Wednesday, May 20, 2015

சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்


"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
 (பாகம் - இரண்டு)

கொரிய யுத்தம் முடிந்த பின்னர், அன்றைய பனிப்போர் காலத்தில், யாரும் எதிர்பாராத புலம்பெயர் படலம் ஆரம்பமாகியது. பொதுவாக, "சர்வாதிகார கம்யூனிச நாடுகளில் இருந்து, சுதந்திர ஜனநாயக நாடுகளை நோக்கி" அகதிகள் சென்றதாகத் தான் பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். கொரியாவில் அது மாறி நடந்தது. 

அதாவது, அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்த தென் கொரியாவில் இருந்து, பல்லாயிரக் கணக்கான மக்கள், சோஷலிச வட கொரியா நோக்கி தப்பிச் சென்றனர். அதற்கு முக்கிய காரணம், ஜப்பானிய காலனிய கால கட்டத்தில், பெருந்தொகையான மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்தனர். அமெரிக்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. 

முன்பு ஜப்பானியர்களுடன் ஒட்டுக் குழுவாக இருந்தவர்கள், தற்போது அமெரிக்கர்களுக்கு பிரயோசனமாக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் வேட்டையாடப் பட்டனர். அதனால், ஆயிரக்கணக்கான அகதிகள் வட கொரியா நோக்கி ஓடியதில் வியப்பில்லை.

ஐம்பதுகளில் இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. ஜப்பானில் புலம்பெயர்ந்த கொரியர்களின் சமூகம் ஒன்றிருந்தது. பல தசாப்தங்களுக்கு முன்னரே, வேலை தேடி ஜப்பானுக்கு சென்றவர்கள் பெருந்தொகையில் இருந்தனர். அதே நேரம், ஜப்பானிய காலனிய ஆக்கிரமிப்பாளர்களால், அடிமை வேலை செய்விக்க கொண்டு செல்லப் பட்ட பிரிவினரும் இருந்தனர். 

ஜப்பானிய கொரியர்கள் சமூகத்தில் ஒதுக்கப் பட்டு வந்த படியால், அவர்கள் மத்தியில், கிம் இல் சுங்கின் ஆதரவாளர்கள் இலகுவாக ஊடுருவி வேலை செய்ய முடிந்தது. வட கொரியாவில் ஒரு சோஷலிச சொர்க்கம் அமைக்கப் படுவதாக, கிம் இல் சுங் ஆதரவாளர்கள் செய்த பிரச்சாரங்களை நம்பி, அங்கு சென்று குடியேறும் நோக்கில், இலட்சக் கணக்கான ஜப்பானிய- கொரியர்கள் கப்பல்களில் புறப்பட்டனர்.

தாயகத்தை கண்ணால் கண்டிராத இரண்டாம் தலைமுறையினர் உட்பட, வடக்கே தலை வைத்தும் படுத்திராத ஏராளமான ஜப்பானிய- கொரியர்கள் கிம் இல் சுங்கின் சோஷலிச சொர்க்கத்தில் குடியேறியமை வரலாற்றில் குறிப்பிடத் தக்க நிகழ்வாகும். நிச்சயமாக, எல்லோரும் ஜப்பானை விட்டு செல்லவில்லை. சிலர் குடும்பத்தோடும், சிலர் தனியாகவும் புலம்பெயர்ந்து சென்றனர். 

ஜப்பானில் தங்கி விட்ட அவர்களது உறவினர்கள், பல வருடங்களாக பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்நிய செலாவணி கிடைக்கிறது என்பதற்காக, வட கொரிய அரசு அதனைத் தடுக்கவில்லை. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், ஜப்பானிய பண வருவாய் குறைந்து விட்டது. அதற்குக் காரணம், உலகில் அனைத்து புலம்பெயர் சமூகங்களிலும் காணப் படும் அதே பிரச்சினை தான். பணம் அனுப்பிக் கொண்டிருந்த உறவினர்கள் வயோதிப காலத்தை அண்மித்துக் கொண்டிருந்தனர். இளந் தலைமுறையினருக்கு அந்த எண்ணம் சிறிதும் இருக்கவில்லை.

அறுபதுகளில் வட கொரியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. அதனால், சராசரி மக்களின் வாழ்க்கை வசதிகளும் அதிகரித்திருந்தது. அதே அறுபதுகளில், தென் கொரியாவின் பொருளாதாரம் வளரவில்லை. பொருளாதார நெருக்கடிகளும், வறுமையின் அவலமும், கலவரங்களும் சர்வ சாதாரணமாக இருந்தன. ஆனால், அந்த நிலைமை பிற்காலத்தில் மாறி விட்டது. 

தென் கொரியா தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடானதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கை வசதிகள், வட கொரியாவில் இருந்ததை விட உயர்ந்தது. ஆயினும், தென் கொரியா பற்றிய, வட கொரிய ஆட்சியாளர்களின் பிரச்சாரம், அறுபதுகளில் மட்டுமே நின்று விட்டது. அதாவது, தென் கொரிய மக்கள் "வறுமையில் வாடுவதாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் சொல்லொணா துன்பங்களை அனுபவிப்பதாகவும்" வட கொரிய மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

தென் கொரியாவில் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதிலும், வட கொரிய அரசு, ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களை தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த விடயத்தில் தென் கொரிய அரசு ஒன்றும் சளைத்தது அல்ல. அதுவும் தனது பிரஜைகளுக்கு, வட கொரியா பற்றி ஒரு பக்கச் சார்பான பிரச்சாரங்களைத் தான் செய்து கொண்டிருந்தது. 

ஐம்பதுகள், அறுபதுகளில் இருந்த தென் கொரியாவைப் பொருத்தவரையில், அந்தப் பிரச்சாரங்களில் உண்மை இருந்தது. அந்தக் காலத்தில், தென் கொரியாவின் மொத்த பொருளாதார உற்பத்தி, சோமாலியாவை விட சற்றுக் குறைவாக இருந்தது. அதை இன்றைக்கு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், பிற்காலத்தில் தென் கொரியா கிழக்கு ஆசியாவின் "Tiger Economy" களில் ஒன்றாக வளர்ந்தது. இராணுவ சர்வாதிகார ஆட்சியும், அமெரிக்காவின் மூலதன பாய்ச்சலும் அதற்கு உதவின என்பதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், வட கொரியா பற்றிய, தென் கொரியப் பிரச்சாரம் எப்படி இருக்கும் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அதைத் தான் நாங்கள் தினந்தோறும் மேற்கத்திய ஊடகங்கள் ஊடாக கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பிரச்சாரங்களுக்கு அப்பால், வட கொரியாவின் உண்மை நிலவரம் என்னவென்பதை பின்னால் பார்ப்போம்.

ஐம்பதுகளில், தனது அதிகாரத்தை ஸ்திரப் படுத்திக் கொண்ட கிம் இல் சுங், தனது தொழிலாளர் கட்சியை ஆட்சியில் அமர்த்தினார். பெரும்பாலும், சோவியத் யூனியனில் தளம் அமைத்திருந்த காலத்தில், அவருடன் கூட இருந்த சக போராளிகளைத் தான், கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்தார். முன்பு கொரிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களும் சேர்ந்திருந்த போதிலும், அவர்கள் தலைமைப் பதவிகளுக்கு வர முடியவில்லை. 

1955 ம் ஆண்டு, வட கொரியாவில் வாழ்ந்து வந்த, கொரிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர், உளவுக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார். அத்தகையை குற்றச்சாட்டுகளை யாராலும் நம்ப முடியாதிருந்தாலும், கிம் இல் சுங் தன்னை ஏக பிரதிநிதியாக்கிக் கொள்வதற்கு அது உதவியது. (இன்றைக்கும் தென் கொரியாவில் வாழும் கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலானோர் கிம் இல் சுங் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை.)

கிம் இல் சுங் அதிகாரத்தை கைப்பற்றியதும், தனக்கு சவாலாக வரக் கூடிய "பழைய கம்யூனிஸ்டுகள்" பலரை தீர்த்துக் கட்டி இருந்தார். அதை விட, தொழிலாளர் கட்சிக்குள் இருந்த, "சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள்", "சீனா சார்பு கம்யூனிஸ்டுகள்" கூட களையெடுக்கப் பட்டனர். இறுதியில் கிம் இல் சுங்கிற்கு விசுவாசமானவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர். 

கொள்கை ரீதியான எதிரிகள் யாரும் இல்லாத நிலையில், கிம் இல் சுங்கின் வட கொரியா, உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத புதிய சித்தாந்தம் ஒன்றை கண்டுபிடித்தது. கிம் இல் சுங் தனது சிந்தனையில் பிறந்த "ஜூச்சே (Juche) சித்தாந்தம்" என்ற பெயரில், கீழைத்தேய தத்துவ மரபுடன், கொரிய தேசியவாதம் கலந்த, ஒரு புதுமையான கொள்கையை அரசாளும் தத்துவம் ஆக்கினார். (ஜூச்சே சித்தாந்த நூலில், அதற்கும் மார்க்சியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கிம் இல் சுங்கே எழுதி இருக்கிறார்.)

கிம் இல் சுங், தனது ஜூச்சே தத்துவம் உலகிலேயே தனித்துவமானது என்றும், மார்க்ஸ், லெனின் வழியை பின்தொடரவில்லை என்றும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார். (வெளிநாட்டு இடதுசாரிகளுக்கு மட்டும், இடையிடையே கார்ல் மார்க்ஸ் படம் காட்டி வந்தார்.) "மாபெரும் தலைவர்" கிம் இல் சுங், அவரது மகன் "அன்புத் தலைவர்" கிம் யொங் இல், ஆகியோரை மையப் படுத்திய தனி நபர் வழிபாடும், நவீன கால அரச பரம்பரை ஆட்சியும், உலகம் முழுவதும் தெரிந்த விடயங்கள் தான். அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.

முதலாவதும் முக்கியமானதும், கொரிய தேசியவாதம். பண்டைய சாம்ராஜ்யங்கள் நூறாண்டு காலம் நீடித்தது போன்று, கிம் இல் சுங் அரச பரம்பரையின் வட கொரியாவும் நிலைத்து நிற்க வேண்டுமென்ற பேரவா. நமது தமிழ்த் தேசியவாதிகள், ராஜராஜ சோழன் காலத்தை பெருமையுடன் நினைவுகூருவதையும், பிரபாகரனை தேசியத் தலைவராக கூறிக் கொள்வதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆசிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டுகள் பலர், அடிப்படையில் தேசியவாதிகளாகவும் இருந்தனர். காலனிய எதிர்ப்புணர்வே பலரை கம்யூனிசத்தின் பால் ஈர்த்தது. ஆகவே, வட கொரியாவை, "ஒரு கம்யூனிச அரச பரம்பரை ஆட்சி செய்வது" மேற்கத்திய நாட்டவருக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில் வியப்பில்லை. (கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாட்டவருக்கும் அது விசித்திரமாகத் தெரிந்திருக்கலாம்.) 

இரண்டாவது காரணம், சர்வதேச கம்யூனிச அமைப்பில், ஐம்பதுகளில் ஏற்பட்ட மாற்றங்கள். உலகக் கம்யூனிச வல்லரசுகளான, சோவியத் யூனியனும், சீனாவும் பகை முரண்பாடு கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அந்த இரண்டு நாடுகளும் தேவை என்பதால், வட கொரியா இரண்டு முகாமிலும் சேராமல், தன்னை தனித்துவமாகக் காட்ட விரும்பியது.

சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் பதவியேற்றதும் பெரும் பூகம்பம் வெடித்தது. குருஷேவின் ஸ்டாலின் தொடர்பான விமர்சனங்களுடன் முரண்பட்டு பிரிந்தவர்கள் மாவோவுக்கு பின்னால் அணிதிரண்டனர். அவ்வாறு தான், வட கொரியா சீனாவை புதிய நண்பனாக ஏற்றுக் கொண்டது. இருப்பினும், காலப்போக்கில் வட கொரியா சந்தர்ப்பவாத நிலையெடுத்தது. 

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது மாதிரி, ஒரு பக்கம் சோவியத் யூனியனுடனும், மறுபக்கம் சீனாவுடனும் நட்புப் பாராட்டினார்கள். சோவியத்-சீன முரண்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இரண்டு நாடுகளிடம் இருந்தும் உதவி பெற்றுக் கொண்டனர். 

அநேகமாக, வட கொரியா தங்களை பயன்படுத்திக் கொள்கிறது என்று, சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கும் தெரிந்திருக்கும். வட கொரியா இரண்டில் ஒன்றை தெரிவு செய்து விடக் கூடாது என்பதற்காக, அல்லது தங்கள் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக, தொடர்ந்தும் உதவி செய்து கொண்டிருந்தன.

வட கொரியா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இரண்டு நாடுகளிடமும் உதவி பெற்றுக் கொண்டே, "ஜூச்சே தத்துவத்தின் கீழ் தன்னிறைவுப் பொருளாதாரம் கட்டியெழுப்புவதாக" புளுகிக் கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தான், அந்தக் குட்டு வெளிப்பட்டது. 

சர்வதேச கம்யூனிச சகோதரத்துவத்தின் மகத்துவத்தை அன்று வட கொரியா உணர்ந்திருக்கவில்லை. ஒரு பக்கம், ஒன்றுக்கும் உதவாத ஜூச்சே சித்தாந்தமும், மறுபக்கம் கொரிய தேசியவாதமும் வட கொரியர்களின் கண்களை கட்டிப் போட்டிருந்தது. தொண்ணூறுகளில் அந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்குள் இயற்கையும் சதி செய்தது. பஞ்சம் காரணமாக இலட்சக் கணக்கானோர் பலியாகி விட்டிருந்தனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

No comments: