Friday, February 25, 2011

எகிப்திய தொழிலாளர் போராட்டம் தொடர்கிறது...

எகிப்தை இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முபாரக் பதவி விலகிய உடனேயே, தொலைக்காட்சி கமெராக்கள் எகிப்தை விட்டு அகன்று விட்டன. அவர்களைப் பொறுத்த வரையில், எகிப்தின் பிரச்சினைகள் எல்லாம் முபாரக்குடன் ஓடிப்போய் விட்டன. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இராணுவத் தலைமை, கெய்ரோ நகர தாகிர் சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்க்காரர்களை அப்புறப்படுத்தியது. ஆனால் இன்றைக்கும் நாடளாவிய தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கெய்ரோ நகரில் கல்வி அமைச்சு அருகில் சென்றால், அங்கே ஆசிரியர்கள் போராடுவதைப் பார்க்கலாம். இன்னும் சிறிது தூரம் கடந்து சென்றால், நைல் பருத்தி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். இந்தப் போராட்டங்கள் யாவும் நாடு முழுவதும் முன் வைக்கும் அடிப்படை கோரிக்கை ஒன்றாகவுள்ளது. "அனைத்து தொழிலாளருக்கும் குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு என்று தீர்மானிக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த தொழிலாளருக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்." முகாமைத்துவம், அரசு சார்பு தொழிற்சங்கம், அமைச்சகம் போன்றவற்றில் நிலவும் ஊழலை ஒழிப்பதும் இன்னொரு முக்கியமான கோரிக்கை.

எகிப்திய தொழிலாளரின் போராட்டம், புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் பிளவுபடுத்தியுள்ளது. மார்க்சிய, அல்லது பிற இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட இளைஞர்கள் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அதே நேரம், மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், "புதிய அரசுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்." என்று கூறி வருகின்றனர். நிச்சயமாக, புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. "தொழிலாளரின் போராட்டம், புரட்சியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றது." என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னாள் சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட, சக்தி வாய்ந்த தொழிற்சங்கமான "எகிப்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" கூட போராட்டத்தை நிராகரிக்கின்றது. "இந்தப் போராட்டங்கள் தேவையற்றவை. அதிக ஊதியம் கோருவது, நிர்வாகியை மாற்றக் கோருவது, இவை எல்லாம் அதி தீவிரமானவை." இவ்வாறு சம்மேளனத்தின் தலைவர் இப்ராஹீம் அல் அஸாரி தெரிவித்தார்.

ஆயினும் எகிப்திய தொழிலாளர்கள், யாருடைய "அறிவுரைகளையும்" கேட்பதாயில்லை. போராடினால் தான் தமது உரிமைகளை வெல்ல முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சில இடங்களில் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எகிப்தின் மாபெரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான Ghazl El-Mahalla வில் நடந்த போராட்டம். மூன்று நாட்கள் மட்டுமே தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டம், நிர்வாகத்தை அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பிற உழைப்பாளர்களும், ஆர்வலர்களும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். வெற்றிக் களிப்பில் மிதந்த தொழிலாளர்கள், புதிதாக சுயாதீனமான தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Ghazl El-Mahalla போராட்ட வெற்றி குறித்து கேள்விப்பட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் தமக்கென தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தபால் துறை, மற்றும் பொதுப் போக்குவரத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

எகிப்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கம் வகிக்கவில்லை. குறிப்பாக, தனியார் துறைகளில் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் முதலாளிகளினால் முடக்கப்பட்டன. அரசுத் துறைகளை, அரசு சார்பான "தொழிற்சங்கங்களின் சம்மேளனம்" ஆக்கிரமித்திருந்தது. ஆனால் அதற்கான தேர்தல்களில் முறைகேடுகள் பல நடந்துள்ளன. அதற்கெதிரான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம், கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்கும் நடவடிக்கையிலும், அரசு சார்பு தொழிற்சங்கம் இறங்கியது. குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட இடங்களில் புகுந்து வன்முறை பிரயோகித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னான எகிப்தில், தொழிலாளர்கள் கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த விரும்புகின்றனர். சர்வதேச தொழிலாளர் சட்டத்தில் எகிப்தும் கையெழுத்திட்டுள்ளது. அதனால், சுயாதீனமான தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும் எகிப்திய தொழிலாளருக்கு உரிமை உண்டு. எகிப்தில் 1952 ல் முதலாவது தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. எகிப்திய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீண்டதொரு வரலாறுண்டு. மேற்கத்திய அரசுகளும், ஊடகங்களும் இத்தகைய உண்மைகளை வெளியுலகிற்கு மறைத்து வருகின்றன. "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற மத அடிப்படைவாத கட்சியை சுட்டிக்காட்டி, "இஸ்லாமியப் பூச்சாண்டி" காட்டிக் கொண்டிருக்கின்றன. "மதம் சோறு போடாது," என்ற உண்மையை எகிப்திய உழைக்கும் வர்க்கம் எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டது.
*************************


Tuesday, February 22, 2011

பாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி

புரட்சி அலை அடிக்கும் அரபுலகில், வளைகுடா செல்வந்த நாடான பாஹ்ரைன் மட்டும் மக்கள் எழுச்சியை வன்முறை கொண்டு அடக்க எத்தனிக்கின்றது. தலைநகர் மனாமாவில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இது மொத்த சனத்தொகையில் பத்து வீதமாகும். மனாமாவின் மத்தியில் அமைந்துள்ள "பேர்ல் சதுக்கத்தில்" கூடாரங்களை அமைத்து அஹிம்சை வழியில் போராடிய மக்கள் மீது, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நள்ளிரவில் திடுதிப்பென புகுந்த படையினர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பிணங்களாலும், காயமுற்றவர்களாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் கூட, எழுச்சியுற்று ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இது போன்று அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரானிலோ, அன்றில் சீனாவிலோ நடந்திருந்தால், ஊடகங்கள் ஒரு மாதத்திற்கு அதையே தலைப்புச் செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கும். எத்தனையோ பேர் அடுத்த பத்து வருடங்களாவது படுகொலைகளை மறக்காமல் நினைவுகூர்ந்திருப்பார்கள். என்ன செய்வது? அப்பாவி பாஹ்ரைனியர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தைக் கொண்ட நாடொன்றில் பிறந்த துரதிர்ஷ்டசாலிகள். அதனால் அவர்களது தியாகமும், சிந்திய இரத்தமும் வெளியுலகின் கவனிப்பின்றி அமுங்கிப் போகலாம்.

இன்றைய சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நடுவில் அமைந்திருக்கும் தீவான பாஹ்ரனில் குறைந்தது பத்தாயிரம் வருடங்களாவது மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், மெசப்பத்தோமிய நாகரிக காலத்தில் செழிப்பான வணிக மையமாக திகழ்ந்துள்ளது. மேசப்பத்தொமியர்கள் பாஹ்ரனை "டில்முன்" என்றழைத்தனர். விவிலிய நூலில் வரும் ஏடன் தோட்டம் இன்றைய பாஹ்ரைனான டில்முன் ஆக இருக்கலாம் என சில அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய ஈரானின் பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதால், ஈரானியர்களின் குடியேற்றமும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இன்றைக்கும் பாஹ்ரைன் மக்களில் ஒரு பிரிவினர் ஈரான் குடியேறிகளாக கருதப்படுகின்றனர். இன்று "அஜாரிகள்" என அழைக்கப்படும் அந்த மக்கட்பிரிவினர் ஒரு லட்சம் அளவில் இருக்கலாம். அவர்களை அரேபியராக மாறிய ஈரானியர்கள் என்றும் குறிப்பிடலாம். இஸ்லாமிய மதம் பரவிய காலத்தில், ஈரானிய ஷியா மதப் பிரிவை பின்பற்றினார்கள். அதனால் பாஹ்ரைன் அரசு, அவர்களது எழுச்சியை ஈரானின் தூண்டுதலால் நடப்பதாக காரணம் சொல்லிக் கொண்டிருந்தது.

பாஹ்ரைனின் மொத்த சனத்தொகை 568,000 ஆகும். இவர்களில் ஷியா மதப்பிரிவை சேர்ந்தோரின் எண்ணிக்கை 374,000 . அதாவது பாஹ்ரைனியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அல்லது எழுபது சதவீதம் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் முன்னர் குறிப்பிட்ட ஒரு லட்சம் ஈரானிய குடியேறிகளை தவிர, மிகுதிப்பேர் பஹ்ரைனிய பூர்வீக மக்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஈரானிய ஆயத்துல்லாக்களை பின்பற்றுவதில்லை. தமக்கென தனியான "அக்பாரி" எனும் மதக் கல்லூரியின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள். இந்த மக்கள் பஹ்ரைனிய நாட்டுப்புறங்களில் செறிவாக வாழ்கின்றனர். தலைநகர் மனாமாவில் சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்த அரபுக்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம். பாஹ்ரனின் அரசர் ஹமட் அல் கலிபா, சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்தவர். 187,000 தொகையினரான சுன்னி இஸ்லாமிய- அரபுக்கள் நீண்ட காலமாக பாஹ்ரனின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இவர்களின் மூதாதையர் சவூதி அரேபியாவில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம்.

ஒரு காலத்தில் முத்துக் குளித்தல் மட்டுமே பாஹ்ரைனுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய தொழிற்துறையாக இருந்தது. எழுபதுகளில் எண்ணெய் வளம் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்தது. அருகில் இருக்கும் கட்டார், குவைத் போன்று பாஹ்ரைனும் செல்வந்த நாடாகியது. வளைகுடா நாடுகளில் முதன்முதலாக பாஹ்ரனின் எண்ணெய்க் கிணறுகள் வற்ற ஆரம்பித்தன. இதனால் மாற்றுப் பொருளாதாரமாக வங்கி, நிதித் துறையில் ஈடுபட்டு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைத் தளம் பாஹ்ரைனில் அமைந்துள்ளது. அமெரிக்கர்கள் கொடுக்கும் வாடகைப் பணம், பாஹ்ரைன் அரசுக்கு மேலதிக வருமானம். இவ்வளவு செல்வமும் பெரும்பான்மை ஷியா மக்களை போய்ச் சேருவதில்லை. அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு பணக்கார நாட்டில் ஏழைகளாக வாழும் அவலம் தொடர்கிறது.

இன்று பாஹ்ரைனில் ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 54 % மானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஒப்பந்த கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். எத்தனை வருடம் வேலை செய்தாலும், நிரந்தர வதிவிட அனுமதியோ, பிரஜாவுரிமையோ கிடைக்கும் வாய்ப்பற்றவர்கள். வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சுன்னி முஸ்லிம்கள். இவர்கள் இன்றைய குழப்பகரமான சூழலில் மன்னருக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஹ்ரைன் அரசு, குறிப்பிட்ட சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கி சுன்னி முஸ்லிம் எண்ணிக்கையை அதிகரிக்க முயலுவதாக வதந்திகள் உலாவுகின்றன. தனது சொந்த மக்களில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடும் பொழுது, எதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாஹ்ரைனில் வேலை செய்யும் நம்மவர்களைக் கேட்டால் பின்வருமாறு பதில் வரும். "அவர்கள் உழைக்க விரும்பாத சோம்பேறிகள்." பாஹ்ரைனின் ஆளும் வர்க்கம் கூட, அது போன்ற கருத்தை ஒரு சாட்டாக கூறி வருகின்றது. உண்மையில் இதற்கு இரண்டு காரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.

1. முதலாளித்துவ பொருளாதாரம் குறைந்த கூலிக்கு சுரண்டப்படும் தொழிலாளிகளை மட்டுமே விரும்புகின்றது. உள்ளூர் மக்கள் இதை விட மூன்று மடங்கு அதிக ஊதியம் எதிர்பார்ப்பார்கள். பாஹ்ரைனின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப குடும்பத்தை பராமரிப்பதற்கு தற்போது கொடுக்கப்பட்டு அற்பத்தொகை போதாது.
2.அரசின் திட்டமிடப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கை. பஹ்ரைனில் உண்மையில் ஒரு சிறுபான்மையினம் (சுன்னி முஸ்லிம்), பெரும்பான்மையினத்தை (ஷியா முஸ்லிம்) அடக்கி ஆளுகின்றது. பொருளாதாரத்தை அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்துவதால் அவர்களின் பலம் குறைக்கப்படுகின்றது.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாதல்லவா? ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமீப காலத்தில் கூட, 40 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஷியா சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவு. ஷியாக்களின் Wifaq கட்சி, 18 ஆசனங்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலத்தையும் சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் வீட்டோ செய்யும் அதிகாரம் கொண்டுள்ளனர். அதையும் தாண்டிச் சென்றால் மன்னர் ஹமட் அதனை நிராகரிக்கலாம். ஆகவே ஏற்கனவே உள்ள அரசமைப்பின் கீழ் உரிமைகள் கிடைக்காது என்று தெரிந்த பின்னர் தான், ஷியா சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

பாஹ்ரைன் சிறுபான்மையினரின் அரசு, பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வது இலகுவானது அல்ல என்று தெரிந்து வைத்துள்ளது. அதனால் ஏற்கனவே நரித்தனத்துடன் பல திட்டங்களை தீட்டியிருந்தது. பாஹ்ரைனின் இராணுவத்தை தேசிய இராணுவம் என்று கூறுவதை விட, கூலிப்படை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். பெருமளவு சிப்பாய்கள் அதிகளவு கூலியாள் கவரப்பட்ட பாகிஸ்தானியர்கள். இயல்பாகவே அரேபியர்களை முட்டாள்களாக கருதும் இனவாதம் பாகிஸ்தானியர் மத்தியில் சாதாரணம். அதிலும் பாகிஸ்தானில் கிடைத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் கிடைக்கின்றது என்றால், பாஹ்ரைன் மன்னருக்கு விசுவாசமான படையினராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கூலிப்படையை கொண்டு போய் விட்டு, "ஆர்ப்பாட்டம் செய்யும் பொது மக்களை சுடு" என்றால், எந்தவித உணர்ச்சியுமற்று சுட்டிருப்பார்கள்.

மக்கள் எழுச்சியை அடக்குவதில் அமெரிக்காவின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. பாஹ்ரனில் மேற்கத்திய பாணியிலமைந்த ஜனநாயகம் ஏற்பட்டால் கூட, அது அமெரிக்க நலன்களுக்கு விரோதமாக இருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றமும், பிரதமர் பதவியும் பெரும்பான்மை ஷியா மக்களின் கைகளுக்கு சென்று விடும். ஷியா முஸ்லிம்களின் விசுவாசம் ஈரானை சார்ந்ததாக இருக்கும். பாஹ்ரைனில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பப் போவதில்லை. ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்கா தனக்கு தானே காலில் சுட்டுக் கொண்டது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் ஆட்சியை அகற்றியதால், சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களிடம் இருந்த அதிகாரம், தற்போது பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களிடம் சென்று விட்டது. ஈராக் போரின் போதான படை நகர்த்தல்களுக்கு, பாஹ்ரைன் தளத்தில் இருந்து தான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. வருங்காலத்தில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் பாஹ்ரைன் தளம் அத்தியாவசியமானது. மக்கள் சக்தி ஆளுபவரை மாற்றினால், அமெரிக்க படைத் தளத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். ஈரானைப் பொறுத்த வரை, அது ஒரு இராஜதந்திர வெற்றியாகி விடும்.

Sunday, February 20, 2011

மீனவர் பிரச்சினை : இலங்கை தமிழ்க் கட்சியின் அறிக்கை

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் பெரும் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து குறிப்பாக வடபுலத்து மீன் வளங்களை வாரி அள்ளிச் செல்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது. மேற்படி சம்பவங்களால் இரு நாடுகளினதும் சாதாரண உழைப்பாளர்களான மீனவர்களே கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் உரிய பேச்சு வார்த்தையை எவ்வித உள்நோக்கங்கள் இன்றியும் முன்னெடுத்து தீர்வு காண முன்வரல் வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.

இவ்வாறு இலங்கை இந்திய மீனவர்களிடையே உச்சமடைந்துள்ள பிரச்சினை பற்றி புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கொல்லப்படுதல், தாக்குதல், கைது என்பனவற்றுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறார்கள். அதேவேளை வடபுலத்து மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை நீண்ட காலமாகச் செய்ய முடியாத தடை, கெடுபிடி நிலைகளில் இருந்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிர் இழப்புகள், காணாமல் போதல், கைதுகளுக்கும் ஆளாகி வந்துள்ளனர். இவை அனைத்திற்கும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தம் முக்கிய காரணமாகும். ஆனால் இப்போது யுத்தம் முடிவடைந்த நிலையிலும் கூட இரு நாட்டு மீனவர்களும் முன்னரைப் போன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே இருந்து வருகிறார்கள்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அண்மைய மாதங்களில் இலங்கைக் கடல் பரப்பில் இடம்பெற்றன. தாக்குதல் கைதுகளும் இடம் பெற்றுள்ளன. அதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி வந்து றோலர் எனப்படும் பெரு வள்ளங்களைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களைப் பிடித்துச் செல்கிறனர். இதனால் வடபுலத்து மீனவர்கள் பெரும் பாதிப்புக்களைப் பெற்று வருவதுடன், இவ் ரோலர் பெருவள்ள மீன் பிடிப்பால் மீன் வளங்கள் சேதமாக்கப்பட்டு அழிவுகளுக்கும் உள்ளாகி வருவதாக வடபகுதி மீனவர்கள் அடிக்கடி குற்றம் சுமத்தியும் வருகின்றனர். இத்தகைய பெரு வள்ள மீன் பிடியில் தமிழ் நாட்டின் பெரு முதலாளிகளே முன் நிற்கிறார்கள். ஆனால் கடும் பாதிப்படைந்து வருவது தொழிலாளர்களான சாதாரண மீனவர்களேயாகும். எனவே கடல் எல்லையைத் தாண்டி வந்து வடபுலத்து கடற்பரப்பில் மீன் பிடிக்கப்படும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பது வற்புறுத்தலுக்குரியதாகும்.

ஆதலால் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களின் துன்பத்தை தத்தமது அரசியல் தேவைக்கு ஒவ்வொரு தமிழக வாக்கு வங்கிக் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றன. இன்னும் சிலர் தமிழ் இன உணர்வின் பெயரால் தமிழ்க் குறுந்தேசிய வெறியைக் கிளப்பி வருகின்றனர். அதேவேளை இந்திய மத்திய அரசு தனது பிராந்திய நலனுக்கும், இலங்கை அரசு தனது பேரினவாத நிலைப்பாட்டிற்கும் மீனவர் பிரச்சினையப் பயன்படுத்த முன் நிற்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளினதும் உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களே பல பக்கப் பாதிப்படைந்து வருகிறார்கள் என்பதே காணப்படும் உண்மையாகும். அத்தகைய பாதிப்பை தடுத்து நிறுத்தக் கூடியவாறு இலங்கை- இந்திய அரசாங்கங்கள் உடனடியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இந்திய- தமிழ் நாட்டினதும் இலங்கை- வடபுலத்தினதும் மீனவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதையே எமது கட்சி வற்புறுத்துகின்றது.

சி.கா.செந்திவேல்
பொதுச் செயலாளர்.

(புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி)

Thursday, February 17, 2011

தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வை

[இந்திய மீனவர் பிரச்சினையும், தமிழ் குறுந்தேசிய வெறியும்] (பகுதி -2)
- மணலை மைந்தன் -

வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.

வடபகுதின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைபடுத்தலேயாகும். இவ் வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக யந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீட்டர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீட்டர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப்படகுகளில் தொழில் செய்தோர் 5 இன்ச் கண்விட்டத்திலிருந்து 8 இன்ச் கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.

இவ்வாறு ஓப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடி, 83 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்தக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில், புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மன்னாரின் நிலையும் அதேபோன்று பழுதுபாற்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.

இன்று வடக்கின் மீன்பிடித் திறனானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும், 1800 மரவள்ளங்களையும், 120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக்கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் றோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.


தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வையும் சில தரவுகளும்

தமிழ்நாட்டின் மீன்பிடி உள்நாட்டு உணவுக்காகவே பயன்தரும் வளமாக பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித்திட்டத்தின்படி சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில் நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன் அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப்படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளை பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான பொறிமுறையை பாவிப்பதனால், உற்பத்தித்திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 இல் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்)இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.

ஆனால் மீன்பிடியால் பெறப்படும் செல்வம் எதுவும் யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் அரசதிட்டத்தில் கூறப்பட்டதோ அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள் இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும்பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமேயாகும். அரச மீன்பிடித்திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச யந்திரத்தின் லஞ்ச லாவண்யக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானதெனலாம்.

மேலும் நோர்வே அரசினால் ரோலர் இழுவைப்படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்திய போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கு பாரம்பரிய மீனவர்கள் வாழ்க்கை பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியை தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு துணைபோன நோர்வே அரசு, தமது கேரள அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆய்வுசெய்து, அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கைவள அழிவுக்கும் வழிவகுத்ததென ஐக்கியநாடு சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்ட தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ஒருநாட்டில் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளக்கூடாதென்பதற்கு உதாரணமாகவுள்ளது.

ஆனால் இதை ஒன்றும் கணக்கில் எடுக்காது இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் கேரளாவில், சமூகப் பாதிப்பையும், இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி ஒருசில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதின் விளைவு, பஞ்சத்திலும் அடுத்தவர்க்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரபடகுகளில் நாட்கூலிகளாக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாகில் மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில் நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றனர்), அதவாது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும்.

இதைவிட இப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12500 மரவள்ளங்களும், 19500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளை பாவித்து மீன்பிடிக்கின்றனர்.


(தொடரும்)

இந்திய மீனவர் பிரச்சினையும், தமிழ் குறுந்தேசிய வெறியும்

மீனவர்களை அழிக்கும் கடற் கொள்ளையை நிறுத்து!

இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!!

இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

யுத்தம் முடிந்து இருவருடங்களாகும் இன்றைய நிலையில், இலங்கை தமிழ் மீனவர்களின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கிழக்கு மற்றும் தென் தமிழ் கரையோர பிரதேசக் கடல்வளம் சர்வதேச மீன்பிடிக் குத்தகைக்காரர்களான சீனர்கள், ஜப்பானியர்களாலும், உள்ளுர் அரசுசார் கிரிமினல்களாலும் சுரண்டப்படுகிறது. யுத்தத்தாலும், சுனாமியாலும், இயற்கை அனர்த்தங்களாலும் மீன்பிடிசார் சமூகம் பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பாரியளவில் இனவழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம், இன்று இந்திய இழுவைப்படகுகளின் நாசகார மீன்பிடிமுறையால் சூறையாடப்படுகின்றனர். தேசத்தின் மீன்வளத்தை அத்துமீறி திருடுவது மட்டுமல்லாமல், மீன்வள வளர்ச்சிக்கு ஆதாரமான கடலடித்தள வளங்களையும் இந்திய இழுவைப்படகுகள் நாசப்படுத்துகின்றது. இதைத் தட்டிக் கேட்பாரின்றி நியாயப்படுத்தப்படுகின்றது.

அத்துடன் ஏதிலிகளாக, யுத்தத்தின் பின்னும், இலங்கை அரசின் கொடும் முகாம்களிலிருந்து ஊர் திரும்பிய மீனவர் சமுதாயம் சிறுகச் சிறுக முதலிட்டு உருவாக்கிய மீன்பிடி உபகரணங்களையும், வலைகளையும் கூட கடற்கொள்ளையர்கள் அழித்தொழிக்கின்றனர். இவர்கள் தமிழக மீனவர்கள் போர்வையில், கடல் கொள்ளையில் ஈடுபடும் மூலதனமாகும்.

உலக அளவில் ஐந்தாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்ட இந்த இந்திய இழுவைப்படகுகள், தமது எல்லைக்குட்பட்ட கரையோர வளங்களை அழித்தது. இதன் மூலம் தன்சொந்த கரையோர சிறு மீன்பிடித் தொழிலாளர்களை பட்டினியாக்கி விட்டு, இன்று துளிர்க்க முயலும் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களிடமிருந்து பறிக்கின்றது.

இந்நிலைக்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய தமிழ் சமூகமும், இடதுசாரி இந்திய தோழர்களும், இந்நிலையை தமிழனுக்கும் சிங்களவனுக்கும் இடையிலான இன முரண்பாடாக சித்தரித்துக் காட்ட முயல்கின்றனர். இதன் அடிப்படையில், இலங்கை மீனவர்களை பலியிட்டு குறுகிய இனமுரண்பாட்டை மேலும் கூர்மையடையச் செய்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை கொல்கின்றதென்பதாகும். கொலைகள் நிறுத்தப்படவேண்டுமென்பதில் எமக்கு எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதில் முரண்பாடும் இல்லை. அதே வேளை இலங்கை இராணுவம், இனவெறி இராணுவம் என்பதிலும் முரண்பாடில்லை.

ஆனால் கொலைகளின் மறுபுறத்தில் இழுவைப் படகுகளால் நடாத்தப்படும் நாசகார மீன்பிடியும், அதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர் வாழ் நிலையையும், இக் கொலைகளைக் காட்டியே மூடி மறைக்கின்றனர். இந்திய அரசும், இந்தியாவை ஆளும் கட்சிகளும் இந்திய மூலதனத்தின் விஸ்தரிப்புவாதக் கொள்கைக்கு ஏற்ப பயன்படுத்துவதும், இதன் பின்னணியில் தான் அரங்கேறுகின்றது.

இதன் அடிப்படையில் நாம் :

இலங்கை அரசே!
1. இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணம் மூலம் மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் (இந்திய வள்ளம் உள்பட) வள்ளங்களை முடக்கு!!
2. அதன் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடு!!
3. கூலிக்கு வந்தவர்களை உடன் விடுதலை செய்!!!
4. பிராந்திய மீன்பிடி மேலாதிக்கம் செலுத்தும் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்கப்ப்பட்ட மீன்பிடி அனுமதியை உடனே நிறுத்து!!!
5. கிழக்கு மற்றும் தென் இலங்கை மீன்பிடியை புனருத்தாரணம் செய்!!
6. இறந்த தமிழக மீனவர்களுக்கும், இந்தியாவில் அத்துமீறி அழிந்த மீன்பிடி உபகரணங்களுக்கான நஷ்டஈடு வழங்கு!!

இந்திய அரசே!
1. பாக்குநீரிணையில் இழுவைப்படகு மீன்பிடியை உடனே தடை செய்!!
2. இலங்கை தமிழ் மீனவர்களுக்கு அவர்களின் அழிந்து போன மீன்பிடி உபகரணங்களுகான நஷ்டஈடு வழங்கு!!
இலங்கை அரசே! இந்திய அரசே!!
1. மீனவர் கொலையை சர்வதேச மட்டத்தில் ஆராய ஆவன செய்!!!
2. பாக்குநீரிணையின் இருகரையிலும் கரையோர மீன்பிடியை அபிவிருத்தி செய்!! அதை பாதுகாக்கும் மீன்பிடிக் கொள்கையை வை!!!
3. இந்திய மீனவர்களை அழித்த, இலங்கை மீனவர்களை அழிக்க முனையும் கடற் கொள்ளையை நிறுத்து! அதை ஆதரிப்பதை நிறுத்து!!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 16.02.2011)

http://www.ndpfront.com
http://www.tamilarangam.net
http://www.ndpfront.net
http://www.tamilcircle.net
http://kalaiy.blogspot.com/

Monday, February 14, 2011

பாட்டாளிகளின் போராட்டத்தை முறியடித்த எகிப்திய இராணுவம்

எகிப்தில் "முபாரக் இல்லாத முபாரக் ஆட்சி" தொடர்கின்றது. எதிர்பார்த்ததைப் போல "ஆள்பவரை மாற்றினால் போதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்." என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். எகிப்தின் ஆட்சியை முபாரக் என்ற ஒற்றை சர்வாதிகாரியிடம் இருந்து, இராணுவ சர்வாதிகாரம் பொறுப்பெடுத்துள்ளது. இராணுவ தலைமையகம் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மக்கள் இராணுவத்தை நம்புவதாகவும், இராணுவம் மக்களை நம்புவதாகவும் ஊடகங்கள் எம்மை ஆறுதலடைய வைக்கின்றன. அரை மில்லியன் படையினரைக் கொண்ட எகிப்திய இராணுவம் ஆப்பிரிக்க கண்டத்தில் பெரியது. இதே இராணுவம் தான் அமெரிக்காவிடம் இருந்து வருடாந்தம் 1 .3 பில்லியன் டாலர் உதவியைப் பெற்று வீங்கிக் கொண்டிருந்தது. மேற்கத்திய நாடுகள் பல இதே இராணுவத்திற்கு தான் தமது ஆயுத தளபாடங்களை விற்று காசாக்கிக் கொண்டிருந்தன. இதே இராணுவம் தான் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, காசா எல்லையை மூடி பாலஸ்தீனர்களை பட்டினி போட்டது. இப்போது இராணுவம் கூறுகின்றது: "நம்புங்கள், ஆறு மாதத்தில் ஜனநாயகம் நிச்சயம்." முபாரக் கூட இராணுவத்தின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்தார். ஒரு தடவை சிம்மாசனத்தில் அமர்ந்ததவுடன் நகர மறுத்து, தனக்கென தனியாக கட்சி ஒன்றையும் உருவாக்கி கேலிக்குரிய தேர்தல்களை நடத்தினார். நாளை, இன்னொரு முபாரக் வர மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

முபாரக்கின் பதவி விலகலை வான வேடிக்கையுடன் கொண்டாடி விட்டு கலைந்து செல்கின்றது மக்கள் கூட்டம். "இறுதியில் வெற்றி கிடைத்து விட்டது. இனி எல்லோரும் வேலைக்குப் போவோம். புதியதொரு எகிப்தை உருவாக்குவோம். எகிப்தியர்கள் கடின உழைப்பாளிகள் என்று நிரூபிப்போம்." யார் சொல்கிறார்கள்? ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கம் சொல்கின்றது. கெய்ரோ நகரில் சில மேட்டுக்குடி இளைஞர்கள் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் முபாரக் பதவி விலகுவது தேவைப்பட்டது. அரசை மாற்றுவதல்லை, அரசாங்கத்தை மாற்றுவது மட்டுமே அவர்கள் இலட்சியம். மக்கள் எழுச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தியவர்களும் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தான். ஒரு வறிய நாடான எகிப்தில் வசதிபடைத்த சிறுபான்மை மட்டுமே இணையத்தை பாவிக்கின்றது. "இணையப் புரட்சியாளர்கள்" எல்லோரும் இடதுசாரிகளல்ல. தமிழ் இணைய உலகில் தமிழ் இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுவதைப் போல, அரபு இணைய உலகில் அரபு இனவுணர்வாளர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. இவர்களின் அதிகபட்சக் கோரிக்கை ஜனநாயாக வழியில் ஆள்பவரை மாற்றுவதாகவே இருக்கும். இவர்கள் வர்க்கப் போராட்டத்தை கூட தேசிய இன எழுச்சியாக திசைதிருப்பும் வல்லமை கொண்டவர்கள்.

எகிப்தில் வர்க்கப் போராட்டம் நடந்ததா? எங்கே? எப்போது? கடந்த இரண்டு வருடங்களாக எகிப்திய உழைக்கும் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் குதித்தனர். எகிப்தின் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடையும் நேரத்தில் தான், நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த ஆர்ப்பாட்டங்கள் வந்தன. ஒரு வகையில் "முதலாளிகளின் வேலைநிறுத்தம்" என்றும் குறிப்பிடலாம். வாரக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் விரட்டியது. பங்குச்சந்தை இழுத்து மூடப்பட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இவற்றை தாங்கிக் கொள்வது? முபாரக்கை பதவி விலக வைத்து, ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வழமை போல வியாபாரத்தைக் கவனிக்க வேண்டாமா? எகிப்தில் மக்கள் எழுச்சியை தூண்டி விட்ட சர்வதேச சர்வாதிகாரிகள் முபாரக்கின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர். ஐ.எம்.எப்.பின் பிழையான ஆலோசனைகள், சர்வதேச சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்றி விட்ட சூதாடிகளின் பகற்கொள்ளை ஆகியன இனிமேல் யாருக்கும் தெரிய வராது. "முபாரக் தான் இப்போது இல்லையே? இனி என்ன பிரச்சினை? ஒழுங்காக வேலையைக் கவனியுங்கள்."

கடந்த சில நாட்களாக சர்வதேச தொலைக்காட்சிக் கமெராக்கள் கவனத்தைக் குவிப்பதற்கு முன்னர், கெய்ரோ ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் கலந்து கொண்டவர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளிகள். ஊடகங்கள் அவர்களை "மக்கள்", "ஆர்ப்பாட்டக்காரர்கள்" என்ற அடைமொழிகளால் மட்டும் குறிப்பிட்டு வந்தன. உழைக்கும் மக்களின் வர்க்கக் கோரிக்கைகளை தேசியவாத சக்திகள் உள்வாங்கிக் கொண்டன. அதன் பிறகு தான் உலகின் கவனம் தாஹிர் சதுக்கம் மீது திரும்புகின்றது. "மக்களுக்கு வயிற்றை விட மத உணர்வு முக்கியம்" என்று கூறித் திரிந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மிகத் தாமதமாகத் தான் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டது. உடனே அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படப் போகின்றது என்று கூப்பாடு போட்டன. ஆர்ப்பாட்டங்களில் மத்தியதர வர்க்க இளைஞர்கள் கலந்து கொண்ட பின்னர், "முபாரக் பதவி விலக வேண்டும்" கோரிக்கை மேலெழுகின்றது. பல நாட்களாக ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகளுக்கு முபாரக் செவி சாய்க்காத நிலையில், எதிர்ப்பு இயக்கம் திசை வழி தெரியாது தடுமாறியது. ஆனால் தடுமாறியது தேசியவாத சக்திகள் தான். களைத்துப் போனது மத்தியதர வர்க்கம் தான். உழைக்கும் வர்க்கம் இன்றைக்கும் அங்கே போராட்டத்தை தொடர்கின்றது.

கெய்ரோவின் தாஹிர் சதுக்கத்தில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்கினார்கள். புதிய மக்கள் தலைவர்கள் தோன்றினார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை அங்கேயே கூடிப் பேசினார்கள். ஏற்கனவே ஆளும் கட்சி சார்பான ஊழல் மலிந்த தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக சுதந்திரமான தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்களின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று, தொழிலாளரின் அடிப்படை ஊதியம் பற்றியது. மேலை நாடுகளில் உள்ளதைப் போல, மிகக் குறைந்த ஊதியம் இவ்வளவு என்று வரையறை செய்யும் சட்டத்திற்காக போராடுவது. நாடு முழுவதும் தொழிலகங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அரச அடக்குமுறைக்கு அதிகமானோர் பலியான சம்பவம் கெய்ரோவில் நடக்கவில்லை. தென் எகிப்திய நகரமொன்றில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நோக்கிச் சுட்டதில் குறைந்தது நூறு பேர் மரணமடைந்தனர். (இந்தச் செய்தி ஈரானிய தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பானது.) முபாரக்கின் பதவி விலகலால் உழைக்கும் மக்களின் போராட்டம் மேலும் உத்வேகம் பெற்றுள்ளது. இன்றைக்கும் கெய்ரோ தாஹிர் சதுக்கத்தில், பிற நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. அவர்களின் கோரிக்கைகள் அரசியல்-பொருளாதார மாற்றங்களை நோக்கியதாக உள்ளன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எங்கேயும் போகவில்லை. "முபாரக் ஓடி விட்டார். படையினர் எமக்கு உணவு கொண்டு வந்து தருவார்கள்." என்று அவர்கள் தமது குடும்பத்தினருக்கு சொல்ல முடியாது.

தற்போது எகிப்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் போராட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். El-Gabal el-Ahmar நகரில் பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம். ரெயில் துறை தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்தம். ஹெல்வன் உருக்காலையில் நிரந்தரப் பணியில் அமர்த்துமாறு கோரும் தொழிலாளரின் போராட்டம். ஹவாம்டியா சீனித் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம். எண்ணெய் உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு மலிவு விலையில் எரிவாயு வழங்குவதை நிறுத்துமாறு போராடி வருகின்றனர். எகிப்தின் தொழிலாளர்கள் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துகின்றனர். உலகம் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்கின்றது.
***********************************
எகிப்து குறித்த முன்னைய பதிவுகள்:

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?
எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி!!
எகிப்தின் எதிர்காலம் என்ன?
எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

Monday, February 07, 2011

எகிப்தில் சோஷலிசத்தை தடுப்பதற்கு இஸ்லாமே துணை!

"ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு என்ன வேலை? அடுப்படிக்கு போங்கள்!" துனிசியா எழுச்சியில் கலந்து கொண்ட பெண் பதிவர் Destin கு நேர்ந்த அனுபவம்.
(அவரது வலைப்பூ முகவரி: http://massir.blogtraffic.com)

துனிசியா ஆர்ப்பாட்டங்களில் அரச கைக்கூலிகளும் கலந்து கொண்டு அவ்வாறான கருத்துகளைப் பரப்பினார்கள். மேற்கத்திய நாகரீகத்தைக் கொண்ட துனிசிய மக்கள் அரபுலகில் மதச்சார்பின்மைக்கு பேர் போனவர்கள். கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் குடும்பத்திற்குள்ளேயே அடக்கமாக இருக்க வேண்டியிருந்தது. அப்படியான சமூகத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுப்பது கவலை தரும் அம்சமாகும். சர்வாதிகாரி பென் அலி ஆட்சியை விட்டு ஓடும் காலத்தில் இது போன்ற வதந்திகள் வேண்டுமென்றே பரப்பப்பட்டன. "பென் அலி இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை எதிர்த்து நின்று மக்களை பாதுகாத்தார். தற்போது அந்த பாதுகாப்பு அரண் இல்லாத நிலையில் இஸ்லாமியவாதிகள் மக்களை அடக்கி ஆளப் போகிறார்கள்." இது போன்ற பல கதைகளை கேட்பவர்கள் உண்மை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அதே போன்ற வதந்திகள் எகிப்தில் பரப்பப்படுகின்றன. எகிப்தில் "முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி" பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருப்பதால், எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின்றன.

முதலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறித்து சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம். காலனித்துவ காலத்தில் மேற்குலகிற்கு எதிராக தோன்றிய அரசியல் இயக்கம் தான் "முஸ்லிம் சகோதரத்துவம்". இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்காவை பிரிட்டனும், பிரான்சும் காலனியாக்கின. மு.ச.கட்சியானது முஸ்லிம்கள் இழந்த இஸ்லாமிய ராஜ்யத்திற்காக போராடுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. இது ஒரு வகை தேசியவாதம். மு.ச. கட்சியின் சித்தாந்தம் ஐரோப்பாவின் பாசிசக் கொள்கைகளுக்கு நெருக்கமானது. நாசரின் சோஷலிச ஜெனரல்கள் திடீர் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியமை, மு.ச.கட்சிக்கு நேரிட்ட மிகப்பெரும் பின்னடைவு. பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் சிறையிலடைக்கப்பட்டு, தலைவரும் கொல்லப்பட்டதால், கட்சி பலவீனப்பட்டது. அன்றிலிருந்து கட்சி ஜனநாயக வழிமுறைகளின் கீழ் செயற்பட முடிவெடுத்தது. அதிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சிறிய குழு தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுத்தது. பத்து வருடங்களுக்கு முன்னர், லுக்சொர் நகரில் சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த தீவிரவாதக் குழுவின் வெளிப்பாடாகும்.

நாசரின் காலத்தில் இஸ்லாமியவாத சக்திகள் தலையெடுக்க முடியாமைக்கு சோஷலிசப் பொருளாதாரமும் ஒரு காரணம். நிறுவனங்கள் யாவும் தேசியமயப் படுத்தப்பட்டிருந்ததால், சுதந்திரமான முதலீட்டுக்கு இடமிருக்கவில்லை. நாசருக்கு அடுத்து ஆட்சியைப் பிடித்த சதாத் சோவியத் யூனியனுடனான உறவை முறித்துக் கொண்டு, அமெரிக்கா பக்கம் சாய்ந்தார். இஸ்ரேலுடன் நட்புறவு ஒப்பந்தம் போட்டார். இதனால் இராணுவத்திற்குள்ளேயே அதிருப்தி நிலவியது. கனிஷ்ட தரத்திலான இராணுவ அதிகாரிகள் பலர் முஸ்லிம் சகோதரத்துவ அனுதாபிகள். ஒரு இராணுவ அணிவகுப்பில் சதாத் கொலை செய்யப்பட, சிம்மாசனம் முபாரக் வசம் சென்றது. தொடர்ந்து முப்பது ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முபாரக் காலத்தில் நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் முனைப்புடன் செயற்படுத்தப்பட்டன. நாடு ஐ.எம்.எப். ஆலோசனைப்படி ஆளப்பட்டது. முபாரக் காலத்தில் எகிப்து முற்றுமுழுதான முதலாளித்துவ நாடாகியது.

முபாரக் கால பொருளாதார சீர்திருத்தங்கள் பல எகிப்தியர்களுக்கு உவப்பானதாக இருந்துள்ளது. முபாரக் காலத்தில், கீழ் மத்தியதர, அல்லது உழைக்கும் வர்க்க எகிப்தியர்கள் கணிசமான அளவில் வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றனர். இதே காலகட்டத்தில் இலங்கையிலும் அது போன்ற சமூக மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வளைகுடா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா, கனடா என்று எங்கெல்லாம் மூலதனம் வரவேற்கின்றதோ, அங்கெல்லாம் எகிப்தியர்கள் சென்று பணம் சேர்த்து ஊருக்கு அனுப்பினார்கள். புலம்பெயர்ந்த எகிப்தியர்கள் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். முதலில் வயிற்றுக்காக போராட்டம். அது பூர்த்தி செய்யப்பட்டு விட்டால், இனவுரிமைப் போராட்டம். சாமானியர்களின் பிழைப்புவாத அரசியலை, முஸ்லிம் சகோதரத்துவம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. புலம்பெயர்ந்த மக்களின் நிதியில், எகிப்தில் இஸ்லாமிய வங்கிகள், இஸ்லாமிய பாடசாலைகள், இஸ்லாமிய மருத்துவமனை எல்லாம் தோன்றின. முதலாளித்துவ பொருளாதாரத்தில் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம் சகோதரத்துவம் அத்தகைய முதலீடுகள் மூலம் ஆதரவை பெருக்கிக் கொண்டது.

சிறு வியாபாரத்தில் ஈடுபடுபவர் கூட ஒட்டுமொத்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவுவதால், முஸ்லிம் சகோதரத்துவத்தின் முதலாளித்துவ அவதாரம் அமெரிக்காவுக்கோ, அன்றில் முபாரக்கிற்கோ ஆட்சேபிக்க வேண்டிய ஒன்றாக தெரியவில்லை. அதே நேரம், அவர்களின் அரசியல் பிரவேசம் மட்டும் தடுக்கப்பட்டது. முபாரக் தனது அதிகாரத்தை எவருடனும் பங்குபோட விரும்பாமை ஒரு காரணம். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் இயல்பான இஸ்ரேலிய எதிர்ப்புணர்வு அரசியல் இன்னொரு காரணம். சில வாரங்களுக்கு முன்னர், முபாரக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழும் வரையில், மு.ச.கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எல்லோரும் அரச படைகளால் அடக்கப் பட்டனர். இன்று வரை சுதந்திரமான பொதுத்தேர்தல் நடைபெறாததால், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எவ்வளவு பேர் வாக்களிப்பார்கள் என்று அனுமானிப்பது கடினம். குறைந்த பட்சம் இருபது வீத மக்கள் அந்தக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று கருதப்படுகின்றது. பிற எதிர்க்கட்சிகள் மக்களை திரட்டும் சக்தியற்று இருப்பதாலும், பலவீனப்பட்டிருப்பதாலும் முஸ்லிம் சகோதரத்துவம் பெரிய கட்சி போலத் தோன்றுகிறது.

முபாரக்கின் அரசு மொத்த அரபுலகிலும் கொடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்தியது. அத்தகைய கொடுங்கோல் ஆட்சியையே மக்கள் எதிர்க்கத் துணிந்து விட்டனர் எனில், முபாரக் எத்தனை தூரம் பலவீனமடைந்து விட்டார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எகிப்தில் ஆட்சிமாற்றம் என்பது அமெரிக்காவுக்கு தலையிடி கொடுக்கும் விஷயம். எகிப்து இஸ்ரேலுடன் பொதுவான எல்லையைக் கொண்டுள்ள, இஸ்ரேலுடன் இரண்டு யுத்தங்களில் ஈடுபட்ட, அரபு மக்கட்தொகை அதிகமாக கொண்ட நாடாகும். அத்தகைய நாடு இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதால், அமெரிக்க அரசு எகிப்துக்கு தாராளமாக இராணுவ தளபாடங்களை வழங்கி வந்தது. எகிப்து, இஸ்ரேலுக்கு அடுத்ததாக அதிகளவு அமெரிக்க இராணுவ உதவி பெரும் நாடாகும். முதலில் கடனுதவி, பின்னர் அந்தக் கடனைக் கொண்டு அமெரிக்க ஆயுதங்களை வாங்க வேண்டும். இதனால் வறிய நாடான எகிப்து அமெரிக்காவின் பெரிய இராணுவ சந்தையாக இருந்து வந்துள்ளது.

எகிப்தின் கேந்திர முக்கியத்துவம் கருதி, அங்கு நடக்கும் மக்கள் பேரெழுச்சிக்கு மேற்குலகம் ஆதரவு வழங்காமல் இழுத்தடிக்கின்றன. எகிப்தில் புரட்சி ஏற்பட்டு, அங்கே ஒரு மேற்குலக விரோத அரசு வருவதற்கிடையில், காய் நகர்த்த விரைகின்றன. அதற்காக எந்தப் பிசாசுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளன. "எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி ஏற்படும். அங்கே (மத அடிப்படைவாத) முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் ஆட்சி வந்து விடும்." என்று மேற்குலக ஊடகங்கள் ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. மறு பக்கம் அவர்களின் அரசுகள் அதே "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன்" பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இது ஒருவகையில் பின்லாடனை ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா உதவுவதைப் போன்றது. ஏனெனில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சிப் பிரமுகர் தான் பின்லாடனின் அரசியல் ஆலோசகர் சவாஹிரி.

இதையெல்லாம் கவனிப்பதற்கு தற்போது யாருக்கும் நேரமில்லை. மக்கள் போராட்டம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால், அது கம்யூனிசப் பேய், சோஷலிசப் பூதம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு வந்து விடும். ஏனெனில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் மட்டுமே மாற்று உண்டு. அதை விட, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆட்சியில் அமர்த்தினால், குறைந்த பட்சம் முதலாளித்துவத்தையாவது காப்பாற்றி விடலாம். துருக்கியில் உள்ளது போல, பாராளுமன்றத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி அரசாங்கம் நடத்தினால் என்ன குறைந்து விடும்? அப்படி திருப்திப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து விட்டார்கள்.

மக்கள் வீதிக்கு வந்து போராடிய ஆரம்ப நாட்களில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கவுமில்லை, ஆதரவு தெரிவிக்கவுமில்லை. ஆனால் மக்கள் சக்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பின்னர் அவர்களே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள். முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் அவர்களது பங்களிப்பு அவசியமாகப் பட்டது. ஆனால் தொடக்கத்தில் இருந்து போராட்டத்தை நெறிப்படுத்திய இடதுசாரி அமைப்புகளைப் பற்றி வெளியுலகம் அறியவில்லை. இன்று வரை செய்தி ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன. பாரம்பரிய இடதுசாரிகளான கம்யூனிஸ்டுகள், ட்ராஸ்கிச புரட்சிகர சோஷலிஸ்டுகள், ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

இவர்களை விட "ஏப்ரல் 6 இயக்கம்" அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றது. இளைய தலைமுறை இடதுசாரி ஆர்வலர்களைக் கொண்ட அந்த அமைப்பு சுதந்திரமான தனிநபர்களைக் கொண்டது. அமைப்பிற்கு கட்சிக் கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் உணவுக் கலவரங்களும், தன்னெழுச்சியான தொழிலாளர் போராட்டங்களும் இடம்பெற்றன. ஏப்ரல் 6 அன்று,El-Mahalla El-Kubra என்ற நகரில் இடம்பெற்ற தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் அரசு இயந்திரத்தை ஆட்டம் காண வைத்தது. தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டால் புரட்சியும் சாத்தியம் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. இரு வருடங்களுக்கு முன்னர் அரசால் ஒடுக்கப்பட்டாலும், ஏப்ரல் 6 மூட்டிய புரட்சிக்கனல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு மூலையில் தோன்றிய ஆலைத் தொழிலாளர் போராட்டம், நாடளாவிய மக்கள் எழுச்சிக்கு வித்திடும் என்று நேற்று வரை யாரும் நினைக்கவில்லை.

முக்கிய குறிப்பு: 2008 ஏப்ரல் 6 ம் தேதி, எகிப்தில் நடந்த தொழிலாளர் போராட்டம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவை இங்கே வாசிக்கலாம்.
எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?

Friday, February 04, 2011

இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]

(பகுதி : 5)

1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.

சோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்கத்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.

எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், "ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

ஒரு காலத்தில் "துருக்கேஸ்தான்" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.
சாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.

இரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.
ஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், "நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர்! மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.

சோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு  நன்மை உண்டாக்கும்.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்
4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை

Wednesday, February 02, 2011

எகிப்தின் எதிர்காலம் என்ன?

சமீப காலமாக, உலக ஊடகங்களின் கவனம் முழுவதும், கெய்ரோ மாநகரின் தாஹீர் சதுக்கத்தின் மீதே பதிந்துள்ளன. எகிப்தின் சர்வாதிகாரி முபாரக் வெளியேற வேண்டுமெனக் கோரும் ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாட்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. அரசை விமர்சித்தாலே சிறையில் போட்டு சித்திரவதை செய்யும் நாட்டில், சாமானியர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். சாலைகளை அலங்கரித்த முபாரக்கின் உருவப்படங்களை கிழித்து வீசுகின்றனர். பாதுகாப்புப் படைகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு இராணுவமே பாதுகாப்புக் கொடுக்கின்றது. முப்பது வருடங்களாக முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா, தற்போது முதுகில் குத்துகின்றது. ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவை தெரிக்கின்றது. முன்னாள் ஐ.நா. அதிகாரி எல் பரடையை அடுத்த ஜனாதிபதியாக்க பேச்சுவார்த்தை நடத்துகிறது. மிகக் குறுகிய காலத்திற்குள் அதிசயப்படத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன. எகிப்து மட்டுமல்ல, உலகமே மாறிக் கொண்டிருக்கும் அறிகுறிகள் இவை.


அரபுலகில் அதி கூடிய மக்கட்தொகையைக் கொண்ட எகிப்தில் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு குறைவில்லை. நீளமான நைல்நதியின் செழிப்பான மண்வளம் கொண்ட விவசாய நாடான எகிப்து, ஒருகாலத்தில் முழு ரோம சாம்ராஜ்யத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்தது. கிளியோபாட்ரா ஆண்ட காலத்திலும் எகிப்திய மக்கள் உணவுக்காக கலகம் செய்துள்ளனர். அப்போது கிளியோபாட்ரா தானியக் களஞ்சியத்தை திறந்து மக்களுக்கு உணவளித்தார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னர், எகிப்திய மக்கள் உணவுக்கலவரத்தில் ஈடுபடுகின்றனர். அன்றைய கிளியோபாட்ராவின் தாராள மனம், இன்றைய முபாரக்கிடம் இல்லை. ஒரு வல்லரசாக வரவேண்டிய எகிப்தை ஒட்டச் சுரண்டிய முபாரக்கும், ஆளும் கும்பலும், சேர்த்த சொத்துகளை பாதுகாப்பதில் குறியாக உள்ளனர்.

எகிப்தில் மக்கள் எழுச்சி திடீரென தோன்றி விடவில்லை. கடந்த சில வருடங்களாகவே உணவுப்பொருள் விலையேற்றம், அரச மானியக் குறைப்பு காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் தார்மீக கோபத்தை திசை திருப்பி விடுவதற்காக வகுப்புவாதக் கலவரங்களை அரசு தூண்டி விட்டது. எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் "இனந்தெரியாதோரின்" வெடி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காயின. இதைத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் இறங்கினர். அரசு தாக்குதல்களுக்கு "அல்கைதா" காரணம் எனக் கண்டுபிடித்து சிலரைக் கைது செய்தது. அரபுலகை குலுக்கிய துனிசியா புரட்சி மட்டும் இடம்பெற்றிரா விட்டால், எகிப்தில் மதக்கலவரங்கள் தொடர்ந்திருக்கும். மதவாதிகளும், இனவாதிகளும் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புவர். இறுதியில் பொருளாதாரப் பிரச்சினை அவர்களை ஒன்றிணைத்து விடும். எகிப்தின் மக்கள் எழுச்சியில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தோளோடு தோள் சேர்ந்து புரட்சியை நோக்கி வெற்றிநடை போடுகின்றனர்.

எகிப்தின் சினாய் பாலைவனப் பகுதியில் வாழும் பெதூயின் மக்கள், இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமாகும். உண்மையில் அரபுக்களின் முன்னோரான பெதூயின்கள் இப்போதும் நாடோடி வாழ்க்கை வாழ்வதால், கீழானவர்களாக கருதப்படுகின்றனர். சுயெஸ் கால்வாய்க்கும் இஸ்ரேலுக்கும் நடுவில் அமைந்திருப்பதால் சினாயின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சினாய் பாலைவனம் வெறும் மணல்மேடுகளை மட்டும் கொண்டதல்ல. கரடுமுரடான மலைக்குன்றுகளும் வாழ்வதற்கு ஏற்ற இடங்களல்ல. அரசும் பாராமுகமாக இருப்பதால், பெதூயின் மக்கள் வாழ்வாதாரம் தேடி கடத்தல் தொழிலில் ஈடுபட்டனர். சினாய்க்கு அருகில் தான் பாலஸ்தீன காசா பகுதி இருக்கிறது. இஸ்ரேலினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காசாவுக்கு பொருட்களை கடத்தி சென்று பணக்காரர் ஆனவர்கள் பலர். இஸ்ரேலின் நிர்ப்பந்தத்தால் காசா எல்லையை எகிப்திய படைகள் மூடி விட்டன. இருப்பினும் சுரங்கப்பாதை அமைத்து கடத்துகிறார்கள்.

IPS செய்தியாளர் முஹமட் ஒமார் வழங்கிய தகவல்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, புரட்சி எந்தளவு தூரம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. சினாய் பகுதி நகரங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெதூயின் இளைஞர்கள் போலிஸ் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர். காவல்துறையில் கடமையாற்றியவர்கள் சீருடை களைந்து ஆர்ப்பாட்டக்காரருடன் சேர்ந்து கொள்கின்றனர். பெதூயின் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. அந்த ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்பது யாருக்கும் தெரியாது. மலைப்பாறைகளை கொண்ட பாலைவனப் பிரதேசம் என்பதால், அரசு அங்கே சிறைச்சாலைகளை கட்டியிருந்தது. புரட்சியாளர்கள் சிறைகளை உடைத்து கைதிகளை விடுதலை செய்துள்ளனர். போலிஸ், சிறைக்காவலர்கள் சிறையுடைப்பை தடுக்கவில்லை. சிலநேரங்களில் அவர்களாகவே கதவுகளை திறந்து விட்டுள்ளனர். கடத்தல் குற்றங்களுக்காக சிறையில் இருந்த காசா பாலஸ்தீனர்கள் பலர் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு திரும்பியுள்ளனர். காசாவுடனான எல்லையும் திறந்து கிடக்கின்றது. எகிப்திய பாதுகாப்புப் படைகள் பின்வாங்கி விட்டனர். ஹமாஸ் தற்போது எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளது.


எகிப்தில் புரட்சியை வழிநடத்தும் சக்தியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின், சகோதர அமைப்பு தான் ஹமாஸ். தற்போதைய குழப்பகரமான சூழலில் இரண்டும் தம்மை பலப்படுத்தி வருகின்றன. எகிப்தில் விரைவில் இஸ்லாமிய புரட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கிட்ட நெருங்க முடியாத நிலைக்கு கொண்டு வந்தது. எகிப்தும் அந்தப் பாதையில் செல்கின்றது. எகிப்தில் இஸ்லாமியப் புரட்சி என்பது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கெட்ட சகுனமாகவே அமையும். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கே அதிகளவு எகிப்தியர்கள் ஆதரவளிப்பதால், சுதந்திரத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அந்தக் கட்சியே வெல்லும். இதனால் ஆட்சி நடத்த முடியாமல் பலவீனப்பட்டுப் போயுள்ள முபாரக்கை கைவிடும் அமெரிக்கா வேறொரு தலையை தேடுகின்றது. இன்னொரு மேற்குலக சார்பு ஜனாதிபதி, அல்லது கூட்டரசாங்கம் என்பனவே அமெரிக்காவின் தெரிவாக உள்ளது. எகிப்தை அவ்வளவு இலகுவாக புறக்கணிக்க முடியாது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக எகிப்து அதிகளவு அமெரிக்க நிதி, இராணுவ உதவியைப் பெறுகின்றது. இதிலிருந்தே எகிப்து எந்தளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியமானது என்பது தெளிவாகும்.

எகிப்தில் ஏற்படப்போகும் புரட்சி, பிற அரபு நாடுகளிலும் எதிரொலிக்கும். இப்போதே ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளில் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சர்வாதிகாரி சலேயை அப்புறப்படுத்துவதற்கான போராட்டம். ஜோர்டானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம். (ஜோர்டானில் ஏற்கனவே ஜனநாயகப் பாராளுமன்றம் இயங்குகின்றது.) சவூதி அரேபியாவும் தளம்பல் நிலையில் உள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் மாற்றங்கள், அங்கே அமெரிக்காவின் மேலாதிக்கம் தளர்வதைக் காட்டுகின்றது. குறிப்பாக இஸ்ரேலுடன் சமாதானமாக விட்டுக் கொடுத்து வாழும் ஜோர்டான், எகிப்து போன்ற அயல் நாடுகளில், இஸ்ரேலிய எதிரிகள் ஆட்சிக்கு வரும் சாத்தியம் உண்டு. இதனால் இஸ்ரேல் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலைக் கைவிட்டு விடும். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மாறி வருகின்றது. எதிர்கால வல்லரசான சீனாவுடனும், பொருளாதார வளர்ச்சி காணும் இந்தியா போன்ற நாடுகளுடனும் நட்பை அதிகரிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்பு குறைந்து செல்லும் வேளை, மத்திய ஆசியாவில் உற்பத்தி பெருகியுள்ளது. இதனால் இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டிய பொருளாதார தேவையும் இல்லை.


Egypt Revolution 2011 Demonstrators Vs police Fighting