Saturday, October 13, 2012

ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

பண்டைய தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு 

(ஆறாம் பாகம்)

சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது  என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட  நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்"  என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?

நிச்சயமாக, 16 ம் நூற்றாண்டில், காலனிய கால வரலாற்றுடன் தான் ஆரம்பமாகியது. அதற்கு முன்னர், எந்தவொரு இனத்தையும் வெள்ளை என்றோ அல்லது கருப்பு என்றோ பார்க்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று கருதுவதும் தவறானது. வெள்ளையின மேலாதிக்க கொள்கைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அது போன்ற கருத்தியல்கள் பரப்பப் படுகின்றன. தமிழகத் திராவிட இயக்கத்தினரும், தமிழ் தேசியவாதிகளும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளமை ஆச்சரியத்திற்குரியது. மானிடவியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வெள்ளையின அறிஞர்களாலேயே தொகுக்கப் பட்டு வந்தன. ஒரு வெள்ளையன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று, நாங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். 

இந்திய உப கண்டத்திற்கு மட்டுமே சிறப்பம்சமான சாதியமைப்பு, இந்து மதம் போன்றன, வெள்ளையினத்தவர் வாழும் பிற நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால், வர்ணாச்சிரம சாதியமைப்பும், இந்து மதமும் வெள்ளையின ஆரியர்களினால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று வாதிடுவது தவறானது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள், தாம் தங்கி வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சமுதாய அமைப்பை கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான தெய்வங்களை வழிபட்டனர். இதற்கு முந்திய அத்தியாயங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட தமிழரின் (திராவிடரின்) கலாச்சார விழுமியங்களை பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில், ஆப்பிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதி மீது கவனத்தை செலுத்துவோம்.

ஆபிரிக்க கண்டத்திற்கும், இந்திய உப கண்டத்திற்கும் நடுவில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? அரேபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் உங்கள் மனக்கண்ணில் தோன்றும். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது உண்மையானால், மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் சில கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அது குறித்து ஆராய்வதே, இனி இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருக்கும். அரேபியருக்கும், தமிழருக்கும் இன அடிப்படையில் ஒற்றுமைகள் உள்ளன.  அரேபிய தீபகற்பத்தின் நாகரீகம் காலத்தால் பிந்தியது என்பதால், அதற்கு முந்திய மத்திய கிழக்கு நாகரீகத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரீகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்த சுமேரிய சாம்ராஜ்யம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அனேகமாக, காலத்தால் பிந்திய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில், கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதே நேரம், காலத்தால் முந்திய சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் (ஆப்பிரிக்க-திராவிடர்கள்) பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றது. இதற்கு ஆதாரமாக, அந்த மக்கள் பேசும் ஒரே மாதிரியான மொழிகளைக் குறிப்பிடலாம். ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். அதே மாதிரி, சோமாலி, அம்ஹாரி, திக்ரிஞா (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளும் செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான்.  (Semitic Languages,  http://en.wikipedia.org/wiki/Semitic_languages)

நாங்கள் இப்பொழுது, உலகில் நாகரிக சமூகங்கள் தோன்றிய காலகட்டம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டம், மூவாயிரம் அல்லது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தியது. (விவிலிய நூல் அதனை மனித இனம் தோன்றிய காலகட்டம் என்று கூறுகின்றது.) குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, மனித இனம், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச்  சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது. மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். அந்த பரிணாம மாற்றம் நடைபெற்ற காலப்பகுதியில், மிருகங்களைப் போன்று வேட்டையாடியும், கனிகளைப் பறித்துண்டும் வாழ்ந்த மனித இனம், பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னரே நாகரிக சமுதாயங்களை உருவாக்கி இருப்பார்கள். ஆகவே, பிற்காலத்தில் "நாகரீகமடைந்த சமுதாயங்கள்" பெரும் படை திரட்டிப்  போரிட்டு, ஒன்றை மற்றது அழித்த காலத்தில் மனித நேயம் காணாமல் போய் விட்டது. அதற்கு முன்னர், "காட்டுமிராண்டிகளாக"  வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடிக் கொன்றார்கள்.   கறுப்பினத்தவராயினும், வெள்ளயினத்தவராயினும் ஒருவரை மற்றவர் அழிக்கும் யுத்தங்கள், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. "இனப்பற்று, இன ஒற்றுமை, இன ஐக்கியம்..." இன்னோரன்ன வார்த்தைகள், உலகில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கும் அது போன்ற கருத்தியல்கள் ஆக்கிரமிப்புப் போர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப் படுகின்றன.  

சுமேரியர் நாகரீகம் பற்றிய தகவல்களும், சுமேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தே கிடைக்கின்றன. அதாவது, சுமேரியர் போன்ற இன மக்கள் இன்றைய ஈராக்கில் மட்டுமல்லாது, வட ஆப்பிரிக்கா, அரேபியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக, அரேபிய தீபகற்பம் "மூதாதையரின் பூமி" என்பதான தகவல்கள், சுமேரியரின் புராணக் கதைகளிலேயே எழுதப் பட்டுள்ளன. அதற்குமப்பால், இன்றைய சோமாலியாவின் வட முனைப் பகுதியிலும் சுமேரியரின் மூதாதையர் வாழ்ந்திருக்கலாம். சுமேரியரின் நாகரீகம் தோன்றிய எரிடு நகர மக்கள், வேறொரு நாட்டில் இருந்து கப்பலில் வந்ததாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று நிலவியது. எரிடு  என்றால் கடற்கரை என்று அர்த்தம். அனேகமாக, அங்கிருந்து சோமாலியா வரை கப்பற் போக்குவரத்து இடம்பெற்றிருக்கலாம். சுமேரிய கோயில்களில், தெய்வச் சிலைகளுக்கு சாம்பிராணி புகை காட்டி வழிபடப் பட்டது. இந்த சாம்பிராணி மரம், வட  சோமாலியா, யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. (உலகில் வேறெங்கும் சாம்பிராணி மரம் முளைப்பதில்லை.)இன்றைக்கும் இந்திய உபகண்டத்தை சேர்ந்த இந்துக்கள், சாம்பிராணி தூபம் காட்டி வழிபடுவது வழக்கம். ஆகவே, இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சோமாலியா, யேமனில் விளைந்த சாம்பிராணி இந்தியா வரை ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தது. பிற்காலத்தில் தோன்றிய யூத மதம், சாம்பிராணி காட்டி வழிபடுவதை தடை செய்தது.  

ஏன் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்? என்று பிற மதத்தினர் நையாண்டி செய்யும் பொழுது, இந்து மத நம்பிக்கையாளர்கள் பதில் கூறத் தெரியாமல் முழிப்பார்கள். "இவை ஒரே கடவுளின் அவதாரங்கள்" என்று,ஆன்மீக பண்டிதர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத உண்மை, இந்த தெய்வங்கள் முன்பு வெவ்வேறு இனக்குழுக்களால் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடப் பட்டு வந்தன. நகர்மயமாகிய சிறு தேசங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனியான தெய்வங்களை கொண்டிருந்தன. சுமேரியாவிலும் முன்பு அப்படித் தான் இருந்துள்ளது. எரிடு, ஊர், உருக், நிப்பூர், லகாஷ், கிஷ்  போன்ற பல சிறிய தேசங்களை, பிற்காலத்தில் தோன்றிய சுமேரிய சாம்ராஜ்யம் ஒன்று சேர்த்து, ஒரே நாடாக்கியது. அதனால், அந்தந்த பிராந்திய தெய்வங்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். இவை எல்லாம், ஒரே கடவுளின் பல பெயர்கள் என்று கூறப்பட்டன.  சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான ஆக்கிரமிப்புப் போர்கள், தெய்வங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கின. பிற்காலத்தில் பலம் பொருந்திய வல்லரசுகாக தோன்றிய,  அக்காடிய (வட ஈராக்),பாபிலோனிய (தென் ஈராக்), அசிரிய (இன்றைய சிரியா) சாம்ராஜ்யங்கள், சுமேரியரின் தெய்வங்களை உள்வாங்கிக் கொண்டன. அவற்றிற்கு தமது மொழியில் வேறு பெயர்களை சூட்டின. 

ஒரே கடவுளை வேறு பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு, சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள் மட்டும் காரணமல்ல. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வேறொரு இடத்தில் சென்று குடியேறினால், அங்கே புதிய மொழிகள் உருவாகின்றன. தாயகத்துடனான தொடர்பு அறுதல், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களினால், மனிதர்களின் மொழி, பண்பாடு என்பன மாறுபடலாம். ஆனால், அவர்களின் மத நம்பிக்கைகள் பெருமளவு மாறுபடுவதில்லை. காலனிய காலத்தில், தென்னாபிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் கூலிகளாக சென்ற இந்தியர்களை அதற்கு உதாரணமாக காட்டலாம்.  

பாபிலோனியர்கள் இஷ்தார் என்று அழைத்த பெண் தெய்வத்தின் சுமேரியப் பெயர் "இனானா". (http://en.wikipedia.org/wiki/Inanna)சுமேரியரின் பல பெண் தெய்வங்கள், இனானாவின் அவதாராமாக கருதப்பட்டன. அதாவது, இந்து மதத்தில் ஆதிபராசக்தி போன்று, ஒரு தாய் தெய்வம். அதன் பூர்வீகப் பெயர் "நின் அனா", அதன் அர்த்தம் தமிழில் "அகிலாண்டேஸ்வரி!" நம்மூர் பராசக்தி போன்று, உயிர்களின் பிறப்புக்கும், பயிர்களின் செழிப்புக்கும், இல்லறத்திற்கும் நன்மை வேண்டி வழிபடப் பட வேண்டிய தெய்வம் இனானா. சுமேரியர்கள் அந்த தெய்வத்தை, "அம்மா இனானா"  என்று அழைத்தார்கள். சுமேரிய மொழியில் அம்மா என்றாலும், தமிழ் மொழியில் அம்மா தான்! ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், இனானா என்ற பூமி மாதாவை, "மரியாள்" என்று பெயர் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் தாயாக்கி வழிபட வைத்தது. 

அது மட்டுமல்ல, "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்ற பிரபலமான கிறிஸ்தவ மும்மூர்த்திகளின் தத்துவமும் சுமேரியர்களிடம் இருந்து கடன்வாங்கியது தான். பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமானது. இந்து மத தத்துவத்தில் கூறப்படுவதைப் போல, இந்த மூன்று கடவுளரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றனர். மீண்டும் இன்னொரு தமிழ்ச் சொல், சுமேரியாவில் முக்கிய இடம் பிடித்திருந்தது. "அணுவில் இருந்து அனைத்தும் தோன்றியது" அந்த அணு யார்? சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அணு தான் உயிர்களை படைப்பதாக  சுமேரியர்கள் நம்பினார்கள். அதாவது, இந்து மதத்தில் பிரம்மாவின் தொழிலைச் செய்பவர். அடுத்ததாக, எயா அல்லது என்கி என்ற காக்கும் கடவுள். இந்து மதத்தில் விஷ்ணு போன்றவர். விஷ்ணுவின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. அதே போன்று, எயா ஆதி காலத்தில் கடலில் மீனாக அவதரித்ததாக சுமேரியரின் புராணக் கதை ஒன்றுண்டு. மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில். இவர் சிவனோடு, அல்லது உருத்திரனோடு ஒப்பிடத் தக்கவர்.  

 இந்து மதத்தில், பிற ஆண் தெய்வங்கள் எல்லாம், ஒன்றில் விஷ்ணுவின், அல்லது சிவனின் அவதாரங்களாக கருதப்படுகின்றன. சுமேரிய மதத்திலும், எயா, என்லில் ஆகிய கடவுளரின் மனித வடிவிலான அவதாரங்கள் பற்றிய பல்வேறு கதைகள் உலாவின. தமூஸ் என்ற தெய்வத்தின் கதை, சுமேரியர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. வேறெந்த தெய்வத்திற்கும் அந்தளவு மகிமை கிட்டவில்லை. சுமேரிய மொழியில் தமுசி, பாபிலோனிய மொழியில் தமுஸ், கிரேக்க மொழியில் அடோனிஸ். தமிழ் மொழியில் சிவன்? எந்த நாட்டில் எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும், அந்தப் புராணக் கதை மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் ஈரான் வரையில் வாழ்ந்த மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வத்தின் கதை, அத்தனை இலகுவாக மறக்கப் பட்டிருக்காது. அது இன்றைக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் நிலைத்து நிற்கலாம். அதிசயப் படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதைக்கும், தமுஸ் தெய்வத்தின் புராணக் கதைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இயேசு பிறந்த பாலஸ்தீனம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. பாபிலோனியாவில் நடந்ததை எல்லாம் விவிலிய நூலில் விலாவாரியாக எழுதத் தெரிந்த ஆண்டவருக்கு, மிகவும் பிரபலமான தமுஸ் தெய்வத்தின் கதை தெரியாதது ஆச்சரியத்திற்குரியது. 

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு: 
1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில் _________________________________________________________________________ உசாத்துணை நூல்கள்:
1.From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2.Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3.Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4.Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie

1 comment:

SaraK said...

தமுஸ் தெய்வத்தின் கதை சுறுக்கமாக சொல்ல முடியுமா சார்..