Wednesday, June 03, 2015

கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் நடக்கும்

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் (பாகம் - 7)

"கம்யூனிச சர்வாதிகாரத்திற்கு எதிராக யாராவது கிளர்ந்தெழுந்தால், ஜனநாயகம், சுதந்திரத்திற்காக ஏங்கிக் கிடக்கும் மக்கள் அவர்களை பின்தொடர்வார்கள்." என்று தான் மேற்குலகில் உள்ளோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய மாயை என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

ஐம்பதுகளில், கிழக்கு ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி ஆகிய சோஷலிச நாடுகளில் கலவரங்கள் வெடித்தன. ஆனால், அதையெல்லாம் "சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்குமான மக்கள் எழுச்சி" என்று நினைத்துக் கொள்வது மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட புரிதல். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இங்கே அதைப் பற்றி ஆராய்வது என் நோக்கமல்ல. அன்று வட கொரியா மீது தாக்கம் செலுத்திய வெளியுலக சக்திகளில் அது முக்கியமானது என்பதை மட்டும் குறித்துக் கொள்வோம்.

குறிப்பாக ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் தான் மேற்படி கலவரங்கள் உண்டாக்கியுள்ளன. முன்னர் சோஷலிச நாடுகள் முழுவதிலும் இருந்த ஸ்டாலினிச அடக்குமுறை தான் அதற்கு காரணம் என்று ஒரேயடியாக நிறுவி விட முடியாது. குருஷேவின் ஸ்டாலினிச ஒழிப்பு என்ற கோஷத்தின் கீழ், சோவியத் யூனியன் உட்பட பல சோஷலிச நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. 

ஒரு மேற்கத்திய தாராளவாதி போன்று நடந்து கொண்ட அதே குருஷேவ், தான் தவறு செய்து விட்டதாக பின்னர் ஒரு நேரத்தில் உணர்ந்திருப்பார். அதனால் தான், ஹங்கேரி மக்களின் எழுச்சியை அடக்குவதற்காக இராணுவத்தை அனுப்பினார். இதற்கிடையே, ருமேனியா, அல்பேனியா போன்ற நாடுகள், ஆட்சி மாற்றத்தை நடக்க விடாமல் தடுத்ததுடன் பழைய "ஸ்டாலினிச" ஆட்சியையே தக்க வைத்துக் கொண்டன. அவற்றில் வட கொரியாவும் ஒன்று.

கிம் இல் சுங்கை சோவியத் படையினர் தான் ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். அவர் சோவியத் வல்லரசை பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது சோவியத் யூனியன் அவரைப் பயன்படுத்திக் கொண்டதா என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது கடினம். அநேகமாக, கிம் இல் சுங் தானாகவே முன்வந்து சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொள்வதற்கு இணங்கி இருக்கலாம். பின்னர், சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருந்து, சோவியத் யூனியனுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டிருக்கலாம்.

கிம் இல் சுங்,  "ஏன் வழி தனி வழி" என்று, வட கொரியாவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டார். சிலநேரம், சர்வதேச கம்யூனிச உலகில் நடந்து வந்த மாற்றங்கள், கிம் இல் சுங் தனிக்காட்டு ராஜா ஆவதற்கான சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கி இருக்கலாம். கிம் இல் சுங், பல வருடங்களுக்குப் பின்னர், கடைசிக் காலத்தில் தன்னை ஒரு "கொரிய தேசியவாதி" என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

மேற்குலகில் முன்னாள் சோஷலிச நாடுகளை, சோவியத் யூனியனின் "சாட்டலைட் நாடுகள்" என்று பரிகாசம் செய்வதுண்டு. அதாவது, வெளிப்படையாக தெரியா விட்டாலும், சோவியத் யூனியனின் மேலாதிக்கம் அந்த நாடுகள் மீது அழுத்தமாகப் பதிந்திருந்தது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையில், மிகவும் எளிமைப் படுத்தப் பட்ட புரிதல் தான். ஆரம்பத்தில் இருந்தே யூகோஸ்லேவியா, சோவியத் தொடர்புகளை துண்டித்து விட்டு தனித்து இயங்கி வந்தது. ஐம்பதுகளுக்குப் பிறகு, ருமேனியா, அல்பேனியா, வட கொரியா ஆகிய நாடுகள் பெருமளவு சுதந்திரத்துடன் தனித்து நின்றன. சீனாவும் தனியான வல்லரசாக மாறியதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

சர்வதேச கம்யூனிச சமூகத்தில், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், பெரியதொரு பிளவு தோன்றியது. ஸ்டாலினை ஆதரித்த நாடுகள்/கட்சிகள் ஒரு பக்கமும், எதிர்த்த நாடுகள்/கட்சிகள் இன்னொரு பக்கமுமாக பிரிந்து நின்றன. அது தான் பின்னர், "ரஷ்யா சார்பு", "சீனா சார்பு" என்று இரண்டு பெரும் பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது.

அன்று, கிம் இல் சுங், ஸ்டாலினை ஆதரித்தவர்கள் பக்கம் நின்றிருந்தார். அவர் ஸ்டாலின் காலத்தில் வளர்த்தெடுக்கப் பட்ட ஒருவர் என்ற காரணம் முக்கியமானது தான். அதையும் தாண்டி, வட கொரியா சம்பந்தமான அரசியல் வியூகங்களும் காரணமாக இருந்துள்ளன.

முதலில் கொரிய பூகோள அரசியலுக்கு எதிரான காரணத்தைப் பார்ப்போம். கொரியாவை ஒன்றிணைப்பது கிம் இல் சுங்கின் கனவாக இருந்ததுடன், அதற்காக பெரும் இரத்தக்களரியை ஏற்படுத்திய யுத்தத்தை நடத்தி இருந்தார். அது போர்நிறுத்தத்தில் முடிந்தது நினைவிருக்கலாம். அதன் அர்த்தம், கொரியப் போர் இன்னும் முடியவில்லை. சோவியத் வல்லரசின் அதிகார பீடத்தில் நடந்த மாற்றம் கிம் இல் சுங்கினை கலவரமடைய வைத்தது.

ஸ்டாலின் காலத்தில், முதலாளித்துவ நாடுகளுடனான மோதலுக்கு, எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப் பட்டு வந்தது. குருஷேவ் காலத்தில் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவு பேணும் போக்கு ஆரம்பமாகியது. "சமாதானமான சகவாழ்வு" என்ற கோஷத்தின் கீழ், ஆயுதப் போட்டியை குறைத்துக் கொண்டார்.

அதன் அர்த்தம், இனி வருங்காலத்தில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் போர் மூண்டால், சோவியத் யூனியன் உதவிக்கு வராது என்பதா? இதனால், சோவியத் யூனியனை சந்தேகக் கண் கொண்டு பார்த்த கிம் இல் சுங், உள் நாட்டில் குருஷேவ் அனுதாபிகளை களையெடுக்க ஆரம்பித்தார்.

அநேகமாக, வட கொரியா இன்று அணுவாயுதம் வைத்திருப்பதற்கான அடித்தளமும் அப்போதே உருவாகி இருக்கலாம். ஐம்பதுகளிலேயே, வட கொரியாவின் பாதுகாப்பிற்கு அணுவாயுதம் வேண்டுமென்று சோவியத் யூனியனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், "மேற்குலகுடன் நட்பு பாராட்ட விரும்பிய குருஷேவ் நிர்வாகம் அதற்கு மறுத்து விட்டது.

வட கொரியர்கள், அடுத்த அணுவாயுத வல்லரசான சீனாவிடமும் அணுவாயுதம் கேட்டிருக்கிறார்கள். அணுவாயுதப் பரவலாக்கத்தை தடுப்பதை நேர்மையாக பின்பற்றி வந்த சீனாவும் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது. பிராந்திய சமாதானமும் சீனாவின் மறுப்புக்கு காரணமாக அமைந்திருந்தது. அதாவது, தென் கொரியாவும், ஜப்பானும் அணுவாயுதம் தயாரிக்கப் போகின்றன என்ற தகவல்கள் அப்போதே வெளிவரத் தொடங்கி இருந்தன. வட கொரியாவுக்கு அணுவாயுதம் கொடுத்து, பிராந்தியத்தில் பதற்றத்தை உண்டாக்கக் கூடாது என்று சீனா நினைத்திருக்கலாம்.

ஐம்பதுகளுக்குப் பின்னர், கிம் இல் சுங் தனி வழியே பயணம் செய்வதற்கு சித்தாந்த அடிப்படைக் காரணமும் இருந்தது. ஸ்டாலினின் லெனினிச கருதுகோள் ஒன்றை, கிம் இல் சுங் மிகத் தீவிரமாக நம்பி, அதையே தன நாட்டிலும் பின்பற்றி வந்தார். "பாட்டாளி வர்க்கத்தின் சோஷலிச அரசு அமைந்தாலும், அங்கும் வர்க்கப் போராட்டம் கத்தி போன்று கூர் தீட்டப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்." என்று ஸ்டாலின் கூறி இருந்தார். அதாவது, புரட்சி நடந்தவுடன் எல்லாம் ஒரே நாளில் மாறி விடப் போவதில்லை. அதற்குப் பின்னரும் வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.

குருஷேவ் பதவிக்கு வந்தவுடன், "வர்க்கப் போராட்டம் முடிந்து விட்டது" என்றும், "தற்போது சோவியத் யூனியன் அனைத்துப் பிரஜைகளுக்குமான அரசாகி விட்டது" என்றும் அறிவித்திருந்தார். "அனைத்துப் பிரஜைகளின் அரசு" என்பது இங்கே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டும். அது மேற்கத்திய லிபரல்வாத அரசுக் கட்டுமானம் ஆகும். அதாவது, சோஷலிச அரசுடன் சித்தாந்த அடிப்படையில் முரண்படும் பிரிவினரும், சுதந்திரமாக அனைத்து உரிமைகளுடனும் வாழ முடியும் என்பது தான் அதன் அர்த்தம்.

குருஷேவின் மேற்கத்திய லிபரல்வாதம், வட கொரியாவில் கிம் இல் சுங் அரசுக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கி இருந்தது. குறிப்பாக, சோவியத் யூனியனிலும், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளிலும் உயர்கல்வி கற்று விட்டு நாடு திரும்பிய மாணவர்கள், அதைப் பற்றி பல்கலைக்கழக மட்டத்தில் விவாதித்துள்ளனர். சர்வதேச நிலைமை மாறுவதை அவதானித்த வட கொரிய அரசு, வெளிநாடுகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களை உடனடியாக நாட்டிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, ஹங்கேரியில் படித்துக் கொண்டிருந்த வட கொரிய மாணவர்கள் சிலர், அந்நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி ஆஸ்திரியாவுக்கு ஓடி விட்டனர்.

ஆனால், கிம் இல் சுங் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி, மாணவர்கள் மத்தியில் இருந்து உருவாகவில்லை. சொந்தக் கட்சிக்குள்ளே, தலைமைப் பதவிகளை அலங்கரித்த முக்கியமான உறப்பினர்கள் மத்தியில் இருந்து எழுந்தது. கிம் இல் சுங்கின் தலைமை வழிபாட்டை ஒழித்து, அவரது எதேச்சாதிகாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று, தமது எதிர்ப்புக்கு நியாயம் கற்பித்துக் கொண்டனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பியக்கத்திற்கு, கட்சிக்குள் மட்டுமல்ல, மக்கள் மத்தியில் கூட ஆதரவு இருக்கவில்லை.

கிம் இல் சுங் அரசுக்கு எதிரான, ஆட்சிக் கவிழ்ப்பு சதி கண்டுபிடிக்கப் பட்டவுடன், வட கொரிய ஊடகங்கள் அவர்களை "குறுங்குழுவாதிகள்" என்று தான் முதலில் குற்றஞ் சாட்டி இருந்தன. அந்தத் தகவல்களை கேள்விப் பட்டதும், தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பின்வருமாறு எதிர்வினையாற்றினார்கள்: "அந்தக் குழுவாதிகளை எங்களிடம் ஒப்படையுங்கள். நெருப்புக்குள் தூக்கிப் போட்டு விடுவோம்." அதன் அர்த்தம், வெளியுலகில் பலர் தவறாக நினைப்பதற்கு மாறாகத் தான் வட கொரியாவின் உள்நாட்டு நிலைமை இருந்துள்ளது. அதாவது, கிம் இல் சுங் ஆட்சிக்கு, பெரும்பான்மை வட கொரியர்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கிம் இல் சுங்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், மக்கள் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப் பட்டு விசாரிக்கப் பட்டனர். குற்றங்களை ஒப்புக் கொண்டவர்கள் பகிரங்கமாக தூக்கிலிடப் பட்டனர். ஆயினும், அதற்குப் பின்னரான காலங்களில், குற்றஞ் சாட்டப் பட்ட அரசியல் கைதிகள், மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப் படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தற்போது, அரசியல் கைதிகள் உடனடியாக கண் காணாத தொலைவில் இருக்கும் சிறை முகாம்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றனர். அங்கு வைத்து விசாரிக்கப் படுகின்றனர். வட கொரியாவில் இரண்டு வகையான சிறை முகாம்கள் உள்ளன.

ஒன்று, தடுப்பு முகாம் வகையை சேர்ந்தது. குற்றவாளியின் குடும்ப உறுப்பினர்களும் அங்கே தான் தங்க வேண்டும். அதனால், பிள்ளைகளுக்கான பாடசாலைகளும் சிறைக்குள்ளே இருக்கின்றன. அரசியல் கைதிகள் யாருக்காவது மரண தண்டனை விதிக்கும் நோக்கம் இருந்தால், சிறப்பு முகாமிற்கு மாற்றி விடுவார்கள்.

சிறப்பு முகாமில் என்ன நடக்கிறது என்று அறிந்தவர் யாரும் வெளியே சொன்னதில்லை. அங்கிருந்து யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை. மரண தண்டனை விதிக்கப் பட்டவரின் குடும்பத்தினரை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அவ்வாறு சிறை சென்று மீண்டவர்கள் தான், அங்குள்ள நிலைமைகளை வெளியுலகிற்கு சொன்னார்கள். தென் கொரியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அகதிகள் சிலரும், முதலாவது வகை சிறை முகாம்களில் தடுத்து வைத்திருக்கப் பட்டவர்கள் தான்.

இந்த இடத்தில், ஸ்டாலின் காலத்து சோவியத் யூனியனில் நீதி வழங்கும் முறை பற்றியும் குறிப்பிட வேண்டும். மேற்குலகில் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை கொடூரமானது" என்று பலவாறு சொல்லலாம். முப்பதுகளில் ஏராளமானோர் சித்திரவதை செய்யப் பட்டனர். இலட்சக் கணக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டு கொல்லப் பட்டனர். இருந்தாலும், அந்தக் காலத்திலும் நீதிமன்றங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. சோவியத் நீதி அமைப்பு, மேற்கு - ஐரோப்பிய நீதி அமைப்பை பெரிதும் ஒத்திருந்தது.

ஒரு பொதுவான நீதிபதியை மத்தியஸ்தராக கொண்ட விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள், விசாரணை பற்றிய விபரங்கள் முழுமையாக ஊடகங்களில் அறிவிக்கப் படுதல், இவ்வாறு எல்லா விடயங்களிலும் மேற்கத்திய முறையை பின்பற்றி வந்தது. மேற்குலகில் அதனை "நாடக நீதிமன்றம்" என்று சொன்னாலும், ஓரளவிற்கேனும் மக்கள் வழக்குகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. வட கொரியாவில் அந்த முறை பின்பற்றப் படவில்லை. ஆகவே, இந்த விடயத்திலும் வட கொரியா ஒரு "ஸ்டாலினிச நாடு" அல்ல.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
6. அனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா
5. அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்


உசாத்துணை நூல்கள்:
1. Crisis in North Korea, The Failure of De-Stalinization, 1956 (Andrei Lankov)
2. The Real North Korea, Life and Politics in the Failed Stalinist Utopia (Andrei Lankov)
3. Comrades and Strangers, Behind the Closed Doors of North Korea, (Michael Harrold)
4. De Schurkenstaat, een geschiedenis van North Korea (Pierre Rigoulot)
5. Achter gesloten grenzen, reizen door Noord Korea (José Luís Peixoto)

No comments: