Saturday, October 27, 2012

கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!


நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 10

(பத்தாம்  பாகம்)

"நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம், வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள்செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப் போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார்."
- விவிலியம் (ஆதியாகமம், அதிகாரம் 11)

சைவ சமயத்தில், சிவராத்திரி அனுஷ்டிப்பதை பற்றிய கதை ஒன்றுண்டு. ஊழிப் பிரளயம் (சுனாமி எனும் ஆழிப் பேரலை) ஏற்பட்டு, உலகில் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கின. அதிலே எஞ்சியவர்கள், சிவபெருமானை நினைத்து வருடத்திற்கு ஒரு நாள் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். பிரளயத்தில் தப்பிய மக்களின் கதை, உலகில் பல இன மக்களால் நினைவுகூரப் படுகின்றது. ஒவ்வொருவரும் தமது மொழியில் அதற்கு பெயரிடுகின்றனர். ஆயினும் எல்லாக் கதையும் ஒரே மாதிரி இருக்கின்றன. விவிலிய நூலில் வரும், பிரளயத்தில் இருந்து நோவாவும், பிள்ளைகளும், தெரிந்தெடுக்கப்பட்ட விலங்குகளும் தப்பிய கதை நிறையப் பேருக்குத் தெரியும். பைபிள் ஒரு மத நூலாக இருந்ததால், நோவாவின் கதை பிரபலமானது. இது பழைய ஏற்பாட்டில் வருவதால், அதனை யூதர்களின் நம்பிக்கையாக கருதப்பட வேண்டும். தமது மூதாதையர்கள் மட்டுமே, உலகில் முதலில் தோன்றிய மூத்தகுடி என்று யூதர்கள் நம்புகின்றனர். ஆனால், விவிலிய நூலில் எழுதியிருப்பதை ஆராய்ந்தால், "யூதர்களின் மூதாதையர்" என்று குறிப்பிடப் படும் பெயர்கள், புராதன இனங்களை குறிக்கின்றன. ஆகவே, அந்தப் பெயர்கள் தனி ஒரு நபரை குறிக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளக் கூடாது.

ஊழிப் பிரளயம் ஒன்று ஏற்பட்டு, அதில் பல நாடுகள் அழியும் என்று ஆண்டவர் நோவாவுக்கு எச்சரிக்கின்றார். ஆண்டவர் உத்தரவுப்படி, ஒரு பெரிய கப்பலைக் கட்டும் நோவா, அதில் தனது குடும்பத்தையும், சில விலங்குகளையும் ஏற்றிக் கொண்டு தப்புகின்றார். பிரளயத்தில் இருந்து தப்பிய நோவாவின் குடும்பத்தினர், புதிய இடத்தில் குடியேறி சந்ததியை பெருக்குகின்றனர். நோவாவின் புதல்வர்களில் ஒருவன் ஹம். அவர் மகனின் பெயர் குஷ். குஷ்ஷுக்கு ஆறு புதல்வர்கள். அதில் ஒருவர் நிம்ரூட் (அல்லது நிம் ரொட்). உலகில் முதல் மனிதர்களான, ஆதாம், ஏவாள் அணிந்திருந்த ஆடை, இந்த பரம்பரை வழியாக நிம்ரூட் வசம் வந்து சேர்ந்ததாக யூத மத நம்பிக்கை ஒன்றுண்டு. நிம்ரூட் பற்றி பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன. அவற்றை பிறகு பார்ப்போம். விவிலிய நூலில் கூறப்படும், ஹம், குஷ் என்பவர்கள் ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். "ஹமித்தியர்கள்", "குஷ்ஷித்தியர்கள்" போன்று, அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இனக்குழுமங்களை, விவிலியம் கறுப்பர்களாக அடையாளம் காண்கின்றது. ஆகவே நிம்ரூட் கூட ஒரு கறுப்பனாக இருந்திருக்க வேண்டும்.

நிம்ரூட் என்ற பெயர் ஏற்படக் காரணம் பலவாக இருக்கலாம். ஈராக்கில் இருந்த மராட் என்ற நாட்டின் அதிபதி என்ற அர்த்தத்தில், நி+மராட் என்ற பெயர் மருவி வந்திருக்கலாம். மேலும் அது ஒரு ஹீபுரு, அல்லது அரபி போன்ற செமிட்டிக் மொழிகளில் மட்டுமே அவ்வாறு கூறப் படுகின்றது. நிஜப்பெயர் வேறாக இருக்கலாம். அது இனிமேலும் தெரிய வருவதற்கான சாத்தியமும் குறைவு. பண்டைய ஈராக்கிய நகரங்களான பாபிலோன், ஏரேக், ஊர் போன்றவற்றை இணைத்து ஒரே நாடாக ஆண்ட மன்னனாக, நிம்ரூட்  யூதர்களால் நம்பப் படுகின்றான். சுமேரியர்களும் அது போன்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஊழிப் பிரளயம் ஏற்பட்ட பின்னர் தப்பிய குடிகள் எல்லாம் புதிய நகரங்களை அமைத்துக் கொண்டன. அவற்றை நிம்ரூட் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இது சுமேரியர்களின் புராணக் கதை ஆகும். அதாவது, சுமேரியர்களின் சரித்திர காலகட்டத்திற்கு முன்பிருந்த கர்ணபரம்பரைக் கதை ஆகும். இந்து, யூத, சுமேரிய நம்பிக்கைகளை வைத்து பார்க்கும் பொழுது, உலகில் ஒரு பகுதியில் ஆழிப் பேரலை ஏற்படுத்திய அழிவுகளின் பின்னர், குறிப்பிட்டளவு மக்கள் தப்பியுள்ளனர். அவர்கள் புதிய நாகரீகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மூன்று மதங்களும் ஒன்று சேரும் புள்ளியாக, மேற்கு ஆசியா உள்ளது. ஆகவே, ஊழிப் பிரளயமும் அங்கே தான் ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்து தப்பி, உலகின் வேறு பகுதிகளில் குடியேறிய மக்கள், ஒரே கதையை காவிச் சென்றுள்ளனர். ஆப்பிரிக்கர்கள், யூதர்கள், அரேபியர்கள், திராவிடர்கள், தமிழர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்கிறார்கள். (அதற்காக, "உலகம் முழுவதும் தமிழன் ஆண்டான்" என்று சொன்னால், எல்லோருமாக சேர்ந்து எதிர்க்க வந்து விடுவார்கள்.)

பாபிலோனியாவில் நிம்ரூட் மன்னன் ஆண்ட காலத்தில், "உலகம் முழுவதும் ஒரே மொழி" பேசப்பட்டது. சொர்க்கத்திற்கு செல்லும் நோக்குடன், பாபெல் கோபுரம் கட்டியதால் சீற்றமடைந்த ஆண்டவர், மக்கள் எழுபதுக்கும் பேற்பட்ட மொழிகளைப் பேசுமாறு ஆணையிட்டதாக ஒரு பைபிள் கதை உண்டு. நான் முன்னர் குறிப்பிட்ட, "புராதன மக்கள் ஒரு மூல இனத்தில் இருந்து பிரிந்து வந்திருக்கலாம்." என்ற கூற்றை இந்த பைபிள் கதை எடுத்துக் காட்டுகின்றது. யூதர்களாலும், இஸ்லாமியராலும் மதிக்கப்படும் தீர்க்கதரிசியான ஆப்பிரஹாம் (அரபியில்: இப்ராஹீம்), நிம்ரூட் மன்னனுக்கும் இடையில் நடந்த விவாதம் பற்றி ஒரு கதை வருகின்றது. நிம்ரூட் பல கடவுட் கோட்பாட்டை ஆதரித்து வாதம் செய்கையில், ஆபிரஹாம் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தி வாதம் செய்தார். "மனிதனை வாழ வைப்பதும், மரணிக்க வைப்பதும் இறைவனின் செயல்." என்று ஆபிரஹாம் கூறினார். அதனை மறுத்த நிம்ரூட், இரண்டு அடிமைகளை அழைத்து, ஒருவனின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, மற்றவனைக் கொல்லுமாறு பணித்தார். அப்போது ஆபிரஹாம், நிம்ரூட்டை மடக்கும் வகையில், "கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்க வைக்க முடியுமா?" என்று கேட்டதாகவும், அதனால் ஆத்திரமுற்ற மன்னன் ஆபிரஹாமை நாடுகடத்தியதாக கூறப்படுகின்றது. அதற்குப் பிறகு தான், நிம்ரூட் மன்னனின் நாட்டை ஆண்டவர் அழித்ததாக ஹீபுருக்கள் நம்புகின்றனர்.

"வானுயர  பாபேல் கோபுரம் கட்டியதன் காரணமாகவே, பாபிலோனிய நாகரீகம் அழிந்தது." என்பதை இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ மதவாதிகள் நம்புகின்றனர். ஐரோப்பாவில் வாழும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெருந் தேசக் கட்டமைப்பை எதிர்க்கின்றனர். அதற்காக அவர்கள், பாபேல் கோபுரத்தை உதாரணமாகக் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், பல்வேறு மொழிகளை பேசும் ஐரோப்பிய இனங்களை ஒன்று சேர்த்து, ஒரே மொழி பேச வைக்கும் நோக்கம் கொண்டது. இது பாபேல் கட்டப்பட்ட காலத்தில் மக்கள், ஒரே மொழியை பேசியதை நினைவுபடுத்துகின்றது என்று கூறுகின்றனர். அதே போன்று, 2001, செப்டம்பர் 11 அன்று, நியூ யோர்க் நகரில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்ட தாக்குதலை கொண்டாடும் மதவாதிகளும் உள்ளனர். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, யூத, கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளும், 9/11 தாக்குதலானது ஆண்டவரின் தண்டனை என்று நம்புகின்றனர். தமது கருத்தை நியாயப்படுத்த, பைபிளில் இருந்து பாபேல் கோபுரம் பற்றிய உதாரணத்தை காட்டுகின்றனர்.

ஹீபுருக்களின் மத நம்பிக்கையின் படி, "நிம்ரூட் ஒரு வில்லன். தானே கடவுள் என்ற மமதையில், பாபெல் கோபுரத்தை கட்டினான்." "ஆண்டவர் அதற்கு தண்டனை வழங்கினார்." இந்து மதத்தில், பிரகலாதன் கதையிலும் அதே மாதிரியான ஒற்றுமையைக் காணலாம். "கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்." என்று கூறிய பிரகலாதனை பரிகசித்த, அவனின் தந்தையும் மன்னனுமான இரணியகசிபு, நரசிம்மனால் கொல்லப் படுகின்றான். பிரகலாதன் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், இரணியன் அதனை தடுத்ததாகவும் கூறப் படுகின்றது. அப்படியானால், இரணியன் சிவனை வழிபட்டு வந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கதைகள் இரண்டும் நடந்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இருப்பினும், ஆப்ரஹாம் கதையில் இருந்தும், பிரகலாதன் கதையில் இருந்தும் நாங்கள் சில உண்மைகளை புரிந்து கொள்ளலாம். இரண்டு முரண்பாடான தத்துவங்களைக் கொண்ட மதங்கள் அங்கே மோதிக் கொள்கின்றன. ஒன்று, பொருள் முதல்வாத தத்துவம் கொண்ட பண்டைய மதம், மற்றது கருத்தியல் முதல்வாதத்தை கொண்ட புதிய மதம். இரண்டுக்கும் இடையிலான போராட்டம், மேற்குறிப்பிட்ட கதைகளில் கூறப்படுகின்றது. அந்தக் காலத்தில், உலகில் நடந்த கலாச்சாரப் புரட்சி ஒன்றையும் குறிக்கலாம். அதாவது, ஒரு காலத்தில், பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக சமுதாயம் ஒன்றிருந்தது. அதற்கு மாறாக, நமது காலத்தில் "பாசிசம்" என்று அழைக்கப்படும், ஒரே மாதிரியான பண்பாட்டை வலியுறுத்தும் சமுதாயம் உருவானது. ஒரு வேளை, சிவபெருமானின் பூர்வீகம் பற்றிய தகவலும், அந்தக் கலாச்சாரப் புரட்சி நடந்த காலத்தில் தொலைந்து போயிருக்கலாம்.

யூதர்களின் தோரா, கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, முஸ்லிம்களின் குரான், இந்த மூன்றும் ஒரே மூலத்தை கொண்டுள்ளன. ஆகவே, ஒரே மாதிரியான கதைகள் இம் மூன்று நூல்களிலும் காணப்படுவது இயல்பான விடயம். நான் இங்கே குறிப்பிடும் பைபிள் கதைகள், மும்மதத்வர்களாலும் நம்பப் படுபவை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், பைபிளில் எழுதப்படாத ஹீபுரு மக்களின் நம்பிக்கைகளும், குர்ஆனில் எழுதப்படாத அரபு மக்களின் நம்பிக்கைகளும் இருக்கின்றன. அவற்றையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கி.பி. 10 ம் நூற்றாண்டில், அரபு-இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் முசுட் (Musud), அந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்களின் வரலாறு பற்றிய செவி வழிக் கதைகளையும் தொகுத்திருந்தார். அரேபியர்களின் புராதன நாகரீகமாக, இன்றைய ஜோர்டானில் அழிந்து போன நபெத்தியர்களின் நாகரீகம் கருதப் படுகின்றது. நபெத்தியர்கள் என்ற இனமும், அவர்கள் பேசிய மொழியும் கூட இன்று இல்லை. இருப்பினும், அவர்கள் இன்றைய அரேபியரின் மூதாதையராக இருந்திருக்க வாய்ப்புண்டு. நிம்ரூட் என்ற மன்னன், நபெத்தியர்களை 500 ஆண்டுகள் ஆண்டதாக, அந்த மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. அதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம். ஒரு காலத்தில், ஈராக்கில் இருந்து ஜோர்டான் வரையில், நிம்ரூட் என்ற பெயரைக் கொண்ட மன்னன் ஆட்சி செய்துள்ளான். அவனது ஆட்சிக் காலம், வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது.

நிம்ரூட் மன்னனின் ஆட்சிக் காலத்தில், மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசியதாகவும், கோபுரம் கட்டியதாகவும், விவிலிய நூலில் கூறப்பட்ட கதையை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்திப் பார்ப்போம். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியா வழியாக இந்தியா வந்து சேர்ந்திருக்கலாம், என்று நான் எழுதி வருவதற்கு சான்றாக இதைக் கருதலாம். எகிப்திய, சோமாலிய, சுமேரிய மொழிகளுக்கும், தமிழுக்கும் இடையிலான ஒற்றுமைகள் பற்றி ஏற்கனவே பல உதாரணங்களை காட்டி இருக்கிறேன். அதன் அர்த்தம், இவை எல்லாம் ஒரு மூல மொழியில் இருந்து பிறந்தவை. மேலும், பாபேல் கோபுரம் பற்றிய உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். எகிப்தியர்கள் பிரமிட்கள் கட்டியது போன்று, சுமேரியர்கள் (அல்லது பாபிலோனியர்கள்) சிகுரத் என்ற பெயரில் உயரமான கோயில்களை கட்டி வழிபட்டு வந்தனர். பிரமிட் என்பது ஒரு கோயில் அல்ல, ஆனால் ஒரு சமாதி என்பது உண்மை தான். ஆனால், இன்றளவும் அது ஒரு உலக அதிசயமாகவே பார்க்கப் படுகின்றது. அத்தகைய பிரமாண்டமான கட்டிடங்களை கட்டும் அறிவியல் தெரிந்தவர்கள், இன்றைய விஞ்ஞான யுகத்திலும் இல்லை. ஆகவே, அவற்றை கட்டிய மக்கள் அபாரமான தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். அது எப்படி சாத்தியமாயிற்று? நமது அறிவுக்கெட்டிய வரையில் எதுவும் புலனாகாததால், வேற்றுக் கிரக வாசிகள் கட்டியிருக்கலாம் என்று கூட நினைக்கிறோம்.

சுமேரியர்கள் கட்டிய சிகுரத் கோபுரங்களும் ஒரு உலக அதிசயம் தான். எகிப்தியர்கள் பாறைகளை கொண்டு பிரமிட்கள் கட்டினார்கள். சுமேரியர்கள், செங்கற்களை வைத்து சிகுரத் கட்டினார்கள். அவரவர் நாட்டில் கிடைத்த இயற்கை வளத்தை பயன்படுத்திக் கட்டினார்கள். அது மட்டுமே வித்தியாசம். பிரமிட், சிகுரத் ஆகிய கோபுரங்கள், வானை நோக்கி உயரமாக கட்டப்பட்ட காரணம் என்ன? அண்டவெளியில் இன்னொரு கிரகத்தில் இருந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகவா? அந்த மர்மம் இன்னும் துலங்கவில்லை. இருப்பினும், பெருஞ் செலவில் கட்டப்பட்ட பாபிலோன் கோபுரத்தின் விளைவாக, பொருளாதார நெருக்கடிகள் தோன்றியிருக்கலாம். அதன் விளைவாக கலகங்கள் ஏற்பட்டு, உள்நாட்டுப் போர்கள் நடந்து, மக்கள் சிதறி இருக்கலாம். நிச்சயமாக, பைபிள் போன்ற மத நூல்கள், இப்படி எல்லாம் விளக்கமாக எழுதப் போவதில்லை. மத நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரையில், "கடவுளுக்கு எதிரான மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி கண்டு, கடும் சீற்றமுற்ற கடவுள் அவர்களை தண்டித்தார்." அவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். 

எகிப்தியர்களும், சுமேரியர்களும் கட்டி வளர்த்த விஞ்ஞான அறிவியல், பிற்காலத்தில் தொலைந்து போனது, என்பது மட்டும் நிச்சயம். அந்த நாகரீகத்தின் வீழ்ச்சியின் பின்னர் தான், யூத மற்றும், ஆரிய நாகரீகங்கள் தோன்றின. அவை இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இருப்பினும், பாபிலோனியாவில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் குடியேறிய திராவிட இனங்கள், தமது முன்னோரின் அறிவியலை முழுமையாக மறந்து விடவில்லை. பாபிலோனிய தெய்வங்கள், மத நம்பிக்கை, மற்றும் கோயில் கட்டும் தொழில்நுட்பத்தையும் காவிக் கொண்டு வந்திருந்தார்கள். இந்திய திராவிடர்கள், தமக்குத் தெரிந்த வகையில், சில மாற்றங்களுடன் கோயில்களை கட்டினார்கள். பாபிலோனியர்களின் சிகுராத் மாதிரி, கூம்பு வடிவில் அமைந்த கோபுரங்களை கட்டினார்கள். சுமேரியரின் சிகுரத் என்ற சொல்லும், தமிழரின் சிகரம் என்ற சொல்லும் ஒரே மாதிரி ஒலிப்பது தற்செயல் அல்ல.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் ! _____________________________________________________________________

 உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5.Mythology, by C. Scott Littleton
6.Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7.Civilisation One, by Christopher Knight and Alan Butler
8.Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9.precolonial Black Africa, by Cheikh Anta Diop

1 comment:

SIVAAJI HEALTH WINGS said...

நல்லதொரு முயற்சி எமது முகவரி எமக்கு தெரியாது தமிழின் அடையாளம் இந்துமதம் ...அதன் பெருமை மெய்ஞ்ஞனத்தை விளக்க தெரியாததது தான் விஞ்ஞானம் உங்கள் தேடலின் நோக்கம் புரிகிறது விஞ்ஞானம் இன்னமும் வயர் இல்லாத இடிதாங்கியை தயாரிக்க வில்லை ஆனால் எம் கோயில்களின் கோபுரத்தின் கலசம் அது என்பது பலருக்கு தெரியவில்லை நம்மை நாமே தொலைத்து விட்டோம்