர்டோகனின் எதிரி குய்லன். இன்சிரில்க் இராணுவ தளத்துடன் தொடர்பு பட்டவர்களின் கைது. சிரியா எல்லைக் காவல் படைத் தளபதி கைது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வருகின்றது.