Thursday, May 21, 2015

"ஸ்டாலினிச நாடு" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன?

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
 (பாகம் - மூன்று)

உலகில் பொதுவாக, "மார்க்சிய- லெனினிச" சித்தாந்த அடிப்படை கொண்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள் வேறு பெயரில் ஆட்சி செய்தாலும், அவற்றை கம்யூனிச நாடுகள் என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், சோஷலிச நாடுகளை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆள்வதில்லை. சில நாடுகளில் உள்ள அரசுகள், புரட்சிகரமானதாக, அல்லது முற்போக்கானதாக இருக்கலாம். சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தலாம். லிபியாவில் கடாபியின் ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய- சோஷலிசம் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதை யாரும் ஒரு கம்யூனிச நாடு என்று அழைக்கவில்லை. அதே போன்றது தான் வட கொரியாவும்.

கிம் இல் சுங் குழுவினர்,  ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கெரில்லா யுத்தம் நடத்திய ஆரம்ப காலங்களில், குறைந்த பட்சம் மார்க்சிச - லெனினிச கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில், சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஸ்டாலினையும் ஏற்றுக் கொண்டிருந்தனர். மேலும், ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிச முகாம் இரண்டாகப் பிரிந்த நேரம், கிம் இல் சுங் ஸ்டாலினை ஆதரித்தார். இந்த விடயங்கள் உண்மையானவை தான். 

அதற்காக, வட கொரியா இன்று வரையும் நிலைத்திருக்கும் "ஸ்டாலினிச நாடு" என்று குறிப்பிடுவது பொருத்தமானதா? பெரும்பாலும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் தான், அவ்வாறு "ஸ்டாலினிச முத்திரை" குத்தப் படுகின்றது. சில கூறுகள் ஒரே மாதிரி தென்பட்டாலும், அது முற்றிலும் சரியல்ல.

மேற்கத்திய பிரச்சார ஊடகங்கள் "ஸ்டாலினிசம்" என்று எதை கருதிக் கொள்கின்றன? முதலில், சோவியத் யூனியனில் இருந்த ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தையும், வட கொரியாவின் கிம் இல் சுங் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

"ஒரு கட்சி தனது உறுப்பினர்களை கொலை செய்வது ஸ்டாலினிசம்" என்று மேற்குலகில் கூறுகின்றார்கள். ஸ்டாலின் காலத்தில், சொந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் கூட களையெடுக்கப் பட்டனர். அவர்கள் மேல், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய எதிரி நாடுகளுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.

கிம் இல் சுங் ஆட்சிக் காலத்திலும், அவரது தொழிலாளர் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் மேல், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. ஸ்டாலின் காலத்தில் நடந்ததைப் போன்று, ஒருவர் கைது செய்யப் பட்டால், அவருடன் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கைது செய்யப் பட்டனர்.

ஆயினும், மேற்குலகம் கூறுவது போன்று, இது மாதிரியான களையெடுப்புகள், "ஸ்டாலினிசத்தின் சிறப்பம்சம்" அல்ல! தமிழர்களுக்கு நன்கு தெரிந்த, புலிகள் இயக்கத்தினுள், மாத்தையா, கருணா போன்ற தலைவர்களும், அவர்களுடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் களையெடுக்கப் பட்டனர். "RAW உளவாளிகள், சிங்கள அரசின் ஒட்டுக்குழு" என்றெல்லாம் காரணம் கூறினார்கள். அதற்காக, புலிகளை யாரும் "ஸ்டாலினிச இயக்கம்" என்று சொல்வதில்லை.

கூட்டுறவு விவசாயப் பண்ணைகளை (Collective farming) ஸ்டாலினிச கட்டமைப்பு என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறு இல்லை. ஸ்டாலின் பிறப்பதற்கு ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னரே கூட்டுறவுப் பண்ணை அமைப்பு முறை இருந்து வந்துள்ளது. எண்பதுகள் வரையில், இஸ்ரேலிலும் இருந்துள்ளன. 

சோவியத் யூனியனில் இரண்டு வகையான கூட்டுறவுப் பண்ணைகள் இருந்துள்ளன. முற்றுமுழுதாக, அரசினால் நிர்வகிக்கப் படும் பண்ணைகள் (Sovchoz). சுயாதீனமான விவசாயிகளின் பண்ணைகள் (Kolchoz). இருப்பினும், ஒவ்வொரு விவசாயியும் சராசரி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான நிலத்தை கூட சொந்தமாக வைத்திருக்க முடிந்தது. கூட்டுறவுப் பண்ணைகள் மட்டுமல்ல, தனியான விவசாயியும், தமது நிலத்தில் கிடைத்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்க முடிந்தது.

வட கொரியாவில், விவசாயிகள் அனைவரும் கூட்டுறவுப் பண்ணைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. உண்மை. பண்ணைகள் முழுவதும் நேரடி அரசு நிர்வாகத்தின் கீழ் இருந்தன. அது மட்டுமல்ல, தனியொரு விவசாயிக்கு சொந்தமாக ஒதுக்கப் பட்ட நிலத்தின் அளவும் மிகக் குறைவு. தமக்கென சொந்தமாக உணவு உற்பத்தி செய்யக் கூடிய விவசாயிகளைக் கூட, அரசாங்கத்தில் தங்கியிருக்க வைப்பதே அதன் நோக்கம்.

வட கொரியாவில், நகர வாசிகள், கிராம வாசிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், யாராக இருந்தாலும், அனைத்துப் பிரஜைகளும் அரசு கொடுக்கும் ரேஷன் உணவுப் பொருட்களை நுகர வேண்டிய கட்டாயம் இருந்தது. ரேஷன் அல்லது உணவுப் பங்கீட்டுத் திட்டம் ஒரு ஸ்டாலினிச கொள்கை என்று சொல்வதும் அபத்தமானது. முதலாம், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரான காலங்களில், மேற்கத்திய நாடுகளில் கூட அனைவருக்கும் ரேஷன் கொடுத்து வந்தனர். இந்தியாவில் பல தசாப்த காலமாக இருந்து வந்தது.

சோவியத் யூனியனில், போர் நெருக்கடி காலங்களிலும், தட்டுப்பாடான உணவுப் பொருட்களுக்கும் மட்டுமே ரேஷன் முறை இருந்தது. இவற்றில் இருந்து, வட கொரியாவின் ரேஷன் முறை எந்தளவு வேறு படுகின்றது? அது தேசத்தின் பொருளாதார விருத்தியில், தனி நபரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அது பற்றி பின்னால் பார்ப்போம்.

வட கொரியா எந்நேரமும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இருக்கும் நாடு என்பதை மக்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். அதற்குச் சில உதாரணங்களை கூறலாம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள், அங்கிருந்து வேறு பிரதேசத்திற்கு செல்ல முடியாமல், அவர்களது நடமாடும் உரிமை கட்டுப் படுத்தப் பட்டது. வேறு மாவட்டத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்கச் செல்வதென்றால், முன் கூட்டியே பொலிஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதிப் பத்திரம் இல்லாமல் சென்று பிடிபட்டால், திருப்பி அனுப்பப் படுவதுடன் தண்டனையும் கிடைக்கும்.

நாட்டுப் புறங்களில் வசிப்போர், தலைநகர் பியாங்கியாங் செல்வதை நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கு என்ன காரணம் சொல்லி கேட்டாலும், அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பு தான். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அது கடுமையான அரசு அடக்குமுறையாகத் தோன்றும். ஆனால், எதிரிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக அந்த திட்டம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. 

இன்றைக்கும், "வட கொரியா ஒரு மிலேச்சத் தனமான அடக்குமுறை நிலவும் நாடு" என்று சொல்லப்படுவதற்கான காரணங்களில் அதுவும் ஒன்று. அதாவது, இன்றைக்கும் வெளியில் இருந்து யாராலும் ஊடுருவ முடியாத அளவுக்கு கண்காணிப்பு நிலவுகின்றது.

பலர் நினைப்பதற்கு மாறாக, ஸ்டாலின் காலத்து சோவியத் யூனியனில் கூட, மக்களின் நடமாட்டம் கட்டுப் படுத்தப் படவில்லை. மாஸ்கோ போன்ற பெரிய நகரங்களில் வசிக்க விரும்புவோர் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், சோவியத் யூனியனில் மக்கள் எங்கு வேண்டுமானாலும் போவதற்கும், வருவதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.

வட கொரியாவின் பிரயாணக் கட்டுப்பாடுகள், வெளியுலகில் மனித உரிமை மீறலாக கணிக்கப் படலாம். நிச்சயமாக, அது "ஸ்டாலினிசம்" அல்ல. இந்தக் காலத்தில், உலகம் முழுவதும் எங்கள் எல்லோரையும் செய்மதி, இணையம் மூலம் கண்காணிக்கிறார்கள் என்பது வேறு கதை. சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மனிக்கு அகதியாக வந்து தஞ்சம் கோருவோர், தாம் வசிக்கும் மாவட்டத்தை விட்டு வெளியேறுவதற்கு தடை இருந்தது.

நாடு முழுவதும், நகரம், கிராமம் எதுவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவு வீடுகள் ஒன்று சேர்ந்த நிர்வாக அலகுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. நகரில் ஓர் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் உள்ள வீடுகள் அத்தனையும், அல்லது கிராமத்தில் பத்து பதினைந்து தனி வீடுகள் சேர்ந்த அமைப்பாக அது இருக்கும். அந்த அமைப்பிற்கு அரசால் நியமிக்கப் பட்ட ஒரு நபர் பொறுப்பாக இருப்பார். பெரும்பாலும் நடுத்தர வயதை தாண்டிய பெண்மணி தான் நியமிக்கப் பட்டிருப்பார். 

அந்தச் சுற்றாடலில் வாழும் அனைத்துக் குடும்பங்களையும் பற்றிய தகவல்களை திரட்டி வைத்திருப்பது தான் அவரது கடமை. ஒரு வீட்டில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்? யார் என்னென்ன செய்கின்றனர்? அந்த வீட்டில் மேலதிகமாக யாராவது தங்கியிருக்கின்றனரா? வருமானத்திற்கு மிஞ்சிய ஆடம்பரப் பொருட்கள் காணப் படுகின்றனவா? இது போன்ற தகவல்களை சேகரித்து வைத்திருப்பார்கள். வேறு இடத்தில் இருந்து புதிதாக யாராவது வந்து தங்கினால் அறிவிக்க வேண்டும்.

இதோ பாருங்கள்! அது தான் "ஸ்டாலினிச அடக்குமுறை" என்று யாராவது சொல்லக் கிளம்பினால், அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். மேற்கத்திய நாடுகளிலும் இது போன்ற "ஸ்டாலினிச கண்காணிப்புகள்" நடைமுறையில் உள்ளன.

பொதுவாகவே, எந்தவொரு மேற்கத்திய நாட்டிலும், யாரும் எந்த இடத்திலும் பதிவு செய்யாமல் தங்க முடியாது. ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள் என்பன போன்ற விபரங்கள் யாவும், தற்காலத்தில் அரச கணனியில் டிஜிட்டல் வடிவில் பதிவு செய்யப் படுகின்றன.

அது மட்டுமல்ல, நெதர்லாந்தில் கிராமங்களில் வசிப்போரிடம் இருந்து ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். ஒவ்வொரு கிராமத்திலும், அங்கு வசிக்கும் மக்களை கண்காணிப்பதற்கென்று, ஒருவர் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டிருப்பார். அவரது வேலையும் அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது தான். ஆனால், ஒரு வித்தியாசம் உள்ளது. வட கொரியாவில் ஒரு வீட்டிக்குள் இருக்கும் பொருட்கள் கூட அவர்களுக்குத் தெரியும். நெதர்லாந்துக் கிராமங்களில், யார் அங்கே புதிதாக நடமாடுகிறார்கள் என்று மட்டும் கண்காணிக்கிறார்கள்.

சிறை முகாம்களில் அடைத்து வைத்திருக்கப் படும் கைதிகள் பற்றிய கோரக் கதைகள் தான், மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதையும் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" யுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆமாம், வட கொரிய அரசு மறுத்தாலும், அங்கே சிறை முகாம்கள் உள்ளன. அதைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். 

இங்கே ஓர் உண்மையை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள தேசங்களில் எல்லாம், அவை சுதந்திரமான ஜனநாயக நாடுகளாக இருந்தாலும், சிறைச்சாலைகள் உள்ளன. அமெரிக்காவில் எத்தனை ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர்? மொத்த அமெரிக்க சனத்தொகையில் ஒரு சதவீதம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு சிறையில் இருக்கும் கைதிகள் பற்றிய, மிகுதி 99% மக்களின் நிலைப்பாடு என்ன? ஒன்றுமில்லை.

பெரும்பாலான அமெரிக்கர்கள், சிறையில் இருக்கும் சக அமெரிக்கர்கள் பற்றி கவலைப்படாமல், தானுண்டு, தன வேலை உண்டு என்று வாழ்கிறார்கள். பெரும்பான்மையான வட கொரிய மக்களும் அப்படித் தான். அந்த நாட்டில், சிறை முகாம்களுக்குள் அடைக்கப் பட்ட வட கொரியர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லை. 

சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தான், பெருந்தொகையான சிறைக் கைதிகள் இருந்தனர். அன்றைய சோவியத் யூனியனின் மொத்த சனத்தொகையில், குலாக் சிறை முகாம்களில் அடைக்கப் பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு? அநேகமாக, மொத்த சனத்தொகையில் 0.5% தான் "ஸ்டாலினிச சிறைகளில்" கைதிகளாக இருந்தனர். வட கொரியாவில் இது சற்று அதிகம். அதாவது 0.8%. இதற்குத் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டங்களும்! நான் இங்கே யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால், நாங்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: