Saturday, May 23, 2015

சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்

"தேசியத் தலைவர்" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்
(பாகம் - நான்கு)

கிம் இல் சுங் காலத்தில், வட கொரியாவில் ஏறக்குறைய சமத்துவமான சமூக அமைப்பு இருந்தது. அதிகளவு சம்பளம் வாங்குவோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நிலைமை அங்கிருக்கவில்லை. அதற்குக் காரணம், உணவுப் பங்கீட்டுத் திட்டம் (ரேஷன்) எல்லோரையும் சமமான நுகர்வோராக வைத்திருந்தது. உயர் அரச அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள், என்ற பாரபட்சம் இல்லாமல், அனைவரும் பொது விநியோக நிலையத்தில் தான் பொருட்களை வாங்கினார்கள்.

நாடு முழுவதும், நகரங்கள், கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்டிருந்த பொது விநியோக நிலையங்களை, நமது நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கட்டுகளுடன் ஒப்பிடலாம். அதாவது, அங்கே உணவு, உடை, வீட்டுப் பாவனைப் பொருட்கள் எல்லாம் கிடைக்கும். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

ஐம்பதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரையில், வட கொரியாவில் அனைத்து மக்களும் ரேஷனில் தான் வாழ்ந்து வந்தனர். மாதத்திற்கு இரண்டு தடவைகள், ஒரு குடும்பத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு, இறைச்சி என்பன அளந்து கொடுக்கப் பட்டு வந்தன. (இறைச்சி எப்போதும் கிடைப்பதில்லை.) 

உணவுப் பொருட்களின் அளவு, செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு, அல்லது வயதுக்கு ஏற்றவாறு மாறு படும். ஒருவருக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பதற்கு அமைய, உணவின் அளவு தீர்மானிக்கப் படும். சுருக்கமாக, உடல் உழைப்பாளிகளுக்கு அதிகளவு உணவு வேண்டும், மூளை உழைப்பாளிகளுக்கு குறைந்தளவு உணவு போதும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. (Special food rations for Chuseok? Reality of North Korea′s rationing system;
https://www.youtube.com/watch?v=BO39QNakB9c)

உதாரணத்திற்கு, கடின உழைப்பை செலுத்தும் சுரங்கத் தொழிலாளிகளுக்கு அதிக அளவும், குறைந்தளவு உடல் உழைப்பை செலுத்தும் அலுவலக ஊழியருக்கு குறைந்தளவும் கிடைக்கும். விமானிகள் போன்ற தொழில் நுட்ப நிபுணர்கள், கட்சித் தலைவர்கள் போன்றோருக்கும் அதிகளவு ரேஷன் உணவு கிடைத்ததை மறுக்க முடியாது. அதே மாதிரி, சிறை முகாம்களுக்குள் அடைக்கப் பட்ட கைதிகளுக்கு மிகக் குறைந்தளவு ரேஷன் உணவு கிடைத்ததென்ற உண்மையையும் மறுக்க முடியாது. (சிறை முகாம்களில் வேலை நேரமும் அதிகமாக இருந்தது.)

பண்டிகை நாட்களில், குறிப்பாக கொரிய பொங்கல் தினத்தில், உணவின் அளவு அதிகரிக்கப் படும். அத்துடன் பண்டிகை கொண்டாடத் தேவையான பிற பொருட்களையும் அரசே கொடுக்கும்.   மேலும், வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள், மின்னணுக் கருவிகள், போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களையும் அரசு ரேஷன் மூலம் விநியோகம் செய்து வந்தது.

ரேஷனில் கிடைக்கும் உணவு போதாமால் இருந்தாலும், யாரும் பட்டினி கிடந்து சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பொருளாதார வளர்ச்சி கண்ட அறுபதுகளில் மட்டும் அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. எழுபதுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் சரிந்து கொண்டு சென்றதால், ரேஷன் அளவும் குறைக்கப் பட்டது.

உண்மையில் உணவுப் பங்கீட்டு முறை சரியாக அமுல்படுத்தப் பட்ட காலத்தில் (அதாவது கிம் இல் சுங் காலம்), அது பொது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தது. வளர்ந்த நாடொன்றில், உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் சராசரி குடும்பம் ஒன்று, ஒரு வாரத்திற்கு தேவையான உணவை வாங்கிக் கொண்டு வருவதில்லையா? அதே மாதிரித் தான், வட கொரியாவில் ஒவ்வொரு குடும்பமும், பொது விநியோக நிலையத்திற்கு சென்று, ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, மொத்தமாக வாங்கிக் கொண்டு வருவார்கள்.

சோஷலிச நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும், முதலாளித்துவ நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும் வேறு வேறானவை. நாங்கள் இரண்டையும் ஒப்பிட்டு ஒன்றெனக் கருதினால் குழப்பமே மிஞ்சும். இவ்வாறு மக்களைக் குழப்பும் வேலையை தான் மேற்கத்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. 

முதலாளித்துவ நாட்டில், சம்பளம் என்ற பெயரில், வாழ்க்கைச் செலவுக்கான பணத்தை கையில் கொடுத்து விடுவார்கள். அதைக் கொண்டு எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சந்தை கூறும் விலைக்கு வாங்க வேண்டும். திடீரென விலைவாசி உயர்ந்து, சம்பளம் உயரா விட்டால், விதியை நொந்து கொண்டு நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கிம் இல் சுங் காலத்தில், ஒரு சராசரி வட கொரிய குடிமகனின் சம்பளம் இருபது டாலர்கள். என்னது, $ 20 ஆ! என்று யாராவது வாயைப் பிளக்காதீர்கள். எங்களது நாட்டில் மாதமொன்றுக்கு இருபது டாலரை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வட கொரியாவின் நிலைமை வேறு. வீட்டுக்கு வாடகை கிடையாது. மின்சாரம், தண்ணீர் கூட அரசு மானியத்தில் கிடைக்கிறது. ரேஷனில் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 0.08 வொன் (வட கொரிய நாணயம்.) அது டாலரில் எவ்வளவு? ஒரு சதம் கூட இல்லை.

உண்மையில், வட கொரியாவிலும் அரிசியின் சந்தை விலை அதை விட பத்து அல்லது இருபது மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அரசு பெருமளவு மானியம் கொடுத்து, அரிசியை மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றது. அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலை, வருடக் கணக்காக உயராமல் அப்படியே இருந்தது. ஆகையினால், $ 20 சம்பளம் என்பது, ஒரு தந்தை தனது பிள்ளையின் கைச் செலவுக்கு பணம் கொடுப்பதைப் போன்றது. அந்தப் பணத்தில், சினிமாத் தியேட்டரில் டிக்கட் வாங்குவதற்கு, அல்லது சில தனிப்பட்ட பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடலாம்.

மேற்படி தகவல்கள், தொண்ணூறுகளுக்கு முந்திய கிம் இல் சுங் காலத்திற்கு மட்டுமே பொருந்தும். அவரின் மறைவுக்குப் பின்னர், வட கொரியா யாரும் எதிர்பாராத அளவு பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அது பற்றி பின்னால் பார்ப்போம்.

மக்கள் முழுமையாக அரசு வழங்கும் உணவில் தங்கியிருந்த படியால், பணத்தின் தேவை இல்லாமல் போனது. வட கொரியாவில் எல்லாக் காலங்களிலும் பணப் புழக்கம் இருந்தது. ஆனால், சந்தைப் பொறிமுறை இல்லாத காரணத்தால், அனைத்து தேவைகளையும் அரசே பூர்த்தி செய்த படியால், எதற்கும் பணம் செலவிட வேண்டி இருக்கவில்லை. அதன் அர்த்தம், வட கொரியாவில் சந்தைகள், கடைகள் இருக்கவில்லை என்பதல்ல.

பலர் நினைப்பதற்கு மாறாக, வட கொரியாவில் எந்தக் காலத்திலும், தனியார் கடைகள், சந்தைகள் தடை செய்யப் படவில்லை. ஆனால், சமூகத்தில் அவற்றின் முக்கியத்துவம் மிகவும் குறைவாக இருந்தது. பொதுவாக ரேஷனில் கிடைக்காத பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் தனியாரின் வியாபார நிலையங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருந்து வந்துள்ளன. அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. தனியார் யாரும் தானியங்களை இறக்குமதி செய்ய முடியாது. அது அரசின் ஏகபோக உரிமை. அது மட்டுமல்ல, இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் யாரும் வியாபாரம் செய்ய முடியாது.

எல்லோரும் அரச நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தால், சந்தைகள், கடைகளை யார் நடத்தி இருப்பார்கள்? கொரிய சமுதாயத்திலும், ஆண் தான் உழைக்க வேண்டும் என்ற பாரம்பரிய பழக்கவழக்கம் இருந்துள்ளது. நவீன கிம் இல் சுங் அரசு, அந்த மரபை பெரியளவில் மாற்றவில்லை. 

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த ஆண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலையாட்கள் தொழிலகத்தை மாற்றுவதும் இலகுவான காரியமல்ல. அந்தக் கட்டுப்பாடு ஒரு வகையில் அரசு பிரஜைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவியது. ஆண் தொழிலாளரின் நிலைமைக்கு மாறாக, பெண்களுக்கு சில சலுகைகள் இருந்தன.

ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட பின்னர், தான் செய்து வந்த வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க முடிந்தது. வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள், சந்தையில் பொருட்களை விற்பதன் மூலமும், கடை ஒன்றை நிர்வகிப்பதன் மூலமும் மேலதிக வருமானத்தை தேடிக் கொண்டனர். அதனால், இன்று வரைக்கும், வட கொரியாவின் நாட்டுப்புறங்களில் எங்கு சென்றாலும், சந்தைகள், கடைகளில் பெண்கள் தான் விற்பனையாளர்களாக நிற்பதைக் காணலாம். 

இது ஒரு வகையில் இன்னொரு வகையான சுதந்திரத்தையும் கொடுத்தது. தென் கொரியாவில் அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள். ஏனென்றால், பெண்கள் மட்டுமே அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, சீன எல்லை வழியாக தப்பியோட முடிந்தது.


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

No comments: