Tuesday, December 25, 2012

கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!


நாம் கறுப்பர்! 
நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 15

(பதினைந்தாம்  பாகம்)


கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் 
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே 
(தொல்காப்பியம், புற. 27)

ஒரு முறை, சூடான் நாட்டை சேர்ந்த நண்பி ஒருவரின் திருமண விருந்துக்கு செல்லூம் வாய்ப்புக் கிடைத்தது. சூடானில் திருமணம் செய்து கொண்டு வந்தவர், அந்த வீடியோவை எமக்குப் போட்டுக் காட்டினார். ஒரு மண விழாவுக்குரிய, வழக்கமான சடங்குகளை காட்டும் வீடியோ முடிந்த பின்னர், "மணப் பெண் நடனம் என்ற வீடியோ ஒன்று இருக்கின்றது. அதனை இங்கேயுள்ள ஆண்கள் யாரும் பார்க்கக் கூடாது."  என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.  அனால், அந்த வீடியோவை நாங்கள் எல்லோரும் பார்த்து இரசிப்பதில் அவருக்கு ஆட்சேபனை ஒன்றும் இருக்கவில்லை. உண்மையில், சூடான் நாட்டு சம்பிரதாயப் படி, திருமணத்திற்கு முதல் நாள், மணமகளின் வீட்டில் நடக்கும், "மணப்பெண் நடனத்தை" பார்க்க ஆண்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. மணப்பெண்ணின் தோழிகள் மட்டுமே அங்கே இருக்கலாம். இன்றைய நாகரீகமடைந்த உலகில், "மணப்பெண் நடனம்" வெறும் சடங்காக மட்டும் பின்பற்றப் படுகின்றது. 

ஆண்களும், பெண்களும் பிரித்து வைக்கப் பட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தில், "ஒரு பெண் நடனமாடுவதை பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டும்" என்ற அளவில் சுருங்கி விட்டது. இது பற்றி மேலும் ஆராய்ந்த பொழுது, பல ஆச்சரியத்திற்குரிய தகவல்கள் கிடைத்தன. இஸ்லாத்திற்கு முந்திய வட ஆப்பிரிக்காவில், நமது பார்வைக்கு பாலியல் விரசம் உள்ளதாக தோன்றும் நடனங்கள், ஒரு மரபாக பின்பற்றப் பட்டு வந்துள்ளன. ஒரு சிறுமிக்கு சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு விழா) நடக்கும் காலத்தில், அந்த ஊரில் உள்ள பெண்கள் பாலியல் அங்க அசைவுகளை காட்டும் நடனம் ஆடுவார்கள். சிலநேரம், மதக் கடமை காரணமாகவும் அது போன்ற நடனங்களை ஆடுவார்கள். இதற்கு முந்திய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள, பண்டைய காலத்தில், தம்முஸ் கடவுளின் மரணத்தை நினைவுகூரும் சடங்காக, இஷ்தார் கோயிலில் கூடும் பெண்கள் அந்த நடனத்தை ஆடுவார்கள். எந்தவொரு மதக் கடமையும், கோயிலுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஒவ்வொரு குடும்பத்தினாலும், அவரவர் வீடுகளில் கொண்டாடப் படுவதுண்டு. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. இருந்தாலும், பண்டைய மரபின் தொடர்ச்சி எங்கோ ஒரு இடத்தில் நிலைத்து நிற்கின்றது.

1920 ல், பிரிட்டிஷ் காலனிய கால எகிப்தின் இரகசிய பொலிஸ் உயர் அதிகாரியான McPherson, இது போன்ற நடனம் ஒன்றை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தை பற்றி, தனது குறிப்புகளில் எழுதியுள்ளார். அந்தக் காலத்திய எகிப்தில் கூட, இது போன்ற நடனங்களை பார்க்க வெளியாரை அனுமதிப்பதில்லை. எங்காவது ஒரு கிராமத்தில், மிகவும் இரகசியமாக நடக்கும். பெரும்பான்மை எகிப்தியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், அந்த நடனத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவெனில், ஒரு தெய்வச் சிலையை சுற்றி, பெண்கள் நடனமாடுவார்கள். அந்த நடனமானது, நம்மூர் பூசாரி கலையாடுவதைப் போன்றிருக்கும். எகிப்திலும் நடனம் என்ற பெயரில், சாமியாடுவது தான் நடக்கின்றது. தம்மை மறந்து கலையாடும் பெண்கள், உச்சத்தை அடைந்ததும் மயங்கி விழுந்து விடுவார்கள். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் ஆடு, கோழி போன்ற மிருகங்களை அறுத்து, அவற்றின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்திருப்பார்கள். அந்த இரத்தத்தை எடுத்து, அங்கிருக்கும் தெய்வச் சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள். 

இந்த தகவல்கள் எல்லாம் McPherson  எழுதிய குறிப்புகளில் காணக் கிடைக்கின்றன. இஸ்லாமிய மதத்தில் சிலை வணக்கத்திற்கு இடமில்லை என்பது, எங்கள் எல்லோருக்கும் தெரியும். சாமியாடுவது, மிருகங்களை பலி கொடுப்பது போன்ற சடங்குகளையும், இஸ்லாமிய மதத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆகவே, இவை எல்லாம் இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கு முந்திய வட-ஆப்பிரிக்க மக்களின் மரபு, எமது கிராமங்களில் நடக்கும் சிறு தெய்வ வழிபாட்டுடன் ஒத்துப் போவது ஆச்சரியத்திற்குரியது அல்லவா? அப்படியானால், தமிழராகிய நாங்களும், எகிப்திய, சூடானிய மக்களும், ஒரு காலத்தில், ஓரிடத்தில் வாழ்ந்த, ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்திருக்க வேண்டும். இந்த உண்மையை யாராவது மறுக்க முடியுமா? 

இஸ்லாம் என்பது ஒரு மதமாக மட்டுமல்லாமல், அரசியல் இயக்கமாகவும் இருந்து வருகின்றது. அது ஒரு சமூகத்தில், கிறிஸ்தவ மதம் ஏற்படுத்தியதை விட, பாரிய சமூக மாற்றத்தை உருவாக்கியது. இன்றைக்கிருக்கும் முஸ்லிம்கள் கூட, இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கைகளை, மரபுகளை பற்றி அறிந்து கொள்வதற்கு விரும்புவதில்லை. அதனால், அவற்றைப் பற்றி யாரும் ஆராய்வதில்லை. இஸ்லாமிய மயமாக்கல் என்பது, ஒரு புது யுகத்தின் தொடக்கமாக, புதியதொரு நாகரீகமாக கருதப் படுகின்றது. அரேபியர்கள் முஸ்லிம்களாக மாறுவதற்கு முன்னர், சிலை வணக்கத்தை கடைப்பிடித்து வந்தனர் என்பது திருக்குரானில் கூட எழுதப் பட்டிருக்கிறது. இஸ்லாத்திற்கு முந்திய அரேபியர்கள், எந்த தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள்? அதனை ஆராய்ந்தால், பல ஆச்சரியத்திற்குரிய தகவல்கள் கிடைக்கின்றன. புராதன அரேபியரின் மத நம்பிக்கையில், சந்திரக் கடவுளை வழிபடுவது பிரதான இடத்தை பிடித்திருந்தது. சில அரபு குலங்கள் சந்திரனை ஆண் தெய்வமாகவும், வேறு சில குலங்கள் பெண் தெய்வமாகவும் வழிபட்டு வந்தன. தமிழரின் கலாச்சாரத்திலும், சந்திரனை நிலா என்று பெண்ணாக உருவகிப்பது வழக்கம். 

அரேபியர்கள் மூன்று பெண் தெய்வங்களை வழிபட்டனர். அந்த மூன்று தெய்வங்களும், நிலாவின் மூன்று வளர்ச்சிப் படிநிலைகளை குறிக்கின்றன. கோரை  (Q're) வளர்பிறையை குறிக்கும் தெய்வம். அல் உஷா (Al Uzza) முழு நிலவைக் குறிக்கும். அல் மனாத் (Al Manat) தேய் பிறையை குறிக்கும். (கோரை என்பது வளர்பிறையை குறித்தாலும், மக்களால் அல் லாத் என்ற பெயரில் வழிபடப் பட்டது) உஷா என்ற பெயர், இந்து மதத்தில் உமாதேவியாரை குறிக்கும் சொல்லாகும். அரேபியரின் மூன்று பெண் தெய்வங்களும், இந்து மதத்தில் வரும் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று பெண் தெய்வங்களை ஒத்திருப்பதையும் அவதானிக்கலாம். அந்த மூன்று பெண் தெய்வங்களும், அல் லாத் (அல்லா) என்ற தலைமைக் கடவுளின் புதல்விகள். அதாவது, அந்த மூன்று தெய்வங்களும், மூன்று வெவ்வேறு கடமையில் ஈடுபடும் கடவுளின் அவதாரங்கள். அல்  லாத், அல் உஷா என்பன படைத்தல், காத்தல் தொழில்களையும், அல் மனாத் அழித்தல் தொழில்களையும் செய்கின்றன. இந்து மதத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளைப் போன்றது. கிறிஸ்தவ மதத்தில் வரும், பிதா, சுதன், பரிசுத்த ஆவி தத்துவமும் ஒன்று தான்.

அரேபியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான பின்னரும், அரேபியரின் மத நம்பிக்கை பெருமளவு மாறவில்லை. ஆனால், எல்லா சாம்ராஜ்யங்களிலும் நடப்பதைப் போல, அரேபியரின் தெய்வங்களுக்கு கிரேக்கப் பெயர்கள் சூட்டப் பட்டன. நாம் இன்று கிறிஸ்துமஸ் தினம் என்று கொண்டாடும் டிசம்பர் 25, பண்டைய உலகில் சூரிய வழிபாட்டுக்குரிய தினமாகும். அதாவது, டிசம்பர் 21 சூரியனின் பாதை மாறுகின்றது (winter solstice). அன்று பூமியில் மிகக் குறைந்த நேரம் சூரிய ஒளி கிடைக்கும். இந்துக்களின் நவராத்திரி, பத்தாவது நாள் "தஷாரா" பண்டிகையுடன் நிறைவடைகின்றது. சமஸ்கிருதத்தில் தஷாரா என்பது, பத்தாவது என்ற அர்த்தத்தில் வரும் சொல்லாகும். அரபி மொழியில், ஆஷாரா என்றால் பத்து. இன்றைய ஜோர்டானில் உள்ள நபெத்தியர்களின் பேட்ரா நகரத்தில், தஷாரா பண்டிகை கொண்டாடப் பட்டு வந்தது. அவர்கள் அதனை "Dhu i- Shara" என்று அழைத்தனர். அது அல்லா என்ற குழந்தைக் கடவுளின் பிறப்பாக, டிசம்பர் 25 அன்று கொண்டாடப் பட்டு வந்தது. (சைப்பிரஸ் கிறிஸ்தவ மதகுரு எபிபானியுஸ் http://en.wikipedia.org/wiki/Epiphanius_of_Salamis)

அல் லாத் என்ற கன்னித் தாயின் மகனாக, அல்லா என்ற ஆண் குழந்தை பிறந்ததாக, பண்டைய அரேபிய மக்களின் புராணக் கதை ஒன்று தெரிவிக்கின்றது. அதே நேரம், அல் உஷா வேல மரத்தில் குடியிருக்கும், தஷாரா என்ற குறிஞ்சித் தெய்வத்தை  பெற்றெடுத்த கன்னித் தாய் என்றும் வழிபடப் பட்டார். (St. Epiphanius, கி.பி. 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எழுதிய குறிப்புகள்.)  பண்டைய தமிழர்களின் சங்க கால இலக்கியங்களில், கொற்றவை என்ற கன்னித் தாயின் மகனாக, சேயோன் என்ற ஆண் குழந்தை பிறந்ததாக எழுதப் பட்டுள்ளது. இது கிறிஸ்தவர்களின் கன்னி மரியாளுக்கு இயேசு பிறந்த கதையுடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது. "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதை மறந்து விட்ட மனித இனம், இன்று வெவ்வேறு மதங்களாக, இனங்களாக பிரிந்து நின்று மோதிக் கொண்டிருக்கிறது. நாம் இன்று நாகரிக உலகத்தில் வாழ்கின்றோமா, அல்லது காட்டுமிராண்டி காலத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோமா?  

சேயோன், கொற்றவையின் மகன் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது பாபிலோனியரின், சுமேரியரின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றது. தமுசி/தம்முஸ் என்ற ஆண் தெய்வம், இனானா/இஷ்தார் என்ற தாய்த் தெய்வத்தின் மகனாக பிறந்ததாக அவர்கள் நம்பினார்கள். ஆதி கால ஆப்பிரிக்க சமுதாயத்திலும்,அவ்வாறானதொரு  நம்பிக்கை இருந்தது.  தாய்க் கடவுளான சூரியனின் மகனாக, காளை மாட்டுக் கடவுள் பிறந்ததாக ஆப்பிரிக்கர்கள் நம்பினார்கள். தமிழர்கள் பொங்கல் பண்டிகை அன்று, சூரியக் கடவுளுக்கு பொங்குவதும், அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதும், பண்டைய ஆப்பிரிக்க மத நம்பிக்கை தான்.  ஆதித் தமிழரின் மத நம்பிக்கையும், அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய, மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போவது ஆச்சரியத்திற்குரியதல்ல. 

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய ஓரிறைக் கொள்கை கொண்ட மதங்கள் தோன்றுவதற்கு முன்னர், உலகம் முழுவதும் பல தெய்வ வழிபாடு இருந்து வந்தது. உண்மை தான். ஆனால், உலகில் பல தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு முன்னர், "இரு தெய்வ வழிபாடு" இருந்தது என்பது பலருக்கு தெரியாது. அது என்ன இரு தெய்வ வழிபாடு? ஒரு ஆண்  தெய்வமும், ஒரு பெண் தெய்வமும் முதன்மைக் கடவுளராக வழிபடப் பட்டு வந்தன. ஆணும், பெண்ணும் சேர்ந்ததே இவ்வுலகு என்பது, புராதன மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. பெண்ணை தாய்க் கடவுளாகவும், ஆணை குழந்தைக் கடவுளாகவும் உருவகித்தனர். பின்னர், அதே பெண் கடவுளை, ஆண் கடவுளின் மனைவியாக சித்தரித்தனர். இந்த தத்துவம், அன்றைய தாய் வழிச் சமுதாயத்திற்கு சிறப்பாகப் பொருந்துகின்றது. சுமேரிய/பாபிலோனிய மத நம்பிக்கையின் படி, இனானா/இஷ்தார் என்ற பெண் தெய்வம், தமுசி/தம்முஸ் என்ற ஆண் தெய்வத்தின் தாயாகவும், மனைவியாகவும் இருக்கிறது. சங்க கால தமிழர்கள் மத்தியிலும், இதே போன்ற நம்பிக்கை நிலவியது. கொற்றவையின் மகன் சேயோன். கொற்றவைக்கு வள்ளி என்றும், சேயோனுக்கு முருகன் என்றும் வேறு பெயர்கள் உள்ளன. சுமேரிய/பாபிலோனியரின் மத நம்பிக்கை போன்று, தாயான  கொற்றவை, முருகனின் மனைவியான வள்ளி யாக உருவகிக்கப் படுகிறாள். 

இன்றைய தமிழரின் ஆண் ஆதிக்க சமுதாயத்தில், வள்ளியின் பாத்திரம் முக்கியமற்றதாக தரமிறக்கப் பட்டுள்ளது. ஆனால், புராதன தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக இருந்த சங்க கால தமிழர்கள், வள்ளியை பிரதானமான பெண் தெய்வமாக வழிபட்டு வந்தனர். அதனை தொல்காப்பியமும் உறுதிப் படுத்துகின்றது:
"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற 
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் 
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே" 
(தொல்காப்பியம், புற. 27)
இதன் விளக்கம்: சூரியன், நெருப்பு, சந்திரன் என்ற மூன்றையும் வாழ்த்துவதும், கடவுள் வாழ்த்து போலவே. சங்க காலத் தமிழில், வள்ளி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி தருவது, அல்லது சந்திரன் என்ற அர்த்தம் இருந்தது.
(பார்க்க: சாமி. சிதம்பரனார் எழுதிய "தொல்காப்பியத் தமிழர்")

தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியாவுக்கும், பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கும் சென்றனர். அதற்கான சாத்தியக்கூறுகளையும், சான்றுகளையும், இதுவரையும் விரிவாகப் பார்த்தோம். இதற்கு முன்னர் இங்கே அலசப்பட்ட விடயங்கள் எல்லாம், எமக்கு இவ்வளவு காலமும் தெரியாமல் போனது எப்படி? தமிழர்கள் தமது முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை மறக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? அதற்குக் காரணம், தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சி, எங்கோ ஒரு இடத்தில் அறுந்து விட்டது. அதற்கான காரணத்தை பலர் மிகச் சரியாக அனுமானித்திருப்பார்கள். அதாவது, ஆரியரின் வருகையின் பின்னர் அந்த மாற்றம் ஏற்பட்டது என்பது சரியானது தான். ஆனால், யார் இந்த ஆரியர்கள்? அவர்கள் ஒரு தனியான இனமா? உண்மையிலேயே ஆரியர்கள் என்ற இனத்தவர்கள், படையெடுத்து வந்து திராவிடர்களின் மண்ணை ஆக்கிரமித்தார்களா? ஆரியர்கள் இந்தியாவை மட்டும் இலக்காக கொண்டு படையெடுத்து வந்தனரா? ஆரியர்கள் அரேபியாவுக்கும், அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்கும் படையெடுத்து சென்றிருக்கக் கூடாதா? ஆரியர் பற்றிய கதைகளில், உண்மைகள் எவை? பொய்கள் எவை? அவற்றைப் பற்றி விரிவாக, அடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். 

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்


  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters

6 comments:

சார்வாகன் said...

நண்பர் கலையரசன்,
ஒரு மதத்தின் வழக்கங்கள் இன்னொரு மதத்தில் கொஞ்சம் மாற்றங்களுடன் இருக்கும்.

//சாமியாடுவது, மிருகங்களை பலி கொடுப்பது போன்ற சடங்குகளையும், இஸ்லாமிய மதத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.//

சாமியாடுவது எனில் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி மனிதன் மூலம்,அல்லது மனிதனுடன் பேசி தகவல் அளித்தல். இஸ்லாமில் இப்படி தகவல் பரிமாற்றம் அதாவது சாமியாடுதல் செய்த்வர்கள் இறைத்தூதர்கள். முக்மதுக்கு பிறகு இப்படி செய்த்தி வருவது நின்று விட்டது என பெரும்பானமை இஸ்லாமியர்கள் ஏற்கின்றனர்.

மிருகங்களைப் பலி கொடுப்பதுதானே பக்ரீத், நரபலியாக இறைவன் இப்ராஹிமின் மகனைக் கேட்க , கடைசி தருணத்தில் பலி மறுத்து ஆட்டினை பலியிட்ட்து இன்றுவரை தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத்.


இஸ்லாமுக்கு முந்தைய அனைத்துக் கடவுள்களையும் ஒரே கடவுளின் பெயராக,தன்மையாக மாற்றியதுதான் இஸ்லாம்.

இஸ்லாமுக்கு முந்தைய அரபிய வரலாற்றை இருண்ட காலம் என் சொல்வதுதான் மதப் பிரச்சாரம்.

**

பல தெய்வ வழிபாடுகள் சில ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டே இருக்கும், இனவிருத்தி என்பதே மிக முக்கியம் என்பதால் இது சார்ந்தே ஆண் பெண் கடவுள்கள் உருவாக்கப் பட்டன. சிவலிங்கம், மெக்காவில் உள்ள கருப்புக் கல் போன்ற்வை இதன் எ.கா சொல்லலாம்.
http://en.wikipedia.org/wiki/List_of_fertility_deities

http://en.wikipedia.org/wiki/Lingam


ஆரியர் பற்றி எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி

Venkat Raja said...

படிக்க படிக்க சுவாரசியமாக உள்ளது... அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...

சிரிப்புசிங்காரம் said...

சுத்துங்க தம்பி ...சுத்துங்க...கேக்குறவன் கேணையன் தமிழன் காதை காட்டிகிட்டு இருக்கான் சுத்துங்க தம்பி சுத்துங்க.... ( ஏன்தம்பி தமிழன்னா அதுல கிறிஸ்தவங்களும்,முஸ்லீம்களும் வருவாங்களா..?? இல்ல இளிச்சவாயன் ஹிந்து மட்டுந்தான் வருவானா...??? இல்ல இந்த திராவிட கட்சிக்காரன் எல்லாம் தமிழ், தமிழன்னு சொல்லுறான் தமிழ்லதான் பேரு வைக்கனுங்கறான் ஆனா இவனுங்க பேச்ச ஹிந்துவ தவிர வேற எவனும் கேக்க மாட்டேங்குறான் அதான் கேட்டேன்...)

M. Shanmugam said...

வித்தியாசமான பதிவு
தகவலுக்கு நன்றி

Cinema News

Sivamjothi said...


வணக்கம்

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

சுவனப் பிரியன் said...

பல புதிய தகவல்கள். சவுதியில் அல் ஊலா என்ற ஊரில் உள்ள சுமார் 5000 வருடங்களுக்கு முந்தய கட்டிடங்கள் இன்றும் உள்ளன. மலைகளை குடைந்து அமைத்திருப்பார்கள். அந்த வீடுகளின் முன்னால் கருடப் பறவை இறக்கையை விரித்தது போன்ற அமைப்பில் பல இடங்களில் செதுக்கியுள்ளதை பார்த்தேன். அந்த கிராமத்தை கடந்து சென்ற போது 'இறைவனின் சாபம் இறங்கிய ஊர் இது' என்று முகமது நபி தனது தோழர்களிடம் சொன்னதாக ஹதீதுகளில் பார்க்கிறோம். அந்த ஊர் பெரும அழிவு ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அது போல் இன்றும் மனிதர்கள் வாழ லாயக்கற்றதாக அந்த இடம் இருந்ததை பார்த்தேன். அந்த மக்களும் சிலை வழிபாடு கொண்டவர்களாக இருந்ததை அங்குள்ள சிற்பங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.