பிரெஞ்சுப் புரட்சியின்
இரத்த சரித்திரம் (பகுதி - 2)
பிரெஞ்சுப் புரட்சியின் தலைநகரான பாரிசில் இருந்து கிளம்பிய படைகள், எதிர்ப் புரட்சியாளர்களை அடக்கச் சென்றன. புரட்சிக்கு முன்னர், மன்னருக்கு விசுவாசமாக இருந்த படையினரும், படையதிகாரிகளும், தற்போதும் மனம் மாறாமல் இருக்கலாம். ஆகையினால், புரட்சிக்கு விசுவாசமான தளபதிகளை சேவையில் ஈடுபடுத்த வேண்டி இருந்தது.
பாரிஸ் புரட்சிகர அரசு நியமித்த புதிய அதிகாரிகள் எல்லோரும், சித்தாந்த ரீதியாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிசப் புரட்சியிலும் அதே தான் நடந்தது. எந்த மாற்றமும் இல்லை. சித்தாந்தம் மட்டுமே வேறு வேறு. ஆனால், இரண்டு புரட்சிகளும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப் பட்டன.
சோவியத் ஒன்றியத்தில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக் கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதைக் "களையெடுப்பு" என்று கூறினார்கள். எதற்காக அவர்கள் கொல்லப் பட்டார்கள்? வர்க்கப் புரட்சியின் எதிரிகள், அல்லது அதற்கு விசுவாசமாக இல்லாதவர்கள். மேட்டுக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, மேல்தட்டு வர்க்க பழக்க வழக்கங்களை பின்பற்றியவர்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளிய பெருமை பாராட்டியவர்கள்....
இப்படிப் பல காரணங்களுக்காக கொல்லப் பட்டனர். அன்றைய சமூகத்தில், எல்லோரும் சந்தேகத்திற்கு உள்ளானார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டில், ஆயிரக் கணக்கானோருக்கு மரண தண்டனை வழங்கிய உளவுத்துறை அதிகாரிகள் கூட, பின்னர் ஒரு நேரம் அதே குற்றச்சாட்டில் கொல்லப் பட்டனர்.
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி கொள்வது தான் புரட்சி ஆகும். சாதாரண பொது மக்களே, தங்கள் மத்தியில் இருந்த வர்க்க விரோதிகளை காட்டிக் கொடுத்தார்கள். தண்டனை கொடுத்தார்கள். பிரான்சில் என்ன நடந்ததோ, அதே தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. எந்த வித்தியாசமும் கிடையாது.
பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த ஓர் உதாரணத்தைக் கூறுகின்றேன். ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் நீதிபதியாக வீற்றிருந்தவர், சர்வாதிகாரி ரொபெஸ்பியரின் உற்ற நண்பர். புரட்சிக்கு விசுவாசமானவர், சித்தாந்த தெளிவு பெற்றவர் என்றெல்லாம் நம்பப் பட்டவர். அந்த நகரில், அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களைக் கூட விட்டு வைக்காமல் களையெடுத்தார்கள். புரட்சியின் எதிரிகள் 30 பேருக்கு, கில்லெட்டின் எனும் கத்தியால் கழுத்து வெட்டி தண்டனை வழங்கப் பட்டது.
ஸ்ட்ராஸ்பூர்க் நகரில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய நீதிபதிக்கும், பின்னர் அதே மரண தண்டனை கிடைத்தது. அவர் செய்த குற்றம் என்ன? நகரத் தெருக்களில், ஆறு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில், படையினர் புடைசூழ பவனி வந்தார். அதிலென்ன தவறு? அந்தக் காலத்தில் அப்படிச் செல்வது, அரச வம்சத்தினரும், பிரபுக்களும் தான்!
ஆகவே தன்னை ஒரு பிரபு மாதிரி பாவனை செய்து கொண்ட நீதிபதிக்கும், புரட்சியின் எதிரி (அல்லது வர்க்க எதிரி) குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை கிடைத்தது. தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? வேறு யாருமல்ல, அவரது உற்ற நண்பன் ரொபெஸ்பியர் தான்.
பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில், நண்பர்கள், குடும்ப உறவுகள் எதுவுமே, அன்றைய புரட்சியாளர்களுக்கு முக்கியமாக இருக்கவில்லை. ஒருவர் புரட்சிக்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா? பிரபுத்துவ வர்க்க சிந்தனை கொண்டவரா அல்லது குடி மக்கள் (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவரா? அது மட்டுமே முக்கியமாகக் கருதப் பட்டது.
ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் அதே தான் நிலைமை. அந்த நாடுகளில், பூர்ஷுவா (முதலாளிய) வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. அது மட்டுமே வித்தியாசம்.
புரட்சி நடக்கும் காலத்தில், ஒரே வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், வர்க்க சிந்தனை கொண்டிருப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள், கொள்கை வேறுபாடு காரணமாக எதிரெதிர் அணியில் இருக்கலாம்.
ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் நடந்த உள்நாட்டுப் போரில், சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படையில், சாதாரண போர்வீரர்களாக இருந்தவர்களும் விவசாயிகள் அல்லது பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசம், மதப் பற்று போன்றன முக்கியமாகப் பட்டன. அவர்களை ஆதரித்த மக்கள் பிரிவினரும் இருந்தார்கள். செம் படையினரும், வெண் படையினரும் கொள்கை வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்தாலும், இரண்டு தரப்பிலும் சாதாரண மக்கள் பெருமளவில் பலியானார்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் நடந்த படுகொலைகளை வெறுமனே படையினரின் மிலேச்சத் தனம் என்று ஒதுக்கி விட முடியாது. பலவற்றை திட்டமிட்ட இனப் படுகொலைக்குள் அடக்கலாம். அது தான் ஒரு பூர்ஷுவா புரட்சிக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசம். அதாவது, பூர்ஷுவா புரட்சி அடிப்படையில் பேரினவாத தன்மை கொண்டது. பிற இன மக்களின் சுதந்திரத்தை மட்டுமல்ல, உயிர் வாழும் உரிமையையும் மதிப்பதில்லை. அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியானது, எந்த இனமாக இருந்தாலும், குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டுமே எதிரிகளாக கருதியது. போர் முடிந்த பின்னர், எஞ்சிய வர்க்க எதிரிகளை கைது செய்து மனம் மாற்றும் முயற்சியில் இறங்கியது.
பிரான்சின் மேற்குப் பகுதியில் வண்டே (Vendée) எனும் பகுதி, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அங்கிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் சாதாரண விவசாயிகள் தான். உண்மையில் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய வர்க்கத்தினர். ஆனால், அவர்களுக்கு மன்னர் மீதான விசுவாசமும், மத நம்பிக்கையும் முக்கியமாகப் பட்டது. கத்தோலிக்க மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் ஒரு பெரும் படையை தயார் படுத்தி வைத்திருந்தார்கள். குறைந்தது 65000 போர்வீரர்களை கொண்ட பலமான இராணுவமாக இருந்தது. அவர்கள் செய்த முதல் வேலை, வண்டே பகுதியில் புரட்சிக்கு விசுவாசமான 200 பேரைப் பிடித்துக் கொன்றது தான்.
வண்டே கிளர்ச்சியை அடக்குவதற்காக, பாரிஸ் ஒரு பெரும் படையை அனுப்பியது. புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட, போர்க்கள அனுபவம் அற்ற வீரர்கள், சென்றவுடனே தோல்வியை தழுவிக் கொண்டனர். மேலும், அந்தப் பிரதேசத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிளர்ச்சியாளர்கள், காடுகளில் மறைந்திருந்து போரிட்டார்கள். அதனால் குடியரசுப் படையினர் முன்னேற முடியாமல் பின்வாங்க வேண்டி இருந்தது.
நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, பாரிசில் இருந்து ஒரு புதிய தளபதி வந்தார். அவரும் ரொபெஸ்பியர் மாதிரி, தொழில்முறை வழக்கறிஞர். மன்னரின் மரண சாசனத்தில் கையொப்பம் இட்டவர். அவர் பெயர் ஜான் பாப்டிஸ்ட் கரியேர் (Jean Baptiste Carrier). காடுகளை துப்பரவாக்குவது. கால்நடைகளை கவர்ந்து செல்வது, அறுவடை செய்யப் பட்ட தானியங்களை கொள்ளையடிப்பது. இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.
கரியேரின் வழிகாட்டலினால் உற்சாகமடைந்த குடியரசு படையினர், லெ மொன் எனும் இடத்தில் நடந்த போரில் 15000 கிளர்ச்சியாளர்களை கொன்றார்கள். அந்த வெற்றிக்குப் பின்னர், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை சுற்றி வளைத்து, கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். பெண்கள், குழந்தைகள் கூட குடியரசு படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.
ஆயினும், நிலைமை அத்துடன் சீரடையவில்லை. கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால், வண்டே பிரதேசத்தில் இருந்த அனைவரையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது. சொத்துக்களை கொள்ளையடிக்கவும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், படையினருக்கு அனுமதி வழங்கப் பட்டது.
போரில் அழியாமல் எஞ்சிருந்த கிராமங்களுக்குள் புகுந்து கிராமவாசிகளை படுகொலை செய்தார்கள். கால்நடைகளும் அழிக்கப் பட்டன. வீடுகளை எரித்தார்கள். வயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் ஆண்களைப் பிடித்து வெட்டிக் கொன்று விட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து சிதையில் நெருப்பு மூட்டி எரித்தார்கள். அந்தக் கிராமங்களில் வாழ்ந்த சிலர், புரட்சிக்கு ஆதரவானவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களும் குடியரசுப் படையினரின் வெறியாட்டத்திற்கு தப்பவில்லை.
கிளர்ச்சி நடந்த இடத்திற்கு அண்மையில் உள்ள நான்த் நகரில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில், கைது செய்யப் பட்டோர் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அங்கிருந்த கைதிகள் பலதரப் பட்டவர்கள். பிரபுக்கள், மேட்டுக்குடி மக்கள், அவர்களுக்கு வேலை செய்த பணியாளர்கள், கத்தோலிக்க மதகுருக்கள் போன்ற "வர்க்க எதிரிகள்" மட்டுமல்லாது, படையினருக்கு உணவு கொடுக்க மறுத்த சாதாரண விவசாயிகள் கூட சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர்.
இட நெருக்கடி காரணமாக சிறைச்சாலைக்குள் கைதிகள் நிரம்பி வழிந்தனர். அதனால் தொற்று நோய்களும் பரவின. சிறைச்சாலைக்கு பொறுப்பான நீதிபதியாக கரியேர் இருந்தார். ஒவ்வொரு கைதியாக கொண்டு வந்து விசாரிப்பதற்கு அவருக்கு பொறுமை இருக்கவில்லை. ஆகவே ஒரு யோசனை சொன்னார். கைதிகளை கொண்டு சென்று, அருகில் உள்ள ஆற்றில் தூக்கிப் போட்டு மூச்சுத் திணறி சாக வைக்க வேண்டும்.
பிரெஞ்சுப் புரட்சியானது மதத்திற்கு எதிராக இருந்தது. நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப் பட்டன. கன்னியாஸ்திரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். கத்தோலிக்க மத விசுவாசிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நான்த் நகரில், கத்தோலிக்க மதகுருக்கள், மிக மோசமாக சித்திரவதை செய்யப் பட்டனர். பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் நிர்வாணமாக்கி, சோடி சோடியாக கட்டி, ஆற்றுக்குள் தூக்கி வீசினார்கள். படையினர் அதனை "குடியரசுத் திருமணம்" என்று கூறி பரிகசித்தார்கள்.
பிரான்சின் கிழக்கே உள்ள லியோன் நகரில் இன்னொரு கிளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. முன்னர் புரட்சியை ஆதரித்தவர்கள், தமது பிரதேசத்திற்கு கூடுதலான சமஷ்டி அதிகாரங்களை கோரி கிளர்ச்சி செய்தார்கள். பாரிஸ் அரசுக்கு விசுவாசமானவர்களை பிடித்துக் கொன்று விட்டு, தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பாரிஸில் இருந்த பொதுநல கமிட்டி பழிவாங்கப் புறப்பட்டது.
ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்கு விசுவாசமான கொல்லோத் து புவா (Collot d'Herbois) "துரோகிகளின் பிணங்களை கிழங்குகள் மாதிரி அடுக்கி வைக்கப் போவதாக..." சூளுரைத்தார். "அப்பாவிகளை பாதுகாத்துக் கொண்டிருந்தால், குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்" என்று இனப் படுகொலைக்கு நியாயம் கற்பித்தார்.
கொல்லோத் து புவாவுடன் பூஷே (Fouché) எனும் இன்னொரு அதிகாரியும் சேர்ந்து கொண்டார். இருவருமாக சேர்ந்து. கிளர்ச்சியை முறியடித்தார்கள். லியோனில் அகப்பட்டவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வந்து, பீரங்கியால் சுட்டுக் கொன்றார்கள்.
"அங்கே இரத்தம் ஆறாக ஓடியது. ஆனால் மனித குல விடுதலைக்காக அதைச் செய்தோம்...குற்றவாளிகளின் இரத்தம் எமது சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது." என்று பூஷே தனது செயலை நியாயப் படுத்தினார்.
பாரிஸ் நகரில் இருந்த ரொபெஸ்பியருக்கு, தனது தோழர்கள் அதிக தூரம் செல்வதாகப் பட்டது. ஆகவே, கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய அதிகாரிகளையும், மற்றவர்களையும் பாரிசுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தாங்கள் பாரிஸ் சென்றால் என்ன நடக்கும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது. ரொபெஸ்பியர் கருணை காட்டாமல் கொன்று விடுவான் என்று அஞ்சினார்கள். அதனால் அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்தார்கள்.
பாரிஸ் நகரில் ஒரு சதிப்புரட்சி நடந்தது. பொதுநல கமிட்டி அங்கத்தவர்களும், ரொபெஸ்பியரும் கைது செய்யப் பட்டனர். புரட்சியின் ஒப்பற்ற தலைவனாக சர்வாதிகார ஆட்சி நடத்திய ரொபெஸ்பியர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். 28 ஜூலை, பெருந்திரளான மக்கள் முன்னிலையில் ரொபெஸ்பியரின் தலை துண்டிக்கப் பட்டது.
இனப்படுகொலை, போர்க்குற்றங்களை புரிந்த கரியேர், பூஷே, கொல்லோத் ஆகிய மூன்று அதிகாரிகளும், எல்லாவற்றிற்கும் ரொபெஸ்பியர் மீது பழி சுமத்தினார்கள். தாங்கள் வெறும் கருவிகள் மட்டுமே என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்களின் நிம்மதி நீண்ட காலம் நிலைக்கவில்லை. 1794 செப்டம்பர், கரியேர் கைது செய்யப் பட்டு, சில மாதங்களுக்குப் பின்னர் சிரச்சேதம் செய்யப் பட்டார். அடுத்த வருடம், கொல்லோத் கயானாவுக்கு நாடுகடத்தப் பட்டார். பூஷே பதவியிறக்கப் பட்டு, சாமானிய மனிதனாக வாழ்ந்து மடிந்தார்.
ரொபெஸ்பியரின் மரணத்திற்குப் பின்னர், பிரான்சில் கொலைகள் பெருமளவு குறைந்து விட்டன. அடுத்து சில வருடங்களில், புரட்சிக்கு தலைமை தாங்க வந்த நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் சமாதானம் நிலவியது. ஆயினும், புரட்சியின் ஆரம்ப காலகட்டமான, 1793, 1794 ஆகிய இரு வருடங்களில் மட்டும், பிரான்சில் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர்.
(முற்றும்)
(பிற்குறிப்பு: பிரெஞ்சுப் புரட்சியில் நடந்த இனப்படுகொலை பற்றிய விபரங்கள், Historia (Nr.1/2015) சஞ்சிகையில் பிரசுரமான "Beulen van de revolutie" எனும் கட்டுரையில் இருந்து எடுக்கப் பட்டன.)
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை வாசிப்பதற்கு: