Monday, June 18, 2012

பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

(இரண்டாம் பாகம்)


"உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மாவீரன் அலெக்சாண்டர்" பற்றி நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருப்போம். மேலைத்தேய வரலாற்று ஆசிரியர்கள், அலெக்சாண்டர் எந்தெந்த நாடுகளை வெற்றி கொண்டான் என்று விபரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். வரலாறு என்பதற்கப்பால், அலெக்சாண்டர் பற்றிய புனைகதைகளும் உலாவுகின்றன. அலெக்சாண்டர், இலங்கையில் உள்ள சிவனொளிபாத மலைக்கு விஜயம் செய்ததாக ஒரு கதை உண்டு. அந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, அலெக்சாண்டரின் படைகள் தென்னிந்தியா வரை வந்ததாகவும், குடகு மலையில் வாழும் மக்கள், கிரேக்க வம்சாவளியினர் என்றும், ஒரு கற்பனைக் கதை உலாவுகின்றது. இந்தக் கதை, இந்தியா பற்றி Lonely Planet வெளியிட்ட பயண நூலிலும் எழுதப் பட்டுள்ளது. அலெக்சாண்டர் இலங்கைக்கு விஜயம் செய்த கதை, காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயரினால் பரப்பப் பட்டது. மேலைத்தேய நாட்டவர்கள் இது போன்ற கதைகளை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். அதன் நோக்கம், காலனிய காலகட்டத்திற்கு முன்னமே, வெள்ளையர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்ற இனவாத கருத்துகளை பரப்புவது.

ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகமடைந்திருந்த ஒரே நாடு, கிரேக்கம் மட்டுமே. அலெக்சாண்டரின் படையெடுப்புகளுக்குப் பின்னர் தான், கிரேக்கர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பிற ஐரோப்பியர்களும், கிரேக்கர்கள் மூலமாகத் தான் உலகின் பிற நாடுகளைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் வாழும் மக்களைப் பற்றி அறிந்து கொண்டார்கள். இன்று மத்திய தரைக் கடல் நாடுகளில் பல கிரேக்கப் பெயர்கள் காணப் படுகின்றன. உதாரணத்திற்கு, எத்தியோப்பியா என்றால், கிரேக்கத்தில் "கருகிய முகத்தை கொண்டவர்கள்" என்று அர்த்தம். கிரேக்க மொழியில், கருப்பர்களை மவ்ரி (μαυροι) என்று அழைப்பார்கள். மவ்ரி என்ற சொல் மருவி, பிற்காலத்தில் "மூர்" என்ற சொல் தோன்றியது. மொரிட்டானியா என்ற நாட்டுப் பெயரின் மூலமும் மவ்ரி தான். அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள், மவ்ரி என்ற சொல்லை கருப்பர்கள் என்ற அர்த்தத்தில் பாவித்தார்களா? அனேகமாக அந்த அர்த்தம் பிற்காலத்தில் வந்திருக்கலாம்.

அலெக்சாண்டரின் படையெடுப்புகளின் பொழுது, ஆப்பிரிக்காவில் கிரேக்கர்கள் சந்தித்த இனம் ஒன்றின் பெயராக "மவ்ரி" இருந்திருக்கலாம். அதன் மூலம் எதுவாக இருக்கும்? பாண்டிய மன்னர்கள் காலத்தில், தமிழகத்தில் "மறவர்கள்" என்றொரு இனக்குழு இருந்தது. ஒரு பழங்குடி இனமாக, அல்லது தனியான சாதியாக கருதப்பட்ட மறவர்கள், ஆதி திராவிட இனக் குழுமத்தை சேர்ந்த மக்கள் என்பதில் சந்தேகமில்லை. வட இந்தியாவில், "மௌரியர்களின் சாம்ராஜ்யம்" இருந்தது. மௌரியர்களும் திராவிட இனத்தவர்கள் தான் என்பதை, வரலாற்று அறிஞர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். தென் அரேபிய நாடான யேமனில், "மஹரி அல்லது மேஹ்ரி" என்ற பெயரைக் கொண்ட இனக்குழு ஒன்று வாழ்கின்றது. அவர்கள் அரபி போன்ற, ஆனால் வேறொரு மொழி பேசுகின்றனர். (இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.) கிரேக்க மவ்ரி தான், அரபியில் மஹரி என்று மருவி வந்துள்ளது. பெயர்ச் சொற்கள் இடத்துக்கிடம் மாறுபடுவதுண்டு. கிரேக்க சொல்லான மவ்ரி, இத்தாலியில் மவ்ரோ என்றும், பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொரிஸ் என்றும் மருவி வந்துள்ளது. இன்றைக்கு அவை எல்லாம், தனி நபர்களின் பெயர்களாக மாறி விட்டன. ஒரு பிள்ளைக்கு, தமிழில் மறவன் என்று பெயரிட்டாலும், ஆங்கிலத்தில் மொரிஸ் என்று பெயரிட்டாலும், இரண்டினதும் அர்த்தம் ஒன்று தான். அதாவது, கருப்பன்!

அலெக்சாண்டர் ஆப்பிரிக்கா வரை படையெடுத்து சென்றது, சரித்திரத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் கிரேக்கப் படைகளால் எகிப்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. நுபியா (இன்று:சூடான்) என்ற ராஜ்யத்தை கைப்பற்ற யுத்தம் நடந்ததாகவும், நுபிய நாட்டின் இராணி, படைகளை வழிநடத்தி தீரத்துடன் போரிட்டதாகவும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. அலெக்சாண்டர் நுபியா வரை படையெடுத்து சென்றதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. கறுப்பர்களின் ராஜ்யமான நுபியாவை ஆண்ட இராணியின் மகிமை பண்டைய ஐரோப்பா வரை பரவி இருந்ததை அந்தக் குறிப்புகள் காட்டுகின்றன. பண்டைய எகிப்தியரின் காலத்தில் இருந்து, தேசத்தை நிர்வகித்த பெண்கள் பற்றிய வரலாற்றுக் கதைகள் பல உள்ளன. இன்றைக்கு, வட ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில், கடுமையான ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயம் வேறு. ரோமர்களும், அரேபியர்களும் வட ஆப்பிரிக்கப் படையெடுப்புகளின் பொழுது, பெண்கள் தலைமை தாங்கிய படைகளை எதிர்கொண்டு போரிட்டார்கள்.

இறைதூதர் முகமதுவின் படைகள், அரேபிய தீபகற்பத்தை இஸ்லாமிய மயப் படுத்துவதற்காக நடந்த யுத்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமதுவின் படைகளை எதிர்த்துப் போரிட்ட, அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவி ஹிந்த் அல் ஹுனுத் (Hind al-Hunnud) பற்றிய கதை மிகவும் பிரபலமானது. 
Hind al-Hunnud (also known as Hind al-Hunud) was a “Battle Queen” in the Quraish tribe of the kingdom of Kindah who led a battle against Muhammad. In Arabian culture, women played an important role in battle. The emotional center of traditional Arab tribal warfare, the cult of the battle queen, derived from the earliest roots of Arabic culture, evolved through time, and still exists. The battle queen mounted her camel and led them into battle. Sometimes this woman functioned merely as a ritual figure with little direct military purpose: a combination cheerleader, symbolic commander in chief, goddess, and living pinup.

பண்டைய அரேபிய இனக் குழுவினர், கன்னிப் பெண்களை போர்க் களத்திற்கு அனுப்பும் வழக்கத்தை உடையவர்கள். கூந்தலை விரித்து விட்ட படி, திறந்த மார்புடன், கையில் வாளேந்திய கன்னிப் பெண்கள், ஆண்களை வசீகரிப்பதற்காக போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டனர். உண்மையில், இது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் பாரம்பரியமாக இருக்கலாம். பெண் வழிச் சமுதாயம், அரசு அமைத்த காலத்தில், பெண்கள் இனக்குழுத் தலைவிகளாக, தளபதிகளாக இருந்துள்ளனர். அதுவே பெண் தெய்வ வழிபாட்டின் மூலமாகவும் இருந்திருக்கலாம். தமிழர்களின் கண்ணகி வழிபாடு, இது போன்ற சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆப்பிரிக்காவில், நுபியாவை ஆண்ட இராணிகளை "கண்டகி" என்று அழைப்பார்கள். கண்டகி என்பது அவர்களது பட்டப் பெயர். ஆகவே, நுபிய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப் படுவதற்கு முன்னமே, அந்தப் பெயர் சம்பிரதாயமாகப் பின்பற்றப் பட்டு வந்திருக்கலாம். விவிலிய நூலில், எத்தியோப்பியாவை ஆண்ட கண்டகி (Candace) இராணி பற்றிய குறிப்புகள் வருகின்றன. கண்ணகிக்கும், கண்டகிக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. அதனை உறுதிப் படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நம்மூர் கோவலன்-கண்ணகி கதை போன்ற ஒரு புராணக் கதை எகிப்தியர்களின் மத நம்பிக்கையாக இருந்தது. பரோ மன்னர்கள் ஸ்தாபித்த எகிப்திய ராஜ்யத்திலே, அது கடவுளரின் புராணக் கதை போன்றே சொல்லப் பட்டு வந்துள்ளது. ஆகவே, "கண்ணகி வழிபாடு" அல்லது "கண்ணகி கதை", குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இனி, பண்டைய எகிப்தியரின் கண்ணகி கதை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

இந்தக் கதையில் வரும் ஒசிரிஸ் மன்னன் நல்லவனாகவும், அவன் சகோதரனான செத், கெட்டவனாகவும் சித்தரிக்கப் படுகின்றனர். நீதியுடனும், நேர்மையுடனும் நாட்டை ஆண்ட ஒசிரிஸ் மன்னனை கொல்வதற்கு செத் ஒரு சதித் திட்டம் தீட்டுகின்றான். ஒரு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். எந்த வித தயக்கமும், சஞ்சலமும் இன்றி, விருந்தில் கலந்து கொண்ட ஒசிரிசுக்கு, மது ஊற்றிக் கொடுத்து விட்டு, ஒரு விபரீத விளையாட்டுக்கு அழைக்கிறான். ஒரு பெட்டியில் வைத்து மூடி, ஆணி அறைந்து, கண்காணாத இடத்தில் வீசி விடுகிறான். கணவன் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த, ஒசிரிசின் மனைவியான இசிஸ், கணவன் கொலையான சம்பவத்தை கேள்விப் பட்ட பின்னர், அவனது உடலைத் தேடிச் செல்கிறாள். நைல் நதியில் வீசப்பட்ட பெட்டி, கடலில் தவழ்ந்து பில்போஸ் என்ற நாட்டில் போய்ச் சேர்கின்றது. அங்கிருந்து உடலை எடுத்து வந்து, எகிப்தில் அடக்கம் செய்ய விரும்புகிறாள். ஆனால், வன்மம் கொண்ட செத், ஒசிரிசின் உடலை 14 துண்டுகளாக வெட்டி வீசுகின்றான். மீண்டும், கணவனின் உடல் பாகங்களை தேடிச் செல்லும் இசிஸ், அனைத்து பாகங்களையும் தேடி எடுத்து அடக்கம் செய்கின்றாள். அதே நேரம், ஒசிரிஸ், இசிசின் மகன் ஹோருஸ் (கருடன்) பெரியவனாக வளர்ந்து விட்டான். தீய சக்தியான செத் தை பழிவாங்குமாறு, இசிஸ் தனது மகனை ஒரு தர்ம யுத்தத்திற்கு அனுப்புகிறாள். நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் நடக்கிறது. (The Osiris Legend

இந்தக் கதையின் சாராம்சம், கணவனைக் காணாமல் துயருறும் இசிஸ், அவனது உடலை தேடி அலைவது. தீமையின் அவதாரமான செத் மன்னனுக்கு எதிரான தர்மயுத்தம் என்பனவாகும். பண்டைய எகிப்தில் மட்டுமல்ல, நுபிய ராஜ்யத்திலும் பட்டத்து ராணிகளான பெண்களின் பங்கு அளப்பெரியது. சில நேரம், மன்னனை விட சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளனர். பண்டைய எகிப்தியர்களின் மதத்தில், இசிஸ் என்ற பெண் தெய்வம் சக்தி வாய்ந்ததாக கருதப் படுகின்றது. இந்தியாவில், "பத்தினித் தெய்வம்" என்ற பெயரில் இசிஸ் வழிபடப் பட்டு வந்துள்ளார்.

இசிஸ், பத்தினி, கண்ணகி, இந்த மூன்று தெய்வங்களைப் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. இருப்பினும், இந்த தெய்வங்களை வழிபட்ட மக்களின் காலம், வாழ்விடம், கலாச்சாரம் என்பன கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். பத்தினி தெய்வம் பற்றிய கதைக்கும், கண்ணகி கதைக்கும் இடையில் கூட வேறுபாடு உண்டு. பத்தினியின் கணவன் பெயர் பலாங்கா. இசிஸ் போன்று, பத்தினியும் தனது கணவனின் மரணத்தால் துயருற்று, உடலை தேடிச் செல்கிறாள். இசிஸ் போன்று, தனது மந்திர சக்தியை பாவித்து இறந்த கணவனை உயிர்ப்பிக்கிறாள். கண்ணகியும், தனது கற்பின் வல்லமையினால் கணவனான கோவலனை உயிர்த்தெழ வைக்கிறாள். உயிர்த்தெழுந்த கோவலனை கடவுளர் வாழும் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து விட்டு, பூமியில் உள்ள தீயவர்களை பழிவாங்க கிளம்புகிறாள். எகிப்திய புராணத்தில், இசிஸ் தனது கணவனான இசிரிசை உயிர்த்தெழ வைத்து, பாதாள லோகத்திற்கு அதிபதி ஆக்குகிறாள். (தெய்வங்களுக்கு மரணம் இல்லை என்பது ஒரு மத நம்பிக்கை.) ஹோருஸ் தலைமையில் நடக்கும் போரில் தீயவர்கள் அழிக்கப் பட்ட பின்னர், இசிரிஸ் மீண்டும் பூலோகத்திற்கு திரும்பி அரசாளலாம்.

உண்மையில், பத்தினி தெய்வ வழிபாடு கோவலன், கண்ணகி கதை நடந்த காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள், தமிழர்கள் மத்தியில் இருந்த புராணக் கதை ஒன்றுடன், கோவலன் - கண்ணகி கதையையும் இணைத்து, காலத்தால் அழியாத காவியம் ஒன்றைப் படைத்துள்ளார். இருப்பினும், தென்னிந்தியாவில் பரவிய இந்து-பார்ப்பனிய சித்தாந்தம் காரணமாக, கண்ணகி கற்புக்கரசியாக மாற்றப் பட்டார். இன்றைக்கும், சில தமிழ் வித்தகர்கள், "கற்பிற் சிறந்தவள், கண்ணகியா, மாதவியா," என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இசிஸ் அல்லது பத்தினி ஆகிய தெய்வங்கள், "கற்பு" என்ற நல் ஒழுக்கத்திற்காக போற்றப் படவில்லை. ஒரு மனைவி கணவன் மீது கொண்ட அளவு கடந்த காதலுக்காக, மக்களால் போற்றப் பட்டார்கள். "காதல் என்ற உணர்ச்சியின் சக்திக்கும், கற்பு என்ற நெறியின் மகிமைக்கும்" இடையிலான வித்தியாசத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனேகமாக, பிற்காலத்தில் வந்த பார்ப்பனீய கருத்தியல், கண்ணகியின் பெருமை, அவளின் கற்பு எனும் ஒழுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதாக திரித்திருக்கலாம். சிலப்பதிகாரத்தை ஆராய்ந்த அறிஞர்கள், இது குறித்து மேலதிக விபரங்களை வழங்கலாம்.


கோவலன்-கண்ணகி கதை நடந்த காலத்திலும், சிலப்பதிகாரம் எழுதப் பட்ட காலத்திலும், தமிழகத்தில் சமண மதம் கோலோச்சியது. இதனால், சிலப்பதிகாரத்தை ஒரு சமண மதக் காவியம் என்றும் கூறுவார்கள். புராதன இந்தியர்களின் பத்தினி வழிபாட்டை, சமண மதம் ஏற்றுக் கொண்டிருந்தது. காலப்போக்கில், பத்தினி என்ற பெயர் மருவி, அந்த தெய்வத்திற்கு கண்ணகி அம்மன் என்ற பெயர் நிலைத்து விட்டது.எகிப்திய இசிஸ் வழிபாடும், பத்தினி தெய்வ வழிபாடும் ஒன்று தான் என்பது, ரோமர் கால ஆவணத்தில் இருந்து தெரிய வருகின்றது. "Oxyrhynchus Papyrus" என்ற ஆவணத்தில் உள்ள தகவல், அது எழுதப் பட்ட காலத்தை விட பழையதாக இருக்கலாம். ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை முழுவதும், பத்தினி தெய்வ வழிபாடு நிலவியது. பத்தினி தெய்வம், கண்ணகி அம்மன் என்ற இரண்டு பெயர்களும் அந்த பெண் தெய்வத்தைக் குறிப்பிட பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன. இலங்கையில், சிங்களவர்களும், தமிழர்களும் பத்தினி தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர்.

இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டுமே "கண்ணகி அம்மன்" கோயில்கள் எஞ்சியுள்ளன. அதற்கு காரணம், இந்து மதத்தின் மேலாதிக்கம். உலகம் முழுவதும், மதங்களின் மேலாதிக்கம் கலாச்சார அழிவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்து மதமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழர்களின் பாரம்பரிய மரபை கட்டிக் காப்பாற்றி வந்த கண்ணகி தெய்வம், ராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களால் சம்ஸ்கிருத மயப் படுத்தப் பட்டது. 19 ம் நூற்றாண்டு வரையில், யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்தது. "சைவ - வெள்ளாள" சாதியத்தை, வாழ்க்கை நெறியாக நிறுவிய கோட்பாட்டுவாதியான ஆறுமுகநாவலர், கண்ணகி வழிபாட்டை கடுமையாக எதிர்த்து வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "கண்ணகி வழிபாடு சமண மதத்திற்குரியது." தமிழகத்தில், நாயன்மார்களின் பக்தி இயக்கம் காரணமாக, 12 ம் நூற்றாண்டிலேயே, பத்தினித் தெய்வ வழிபாடு மறைந்து விட்டது. தமிழர்களின் மூவாயிரம் ஆண்டு கால தொன்மையை அழித்தவர்கள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் மட்டுமல்ல. தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றிய நாளில் இருந்தே, அவர்களது பண்பாட்டு அழிவு ஆரம்பமாகி விட்டது.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள் :
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!


மேலதிக தகவல்களுக்கு:
Nubia
Candace of Meroë
Osiris myth
The Cult of the Goddess Pattini


10 comments:

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

சுவனப் பிரியன் said...

சிறந்த பதிவு வாழ்த்துக்கள்!

செங்கதிரோன் said...

Hello Kalai,

After a long time u have posted an interesting article.

thanks.

J.P Josephine Baba said...

மிகவும் சுவாரசியமான ஆனால் அறிவு பூர்வமான பதிவு. இணைப்புகளும் கொடுத்துள்ளீர்கள். நன்றி மகிழ்ச்சிகள்.

Norway Nackeera said...

//காலப்போக்கில்இ பத்தினி என்ற பெயர் மருவிஇ அந்த தெய்வத்திற்கு கண்ணகி அம்மன் என்ற பெயர் நிலைத்து விட்டது.// ஒரு சொல் மருவும் போது அதன் அடிப்படையில் சிறுமாற்றம் எற்படலாம். இங்கே பத்தினித் தெய்வம் கண்ணகியம்மன் என்று மாறுவதற்கு இடமே இல்லை. ஆனால் சேரன் செஞ்குட்டுவன் பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலையெடுத்தான் என்றும். அவ்விழாவுக்கு இலங்கையின் ஒரு பகுதியை ஆட்சிசெய்த விஜயபாகுவை அல்லது கஜபாகுவை (ஏதோ ஒரு பாகுவை- முக்கியகுறிப்பு பாகு என்பது சிங்களச்சொல் அல்ல)அழைத்திருந்தான் என்பது வரலாறு. இன்றும் தலாதா மாளிகையின் தென்புறத்தில் பத்தினி தெய்யோ என்று சிங்களத்தில் அழைக்கப்படும் பெண்தெய்வம் உள்ளது.
மதங்களின் பாதிப்பால் கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டது என்பதை விடவும் கலாச்சாரங்களின் பாதிப்புகள் மதங்களின் ஊடுருவியது என்பதை ஏன் மறைக்க முயல்கிறீர்கள். பாலாற்காரமாகவும் வன்முறையினூடாகவும் தமிழர்களை கத்தோலிக்கர்களாக மாற்ற முயன்ற போத்துக்கேயர் பெருவெற்றியடையாது போனதற்குக் காரணம் இந்துக்கலாச்சாரமே. இறுதில் தாலிகட்டுவதை அனுமதித்தபோதே ஒரளவு மதமாற்றம் நடந்தது. இன்றும் கத்தோலிக்கர்கள் தாலி அணிவது தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது. கிறிஸ்தவத்தில் அதிகட்டுப்பாடு கொண்டது கத்தோலிக்கம் என்பதை அறிந்திருப்பீர்கள்
Norway Nackeera

Abimanasingham Uthayakumar said...

பத்தினித் தெய்வ, அல்லது கண்ணகி வழிபாடானது, உண்மையில், சிலப்பதிகாரம் காப்பியத்தின் அடிப்படையில் உருவானது. சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரு தமிழ்க் காப்பியங்களும் முறையே இல்லறம், துறவறம் என்ற இரண்டையும் வலியுறுத்துகின்றவை. இவை மகாயாண பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. பண்டைக் காலத்தில் இலங்கை, தென்னிந்தியத் தமிழர்கள் மகாயாண பெயத்தர்களாகவே இருந்தனர். இதனால்தான், கண்ணகி வழிபாடானது இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், கண்டி இராச்சியத்திலும், தென்னிலங்கையின் சில கடற்கரைப் பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. இன்றும் உள்ளது. வடக்கில் ஆறுமுகநாவலர் என்பவர் கண்ணகி கோயில்களை ”அம்மன்” கோவில்களாக மாற்றி வந்தபோதும், இன்றும் பல கண்ணகி கோயில்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இல்லறம் இல்லையேல் துறவறம் இல்லை. இதனால், இல்லறத்தை வலியுறுத்தும் சிலப்பதிகாரம்தான் முதலில் இயற்றப்பட்டது என்பர். மேலும், இவை இரண்டும் complementary ஆகையால்,அவற்றை ”இரட்டைக் காப்பியம்” என்பர். இந்தநிலையில், கண்ணகி வழிபாடு எக்காலம்முதல் தென்னிந்தியா, இலங்கையில் இருந்து வந்துள்ளது என்பதைச் சரியாக அறிவதாயின், சிலப்பதிகாரம் குறிப்பாக எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பதைச் சரியாக ஆராய்ந்து அறியவேண்டும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரே காலப்பகுதியில் இயற்றப்பட்டதால், மணிமேகலையின் காலத்தைச் சரியாக நிர்ணயித்தால், சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தினைச் சரியாக அறியமுடியும். மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பட்ட காலத்தினைச் சரியாக அறிய, அக்காப்பியத்தின் காதை - 12 இல் வரி 72முதல் கூறப்பட்டிருப்பவைகளில் கூறப்பட்டுள்ள ”ஈர் எண் நூற்றோடு ஈர் எட்டு ஆண்டு” என்பது எந்த ஆண்டு என்பதை ஆராய்ந்து அறியவேண்டும்.மணிமேகலை மகாயாண பௌத்த காப்பியம் ஆனபடியாலும், அதன் ஆசிரியன் வான சாத்திரம் நன்கு அறிந்தவன் என்றபடியாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ”ஈர் எண் நூற்றோடு ஈர் எட்டு ஆண்ட” என்பது பௌத்த ஆண்டாகவே இருக்கமுடியும். பௌத்த ஆண்டு 1616 என்பது, கி. பி. (1616-543) 1073ஆகும். புத்தபெருமான் கி்பி. 543இல்தான் இறந்தார் என்பது தமிழ் மரபு. ஆகவே, மணிமேகலை காப்பியமானது கி. பி. 1073ஆம் அண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கமுடியாது. அது குறிப்பாக எந்த ஆண்டுப்பகுதியில் இயற்றப்பட்டது என்பதை மேலதிக ஆய்வுகளுடாகவே அறியவேண்டும். இதை அறிய https://www.facebook.com/uthayakumara#!/uthayakumara என்ற முகநூலில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளைப் பார்க்கவும்.

Abimanasingham Uthayakumar said...

பத்தினி தெய்வ, அல்லது கண்ணகி வழிபாடானது சிலப்பதிகாரம் இலக்கியத்தின் அடிப்படையில் உருவானது.சிலப்பதிகாரம் என்பது இலலறத்தை வலியுறுத்தும் காப்பியம். இது மகாயாண பௌத்தர்களால் இயற்றப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை முறையே இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்துகின்றவை. இல்லறம் இல்லையேல் துறவறம் இல்லையாதலால், அதாவது இவை இரண்டும் complementary ஆன நிலையில், இந்த இரண்டு காப்பியங்களையும் ”இரட்டைக் காப்பியம்” என்பர்! பண்டைக் காலத்தில் இலங்கை, தென்னிந்தியத் தமிழர்கள் மகாயாண பௌத்தர்களாகவே இருந்தனர். இதனால், இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், கண்டி இராச்சியத்திலும், தென்னிலங்கையின் சில கரையோரப்பகுதிகளிலும் கண்ணகி வழிபாடு இருந்து வந்துள்ளது. வடக்கில் ஆறுமுகநாவலர் என்பவர் கண்ணகி கோயில்களை ”அம்மன்” கோயில்களாக மாற்றுவதில் தீவிரமாக இருந்து வந்தபோதும், இன்றும் வடக்கில் கண்ணகி கோயில்கள் இருந்தே வருகின்றன. கண்ணகி வழிபாடு புகுத்தப்பட்ட காலத்தினைச் சரியாக அறிய, சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் அறியப்பட வேண்டும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரே காலப்பகுதியில் இயற்றப்பட்டதால், மணிமேகலை காலத்தினை அறிந்தால், சிலப்பதிகாரக் காலம் அறிப்படமுடியும்.மணிமேகலை இயற்றப்பட்ட காலத்தினை அறிய, அதன் காதை -12 வரி 72முதல் கூறப்பட்டிருப்பவைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ”ஈர் எண் நூற்றோடு ஈர் எட்டு ஆண்டு” என்பதைப் பயன்படுத்தமுடியும். மணிமேகலை மாகாயாண பௌத்த காப்பியமானபடியாலும், அதன் ஆசிரியன் வானசாத்திரத்தை நன்கு அறிந்தவனாகையாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அண்டு பௌத்த ஆண்டாகவே இருக்கமுடியும். பௌத்த ஆண்டு 1616 என்பது, கி. பி. (1616-543) 1073ஆகும். புத்தபெருமான் கி் மு. 543இல் இறந்தார் என்பது தமிழ் மரபு. ஆகவே, சிலப்பதிகாரம் காப்பியமானது கி. பி. 1073ஆம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்கமுடியாது. அது குறிப்பாக எந்த அண்டுப் பகுதியில் இயற்றப்பட்டது என்பதை அறிய, மேலதிக ஆய்வுகள் தேவை.https://www.facebook.com/uthayakumara#!/uthayakumara இல் இவற்றைக் காணலாம்.

Puthiyavan Siva said...

நல்ல பதிவு. காதலிலிருந்து கடவுள் வரை என்ற வசன இலக்கியத்தை தங்கள் பார்வைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். https://puthiyavansiva.blogspot.in/2016/11/blog-post.html
நன்றி. அறிவன்புடன் புதியவன்

Puthiyavan Siva said...

வணக்கம். தங்கள் பதிவு சிறப்பு. காதலிலிருந்து கடவுள் வரை என்ற வசன இலக்கியத்தை தங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். https://puthiyavansiva.blogspot.in/2016/11/blog-post.html
இது கடவுள் வரலாறு மட்டுமல்ல. கற்புக் கடவுளின் வரலாறும் அடங்கிய பதிவு. நன்றி. அறிவன்புடன் புதியவன்.

Puthiyavan Siva said...

வணக்கம். தங்கள் பதிவு சிறப்பு. காதலிலிருந்து கடவுள் வரை என்ற வசன இலக்கியத்தை தங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். https://puthiyavansiva.blogspot.in/2016/11/blog-post.html
இது கடவுள் வரலாறு மட்டுமல்ல. கற்புக் கடவுளின் வரலாறும் அடங்கிய பதிவு. நன்றி. அறிவன்புடன் புதியவன்.