Thursday, June 11, 2015

தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரின் உயர்ந்த அந்தஸ்து உயிராபத்தானது


"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் (பாகம் - 9) 

வட கொரியாவானது, "இன்று வரைக்கும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் கம்யூனிச நாடு" என்ற சாதனை படைத்துள்ளது. அன்று அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற (கம்யூனிச) தொழிலாளர் கட்சியின் ஆட்சியும், மற்றும் கிம் இல் சுங்கின் குடும்ப அதிகாரமும் நிலைத்து நிற்கலாம். ஆனால், அதற்காக அன்றிருந்த வட கொரியா தான் இன்றிருக்கிறது என்று கூற முடியாது. அது பல மாற்றங்களை சந்தித்துள்ளது. தொண்ணூறுகளுக்குப் பின்னரான மாற்றங்களை பிறகு பார்ப்போம். இப்போது ஐம்பதுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அலசி ஆராய்வோம்.

கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு 1948 ம் ஆண்டு ஸ்தாபிக்கப் பட்டது. 1950 இலிருந்து 1953 வரையில் கொரியப் போர் நடந்தது. அந்தப் போரானது, எண்ணிலடங்காத பேரழிவுகளை உண்டாக்கியது. நகரங்களை நிர்மூலமாக்கியது. பல இலட்சம் உயிர்கள் பலியாக காரணமாக இருந்தது. போர் முடிந்த பின்னர், உள்நாட்டில் கிம் இல் சுங்கின் செல்வாக்கு உயர்ந்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமல்ல, எதிர்பார்த்த படி போர் நடந்து முடியாத காரணத்தால் பழிவாங்கும் படலமும் ஆரம்பமாகியது.

சோஷலிச கொரியாவை கட்டியெழுப்பும் நோக்கில், இலட்சக் கணக்கான தென் கொரியர்கள் வட கொரியாவில் குடியேறியிருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த சமூகத்தை சேர்ந்த சில இராணுவ ஜெனரல்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. தெற்கு நோக்கிய படையெடுப்பின் போது, அவர்களின் பிரதேச (தென் கொரியா) மக்கள் மத்தியில் புரட்சியை உண்டாக்கவில்லை என்பது ஒரு முக்கியமான குற்றச் சாட்டு. இதனால் பல தென் கொரிய இராணுவ அதிகாரிகள் பதவியிறக்கப் பட்டனர். விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். அதைத் தொடர்ந்து சிறை வாசமும், சிலநேரம் மரண தண்டனையும் கிடைத்தது. வட கொரிய வரலாற்றில் அடுத்தடுத்து நடந்த களையெடுப்புகளில் இது ஒரு பகுதி மட்டுமே.

இன்றைக்குப் பலர் வட கொரியாவை, "உலகில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்ட நாடு" என்று நினைக்கிறார்கள். அதன் அர்த்தம், உலகில் நடக்கும் மாற்றங்கள், அந்த நாட்டில் எந்த வித தாக்கத்தையும் உண்டாக்காது என்பதல்ல. நிச்சயமாக, வட கொரியாவும் உலக நாடுகளின் குடும்பத்தில் ஓரங்கம் தான். அன்றைய அரசியல் நிலையில், கம்யூனிச நாடுகளின் அணியில் உறுப்பினராக இருந்தது. அனேகமாக, சோவியத் யூனியனில் ஸ்டாலின் அதிகாரத்தில் இருந்த காலம் வரையில், சர்வதேச கம்யூனிச கூட்டமைப்பில் எந்த விரிசலும் தோன்றவில்லை. விதிவிலக்காக, யூகோஸ்லேவியா மட்டும் தனியாக பிரிந்து நின்றது.

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிசக் கூட்டமைப்பில் பெரும் பிளவு ஏற்பட்டது. ஸ்டாலினை ஆதரித்தவர்கள் ஓரணியிலும், குருஷேவை ஆதரித்தவர்கள் மற்றைய அணியிலும் நின்றனர். அல்பேனியா, ருமேனியா, சீனாவைத் தவிர, பிற சோஷலிச நாடுகள் எல்லாம் குருஷேவின் "ஸ்டாலினிச எதிர்ப்புக் கொள்கையை" பின்பற்றத் தொடங்கின. அந்த மாற்றம் வட கொரியாவிலும் நடக்கலாம் என்று கிம் இல் சுங் தலைமை அஞ்சியது.

வட கொரியாவிலும் குருஷேவ் ஆதரவாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்று அஞ்சுவதற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. சோவியத் - கொரியர்கள். யார் அவர்கள்? அன்று சோவியத் யூனியனாக இருந்த ரஷ்யாவில், கொரிய சிறுபான்மை இனம் வாழ்வதாக ஏற்கனவே பார்த்தோம். கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு 1948 ம் ஆண்டு உருவாக்கப் பட்டதும், இலட்சக் கணக்கான சோவியத் - கொரியர்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேறினார்கள். சோவியத் யூனியன் அந்தப் புலம்பெயர்வை ஊக்குவித்திருந்தது. ஒரு வகையில், உலகில் புதிதாக உருவான தேசமான வட கொரியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சோவியத் - கொரியர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது.

"நாடற்ற கொரிய இனத்தின் வாக்களிக்கப் பட்ட தாயகமான" வட கொரியாவில் சமூக அமைப்பு எப்படி இருந்தது? ஒரு பேச்சுக்கு, "நாடற்ற தமிழ் இனத்தின் தாயகமாக" தமிழீழம் உருவாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது, ஐரோப்பா, கனடாவில் இருந்தும் இலட்சக் கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு சென்று குடியேறுவார்கள். ஆரம்பத்தில், அவர்களுக்கு அங்கே பெரும் வரவேற்புக் கிடைக்கும். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தவர்கள். தாம் அங்கு பெற்றுக் கொண்ட சிறந்த கல்வியையும், தொழில் அனுபவத்தையும், தமிழீழ கட்டுமானத்தில் செலவிடுவார்கள். அது ஒரு சாதகமான விடயம். ஆனால், வருடங்கள் உருண்டோட, ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினை பூதாகரமாக தெரிய ஆரம்பிக்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லா விடயத்திலும் ஐரோப்பிய பாணியை பின்பற்றி, ஐரோப்பியர் மாதிரி நடந்து கொள்வார்கள். அது மட்டுமல்ல, தாங்கள் மட்டுமே "உலகம் தெரிந்த அறிவுஜீவிகள்" என்ற மமதையுடன் நடந்து கொள்வார்கள். இது உள்நாட்டு தமிழ் மக்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். (இப்போதே பலர் அப்படியான குறைகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.) நாங்கள் கற்பனையில் காணும் இந்தப் பிரச்சினை, வட கொரியாவில் உண்மையில் நடந்தது.

போர் அழிவில் இருந்து மீண்டெழுந்த வட கொரியாவுக்கு, தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள், போன்ற பல தகைமை கொண்டவர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. அந்தக் காலங்களில் சோவியத் யூனியன் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தது. அதன் அர்த்தம், அங்கிருந்த வந்து குடியேறிய கொரியர்களும், சிறந்த கல்வித் தகைமை கொண்டிருந்தனர். அதனால், தொழில் வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும் என்று நம்பினார்கள். கொரியாவில் வந்து குடியேறிய அடுத்த நாளே நல்லதொரு அரசு உத்தியோகத்தை பெற்றுக் கொண்டனர். புதிதாக உருவான தேசத்தில், பெரிய பெரிய பதவிகளில் அமர்ந்து கொண்டார்கள்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த சோவியத் கொரியர்களின் நிலைமை, கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்திராத, சாதாரண உள்ளூர் வட கொரியர்களுக்கு பொறாமையை உண்டாக்கியதில் வியப்பில்லை. "நாங்கள் கஷ்டப் பட்டு, உயிரைக் கொடுத்துப் போராடி சுதந்திரம் வாங்கியிருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பதவிகளை அலங்கரிக்கிறார்கள். நாங்கள் இன்னமும் சாதாரண ஏழைக் குடியானவர்களாக இருக்கிறோம்..." என்று உள்ளூர் வட கொரியர்கள் நினைத்திருக்கலாம். 

இந்த மன உணர்வை, கிம் இல் சுங் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இன்னொரு விதமாக சொன்னால், கிம் இல் சுங்கின் "சர்வாதிகாரத்திற்கு" பெருமளவு மக்கள் ஆதரவாக நின்ற காரணமும் அது தான். ஏனெனில், அவர் மக்களின் குறைபாடுகளை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களை செய்திருந்தார்.

உண்மையிலேயே சில சோவியத் கொரியர்கள் அகங்காரத்துடன் நடந்து கொண்டனர். நம்மூர் மக்கள், "படித்த திமிர்" என்று சிலரைப் பார்த்து சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். அதே நிலைமை தான் அங்கேயும். சோவியத் கொரியர்கள் தனியான சமூகமாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். அவர்கள் உள்ளூர் வட கொரியர்களுடன் சேரவில்லை. அவர்களில் பலருக்கு கொரிய மொழியை விட ரஷ்ய மொழி தான் சரளமாகப் பேசத் தெரிந்தது. வீட்டில் பிள்ளைகளுடனும் ரஷ்ய மொழியில் உரையாடினார்கள். தம் பிள்ளைகளை பியாங்கியாங்கில் இருந்த ரஷ்ய மொழிப் பாடசாலைகளுக்கு கல்வி கற்க அனுப்பினார்கள்.

வட கொரியாவின் அபிவிருத்தியில், சோவியத் யூனியனின் பங்களிப்பு அதிகமாக இருந்த படியால், ரஷ்ய மொழியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரஷ்ய மொழிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் விற்பனை செய்யப் பட்டன. பாடசாலைகளில் ரஷ்ய மொழி இரண்டாம் மொழியாக கற்பிக்கப் பட்டது. மேலும், சோவியத் - கொரியா நட்புறவுக் கழகம் சுதந்திரமாக இயங்கியது. சோவியத், கொரிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பரிமாற்றம் போன்ற பல கலாச்சார தொடர்புகளும் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன.

நமது நாட்டில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனரோ, அதே மாதிரித் தான் சோவியத் - கொரியர்கள் நடந்து கொண்டார்கள். அவர்கள் ரஷ்யாவில், ரஷ்ய மொழியில் கல்வி கற்றவர்கள். அது குறித்து அவர்களுக்குப் தற்பெருமை இருந்தது. நமது ஆட்கள், இங்கிலாந்தில் கல்வி கற்றதை பெருமையுடன் சொல்லிக் கொள்வதைப் போலத் தான் அவர்களும் நடந்து கொண்டார்கள். கொரியர்களின் "வாக்களிக்கப் பட்ட தாயக பூமியான" வட கொரியாவில் குடியேறிய பிறகும் ரஷ்ய மோகம் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை.

சோவியத் கொரியர்கள், தம் பிள்ளைகளுக்கும் ரஷ்ய மொழியில் கல்வி கற்பித்தது மட்டுமல்ல, மேற்படிப்புக்காக சோவியத் யூனியனில் இருந்த பல்கலைக்கழகங்களுக்கு படிக்க அனுப்பினார்கள். இன்னமும் சோவியத் பாஸ்போர்ட் வைத்திருந்தார்கள். அதாவது, இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருந்தார்கள். அது அவர்களின் மேல் தட்டு மனோபாவத்திற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். ஆரம்பத்தில், பல சலுகைகளுக்கு காரணமான, உயர்ந்த அந்தஸ்தாக கருதப் பட்ட ரஷ்ய அடையாளம், பிற்காலத்தில் அவர்களின் இருப்புக்கு ஆபத்தான அடையாளமாக மாறியது.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
8. வட கொரியாவில் தலைவரை துதிபாடும் தனிநபர் வழிபாட்டுக்கு எதிரான சதித் திட்டம்
7.கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள்ளும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகள் நடக்கும்
6. அனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா
5. அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்


உசாத்துணை நூல்கள்:
1. Crisis in North Korea, The Failure of De-Stalinization, 1956 (Andrei Lankov)
2. The Real North Korea, Life and Politics in the Failed Stalinist Utopia (Andrei Lankov)
3. Comrades and Strangers, Behind the Closed Doors of North Korea, (Michael Harrold)
4. De Schurkenstaat, een geschiedenis van North Korea (Pierre Rigoulot)
5. Achter gesloten grenzen, reizen door Noord Korea (José Luís Peixoto)

No comments: