[விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்]
(பாகம் - 2)
யுத்த பிரபுக்களுக்கு இடையில் அகப்பட்டு, சின்னாபின்னமாகி சீரழிந்த ஆப்கானிஸ்தானை விடுதலை செய்வதே, தாலிபானின் குறிக்கோளாக இருந்தது. யுத்த பிரபுக்கள் தமது சுய இலாபத்திற்காக, அதிகார வெறிக்காக, ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருந்தனர். அவர்களின் போருக்குள் அகப்பட்ட அப்பாவி மக்கள், சொல்லொனா துயரத்தை அனுபவித்து மரணித்துக் கொண்டிருந்தனர். இதனால், கட்டுக்கோப்பான இயக்கமென பெயரெடுத்த, கொள்கைப் பிடிப்புள்ள தாலிபான்களை, ஆப்கான் பொது மக்கள் வரவேற்றதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
விஸ்வரூபம் திரைப்படத்தில், நேட்டோ தாக்குதலால் சேதமடைந்த ஊர் ஒன்றை, தாலிபான் குழுவினர் பார்வையிடுகின்றனர். அப்போது அங்கே அவர்களை எதிர்கொள்ளும் மூதாட்டி ஒருவர், "முதல்ல இங்லீஷ்காரங்க வந்தாங்க, ரஷ்யாக்காரங்க வந்தாங்க, தாலிபான், அமெரிக்கன், நீங்க..." என்று திட்டி விட்டு செல்வார். இந்தக் காட்சியில், தந்திரமாக கமல் திணிக்கும், நுணுக்கமான, அயோக்கிய அரசியலை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. ஆங்கிலேயர்கள், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர், ஆப்கான் மக்களால் வெறுக்கப்பட்ட அந்நிய படையெடுப்பாளர்கள். அவர்களுடன், ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போராடும் தாலிபானையும் ஒரே நேர் கோட்டில் வைத்துப் பேசுவதற்கு, கமல்ஹாசனுக்கு எந்தளவு மனோ தைரியம் வேண்டும்?
புலிகளின் De Facto தமிழீழத்தில் "தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருந்தது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல் எதுவும் நடக்கவில்லை. கலாச்சார சீரழிவுகள் இருக்கவில்லை. சாதிப் பாகுபாடு இருக்கவில்லை...." என்றெல்லாம் புலிகளின் பொற்காலம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களை சந்தித்திருப்பீர்கள். ஏன், இதை வாசிக்கும் நீங்கள் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். தாலிபான் ஆதரவாளர்களும், அதே மாதிரியான கதைகளை சொல்லி, ஆப்கானிஸ்தானில் கடந்த கால தாலிபான் ஆட்சியை நியாயப் படுத்தி பேசி வருகின்றனர். இன்றைக்கும், ஈழத்தில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் வாழும் தமிழர்கள் மத்தியில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. அதே போல, இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் வாழும் பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் தாலிபானுக்கு ஆதரவு உள்ளது.
தாலிபான் இயக்கம், ஆப்கான் மக்களுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக செய்துள்ளனர், என்றே வைத்துக் கொள்வோம். ஆயுத அதிகாரத்தினால் மக்களை அடக்கி வைத்திருந்தனர். தங்களை மட்டுமே ஆப்கானியர்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். மாற்றுக் கருத்தாளர்களை கொன்றார்கள். அது எல்லாம் உண்மை தான். அதே நேரம், தாலிபான் போராளிகள், பஷ்டூன் மொழி பேசும் மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். பெரும்பான்மை பஷ்டூன் மக்களால் விடுதலைப் போராளிகளாக கருதப் பட்டவர்கள்.
இதிலே நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். இருந்தாலும், தாலிபான் போராளிகள், அவர்களின் குடும்பங்கள், சனத்தொகையில் குறிப்பிட்டளவு விகிதாசாரம், தாலிபானை ஆதரித்திருப்பார்கள் அல்லவா? ஈழத்தில் விடுதலைப் புலிகளின் விடயத்திலும் அதுவே நிதர்சனமாக இருந்தது. ஈழத்திற்கு வெளியே, பிற இன மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழரில் ஒரு பிரிவினர் அவர்களை ஆதரித்தனர் என்ற உண்மையை நாங்கள் மறைக்கக் கூடாது. ஈழத் தமிழர்கள் புலிகளையும், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் என்று பேசுவதும் அபத்தமானது. அந்த அபத்தம் தான் விஸ்வரூபம் படத்தில் அரங்கேறியுள்ளது.
படத்தில் அதே காட்சியில், அமெரிக்க கைதிகளை தாலிபான் சிறைப்பிடித்து வைத்த இடத்தை தான், நேட்டோ படைகள் தாக்கியதாக காட்டியிருப்பார்கள். இது இன்னொரு அபாயகரமான அரசியல் பிரச்சாரம். முதலில் அமெரிக்க படையெடுப்பு நடைபெறும் வரையில், எந்தவொரு அமெரிக்கரையும் தாலிபான் சிறைப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப் பட்ட பின்னர் நடந்த கெரில்லா போரில் தான், அமெரிக்க போர்வீரர்கள் தாலிபானிடம் உயிரோடு பிடிபட்டனர். விஸ்வரூபம் படக்கதை, அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடங்கிய காலத்தில் நடக்கின்றது. ஆகவே கைதிகளை மீட்பதற்காக நடந்த இராணுவ நடவடிக்கை போன்று காட்டுவது, ஒரு வரலாற்றுத் திரிப்பு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கிராமங்கள் மீது குண்டு வீசியதற்கு ஸ்ரீலங்கா அரசு என்னென்ன காரணங்களை கூறியதோ, அதையே கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் ஒப்புவிக்கிறார். "அந்தக் கிராமத்தில் அமெரிக்க கைதிகள் வைக்கப் பட்டிருந்தார்கள். அதனால் தான் அமெரிக்கர்கள் குண்டு போட்டார்கள். அப்பாவி மக்களை கொன்ற பாவம் அமெரிக்கர்களைச் சேரும்..." என்று விஸ்வரூபம் படத்தில் ஒமாராக நடிப்பவர் கூறுகின்றார்.
அதாவது, அமெரிக்க தாக்குதலை எதிர்பார்த்து, வேண்டுமென்றே பொது மக்கள் வாழும் இடத்தில் அமெரிக்க கைதிகளை அடைத்து வைத்திருந்தார்கள். ஆகவே, "ஆப்கான் பொது மக்கள் கொல்லப் பட்டதற்கு தாலிபான் பொறுப்பேற்க வேண்டும். விமானக் குண்டுவீச்சு நடத்திய அமெரிக்கர்கள் குற்றவாளிகள் அல்ல." என்ற நியாயத்தை கமல்ஹாசன் முன்வைக்கிறார். அது நியாயம் அல்ல, அநியாயம். விஸ்வரூபம் கூறும் (அ)நியாயத்தை தான், பாலஸ்தீன மக்களின் படுகொலை சம்பந்தமாக இஸ்ரேலிய அரசு கூறுகின்றது. ஈழத் தமிழரின் படுகொலை சம்பந்தமாக, இலங்கை அரசு கூறுகின்றது.
பொதுவாக, பெரும்பான்மையினமான பஷ்டூன் மக்களின் பிரதேசங்களில் தாலிபானுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால், டாரி, ஹசாரா, உஸ்பெக், தஜிக்கி ஆகிய சிறுபான்மை இனத்தவர் வாழ்ந்த இடங்களில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. உஸ்பெக், தஜிக்கி இனத்தவர்கள் தமக்குள்ள இருந்த பகைமையை மறந்து, தாலிபானுக்கு எதிராக கூட்டணி அமைத்தனர். அதுவே "வடக்கு கூட்டணி" என்ற பெயரில் அழைக்கப் பட்டது. அதன் தலைவராக தஜிக்கி இனத்தை சேர்ந்த மசூத் இருந்தார். அவர்களுக்கு CIA யும், RAW வும் பயிற்சியளித்தனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கான, அமெரிக்க படைகளின் தரைவழி நகர்வுகளும், வடக்கே இருந்து தான் தொடங்கின.
வட ஆப்கானிஸ்தானில், தாஜிக் மக்கள் வாழும் பிரதேசத்தை, தாலிபானால் கடைசி வரை வெல்ல முடியவில்லை. அதனால், மசூத்தை ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் தீர்த்துக் கட்டினார்கள். அந்த தற்கொலைக் குண்டுதாரி ஒரு அல்ஜீரிய அரேபியர். அந்த தாக்குதலை, அல்கைதா நடத்தி இருந்தது. தாலிபான் இயக்க வரலாற்றில், அது ஒரு காலத்திலும் தற்கொலைத் தாக்குதலை நடத்தவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சில வருடங்களின் பின்னர் மறுசீரமைக்கப்பட்ட தாலிபான் கெரில்லா யுத்தத்தை நடத்த தொடங்கிய பொழுது தான், முதன் முதலாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. விஸ்வரூபம் திரைப்படத்தில் வரலாற்றை திரிபுபடுத்திக் காட்டுகிறார்கள். தாலிபான் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், படையெடுக்க தயாராக நின்றிருந்த அமெரிக்க கவச வாகனம் ஒன்றின் மீது, தற்கொலைத் தாக்குதல் நடப்பதாக காட்டுவது உண்மைக்கு புறம்பானது.
படத்தில் தற்கொலைக் கொலையாளி, ஒரு பெண் போல பூர்கா அணிந்து செல்கின்றார். பிற்காலத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக நடந்த போரில், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லா தற்கொலைக் குண்டுதாரியும் பூர்கா அணிந்து பெண் வேடமிட்டு செல்வதில்லை. அமெரிக்க இராணுவம் ஆப்கான் பெண்களை சோதனையிடுவதற்கு, அவர்களை அவமானப் படுத்துவதற்கு நியாயம் கற்பிப்பது போல, அந்தக் காட்சியை அமைத்திருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுதாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம், "மூளைச்சலவை செய்யப்பட்ட, போரையும், ஆயுதங்களையும் ஆராதிக்கும் பருவ வயது சிறுவனாக" காட்டுகின்றனர். முன்பு புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளை பற்றியும், இலங்கை அரசு அது மாதிரியான பிரச்சாரங்களை செய்து வந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்கும் பிற இனத்தவர்கள், இரண்டையும் ஒன்றாகத் தான் புரிந்து கொள்வார்கள். விஸ்வரூபம் படத்தை "ஆஹா...ஓஹோ..." என்று புகழ்ந்த புலி ஆதரவாளர்கள், இவ்வாறு தான் அவர்கள் அறியாமலே சர்வதேச சதிவலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.
விஸ்வரூபம் திரைக்கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கின்றது என்ற தெளிவு இல்லை. கதையில் நிறைய முரண்பாடுகள். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கின்றதா? அல்லது அமெரிக்க படைகளின் பொம்மை அதிபரான கர்சாய் ஆட்சி நடந்த காலத்தில் கதை நடக்கிறதா? RAW உளவாளியான கமல், பாகிஸ்தானில் வைத்து, தாலிபான் இயக்கத்தில் சேர்வதாக முதலில் காட்டுகின்றார்கள். பாகிஸ்தானில் இருந்து எல்லை கடக்கும் வழியில், ஆப்கான் எல்லைக் காவல் படைவீரனுக்கு கையூட்டு கொடுக்கின்றனர். தாலிபான் ஆட்சி நடந்த காலத்தில், எல்லையிலும் தாலிபான் காவலர்கள் தான் நின்றிருப்பார்கள். ஆனால், படத்தில் காட்டப்படும் காவலர் அணிந்திருக்கும் சீருடை இன்றைய ஆப்கான் இராணுவ சீருடை போன்றுள்ளது. காவலரணில் பறப்பது, இன்றைய ஆப்கான் தேசியக் கொடி. (தாலிபானின் கொடி, கருப்பு வர்ணத்தில் குரான் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும்.) அப்படியானால், அது அமெரிக்கா நியமித்த பொம்மை அரசு ஆட்சி நடந்த காலகட்டமாக இருக்க வேண்டும். அப்படி நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்து வரும் காட்சிகள் தாலிபான் ஆட்சிக் காலத்தையும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய காலத்தையும் நினைவுபடுத்துகின்றன.
அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தும் நேரம், "பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..." என்று முல்லா ஒமார் சொல்லி விட்டு, தனது தோழர்களுடன் தப்பிச் செல்லும் காட்சி வருகின்றது. ஆனால், நிஜமோ அதற்கு முற்றிலும் மாறானது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்க முன்னரே, தாலிபான் தலைவர்களும், போராளிகளும், தமது குடும்ப உறுப்பினர்களையும் கூட்டிக் கொண்டு, பாகிஸ்தானுக்கோ, அல்லது வேறு மறைவிடங்களுக்கோ தப்பிச் சென்று விட்டார்கள். அப்படியானால், விஸ்வரூபம் படக்கதை ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக, பாகிஸ்தானில் நடக்க வேண்டும். அமெரிக்க/நேட்டோ படைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் படைகள் தாலிபான் தலைவர்களை வேட்டையாடி இருக்க வேண்டும். ஆனால், "பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு, தாலிபானை ஆதரிக்கும் நாடு", என்று இந்திய இரசிகர்களுக்கு சொல்ல வேண்டும், என்பதே விஸ்வரூபம் தயாரித்தவர்களின் நோக்கம். இந்த அரசியல் சார்புத் தன்மையினால் தான், கதையிலும் நிறைய முரண்பாடுகள். ஆகவே, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் இறுதிக் காலத்திற்கு, அமெரிக்க படையெடுப்பு நடந்த காலத்திற்கு, திரைக் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.
தனது மனைவியை வைத்தியம் பார்க்க வந்த பிரெஞ்சுப் பெண் மருத்துவர், தலையை மூடாமல் இருப்பதற்காக, முல்லா ஒமார் கடுமையாக கண்டிக்கிறார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் தோன்றுவதற்கு முன்னர், முஜாகிதீன் என்ற இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி நடந்தது. வெளிநாட்டுப் பெண்கள் முகத்தை மூடும் பூர்கா அணியா விட்டாலும், தலையை மூடி முக்காடு அணியும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். ஆகவே படத்தில் காட்டுவது போன்ற ஒரு சம்பவம், நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதே காட்சியில், டைரக்டர் கவனிக்காத தவறு ஒன்று நடந்துள்ளது. ஒமார் தனது வீட்டுக்கு ஒரு அந்நியரை (கமல்) அழைத்துச் செல்லும் நேரம், அவர் மனைவி வெறும் முக்காடு மட்டுமே போட்டிருப்பார். இன்னொரு இடத்தில் ஓமாரின் மனைவியையும், மகனையும் தனியான இடத்தில் கமல் போட்டோ பிடித்துக் கொண்டிருப்பார். அப்படி எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.
கமல் வீட்டுக்கு வரும் தருணங்களில், தன் மனைவி முகத்தை மூடும் பூர்கா அணிந்திருக்க வேண்டுமென்று கண்டித்திருக்க வேண்டிய ஒமார், சும்மா இருக்கிறார். அது எப்படி? சாதாரண ஆப்கான் பெண்கள், தமது குடும்ப உறுப்பினர்களை தவிர பிற ஆண்களுடன் பேசுவதற்கு தடை விதித்த தாலிபான்கள், தமது குடும்பப் பெண்களை அந்நிய ஆடவருடன் பேச விட்டிருப்பார்களா? படத்தில் வரும் கமல்ஹாசன், ஒரு டிஜிட்டல் கமெராவை வைத்து, முல்லா ஒமார், அவர் மனைவி, மகன், பாதுகாவலர்கள், அயலவர்கள் என்று எல்லோரையும் போட்டோ எடுத்து தள்ளுவார். தாலிபான் ஆட்சியில், பெண்களை, ஆண்கள் புகைப்படம் எடுக்க தடை இருந்தது. ஒரு அந்நிய ஆண், தாலிபான் குடும்பப் பெண்ணை புகைப்படம் எடுக்க சம்மதிப்பார்களா? தாலிபான், மிகவும் இரகசியமான இயக்கம். பொது நிகழ்வுகளை தவிர, வேறெங்கும் போட்டோ, வீடியோ எடுப்பதை அனுமதித்ததில்லை. தாலிபான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், ஒரே ஒரு தடவை, முல்லா ஒமார் பொது மக்கள் முன்னிலையில் தோன்றிய போது எடுத்த வீடியோ மட்டுமே, இன்று வரை காணக் கிடைக்கின்றது. அந்தளவுக்கு இரகசியம் பேணிய பேர்வழி அவர். முல்லா ஓமாரின் போட்டோ, அல்லது வீடியோ எங்கே தேடினாலும் கிடைக்காது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்று, தாலிபான் தலைவர் ஒமாரும் எந்தவொரு பொது நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. பொதுக் கூட்டங்களில் பேசுவதில்லை. அவரைப் பார்ப்பதே அபூர்வம். தாலிபான் இயக்க உறுப்பினர்களே முல்லா ஒமாரை நேரில் பார்த்ததில்லை. தாலிபான் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், மற்றும் ஒசாமா பின்லாடன், அவருக்கு நெருக்கமான சில அரேபியர்கள் மட்டுமே முல்லா ஒமாரை சந்திக்க முடிந்தது. செப்டம்பர் 2001, நியூ யார்க் இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர், அன்று பாகிஸ்தானை ஆண்ட முஷாரப் அரசு, அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டது. அன்றிலிருந்து பாகிஸ்தான் அரசு, ISI கூட, தாலிபானின் எதிரிகளாக மாறி விட்டனர்.
அவ்வாறு மாறிவிட்ட கள நிலைமையில் தான், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு நிகழ்ந்தது. அந்தப் படையெடுப்புக்கு பாகிஸ்தான் அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. ஆகவே, விஸ்வரூபம் படத்தில் காட்டப் படுவதைப் போல, ஒரு பாகிஸ்தானிய ISI அதிகாரி, அதுவும் சீருடையில், முல்லா ஓமாரையும், ஒசாமா பின்லாடனையும் சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை. அதாவது, செப்டம்பர் 2001 க்கு முன்னர், பாகிஸ்தானிய ISI அதிகாரிகள் மட்டுமல்ல, அமெரிக்க CIA அதிகாரிகள் கூட, ஒமாரையும், ஒசாமாவையும் சந்தித்து இருந்தனர். ஆனால், விஸ்வரூபம் படக்கதை நடக்கும் காலத்தில், அவர்கள் எதிரெதிர் முகாம்களில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சியாளர்கள் மக்களை எப்படி கொடுமைப் படுத்தினார்கள் என்று, கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் எடுத்துக் காட்டியுள்ளதாக பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில், குறிப்பிட்டுச் சொல்லும்படியான "தாலிபான் கொடுங்கோன்மை" எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. ஒருவரை பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடும் காட்சி கூட, "ஒரு துரோகிக்கு மரண தண்டனை வழங்குவது" போலத் தான் காட்டியுள்ளார்கள். இது போன்ற பல சம்பவங்கள், ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் நடந்துள்ளன. விஸ்வரூபம் படத்தில் காட்டப்படுவது போல, சமிக்ஞை அனுப்பும் கருவிகளுடன், எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் பலர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் இருந்தனர். அப்படியானவர்கள் கையும், களவுமாக அகப்பட்டால், ஒரு சந்தியில் வைத்து பொது மக்கள் முன்னிலையில்சுட்டுக் கொன்று, மரண தண்டனை நிறைவேற்றுவார்கள்.
ஆனால், விஸ்வரூபம் படக்கதையில் ஒரு ஓட்டை உள்ளது. தவ்பீக் என்ற அரேபியர், அமெரிக்கப் படைகளுக்கு சமிக்ஞை அனுப்பும் கருவி வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப் படுகின்றது. அதற்காக பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடுகின்றார்கள். தாலிபான் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த அரேபியர்கள், ஒசாமா பின்லாடனின் அரவணைப்பில் வாழ்ந்தனர். அரேபியர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் தாலிபானுக்கு இருக்கவில்லை. அதிக பட்சம், ஒசாமாவிடம் ஒப்படைத்து தண்டிக்க சொல்லிக் கோரலாம். அவ்வளவு தான்.
படத்தில் காட்டப் படுவதைப் போல, தவ்பீக் போன்ற அரேபிய புரவலர்கள், தாலிபானுக்கு நிதியுதவி செய்தனர் என்பது உண்மை தான். அதற்காகவே அரபுக்காரர்களுக்கு விசேட உரிமைகள் வழங்கப் பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் யாருக்கும் கிடைக்காத சுதந்திரம் அவர்களுக்கு கிடைத்தது. சிலநேரம் தாலிபான் உறுப்பினர்களுக்கு கிடைப்பதை விட அதிக சலுகைகள் கிடைத்தன. தாலிபான் ஆட்சியில், அரேபியர்கள் ஆப்கான் மக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை. தாலிபான் தலைமை, அரேபியருக்கு அதிக சுதந்திரமும், சலுகைகளும் கொடுப்பதாக, ஆப்கான் மக்கள் குறைப்பட்டனர். அப்படியான நிலையில், ஒரு அரேபியர் எந்தளவு பாரதூரமான குற்றம் இளைத்திருந்தாலும், இப்படி பகிரங்கமாக தூக்கில் போட்டிருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு தாலிபான்கள் முட்டாள்கள் அல்ல. யாராவது ஒரு அரேபியர் தண்டிக்கப் பட்டால், அரேபியர்களின் பண வருவாய் நின்று போகும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
கமல்ஹாசன் எதற்காக இவ்வளவு முரண்பாடுகளுடன் ஒரு படத்தை எடுக்க வேண்டும்? ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் நடந்த, தாலிபானின் கொடுமைகளை பற்றி இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லவா? தாலிபான் போன்ற மட அடிப்படைவாதிகளை எதிர்ப்பதற்காகவா? எதுவுமே இல்லை. உண்மையைச் சொன்னால், கமல்ஹாசனும், அவரை ஆதரிக்கும் பார்ப்பனிய, இந்துத்துவா கும்பலும், இந்தியாவில் ஒரு தாலிபான் ஆட்சியை கொண்டுவர விரும்புகின்றார்கள். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். உன்னிப்பாக கவனித்தால், "தாலிபான்கள் எப்படியான அடக்குமுறை சட்டங்களை ஆப்கான் மக்கள் மீது விதித்தார்கள்," என்று விஸ்வரூபம் படத்தில் எங்கேயும் சொல்லியிருக்க மாட்டார்கள். அது தான் சூட்சுமம். இந்து மத அடிப்படைவாதிகளுக்கும், முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு எதுவும் கிடையாது. அது இஸ்லாமிய தாலிபான், இது இந்து தாலிபான். அது மட்டுமே வித்தியாசம்.
(தொடரும்)
*************************