Sunday, May 24, 2015

அடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல் சுங்கின் சோங்பன் சமூக அமைப்பு

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம் 
(பாகம் - ஐந்து) 

வட கொரியாவில் கிம் குடும்பத்தினரின் மன்னராட்சி நடக்கலாம். அதில் சிலநேரம் உண்மையும் இருக்கலாம். குறிப்பாக, மறைந்த கிம் யொங் இல்லின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, நூற்றுக் கணக்கான கதைகள் பேசப் பட்டன. ஹாலிவூட் நட்சத்திரங்களின் கிசு கிசு செய்திகளை மிஞ்சும் அளவிற்கு, அவரைப் பற்றிய தகவல்கள் இருந்துள்ளன. 

கிம் யொங் இல் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல காதலிகளுடன் வாழ்ந்துள்ளார். குறிப்பாக அழகான சினிமா நடிகைகள் மேல் மையல் கொண்டு, படுக்கையை பகிர்ந்து கொண்ட கதைகள், மேற்கத்திய ஊடகங்களினால் கிளுகிளுப்பூட்டும் விதத்தில் சொல்லப் பட்டன.

ஹாலிவூட்டை பொறாமை கொள்ளச் செய்யும் கிசுகிசு செய்திகளுக்கு அப்பாலும் ஒரு கொரியா இருந்தது. அது பலரது கவனத்தை ஈர்ப்பதில்லை. இன்றைக்கும் கொரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் ஸ்தாபகராக கருதப்படும், கிம் இல் சுங் மறைந்த நேரம், பல்லாயிரக் கணக்கான மக்கள் அழுதார்கள். 

தொலைக்காட்சியில் செய்தி வாசித்த அறிவிப்பாளர் கூட அழுதார். மேற்குலகில் அவற்றைக் காட்டி, சர்வாதிகார ஆட்சியாளர்கள் மக்களை கட்டாயப் படுத்தி அழ வைத்தார்கள் என்று கூறினார்கள். உண்மையிலேயே சிலர் கட்டாயத்தின் பேரில் அழுதிருக்கலாம். பெரும்பான்மை வட கொரியர்களைப் பொருத்தவரையில், அது ஒரு பெரும் இழப்பாக கருதப் பட்டது.

உலக நாடுகளில் உள்ள மக்களைப் போன்று தான், பெரும்பான்மையான வட கொரிய மக்களுக்கும் அரசியலில் ஆர்வம் இல்லை. தங்கள் குடும்ப நலன், பிள்ளைகளின் எதிர்காலம் இவற்றிக்கு அப்பால் சிந்திப்பதில்லை. அவர்களிடம் சென்று, "உங்கள் நாட்டில் மேற்கத்திய பாணி ஜனநாயகம் இருக்கிறதா? நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தல் நடக்கிறதா?" என்றெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள்? ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன, மூன்று வேளை உணவு கிடைக்கிறதா என்று தான் சிந்திப்பார்கள்.

காலங்காலமாக நிலப்பிரபுத்துவ நுகத்தடியின் கீழ் வாழ்ந்த மக்கள், ஜப்பானிய காலனித்துவவாதிகளால் அடிமைப் படுத்தப் பட்ட மக்கள், கிம் இல் சுங் ஆட்சிக் காலத்தை பொற்காலமாகத் தான் கருதுவார்கள். கேழ்வரகுக் கஞ்சி குடித்தவர்களுக்கு, மூன்று நேரம் சோறு சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது பெரிதல்லவா? ஓலைக் குடிசையில் வாழ்ந்தவர்களுக்கு, கல்வீடு கட்டிக் கொடுத்தால் அது சொர்க்கமல்லவா? 

நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வசதிகளான, மூன்று நேரம் சோறு, சீமேந்தால் கட்டப்பட்ட கல்வீடு போன்றவற்றை, அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வழிவகை செய்து தருவதாக கிம் இல் சுங் வாக்குறுதி அளித்தார். அது வெறுமனே, நமது நாட்டு அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகளாக இருக்கவில்லை. சொன்னதை செய்து காட்டினார்கள்.

"வட கொரியா பற்றி சும்மா புளுக வேண்டாம். அங்கே யார் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப் படவில்லையா?" என்று சிலர் கேட்கலாம். ஆமாம், அடக்குமுறை இருந்தது. யாருக்கு எதிரான அடக்குமுறை? காலங்காலமாக சுரண்டப்பட்ட மக்களுக்கு எதிராக அல்ல. ஏழைகளை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை. "ஆஹ்...வந்து...பணக்காரர்களுக்கும் மனித உரிமை இருக்கிறது..." என்று சிலர் வாதிடலாம். அதை நீங்கள் பாதிக்கப் பட்ட ஏழை மக்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள்.

உலகமெங்கும் சோஷலிச நாடுகளில் நடந்ததைப் போன்று, வட கொரியாவில் நடந்த ஒடுக்குமுறையை, நாங்கள் வர்க்கப் போராட்ட அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். சாதாரண முதலாளித்துவ நாடுகளில், அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும், ஏழைகளை ஒடுக்கும். ஆனால், சோஷலிச நாடுகளில் அது மாறி நடக்கும். அரசு ஏழைகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளும். பணக்காரர்கள் ஒடுக்கப் படுவார்கள். வட கொரியாவிலும் அது நடந்தது.

"ஆளும் தொழிலாளர் கட்சியான, கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே களையெடுப்புகள் நடந்துள்ளன. ஆரம்ப காலத் தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் கூடக் கொல்லப் பட்டனர், தெரியுமா?" என்று சிலர் கேட்கலாம். உண்மை. அதுவும் நடந்துள்ளது. ஆனால், கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப கால கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அது தவிர்க்க முடியாதது. 

உலகில் எல்லா நாடுகளிலும், மத்திய தர வர்க்கத்தினர் மத்தியில் தான் அரசியல் விழிப்புணர்வு இருக்கும். ஆனால், அந்த வர்க்கத்திற்கே உரிய ஊசலாட்டமும் இருக்கும். இதை புரிந்து கொள்ள அதிக தூரம் செல்லத் தேவையில்லை. இந்தியாவில் காலனிய காலத்தில் தொடங்கப் பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலை என்ன? சாதாரண அரசியல் கட்சியாக ஆட்சியாளர்களுடன் சமரசப் போக்கை பின்பற்றி வருகின்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், அநேகமாக எல்லோரும் பார்ப்பனிய, உயர் சாதி, அல்லது மத்தியதர வர்க்க பின்புலத்தை கொண்டிருந்தனர். அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது என்பதல்ல. ஆனால், எந்தளவு தூரம் வர்க்கப் போராட்டத்தில் தீவிரமாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறி தான். அதனால் தான், நக்சலைட் பாதையை தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்டுகள், அவர்களை "போலிக் கம்யூனிஸ்டுகள்" என்று அழைத்தார்கள்.

வட கொரியாவில், களையெடுக்கப் பட்ட, தீர்த்துக் கட்டப் பட்ட, கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மத்தியதர வர்க்கப் பின்னணியை கொண்டவர்கள். வட கொரிய அரசு அறிவித்தது மாதிரி, அவர்கள் சிலநேரம் கட்சிக்கு துரோகம் செய்திருக்கலாம், அல்லது எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளாக கூட இருக்கலாம். கிம் இல் சுங் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன், தனது தோழர்களை ஒழித்துக் கட்டி இருக்கலாம். எதுவும் சாத்தியம் தான். 

தொழிலாளர் கட்சிக்குள் நடந்த களையெடுப்புகளுக்குப் பின்னர், ஒரு குறிப்பிடத் தக்க அரசியல்- சமூக மாற்றம் நடந்தது. ஏழைகள், ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள் போன்ற சமூகப் பின்னணி கொண்ட உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக்கு வந்தனர். சுருக்கமாக, கட்சியில் மத்தியதர வர்க்கத் தலைமை மறைந்து, பாட்டாளி வர்க்கத் தலைமை உருவானது.

வட கொரியாப் பிரதேசம் முழுவதும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சி அமைந்ததும், நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் அனைவரும் விரட்டப் பட்டார்கள். சிலரைக் கைது செய்து, மரண தண்டனை வழங்கியதே போதுமானதாக இருந்தது. எஞ்சியவர்கள் எல்லாம் தென் கொரியாவுக்கு ஓடி விட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து நன்மையடைந்து வந்த உறவினர்களும் தெற்கே புலம்பெயர்ந்து விட்டனர்.

நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள் தவிர, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களும் விரட்டப் பட்டனர். கொரியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கிம் இல் சுங் குடும்பமும் ஒரு கிறிஸ்தவ குடும்பம் தான். அந்தக் காரணம் எல்லாம், கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மீதான தடையை தடுத்து நிறுத்தவில்லை. கிறிஸ்தவ மதம் தடை செய்யப் பட்டாலும், உள்ளூர் மதமான ஷோண்டோ மதம் இயங்குவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப் பட்டது.

கொரியாவில், 20 ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், கிறிஸ்தவ சபைகளின் செல்வாக்கை குறைப்பதற்காக உருவாக்கப் பட்டது தான் ஷோண்டோ மதம் (Chondoism). பெரும்பாலும் கொரிய தேசியவாதிகள் அதற்குள் புகலிடம் தேடிக் கொண்டனர். ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளும் அதிலிருந்து தான் வந்தனர். அதனால் தான், வட கொரியாவில் அது இயங்க அனுமதிக்கப் பட்டது. ஷோண்டோயிஸ்ட் கட்சி, இன்றைக்கும் வட கொரிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. அதுவும், சமூக ஜனநாயகக் கட்சியும், பாராளுமன்றத்தில் பத்து சதவீத ஆசனங்களை கொண்டுள்ளன.

கடைசியாக நடந்த தேர்தலின் படி, சமூக ஜனநாயகக் கட்சி 50 ஆசனங்களையும், ஷோண்டோயிஸ்ட் கட்சி 22 ஆசனங்களையும் பெற்றிருந்தன. ஆனால், தொழிலாளர் கட்சி தொண்ணூறு சதவீத (606) ஆசனங்களை வைத்திருப்பதால், அரசியலில் அதன் மேலாதிக்கம் அதிகமாக உள்ளது. (Politics of North Korea; http://en.wikipedia.org/wiki/Politics_of_North_Korea) சமூக ஜனநாயகக் கட்சியும், ஷோண்டோயிஸ்ட் கட்சியும், சில ஆயிரம் உறுப்பினர்களுடன், பியாங்கியாங் நகரில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

ஷோண்டோயிஸ்ட் மதம் அல்லது கட்சிக்கு கிடைத்துள்ள சுதந்திரமானது, கிம் இல் சுங்கின் சோஷலிச அரசியலில், கீழைத்தேய சிந்தனை மரபு எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. சோவியத் யூனியன் சமுதாயத்தில், ஸ்டாலின் நடத்திய வர்க்கப் புரட்சியை, கிம் இல் சுங் கொரிய மண்ணுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருந்தார். அதனால் தான், "சோங்பன்" (Songbun) அமைப்பு பற்றி வெளிநாடுகளில் இருப்பவர்களால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சோங்பன் சமூக அமைப்பு, கொரியாவில் ஆயிரமாயிரம் வருட காலமாக இருந்து வந்துள்ளது. வெளியாரால் அதை புரிந்து கொள்வது சிரமம். கிட்டத்தட்ட, இந்து மதத்தில் "கர்ம வினைப் பயன்" என்று சொல்வதைப் போன்றது. அதாவது ஒருவர் செய்த நன்மை, தீமை, சந்ததி சந்ததியாக தொடர்ந்து கொண்டிருக்கும். அமெரிக்க அறிவுஜீவிகள், அதை சாதி அமைப்பு என்று நினைக்கின்றனர். ஆனால், அது சாதி அல்ல.

கிம் இல் சுங், தனது ஆட்சிக் காலத்தில், சோங்பன் சமூக அமைப்பை, தனது வர்க்க அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அவரைப் பொருத்தவரையில், மொத்த வட கொரிய சமூகத்தில், 
புரட்சிக்கு  ஆதரவான வர்க்க மக்கள்  25%. 
புரட்சிக்கு விரோதமான வர்க்க மக்கள்  20%. 
எஞ்சிய "சாதாரண" மக்கள் 40%. 

யாரெவர் எந்த வர்க்கம் என்பது எப்போதும் தெளிவாகத் தெரிவதில்லை. மேல் தட்டில் இருப்பவரின் அரச விரோத செயல் காரணமாக, அவரது குடும்ப உறுப்பினர்கள் எதிரி வர்க்கமாக அறிவிக்கப் படலாம். அதே  நேரத்தில், எதிரி வர்க்கத்தை  சேர்ந்த ஒருவரின் அரசுக்கு விசுவாசமான செயற்பாடு காரணமாக, அவரது குடும்பத்தினரின் அந்தஸ்து  உயர்த்தப் படலாம். இடையில் உள்ள "நடுத்தர" வர்க்கத்தினர், விசுவாசியாகவோ அல்லது எதிரியாகவோ மாறலாம்.   

இதற்கு பலரும் பலவிதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். மேற்குலகில் உள்ளவர்கள், ஆதரவான வர்க்கத்திற்கு, "அரச விசுவாசிகள்" என்று விளக்கம் கொடுக்கின்றனர். அது உயர்ந்த அந்தஸ்து கொண்ட வகுப்பு தான். ஆனால், அதை நாங்கள் எமது நாட்டில் உள்ள மேட்டுக்குடி வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

சமூகத்தில் மேல் நிலையில் உள்ள வர்க்கத்தில், அரச அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் இருக்கின்றனர். ஐம்பதுகளுக்கு முன்னர் கூலித் தொழிலாளர்களாக அல்லது ஏழை விவசாயிகளாக இருந்த பெற்றோரின் பிள்ளைகளும் உயர்ந்த அந்தஸ்துக்கு வரலாம். 

அது மட்டுமல்லாது, முன்னாள் கெரில்லாப் போராளிகளின் குடும்பத்தினர், கொரிய யுத்தத்தில் பங்கெடுத்த போர்வீரர்களின் குடும்பத்தினர் "உயர் குலத்தை" சேர்ந்தவர்கள். வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் அப்படியான நிலைமை இருந்தது. போராளிக் குடும்பம், மாவீரர் குடும்பம் போன்றவர்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

உண்மையில், சோங்பன் அமைப்பில் மேல் தட்டில் உள்ள வர்க்கத்திற்கு மட்டுமே எல்லா இடங்களிலும் முன்னுரிமை கொடுக்கப் பட்டது. சிறந்த கல்வி கற்கும் உரிமை வழங்கப் பட்டது. அதற்கு மாறாக, அடித்தட்டில் இருக்கும் அரசுக்கு விரோதமான வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப் படுகின்றது. அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்கப் பட மாட்டாது. அது மட்டுமல்ல, அடிக்கடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் படுபவர்களும் அவர்கள் தான்.

சமூகத்தில் அடித்தட்டில் உள்ள, "தாழ்த்தப் பட்ட சாதியான" எதிரிகளின் வர்க்கத்தில் இருப்போர் யார்? முன்னாள் நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், இவர்களைப் போன்றோரின் குடும்பத்தினரே அவர்கள். நமது நாடுகளில் உள்ள வர்க்க அமைப்பை, வட கொரியாவில் தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறார்கள். (Are you special, basic or complex? Behind North Korea's caste system; http://www.theguardian.com/world/2015/mar/04/are-you-special-basic-or-complex-behind-north-koreas-caste-system)

இப்படி ஒரு கற்பனை செய்து பார்ப்போம். இந்தியாவில் நடந்த புரட்சியின் பின்னர், நேற்று வரை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த உயர் சாதியினர், பணக்காரர்கள், முதலாளிகள், நிர்வாகிகள் போன்றோர், தாழ்த்தப் பட்ட சமூகமாக மாற்றப் படுகின்றனர். நேற்று வரை தாழ்த்தப் பட்ட சாதியினராக, கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்கள், உயர்ந்த அந்தஸ்த்தில் வசதியாக வாழ வைக்கப் படுகின்றனர். 

எம்மைப் பொறுத்தவரையில்,  இப்படி நடப்பது "எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத கனவு". ஆனால், வட கொரியாவில் இந்த சமூக மாற்றம் உண்மையிலேயே நடந்தது. அது தான் சோங்பன்.

வட கொரியாவில், ஒருவர் அரசுக்கு எதிரான குற்றம் புரிந்ததாக தண்டிக்கப் பட்டிருந்தால், அவரது குடும்பத்தினர் அடித்தட்டில் உள்ள எதிரி வர்க்கத்தில் சேர்க்கப் படுவார்கள். இது மூன்று தலைமுறைக்குத் தொடரும். அதனால், குற்றவாளி மட்டுமல்ல, அவரது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கூட தண்டிக்கப் படுகின்றனர். 

அவர்களுக்கு, சமூக ஒதுக்கல், கல்வி மறுப்பு போன்ற தண்டனைகள் கிடைக்கும். சாதாரண மக்களுக்கு இவையெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்புகள். அதனால் தான், முன்னாள் சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகில் பலரால் எதிர்பார்க்கப் பட்டது போன்று, வட கொரிய மக்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியை மாற்றவில்லை.

வட கொரியர்கள் யாரும், ஆட்சி மாற்றத்திற்கான தமது கிளர்ச்சி தோல்வியடையும் பட்சத்தில், தலைமுறை தலைமுறையாக வருந்துவதற்கு தயாராக இருக்கவில்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட பஞ்சத்த்தை பயன்படுத்தி, நிவாரண உதவி என்ற பெயரில், அமெரிக்கா தாராளமாக உணவு தானியங்களை அனுப்பி வைத்தது. 

ஒரு கட்டத்தில், அனைத்து கொரியர்களுக்கும் அமெரிக்கா வருடக் கணக்காக உணவு கொடுத்து வந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த நிவாரண உதவிக்கு பிரதியுபகாரமாக அமெரிக்கா எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உதவி கிடைப்பதை உணர்ந்து கொள்ளும் வட கொரிய மக்கள், கிளர்ச்சி செய்து கிம் ஆட்சியைக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.

வட கொரிய ஸ்டாலினிச அரசு, இன்னும் சில வருடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கப் போகின்றது என்று, அமெரிக்க அரச மட்டத்தில் நம்பப் பட்டது. ஆனால், இறுதியில் இலவு காத்த கிளி கதை தான் நடந்தது. அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்திருந்த "வட கொரிய ஜனநாயகப் புரட்சி" இன்று வரையில் நடக்கவில்லை. இனி வருங்காலத்தில் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

அதிகார வர்க்கத்திற்கு எதிரான கொரிய மக்களின் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அந்த எழுச்சி வடக்கில் அல்ல, தெற்கில் நடந்தது! தென் கொரிய ஆட்சியாளர்களையும், அரசியல் பாதையையும் மாற்றியமைத்தது. உண்மையில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், வட கொரிய "ஸ்டாலினிச அரசு" உலக வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறியப் படாமல் இருப்பதற்கு காரணமும் அது தான் என்பது ஒரு முரண்நகை.

(தொடரும்) 

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: 
4. சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்
3. "ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?
2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்
1. "தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்

1 comment:

Shihafath Wazeer said...

பர்மா இனவழிப்பு சம்மந்தமாக உண்மையை அறிய விரும்புகிறேன் . எழுதுவீர்களா ?