Tuesday, May 19, 2015

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்


வட கொரியா ஒரு "கம்யூனிச" நாடல்ல.  இன்னும் தெளிவாகச் சொன்னால், மார்க்சிய- லெனினிச அல்லது மாவோசிச சித்தாந்த மரபில் ஆட்சி அமையவில்லை. வட கொரிய ஆட்சியாளர்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் இல்லை. மார்க்சியம், சோஷலிசம், தேசியவாதம், மனிதநேயவாதம் போன்ற பல தத்துவங்களின் கலவையான "ஜூச்சே கொள்கை" அரசாள்கிறது.

சுருக்கமாக, வட கொரியா ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட புரட்சிகர தேசம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், கடந்த இருபது வருடங்களாக, அதுவும் முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றது. இந்தக் கட்டுரை அது குறித்து மேலும் விபரிக்கின்றது.

வட கொரியா பற்றி மேற்கத்திய நாடுகளில் பரப்பப் படும் தகவல்கள் நம்பத் தகுந்தவை அல்ல என்பது பல தடவைகள் நிரூபிக்கப் பட்டுள்ளன. இந்தத் "தகவல்கள்" பெரும்பாலும் எதிரி நாடான தென் கொரியாவில் இருந்தே வருகின்றன. அவர்களது உளவாளிகள் எப்போதும் சரியான தகவல்களை தெரிவிப்பதில்லை. 

சில தினங்களுக்கு முன்னர், மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்ட, வட கொரியா பற்றிய பொய் ஒன்று அம்பலமாகியது.  வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்யோன் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. 30 ஏப்ரல் 2015, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டதாக, தென் கொரிய புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி சொல்லப் பட்டது. அதிபர் கிம் யொங் உன் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் நித்திரை கொண்ட காரணத்தால் மரணதண்டனை விதிக்கப் பட்டதாக, தென் கொரிய புலனாய்வுத்துறை கூறியது. (பார்க்க: வட கொரிய குரூரச் செய்திகள் - எந்த அளவுக்கு உண்மை ?)

மரண தண்டனை மூலம் கொல்லப் பட்டதாக கருதப்பட்ட அமைச்சர் ஹ்யோன் இன்னமும் உயிரோடு இருப்பதாக, பிந்திக் கிடைத்த  தகவல்கள் தெரிவித்தன. அந்த அமைச்சர், "பீரங்கியால் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர்" வட கொரிய தொலைக்காட்சியில் தோன்றினார். 

சிலர் அது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று வாதிடலாம். ஆனால், மரண தண்டனை விதிக்கப் பட்ட "குற்றவாளிகள்" சம்பந்தமான பழைய ஆவணங்கள் யாவும் அழிக்கப் படுவது வழக்கம். நிச்சயமாக தொலைக்காட்சியில் போட்டுக் காட்ட மாட்டார்கள். வட கொரியாவில் உயர் பதவியில் இருந்த ஒருவர் குற்றவாளியாக தண்டனை கொடுக்கப் பட்டால், அவர் முன்பு கலந்து கொண்ட நிகழ்வுகளின் போது எடுத்த படங்கள், வீடியோக்களை அழித்து விடுவார்கள்.

மேற்குறிப்பிட்ட தகவலில் இருந்து ஓர் உண்மை தெளிவாகும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். வட கொரியா பற்றி நாங்கள் எந்தளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம்? பொதுவாக மேற்கத்திய ஊடகங்களினால் தெரிவிக்கப் படும் தகவல்கள் ஒரு பக்கச் சார்பானதாக இருக்கின்றன. அது ஒரு சிலரை திருப்திப் படுத்தலாம். அவர்கள் உண்மைகளைத் தான் சொல்கின்றனரா? 

இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், கியூபா, வியட்நாம் பற்றி எல்லாம் அளவுக்கு மிஞ்சி அறிந்து வைத்திருக்கும் இடதுசாரிகள் கூட, வட கொரியா பற்றி அக்கறை கொள்வதில்லை. வட கொரியா, அமெரிக்காவுடன் மோதல் நிலைக்கு செல்லும் பொழுது மட்டும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைத்துக் கொள்வார்கள். உலகளவில், வட கொரியா வலதுசாரிகளால் வெறுக்கப் படுவதற்கும், இடதுசாரிகளால் அலட்சியப் படுத்தப் படுவதற்கும் காரணம் என்ன?

எனக்குத் தெரிந்த வரையில், நான் திரட்டிய தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறேன். இது வட கொரியா பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே. இதை எழுத உதவிய உசாத்துணையாக நான் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். 
1) மேற்கத்திய ஊடகங்களில் வெளியான தகவல்கள். 
2) பெல்ஜியத்தில் இயங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிறுவனம் "Anti- Imperialitische Bond"(AIB) வெளியிட்ட சிறு நூல்கள். 
3) கிம் இல் சுங் எழுதிய "ஜூச்சே சித்தாந்தம்" (நூலகத்தில் கிடைத்தது.) 
4) நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி (NCPN) அலுவலக முகவரிக்கு, வட கொரியாவில் இருந்து அனுப்பப் பட்ட சஞ்சிகைகள். 
4) சோவியத் யூனியனில் கல்வி கற்ற நண்பர்கள், வட கொரிய மாணவர்களிடம் கேட்டு அறிந்த தகவல்கள். 
5) வட கொரியா பற்றி, அங்கு வாழ்ந்தவர்களினால் எழுதப்பட்ட  பக்கச் சார்பற்ற நூல்கள்.

இந்தக் கட்டுரையின் நோக்கம், வட கொரியா பற்றி நாம் அறிந்த தகவல்கள் சரியா, தவறா என்று ஆராய்வது மட்டும் தான். அதே நேரம், தமிழ் வாசகர்கள் பலர் அறியாத தகவல்களையும் எழுதவிருக்கிறேன். இதன் மூலம், வட கொரியா அரசை ஆதரிப்பது, அல்லது அதற்காக வக்காலத்து வாங்குவது எனது நோக்கமல்ல. அவர்களது அதிகப் பிரசங்கித்தனத்தை, தவறான முடிவுகளை, நியாயப் படுத்த முடியாத குற்றங்களை அப்படியே எழுதுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. எந்தப் பக்கமும் சாராமல், நடுநிலைமையுடன் நடந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

முதலில், "வட கொரியா" என்று அந்த நாட்டுக்கு வெளியே வாழும் மக்கள் மட்டுமே அழைக்கின்றனர். வட கொரியர்களுக்கு அப்படி அழைப்பது பிடிக்காது. நீங்கள் அங்கே சென்று, "வட கொரியா" என்று சொன்னால், அங்குள்ள அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களும் அதனை திருத்திக் கொள்ளச் சொல்வார்கள். அதாவது, உத்தியோகபூர்வ பெயரான "கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு" (சுருக்கமாக: DPRK) என்று தான் அழைக்க வேண்டுமாம். நாங்கள் இங்கே வசதிக்காக வட கொரியா என்றே குறிப்பிட்டுக் கொள்வோம்.

எழுபதுகள் வரையில், வட கொரிய அரசும், தென் கொரிய அரசும், முழு கொரிய குடாநாட்டிற்கும் உரிமை கோரி வந்தன. தென் கொரிய அரசு, வட கொரிய மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமித்து காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். வட கொரிய அரசு, "மண் மீட்புப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கும்" என்று அறிவித்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில், இரண்டு நாடுகளும் சமரசமாகி, ஒன்றையொன்று அங்கீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

1910 தொடக்கம் 1945 வரையில், கொரியா ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. 2 ம் உலகப்போரில், சோவியத் படைகள் ஐரோப்பாவில் மட்டும் போரிடவில்லை. கிழக்கே, ஜப்பானுக்கு எதிரான போர்முனையை திறந்து விட்டன. ஏற்கனவே போரின் திசை மாறிக் கொண்டிருந்த படியால், ஜப்பானிய படைகள் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. 

சோவியத் யூனியன் நினைத்திருந்தால், இன்றைய தென் கொரியா வரையில் முன்னேறி இருக்க முடியும். அது மட்டுமல்ல, ஜப்பானை பிடிப்பதற்கும் தயாராக இருந்தது. இருப்பினும், அன்றைய அமெரிக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் நேச நாடுகள் அணியில் இருந்த படியால், ஸ்டாலினின் உத்தரவின் படி, சோவியத் படைகள் இன்றைய வட கொரியாவின் பகுதிகளை மட்டும் கைப்பற்றியதுடன் நின்று கொண்டன. தென் கொரியாவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றுவதற்கு விட்டுக் கொடுக்கப் பட்டது.

2 ம் உலகப்போர் முடிந்த பின்னர், கொரியாவில் நடத்தப் பட்ட தேர்தல்கள் அமெரிக்காவின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை. கொரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி ஐக்கிய முன்னணி பல இடங்களில் வெற்றி பெற்றது. அதனால், ஜெர்மனியில் நடந்த இழுபறிப் போட்டி மாதிரி, கொரியாவிலும் வல்லரசுகள் எந்த முடிவையும் எடுக்காமல் இழுத்தடித்தன. காலம் கடந்து செல்வதையும், பனிப்போர் ஆரம்பித்து விட்டதையும் உணர்ந்த சோவியத் யூனியன், ஐரோப்பாவில் நடந்ததைப் போன்று, செம்படைகளினால் விடுதலை செய்யப் பட்ட வட கொரியாவை ஒரு சோஷலிச நாடாக்க விரும்பியது.

அப்போது ஒரு சிக்கல் எழுந்தது. தென் கொரியா சம தரைகளை கொண்ட பிரதேசம். அதனால், அங்கே சனத்தொகையும் அதிகம். அதற்கு மாறாக வட கொரியா ஒரு மலைப் பிரதேசம். சனத்தொகை அடர்த்தியும் மிகக் குறைவு. அதனால், அங்கு கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருந்தது.

கொரியாவில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி பல தசாப்த காலமாக இயங்கி வந்த போதிலும், அது தெற்கில் மட்டுமே பெருமளவு செயற்பாடுகளைக் கொண்டிருந்தது. அதனால், பியாங்கியாங் நகரில் (இன்று வட கொரியாவின் தலைநகரம்) தளம் அமைத்திருந்த சோவியத் செம்படையினர், அந்த ஊரை சேர்ந்த கிம் இல் சுங் தலைமையிலான குழுவினரை கொண்டு வந்தனர்.

சோவியத் யூனியன் கிம் இல் சுங் குழுவினரை தெரிவு செய்வதற்கு பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். அன்று அது ஒரு கெரில்லா இராணுவமாக, ஜப்பானுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அவர்கள் அப்போது சோவியத் யூனியனுக்குள் தளம் அமைத்து செயற்பட்டு வந்தனர். அங்கிருந்து செம்படையுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். மேலும், கிம் இல் சுங், தான் விரும்புவது போல நடக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று ஸ்டாலின் நினைத்திருக்கலாம். கிம் இல் சுங் குழுவினர், சோவியத் யூனியன் விரும்பியது போன்று, வட கொரியாவில் சோஷலிச அரசு அமைத்த போதிலும், கொரியாவை ஒன்று சேர்க்க விரும்பினார்கள்.

கிம் இல் சுங் பல வருடங்களாக முயற்சி செய்தும், ஸ்டாலினை படையெடுப்புக்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை. ஜப்பானில் அணுகுண்டு போட்டு விட்டு மிரட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவை எதிர்ப்பதற்கு ஸ்டாலினும் விரும்பவில்லை. இருப்பினும், சோவியத் யூனியனும் ஓர் அணுவாயுத வல்லரசானதும், அயலில் உள்ள சீனாவில் மாவோவின் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றியதும், கிம் இல் சுங்கின் படையெடுப்புக்கு பச்சைக் கொடி காட்டப் பட்டது. 

ஆரம்பத்தில், கிம் இல் சுங் எதிர்பார்த்த படி தான் காற்று வீசிக் கொண்டிருந்தது. மிக வேகமாக முன்னேறிய வட கொரியப் படைகள், கண்ணிமைக்கும் நேரத்தில் தென் கொரியாவின் 90% மான பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன.

அமெரிக்கா கொரிய யுத்தத்தில் தலையிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்று ஐ.நா. சபையில் சோவியத் யூனியனும், கம்யூனிச சீனாவும் இருக்கவில்லை. (வேறு ஒரு பிரச்சினையில் சோவியத் யூனியன் பகிஷ்கரித்து வந்தது. சீனாவை தாய்வானில் உள்ள குவாமிந்தாங் அரசு பிரதிநிதித்துவப் படுத்தியது.) 

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து, ஐ.நா. படையணியை தயார் செய்தது. பெருமளவு அமெரிக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஐ.நா. படைகள், தென் கொரியாவில் தரையிறங்கின. தற்போது காற்று எதிர்த் திசையில் வீசியது. அமெரிக்கப் படைகள், வட கொரியப் படைகளை விரட்டிச் சென்று, சீன எல்லைக்கு கிட்டே விட்டன.

எவ்வாறு, கொரிய யுத்தத்தில் அமெரிக்க தலையீடு யாராலும் எதிர்பார்க்கப் படவில்லையோ, அதே மாதிரி சீனத் தலையீடும் எதிர்பார்க்கப் படவில்லை. வட கொரியப் படைகளுக்கு ஆதரவாக, சீனர்கள் போரில் குதித்தனர். சோவியத் யூனியனின் ஆயுத தளபாட உதவியுடன், சீனாவின் தொண்டர் படையினர் உக்கிரமான சண்டையில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்புக் காரணமாக, அமெரிக்கப் படைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம், கொரியா இரண்டாகப் பிரிக்கப் பட்டது. உலக வரலாற்றில், இன்று வரையில், நீண்ட காலம் நிலைத்து நிற்கும் போர் நிறுத்தம் அதுவாகும்.

இங்கே ஓர் உண்மையை பலர் மறந்து விடுகின்றனர். அன்று கைச்சாத்திடப் பட்டது ஒரு போர் நிறுத்த ஒப்பந்தமே தவிர, சமாதான ஒப்பந்தம் அல்ல. அதன் அர்த்தம், இன்றைக்கும், வட கொரிய அரசு, தென் கொரிய அரசுடனும், அமெரிக்காவுடனும் போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் போர் நடக்கவில்லை என்பது மட்டுமே ஆறுதலான விடயம். இருப்பினும், அவ்வப்போது நடக்கும் அசம்பாவிதங்கள் காரணமாக, பதற்றம் நிலவுவதால், வட கொரிய அரசு தனது மக்களை இராணுவ மயப் படுத்தி வைத்திருப்பதுடன், தற்காப்புக்காக அணுவாயுதங்களையும் தயாரித்து வைத்துள்ளது.

(தொடரும்)

No comments: