Thursday, October 16, 2008

அமெரிக்காவில் பாஸிச-சர்வாதிகார சதிப்புரட்சி?

"அனேகமாக இது தான் அமெரிக்காவின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மக் கெய்ன் வென்றால் அதிக காலம் உயிரோடு இருக்கப் போவதில்லை. அதற்குப்பின்னர் ஆட்சிக்கு வரும் துணை ஜனாதிபதி சாரா பாலின், புஷ்ஷின் கொள்கை வகுப்பாளர்களுடன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவ இருக்கிறார்." - இவ்வாறு கூறுகிறார் Naomi Wolf என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய "End of America", "Give me Liberty" போன்ற நூல்கள் ஏற்கனவே பல பிரதிகள் விற்பனையாகியுள்ளன. தான் ஊகித்த பல விடயங்கள் தற்போது நடந்து வருவதாக கூறுகிறார், இந்த எழுத்தாளர்.


Naomi Wolf சொல்வதன் படி, முன்பு குடியரசு கட்சியில் சார்பில் போட்டியிட்ட புஷ் கள்ள வாக்குகளால் வெற்றி பெற்றது போல, இன்றைய வேட்பாளர் மக் கெய்ன் ஜனாதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. தோல் புற்றுநோயால் அவதிப்படும் மக் கெய்ன் 2 அல்லது 4 ஆண்டுகள் தான் அதிக பட்சம் உயிர்வாழ்வார். அதன் பிறகு ஜனாதிபதியாகும் சாரா பாலின் "பொலிஸ் தேசத்தை" உருவாக்குவார். குடியரசு கட்சியின் கொள்கை வகுப்பாளர் கார்ல் ரவ்வினாலும், புஷ்ஷின் வலதுகரமான டிக் செனியினாலும் தெரிவு செய்யப்பட்ட நபர் சாரா பாலின். அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவப்போகும் குழுவும் இதுதான். சாரா பாலின் தற்போதே ராவ், செனி கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிவருவதும், அதேநேரம் 9/11, மற்றும் ஈராக் படையெடுப்பின் போது கூறப்பட்ட பழைய பொய்களை மீண்டும் எடுத்துக் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புஷ் நிர்வாகம் முன்னெடுத்த (கைதிகளை) சித்திரவதை செய்யும் சட்டத்தை நீக்கப்போவதாக பிரச்சாரம் செய்யும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவை பரிகசிப்பதும் கவனிக்கத்தக்கது.

"தேர்தல் நெருங்கும் சமயம், நிச்சயமற்ற தன்மையும், நெருக்கடிகளும் தோன்றும்." என்ற தனது தீர்க்கதரிசனம் தற்போது நிதி நெருக்கடி காரணமாக உருவாக்கி வருவதை நினைவு கூறுகிறார் Naomi. ஒரு ஜனநாயக சமூகத்தை தனிமைப்படுத்தவும், நிரந்தர அச்சத்துடன் வாழ வைக்கவும் பெரிய நெருக்கடி வழி செய்யும் என்று அதனை நியாயப்படுத்துகிறார். ஒரு நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான முதல் படி இதுவாகும்.


Naomi யின் கூற்றின் படி பாசிச சர்வாதிகாரத்திற்கான 10 அம்சங்கள் பின்வருமாறு:

1. அச்சப்படக்கூடிய உள்நாட்டு/வெளிநாட்டு பயமுறுத்தல்களை உருவாக்குதல். (உதாரணம்: 9/11 தாக்குதல்)
2. சித்திரவதைகள் நடக்கும் இரகசிய சிறைகளை உருவாக்குதல். (குவாந்தனமோ மற்றும் உலகம் முழுவதும் உள்ள இரகசிய சித்திரவதை முகாம்கள்)
3. பொது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத துணைப்படையை உருவாக்குதல். (ஈராக்கில் அட்டூழியம் புரிந்த Black Water என்ற தனியார் இராணுவம்)
4. சொந்த மக்களையே கண்காணிக்கும் நடைமுறை. (9/11 தாக்குதலுக்கு பின்னர் "தேசிய நாட்டுப்பற்று சட்டம்" தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க வழிவகுத்தது.)
5. மக்கள் அமைப்புகளை பொலிஸ் அடக்குமுறை மூலம் பயமுறுத்தல். (குடியரசு கட்சி மகாநாட்டை எதிர்த்த ஆர்ப்பாட்டக்காரரை கைது செய்த சம்பவம்.)
6. கண்மூடித்தனமாக கைது செய்தல், விசாரணையின்றி தடுத்து வைத்தல், பின்னர் விடுவித்தல். (5 ல் கூறப்பட்ட உதாரணம், மற்றும் சியாட்டில் கலவரம்.)
7. முக்கியமான நபர்களை கைது செய்தல்.
8. பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தல்.
9. அரசியல் எதிர்ப்பாளரை துரோகிகள் என முத்திரை குத்துதல்.
10. சட்டத்தின் படி செயல்படும் அரசை இரத்து செய்தல்.

நிதி நெருக்கடியை பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அரச கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான், ஹிட்லர், முசோலினி போன்றோர் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவியதாக வரலாறு கூறுகின்றது. நிதி அமைச்சர் போல்சன் 700 மில்லியன் டாலர் பொருளாதார மீட்பு திட்டம் என்ற வெற்று காசோலையை காட்டி, அதனை காங்கிரசில்(பாராளுமன்றில்) ஏற்றுக்கொள்ள வைத்ததன் மூலம், சுதந்திர சந்தையை மிரட்டி அடிபணிய வைக்க இருக்கிறார். இராணுவ வல்லமையுடன் கூடிய, அவ்வளவு பணம் ஒரு சதிப்புரட்சிக்கான அறைகூவலாகும்.


நிதி நெருக்கடிக்கு பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாவும், 11/09/2001 ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலை சாட்டாக வைத்து "நாட்டுப்பற்று" சட்டத்தை கொண்டு வந்த காலத்தை நினைவூட்டுகின்றன. பொதுமக்களின் சுதந்திரத்தை அடகு வைத்து, தொலைபேசி,மின்னஞ்சல்களை வேவு பார்க்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது, அதனை எதிர்க்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் "நாட்டுப்பற்றற்ற துரோகிகள்" என்று தூற்றப்பட்டனர். அது போன்றே தற்போதும் மீட்புநிதிக்கு எதிராக வாக்களிக்க பல காங்கிரஸ் உறுப்பினர்கள் அஞ்சினர். அவர்களது தொலைபேசி உரையாடல்கள் ஓட்டுக்கேட்கப் படுகின்றன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் அவசரகால சட்டம் கொண்டுவரப்படும் என்று மிரட்டப்பட்டது.

"நாம் இப்போது நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்." என்று புஷ்ஷும், சாரா பாலினும் திரும்ப திரும்ப கூறி வருகின்றமை, ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது என்பதை கோடிட்டு காட்டுகின்றது. இல்லாவிட்டால் எதற்காக அமெரிக்க நகர வீதிகளில் இராணுவத்தை நிறுத்த வேண்டும்? 1807 ம் ஆண்டிற்குப் பின்னர் இப்போது தான் முதன்முறையாக, நாலாயிரம் படையினர் "மக்கள் திரளை கட்டுப்படுத்துவது" என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ளனர். 2007 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தப்பட்ட பாதுகாப்பு சட்டம், ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்ய வாய்ப்பளிக்கின்றது என்பதை மறந்துவிடலாகாது.
_______________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.


Burned Feeds for kalaiy

No comments: