Monday, June 01, 2015

அனைத்துலக கொரியர்களின் குடியேற்ற நாடாகிய வட கொரியா

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் 
(பாகம் - ஆறு ) 

வட கொரியாவைப் பற்றிய பலரின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருக்கும்: "கொலைகள், சித்திரவதைகள், சிறை முகாம்கள்...." என்று திரும்பத் திரும்ப அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்தக் கட்டுரையின் நோக்கம் வட கொரியாவின் "மிலேச்சத்தனமான குற்றங்களுக்கு" வக்காலத்து வாங்குவது அல்ல. வரலாற்றில் கடந்து சென்ற சம்பவங்களை யாரும் சரிப் படுத்த முடியாது. ஆனால், அதிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், "கம்யூனிஸ்டுகள் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்டார்கள்... அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார்கள்... பலரைக் கொலை செய்தார்கள்..." என்று திரும்பத் திரும்ப அதைப் பற்றியே பேசுவது ஒரு குதர்க்கமான வாதம்.

உலகில் தோன்றும் அனைத்து கோட்பாட்டு நிறுவனங்களும், பல படுகொலைகளுக்குப் பின்னர் தான் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டன. கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள் மட்டுமல்ல, ஜனநாயகம், லிபரலிசம், தேசியவாதம் போன்ற நவீன அரசியல் கொள்கைகளும் பல படுகொலைகளை புரிந்துள்ளன. "ஆனால், அது அந்தக் காலம். இப்போதும் அப்படியா?" என்று நீங்கள் கேட்கலாம். அதைத் தான் நானும் கேட்கிறேன். உலகில் எந்தக் கோட்பாட்டை எடுத்துப் பார்த்தாலும், அதன் கடந்த காலம் இருண்டதாகத் தான் இருக்கும். அவற்றால் மக்களுக்கு விளைந்த நன்மைகள் எவை என்பதைத் தான் நாங்கள் பார்க்க வேண்டும்.

கொரிய தொழிலாளர் கட்சி தான் வட கொரியாவில் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால், பலருக்குத் தெரியாத விடயம் ஒன்றுள்ளது. குறுங் குழுவாத மோதல்களுக்கு அந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. ரஷ்யப் புரட்சியை நடத்திய லெனினின் கட்சிக்குள்ளும் குழுவாதப் போட்டிகள் இருந்துள்ளன. லெனின் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், கட்சிக்குள் குழுவாதம் இருக்கக் கூடாது என்று கட்சி விதிகள் எழுத வேண்டிய அளவிற்கு நிலைமை இருந்தது. ஸ்டாலினின் காலத்தில், அந்த விதியை பயன்படுத்தி தான், அல்லது நியாயப்படுத்தி தான், களையெடுப்புகள் நடந்துள்ளன. வட கொரியாவின் தொழிலாளர் கட்சிக்குள்ளும் அந்த நிலைமை காணப்பட்டது.

முதலில் தொழிலாளர் கட்சி எவ்வாறு தொடங்கியது என்பதை, சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். ஜப்பானின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒன்றாக இருந்த கொரியாவுக்கு திரும்பிச் செல்வோம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பல உலக நாடுகளில் இருந்ததைப் போன்று, கொரியாவிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. மொஸ்கோவை தலைமையாகக் கொண்ட இரண்டாம் அகிலத்தில் அங்கம் வகித்தது. ஆனால், கட்சிக்குள்ளே பல கோஷ்டிகளுக்கு இடையில் நடந்த மோதல்கள் காரணமாக, அந்தக் கட்சி கலைக்கப் பட்டது.

குழுவாதம் எங்கே தான் இல்லை? ஈழத்தில், கட்டுக்கோப்பான இயக்கம் என்று பேரெடுத்த விடுதலைப் புலிகளுக்குள் கோஷ்டி மோதல்கள், களையெடுப்புகள் நடக்கவில்லையா? மாத்தையா குழு, கருணா குழு என்று இருக்கவில்லையா? அந்த முரண்பாடுகள் காரணமாக கொல்லப் பட்ட போராளிகள் எத்தனை? அதை விட, புலிகளின் பிற இயக்கங்கள் மீதான அழிப்பு நடவடிக்கை காரணமாக கொல்லப் பட்டோர் எத்தனை? இது உலகம் முழுவதும் உள்ள, அரசியல் நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினை ஆகும். ஆயுதபாணி இயக்கங்கள், முரண்பாடு கொண்டவர்களை கொலை செய்வதன் மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்கின்றன.

கொரியா, ஜப்பானிய வல்லாதிக்கத்தின் கீழ், காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இயங்கி வந்தனர். சிறு சிறு குழுக்களாகவும், உதிரிகளாகவும் செயற்பட்டு வந்தனர். பெரும்பாலானோர் சீனாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். அப்போது இரண்டு புதிய கட்சிகள் தோன்றின. கொரியாவில் புதியதொரு கொரிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டது. சீனாவில் "புதிய மக்கள் கட்சி" என்ற பெயரில் இடதுசாரிக் கட்சி ஒன்று உருவானது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில், கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் கட்சியும் இணைந்து தொழிலாளர் கட்சி உருவானது.

இரண்டாம் கம்யூனிச அகிலத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் கட்சி, அப்போது வடக்கு-தெற்கு கொரியாக்களில் ஒரே கட்சியாகத் தான் இயங்கியது. அநேகமாக, கொரிய யுத்தம் நடந்த 1949 ம் ஆண்டு வரையில் ஒரே கட்சியாகத் தான் இருந்தது. அந்தக் காலத்தில், அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகள் அணியில் இருந்தன என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

அன்று அவை நட்பு நாடுகளான படியால், சோவியத் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வட கொரியாவும், அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தென் கொரியாவும் ஒரே நாடாகத் தான் கருதப் பட்டன. ஆகையினால், ஒரே நிர்வாகம் இருந்துள்ளது. அப்போது நடத்தப் பட்ட தேர்தல்களிலும், கொரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிலாளர் கட்சி போட்டியிட்டது.

கொரிய யுத்தத்தின் பின்னர் தான் நிலைமை மாறியது. போரின் முடிவில், வடக்கு - தெற்கு கொரியாக்களை பிரித்த எல்லைக் கோடு நிரந்தரமாகியது. பல்லாயிரம் குடும்பங்கள் பிரிக்கப் பட்டன. அடுத்து வந்த பல தசாப்த காலங்களுக்கு, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை. வட கொரியாவும், தென் கொரியாவும் தனித் தனி தேசங்களாக அரசமைத்துக் கொண்டன. 

வட கொரியாவில், கிம் இல் சுங் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, கொரியப் போர் பெரிதும் உதவியது. அதற்குப் பிறகு தான், கட்சிக்குள் கிம் இல் சுங் விசுவாசிகள் பெருகினார்கள். அந்த நிலைமையை புரிந்து கொள்வதற்கு, நாங்கள் திரும்பவும் புலிகளின் உதாரணத்தை எடுத்துப் பார்ப்போம். ஈழப் போர் நடந்த காலங்களில் புலிகளின் புகழ் உச்சத்தில் இருந்தது. பிரபாகரன் விசுவாசிகளும் பெருகி இருந்தனர். "என்ன இருந்தாலும் அவர்கள் தானே விடுதலைக்காக போராடினார்கள்?" என்று பலர் அதற்குக் காரணம் கற்பித்துக் கொண்டனர். அதே தான் கொரியாவிலும் நடந்தது.

போர் முடிந்த பின்னர், வட கொரியாவில் மட்டுமே தொழிலாளர் கட்சி இயங்கியது. தென் கொரியாவில் அது தடை செய்யப் பட்டது. ஏற்கனவே, ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவர்களது குடும்பங்கள் வட கொரியாவுக்குள் சென்று விட்டனர். இன்று பலர் தவறாக நினைப்பது போல, வட கொரியாவில் வாழும் அனைவரும் "வட கொரியர்கள்" அல்லர். அதாவது, அந்தப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லர். 

ஒரு வகையில், இஸ்ரேல் மாதிரி, வட கொரியாவும் ஒரு குடியேறிகளின் தேசம் தான். உண்மையான வட கொரியர்கள் அங்கே சிறுபான்மையாக இருக்கலாம். தென் கொரியாவில் இருந்து மட்டுமல்ல, சீனா, ரஷ்யாவில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான கொரியர்கள் வந்து குடியேறி உள்ளனர். அவர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். பிற்காலத்தில் ஜப்பானில் இருந்து வந்து குடியேறிய கொரியர்கள் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஆதி காலம் தொட்டு, கொரிய மொழி பேசும் மக்கள், சீனாவிலும், ரஷ்யாவிலும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, வட கொரியாவை அண்டிய சீன, ரஷ்யப் பகுதிகளில் இன்றைக்கும் சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர். 2 ம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர் இருந்த காலத்தில், ரஷ்ய- கொரியர்கள் சோவியத் யூனியனின் பிரஜைகளாக இருந்தனர்.

சீனக்- கொரியர்கள் வாழ்ந்த பிரதேசம், அன்று மஞ்சூரியா என்ற தனியான இராச்சியமாக இருந்தது. ஜப்பானிய காலனியாதிக்கப் படைகள், கொரியாவை மட்டுமல்லாது, மஞ்சூரியாவையும் ஆக்கிரமித்திருந்தன. அதனால், வடக்கத்திய நகரான பியாங்கியாங்கை பூர்வீகமாக கொண்ட கிம் இல் சுங் போன்றோர், மஞ்சூரியாவில் தளம் அமைத்து, ஜப்பானிய படைகளை எதிர்த்துப் போரிட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான கெரில்லாப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரியர்களின் விடுதலைப் படை, ஆரம்பத்தில் மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு வைத்திருந்தது. ஆயினும், ஏதோ ஒரு காரணத்தனால் அந்தத் தொடர்பு அறுந்து விட்டதால், கொரிய விடுதலைப் போராளிகள் எல்லை தாண்டி சோவியத் யூனியனுக்குள் சென்று விட்டனர்.

அங்கு தளமமைத்துக் கொண்டு, சோவியத் செம்படையுடன் சேர்ந்து இயங்கினார்கள். அந்த விடுதலைப் படையில் போராளிகளாக இருந்தவர்கள், பெரும்பாலும் எழுத்தறிவற்ற ஏழை கொரியர்கள். விவசாயப் பின்னணியை கொண்டவர்கள். அதனால், மத்தியதர வர்க்கப் பின்னணி காரணமாக உயர்கல்வி வரை படிக்கும் வாய்ப்புப் பெற்ற கிம் இல் சுங், மிக இலகுவாக தலைமைக்கு வர முடிந்தது.

வட கொரியாவில் ஆட்சி அமைத்த பின்னர், கிம் இல் சுங் தனது சக போராளிகளுக்கு அரசுப் பதவிகளை பகிர்ந்தளித்தார். அவர் தனக்கு விசுவாசமானவர்களின் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் இதற்கு விளக்கம் அளிக்கலாம். ஆனால், அவர்களை முன்னேற்ற வேண்டியது தனது கடமை என்று கிம் இல் சுங் கூறிய காரணத்திலும் ஓர் உண்மை இருந்தது.

எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, வட கொரியாவிலும் அரசாங்கம் அமைந்த பின்னர், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான் பதவிகளை கைப்பற்றி இருந்தனர். விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்யத் தயாராக இருந்த முன்னாள் போராளிகள், கல்வித்தகைமை இல்லாத காரணத்தினால் புறக்கணிக்கப் பட்டனர்.  கிம் இல் சுங் அந்த நிலைமையை மாற்றியமைத்தார். களையெடுப்பில் கொல்லப் பட்ட கட்சித் தலைவர்களின் இடத்தில் அவர்களை கொண்டு வந்து இருத்தினார். 

அறுபதுகள் வரையில், தொழிலாளர் கட்சி ஒரு மார்க்சிய- லெனினிசக் கட்சியாகத் தான் இருந்தது. வட கொரியக் கல்லூரிகளில் மார்க்சிய- லெனினிசம் ஒரு பாடமாக கற்பிக்கப் பட்டது. அது மட்டுமல்ல, மார்க்சிய பாணியிலான ஜனநாயக அமைப்புகளும் இயங்கின. தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது, மகளிர் குழு, மாணவர் குழு, விவசாயிகள் குழு போன்ற பல வெகுஜன அமைப்புகள், வட கொரியாவில் இன்றைக்கும் இயங்கி வருகின்றன.

ஆரம்ப காலங்களில், இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். கட்சிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகம் இருந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் கட்சித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். பிற்காலத்தில் (குறிப்பாக 1956 க்குப் பின்னர்)  தான், கிம் இல் சுங் எல்லா இடங்களிலும் தனது விசுவாசிகளை மட்டும் நியமிக்கத் தொடங்கினார்.

கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப் பட்டவுடனேயே, கிம் இல் சுங் தன்னை மையப் படுத்திய தலைமை வழிபாட்டை ஊக்குவித்து வந்தார். நிச்சயமாக, வட கொரியர்கள் எல்லோரும் அதை விரும்பப் போவதில்லை. அதற்கு எதிரானவர்கள் குறிப்பிட்ட அளவில் என்றாலும் இருந்திருப்பார்கள். கட்சிகுள்ளேயே எல்லா உறுப்பினர்களினாலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் மத்தியில் கூட, கிம் இல் சுங்கின் எதேச்சாதிகாரம், தலைமை வழிபாட்டுக்கு எதிராக அதிருப்திகள் எழுந்திருந்தன. 1956 ம் ஆண்டு, கிம் இல் சுங்கை அதிபர் பதவியை விட்டு அகற்றுவதற்கான சதித்திட்டம் தீட்டப் பட்டது. இந்த விபரங்கள், வட கொரியாவுக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் இருப்பது வியப்புக்குரியது.

(தொடரும்)


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
5. அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்

No comments: