Saturday, October 02, 2010

ஐ.நா.அறிக்கை: "அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது"

மே 31 காஸாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற மாவி மர்மரா என்ற நிவாரணக் கப்பல் இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த தொண்டர்கள் பலர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். "நிவாரணக் கப்பலில் இருந்தவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக சுட்டதாகவும்" இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நியாயப்படுத்தியது.

தற்போது ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் (United Nations High Commissioner for Human Rights) நியமித்த உண்மை கண்டறியும் குழு சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட தொண்டர்களின் பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. பிணங்களின் மீது காணப்பட்ட காயங்களை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாகின்றது. மரண தண்டனை நிறைவேற்றும் பாணியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 19 வயது (துருக்கி வம்சாவளி) அமெரிக்க பிரஜையான டோகனின் மரணம் சந்தேகத்திற்கிடமின்றி படுகொலை என நிரூபிக்கப் பட்டுள்ளது. அந்த இளைஞன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போதே சுடப்பட்டான். முதுகிலும், காலிலும் காயம் பட்டு சுயநினைவின்றி விழுந்து கிடந்தான். அதன் பிறகே பிடரியிலும், முகத்திலும் சுட்டதால் அவனது உயிர் பிரிந்துள்ளது.

ஐ.நா. அறிக்கை வருவதற்கு முன்னமே துருக்கி அரசு டோகனின் பிரேத பரிசோதனை முடிவுகளை அமெரிக்க தூதுவராலயத்திற்கு வழங்கி இருந்தது. தூதுவராலயம் அமெரிக்க நீதி அமைச்சுக்கு அனுப்பியிருந்தது. அதன் பிறகு எந்த செய்தியும் இல்லை. நீதி அமைச்சு இது குறித்து கருத்துக் கூற மறுத்து வருகின்றது. ஒரு அமெரிக்க குடிமகன் இஸ்ரேலிய படையினரால் படுகொலை செய்யப்பட்ட போதிலும், ஒபாமா நிர்வாகம் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறது. இஸ்ரேலுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு:


2 comments:

Anonymous said...

ஒபாமா நிர்வாகம் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறது. இஸ்ரேலுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள்.///

அமெரிக்காவை சண்டை போட சொல்றிங்களா.

Anonymous said...

தமிழீழத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றி எவருக்கும் கவலையில்லை. தமிழர்களும் மறந்துவிட்டார்கள்போல்தான் உள்ளது. துருக்கியர்களுக்காகவும் அமெரிக்க குடிமகனுக்காகவும் 'கவலைப்படும்' கலையகம் தமிழர் சோகங்களையும் எடுத்துச் சொல்லலாமே.