Monday, August 17, 2015

100% முதலாளித்துவ நாடான இன்றைய வட கொரியா!

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் 
(பாகம் - 11)


எதற்காக இன்றைக்கும் வட கொரியா பற்றி பெரும் ஆரவாரம் கேட்கிறது? ஏன் தமிழ் பேசும் "முதலாளித்துவ ஆதரவாளர்கள்", ஒரு "முதலாளித்துவ நாடான" வட கொரியாவை எதிர்க்கிறார்கள்? இதைக் கேட்டால், "அப்படியா? வட கொரியா ஒரு முதலாளித்துவ நாடா? எமக்குத் தெரியாதே?" என்று சிரித்து மழுப்புவார்கள். 

உண்மையில் வட கொரியா, இன்னமும் மேற்கத்திய பெரும் மூலதனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லையே என்பது மட்டும் தான் அவர்களின் பிரச்சினை. உலகமயமாக்கலின் சின்னங்களான கொக்கோ கோலா, மக்டொனால்ட்ஸ் போன்ற எதையும் அங்கே காண முடியாது. அதுவும் நடந்து விட்டால், "வட கொரியாவின் மிலேச்சத்தனமான சர்வாதிகாரம் பற்றியோ, அல்லது மன்னராட்சி பற்றியோ" பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

வட கொரியா எப்போதிருந்து முதலாளித்துவ நாடாகியது? பனிப்போர் காலகட்டம் முடிந்த தொண்ணூறுகளுக்கு பிறகு தான். குறிப்பாக, 1995 - 1997 ல் ஏற்பட்ட கடும் பஞ்சத்திற்குப் பிறகு என்று கூறலாம். அங்கு ஏற்பட்ட பஞ்சத்திற்கு, மேற்குலகில் சொல்லப்படும் காரணம் வேறு. 

"இயற்கைக்கு மாறான, ஸ்டாலினிச, சோஷலிச பொருளாதார உற்பத்தி முறை. மோசமான முகாமைத்துவத்தின் விளைவு..." இப்படிப் பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால், உண்மையான காரணம் வேறு. சர்வதேச மட்டத்திலான தனிமைப்படுத்தல், கடுமையான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் முக்கியமான காரணங்களாக இருந்தன. அது பற்றி மேலும் ஆராய்வோம்.

இருபதாம் நூற்றாண்டில், முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது. முதலாளித்துவ வர்த்தக உறவு என்பது எப்போதும் சந்தையை சுற்றி அமைக்கப் பட்டிருக்கும். கடன் "உதவிகள்" கூட, கொடையாளி நாட்டுக்கு அதிக வட்டி கட்டுவதாக இருக்கும். 

சோஷலிச நாடுகளுக்கு இடையில், கறாரான கொடுக்கல் வாங்கல் இருக்கவில்லை. எந்த நாடும் இலாபநோக்கு கருதி வர்த்தகம் செய்யவில்லை. வறுமையில் வாடும் நண்பனுக்கு உதவி செய்து, கை தூக்கி விடுவது தமது மனிதாபிமானக் கடமை என்பது போல செயற்பட்டன.

சோவியத் யூனியனும், சீனாவும், வட கொரியாவுடன் வைத்திருந்த வர்த்தக உறவு, சிறிய நாடான வட கொரியாவுக்கே மிகவும் சாதகமாக இருந்தது. பெரிய நாடுகளுக்கு அதனால் எந்த நன்மையையும் விளையவில்லை. உதாரணத்திற்கு, சோவியத் யூனியன் மில்லியன் டாலர் பெறுமதியான மிக் போர் விமானங்களை வட கொரியாவுக்கு விற்றது. அதற்குப் பதிலாக, சோவியத் யூனியனுக்கு விற்பதற்கு, வட கொரியாவிடம் என்ன இருந்தது? ஒன்றுமேயில்லை! பெயருக்கு புகையிலை ஏற்றுமதி செய்தது.

வட கொரிய புகையிலையில் தயாரித்த சிகரட்டுகளை புகைப்பதற்கு, பாவனையாளர் யாரும் இருக்கவில்லை. வட கொரிய புகையிலை யாருக்கும் பிரயோசனமில்லாமல் சோவியத் களஞ்சிய அறைகளில் கிடந்தது அழுகியது. வளர்ந்த, வளர்ந்து வரும் சோஷலிச நாடுகளுக்கு இடையிலான "இரு தரப்பு வியாபார ஒப்பந்தம்" ஏற்றத் தாழ்வு கொண்டதாக இருந்தது. அதாவது, உண்மையில் வளர்ந்து வரும் நாடுகளின் அபிவிருத்திக்கான, வளர்ச்சி அடைந்த நாடுகளின் நிதியுதவியாக மட்டுமே அது கருதப் படலாம்.

அன்றைய காலங்களில், மாவோவின் சீனா, அன்று பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு, சில பொருட்களை இலவசமாக கொடுத்து வந்தது. சோவியத் யூனியன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொண்டாலும், தனது ஏற்றுமதி பொருட்களின் விலையை சந்தை விலைக்கும் குறைவாக தீர்மானித்திருந்தது. வட கொரிய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவையான இயந்திரங்கள் யாவும் சோவியத் யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவை தான். வட கொரியாவில், சோவியத் அல்லது சீன முதலீடுகள் மில்லியன் டாலர் கணக்கில் இருந்தது.

சீனாவில் மாவோ இறந்த பின்னர், சீன முதலீடு அடியோடு நின்று போனது. டெங் சியாபிங் காலத்தில், சீனர்கள் முதலாளித்துவ பொருளாதார உறவுகளின் அடிப்படையில் செயற்படத் தொடங்கி இருந்தனர். அதாவது, எங்காவது இலாபம் வருமென்றால் மட்டுமே முதலீடு செய்யலாம். வர்த்தகத்தில் எந்த நன்மையையும் இல்லையென்றால் அதைக் கைவிட வேண்டியது தான். அதே மாதிரியான நிலைமை, சோவியத் யூனியனில் கோர்பசேவ் காலத்தில் ஏற்பட்டது.

1990 ஆம் ஆண்டு வரையில், சோவியத் யூனியன், வட கொரியாவுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகம் சராசரி 2.56 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், கோர்பசேவ் பதவிக்கு வந்த அடுத்த வருடமே அது 0.14 மில்லியன் டாலர்களாக குறைந்தது. ஒரு மிகப் பெரிய வீழ்ச்சி. இந்த புள்ளிவிபரத்தில் இருந்து, வட கொரியாவுடனான வர்த்தகம் எந்த நாட்டிற்கும் தேவைப் படாத ஒன்றாக இருந்துள்ளது என்பது புலனாகும்.

முதலாளித்துவ நாடானாலும், சோஷலிச நாடானாலும், பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள் சில மாறப் போவதில்லை. அதாவது, நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தை கூட, வர்த்தக நிறுவனங்கள் தான் தீர்மானிக்கின்றன. சோஷலிச நாடுகளில் அவை அரசால் பெருமளவு மானியம் வழங்கி இயக்கப் படுகின்றது என்பது மட்டுமே வித்தியாசம். அதனால், இலாபம் கிடைக்காத ஒரு நாட்டிலும், நட்பு அடிப்படையில் முதலிட அந்த நிறுவனம் முன்வரலாம். அந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே ஒரேயொரு நோக்கமாக இருக்கும்.

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் "சேவை", "உதவி" போன்ற சொற்களை உச்சரிக்கவே முடியாது. "தாயும், மகளும் என்றாலும் வாயும் வயிறும் வேறு" என்பது முதலாளித்துவ தத்துவார்த்த அடிப்படை. அங்கே நட்பு முக்கியமில்லை. பணம் மட்டுமே முக்கியம்.

ஆகவே, முதலாளித்துவ இலாப நோக்கில், எந்தவித நன்மையும் இல்லாத வட கொரியாவில் இருந்து, சோவியத், சீன நிறுவனங்கள் பின்வாங்கியதில் அதிசயமில்லை. அதனால் பாதிப்பு முழுவதும் வட கொரியாவுக்கு தான். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் தலைகீழாக மாறி விட்ட உலகில், குறுகிய காலத்தில் புதிய நண்பர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விளைவு? மிகப் பெரியதொரு பொருளாதார வீழ்ச்சி.

கில் இல் சுங்கின் இறுதிக் காலத்திலேயே பிரச்சினைகள் மெல்ல மெல்ல தலைகாட்ட ஆரம்பித்து விட்டன. பழுதடைந்த இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் கிடைக்கவில்லை. அதனால் உற்பத்தி ஸ்தம்பிதமடைந்தது. நாடு முழுவதும் பல தொழிற்சாலைகள் இயங்கவில்லை. எல்லோரும் அரசு நிறுவனங்களில் வேலை செய்த படியால், வழமை போல வேலைக்கு சென்று, சும்மா இருந்து விட்டு வந்தார்கள். முன்னொருபோதும் இல்லாதவாறு ஊழல் நடக்கத் தொடங்கியது. முகாமையாளர்களே தொழிற்சாலையில் இயந்திரங்களை பகுதி பகுதியாக கழற்றி, பழைய இரும்பு வாங்கும் சீன வியாபாரிகளுக்கு விற்றார்கள்.

வட கொரியா அப்போதும் விவசாயப் பொருளாதரத்தை பெருமளவு நம்பியிருந்த நாடாக இருந்தது. நீண்ட காலமாக இரசாயன உரம் விவசாய அபிவிருத்தியில் சிறந்த பங்காற்றி வந்தது. ஆனால், தற்போது உரம் உற்பத்தி செய்த தொழிற்சாலைகள் நின்று விட்டன. அதனால், விவசாயம் பாதிக்கப் பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனல் மின்சார உற்பத்தி நின்று போனது. அதனால், மின்சார விநியோகம் பெருமளவு தடைப் பட்டது.

வட கொரியாவின் பெருமளவு நிலப்பரப்பை மலைகள் ஆக்கிரமித்துள்ளன. மலைப் பகுதிகளில் விவசாயம் செய்வது ஒரு சவாலான விடயம். நிலத்தடி நீரை பல அடிகள் மேலே கொண்டு சென்று, மேட்டுப்பகுதியில் இருக்கும் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் முறை, பரவலாக எல்லா இடங்களிலும் இருந்தது. ஆனால், அதற்கு பெருமளவு மின் சக்தி தேவைப்பட்டது. மின்சாரம் மலிவு விலையில் கிடைத்து வந்த காலத்தில் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மின்சாரத் தட்டுப்பாடு வந்தவுடன், நீர்பாசனம் முற்றாக நின்று போனது. விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப் பட்டது.

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங் 1994 ம் ஆண்டு காலமானார். அத்துடன் சோஷலிச சகாப்தம் முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த இரு வருடங்களும், வரலாறு காணாத மழை வீழ்ச்சி காரணமாக விவசாயம் ஒரேயடியாக நாசமானது. 1995, 1996 ம் ஆண்டுகளில், பருவ மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மண் சரிவுகள் காரணமாக, மலைச் சரிவுகளில் செய்யப் பட்ட வயல்கள் முற்றாக அழிந்தன.

அந்தக் காலத்தில் தென் கொரியாவிலும் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் அது சமதரைகளை கொண்ட நாடு என்பதால், வட கொரிய மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் எதையும் காணவில்லை. மேலும் இதற்கு முன்னர் குறிப்பிட்ட பொருளாதார வீழ்ச்சியும் பஞ்சத்திற்கு பெருமளவு காரணமாக இருந்துள்ளது. நாட்டுப்புறங்கள் மட்டுமல்லாது, நகரங்களிலும் பஞ்சம் தலை விரித்தாடியது. அனைத்து மக்களுக்குமான உணவு விநியோகம் அரசின் பொறுப்பில் இருந்த படியால், அந்த அமைப்பு முற்றாக தகர்ந்து போனது. தலைநகரிலும், முக்கிய புள்ளிகளுக்கும், இராணுவ முகாம்களில் வேலை செய்தவர்களுக்கும் மட்டுமே அரசு உணவு கொடுக்க முடிந்தது.

அப்போது ஏற்பட்ட பஞ்சத்தில் எத்தனை பேர் மாண்டனர் என்ற எண்ணிக்கை இப்போதும் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. மேற்கத்திய நாடுகள் மில்லியன் கணக்கில் சொல்கின்றன. ஆனால், வட கொரியாவுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற உதவி நிறுவனங்கள் நான்கு அல்லது ஐந்து இலட்சம் பேர் மாண்டதாக சொல்கின்றன. அனேகமாக மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதம் பட்டினியால் மடிந்திருக்கலாம்.

வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று கொடுக்க அனுமதித்தாலும், அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்ட இடங்களுக்கு செல்ல விடவில்லை. பல இடங்களில் மக்கள் தாமாகவே பஞ்சத்தில் இருந்து தப்புவதற்கு முயற்சித்துள்ளனர்.

நேர்மையானவர்கள் தான் முதலில் பட்டினிச் சாவுகளுக்கு பலியானார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது போல, திருடிப் பிழைத்தவர்கள் நிறையப் பேருண்டு. பலர் தம்மிடம் இருந்த சொத்துக்களை உணவுக்கு பண்டமாற்று செய்து கொண்டனர். இவ்வாறு தான், வட கொரிய மக்களால் மீண்டும் "முதலாளித்துவம் கண்டுபிடிக்கப் பட்டது".

ஒரு கட்டத்திற்கு மேல், மக்கள் மேலான அரசாங்க அதிகாரம் செல்லுபடியாகவில்லை. அரசு கட்டமைப்பு இயங்கவில்லை. சில இடங்களில், அதிகாரிகள் உணவு தானியம் திருடியவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார்கள், அல்லது மரண தண்டனை விதித்தார்கள். அந்தக் கதைகள் அப்போது மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப் பட்டன. ஆயினும், பெரும்பாலான இடங்களில் கீழ் மட்ட அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறினார்கள். உண்மையில் அவர்களால் முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒன்றில் அவர்களும் பஞ்சத்தால் பாதிக்கப் பட்டிருந்தனர், அல்லது ஊழல் மூலம் தம்மை வளர்த்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

கிம் இல் சுங் காலத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தப் பெரிய பதவியில் இருந்த அதிகாரியாக இருந்தாலும், ஊழல் கண்டுபிடிக்கப் பட்டால் அவரது கதை முடிந்து விடும். அதனால் சமூகத்தின் அனைத்து மட்டத்திலும், லஞ்சம், ஊழல் செய்வதற்கு எல்லோரும் பயந்திருந்தார்கள். ஆனால், தொண்ணூறுகளுக்குப் பிறகு, அவரது மகனான கிம் யொங் இல் ஆட்சிக் காலத்தில், சிறைக்கு அனுப்பப் பட்டவர் பணம் கொடுத்து விடுதலை வாங்கும் அளவிற்கு ஊழல் பெருகியது. தற்போது தென் கொரியாவில் அகதித் தஞ்சம் கோரும் பலர், தாம் முன்னர் கேள்விப்பட்ட பழைய கதைகளை சோடித்து கூறுகின்றார்கள் என்று சொல்லப் படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

முன்பெல்லாம் சீன எல்லைக்கு யாரும் செல்ல முடியாது. எல்லையோர வர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை வேறு. ஏராளமான வட கொரியர்கள், சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் எல்லை தாண்டி சீனாவுக்கு செல்கிறார்கள். எல்லைக் காவல் படையினருக்கு கொஞ்சப் பணம் கொடுத்தால் போதும். அவர் மற்ற பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். இன்றைக்கு சீனாவுக்கு செல்லும் அனைவரும் அகதிகள் அல்ல. பலர் எல்லையோர வர்த்தகம் செய்கிறார்கள். கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். வேலை தேடிச் செல்கிறார்கள்.

ஏராளமான வட கொரிய இளம் பெண்கள், சீன ஆண்களை திருமணம் செய்வதற்காக செல்கிறார்கள். அவை பெரும்பாலும் வசதிக்காக நடக்கும் திருமணங்கள் என்பதால் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. சீனாவில் நிலவிய ஒரு குழந்தைக் கொள்கை காரணமாக, பல விவசாயிகளுக்கு மண மகள் கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாது, பெருமளவு பணம் சீதனமாகக் கொடுக்க வேண்டும். 

அப்படியான நிலைமையில், வட கொரிய மணப் பெண்கள் அவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். இவ்வாறான பல திருமணங்கள் சட்டவிரோதமாகவே நடக்கின்றன. சீன அரசு அவற்றை பதிவு செய்ய மறுத்து வருகின்றது. அது மட்டுமல்லாது, பல இடங்களில் வீட்டு வன்முறைகளும் நடக்கின்றன. இருப்பினும், ஒரு சீன விவசாயிக்கு மனைவியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதன் மூலம், வறுமையில் இருந்து தப்பலாம் என்று வட கொரிய பெண்கள் நினைக்கின்றனர்.

சீனாவில், வட கொரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதற்காக, தென் கொரியாவின் வரவேற்பு நிலையம் ஒன்றுள்ளது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், அங்கு யாராவது சென்று, "நான் வட கொரியாவில் இருந்து தப்பி வந்திருக்கிறேன்." என்று சொன்னால் போதும். அவருக்கு இராஜ மரியாதை கிடைக்கும். விமான டிக்கட் கொடுத்து தென் கொரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள். 

அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. இன்றைக்கு ஆயிரக் கணக்கான வட கொரியர்கள் தஞ்சம் கோருகின்றனர். இருப்பினும், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரை மட்டுமே எடுத்துக் கொண்டு ஏனையோரை நிராகரித்து விடுகிறார்கள். ஏனிந்த மாற்றம்? தற்போது தஞ்சம் கோருவோரில் பெரும்பான்மையானோர் பொருளாதார அகதிகள் என்று தென் கொரியா நம்புகின்றது.

முன்பெல்லாம் வட கொரிய அகதிகளை கவர்ந்திழுப்பதற்காக, தென் கொரியாவில் நிறைய சலுகைகள் செய்து கொடுக்கப் பட்டன. அவர்களுக்கு உடனடியாக வீட்டு வசதிகளை செய்து கொடுத்து, நிறையப் பணமும் கொடுக்கப் பட்டது. தற்போது அகதிகள் எண்ணிக்கை பெருகி விட்டதால் அந்த சலுகைகள் குறைக்கப் படுகின்றன. மேலும், அகதிகளின் தகுதிக்கு ஏற்றவாறு வேலைகள் கிடைப்பதில்லை. ஒரே கொரிய மொழி பேசினாலும், ஒரே கல்வித் தகைமை இருந்தாலும், தகுதிக்கு குறைந்த வேலையை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

வட கொரியாவில் எஞ்சினியராக இருந்த ஒருவர், தென் கொரியாவில் உணவு விடுதியில் வேலை செய்வது சர்வசாதாரணம். இதனால், தென் கொரியா பற்றிய மாயை, வட கொரிய அகதிகள் மத்தியில் அகன்று வருகின்றது. "என்ன குறைபாடு இருந்தாலும், வட கொரியாவில் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம்" என்றும் சிலர் அங்கலாய்க்கின்றனர்.

மேற்குறிப்பிட்டது மாதிரியான பல காரணங்கள் கொரிய இணைப்பை தடுத்து வருகின்றன. ஜெர்மனி போன்று ஒன்று சேர்ந்தால், இலட்சக் கணக்கான வட கொரியர்கள் வேலை தேடி தென் கொரியாவுக்குள் படையெடுப்பார்கள் என்ற அச்சம் நிலவுகின்றது.

இதற்கிடையே தென் கொரியாவிலும் மிதவாதிகள் ஆட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் வட கொரியாவுடன் நல்லுறவு பேண விரும்பினார்கள். பல தசாப்த காலமாக பிரிந்திருந்த உறவினர்களை ஒன்று கூட வைக்கும் நிகழ்வுகள் நடந்தன. தென் கொரியர்கள், வட கொரியாவுக்குள் சுற்றுலா பயணம் செய்யலாம் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன. சுதந்திர வர்த்தக வலையங்கள் உருவாக்கப் பட்டு, அங்கே தென் கொரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை திறந்தன. அவற்றில் வட கொரிய தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப் பட்டது. இப்படிப் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், இன்னமும் இரண்டு நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நம்பிக்கையின்மையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தென் கொரியாவை விட, சீனா தான் இன்றைக்கு வட கொரியாவின் பிரதானமான வர்த்தக் கூட்டாளியாக உள்ளது. அண்மைக் காலமாக சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் வட கொரியாவுக்கு சாதகமாக அமைந்து விட்டது. அதாவது, மேற்கத்திய மூலதனம் ஊடுருவாத அரிதான நாடுகளில் வட கொரியாவும் ஒன்று. அது அருகில் உள்ள படியால், தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரலாம் என்று சீனா நினைக்கிறது. 

அதற்காக, வட கொரியா சீனாவுக்கு அடிமையாகி விடும் என்றும் எதிர்பார்க்க முடியாது. "பெயர் குறிப்பிடப் படாத நாடொன்றுக்கு உளவு பார்த்த சிலரை கைது செய்துள்ளதாக" வட கொரிய ஊடகம் ஒரு தடவை அறிவித்திருந்தது. ஊடகங்களில் அடிக்கடி குற்றஞ் சாட்டப்படும், தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உளவு பார்த்தால் பகிரங்கமாகவே அறிவிப்பார்கள். ஆகவே, "அந்த இனந் தெரியாத நாடு" சீனா தான் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய வட கொரியா 100% முதலாளித்துவ நாடு! அங்கே அனேகமாக எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் புகுந்து விட்டது. கிராமங்களில் விவசாயிகள் தமது நிலங்களில் தனித்தனியே விவசாயம் செய்கிறார்கள். ஊருக்கு ஊர் பொதுச் சந்தைகள் வந்து விட்டன. உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மட்டுமல்லாது, சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பொருட்களும் கூட அங்கே விற்பனையாகின்றன. நகரங்களில் உணவு விடுதிகள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் போன்றனவற்றை தனியார் நடத்துகின்றனர். இவர்கள் எல்லோரும் உள்ளூர் முதலாளிகள்.

இன்று வட கொரியா முதலாளித்துவ நாடாகி விட்டாலும், சட்டம் மட்டும் மாறவில்லை. பிற்காலத்தில் கொண்டு வந்த சில திருத்தங்களை தவிர, சட்டம் இப்போதும் கிம் இல் சுங் காலத்தில் இருந்த மாதிரியே உள்ளது. மேற்குலக நாடுகளில் வட கொரியா பற்றிய எதிர்மறையான பிரச்சாரங்களுக்கு அது காரணமாக இருக்கலாம். 

ஏனென்றால், இன்று பலரின் கண்களுக்கு தென்படாத விடயம் ஒன்றுள்ளது. இன்றைக்கு தனியார் நிறுவனங்கள் இயங்குவதை அனுமதித்து விட்டு, நாளைக்கு அவற்றை அரசுடைமை ஆக்கினால் யாரும் கேட்க முடியாது. பல உள்ளூர் முதலாளிகளுக்கு அந்தப் பயம் இருந்தாலும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள்.

இன்று வட கொரிய அரசு மட்டத்திலும் ஊழல் ஓரளவு ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்ட படியால், தனியாரின் வர்த்தக முயற்சிகள் தடையின்றி நடக்கின்றன. உள்ளூர் முதலாளி ஒருவர், தனது சொந்த நிறுவனத்தை சட்டப்படி ஒரு தனியார் நிறுவனமாக பதிவு செய்ய முடியாது! அதாவது, சட்டத்தின் படி, அந்த நாட்டில் தனியார் நிறுவனம் இயங்க முடியாது. 

உண்மையில், அவை அரசு நிறுவனங்கள் என்று தான் பதிவு செய்யப் படுகின்றன. பெயருக்கு ஓர் அரசு அதிகாரி இருப்பார். ஆனால், நடத்துவது முழுவதும் தனியார் தான். அந்த முதலாளி வேலையாட்களை சேவைக்கு அமர்த்தி, இலாபத்தின் பெரும் பகுதியை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். இதையெல்லாம் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அரசுக்கு மாதாமாதம் குறிப்பிட்டளவு பணத் தொகையை செலுத்தி விட்டால் போதும்.

சர்வதேச மட்டத்தில், வட கொரிய அரசு கூட வியாபாரம் செய்கின்றது. முதலாளித்துவம் என்று வந்து விட்டால் எதையும் விற்கலாம் என்பது நியதி. கிம் யொங் இல் காலத்தில், அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்காக பல சட்டவிரோதமான காரியங்களிலும் ஈடுபட்டார்கள். ஸ்கண்டிநேவிய நாடுகளில் அல்கஹோல் பானங்களின் விலை அதிகம். நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் பணியாற்றிய வட கொரிய இராஜதந்திரிகள் மதுபானங்களை கடத்திச் சென்று விற்று வந்தார்கள்.

வட கொரிய அரசு மீது கள்ள நோட்டு அச்சடித்த குற்றச்சாட்டும் எழுந்தது. ஜப்பானிய அரசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு இயக்கமான செம்படையின் தலைவர் வட கொரியாவில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார். அவரது மேற்பார்வையின் கீழ் போலி டாலர் நோட்டுக்கள் அச்சிடப் பட்டன. பல இலட்சம் போலி டாலர் நோட்டுக்கள் உலகம் முழுவதும் புழக்கத்தில் விடப் பட்டன. 

இன்னொரு இலாபம் தரும் சட்டவிரோத தொழிலிலும், வட கொரிய அரசு அதிகாரிகள் ஈடுபட்டார்கள். சர்வதேச அளவில் ஆயுதத் தடை விதிக்கப் பட்ட நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வது. சூடான், லிபியா போன்ற நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்தமை கண்டுபிடிக்கப் பட்டது. ஈழத்திற்காக போராடிக் கொண்டிருந்த புலிகளுக்கும் வட கொரிய ஆயுதங்கள் போய்ச் சேர்ந்துள்ளன!

தற்போது இந்த சட்டவிரோத கடத்தல்கள் முற்றாக நின்று விட்டன. கடத்தலால் கிடைக்கும் வருமானத்தை விட, ஆபத்துக்களால் ஏற்படும் அழிவு அதிகம் என்று நினைத்திருக்கலாம். அதை விட முக்கியமான காரணம், தற்போது அணு குண்டு வந்து விட்டது! அணு குண்டு பீதியை கிளப்பி விட்டே, அமெரிக்காவிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் பணம் கறக்க முடியும் என்பது தெரிந்து விட்டது. 

வட கொரியா ஏவுகணை பரிசோதனை செய்ததாக, திடீரென ஒரு செய்தி வரும். தென் கொரியா, அமெரிக்காவுடன் போருக்கு தயாராக இருப்பதாக மிரட்டல்கள் விடுக்கப்படும். மேற்கத்திய ஊடகங்களும் அந்தத் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். ஐ.நா. பாதுகாப்புச் சபை, அவசர அவசரமாக  கூடி விவாதிக்கும். இறுதியில் அமெரிக்கா கொஞ்சம் பணம் கொடுத்து, நிலைமையை "கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்."

உண்மையில், வட கொரியாவுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுக்கும் மில்லியன் டாலர்கள் கடனாக கொடுக்கப் படுவதில்லை! அது முற்றிலும் இலவசம்! கடந்த பல தசாப்த காலமாக, வட கொரியாவுக்கு எந்த அந்நியக் கடன்களும் இருந்ததில்லை! இப்போதும் இல்லை. எல்லாம் அந்த அணுவாயுத பகவானின் மகிமை!

(முற்றும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:


உசாத்துணை நூல்கள்:
1. Crisis in North Korea, The Failure of De-Stalinization, 1956 (Andrei Lankov)
2. The Real North Korea, Life and Politics in the Failed Stalinist Utopia (Andrei Lankov)
3. Comrades and Strangers, Behind the Closed Doors of North Korea, (Michael Harrold)
4. De Schurkenstaat, een geschiedenis van North Korea (Pierre Rigoulot)
5. Achter gesloten grenzen, reizen door Noord Korea (José Luís Peixoto)


3 comments:

Ramachandran SM said...

எந்த ஆதாரத்தின் அடிபடையி்ல் இந்த கட்டுரை எழுதினிர்கள். இதை படிக்கும் போது நீங்கள் ஒரு அமெரிக கைகூலி என்பதே தெரிகிறது,

சீனிவாசன் said...

மிக சிறப்பானதொரு கட்டுரைத்தொடர். வட கொரியா பற்றி எளிதில் அறிய முடியாத தகவல்களை தொகுத்து தந்துள்ளீர்கள்.இடதுசாரி பார்வையுடன் இம்மாதிரியான தொடர் கிடைப்பது அரிதிலும் அரிது.

இன்று இயங்கும் தமிழ் ஊடகங்களின் வாயிலாய் அறிய முடியாத தகவல்கள் இவை. உலக நாடுகள் குறித்து எமது அறிவை விசாலமாக்கும் தங்களுக்கு என்றென்றும் எமது நன்றிகள்.

Kalaiyarasan said...

நன்றி தோழர் சீனிவாசன்,
இந்தத் தொடர் விரைவில் நூலாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.