Friday, April 27, 2012

ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா


இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. ஸ்பெயின் ஆட்சியைப் பிடிக்க விரும்பிய பாசிச படைகளை எதிர்த்து பல்வேறு இடதுசாரிக் குழுக்கள் போராடின. ஸ்பெயினின் சில பகுதிகள் பாசிச இராணுவக் கட்டுப்பாட்டின் கீழும், சில பகுதிகள் இடதுசாரிக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்துள்ளன. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், சித்தாந்த அடிப்படையில் பிரிந்திருந்தனர். ஸ்டாலினிசவாதிகள், ட்ராஸ்கிசவாதிகள், அனார்கிசவாதிகள், மிதவாத சமூக-ஜனநாயக வாதிகள்,  ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள் என்று அனைத்து பாட்டாளி வர்க்க மக்கள் கைகளிலும் ஆயுதங்களை வழங்கினார்கள். கிராமங்கள், நகரங்கள் தோறும், பாட்டாளிவர்க்க அதிகார சபைகள் ஏற்படுத்தப் பட்டன. பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகம்  மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

ஸ்பானிய புரட்சியில் இணைந்து கொள்வதற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சென்ற வெளிநாட்டு தொண்டர்களின் அனுபவத்தை கூறும் திரைப்படம் Land and Freedom.
பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட, இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட படங்களை தயாரித்த, Ken Loach    இயக்கிய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஸ்பெயின் புரட்சியாளர்களுக்கு ஸ்டாலின் ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்த போதிலும், ஸ்டாலினிசம் போராட்டத்தின் தோல்விக்கு காரணம் என்பது இயக்குனரின் வாதம். இருப்பினும், தோல்வியடைந்த புரட்சிக்கு காரணம் என்று, ஒவ்வொரு இடதுசாரி இயக்கமும் ஒன்றை மற்றொன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை ஸ்பானிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், இடதுசாரி இயக்கத்தினுள்  நிலவிய ஒற்றுமையின்மை காரணமாக, இறுதியில் பாசிச சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றின. எதிர்காலப் புரட்சியாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் சில, இந்த சினிமாவில் இருக்கலாம். 

Thursday, April 19, 2012

பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் நோர்வே ! - ஓர் ஆய்வு



"இந்தியா, இலங்கை இலிருந்து புலம்பெயர்ந்து, நோர்வே நாட்டில் வாழும்  பெற்றோருக்கு, தமது  குழந்தைகளை சரியாக வளர்க்கத் தெரியாது!" 
இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து, நோர்வே அரச அலுவலர்கள், அவர்களது பிள்ளைகளை பிரித்துச் சென்று, குழந்தைகள் நல காப்பகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர். இந்தச் செய்தி , அண்மையில் இந்திய, தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இந்தச் சம்பவம் ஏற்கனவே, பல தடவைகள் நோர்வேயில் நடந்துள்ளன. கடந்த வருடம், மூன்று சோமாலியக் குடும்பங்களை சேர்ந்த ஆறு பிள்ளைகள், இவ்வாறு குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். ஆனால், வேற்றின சமூகத்தில் நடந்த சம்பவம் என்பதால், தமிழ் ஊடகங்கள் அதையிட்டு அக்கறை காட்டவில்லை. இந்த வருடம் ஒரு இந்திய குடும்பமும்,  ஒரு இலங்கைத் தமிழ் குடும்பமும், குழந்தை  உரிமைகள் சட்டத்தினால் பாதிக்கப் பட்ட பின்னர் தான், நமது ஊடகங்கள் அதிலே கவனம் எடுத்தன. 

நோர்வேயில், Stavanger நகரில் வாழ்ந்த ஒரு இந்தியக் குடும்பத்தின் கதை, அனைத்து இந்திய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப் பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்திய ஊடகங்களைப் பொறுத்த வரையில், அது ஒரு "அரசு நடத்திய ஆட் கடத்தல்".  ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், "கலாச்சார  வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளாத  நோர்வீஜிய அரசுப் பணியாளர்களின் செயல்." என்று சாடினார்கள். "இது கலாச்சார வித்தியாசம் காரணமாக எழுந்த பிரச்சினையல்ல. குழந்தைகளின் உரிமைகள் சம்பந்தமானது." என்று நோர்வே அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குழந்தைகளை பறிகொடுத்த இந்திய பெற்றோர்கள், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஊடக பலம் காரணமாகவும், அரசு நேரடியாக தலையிட்டதாலும், குழந்தைகளை மீளப் பெற்றுக் கொண்டனர். ஆனால், இந்தளவு ஆதரவற்ற பெற்றோரின் குரல்கள் வெளியே கேட்பதில்லை. 

தமது குழந்தைகளை பறிகொடுத்த இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் கதை, பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பானது. Bergen நகரில் வாழும் அந்த தமிழ்த் தாயும், "கலாச்சார வேறுபாடு காரணமாகவே, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்ததாக," தெரிவித்தார். கடந்த மூன்று மாதங்களாக குழந்தைகளை இழந்து தவிப்பதாகவும், நித்திரை கொள்ள முடியாமல் தூக்க மாத்திரைகளை பாவிப்பதாகவும்," நோர்வீஜிய பத்திரிகை ஒன்றிற்கு தெரிவித்தார்.  "கையால் உணவூட்டுவது, மடியில் இருத்தி வைப்பது, ஒரே கட்டிலில் படுப்பது" போன்றன குழந்தைகள் உரிமைகளை மீறும் செயல் என்று தமக்கு தெரிவிக்கப் பட்டதாக அந்த தாய் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். இந்தியப் பெற்றோரும் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறினார்கள். அப்படியானால், நமது நாடுகளில் சாதாரணமானது என்று நினைத்துக் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள், மேலைத்தேய நாட்டவர் கண்களுக்கு காட்டுமிராண்டித் தனமாக தெரிகின்றதா? இது கலாச்சார வேறுபாட்டால் எழும் பிரச்சினையா? 

 குழந்தைகளை பறிகொடுத்த இந்திய, இலங்கை, சோமாலியப் பெற்றோர் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு விடயத்தைக் கூறுகின்றனர். நோர்வேயில் வாழ வந்த தமக்கு, அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படுவதில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எழுதப்படிக்கத் தெரியாத சோமாலியப் பெற்றோர் முதல், பன்னாட்டுக் கம்பனியில் வேலை செய்த, இந்திய பெற்றோர் வரை அந்த விமர்சனத்தை தான் முன்வைக்கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சட்டங்கள் கடுமையானவை என்பதை மறுப்பதற்கில்லை. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக சட்டம் இறுக்கப் படவில்லை. "நடுநிலை பேண விரும்பிய" பிபிசி தமிழோசையும், அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பது, பேட்டி எடுத்தவரின் கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 

மேலைத்தேய நாடுகளின் அரசாங்கங்கள், குழந்தை வளர்ப்பிலும், பராமரிப்பிலும் தலையிட்டு, தாமே  பெற்றோரின் பொறுப்பையும்  ஏற்றுக் கொள்ளும்   காரணம் என்ன?

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…” - கார்ல் மார்க்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து)

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாரிய கலாச்சாரப் புரட்சி நடந்தது. குடும்ப உறவுகள்  இப்படித் தான் இருக்க வேண்டும், குழந்தைகளை இப்படித் தான் வளர்க்க வேண்டும்  என்று அரசு தீர்மானித்து சட்டம் இயற்றியது. அதன் அர்த்தம், ஒரு குழந்தையை வளர்ப்பது அதன் தாய், தந்தையர் மட்டுமல்ல. குழந்தை வளர்ப்பில் அரசின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்க வேண்டும். உண்மையில், பெற்ற தாய், தந்தையை விட, அரசு அதிக பொறுப்பை எடுத்துக்  கொண்டுள்ளதோ என சில நேரம் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு ஒரு குடும்பத்தினுள் அரசின் தலையீடுகள் அதிகம். இதுவே ஒரு சோஷலிச நாட்டில் நடந்திருந்தால், "மனித உரிமை மீறல்கள்" குறித்து  இன்று எல்லோரும் பேசியிருப்பார்கள். "கம்யூனிச அரசுகள் குடும்பங்களை சிதைத்து, பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்கின்றனர்." என்று பிரச்சாரம் முடுக்கி விடப் பட்டிருக்கும். பனிப்போர் காலத்தில் அப்படியான கதைகள், ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தன. அது வேறு விஷயம். 

இப்போது நோர்வேக்கு வருவோம். இன்றுள்ள குழந்தைகள் நல உரிமைகள், நோர்வீஜிய சமூகத்தில் ஆதி காலத்தில் இருந்தே நிலவி வந்துள்ளதா?  அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட, வைகிங் கால  குடிமனைகளில், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கூட்டுக்  குடித்தனம் அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக இருந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில், பொருளாதார வசதிகள் பெருகிய பின்னர், வீட்டு வசதிகளும் பெருகின. பிள்ளைகளுக்கென தனியான அறைகள் ஒதுக்கப் பட்டன. . அதே போன்று, கரண்டியால் உணவுண்ணும் பழக்கம் கூட 19 ம் நூற்றாண்டில் அறிமுகமான  கலாச்சாரம் தான். தீவிர கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களான நோர்வீஜியர்கள் வீடுகளில், குழந்தைகளை அடித்து வளர்ப்பது  பெற்றோரின் கடமையாக கருதப் படுகின்றது. (பார்க்க: Vår gude gitte rett å slå barn) ஆகவே நோர்வீஜியர்கள் (அல்லது ஐரோப்பியர்கள்) தமது பாரம்பரிய கலாச்சாரத்தை எம் மீது திணிக்கிறார்கள் என்று பொருள்கொள்ள முடியாது. குழந்தை வளர்ப்பு பற்றிய பிரச்சினை, கலாச்சார முரண்பாடுகளால் எழுந்த பிரச்சினை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, நோர்வேயில் வாழும் இந்திய/இலங்கைப் பெற்றோர் நிலைமையை அவ்வாறு தான் புரிந்து கொள்கின்றனர்.

ஐரோப்பாவில் லிபரல் சமுதாயத்தை படைத்த முதலாளித்துவம், அதற்கான கலாச்சாரத்தையும் புதிதாக அறிமுகப் படுத்தியது. இந்த முதலாளித்துவ-லிபரல் சமுதாயம் குடும்ப உறவுகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து, அதனை வளர்த்து, கல்வி புகட்டுவது எல்லாமே ஒரு முதலாளித்துவ அரசின் கடமைகள். அந்தக் குழந்தைக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்ட நாளில் இருந்து, அது தேசத்தின் சொத்தாக கருதப் படுகின்றது. அரை நிலப்பிரபுத்துவ   சமுதாய அமைப்பில் இருந்து புலம்பெயரும் இந்திய/இலங்கைப் பெற்றோர் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வதில்லை. "குழந்தைகளை கீழ்ப்படிய வைத்து, அடித்து வளர்க்க வேண்டும்" என்ற நிலப்பிரபுத்துவ போதனையும், "குழந்தைகளை அடிக்காமல், சுதந்திரமாக வளர விட வேண்டும்" என்ற முதலாளித்துவ போதனையும், நோர்வே போன்ற ஐரோப்பிய நாடுகளில் மோதிக் கொள்கின்றன. சுருக்கமாக, இது கலாச்சாரங்களின் மோதல் அல்ல, மாறாக, சித்தாந்தங்களின் மோதல். 

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், குழந்தைகள் தாய், தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். குடி மக்கள் மன்னனுக்கும், கடவுளுக்கும்  கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். முதலாளித்துவ-லிபரல் சமுதாயத்தில் தனி நபரின் உரிமைகள் முக்கியமானவை. அது சமுதாயத்தை "சுதந்திரமான தனி நபர்களின் கூட்டமைப்பாக" கருதுகின்றது. சுதந்திரமான தனி நபர்களை, அரசும், முதலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கல்வி ஒன்றின் ஊடாக நடைமுறைப் படுத்துகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், ஒரு பிள்ளை, ஐந்து வயதில் இருந்து பதினாறு வயது வரையில், கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும். 

பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தால், தண்டப்பணம் அறவிடப்படும். நெதர்லாந்தில் வாழும், மொரோக்கோ, துருக்கி போன்ற இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட பெற்றோர்கள் சிலர், தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாமல், வீட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அரசினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர். பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வந்த, பழமைவாத கலாச்சாரம் பேணும் பெற்றோர், தமது பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று, "சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை" கற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. மறு பக்கத்தில் ஐரோப்பிய கல்வி நிலையங்கள், ஒரு பிள்ளை எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும், தமது நாட்டுக் கலாச்சாரத்துடன் வாழ வேண்டும் என்று விரும்புகின்றன. ஐரோப்பியர்கள் தமது நாகரீகம்  உலகில் சிறந்தது என்று நம்புகின்றனர். 

கையால் உணவூட்டல் போன்ற கலாச்சார வேறுபாடுகளே, குழந்தைகளை தம்மிடம் இருந்து பிரிப்பதற்கு காரணம் என்று, இந்திய/இலங்கைப் பெற்றோர் நம்புகின்றனர். நோர்வீஜிய அதிகாரிகள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆனால், நோர்வீஜிய அரசும், குழந்தைகள் காப்பக ஊழியர்களும் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை பெற்றோர் மீது சுமத்துகின்றனர். நோர்வேயில் குழந்தைகளை அடிப்பதற்கு சட்டத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டுக் குடியேறிகள் சமூகத்தில் குழந்தைகளை அடித்து வளர்ப்பது சர்வசாதாரணம். இலங்கை, இந்தியா, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள பெற்றோர் தம் பிள்ளைகளை வளர்ப்பதைப் போன்று, நோர்வேயில் செய்ய முடியாதுள்ளது. 

சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு (Nursury) செல்லும் பிள்ளைகள், வீட்டில் தாயாரிடம் அடிவாங்கியதாக முறைப்பாடு செய்துள்ளன. இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே, தாம் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்ததாக, குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் நல காப்பகத்தில், பணியாளர்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளை பெற்றோர் பார்க்க முடியாது.  இந்த "பறிமுதல் நடவடிக்கைக்கு" பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோர்  மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டுமென  அறிவுறுத்துகின்றனர்.  Gjøvik எனும் இடத்தில், பிள்ளைகளை பறிகொடுத்த சோமாலியத் தாய்மார், வாரந்தோறும் நகரசபை கட்டிட வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். "எங்கள் குழந்தைகளை எம்மிடம் திருப்பித் தாருங்கள்" என்ற கோஷத்தை முன்வைத்து போராடினார்கள். அவர்களது போராட்டத்திற்கு, பத்து மாதங்களுக்குப் பின்னர் பலன் கிடைத்தது. இறுதியில் பிள்ளைகள், தாய்மாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். 

சோமாலியர்கள் போன்று, தமிழர்களும் போராட்டம் நடத்தியதாக நான் கேள்விப்படவில்லை. நோர்வேயில் இயங்கும் பத்துக்கும் குறையாத தமிழர் அமைப்புக்கள் எவையாவது மத்தியஸ்தம் வகிக்க முன் வந்தனவா, என்று தெரியவில்லை. ஆனால், சோமாலியர்களின் அமைப்பொன்று (Internasjonal Somalisk Forum i Norge), பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமுகமான தீர்வைக் காண உதவியது. தாய்மாருக்கும், குழந்தைகள் நல காப்பகத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகித்தது. அவர்கள் இரண்டு பக்க தவறுகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தனர். சோமாலியப் பெற்றோர் தமது குழந்தைகளை அடித்து வளர்ப்பதை கண்டிக்க வேண்டும். அதே சமயம், நோர்வீஜிய அதிகாரிகள் தகவல்களை வழங்கி, எச்சரிக்கை விடுத்த பின்னர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

குழந்தைகள் நல காப்பக பணியாளர்கள், சில நேரம் வேண்டுமென்றே வெளிநாட்டவர் சமூகங்கள் மீது கடுமையாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப் படுகின்றது. நிர்வாகத்தில் உள்ளோரின் ஊழல், ஊடகங்களில் எதிர்மறையான செய்திகளை வழங்கும் உள்நோக்கம், என்று பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன. சோமாலியச் சமூகமும் சில மாற்றங்களுக்குட்பட வேண்டும். குறிப்பாக, பிள்ளைகளை அதிகம் வெளியே செல்ல விடாமல், வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கப் படுகின்றனர். நண்பர்களை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. பிள்ளைகள் மீது பெற்றோர் தமது அபிலாஷைகளை திணிப்பதால் எழும் முரண்பாடுகள். இவை போன்ற செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என சோமாலிய நலன் பேணும் அமைப்பு கேட்டுக் கொண்டது. பல குடும்பங்களில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெறுவதாக, சோமாலிய-நோர்வீஜிய எழுத்தாளர் Amal Aden சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம், சோமாலிய சமூகத்தில் மட்டும் நடைபெறுகின்றதா? இந்தியா, இலங்கையை சேர்ந்த குடும்பங்களிலும் அது தான் நிலைமை. 

குழந்தைகள் நல காப்பகத்தில், வெளிநாட்டு குடிவரவாளர்களின் குழந்தைகளை மட்டுமே தடுத்து வைத்திருப்பது போன்று, ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எங்காவது ஒரு வெளிநாட்டவரின் குழந்தையை எடுத்துச் செல்வது மட்டுமே அவர்களுக்கு செய்தி. குழந்தைகள் நல காப்பகத்தில், பெருமளவு நோர்வீஜியக் குழந்தைகள் தங்க வைக்கப் பட்டுள்ளன. இதெல்லாம் அவர்கள் கண்களுக்கு செய்தியாக தெரிவதில்லை. உண்மையில் குழந்தைகள் நல காப்பகங்கள், முதன் முதலாக நோர்வீஜிய குடும்பங்களில் தான் கைவைத்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பல அங்கே தங்க வைத்து, "நாகரீகம்" சொல்லிக்  கொடுத்தனர். தற்பொழுது, போதைவஸ்து பாவிக்கும், அல்லது நோயாளிகளான பெற்றோரின் பிள்ளைகள் குழந்தைகள் நல காப்பகத்தில் தான் வளர்கின்றன. ஆனால், அந்நிய கலாச்சாரப் பின்னணியில் இருந்து வந்து குடியேறிய மக்களையும், அவ்வாறான பிரிவுக்குள் அடக்குவது கொஞ்சம் நெருடலான விடயம். 

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, பேச்சுவார்த்தை அவசியமாகின்றது. வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகங்களும், அரசு அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். புதிதாக பிரஜாவுரிமை பெற்றவர்களை, "அண்மைய வரவாளர்கள்" பெயரிட்டு அழைக்கிறார்கள். அவர்களும் நோர்வீஜியர்களின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற, தேசியவாத சிந்தனை அரச மட்டத்திலும் காணப்படுகின்றது. நோர்வேயில் பன்முகக் கலாச்சாரம் ஒரு மாயை என்பதையே, குழந்தைகள் மீதான அரசின் ஆளுமை எடுத்துக் காட்டுகின்றது. 

Monday, April 16, 2012

நோர்வே சோஷலிச இயக்கத்தின் தோற்றம்

உழைக்கும் மக்களின் போராட்டம் நடைபெறாத, குறைந்தது நிறுவனமயமாக்கல் ஏற்படாத ஐரோப்பிய நாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், அதே போன்ற மக்கள் எழுச்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றாததற்கு பலரும் பல வகையான காரணங்களை கூறுகின்றனர். பல சமூகப் புரட்சிகள் தோன்றிய 19 ம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், தமது நாடுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றிய தகவல்கள், காலனிகளில் வாழ்ந்த மக்களைப் போய்ச் சேராதவாறு இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். பிரான்ஸில் ஏற்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சி தோல்வியடைந்த போதிலும், அது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சித் தீயை மூட்டி விட்டது. ஐரோப்பிய கண்டத்தின் வட முனையில் அமைந்துள்ள, நோர்வே நாட்டில் கூட பிரெஞ்சுப் புரட்சி தாக்கம் செலுத்தியுள்ளது. அந்த நாட்டில் முதன் முதலாக தொழிலாளர் அமைப்பை ஸ்தாபித்த மார்குஸ் திரானே (Marcus Thrane) பற்றிய பதிவு இது. 


இன்றைய நோர்வேயின் ஆளும் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியுமான, தொழிலாளர் கட்சி (Arbeiderspartiet), தன்னை "மார்குஸ் திரானே இயக்கத்தின்" நீட்சியாக கூறிக் கொள்கின்றது. இருப்பினும், 1880 முதல் 1890 வரையில், நோர்வேயின் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமைப்பு இன்று இல்லை. நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட் கட்சி, எல்லாவற்றுக்கும் அதுவே முன்னோடி. 1849 ம் ஆண்டளவில், ஒரு மாணவனாகவிருந்த மார்குஸ் திரானே, நோர்வேயின் முதலாவது தொழிலாளர் அமைப்பை நிறுவினார். ஆரம்பத்தில் அந்த அமைப்பில் 160 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அந்த அமைப்பின் புரட்சிகரமான கருத்துகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் அணி திரண்டனர். 1850 ம் ஆண்டளவில், நோர்வே முழுவதும் 300 தொழிற்சங்கங்களும், அவற்றில் 30000 உறுப்பினர்களும் இருந்தனர். சாதாரண தொழிலாளர்கள் மட்டுமல்லாது, சிறு வணிகர்கள், கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள், ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தனர். அன்று அவர்கள் எல்லோரும் "திரானியர்கள்" (Thranittere) என்று அழைக்கப் பட்டனர்.

திரானியர்கள், நோர்வீஜிய மக்கள் சகலருக்குமான சம உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அன்று பிரபுக்களும், வசதிபடைத்தோரும், நிலவுடைமை விவசாயிகளும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. அதனால், அனைத்துப் பிரஜைகளுக்குமான வாக்குரிமைக்காகவும் போராடினார்கள். அரசு, அனைவருக்கும் பொதுவான கல்வித் திட்டத்தில் முதலிட வேண்டுமெனவும், உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனவும் கோரி வந்தனர். மேலும், நிலமற்ற ஏழை மக்களுக்கு, அரசாங்கமே நிலம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தது. திரானியர்கள் நடைமுறைப் படுத்தக் கோரிய, பொருளாதார மாற்றங்களைத் தவிர, சமூக மாற்றங்களும், அதிகாரத்தை கையில் வைத்திருந்த வர்க்கத்தினர் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது.

அன்றைய கால கட்டத்தில், சொந்தமாக, ஆயிரக்கணக்கான பரப்பளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மட்டுமே இராணுவ சேவையிலும் ஈடுபடுத்தப் பட்டனர். மத்திய காலங்களில், போரில் அந்நிய நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவம், போர் முடிந்த பின்னர் ஆக்கிரமித்த நிலங்களை தமக்குள் பங்கிட்டுக் கொள்வது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வர்க்கம், அல்லது சாதியை சேர்ந்த மக்கள், விவசாயிகளாகவும், இராணுவ வீரர்களாகவும் இருப்பது, அன்றைய ஐரோப்பாவில் சர்வ சாதாரணம். ஒரு நாட்டின் வளங்கள் யாவும் அந்த வர்க்கத்தின்/சாதியின் ஆதிக்கத்திற்குள் அடங்கி விடும். இதனால், அனைத்து பிரஜைகளும் இராணுவ பயிற்சி பெற வேண்டும் என்ற கோரிக்கை, அந்த வர்க்கத்தின் இருப்புக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலாக பார்க்கப் பட்டது.

நோர்வீஜிய நிலப்பிரப்புக்கள், அரச அதிகாரிகளின் கண்களுக்கு, மார்குஸ் திரானே ஒரு "பயங்கரவாதி" போன்று தோற்றமளித்தார். 1851 ம் ஆண்டு, திரானேயும், பிற தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப் பட்டனர். இறுதியில், அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து செல்ல சம்மதித்தார். உண்மையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப் பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், திரானே இயக்கத்தின் நீட்சி என்று கூறிக் கொள்ளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சியிலும், புரட்சிகர அமைப்புகள் அடக்கப் பட்டன. அதற்கு காரணம், சமூக ஜனநாயக கட்சி, தனது அடித்தளமான தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுத்து, ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இது நோர்வேயில் மட்டும் நடக்கவில்லலை, அநேகமான ஐரோப்பிய நாடுகளில் இது தான் நிலைமை. இதனால், அதிலிருந்து பிரிந்து சென்ற நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை கட்சிக் கொள்கையாக வரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நோர்வே ஜேர்மனிய நாஜிப் படையினரினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய கட்சி என்பதால், மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. போர் முடிந்த பின்னர் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. 12 சதவீத வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானது. ஆளும் வர்க்கத்திற்கு அதைக் கூட சகிக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அரசால் அச்சுறுத்தப் பட்டனர். அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப் பட்டது. இதனால், நோர்வீஜிய கம்யூனிச கட்சி பலவீனமடைந்தது. நோர்வேயில் உழைக்கும் வர்க்க மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட்டோம் என்று, ஆளும் வர்க்கம் நம்பியது. 1973 ம் ஆண்டு, புதியதொரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவதரித்தது. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் அட்டூழியங்களை கண்ட இளந் தலைமுறையினர், தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி (Arbeidernes kommunistparti) என்ற புதிய மாவோயிச கட்சியை உருவாக்கினார்கள். ஆனால், காலப்போக்கில் அதுவும் சீரழிந்து, சின்னாபின்னமாகி விட்டது.


மார்குஸ் திரானே யின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர் எழுதிய நூல்களும் (நோர்வீஜிய மொழியில்) :
Marcus Thrane


 *********************************************** 
 பிற்குறிப்பு: தமிழுலகம் அறிந்திராத ஐரோப்பிய இடதுசாரி சிந்தனையாளர்கள், அவர்களின் படைப்புகளைப் பற்றிய அறிமுகத் தொடர் இது. 

 இதோடு தொடர்பான முன்னைய பதிவுகள்: முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!

Thursday, April 05, 2012

ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன. கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதற்கு என்ன காரணம்? உலகில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் இன்று ஆதிக்கச் சக்திகளுக்குத் துணை போகின்றன? இலங்கை அரசின் போர்க் குற்றங்களை கியூபா அறிந்திருக்கவில்லையா? குறிப்பாக, வலதுசாரித் தமிழ்தேசியவாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, "கம்யூனிச நாடுகள் தமிழ் மக்களின் விரோதிகள்" என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் ஒரு புறமிருக்க; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் எதிர்த்து வாக்களிக்கும் நாடுகளின் நோக்கம் என்ன? இந்தக் கட்டுரை, அந்த நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளும் முயற்சியே அன்றி, அவர்களின் செயலை நியாயப் படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை, முதலிலேயே தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் இனப்படுகொலை, நீதிக்கு புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்கள்... இவை எல்லாம் ஈழப்போரில் மட்டுமே முதல் தடவையாக நடந்துள்ளன என்று நினைப்பது எமது அறியாமை. ஏற்கனவே, 1971 ம் ஆண்டு தெற்கில் எழுந்த ஜேவிபி கிளர்ச்சி அடக்கப் பட்ட பொழுதே இவை எல்லாம் நடந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம், யாரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், அது பற்றி கேள்வி எழுப்பவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப் படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சோஷலிச நாடுகள் எல்லாம் ஓரணியில் நின்று, இலங்கையில் சோஷலிசத்திற்காக எழுச்சி பெற்ற மக்களை அழிக்க உதவி செய்தன. அன்று, உலகில் எந்தவொரு நாடுமே, ஜேவிபியின் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. முதலாளித்துவ மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், அவர்களின் நிலைப்பாடு தெளிவானது. உலகில் எங்கெல்லாம் சோஷலிசத்தின் பெயரில் கிளர்ச்சி நடக்கின்றதோ, அவற்றை அழித்தொழிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சோஷலிச நாடுகள் அப்படி நடந்து கொள்ளலாமா?

அன்று, "ஆயுதப் போராட்டம் மூலமே சோஷலிசம் சாத்தியம்." என்று ஜேவிபி கூறி வந்தது. சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி என்பதால், மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரையிலான உருவப் படங்களை வைத்திருந்தது. சேகுவேராவின் தத்துவங்களை நடைமுறைப் படுத்துவதாகவும் கூறிக் கொண்டது. நாட்டுப்புற மக்கள் அவர்களை "சேகுவேரா காரர்கள்" என்றும் அழைத்தனர். இவ்வளவும் இருந்தும், சோவியத் யூனியன், மாவோவின் சீனா, காஸ்ட்ரோவின் கியூபா போன்ற கம்யூனிச நாடுகள் எல்லாம், இலங்கை அரசை தான் ஆதரித்தன! ஜேவிபி உறுப்பினர்களை தேடி அழித்த, அரச படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கின. இந்தியப் படைகள் நேரடியாக களத்தில் இறங்கி, அழித்தொழிப்பில் ஈடுபட்டன.

அந்த வருடம் மட்டும், எண்பதாயிரம் பேர் அளவில் கொல்லப் பட்டதாக தெரிய வருகின்றது. இத்தனைக்கும் இலங்கை ஒரு போதும் சோஷலிச நாடாக இருக்கவில்லை. உள்நாட்டு முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கத்தை அடக்க துணை போனார்கள். ஜேவிபி யின் தலைமையும், அதன் கொள்கைகளும் எமக்கு ஏற்புடையதல்ல என்பது வேறு விடயம். ஆனால், அந்த இயக்கம், இலங்கையின் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்தியது என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா? ஒரு உயர்சாதியினரின் அரசு, தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கொன்று குவித்தது இனப்படுகொலை ஆகாதா?

எழுபதுகளில் நடந்த இனப்படுகொலையில், இலங்கை அரசுக்கு உறுதுணையாக நின்ற இந்தியாவும், கம்யூனிச நாடுகளும், 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒன்று சேர்ந்தன. "கம்யூனிச நாடுகளை தமிழர்களுக்கு மட்டுமே எதிரானதாக" காட்டுவது, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் இனவாதிகள் மட்டுமே. அவர்களுக்கு எழுபதுகளில் நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது. தெரிந்தாலும் புறக்கணிப்பார்கள். ஆனால், தமிழ் மக்கள் மீது உண்மையான பரிவு கொண்டோர், அப்படி நடக்க முடியாது. எல்லாவற்றையும் அலசி ஆராய்வது அவசியம். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டிய கம்யூனிச நாடுகள், ஏன் இன்று ஆதிக்க சக்திகளுக்கு துணை போகின்றன? அது "இன்று" மட்டும் நடக்கவில்லை. ஐம்பதுகளில், கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தின் விளைவு. ஸ்டாலினின் மறைவு, இரண்டாவது கம்யூனிச அகிலத்தின் சீர்குலைவு, இவற்றின் பின்னர் ஆரம்பமாகியது. சோவியத் யூனியனுடன் பகை முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர், டிட்டோவின் யூகோஸ்லேவியாவும், மாவோவின் சீனாவும் மூன்றாமுலக முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவை புதுப்பித்துக் கொண்டன.

ஸ்டாலின் காலத்தில், உலகில் எந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்தாலும், அதற்கு உதவ வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. (அப்பொழுதும் கிரேக்கத்தில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.) ஆனால், குருஷேவின் பதவிக் காலத்தில் அந்தக் கொள்கை மாற்றப் பட்டது. "சமாதான சகவாழ்வு", "முதலாளித்துவ நாடுகளுடன் நட்புறவு", "அனைத்து பிரஜைகளுக்குமான அரசு" போன்ற கொள்கைகள் பின்பற்றப் பட்டன. ஸ்டாலினின் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் நிராகரிக்கப் பட்டது. கம்யூனிச இயக்க வழக்கத்திற்கு மாறாக, ஒரு முதலாளித்துவ நாடான இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு ஏற்பட்டது. உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்து நின்றன. ஒவ்வொரு நாடும், ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்து கொண்டன. அப்படிச் சேரும் நாடுகள், கொள்கை அடிப்படையில் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று இந்திரா காந்தியின் இந்தியாவும், சிறிமாவோவின் சிறிலங்காவும் சோவியத் முகாமில் தான் சேர்ந்திருந்தன.

மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, இவை எல்லாம் எண்பதுகளுக்கு பின்னர் தான் சூடு பிடித்தன. இன்னும் சொல்லப் போனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தான், அதைப் பற்றி உலகம் அக்கறைப் பட்டது. பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், இதைப் பற்றி யாரும், ஐ.நா. சபை உட்பட, கவலைப் படவில்லை. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இவை எந்த நாட்டில் நடந்தாலும், அந்த நாட்டின் மேல் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. அந்த நாடு, அமெரிக்க முகாமை சேர்ந்தது என்றால், அமெரிக்கா வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் முகாமை சேர்ந்த நாடென்றால், சோவியத் யூனியன் வீட்டோ பிரயோகிக்கும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர், பாதுகாப்புச் சபையில் நடந்து வந்த பலப்பரீட்சை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால், அமெரிக்காவின் ஏக வல்லரசு அபிலாஷைக்கு எதிரான நாடுகள் உதிரிகளாக நின்று எதிர்ப்புக் காட்டின. எப்போதெல்லாம் ஐ.நா. அவையில், ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப் படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் ஒருமித்த கருத்து ஏற்படுவது அரிதாகவே நடந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் கூடும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில், கொண்டு வரப் படும் தீர்மானங்கள் எல்லாமே, அரசியல் சார்புத் தன்மை கொண்டிராதவை என்று கூற முடியாது. குறிப்பாக, சர்வதேச கவனம் பெற்ற, யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள், அமெரிக்காவின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டவை என்ற விமர்சனங்கள் எழுந்தன. ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் அவற்றை எதிர்த்து வந்துள்ளன. உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், பிற இடதுசாரி அமைப்புகளும், அமெரிக்காவின் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தன. "அந்த நாடுகளில் அடக்கப்படும் சிறுபான்மை இனங்களை பாதுகாப்பதற்காகவே," இந்த தீர்மானங்களை கொண்டு வருவதாக அமெரிக்கா கூறிக் கொண்டது.

யூகோஸ்லேவியாவில் ஒடுக்கப்பட்ட கொசோவோ அல்பேனியர்களும், ஈராக்கில் ஒடுக்கப்பட்ட குர்தியர்களும், அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானங்களை வரவேற்றார்கள். அதே நேரம், "தமக்கு எதிராக வாக்களித்த" ரஷ்யா, சீனா, கியூபா, போன்ற நாடுகளை மிகவும் வெறுத்திருப்பார்கள். ஆனால், இதற்கு மறுபக்கம் ஒன்றுண்டு. கொசோவோ அல்பேனிய மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ஈராக் குர்து மக்களுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்தை, துருக்கி குர்திய விடுதலை இயக்கமான பி.கே.கே. எதிர்த்தது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?

"கம்யூனிச நாடுகள், ஐ.நா.வில் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்ததாக," நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அதே மாதிரியான பிரச்சாரங்கள் கொசோவோவிலும், குர்திஸ்தானிலும் நடந்துள்ளன. "கம்யூனிச கொள்கைக்கு விரோதமாக, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக, சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக துணை போன கம்யூனிச நாடுகள்," என்றெல்லாம் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அப்பொழுதெல்லாம், நமது தமிழ் தேசியவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாக பிரகடனம் செய்தார்கள். மிகவும் நல்லது. இதேயளவு ஆர்வம் பாலஸ்தீனப் பிரச்சினையில் காணப்படவில்லையே? அது ஏன்?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் போதெல்லாம், அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததே, அது ஏன்? "உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவளிக்கும்," தேசியவாதிகள் எங்கே போய் ஒளிந்தார்கள்? அறுபதாண்டுகளாக ஒடுக்கப்படும் பாலஸ்தீன சிறுபான்மை இனம் அவர்கள் கண்களுக்கு அகப்படாமல் போனது எப்படி? மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் பெற்ற அரசுகள், சிறுபான்மை இனங்களை ஒடுக்கினால், நாம் கண்டுகொள்ளக் கூடாதா? ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே அரசுக்கும் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் கிடைத்தை, தமிழ்த் தேசியவாதிகள் எப்படி மறந்தார்கள்? இதையே காரணமாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளை தமிழர்களின் விரோதியாக சித்தரிக்காத மர்மம் என்ன? டாலர்களும், பவுன்களும் வாயடைக்க வைத்து விட்டனவா?

கியூபாவின் நிலைப்பாடு சம்பந்தமாக எனக்கும், எல்லோருக்கும் விமர்சனங்கள் உண்டு. என்ன காரணம் இருந்தாலும், சிறிலங்கா பேரினவாத அரசின் பக்கம் நின்றது தவறு தான். "இரண்டு பக்கமும் கண்டித்து விட்டு நடுநிலை வகிக்கும் தெரிவும்", அவர்களுக்கு இருந்தது. தமிழ் மக்களின் வலதுசாரித் தலைமையை நிராகரிக்கும் உரிமை அவர்களுக்குண்டு. அதே நேரம், தமிழ் மக்கள் பாதிக்கப் பட்டதையும் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். "உலகில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கையை" பின்பற்றும் சீனாவுக்கும் இது பொருந்தும். அவர்களது செயற்பாடுகள், தமிழ் மக்களை மென்மேலும் மேலைத்தேய விசுவாசிகளாக மாற்றி வருவதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

சேகுவேரா கியூபாவை விட்டு வெளியேறியவுடன், தூய்மையான கம்யூனிசக் கொள்கையும் அவரோடு விடை பெற்றுச் சென்று விட்டது. பிடல் காஸ்ட்ரோ, குருஷோவின் உலக அரசியலுக்கேற்ப ஆடத் தொடங்கினார். தமது அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஆப்பிரிக்க தலைவர்களை பாதுகாக்கும் பொறுப்பை, குருஷோவ் கியூபாவிடம் ஒப்படைத்தார். அங்கோலாவில் கியூபாப் படைகள் சென்றதால், நிறவெறி தென்னாபிரிக்காவின் படையெடுப்பு முறியடிக்கப் பட்டது. அதே நேரம், அங்கோலாவில் சில சிறுபான்மை இனங்களின் பிரதிநிதியான யுனிட்டா கிளர்ச்சிப் படையையும் எதிர்த்துப் போரிட்டது. அங்கோலா அரசை சோவியத் யூனியனும், யுனிட்டாவை சீனாவும் ஆதரித்தன. அதாவது, ஒடுக்குபவனின் பக்கம் நின்றதும் ஒரு கம்யூனிச நாடு. ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றதும் இன்னொரு கம்யூனிச நாடு. இந்த முரண்பாடு எதனால் ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு தமிழ் தேசியவாதிகளிடம் பதில் உண்டா?

"எத்தியோப்பியா விவகாரம்", தனது வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்ட மாபெரும் தவறு என்று, கியூப அரசு பிற்காலத்தில் ஒத்துக் கொண்டது. எத்தியோப்பியாவில் கியூபாப் படைகளின் பிரசன்னத்தால், நன்மையை விட தீமையே அதிகமாக விளைந்தது. எத்தியோப்பியாவின் ஒகடான் பிரதேசத்தில் வாழும் சோமாலிய சிறுபான்மையினரின் எழுச்சியை அடக்குவதற்காகத் தான், கியூபப் படைகள் தருவிக்கப் பட்டன. அயல்நாடான சோமாலியாவில் இருந்து படையெடுப்பு நடத்தப் பட்டதை மறுப்பதற்கில்லை. என்ன இருந்தாலும், ஒரு சிறுபான்மையினத்தை ஒடுக்குவதற்கு, கியூபா ஏன் துணை போனது? ஆப்பிரிக்காவில் எங்கேயும், கம்யூனிச நாடு என்ற ஒன்று இருக்கவில்லை. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் அமெரிக்காவையும், மறுபக்கம் ரஷ்யாவையும் ஏமாற்றி பிழைத்தவர்கள் பலர். ஒரு காலத்தில் சோவியத் முகாமில் இருந்த சோமாலியா, அமெரிக்க முகாமுக்குள் போய்ச் சேர்ந்து கொண்டது. செங்கடல் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சோவியத் யூனியன், எத்தியோப்பியாவை கைக்குள் போட்டுக் கொண்டது.

அன்று எத்தியோப்பியாவை ஆண்ட மெங்கிஸ்டுவும் ஒரு "கம்யூனிஸ்ட்" தான். அவரின் ஆட்சிக் காலத்தில் தான், தனி நாடு கோரிய எரித்திரியர்களின் போராட்டம் கடுமையாக அடக்கப் பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒராமோ சிறுபான்மையினரை அடக்குவதற்கு, பஞ்சம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பட்டது. இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம், கியூபப் படைகள் எத்தியோப்பியாவில் நிலை கொண்டிருந்தன. சிறுபான்மை இனங்களை ஒடுக்கிய மெங்கிஸ்டுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, சோவியத் யூனியன் ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்தது. அப்பொழுதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து நிற்க வேண்டிய கம்யூனிசக் கடமை பற்றி, யாரும் சோவியத் யூனியனுக்கு பாடம் எடுக்கவில்லை. அது ஏன்?

"ஐ.நா. அவையில், கியூபா இலங்கை அரசுக்கு சார்பாக வாக்களித்தது," என்ற ஒரே காரணத்திற்காக, நமது வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் இந்தக் குதி குதிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், சோமாலிய, ஒரோமோ, எரித்திரிய சிறுபான்மையின மக்கள், கியூபாவை எந்தளவுக்கு வெறுத்திருக்க வேண்டும்? அது போகட்டும். தமிழர்களின் அயலில் வாழும் சிங்கள இன மக்கள், 1971 கிளர்ச்சியை ஒடுக்க உதவிய கம்யூனிச நாடுகள் மீது எந்தளவு வெறுப்புக் கொண்டிருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் எவரும், சில "கம்யூனிச" நாடுகளின் தவறான முடிவுகளுக்காக, கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. ஜேவிபி யை ஆதரிக்கும் சிங்களவர்கள், கணிசமான தொகை உறுப்பினர்களும், இப்பொழுதும் சோஷலிசத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இன்று சோஷலிசப் புரட்சிக்கான புதிய கட்சியை (Progressive Socialist Party) ஸ்தாபித்துள்ளனர். எரித்திரியாவின் விடுதலைக்காக போராடிய EPLF உறுப்பினர்கள், மார்க்சியத்தை மறக்கவில்லை. ஒரோமோ, சோமாலிய சிறுபான்மையின மக்கள் யாரும் சோஷலிசத்தில் குறை காணவில்லை. ஆனால், தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி தடுமாறுகிறார்கள்? தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கப் படுகின்றது என்பதில் தான், இந்தக் கேள்விக்கான விடை மறைந்துள்ளது. அவர்களது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர்.

அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பால் பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு. ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், குரோன்ஸ்டாத் (Kronstadt) சோவியத் அமைப்பை நிர்மூலமாக்கிய செம்படையின் இராணுவ நடவடிக்கையை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? சோவியத் யூனியனும், சீனாவும் எல்லைகளில் படைகளை குவிக்கவில்லையா? ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிதவாத கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சியைக் கவிழ்க்க, சோவியத் படைகளை அனுப்பவில்லையா? கம்யூனிச சீனாவுக்கும், கம்யூனிச வியட்நாமுக்கும் இடையில், எதற்காக எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது? கம்போடியாவில் பொல்பொட்டின் கம்யூனிச அரசை கவிழ்ப்பதற்காக, கம்யூனிச வியட்னாம் படையெடுத்த காரணம் என்ன? அத்தகைய சந்தர்ப்பங்களில், கம்யூனிச சகோதரத்துவம் எங்கே காணாமல் போனது?

ஒரு கம்யூனிஸ்ட் நாட்டினால் தாக்கப் பட்டோம் என்பதற்காக, அந்த நாடுகளின் மக்கள் யாரும் கம்யூனிசத்தை வெறுக்கவில்லை. போர் முடிந்த பின்னரும், அந்த நாடுகளில் சோஷலிசம் தொடர்ந்து இருந்தது. பூகோள அரசியல் வேறு, கம்யூனிச சித்தாந்தம் வேறு என்ற அரசியல் தெளிவு அந்த மக்களுக்கு இருந்தது. மேற்குறிப்பிட்ட சம்பவங்களைப் பற்றி, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலங்களில், முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டன. உணர்ச்சிகரமான பேச்சுகளால் இனவாதத்தை தூண்டி விட்டு, கம்யூனிச வெறுப்பை விதைத்தார்கள். வலதுசாரித் தமிழ்த் தேசியவாதிகளும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ் மக்கள் விழிப்பாக இருந்து, மக்கள் விரோதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும்.

சில கேள்விகளுக்கு விடை தேடினால், உங்களுக்கு குழப்பமே மிஞ்சும். சோவியத் யூனியனால் ஆதரிக்கப் பட்ட சியாட் பாரெயின் சோமாலியா, எவ்வாறு அமெரிக்காவினால் அரவணைக்கப் பட்டது? கம்யூனிச அங்கோலா, சோவியத் ஆயுதங்கள் வாங்கவும், கியூபா படைகளை பராமரிக்கவும் பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை விற்ற வருமானத்தில் இருந்து செலவிடப் பட்டது! அங்கோலாவின் கம்யூனிச அரசை வீழ்த்த போராடிய கிளர்ச்சிப் படையான யுனிட்டாவுக்கு அமெரிக்கா தாராளமாக உதவி வந்தது. பின்னர் அதே அமெரிக்கா, யுனிட்டாவை அழிக்கும் இராணுவ நடவடிக்கையில், அங்கோலா அரசுக்கு உதவியது. அமெரிக்கா ஒரு காலத்தில், யூகோஸ்லேவியா, ரொமேனியா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளுடன் உறவு வைத்திருந்தது. கம்போடியாவில் இருந்து விரட்டப்பட்ட பொல்பொட்டின் படைகளுக்கு உதவியது. அதே போன்று, சோவியத் யூனியனும் இந்தியா, இந்தோனேசியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளுடன் எல்லாம் சிறந்த நட்புறவைப் பேணியது. இதெல்லாம் அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாகத் தெரியவில்லையா? ஐயா பெரியவர்களே, கம்யூனிசம், முதலாளித்துவம் போன்ற தத்துவங்களை விட, எண்ணை, இயற்கை வளங்கள், பிராந்திய பாதுகாப்பு போன்றவை முக்கியமாக கருதப்படும் காலம் இது. எல்லாவற்றிகும் மேலே பூகோள அரசியல் என்ற ஒன்றுண்டு.

ரஷ்யாவும், சீனாவும், கியூபாவும், இலங்கையுடன் நெருங்கி வர வைத்த காரணி எது? ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற விடாமல் தடுக்கும் நோக்கம் என்ன? ஐரோப்பிய காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க முகாம், சோவியத் முகாம், இரண்டிலும் சேர விரும்பாத நாடுகள் பல இருந்தன. சில நாடுகள் வெளிப்படையாக அப்படிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவை எல்லாம் ஒன்று சேர்ந்து, மூன்றாவது அணியை உருவாக்கின. அவை தம்மை "அணிசேரா நாடுகள்" என்று அழைத்துக் கொண்டன. மார்ஷல் டிட்டோ (யூகோஸ்லேவியா), ஜவஹர்லால் நேரு (இந்தியா), சுகார்னோ (இந்தோனேசியா), பிடல் காஸ்ட்ரோ (கியூபா), இவர்களுடன் சிறிமாவோ (இலங்கை) போன்ற முக்கிய தலைவர்கள், அந்த சர்வதேச அமைப்பை உருவாக்க முன் நின்று பாடுபட்டார்கள். சோவியத் யூனியனும், சீனாவும் வெளியில் இருந்து கொண்டு ஆதரவு வழங்கின.

அணி சேரா நாடுகளும், ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசுகளும், மேற்கத்திய நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் சந்தேகக் கண் கொண்டு நோக்கினார்கள். மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பொழுதெல்லாம், தமது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக சந்தேகப் பட்டார்கள். அந்த நாட்டின் அரசு மிகத் தீவிரமான அமெரிக்க விசுவாசியாக இருந்தாலும், அவர்கள் மனதில் எச்சரிக்கை உணர்வு ஓடிக் கொண்டிருக்கும். ஏனென்றால், இந்த நாடுகள் எல்லாம், ஏதோவொரு உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. மறு பக்கத்தில், மேற்கத்திய நாடுகள், "எந்தவொரு உள்நாட்டுப் பிரச்சினையுமற்ற" அமைதியான நாடுகளாக காட்சியளிக்கின்றன. அந்த நாடுகளிலும் பிரச்சினை இருந்தாலும், போர் வெடிக்குமளவிற்கு கொந்தளிப்பான நிலைமை காணப்படவில்லை. அவர்கள், பிற நாடுகளின் இனப்பிரச்சினைகளை தீர்க்கும் மத்தியஸ்தர்களாக, தம்மை நியமித்துக் கொள்கின்றனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். மூன்றாமுலக நாடுகளின் இனங்கள் பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டம்.

எது எப்படி இருப்பினும், மூன்றாம் உலக நாடுகளின் மனித உரிமைகள் விவகாரம், மேற்கத்திய நாடுகளால் அளவுக்கு அதிகமாகவே கவனிக்கப் படுகின்றது. நாங்கள் அதனை ஒரு நல்ல விடயம் என்று வரவேற்கலாம். ஆனால், இன்னொரு பக்கத்தில் விரும்பத் தகாத எதிர் விளைவுகளையும் உண்டாக்குகின்றது. நேரெதிர் கொள்கைகளை கொண்ட அரசுகளைக் கூட, பொது எதிரிக்கு எதிராக ஒன்று சேர வைக்கின்றது. ஈரானுக்கும், வெனிசுவேலாவுக்கும் இடையில் எந்தக் கொள்கையில் உடன்பாடு? சீனாவுக்கும், சூடானுக்கும் இடையில் எந்த விடயத்தில் ஒற்றுமை காணப்படுகின்றது? ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நிற்பதற்கு காரணமும் அது தான். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த பொழுது, இஸ்லாமிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், சில ஆசிய நாடுகளும் எதிர்த்து வாக்களித்தன. அமெரிக்காவின் தீவிர விசுவாசிகளான சவூதி அரேபியா, உகண்டா போன்ற நாடுகளும் எதிர்த்து தான் வாக்களித்தன.

ஐரோப்பிய நாடுகள் தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொண்டது போல, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆயினும் குறுகிய கால நலன்களை மட்டுமே சிந்திக்கும் அரசியல் தலைவர்கள், அத்தகைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, இலங்கை ஆட்சியாளர்கள், இன்னமும் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை நீடிப்பது தமது நலன்களுக்கு சாதகமானது என்று நினைக்கிறார்கள். மறு பக்கத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் அதையே விரும்புகின்றனர். இனப்பிரச்சினை தீர்க்கப் பட்டு விட்டால், அவர்களின் பிழைப்புக்கு வழியேது? இலங்கையில் மட்டுமல்ல, வேறு பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் இது தான் நிலைமை.

"ஆப்பிரிக்க நாடுகளுக்கு தமிழரின் பிரச்சினை பற்றிய போதுமான அறிவு கிடையாது. அதனால் தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள், அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை." என்று சிலர் சப்பைக் கட்டு கட்டலாம். தமிழ் தேசியவாதிகள் பலருக்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இனப்பிரச்சினைகள் குறிந்து எந்த அறிவும் கிடையாது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற, நைஜீரியா, எத்தியோப்பியா, மாலி ஆகிய நாடுகளில் நடந்த இன ஒடுக்குமுறை போர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கின்றனர்? அது சம்பந்தமான பிரச்சினை ஐ.நா. அவையில் விவாதிக்கப் பட்டால், யாருக்கு ஆதரவளிப்பார்கள்? ஏற்கனவே, பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகள், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசி வருவது எமக்குத் தெரிந்தது தானே? வட அயர்லாந்தை ஒடுக்கும் பிரிட்டன் குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன?

இன்றைய உலகமயமாக்கப் பட்ட உலகில், ஒரு நாட்டின் பிரச்சினை பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில், தமிழர் பிரச்சினை தெரியாமல் தான் இலங்கை அரசை ஆதரித்தாக கூறுவது ஏற்கத் தக்கதல்ல. முதலில், "இலங்கையை எதிர்த்த நாடுகள் அல்லது ஆதரித்த நாடுகள்" என்று கூறுவது சரியாகுமா? ஐ.நா. போன்ற சர்வதேச அரங்கில் விவாதிக்கப் படும் பொருளானது, சர்வதேசத்தின் பொறுப்புணர்வை வேண்டி நிற்கின்றது. அந்த இடத்தில், வல்லரசுப் போட்டிகள், ஆதிக்க அரசியல், பொருளாதார நலன்கள், இவை யாவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப் படும். எந்தவொரு நாடும், அமெரிக்கா உட்பட, தமிழர் சார்பாகவோ, அல்லது சிங்களவர் சார்பாகவோ நடந்து கொள்வதில்லை. அப்படி நாங்கள் தான் நினைத்துக் கொள்கிறோம். நியாயம் என்று பார்த்தாலும், "பொது நியாயம்" என்ற ஒன்று உலகில் கிடையாது. ஒவ்வொரு குழுவும், தமக்கு சார்பான நியாயம் பேசுவதில் தான் முனைப்புக் காட்டுகின்றனர்.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் உலக மேலாதிக்கத்திற்காக போட்டி போட்டன. ஐ.நா. சபையில் தமக்கு ஆதரவான தேசங்களை பாதுகாத்தன. இன்று மீண்டும் புதியதொரு வல்லரசுப் போட்டி, புதியதொரு பனிப்போர். "ஐ.நா. விலும் உங்கள் நலன்கள் பாதுகாத்து தரப்படும்" என்ற வாக்குறுதி கொடுத்து ஆதரவாளர்களை சேர்க்கிறார்கள். முன்னொரு காலத்தில், ஒரு கொள்கைக்காக போராடிய காலம் இன்று இல்லை. இப்பொழுது சொந்த தேசம், சொந்த இனம் ஆகியவற்றின் நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன. அதிலிருந்து தான் உலகத்தைப் பார்க்கிறார்கள். அது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, இலங்கை, கியூபா எந்த நாடாகவிருந்தாலும், தமது தேச நலனை தான் முதன்மையாக கருதுகின்றனர். இரண்டு நாடுகளின் நலன்கள் ஒன்று சேரும் பொழுது, கூட்டாகச் செயற்படுகின்றனர். "தேசியம்" நமக்குத் தேவையா?

ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளைப் பார்த்து, "கம்யூனிச நாடுகள்" என்று விளிப்பதும் காலத்திற்கு ஒவ்வாதது. "தமிழர்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்று சேர வேண்டும்," என்று தேசியம் பேசும் தமிழ் தேசியவாதிகள், வெளி உலகத்தை, "கம்யூனிச நாடுகள்", "இஸ்லாமிய நாடுகள்" என்று பிரித்துப் பார்ப்பதன் தார்ப்பரியம் என்ன? அந்த நாடுகளுக்கென்று "தேச நலன்" இருக்க முடியாதா? முதலில் "கம்யூனிச நாடு" என்று அழைப்பது சரியாகுமா? மார்க்சிய சித்தாந்தத்தின் படி, கம்யூனிச நாடு இன்னும் உலகில் தோன்றவில்லை. இதுவரை இருந்தவை எல்லாம் சோஷலிச நாடுகள். அதன் அர்த்தம், அவற்றிற்கென்று தேசியம், இறைமை எல்லாம் உண்டு. தனது உரையின் முடிவில் பிடல் காஸ்ட்ரோ முழங்கும், "தந்தையர் நாடு இன்றேல் மரணம்" என்பது ஒரு கம்யூனிச சுலோகமா? "பாட்டாளிகளுக்கு தாய்நாடு கிடையாது" என்ற மார்க்சின் கூற்றோடு முரண்படவில்லையா?

நுணுக்கமாகப் பார்த்தால் தான், இங்கேயுள்ள தேசியங்களுக்கு இடையிலான முரண்பாடு வெளித் தெரியும். தேசியம் என்ற கோட்பாட்டின் குறைபாடும், அதற்குள் தான் மறைந்திருக்கின்றது. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒன்றை ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. தேசங்களுக்கு இடையிலான எல்லைகளை உடைத்து, அனைத்துலக உழைக்கும் மக்களை ஒன்று சேர்ப்போம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையின் சுருக்கம், தமிழகத்தில் வெளியாகியுள்ள, ஏப்ரல் மாத "ஆழம்" சஞ்சிகையில் பிரசுரமாகியது.)

Monday, April 02, 2012

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை

உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
************************************************


மேலதிக தகவல்களுக்கு:
அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்
Tuareg rebellion (2007–2009)
Tuareg people
Libya Spillover Leads to Mali Coup