Wednesday, July 30, 2014

புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"


"குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர்.

உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்து இருக்கலாம். ஆனால், பிபிசி தமிழோசை பல வருட காலமாகவே "சிறார் போராளிகள்" என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றது.

பல புலி ஆதரவாளர்கள் நினைத்துக் கொள்வதைப் போல, குழந்தைப் போராளிகள் அல்லது சிறார் போராளிகள் பற்றிய பிரச்சினையை முதலில் கையில் எடுத்துக் கொண்டது புலி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஏனெனில், ஆரம்ப கால புலி எதிர்ப்பாளர்கள் பலர், புலிகளால் தடை செய்யப்பட்ட ஆயுதபாணி இயக்கங்களில் இருந்து வந்தவர்கள். அப்போது அவர்களும், 16 வயது சிறார் போராளிகளை சேர்த்துக் கொள்வதை தவறாகக் கருதாதவர்கள்.

உண்மையில், மேற்கத்திய மனித உரிமை நிறுவனங்களும், ஐ.நா. வும் தான், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு முக்கியமான பிரச்சினையாக மாற்றினார்கள். ஐ.நா. அதற்கென்று விசேட பிரிவை உருவாக்கியது. ராதிகா குமாரசாமி என்ற ஒரு யாழ்ப்பாணத் தமிழ் அறிவுஜீவியை அதற்குப் பொறுப்பாகப் போட்டது. தற்போதுள்ள நவநீதம் பிள்ளை, பிற்காலத்தில் ராதிகா குமாரசாமியின் இடத்திற்கு நியமிக்கப் பட்ட ஒருவர் தான்.

அமெரிக்க சி.ஐ.ஏ., தனது இலங்கை தொடர்பான வருடாந்த அறிக்கைகளில், புலிகளின் சிறார் போராளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தது. முரண்நகையாக, சி.ஐ.ஏ. அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்திய வளங்களில் பெரும்பகுதி புலிகளின் பிரச்சார சாதனங்களில் இருந்து பெறப் பட்டன.

உதாரணத்திற்கு, மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த சமாதிகளில், பிறந்த ஆண்டும், மரணமடைந்த ஆண்டும் பொறிக்கப் பட்டிருந்தன. சி.ஐ,ஏ, அதை சுட்டிக் காட்டி, மரணமடைந்த போராளிகளின் வயதைக் கணக்கிட்டு கூறி வந்தது. விழிப்புற்ற புலிகள் இயக்கம், அதற்குப் பின்னர் போராளிகளின் சமாதிகளில் பிறந்த வருடம் குறிப்பிடும் வழக்கத்தை நிறுத்திக் கொண்டது.

ஆயினும், ஐ.நா.வும், மனித உரிமை ஸ்தாபனங்களும், சிறார் போராளிகள் விடயத்தை ஒரு பூதாகரமான பிரச்சினையாக்கி, அதை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. இறுதிப் போருக்கு முந்திய சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகளிடம் இருந்து, சிறுவர்களை படைகளில் சேர்ப்பதில்லை என்ற வாக்குறுதியை பெறுவதற்கு கடுமையாக முயற்சித்தன. புலிகளும் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து நடப்பதைப் போன்று காட்டிக் கொண்டனர்.

தற்போதும் சிலர், புலிகளின் சிறார் போராளிகள் விடயத்தில் அதிக கவனம் குவிப்பதை, வெறுமனே புலி எதிர்ப்புவாதமாக குறுக்கிப் பார்க்க முடியாது. இது மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜனநாயகம். ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அமெரிக்க ஜனநாயகம் ஏற்றுமதி செய்யப் பட்டமை பலருக்குத் தெரிந்திருக்கும். அதே மாதிரியான ஒரு முயற்சி தான் இதுவும். சில புலி எதிர்ப்பாளர்களும், சில இடதுசாரிகளும், ஜனநாயக உரிமையை பாதுகாப்பது என்ற பெயரில், மேற்கத்திய நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். துடிதுடிப்பான, இராணுவ சாகசம் செய்யும் ஆர்வம் கொண்ட கட்டிளம் காளைகளை மட்டுமே தெரிந்தெடுத்தனர். ஆரம்பத்தில் பெண்களையும், சிறுவர்களையும் போராளிகளாக சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அன்றிருந்த ஐந்து பெரிய இயக்கங்களில், புலிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பதாக கருதப் பட்டது. 

PLOTE, TELO, EPRLF ஆகியன, ஒரு மரபு வழிப் படையணியை கட்டுவதற்கு தேவையான ஆள் பலம் வேண்டுமென்று கூறி, வருவோர் போவோர் எல்லோரையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், புலிகளோ கமாண்டோ பாணி தாக்குதல்களை செய்யக் கூடிய கெரில்லாப் படையை வைத்திருப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். திடீர் கெரில்லா தாக்குதல்களில் கிடைத்த வெற்றிகள், புலிகள் மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணமாக இருந்தன.

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், ஒரு பெரிய திருப்புமுனை உருவாகியது. வட மராட்சியில் நடந்த ஒப்பெறேஷன் லிபரேஷன் போர் நடவடிக்கை மூலம், சிறிலங்கா இராணுவம் பெரியதொரு பிரதேசத்தை கைப்பற்றி இருந்தது. அந்தப் போரில், புலிகள் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும், பெருமளவு போராளிகள் மரணமடைந்ததாகவும் கருதப் பட்டது. இந்தத் தகவலை, அன்றைக்கு அனுப்பப் பட்ட அமெரிக்க தூதரக கேபிள் தெரிவித்ததை, விக்கிலீக்ஸ் பகிரங்கப் படுத்தி இருந்தது. இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றுவதற்கு முன்னர், இந்தியா தலையிட்டு ஒப்பந்தம் போட்டது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர், புலிகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தான், குழந்தைப் போராளிகள் என்ற தோற்றப்பாடு வெளித் தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம், வழமையான புலிப் போராளிகள் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பல சிக்கல்களுக்கு மத்தியில், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.

இந்திய இராணுவத்தின் முற்றுகைக்குள், தேடுதல்களுக்குள் அகப்படாமல் தப்புவதற்காக, புலிப் போராளிகள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, அடிக்கடி நகர்ந்து கொண்டிருக்க வேண்டி இருந்தது. அப்போது வழியில் படையினர் நிற்கின்றனரா என்று உளவு பார்ப்பதற்காக, சிறுவர்களை பிடித்து முன்னுக்கு அனுப்புவார்கள். இந்திய இராணுவமும், எக் காரணம் கொண்டும் சிறுவர்களை சந்தேகிக்கவில்லை. ஊர் மக்களிடையே இரகசியமாக பணம் சேர்ப்பதற்கும் அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். அப்போது அந்த சிறுவர்கள் வைத்திருந்த ஒரே ஆயுதம், கிரனேட் மட்டுமே. 

இந்தியப் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய காலத்தில், உதவியாளர்களாக இருந்த சிறுவர்கள், போராளிகளாக மாற்றப் பட்டனர். புலிகள் தமது முந்திய கொள்கைக்கு முரணாக, சிறுவர்களை படையணியில் சேர்த்துக் கொள்வதற்கு சில சமூகக் காரணிகள் இருந்தன.

1985 - 1986 கால கட்டத்தில் நடந்த இயக்க மோதல்கள், புலிகள் பிற இயக்கங்களை தடை செய்தமை, ஆகிய காரணங்களினால் மக்களுக்கு போராட்டத்தில் ஈடுபடும் ஆர்வம் குன்றி இருந்தது. பல வருடங்களாக, இந்தியா படையனுப்பி தம்மைக் காப்பாற்றும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.  1987 ல், எதிர்பாராவிதமாக இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த போர் தந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதற்கிடையே, வெளிநாடுகளுக்கும், இந்தியாவுக்குமான புலம்பெயர்தல் அதிகரித்திருந்தது.

இந்தியப் படைகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்னர், வட மாகாணத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகியது. புலிகள் வைத்திருந்த நடைமுறை (de facto) தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்ற நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோர், போராளியாகும் வயதில் இருந்த இளைஞர்கள். அதாவது 16 - 25 வயதிலான இளைஞர்கள் தான் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். 16 வயதுக்கு உட்பட்டோர் விசா எடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை பயன்படுத்தி, ஏராளமான இளைஞர்கள், 17 - 24 வயதானவர்கள் கூட, போலி கடவுச்சீட்டு தயாரித்து ஜெர்மனிக்கு சென்றனர். ஓரளவு வசதியானவர்கள் கூட, தம்மிடம் சொந்தமாக இருந்த நிலத்தை, நகைகளை அடைவு வைத்து விட்டு, அல்லது அவற்றை விற்று பணம் சேர்த்துக் கொண்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடிந்தது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் ஒரு வளர்ந்து வரும் நாடொன்றின் பொருளாதாரத்தை பாதிப்பது போன்று, போராளிகளின் வயதையொத்த தமிழ் இளைஞர்களின் வெளியேற்றம், புலிகளின் போராட்டத்தை பாதிக்கும் என்று உணரப் பட்டது. அதனால், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து, 45 வயதுக்கு உட்பட்டோர் யாரும் வெளியேறக் கூடாது என்று, புலிகள் சட்டம் போட்டார்கள். விசா போன்று, பாஸ் நடைமுறை கொண்டு வந்தார்கள். ஏதாவது அலுவலாக கொழும்புக்கு செல்வதாக இருந்தால், நெருங்கிய உறவினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். ஆயினும், வசதி படைத்தவர்கள் பெருமளவு பணம் கொடுத்து, பாஸ் எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு வெளியேறிய பெரும் பகுதியினர், வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், "அன்று ஈழத்தில் வாழ்ந்த காலங்களில், போராளியாக மாறக் கூடிய அருமையான சந்தர்ப்பத்தை உதறித் தள்ளி விட்டு"  வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டவுடன், "புலி ஆதரவாளர்" வேஷம் போடத் தொடங்கினார்கள். வெளிநாடு செல்லும் வரையில், அவர்களுக்கும் புலிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்கவில்லை. தமிழீழப் போராட்டம் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை. 

புலிகளின் செயல்களை எல்லாம் நியாயப் படுத்தி வாதாடிக் கொண்டிருக்கும் பலர், தமது வர்க்க நலன் சார்ந்தே அதைப் பார்க்கின்றனர்.  குழந்தைப் போராளிகள் பிரச்சினை, அவர்கள் மனதில் எந்த மாற்றத்தையும் உண்டாக்காத காரணமும் அது தான். ஏனென்றால்... இங்கே தான் அவர்களது நடுத்தர வர்க்க மனோபாவம் தலை காட்டுகின்றது. 

இறுதி யுத்தம் வரையில், புலிகளின் படையணிகளில் இருந்த பெரும்பான்மையான போராளிகள், குழந்தைப் போராளிகள் உட்பட, வறிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். நடுத்தர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகளை" பின்பற்றி, வெளிநாடு செல்வதற்கு பண வசதி இல்லாதவர்கள். வர்க்க முரண்பாடுகள், வர்க்க ஒற்றுமைகள், எந்த நாட்டு அரசியல் போக்கிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது.

மேற்கத்திய நாடுகளில், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், திடீரென தமிழ் தேசிய ஞானம் கைவரப் பெற்றவர்கள், விடுதலை உணர்வு பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஈழத்தில் வாழும் வறிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு, விடுதலை உணர்வு, இன மான உணர்வு எல்லாம் தாராளமாகவே இருக்கின்றன. 

மார்க்சிய தத்துவம் காலங் காலமாக கூறி வருவதைப் போன்று, "இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராட முன்வருவார்கள்." தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் அது தான் உண்மை.  இழப்பதற்கு நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மற்றவர்களுக்கு தமிழ் தேசியப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள். இது இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை.

ஈழத்தில், புலிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் கலை அலாதியானது. அதற்கென்றே பிரச்சாரப் பிரிவு சில ஆட்களை வைத்திருக்கும். குறிப்பாக பாடசாலைகளில் சென்று மாணவர்களுடன் பேச்சுக் கொடுப்பார்கள். "படித்து என்ன செய்யப் போகிறீர்கள்? சிங்களவன் வேலை கொடுப்பானா? சிங்களவன் குண்டு போட்டு கொன்று கொண்டிருக்கும் நேரத்தில் படித்து என்ன பிரயோசனம்? எப்படியும் சாகத் தானே போகிறோம்? போராடிச் சாகலாம் அல்லவா?" இப்படிப் பல கேள்விகள்.

ஆண் மாணவர்களுடன் உரையாடுவது பெண் போராளிகளாகவும், பெண் மாணவர்களுடன் உரையாடுவது ஆண் போராளிகளாகவும் இருக்கும். போராளி வாழ்க்கையின் மகத்துவம் பற்றியும், சாதாரண வாழ்க்கையின் இழி நிலை பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆயுதமேந்திப் போராடாமல், வாழ்க்கையை வீணாக்குவதாக அவர்கள் எண்ணி வெட்கப் படும் அளவிற்கு அந்த உரையாடல் அமைந்திருக்கும்.

பொதுவாக புலிகளின் எந்தப் பிரச்சாரமும், தற்போது வெளிநாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும், நடுத்தர வர்க்க மாணவர்கள் மனதில் எந்த சலனத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும், படித்தால் தமக்கு எதிர்காலம் உண்டென்று. குறைந்த பட்சம், தமது பெற்றோர் தம்மை வெளிநாட்டுக்காவது அனுப்பி வைப்பார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். 

மத்திய தர வர்க்கத்திலும் விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். தாமாகவே விரும்பி போராளியாக சேர்ந்து கொள்வார்கள். அப்படியான சிலரை, பெற்றோர் தமது செல்வாக்கை பயன்படுத்தி, முகாமில் இருந்து விடுவித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகும் தமது பிள்ளை ஊரில் இருந்தால் இயக்கத்தில் சேர்ந்து விடுவான் என்று நினைத்து, வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஏழை மக்களின் நிலைமை வேறு. அவர்களிடம் வெளிநாடு செல்லும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஏழை மாணவர்கள் மனதில், புலிகளின் பிரச்சாரங்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிவிடும். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்தும் பலர் போராளியாக சேர்ந்து கொள்ள முன்வருவதுண்டு. அப்படியாவது, தாம் பெற்றோருக்கு பாரமாக இருக்க மாட்டோம் என்று அந்த பிஞ்சு உள்ளங்கள் நினைத்துக் கொண்டன.

வெளிநாடுகளுக்கு செல்லும் மத்தியதர வர்க்கத்தினரை குறி வைத்தும், அவர்கள் புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும் புலிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். "வெளிநாடு சென்று வெள்ளையனுக்கு அடிமை வேலை செய்யப் போகிறீர்களா? அதை விட எமது தாயகத்தில் சுதந்திரமாக போராடிச் சாகலாமே?" என்று நேரடியாகவும், தமது ஊடகங்கள் மூலமும் சொல்லி வந்தனர். புலிகளின் பிரச்சாரத்திற்கு மயங்கும் நிலையிலா, எமது நடுத்தர வர்க்கம் இருக்கிறது?

மத்தியதர வர்க்க "குழந்தை அறிவுஜீவிகள்", சக மாணவர்கள் அரசியலில் நாட்டம் கொள்வதையே கண்டிப்பார்கள். "நமக்கு முக்கியம் படிப்பு, பல்கலைக்கழக அனுமதி, அதற்குப் பிறகு உத்தியோகம், கடைசியாக ஒரு மேற்கத்திய நாடொன்றில் நிரந்தரமாக தங்கி விடுதல்..." என்று அறிவுரை கூறுவார்கள். ஊரில் ஒரு பாடசாலை மாணவனாக வாழ்ந்த காலங்களில் அரசியலை நினைத்துப் பார்க்க மறுத்தவர்கள், பல்கலைக்கழக பட்டம், வெளிநாட்டு வாழ்க்கை கைவரப் பெற்ற பின்னர் தான், "நமக்கு தமிழீழம் வேண்டும்" என்று உணர்ந்து கொண்டார்கள்! அவர்கள் தான் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் குழந்தைப் போராளிகள் இன உணர்வு பெற்று போராடச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் அவர்களுக்கு வர்க்க உணர்வு என்ற ஒன்று இருந்துள்ளது. இழப்பதற்கு எதுவுமற்ற மக்களுக்கு, போராட்டத்தை தவிர வேறு வாழ்க்கை இல்லை. போராளியாக ஆயுதமேந்திய சிறுவனுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், அவன் ஒரு ஏழைக் குடும்பத்தில் அவல வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் கிடைக்கவில்லை. போராளியான பின்னர் கிடைத்த சமத்துவ உணர்வு, சிறார் போராளிகளுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்தது.

மறு பக்கத்தில், பண வசதி படைத்தவர்களுக்கு போராடமாலே ஒரு நல்வாழ்வு அமைந்து விடுகின்றது. அவர்கள் சமத்துவத்தை, சமூக அங்கீகாரத்தை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதை நாம் கேள்வி கேட்டால், "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆன்மீக சொற்பொழிவாற்றத் தொடங்கி விடுவார்கள். 

அண்மையில் தமிழகத்தில் பரப்பரப்பாக பேசப்பட்ட, புலிப் பார்வை திரைப்படத்தின் இயக்குனர், பாலச்சந்திரன் என்ற சிறுவனுக்கு புலிச் சீருடை அணிவித்திருப்பது பற்றி எழுந்த சர்ச்சை தொடர்பாக கூறிய விளக்கம் இது: "அந்தப் பாலகனுக்கு சீருடை அணிவித்து அழகு பார்த்திருக்கிறோம்."  அதே போன்று, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அழகு பார்ப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறார்கள். ஈழத்தில், போர்க் களத்தில் சீருடை அணிந்திருந்த சிறுவர்களுக்கு அது வெறும் அலங்காரப் பொருள் அல்ல. போராளி ஆகி விட்டதால், சமூக அந்தஸ்தில் உயர்ந்து விட்டதாக பெருமிதம் கொள்ளும் கனவு. அந்தக் கனவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மண்ணோடு மண்ணாக மறைந்து போனது.

Monday, July 28, 2014

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!



"எதற்காக பாலஸ்தீனத்திற்காக அழுகிறீர்கள்?""தமிழர்கள் அழ வேண்டியது முள்ளிவாய்காலுக்காக மட்டுமே!"
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சிலர் சமூக வலைத் தளங்களில் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதிரிகளின் சூழ்ச்சிகளில் முதன்மையானது, ஒடுக்கப் பட்ட மக்களை பிரித்து வைப்பது. அதை இப்படியான வழிகளிலும் சாதிக்கலாம்.

வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது கண்களை மூடிக் கொண்டிருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன், வட மாகாண முதலமைச்சராக பதவி வகிக்கிறார். வன்னியில் முற்றுகைக்குள் அகப்பட்ட மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவில் சில தமிழ் தனவந்தர்கள், ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வழங்கினார்கள்.

வன்னியில் மக்கள் செறிவாக கூடுமிடங்களை செய்மதிப் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவிக்க உதவிய ஒபாமாவுக்கு ஆதரவாக, அமெரிக்காவில் ஓர் தமிழர் அமைப்பு இயங்கியது. இந்தியாவில் அதே காலகட்டத்தில், சோனியா அல்லது கருணாநிதி பெயரில் ஒரு தமிழ் இன உணர்வாளர்களின் அமைப்பு இயங்கினால், அது எந்தளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கும்? ஆனால், தமிழ் இனப்படுகொலையில் பங்காளியான ஒபாமாவுக்கு ஆதரவான தமிழர் அமைப்பு, யாருடைய கண்களையும் உறுத்தவில்லை.

அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களையும், பண வசதி படைத்தவர்களையும் கேள்வி கேட்கும் அளவிற்கு முதுகெலும்பில்லாத "மாற்றுக்" கருத்தாளர்கள் சிலர், முள்ளிவாய்க்கால் - காஸா படுகொலைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலையும், காஸாவையும் ஒப்பிட்டால் ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும், போலித் "தமிழ் இன உணர்வாளர்களுக்கும்" பிடிப்பதில்லை. முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு, தம்மிடம் மட்டுமே காப்புரிமை இருப்பது போன்று நடந்து கொள்கின்றனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் பேசினால், "எமக்கு தமிழீழம் மட்டுமே முக்கியம்" என்று விதண்டாவாதம் செய்வார்கள். ஒரு சில "மாற்றுக்" கருத்தாளர்கள் குறுக்கே புகுந்து, "உலகில் எவனும் தமிழன் சாகும் போது கண்டு கொள்ளவில்லை. அதனால் பாலஸ்தீனர்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை..." என்று ஒரு சாட்டு சொல்வார்கள். "இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை, ஒரு சர்வதேச பிரச்சினை" என்பது இந்த "மாற்றுக்" கருத்து அறிவுஜீவிகளுக்கு தெரியாமல் போனது அதிசயமல்ல. ஏனென்றால், அமெரிக்கா உதவியின்றி அவர்களது அரசியல் நடக்காது.

இஸ்ரேலில் ஒரு கொலை நடந்தால் அது உலகச் செய்தி. அதே நேரத்தில் இன்னொரு நாட்டில் ஆயிரம் பேர் இறந்தாலும், அந்தத் தகவல் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. இன்று நேற்றல்ல, கடந்த எழுபது வருடங்களாக சர்வதேச சமூகம் இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமான கரிசனை காட்டி வருகின்றது. மேற்கத்திய ஊடகங்கள் எந்தத் தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவோ, அதே தான் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப் படும்.

காஸா போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இன்னொரு அரபு நாடான லிபியாவில் ஒரு போர் நடந்து கொண்டிருந்த தகவலை எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? அதுவும் சாதாரணமான யுத்தம் அல்ல. கிளர்ச்சிக் குழுக்கள் திரிப்பொலி சர்வதேச விமான நிலையத்தை தாக்கி உள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்களை தகர்த்துள்ளன.

திரிபோலி விமான நிலைய தாக்குதல் 

லிபியா வான் பரப்பின் மேல் விமானங்கள் பறப்பதற்கு, சர்வதேச தடையுத்தரவு போடப் பட்டுள்ளது. அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். பிரெஞ்சுப் பிரஜைகளை வெளியேறுமாறு பணிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல் எல்லாம் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள். எதற்காக எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதற்கு விடை ஒன்று தான். இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சர்வதேச கவனம் முழுவதும் அங்கே தான் குவிந்திருக்கும்.

2008 இறுதியிலும், 2009 தொடக்கத்திலும், வன்னியிலும், காஸாவிலும் ஒரே நேரத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், சர்வதேச நாடுகள் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும்? இந்த உண்மைகளை மறைக்கும் போலித் தமிழ் இன உணர்வாளர்கள் சிலர், தமது இஸ்ரேலிய சார்பு அரசியலை மறைப்பதற்காக பல தகிடுதத்தங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை. ஆனால், இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்.


********


பிற்குறிப்பு:
"ஈழத் தமிழர்கள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" (?) என்று, இஸ்ரேல் கொடுத்த ஆயுதங்களை பாவித்து நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஓய்ந்த பின்னர், நிராஜ் டேவிட் என்ற ஊடகவியலாளர் கூறி வந்தார். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர், லங்காஸ்ரீ (தமிழ்வின்) என்ற தமிழர்கள் மத்தியில் பிரபலமான இணையத்தளத்தில், இஸ்ரேலை புகழ்ந்து தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.
ஈழத் தமிழர்கள் இஸ்ரேலுக்கு விசுவாசமானவர்களாக இருந்தால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது வாதம். GTV எனும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சியில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். GTV, லங்காஸ்ரீ என்பன மிகத் தீவிரமான தமிழ்தேசிய ஊடகங்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். நிராஜ் டேவிட் கூட தன்னை தீவிரமான தமிழ் தேசியவாதியாக காட்டிக் கொள்ளும் ஒருவர் தான்.
லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் IBC வானொலியும், மிகத் தீவிரமான தமிழ் தேசிய ஊடகம் தான். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, "இஸ்ரேலில் சந்திப்போம்" என்று விடை பெறுவார்களாம். அதே மாதிரி, தமிழர்கள் எல்லோரும் "தமிழீழத்தில் சந்திப்போம்" என்று கூறிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தது.
ஸ்ரீதரன், இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். கட்சிக்குள்ளேயே மிகவும் தீவிரமான தமிழ் தேசியவாதி என்று, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயரெடுத்தவர். அவர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது: "உலகிலேயே மூன்று புத்திசாலித்தனமான இனங்களின் பெயர்கள் J என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறது. அவை முறையே Jews, Japanese, Jaffna Tamils!" என்று கூறினார்.
மே 17 இயக்கம், அனைத்து தமிழ் தேசியவாதிகள் சார்பாக, தமிழ்நாட்டில் பாலஸ்தீன ஆதரவுக் கூட்டம் போடுகின்றதாம். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மே 17 இயக்கத்தினர் "அசல் தமிழ் தேசியவாதிகள்" என்றால், மேலே குறிப்பிடப் பட்டவர்கள் "போலித் தமிழ் தேசியவாதிகளா?" இவர்களில் யார் உண்மையான தமிழ் தேசியவாதி? இந்தக் குழப்பத்திற்கு காரணம், உலகில் "பொதுவான தமிழ் தேசியம்" என்ற ஒன்று கிடையாது. ஏற்கனவே, தமிழ் தேசியவாதிகள் மத்தியிலும் வலதுசாரி, இடதுசாரி பிரிவினை காலம் காலமாக இருந்து வந்துள்ளது.
பெரும்பான்மை ஆதரவாளர்களைக் கொண்ட, வலதுசாரித் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலும் ஒரே மாதிரியான கொள்கை கிடையாது. ஈழத்து தமிழ் தேசியத்திற்கும், தமிழகத் தமிழ் தேசியத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள், கொள்கை முரண்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில் எதிரொலிக்கிறது. வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர் இஸ்ரேலை ஆதரிக்கையில், இன்னொரு பிரிவினர் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர். எது எப்படியோ, இஸ்ரேலுக்கு தலையையும், பாலஸ்தீனர்களுக்கு வாலையும் காட்டுவதற்கு விசேட திறமை வேண்டும்.

Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden

Tuesday, July 22, 2014

சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு காரணமான முதலாளித்துவ சீர்திருத்தங்கள்


கிழக்கு ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன்முதலாக போலந்து தான் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறியது. அப்போது பெர்லின் மதிலும், சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி அடையவில்லை. 

2 ம் உலகப் போரின் முடிவில், போலந்து சோஷலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டாலும், சோஷலிச பொருளாதாரம் முழுமையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. தேவாலயங்கள் மூடப் படவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

போலந்தில், எழுபதுகளிலேயே மேற்கத்திய மூலதனம் நுளைவதற்கு அனுமதிக்கப் பட்டது. உலகவங்கி, IMF கடனுதவியை பெற்றுக் கொண்டது. மேற்கத்திய முதலாளிகளின் ஆலோசனைப் படி பொருளாதார சீர்திருத்தங்களை புகுத்தியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்தது. இறுதியில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, போலி சோஷலிச அரசாங்கம் கவிழ்ந்தது. 

முன்னாள் "சோஷலிச" நாடான போலந்திற்குள் நடந்த முதலாளித்துவ மீட்சி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள், அதனை "கம்யூனிசத்தின் தோல்வியாக" நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போலந்து வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

முதலாம் உலகப் போருக்கு முன்னர், சுமார் நூறாண்டுகள் போலந்து இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் பிரிக்கப் பட்டிருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போலந்து ஒரு மேற்கத்திய சார்பு நாடாகத் தெரியும். இன்று எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் போலந்து மக்கள் தான் அதிகளவு அமெரிக்கா சார்பானவர்களாக இருக்கின்றனர். 

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் மேற்கு நோக்கிய புலம்பெயர்வு ஒரு முக்கிய காரணம். எமது நாடுகளிலும், மேலைத்தேய பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற எண்ணம், பலரை மேற்குலக ஆதரவளர்களாக மாற்றி வைத்திருக்கிறது. போலந்திலும் அது தான் நிலைமை.

19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பிய கண்டத்தில் தேசிய அரசுகள் தோன்றின. நெப்போலியனின் போருக்கு பின்னர், பல தடவைகள் பலமான ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய எல்லைகளை வகுத்துள்ளன. அப்படியான தருணங்களில், போலந்து தனி நாடாகும் வாய்ப்புக் கிட்டும் என்று போலிஷ் தேசியவாதிகள் எதிர்பார்த்தார்கள். இறுதியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியது. 

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போலந்து பகுதி தான் முதலில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வென்றதும், லெனின் போலந்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்கினார். ஆயினும், போல்ஷெவிக் புரட்சியாளர்கள், வெள்ளை ரஷ்யர்கள், உக்ரைனியர்கள் வாழ்ந்த பகுதிகளை சோவியத் ஒன்றியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள்.

போலந்துக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த முதல் நாளில் இருந்து, அங்கே இராணுவ சர்வாதிகாரிகள் தான் ஆட்சி செய்தனர். இன்று மூன்றமுலக நாடுகளில் நடப்பதைப் போல, சதிப்புரட்சிகள் நடப்பதும், புதிய இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதுமாக சில வருடங்கள் உருண்டோடின. முதலாம் உலகப் பொறுக்கும், இரண்டாம் உலகப் பொறுக்கும் இடைப்பட்ட இருபது வருட காலம் மட்டுமே, பல கட்சி ஜனநாயகம் நிலவியது. 

அப்போது ஒரு போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியும் இயங்கியது. ஆனால், நாஸி ஆக்கிரமிப்புடன் அது காணாமல் போய் விட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், செம்படைகள் விடுதலை செய்த போலந்தில் உருவான சோஷலிச அரசின் அடித்தளம் மொஸ்கோவில் இடப் பட்டது. அதாவது, மொஸ்கோவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த போலிஷ் கம்யூனிஸ்ட் அகதிகள் மத்தியில் இருந்து புதிதாக உருவாக்கப் பட்டிருந்தது.

ஆரம்பத்தில், கொமுல்கா தலைமையிலான பிரிவினர், “தேசிய கம்யூனிசம்” என்ற புதிய கொள்கையின் கீழ் ஆண்டனர். அதாவது, சோவியத் ஒன்றியம் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டாமல், சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை கொண்டிருந்தது. அப்போதும் சோவியத் படைகள் போலந்தில் இருந்தன. வார்சோ ஒப்பந்த கூட்டமைப்பு உருவாகி இருந்தது. ஆயினும், சோவியத் ஒன்றியம் போலந்தின் உள் விவகாரங்களில் பெரிதாக தலையிடவில்லை. இருப்பினும், ஸ்டாலினின் கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு பிரிவினர், கொமுல்காவை வீட்டுக் காவலில் வைத்து விட்டு சில வருட காலம் ஆண்டனர்.

போலந்து, வெளியில் இருப்பவர்கள் நினைத்தது மாதிரி, ஒரு முழுமையான சோஷலிச நாடாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்தது மாதிரி, கூட்டுத்துவ பண்ணை முறை (Collectivization) எங்கேயும் நடைமுறைப் படுத்தப் படவில்லை. விவசாயம் முழுக்க முழுக்க தனியாரின் கைகளில் இருந்தது. அதாவது, விவசாய நிலங்கள், பண்ணைகள் யாவும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த சிறு விவசாயிகளின் சொந்த சொத்துக்களாக தொடர்ந்தும் இருந்து வந்தன.

சோஷலிச போலந்தில், பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மட்டுமே தேசிய மயப் படுத்தப் பட்டன. ஆரம்பத்தில் அது ஜெர்மனியருக்கு எதிரான நடவடிக்கை என்று நியாயப் படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துக்கு தாரை வார்க்கப் பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே. அங்கு வாழ்ந்த ஜெர்மனியர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் யாவும் ஜெர்மன் முதலாளிகள் வசம் இருந்த படியால், அவை அனைத்தையும் போலந்து அரசு எடுத்துக் கொண்டது. இருப்பினும், பிற்காலத்தில் படிப் படியாக, போலந்து முழுவதும் இருந்த தொழில் நிறுவனங்கள் அத்தனையும் அரசுடமை ஆக்கப் பட்டன.

கத்தோலிக்க மத நிறுவனம், எப்போதும் அரசுக்குப் போட்டியாகவே இருந்து வந்தது. இயல்பாகவே வலதுசாரி அரசியல் சார்பான கத்தோலிக்க குருமாரை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. போலந்து சோஷலிச நாடாக இருந்த நாற்பது வருட காலங்களில் ஒரு தடவையாவது ஒரு தேவாலயம் கூட மூடப் படவில்லை. ஆயினும், அரசு இடைக்கிடையே நாஸ்திக பிரச்சாரம் செய்பவர்களை தூண்டி விட்டது. “முற்போக்கு கத்தோலிக்கர்கள்” என்றொரு சமூகப் பிரிவை உருவாக்கி விட்டது. அந்த முற்போக்காளர்கள் நவ நாகரிகத்தை பின்பற்றிய இளைஞர் கூட்டம் தான். (இன்று சர்வ சாதாரணமாக கருதப் படும் ஐரோப்பிய நாகரிகம், அன்றைக்கு பெரும் எதிர்ப்பின் மத்தியில் திணிக்கப் பட்டது.)

அறுபதுகளில், எழுபதுகளில் ஏற்பட்ட வசதி வாய்ப்புகள் காரணமாக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதன் பலனாகத் தான் மக்களையும், தேவாலயங்களையும் பிரிக்க முடிந்தது. அரசின் கொள்கைகளில் பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தமது மதகுருக்கள் சொல்வதைக் கேட்டார்கள். இன்று, சில முஸ்லிம் நாடுகளில், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களைக் கவரும் வகையில் பேசி வருவதைப் போன்று, அன்றைய கத்தோலிக்க மதத் தலைவர்கள் பேசி வந்தனர். உண்மையில், அன்றைய போலந்தில் இருந்த தேவாலயங்கள் எதிர்க் கருத்தாளர்களின் கூடாரங்களாக இருந்தன.

கத்தோலிக்க பாதிரிமார், மதப் பிரசங்கங்களை விட, அரசியல் பிரச்சாரம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். போலந்தின் தலைமை பிஷப், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போன்று நடந்து கொண்டார். அரசால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. போதாததற்கு, வத்திக்கானில் ஒரு போலந்துக்காரர் புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். ஜான் பால் என்ற அந்த போலிஷ் போப்பாண்டவர், இரண்டு தடவைகள் போலந்துக்கு விஜயம் செய்தார். இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில், இரட்டை அர்த்தம் வரும் வசனங்களை பேசி, சாடைமாடையாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அரசியல் பேசினார்.

கத்தோலிக்க திருச் சபையின் செல்வாக்கு, சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் மட்டுமே. குறிப்பாக அறிவுஜீவிகள் தேவாலயங்களை புகலிடமாகப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், இன்னொரு சக்தியும், அரசுக்கு எதிராக செயற்பட்டு வந்தது. துறைமுக நகரமான கிடான்ஸ்கில் தோன்றிய “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தான் அது. தொழிலாளர்களின் சொர்க்கமாக கருதப் படும் ஒரு சோஷலிச நாட்டில், தொழிற்சங்கம் அரசைக் கவிழ்த்தது என்பது முரண்நகையாக தெரியலாம். ஆனால், அப்படி ஒரு கிளர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் நினைவு படுத்துவதில்லை.

குறிப்பாக ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், பல முன்னாள் சோஷலிச நாடுகளில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. போலந்தில் அறுபதுகள், எழுபதுகளிலேயே முதலாளித்துவம் அனுமதிக்கப் பட்டிருந்தது! ஆமாம், முதலாளிகளின் அதிகாரம் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச அரசு, போலந்தில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சுதந்திரம் வழங்கியது. அதற்கு முதல், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிறைய கடன் பெற்றுக் கொண்டது. 

அவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்று, மேலைத்தேய முதலாளிகள் போலந்தில் முதலிட அனுமதி வழங்கியது. அது மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வழங்கிய மானியங்களை இரத்து செய்தது. அதனால், உணவுப் பொருட்களின் விலைகள் திடீரென நான்கு மடங்காக உயர்ந்தன. விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை. அதன் விளைவு? தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவ்வாறு தான் “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தோன்றியது.

போலந்து அரசால் “சொலிடாரிநொஸ்க்” கின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனெனில், முதலாளித்துவ சீர்திருத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் எதிர் விளைவு தான் தொழிற்சங்கப் போராட்டம். முன்னாள் இராணுவ ஜெனரலான ஜெருசெல்ஸ்கி திடீரென ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்.நகரத் தெருக்களில் இராணுவ கவச வாகனங்கள் ஓடின. எங்கு பார்த்தாலும் இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. அரச எதிர்ப்பாளர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

பிற்காலத்தில், அந்த சதிப்புரட்சியை ஜெருசெல்ஸ்கி பின்வருமாறு நியாயப் படுத்தினார். “அன்று ஒரு சதிப்புரட்சி நடந்திரா விட்டால், சோவியத் ஒன்றியம் படையெடுத்து வந்திருக்கும். அப்போது அதன் எதிர்விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும்….” ஆனால், சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் கிடைத்த அறிக்கைகளின் படி, அப்படி ஒரு “சோவியத் படையெடுப்பு” நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. அன்றைய போலிஷ் ஆளும் வர்க்கம், தனது அதிகாரத்தை தக்க வைக்க செய்த திட்டமாகவே அந்த சதிப்புரட்சி கருதப் படுகின்றது.

ஏனெனில், போலிஷ் அரசுக்கு எதிர்ப்பு பல இடங்களிலும் உருவாகி இருந்தது. கத்தோலிக்க சபை, அறிவுஜீவிகள், தொழிற்சங்கம் போன்ற வலதுசாரி சக்திகள் மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவு எதிர் அரசியல் செய்து கொண்டிருந்தது. அவர்கள் “நவ - ஸ்டாலினிஸ்டுகள்” என்று அழைக்கப் பட்டனர். அதாவது, முன்பிருந்த ஸ்டாலினின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான சோஷலிசம் என்று நம்பியவர்கள். அவர்களை ஓரம் கட்ட வேண்டிய தேவையும், ஜெருசெல்ஸ்கி போன்ற சதிப்புரட்சியாளர்களுக்கு இருந்தது.

இறுதியில், சோவியத் ஒன்றியத்தில் கோர்பசேவ் அதிகாரத்தை கைப்பற்றியதும், போலந்து திரிபுவாதிகள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேல் போலந்து வெளிப்படையாகவே முதலாளித்துவ - ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். முன்னாள் சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், போலந்தில் தான் முதன் முதலாக பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 

1989 ம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னராகவே, போலந்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. முன்பு சோஷலிச அரசாங்கத்தை நடத்திய திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுத் தேர்தலில் சமூக - ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் போட்டியிட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியான, இந்நாள் சமூக - ஜனநாயகக் கட்சி, இன்றைக்கும் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சில தடவைகள் தேர்தலில் வென்று ஆட்சியையும் பிடித்துள்ளது. ஆனால், உண்மையில் அதனை மேற்கு ஐரோப்பிய கட்சிகளுடன் தான் ஒப்பிட முடியும். உதாரணத்திற்கு, பிரிட்டனின் லேபர் கட்சி போன்றது.

இருப்பினும், முன்னாள் “கம்யூனிச ஆட்சியாளர்களுக்கும்”, முன்னாள் “எதிர்ப் புரட்சியாளர்களுக்கும்” இடையிலான பிளவு, அடுத்து வந்த இருபது வருடங்களுக்கும் தொடர்ந்து இருந்தது. அது இரண்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மை போலிஷ் மக்கள், தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவலைப் படுகிறார்கள்.

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, July 18, 2014

போலந்து சுய நிர்ணய உரிமையும், சோஷலிசப் புரட்சியும்


போலந்தின் வரலாறு, கி.பி. 10 நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்ட மன்னர்களுடன் தொடங்குகின்றது. அதற்கு முன்னர், ஆதி கால போலிஷ் நாகரிகம் தோன்றிய விட்சுலா நதிக் கரையில் ஸ்லாவிய இன மக்கள் வாழ்ந்தனர். ஸ்லாவியர்கள் ஓரிடத்தில் இருந்து பல்வேறு கிளைகளாக பிரிந்திருக்க வாய்ப்புண்டு. தெற்கு ஸ்லாவிய மொழிகளை பேசும் மக்கள் பிற்காலத்தில் யூகோஸ்லாவியர்கள் என்று அழைக்கப் பட்டனர். அதே மாதிரி கிழக்கே சென்றவர்கள் உக்ரைனியர்களாக அல்லது ரஷ்யர்களாக மாறியிருக்கலாம்.

ரோமர்களினால் ருதேனியர்கள் என்று அழைக்கப் பட்ட மக்கள், கீவ் ரஷ்யர்கள் என்று தெரிய வருகின்றது. இருப்பினும் போலந்து ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ருதேனியர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் தான், உக்ரைனியர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக இருந்த மக்கள், இன்று வெவ்வேறு மொழிக் குழுக்களாக பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பகைவர்களாக கருதுவதை கண் முன்னால் பார்க்கிறோம்.

பல நூறு வருடங்களாக, போலந்தும், லிதுவேனியாவும் இணைந்த ராஜ்ஜியம், வடக்கே பால்ட்டிக் கடலில் இருந்து, தெற்கே கருங்கடல் வரையிலான ஒரு பெரிய நிலப் பரப்பை ஆண்டு வந்தது. அந்த ராஜ்ஜியத்தில் பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்தனர். போலிஷ் அரச வம்சமும், லிதுவேனியா அரச வம்சமும் ஒன்றுகொன்று திருமண உறவுகளை வைத்துக் கொண்டு, உறவினர்களாக இருந்தார்கள். ஆயினும், இரண்டு அரச வம்சங்களும், தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை தனித் தனியாக நிர்வகித்து வந்தன.

ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் தாக்கங்கள் இன்று வரை உணரப் படுகின்றன. நீண்ட காலமாக, வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கவில்லை. அவர்கள் தமது புராதன மத நம்பிக்கைகளை பின்பற்றி வந்தனர். வத்திக்கானில் போப்பாண்டவரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப் பட்ட "தெய்த்தானிய படை" (Teutonic Order) ஜெர்மன் மொழி பேசும் வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறப்புப் படையணி ஆகும். 

தெய்த்தானிய படை, வட ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக ஒரு சிலுவைப் போரை நடத்தியது. போலந்து அரச வம்சத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், தமது ராஜ்ஜியத்தை பாதுகாத்துக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் லித்துவேனிய அரச வம்சத்தினரும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டனர்.

தற்போது எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்ட போதிலும், அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்தன. தெய்த்தானிய படையினர், இன்றைய போலந்தின் வட பகுதியையும், இன்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியிலும் தமது ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். அந்தப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த, பிற்காலத்தில் அழிந்து போன பிரோய்ஷிய இனத்தின் பெயரை, தெய்த்தானிய படையினர் தமது புதிய தேசத்திற்கு சூட்டினார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஜெர்மன் மொழி பேசினார்கள். ஆனால், அன்று அவர்களது பெயர் பிரோய்ஷியர்கள்.

பிற்காலத்தில் பிரோய்ஷிய (Prussia) சாம்ராஜ்யம், இன்று ஜெர்மனி இருக்கும் இடம் வரை விஸ்தரித்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், போலந்தின் வட பகுதியும், மேற்குப் பகுதியும் ஜெர்மனியின் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களாக இருந்து வந்தன. வடக்கே உள்ள துறைமுகப் பட்டினமான கிடான்ஸ்க், மேற்கே உள்ள தொழிற்துறை நகரமான பொஸ்னான் ஆகியன ஜெர்மனியர்களால் உருவாக்கப் பட்டவை. அங்கெல்லாம் பெருமளவு ஜெர்மானியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, போலந்திற்கு தெற்கே ஆஸ்திரியாவில் இன்னொரு பலமான சாம்ராஜ்யம் தோன்றியது. போலந்தின் தெற்குப் புற நகரமான கிராகோவ், இன்று உக்ரைனின் பகுதியாக உள்ள லிவிவ் ஆகியன ஆஸ்திரிய ராஜ்ஜியத்திற்குள் அடங்கின. அந்தப் பிரதேசம் கலிசியா என்று அழைக்கப் பட்டது. அங்கேயும் ஜெர்மன் தான் நிர்வாக மொழியாக இருந்தது. ஆஸ்திரியர்களும் ஜெர்மன் மொழி பேசுவோர் தான். ஆனால், அந்தக் காலத்தில் மொழி ஒரு முக்கியமான விடயமாக யாராலும் கருதப் படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 30% என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கில் இருந்து இன்னொரு ஆபத்து வந்தது. மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கியினப் படைகள், இன்றைய ரஷ்யா முழுவதையும் தமது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தன. அதில் ஒரு சிற்றரசாக இருந்த மொஸ்கோ, பிற்காலத்தில் பலமான ராஜ்ஜியம் ஆகியது. மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை பயன்படுத்தி நாலாபுறமும் விஸ்தரித்தது. மேற்கே இருந்த பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய சாம்ராஜ்யம், போலந்தையும் சேர்த்துக் கொண்டது. இறுதியில், ஐரோப்பிய வரைபடத்தில் போலந்து என்ற நாடு காணாமல்போனது.

போலந்து, 19 ம் நூற்றாண்டு முழுவதும், மேற்கே ஜெர்மனியாலும், கிழக்கே ரஷ்யாவாலும், தெற்கே ஆஸ்திரியாவாலும் மூன்று துண்டுகளாக உடைக்கப் பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள், 21 ம் நூற்றாண்டு அரசியல் வரை எதிரொலிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் தோன்றிய தேசியவாதக் கருத்தியல், போலிஷ் அறிவுஜீவிகளை சென்றடைந்தது. கடந்த காலத்தில், போலந்து ஒரு மிகப் பெரிய ஐரோப்பிய சாம்ராஜ்யமாக இருந்த வரலாறு, போலிஷ் தேசியவாதமாக பரிணமித்தது. அப்போது பிரான்ஸ் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான போலிஷ் தேசிய இராணுவம், ஆரம்பத்தில் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுடன் சேர்ந்து போரிட்டு வந்தது.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பா முழுவதும் சோஷலிசக் கருத்துகளும் பரவின. அப்போது கம்யூனிஸ்டுகள் என்றொரு பிரிவு ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னோடிகள், அனார்க்கிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் எல்லோரும் சோஷலிஸ்டுகள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டார்கள். அன்று ரஷ்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வாழ்ந்த போலிஷ் காரர்கள் தான், முதன் முதலாக சோஷலிச கருத்துக்களை போலந்திற்கு கொண்டு வந்தார்கள்.

1881 ம் ஆண்டு, அன்றைய ரஷ்ய சார் மன்னன் அலெக்ஸ்சாண்டரை கொலை செய்வதற்காக குண்டு வீசப் பட்டது. அந்தக் குண்டை வீசியவர், Ignacy Hryniewcki என்ற ஒரு போலிஷ் சோஷலிஸ்ட். நரோட்னையா வோல்யா (Narodnaja Volja) என்ற தலைமறைவு இயக்கத்தின் உறுப்பினர். நரோட்னையா வோல்யா உறுப்பினர்கள் சிலர் வார்சொவிற்கு வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வாரின்ஸ்கி (Ludwik Warýnski). 

வார்சொவில் ரஷ்ய இரகசியப் பொலிசாரின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், வாரின்ஸ்கி ஜெனீவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு Równosc (சமத்துவம்) என்ற சோஷலிச சஞ்சிகையை நடத்தி வந்த லிமனொவ்ஸ்கியுடன் கூட்டுச் சேர்ந்து முதலாவது போலிஷ் சோஷலிச இயக்கத்தை கட்டினார். போலந்தின் முதலாவது சோஷலிச இயக்கம், ரஷ்ய, ஜெர்மன் அரசியல் பின்னணியை கொண்டிருந்தது. போலந்து மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்து வந்தது. ஆயினும் அது ஒரு சிறிய குழுவாகவே இயங்கி வந்தது.

ஆரம்ப கால போலிஷ் புரட்சியாளர்கள், ஒன்றில் ரஷ்யாவில், அல்லது ஜெர்மனியில் உள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தனர். அவர்கள் யாருக்கும் போலந்து சுதந்திரம் பற்றிய அக்கறை இருக்கவில்லை. போலந்து தனி நாடாவது அவர்களது அரசியல் அறிக்கைகளில் இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை தேசியவாதிகளின் அரசியலாக கருதி ஒதுக்கி வந்தனர். 

போலிஷ் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து, லிமனோவ்ஸ்கி தனியாகப் பிரிந்து சென்றார். அன்றிலிருந்து போலிஷ் இடதுசாரி இயக்கத்திற்குள் இரண்டு பிரிவுகள் தோன்றின. ஒரு பிரிவினர், முதலில் போலந்து தனிநாடாவது முக்கியம் என்றும், சோஷலிச புரட்சி அதற்கு அடுத்த படியானது என்றும் வாதிட்டனர். இன்னொரு பிரிவினர், முதலில் ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டும் என்றும், போலந்து தனி நாடாவது அதன் பக்க விளைவாக இருக்கலாம் என்றும் வாதிட்டனர். இவ்விரு கொள்கை முரண்பாடுகளும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

1883 ம் ஆண்டளவில், வாரின்ஸ்கி குழுவினர் முழுமையாக ஒடுக்கப் பட்டு விட்டனர். உறுப்பினர்கள் பலர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இருப்பினும் அவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கைகள், புத்திஜீவிகள் மட்டத்தில் கவனமாகப் படிக்கப் பட்டன. வார்சோ, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களில் கல்வி பயின்ற மாணவர்களைக் கவர்ந்தது. இரண்டாம் அகிலத்தின் ஆலோசனையின் பேரில், 1890 ம் ஆண்டு, வார்சோவிழும், கலீசிய பகுதிகளிலும் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்தன. மே தின ஊர்வலங்களில் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதன் எதிரொலியாக, லொட்ஸ் (Łódź) எனும் தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நகரத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. அரசு அதிகாரிகளினால் அந்தப் போராட்டம் கொடூரமாக அடக்கப் பட்டது.

இதற்கிடையில், புலம்பெயர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இடதுசாரி போலிஷ் ஆர்வலர்கள், பாரிஸ் நகரில் ஒன்று கூடினார்கள். போலந்துக்கென ஒரு சோஷலிசக் கட்சி உருவாக்க வேண்டுமென பாரிஸ் மகாநாட்டில் முடிவெடுக்கப் பட்டது. அதிலிருந்து PPS எனும் போலந்து சோஷலிசக் கட்சி தோன்றியது. ஆயினும் சில மாதங்களில் கட்சிக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. SDKP எனும் போலந்து ராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகக் கட்சி, போலந்து விடுதலையை தள்ளிப் போட வேண்டும் என வாதிட்டது. 

போலந்து தனி நாடானால், அது தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கும் என்றும், அதற்குப் பின்னர் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்றும் வாதிட்டனர். அது மட்டுமல்ல, அயலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டால், தேச எல்லைகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கூறி வந்தனர். அந்தக் கட்சியின் தத்துவ ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற ரோசா லக்சம்பேர்க் ஆவார். ஒரு போலிஷ் யூத வணிகர் குடும்பத்தில் பிறந்த ரோசா லக்சம்பேர்க், தனது கடைசிக் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து ஒரு சில மாதங்களில் வலதுசாரி இராணுவ வீரர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

போலந்தில் SDKP இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்தக் கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதனால், SDKP ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்னர் அழிந்து போனது. 1900 ம் ஆண்டு, எஞ்சிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, SDKPiL எனும் புதிய கட்சியை ஸ்தாபித்தனர். போலந்து, லித்துவேனியாவுக்கான சமூக ஜனநாயகக் கட்சி என்பது அதன் பெயர். அதன் உறுப்பினராக இருந்த லித்துவேனிய சோஷலிஸ்ட் Feliks Dzierżyński பிற்காலத்தில் சோவியத் யூனியனில் உருவான Tsjeka எனும் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

SDKPiL லெனின் அங்கம் வகித்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் கூட்டங்களிலும் பங்குபற்றியது. போல்ஷெவிக்,மென்செவிக் பிரிவினையின் போது கூட இருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியின் பின்னர், போலந்தில் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, SDKPiL போலந்தில் மட்டும் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது. அதற்கு முன்னரே, ஆஸ்திரியாவின் ஒரு பகுதியாக இருந்த தெற்குப் போலந்தினை சோஷலிஸ்டுகள் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு ஏற்கனவே ஓரளவு அரசியல் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது.

குறிப்பிடத் தக்க சிறுபான்மை இனமான யூதர்கள், போலந்து வரலாற்றின் தவிர்க்கவியலாத ஓர் அங்கமாக இருந்தனர். ரஷ்யாவில் சார் மன்னராட்சிக் காலத்தில் நடந்த யூத எதிர்ப்புக் கலவரங்கள் காரணமாக, ஏராளமான ரஷ்ய யூதர்கள் போலந்தில் குடியேறி இருந்தனர். ஒரு காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஐரோப்பிய நாடாக போலந்து இருந்தது.

போலந்தில் யூதர்கள் பெருந்தொகையில் வாழ்ந்தாலும், சியோனிசம் எனும் தேசியவாதம் அவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குப் பதிலாக "Bund" எனும் யூத சோஷலிசக் கட்சி உருவாகி இருந்தது. இஸ்ரேலில் (பலஸ்தீனத்தில்) குடியேறுவதை விட, ரஷ்ய-போலிஷ் யூதர்களை ஒரு சோஷலிச புரட்சிக்கு தயார் படுத்துவதே அதன் கொள்கையாக இருந்தது.

(போலந்து சோஷலிச இயக்கத்தின் தோற்றமும் மறைவும் பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதி.)

Wednesday, July 16, 2014

தமிழினப் படுகொலைக்கு கவலை தெரிவித்து ஓர் இஸ்ரேலியன் கூட அழவில்லை

பதினெட்டு வருடங்களுக்கு முன்னர், நான் நெதர்லாந்து வந்த புதிதில், ஆம்ஸ்டர்டாம் நகரின் மத்தியில் உள்ள தங்கு விடுதி (Hotel) ஒன்றில் சில மாதங்கள் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த ஹோட்டலின் உரிமையாளர் ஓர் இஸ்ரேலிய யூதர். பணியாட்களில் பல தமிழர்களும் இருந்தனர். இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தான், பெரும்பாலும் அந்த ஹோட்டலில் தங்குவார்கள். ஓய்வு நேரங்களில் அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளும் சாதாரணமான அப்பாவி மக்கள் தான். தங்களுடைய நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் மாதிரி, உலகில் வேறெந்த நாட்டிலாவது நடக்கிறதா என்று கேட்குமளவிற்கு அப்பாவிகள். அவர்களுக்கு பாலஸ்தீனர்களின் பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பலர் பாலஸ்தீனர்களை தமது வாழ்நாளில் கண்டிருக்கவில்லை. இஸ்ரேலிய அரசு வழங்கும் ஒரு பக்கச் சார்பான தகவல்களை உண்மை என்று நம்புகிறவர்கள். தங்களது பக்க இழப்புகளை பற்றி மட்டுமே மிகைப் படுத்தி பேசத் தெரிந்தவர்கள்.

இஸ்ரேலியர்கள் எங்களைப் பற்றியும் விசாரிப்பார்கள். எங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஹிந்தி (மட்டும்) பேசுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இஸ்ரேலில் சில நேரம் ஹிந்தி திரைப் படங்கள் திரையிடுவார்களாம்.) ஆனால், உலகில் தமிழ் என்ற மொழி இருப்பதே அவர்களுக்கு தெரியாது. ஸ்ரீலங்கா என்றால், அது எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. உலகில் அப்படி ஒரு நாடு இருப்பதையே அப்போது தான் கேள்விப் பட்டிருப்பார்கள். உலக வரை படத்தில் இலங்கையை தொட்டுக் காட்டினால்; "ஒ அதுவா! இவ்வளவு காலமும் அது இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...." என்று சொல்வார்கள்.

அந்தளவு விடய ஞானம் கொண்ட அப்பாவி இஸ்ரேலிய யூதர்களிடம்: 
"முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? 
- "எங்களுக்காக குரல் கொடுத்தீர்களா?" 
- "தமிழினப் படுகொலையை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் செய்தீர்களா?" 
-  "ஐ.நா. வில் கதைத்தீர்களா?" 
இது போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தால், எம்மைப் போன்ற முட்டாள்கள் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் பல தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர், குறிப்பாக வலதுசாரி குறுந் தேசியவாதிகள், அவ்வாறு தான் மடத் தனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள் என்பதும் ஆச்சரியத்திற்குரியது.

"ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட நேரத்தில், பாலஸ்தீனர்கள் எதுவும் செய்யவில்லை" என்று கூச்சலிடுபவர்கள், எத்தனை வருட காலம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கு எத்தனை பாலஸ்தீனர்களை தெரியும்? பாலஸ்தீனர்கள் அப்படிச் செய்யவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு கதைக்கிறார்கள்?

பாலஸ்தீனர்களை குறை கூறும் பெரும்பாலானோரின் மனதில் மறைந்திருப்பது, இந்து அல்லது கிறிஸ்தவ மதவெறியும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்மமும் தான். பாலஸ்தீனம், மட்டுமல்ல காஷ்மீரில் கொல்லப் படும் மக்களும் அவர்கள் கண்களுக்கு முஸ்லிம்களாக மட்டும் தான் தெரிகின்றனர். "முள்ளிவாய்க்காலுக்கு பிறகு தான் நாங்கள் இப்படி மாறினோம்" என்று சொல்வது ஒரு மிகப் பெரிய பொய். அது வெறும் நொண்டிச் சாட்டு மட்டுமே. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும், அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னரும், பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப் படும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை பற்றிய தகவல்களுக்கு, தொலைக்காட்சி செய்திகளில் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் பலர், அப்போதும் பாலஸ்தீனர்களுக்காக கவலைப் படவில்லை.

ஒவ்வொரு தடவையும் இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் காரணமாக பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டால், அதன் எதிரொலியாக ஐரோப்பிய நகரங்களில் இடதுசாரி அமைப்புகள் ஒழுங்கு படுத்தும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வருமாறு, எத்தனையோ தடவைகள், எனக்குத் தெரிந்த (ஈழத்) தமிழ் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். இடதுசாரி சார்புள்ள ஒன்றிரண்டு தமிழர்கள் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்லி வர மறுப்பார்கள். சிலர் தங்களுக்கு பிற நாட்டு பிரச்சினைகளில் ஆர்வம் இல்லை என்று நேரடியாகவே கூறுவார்கள்.

தமிழர்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்ல முடியாது. அனேகமாக, வேற்றின மக்களும் அப்படித் தான். பாலஸ்தீனம் அல்லது ஈராக் போர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் பெருமளவு அரபு- முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள். ஆனால், நேட்டோ படைகள் செர்பியா மீது குண்டு போட்டதற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. செர்பியா மீதான குண்டுவீச்சுக்கு எதிராக பெருமளவில் வந்த செர்பியர்கள், பாலஸ்தீன ஆர்ப்பாட்டத்திற்கு வர மாட்டார்கள்.

அதே மாதிரித் தான், குர்திஷ் பிரச்சினைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் குர்திஷ் மக்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இலங்கையில் நடந்த போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் மட்டுமே வந்திருப்பார்கள். இவ்வாறு தான், எல்லா தேசிய இனங்களும், தத்தமது தேசிய கிணறுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பல நாடுகளை சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே, எல்லா ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். ஈராக், ஈழம், குர்திஸ்தான், பாலஸ்தீனம் என்று எங்கெல்லாம் ஒடுக்கப் படும் மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடக்கின்றதோ, அங்கெல்லாம் இடதுசாரி ஆர்வலர்களை நீங்கள் காணலாம். ஐரோப்பிய இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க இடதுசாரிகளும் பாரபட்சமின்றி எல்லா ஊர்வலங்களிலும் கலந்து கொள்வார்கள். 

தமிழர்களான நாங்கள், உலகில் எந்த இனம் படுகொலை செய்யப் பட்டாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். ஆனால், உலகம் முழுவதும் எங்களுக்காக அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையான அரசியல் தார்மீகம் என்பது தெரியவில்லை. தமிழர்கள் இது வரை காலமும் அமெரிக்காவை நம்பி ஏமாந்தார்கள். இனிமேலாவது சர்வதேச மட்டத்தில் தமது நட்புச் சக்திகள் யார் என்பதைக் கண்டுணர வேண்டும்.

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Sunday, July 13, 2014

முதலாளித்துவத்தை மாற்றுவதற்கு மக்களுக்கு பொருளியல் அறிவு அவசியம்

"பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. முதலாளித்துவத்தில் உள்ள குறைகளை களைய வேண்டுமானால், முதலில் மக்கள் அனைவருக்கும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்கச் செய்வது அவசியம். பொதுவாக எல்லா விஷயங்களிலும் பலருக்கு ஆர்வமும், தெரிவிப்பதற்கு ஏதாவதொரு கருத்தும் இருக்கும். ஆனால், பொருளாதாரம் சம்பந்தமாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. புரிந்து கொள்ள கஷ்டமானது என்று சாமானியர்கள் நினைக்கிறார்கள். அது அப்படி ஒன்றும் கடினமான சமாச்சாரம் அல்ல. உண்மையில் பொருளியல் அறிஞர்கள் தான் வேண்டுமென்றே அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."

பிரிட்டனில் வாழும் தென் கொரிய பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் (Ha-Joon Chang) இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரத்தை அனைவருக்கும் எளிதாக புரிய வைக்கும் நோக்கில் Economics: The User's Guide என்ற நூலை எழுதி இருக்கிறார். 

நெதர்லாந்து பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில், ஹ ஜூன் சங் தெரிவித்த கருத்துக்கள் சில:

  • பொருளாதாரம் என்றால் நாங்கள் எதைப் புரிந்து கொள்கிறோம்?


முக்கியமான விடயம் என்னவெனில், பொருளியலில் ஒரு கேள்விக்கு ஒரு பதில் தான் இருக்கின்றது என்பதில்லை. அது ஒரு விஞ்ஞானம் அல்ல. பொருளியல் நிபுணர்கள் கூறும் "உண்மைகளை" சந்தேகித்து கேள்வி எழுப்பலாம். வேறொரு கொள்கை வகுக்க வேண்டுமென கேட்கலாம். 

பொருளாதாரம் என்பது ஒரு விஞ்ஞானம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஒவ்வொரு பொருளியல் உண்மைக்கும் பின்னால் ஒரு அரசியல் மறைந்திருக்கிறது. அனேகமாக, அந்த "உண்மைகள்" அவற்றை அறிவிப்பவரின் நலன்களில் தங்கி உள்ளது.

பொருளியல் அறிஞர்கள், நாங்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, சமத்துவமின்மை ஒரு தவிர்க்கவியலாத தோற்றப்பாடு அல்ல. இயற்கையாக நடக்கும் மோசமான காலநிலை போன்றதல்ல அது. சமத்துவமின்மையை நாங்கள் எதிர்த்து போராடலாம்.

  • இன்றைய முதலாளித்துவ அமைப்பில் என்ன குறைபாடு?


எல்லாமே தவறாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ஐம்பதுகளுக்கும் எழுபதுகளுக்கும் இடைப் பட்ட காலத்தில், முதலாளித்துவம் எங்களுக்கு நிறைய வழங்கல்களை செய்துள்ளது. உலகப் பொருளாதாரம் ஒவ்வோர் ஆண்டும் 2 அல்லது 3 சதவீதத்தால் வளர்ந்து கொண்டிருந்தது. வங்கி நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. அன்றைக்கும் சமத்துவமின்மை இருந்தது. ஆனால், இன்றுள்ள அளவிற்கு பெரியதொரு இடைவெளி காணப் படவில்லை.

இன்றைய பொருளாதாரம் மிகவும் அரிதாகத் தான் வளர்கின்றது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது வரையில் எத்தனை பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதை எண்ணுவதையே விட்டு விட்டோம். எப்படி அது நடந்தது?

ஏனென்றால், நாங்கள் நிதித் துறை மீதான கட்டுப்பாடுகளை, அளவுக்கு அதிகமாகவே தளர்த்தி விட்டோம். சந்தை மிகவும் பலமானதாக மாறி விட்டது. முதலாளித்துவம் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் தான் பலனளிக்கும். ஐம்பதுகள், எழுபதுகளில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்ததற்கு காரணம், அன்று நிறைய கண்டிப்பான விதிகள் இருந்தன.

  • எப்படிப் பட்ட பொருளாதார மாதிரி நமக்கு வேண்டும்?


உற்பத்தியை பெருக்குவதற்காக நிறைய முதலிடப் பட வேண்டும். இன்றுள்ள நிறுவனங்கள் ஆராய்ச்சிகளிலும், தொழிற்கல்வி அளிப்பதிலும் மிகவும் அரிதாகவே முதலிடுகின்றன. ஏனென்றால், விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பும் பங்குதாரர்கள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். நிறுவனங்கள், வளர்ச்சியில் முதலிடுவதை விட, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதன் மூலம் அவர்களுக்கு உடனடியாகவே பணம் கிடைக்கும். 

பங்குகளின் மீது ஒரு விசேட வரி அறவிடுவதன் மூலம் அதைத் தடுக்கலாம். பங்குதாரர்கள் ஒரு குறிப்பிட்ட காலம், தமது பங்குகளின் இலாபத்தை எடுக்காமல் வைத்திருந்தால், குறைவான வரி செலுத்த முடியும் என சலுகை கொடுக்கலாம். அடுத்த படியாக, நிதித் துறை கண்டிப்பான சட்டங்களின் கீழ் கொண்டு வரப் பட வேண்டும். சமத்துவமின்மை பிரச்சினை குறைக்கப் பட வேண்டும். அரசாங்கம் இதில் முக்கிய பாத்திரம் ஆற்ற முடியும். அது தான் ஆட்ட விதிகளை தீர்மானிக்க வேண்டும். வழி காட்ட வேண்டும்.

  • இது எதுவும் நடக்காது விட்டால்?


மீண்டும் ஒரு பொருளாதார அல்லது நிதி நெருக்கடி ஏற்படும். இப்போதே பல நீர்க் குமிழிகள் தோன்றுகின்றன. புதிய நெருக்கடியை தீர்ப்பதற்கு எம்மிடம் பணம் இருக்காது. அப்போது அது மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வரும்.
மூலப் பிரதி

(நன்றி: NRC Weekend, 12 &13 juli 2014)


பொருளியல் அறிஞர் ஹ ஜூன் சங் பற்றிய முன்னைய பதிவு: முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்

Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: