Sunday, June 07, 2015

வட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான சதித் திட்டம்

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் (பாகம் - 8) 

தொண்ணூறுகளில் முன்னாள் சோஷலிச நாடுகளின் அரசுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. வட கொரியாவில் அப்படியொரு "ஜனநாயகப் புரட்சியோ", அல்லது ஆட்சி மாற்றமோ நடக்காத காரணம் என்ன? 

பெரும்பாலும் கிழக்கைரோப்பிய சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்கள், மேற்கைரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்களுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்ச்சி ஒரு முக்கிய காரணம். மேலும், தேசியவாதமும் ஒரு முக்கியமான எதிர்ப்பியக்கமாக வளர்ந்து விட்டிருந்தது. மன்னர் காலத்தில் இருந்து கிழக்கைரோப்பிய தேசியவாத இயக்கங்கள் ரஷ்யர்களை சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளாக கருதி வந்தன.

வட கொரியாவை பொறுத்தவரையில் நிலைமை வேறு. அது ஒரு ஆசிய நாடு. கொரியர்களின் முதல் எதிரி, அவர்களால் சாம்ராஜ்ய விஸ்தரிப்புவாதிகளாக கருதப் பட்ட ஜப்பானியர்கள் தான். ஐம்பதுகளில், அறுபதுகளில் தென் கொரியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கவில்லை. அதுவும் ஒரு சர்வாதிகார நாடு தான்.

வட கொரியாவில் இருந்தது கம்யூனிச சர்வாதிகாரம் என்று நீங்கள் கருதினால், தென் கொரியாவில் இருந்தது முதலாளித்துவ சர்வாதிகாரம். அவ்வளவு தான் வித்தியாசம்.  சிங்க்மன் ரீ (Syngman Rhee) தலைமையிலான, தென் கொரியாவின் இராணுவ சர்வாதிகார அரசு, வட கொரியாவை விட மிகவும் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை பிரயோகித்திருந்தது. 

தெற்கிலும், அரசியல் எதிரிகள் காணாமல்போவதும், கொலை செய்யப் படுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. பல தசாப்த காலமாக கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்தது என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. தென் கொரியாவின் இராணுவ ஆட்சியாளர்கள், முன்னர் ஜப்பானிய காலனியாதிக்க அரசுடன் ஒத்துழைத்தவர்கள். அதனால், ஒட்டுமொத்த கொரியர்களினாலும், இனத் துரோகிகளாக கருதப் பட்டவர்கள் என்ற உண்மையையும் இங்கே குறிப்பிட வேண்டும். 

கிழக்கைரோப்பிய நாடுகளில் இருந்தது போல, கம்யூனிச அரசுக்கு சவாலாக விளங்கிய, தேசியவாத சக்திகள் எதுவும் வட கொரியாவில் இருக்கவில்லை. அதற்குக் காரணம், கிம் இல் சுங் அரசே, கொரிய தேசியவாதத்தை ஊக்குவித்து வளர்த்து வந்தது. அதாவது கம்யூனிச அதிகாரத்தின் கீழ்ப்பட்ட, பாதுகாப்பான தேசியவாதம். 

அன்றிருந்த சோவியத் வல்லரசும் கொரிய தேசியவாதத்தை, தனது பூகோள அரசியல் நலன்களுக்கு விரோதமானதாக கருதி ஒடுக்கவில்லை. அதற்குக் காரணம், கொரிய தேசியவாதம் அடிப்படையில் ஜப்பானுக்கு எதிரானது. அதனால் ஏற்றுக் கொள்ளத் தக்கது. (கிட்டத்தட்ட இதே மாதிரியான அணுகுமுறையை, சர்வதேச அளவில் பிரிட்டனும் பின்பற்றி வந்தது. முன்னாள் காலனிகளில் தனக்கு எதிரான தேசியவாதத்தை ஒடுக்கியும், ஆதரவான தேசியவாதத்தை வளர்த்தும் வந்தது.)

வட கொரிய வரலாற்றில் ஒரு தடவை கிம் இல் சுங் ஆட்சிக்கு எதிரான கலகம் நடந்தது. அதைக் கலகம் என்றும் சொல்ல முடியாது. கட்சிக்குள் சில அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி சதி செய்தார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை. கிம் இல் சுங் ஆட்சியை கவிழ்ப்பதற்கு எழுந்த எதிர்ப்புக் குரல்கள், தொடங்கிய சில மணி நேரங்களில் அடங்கி விட்டன. அதிக பட்சம் ஒரு சில நாட்கள் மட்டுமே கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்புக் காட்ட முடிந்தது. கட்சிக்குள்ளும், பொது மக்கள் மத்தியிலும் ஆதரவு இல்லாத படியால், அது அடங்கி விட்டது.

கிம் இல் சுங் அரசானது, கிளர்ச்சி பற்றிய தகவல்களை வெளியே விடாமல் வைத்திருந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தக் காலங்களில், பொதுவாகவே மக்கள், கட்சிக்குள் நடக்கும் விவாதங்களில் அதிக அக்கறை காட்டுவதில்லை. (எல்லா நாட்டு மக்களும் அப்படித் தான். அரசியலில் அக்கறை காட்ட மாட்டார்கள். வட கொரியர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.) அதிலும், கட்சியின் மத்திய குழு கூட்டம் என்றால் பகிரங்க வெளியில் அறிவிக்கப் படாமல் தான் நடக்கும். 

கட்சியின் மத்திய குழுவை விட இன்னொரு தலைமை இருந்தது. "பொலிட் பியூரோ" (Politburo - அரசியல் அலுவலகம் என்ற அர்த்தம் கொண்ட ரஷ்ய மொழிச் சொல். பிற்காலத்தில் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளிலும் கலந்து விட்ட அரசியல் கலைச் சொல்.) எனும் அமைப்பு தான், உண்மையில் கட்சியையும், நாட்டையும் நிர்வகித்து வந்தது. எழுபது உறுப்பினர்களைக் கொண்ட பொலிட் பியூரோ கூட்டங்கள் இரகசியமாகத் தான் நடக்கும். கூட்டம் எப்போது நடந்தது, அங்கே என்ன பேசப் பட்டது, என்பன போன்ற விடயங்களை கூட்டம் முடிந்த பின்னர் தான் அறிவிப்பார்கள்.

சொ சாங் இக் (Ch'oe Ch'ang-ik), பாக் சாங் ஒக் (Pak Ch'ang-ok) ஆகிய மத்திய குழு உறுப்பினர்களும், அமைச்சுப் பொறுப்பில் இருந்தவர்களும் தான் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள். 1956 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கூட்டப் பட்ட பேரவைக் கூட்டத்தில், கிம் இல் சுங் நடைமுறைப் படுத்திய தன்னைச் சுற்றிய தனிநபர் வழிபாட்டை, கடுமையாக விமர்சித்துப் பேசுவது அவர்களது திட்டமாக இருந்தது. 

அதாவது, தாங்கள் பேசத் தொடங்கியவுடன், கிம் இல் சுங்கின் எதேச்சாதிகாரம் காரணமாக வாயை மூடிக் கொண்டிருப்பவர்கள் தங்களை ஆதரித்து குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். பேரவை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கிம் இல் சுங்கை ஓரங் கட்டலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. இதை வாசித்துக் கொண்டிருக்கும் கம்யூனிச எதிர்ப்பாளர்களும் அப்படித் தான் நடந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

1956 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் என்ன நடந்தது என்ற விபரங்கள் பெருமளவு வெளியே வந்துள்ளன. நிச்சயமாக, வட கொரிய அரச ஊடகங்கள் அதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டா. "தலைவர் கிம் இல் சுங்கிற்கு எதிரான சதிகாரர்களின் இரகசிய சதிப்புரட்சி திட்டம் முறியடிக்கப் பட்டது" என்று சுருக்கமாக சொல்லி இருக்கும். ஆனால், வேறு சில பக்கங்களில் இருந்து விபரங்கள் கிடைத்துள்ளன. 

சதித்திட்டம் தீட்டிய குழுவை சேர்ந்த ஒருவர், சோவியத் தூதுவராலயத்திற்கு சென்று, "கிம் இல் சுங் அதிருப்தியாளர் குழு ஆட்சிமாற்றத்தை விரும்புவதாக" அறிவித்து இருக்கிறார். எதற்காக சோவியத் தூதுவரிடம் சதித்திட்டம் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும்? அன்றைய நிலையில், வட கொரியாவில் ஆட்சி மாற்றம் நடந்தால், புதிய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்கு சோவியத் யூனியனின் ஒத்துழைப்பு அவசியம் என்று நினைத்திருக்கலாம்.

ஒவ்வொரு தூதுவராலயமும், தாங்கள் இராஜதந்திர உறவு வைத்திருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது, யாருடன், என்ன உரையாடப் பட்டது,  என்பன போன்ற தகவல்களை பதிவு செய்து, தாயகத்தில் உள்ள தமது அரசுக்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவ்வாறு பியாங்கியாங்கில் இருந்த சோவியத் தூதுவராலயம், மொஸ்கோவுக்கு அனுப்பிய தட்டச்சு செய்யப் பட்ட கடிதத்தில் சதி பற்றிய விபரம் பதிவாகி உள்ளது. இன்றைக்கு சோவியத் யூனியன் மறைந்து விட்ட படியால், ரஷ்ய ஆவணக் காப்பகத்தில் பழைய ஆவணங்கள் வெளியார் பார்வைக்கு திறந்து விடப் படுகின்றன. 

வட கொரியாவில் பல வருட காலம் வாழ்ந்த ரஷ்யப் பேராசிரியர் Andrei Lankov அவற்றைப் பார்வையிட்டுள்ளார். கொரிய மொழி சரளமாகப் பேசக் கூடிய அந்தப் பேராசிரியர், ஆகஸ்ட் கலகத்தில் உயிர் தப்பி சீனாவுக்கு ஓடிய அகதிகளையும் பேட்டி கண்டு தகவல்களை சேகரித்துள்ளார். (மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் "Crisis in North Korea" என்ற நூலை வாசிக்கவும்.)

ஏன் கிம் இல் சுங்கிற்கு எதிரான ஆகஸ்ட் சதி தோல்வியுற்றது? கிளர்ச்சியாளர்கள் பேரவையில் எழுந்து நின்று கிம் இல் சுங்கிற்கு எதிரான முறைப்பாடுகளை அடுக்கினார்கள். அவர்களது முதலாவதும், முக்கியமானதுமான தாக்குதல், கிம் இல் சுங்கின் தலைமை வழிபாட்டுக்கு எதிரானதாக இருந்தது. 

தனி நபர் வழிபாடு மார்க்சிய கருத்தியலுக்கு விரோதமானது என்று விமர்சனத்தை முன்வைத்தனர். ஏற்கனவே, சோவியத் யூனியனில் ஸ்டாலினின் தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான குருஷேவின் தாக்குதல்கள், அவர்களது சதித் திட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தன. (போலந்து, பல்கேரியா, ஹங்கேரி போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், குருஷேவின் கொள்கைகளை பின்பற்றிய தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் அதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர்.) 

அது மட்டுமல்ல, கிம் இல் சுங் தனது விசுவாசிகள் சொல்வதை மட்டும் கேட்கிறார், மக்களின் கஷ்டங்கள் குறித்து கவலையற்று இருக்கிறார், என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. கிம் இல் சுங், "விவசாயிகளை துன்புறுத்தி வரி அறவிடுகிறார்" போன்ற குற்றச் சாட்டுகள், தமக்கு பொது மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். 

கிம் இல் சுங் எதிர்ப்பாளர்கள் பேசுவதற்கு முயற்சித்த ஒவ்வொரு தடவையும், பேரவை உறுப்பினர்கள் மத்தியில் இருந்து பெரும் கூச்சல் எழுந்தது. அவர்கள் பேசுவதை யாரும் கேட்க விடாமல், கூச்சலிட்டு, சத்தம் போட்டு, இடையூறு செய்து கொண்டிருந்தார்கள். 

அவையில் ஏற்பட்ட பல மணி நேர அமளிதுமளிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் நோக்கம் நிறைவேறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. கிளர்ச்சி செய்தவர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள், கிம் இல் சுங் பக்கம் நின்ற படியால், தவிர்க்க முடியாமல் தோல்வியை ஏற்றுக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கினார்கள்.

வட கொரியா வரலாற்றில், 1945 - 1956 வரையிலான காலப்பகுதியில், கட்சிக்குள் ஓரளவு கருத்துச் சுதந்திரம் இருந்தது. அப்போதும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான அடக்குமுறை, களையெடுப்புகள் நடந்துள்ள போதிலும், கிம்மின் இறுக்கமான சர்வாதிகாரம் நிலவவில்லை. 

குற்றஞ் சாட்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை. மிகக் குறைந்தளவு பேர் தான் கொல்லப் பட்டனர். பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களில் சிலர், பல வருடங்களுக்குப் பின்னர், தண்டனைக் காலம் முடிந்த பின்னர் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

அடக்குமுறைக்கு பலியான பலரைப் பொறுத்தவரையில், சமூகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப் பட்டமை பெரியதொரு தண்டனையாக இருந்தது. ஏனென்றால், அன்று தண்டிக்கப் பட்ட அரசியல் கைதிகளில் பலர் அரசாங்கத்திலும், ஆளும் கட்சிக்குள்ளும் உயர் பதவி வகித்தவர்கள். 

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த "குற்றவாளிகள்" பலருக்கு, பதவியிறக்கம், தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றம் செய்தல் போன்ற தண்டனைகளும் கிடைத்துள்ளன. ஆயினும், "காணாமல்போனோர்" எல்லோரும் கொலை செய்யப் பட்டு விட்டனர் என்றும் அர்த்தம் கொள்ள முடியாது.

அமைச்சு ஒன்றில் பெரிய பதவி வகித்தவர்கள், ஒரு மாதம் தொழிற்சாலை தொழிலாளியாக முதுகு முறிய வேலை செய்ய கட்டாயப் படுத்துவது, அவர்களைப் பொறுத்த வரையில் ஒரு பெரிய தண்டனை தான். கிம் இல் சுங்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களுக்கும் அவ்வாறு தான் ஆரம்பத்தில் சிறிய தண்டனைகள் வழங்கப் பட்டன. அதாவது, அவர்களது அரசு உயர் பதவிகள் பறிக்கப் பட்டு, முக்கியத்துவம் இல்லாத சாதாரண பணிகளில் அமர்த்தப் பட்டனர். அதுவும் கொஞ்சக் காலம் தான். சில மாதங்களின் பின்னர் சிறையில் அடைக்கப் பட்டனர், சிலநேரம் கொலை செய்யப் பட்டிருக்கலாம்.

சதிகாரர்கள் தென் கொரியாவுக்கு தப்பியோடலாம் என்ற எண்ணத்தில் கொரியாக்களுக்கு இடையிலான எல்லைகள் பலப் படுத்தப் பட்டன. ஆனால், தப்பியோடும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் அனைவரும் சீனாவுக்கு சென்று, அங்கே அகதித் தஞ்சம் கோரினார்கள். வட கொரியா ஒரு குட்டி நாடு. அதனால், ஒரே நாளில் எல்லை கடக்க முடிந்தது. எல்லையில் நீளமான யாலு நதி ஓடிக் கொண்டிருந்தது. கடும் வெய்யில் தகிக்கும் கோடை காலமான படியால், காவலர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இலகுவாக தப்பியோட முடிந்தது.

குறைந்தது பத்து கிளர்ச்சியாளர்களாவது, சீனாவில் அகதித் தஞ்சம் கோரியிருந்தனர். சீனாவும் அவர்களை உடனடியாக அகதியாக அங்கீகரித்திருந்தது. இதிலிருந்து ஓர் உண்மை புலனாகும். கிம் இல் சுங் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் சீனாவின் பங்கு இருந்திருக்கலாம். அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் பகிரங்கமாக்கப் படவில்லை. 

இருப்பினும், சீனாவின் பின்புலத்தை சந்தேகிப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. கொரிய யுத்தம் நடந்த காலத்தில் தொடங்கிய முரண்பாடு அது. அன்றைய காலத்தில், போர்க்களத்தில் நின்றிருந்த கிம் இல் சுங்கிற்கும், சீன தொண்டர் படையின் தளபதிக்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். 

1958 ம் ஆண்டு, அதாவது ஆகஸ்ட் சதி நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர்,  வட கொரியாவில் நிலை கொண்டிருந்த சீனப் படைகளை வாபஸ் வாங்கும் இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. (இதன் மூலம், வட கொரியாவில் எந்தவொரு அந்நிய நாட்டுப் படைகளும் இல்லையென்று நிரூபிக்க முடிந்தது. தென் கொரியாவில் இன்றைக்கும் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது.)

கொரிய போர் எப்படி ஆரம்பித்தது என்பதிலும் மாறுபட்ட பார்வைகள் இருந்தன. தென் கொரியர்கள் தான் முதலில் சண்டையை ஆரம்பித்தார்கள். வட கொரியப் படைகள் எதிர்த் தாக்குதல் நடத்தின என்பது அரச தரப்பு வாதம். வட கொரியாவின் நண்பர்கள் மத்தியில் கூட அந்த வாதம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. 

சீனாவில் மாவோவின் தலைமையை பொறுத்தவரையில், கிம் இல் சுங் போரை ஆரம்பித்த செயலானது, விளைவை பற்றி சிந்திக்காத, முட்டாள்தனமான நடவடிக்கை. இது போன்ற பல சந்தர்ப்பங்களில், கிம் இல் சுங் ஒரு தன்முனைப்பு அதிகம் கொண்ட, யாருடைய சொல்லையும் மதிக்காத பிடிவாதக்காரர் என்ற கருத்து நிலவியது.

"மற்றவர் சொல்லைக் கேட்காத முரடரான" கிம் இல் சுங்கை பதவியில் இருந்து அகற்றி விட்டு, அந்த இடத்தில் தமக்கு விசுவாசமான தலைமையை நியமிப்பதற்கு சீனா எண்ணியிருக்கலாம். அது சாத்தியம் என்பதை இன்னொரு காரணியும் நிரூபிக்கிறது. 

கிம் இல் சுங்கிற்கு எதிரான சதியாலோசனையில் பங்குபற்றிய அனைவரும் "சீனக் - கொரியர்கள்". அதாவது, 2 ம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர், பல வருட காலம் சீனாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த, சரளமாக சீன மொழி பேசத் தெரிந்த கொரியர்கள். அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு, நாங்கள் வட கொரியாவின் சமூக அமைப்பை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
7. கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் நடக்கும்
6. அனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா
5. அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்


உசாத்துணை நூல்கள்:
1. Crisis in North Korea, The Failure of De-Stalinization, 1956 (Andrei Lankov)
2. The Real North Korea, Life and Politics in the Failed Stalinist Utopia (Andrei Lankov)
3. Comrades and Strangers, Behind the Closed Doors of North Korea, (Michael Harrold)
4. De Schurkenstaat, een geschiedenis van North Korea (Pierre Rigoulot)
5. Achter gesloten grenzen, reizen door Noord Korea (José Luís Peixoto)

No comments: