Friday, October 10, 2008

இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்



"இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், அரை மில்லியன் மக்கள் 11 டாலருக்கும் குறைவான கடனுக்காக, அடிமைகளாக வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் 90 வீதமானோர் தலித்துகள்."- மத்திய பிரதேச மாநில அறிக்கை.

Benjamin Skinner என்ற அமெரிக்க எழுத்தாளர் இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளிலும் தற்போதும் அடிமை முறை நிலவுகின்றது என்பதை, நேரடியாக தானே சென்று பார்த்து சேகரித்த தகவல்களை கொண்டு, தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். "A Crime So Monstrous" என்ற பெயருடைய அரிய பொக்கிஷமான இந்த நூல், அவரது பல வருட கடுமையான உழைப்பின் விளைவு. இந்த நூலை எழுதுவதற்காக பல நாடுகளில் அடிமைகளாக வாழும் மக்களுடன் பழகி, அவர்களது இருப்பிடத்தில் தங்கி கஷ்டத்தை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார். அடிமைகளின் உழைப்பை சுரண்டும் கிரிமினல்களுக்கும் அஞ்சாமல், அசாத்திய துணிச்சலுடன் ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை உலகறிய செய்யும் மாபெரும் பணியை செய்திருப்பது, இந்த நூலை படிக்கும் போது தெரிகின்றது. வாசிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல், சில தெரிவுசெய்யப்பட்ட அடிமைகளின் வாழ்க்கை கதைகளை, அதேநேரம் செய்திகளையும், புள்ளிவிபரங்களையும் சேர்த்து சுவைபட அளித்துள்ளார்.

சரித்திர நூல்கள் கூறுவது போல, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைக்கப்பல்கள் அமெரிக்க கண்டத்திற்கு போவதை தடை செய்ததன் பின்னும், காலனிய ஆதிக்கவாதிகள் தமது அமெரிக்க பெருந்தோட்டங்களில் வைத்திருந்த அடிமைகளை விடுதலை செய்ததன் பிறகும், உலகில் இன்று அடிமைகளே இல்லை என்று பலர் நம்புகின்றனர். அனால் உலகில் நிலவும் ஏழை-பணக்கார சமூக ஏற்றத்தாழ்வானது, ஒரு பக்கத்தில் அடிமைகளாக அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள், மறுபக்கத்தில் அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் அடிமை வியாபாரிகள், முதலாளிகள், பணக்காரர்கள், மற்றும் காமவெறியர்கள் ஆகிய சமூக பிரிவுகளை தோற்றுவித்துள்ளது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Skinner அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும், உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் இருந்து, நாகரீக உலகின் நவீன அடிமைகளைதேடும் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஒரு காலத்தில் அடிமைகளின் புரட்சி வெற்றியடைந்து பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற ஹைத்தி மக்கள், இன்று நித்திய அடிமை வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கே ஏழைகளின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரிஸ்தீத் கிரிமினல் குழுக்களாலும், அமெரிக்காவாலும் விரட்டப்பட்ட பின்னர், அந்நாடு தற்போது ஐ.நா. பாதுகாப்புபடையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. ஐ.நா.இராணுவத்தில் கடமையிலீடுபடுத்தப்பட்ட பன்னாட்டு வீரர்கள்(இலங்கை வீரர்களும் அடக்கம்), ஹைத்தி சிறுமிகளின் ஏழ்மையை பயன்படுத்தி, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த விவகாரம் வெளிவந்து, ஐ.நா.சமாதானப் படைகளின் மானம் சந்திக்கு வந்தது. வீதிகளில் அநாதரவாக விடப்பட்ட சிறுமிகள் 2 டாலருக்கு தமது உடலை வாடகைக்கு விடுகின்றனர். பாலியல் நுகர்வுக்காக கொடுக்கும் பணம் தான், ஐ.நா.படையினர் ஹைத்தியின் பொருளாதாரத்திற்கு வழங்கும் நேரடி பங்களிப்பு, என்று அங்கத சுவையுடன் சொல்லப்படுவதுண்டு.

இந்த நூலாசிரியர் கொடுக்கும் தகவலின் படி, இவையெல்லாம் அங்கே வழக்கமாக நடக்கும் அட்டூழியங்கள், எப்போதாவது தான் வெளிவருகின்றது. காலங்காலமாக தலைநகர் போர்ட்-ஒ-ப்ரின்சில் வாழும் வசதிபடைத்த ஹைத்தியர்கள், நாட்டுப்புற ஏழை சிறுமியரை வீட்டு வேலைக்காரிகளாக, அதாவது கூலி கொடுக்காத அடிமைகளாக, வைத்திருந்து கொடுமைப்படுத்துவதும், அதேநேரம் அவ்வீட்டு ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும் சர்வசாதாரணம். அமெரிக்காவில் வாழும் வசதியான புலம்பெயர்ந்த ஹைத்தியர்கள் கூட, கடத்தி வரப்படும் சிறுமிகளை வீட்டு அடிமைகளாக வைத்திருக்கின்றனர். சில பத்து டாலர்களுக்கு ஒரு சிறுமியை/சிறுவனை வாங்கும் நிலையுள்ளதை, நூலாசிரியர் ஒரு அடிமை வியாபாரியை சந்தித்து விசாரிப்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

சூடானில் தெற்குப்பகுதியில் பழங்குடியினமான டிங்கா மக்களின் வாழ்விடங்களை சூறையாட வடக்கில் இருந்து குதிரைகளில் வரும் அரேபியர்கள், பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாக பிடித்துச் சென்று, தமது வீடுகளில் வேலைக்கு அமர்த்துவது காலங்காலமாக நடந்து வரும் சம்பவங்கள். இது பெருபாலும் வாழ்வாதாரங்களுக்கான போராட்டமாக இருந்தாலும், சில அரேபியர்கள் இந்த பழங்குடியினரை இஸ்லாமியமயப்படுத்தவும், அதேநேரம் (அவர்களைப் பொறுத்தவரை) நாகரீகப்படுத்தவும் என்று, இந்த அடிமை வேட்டையாடலை நடத்தி வந்தனர். இருப்பினும் டிங்கா மக்கள் மிஷனரிகளால் கிறிஸ்தவர்களக்கப்பட்ட பின்னர், அதிலும் குறிப்பாக அரசுடன் மோதும் சூடான் மக்கள் விடுதலை இயக்கம்(SPLM) தோன்றிய பிறகு நிலைமை சர்வதேச அவதானத்தை பெறுகின்றது.

ஒரு முறை அமெரிக்க தொலைக்காட்சி சூடான் அடிமைகளைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. தொடர்ந்து கிறிஸ்தவ உதவி நிறுவனங்கள், சூடானில் கிறிஸ்தவ அடிமைகளை அரேபியரிடமிருந்து மீட்கப்போவதாக கூறி, நிதி சேர்க்கத்தொடங்கி விட்டன. கோடிக்கணக்கில் சேர்ந்த அமெரிக்க டாலர்களுடன் சூடான் சென்ற இந்த தர்ம ஸ்தாபனங்கள் குறிப்பிட்ட அளவு அடிமைகளை விடுவித்திருந்தாலும், அவமானத்திற்குள்ளும் மாட்டிக் கொண்டனர். SPLM கொமான்டர்கள் தாம் பிடித்து வைத்திருந்த சிறுவர்களையும், உதவிநிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அடிமைகள் என்று பொய் சொல்லிக் கொடுத்தனர். இயக்க கொமாண்டர்களின் சுயதேவைக்கும், ஆயுதங்கள் வாங்க அந்தப்பணம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அடிமைகளின் விடுதலை, SPLM மிற்கு நிதி சேர்ப்பதில் போய் முடிந்த கதை அம்பலமாகிய போது, அதையிட்டு தமக்கு கவலையில்லை என்று கூறின இந்த தர்ம ஸ்தாபனங்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச கட்டுமானம் வீழ்ந்த பிறகு பெருமளவு மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ருமேனியா, மற்றும் அதற்கருகே இருக்கும், முன்னாள் சோவியத் குடியரசான மோல்டேவியா என்பன கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று இந்நாடுகள் அதிகளவு பாலியல் அடிமைகளை உற்பத்தி செய்து பணக்கார நகரங்களுக்கு விநியோகித்து வருகின்றன. மேற்கு ஐரோப்பிய நகரங்களில், அல்லது துபாயில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி, இளம்பெண்களை கவரும் கடத்தல்காரர்கள், அவர்களை சில நூறு யூரோக்களுக்கு அடிமைகளாக விற்று விடுகின்றனர். இவர்களை வாங்கும் விபச்சார விடுதி உரிமையாளர்கள், இந்த இளம்பெண்களை விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அப்படி சம்பாதிக்கும் பணத்தையும் தாங்களே பறித்து வைத்துக் கொள்கின்றனர். இந்த பாலியல் அடிமைகள் தப்பியோட முயன்றால், ஊரில் இருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்து என்று மிரட்டப்படுகின்றனர்.

"Loverboy" என அழைக்கப்படும் காதலிப்பதாக நடித்து, கன்னியரை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிவிடும் தரகர்களும் நடமாடுகின்றனர். அவ்வாறு "காதலனால்" ஏமாற்றப்பட்டு ஆம்ஸ்டர்டம் விபச்சாரவிடுதியில் மாட்டிக்கொண்டு, பின்னர் அதிர்ஷ்டவசமாக தப்பிய ருமேனிய யுவதி ஒருவர், இந்த நூலில் நேரடி சாட்சியமளித்துள்ளார். நூலாசிரியர் மொல்டோவியா சென்று அங்கிருந்து இஸ்தான்புல்(துருக்கி) வரை, கடத்தல்காரரின் பாதையை பின்பற்றி சென்று, ஒரே நாளில் எவ்வாறு இந்த இளம்பெண்கள் மூன்றாமுலகில் இருந்து முதலாமுலகிற்கு கடத்தப்படுகின்றனர் என்பதை நேரில் பார்த்துள்ளார். துபாயில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் காமவெறியர்களால் கொலையாகி, யாரும் தேடாத அநாதை பிணங்களாக பாலைவனத்தில் வீசப்படும் செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்தியா சென்ற நூலாசிரியர், உத்தரப்பிரதேசத்தில் லொகராதல் என்ற இடத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான "கொள்" பழங்குடியின அடிமைகளைப்பற்றி விபரிக்க குறைந்தது ஐம்பது பங்கங்களை ஒதுக்கியுள்ளார். அங்கே கல் குவாரிகளை வைத்திருக்கும் உயர்சாதி ஒப்பந்தக்காரர் இந்த மக்களை அடிமைகளாக தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கின்றார். பாட்டன் வாங்கிய வெறும் 60 சதங்களுக்காக (டாலர்), அதற்கு வட்டி வளர்ந்து குட்டி போட்டு விட்டாலும், கடனை கட்டமுடியாமல் இன்று பேரப்பிள்ளைகள் குவாரிகளில் அடிமை வேலை செய்கின்றனர். இவர்கள் மீளமுடியாத கடனுக்குள் சிக்குவதன் காரணம், குடும்பத்தில் ஏற்படும் நன்மை, தீமைகளுக்கு முதலாளியிடமே பணம் கடனாக கேட்டு வாங்க வேண்டிய நிலை தான். ஆகவே திருமண விழா, மரணச்சடங்கு என்பன கடனை அதிகரித்து, இந்த மக்களை பரம்பரை அடிமைகளாக்குகிறது. இடதுசாரி தலித் சமூக ஆர்வலர் உருவாக்கிய, "சங்கல்ப்" என்ற அரசு சாரா நிறுவனம் செயல்பட தொடங்கிய பின்னர், சாத்வீக போராட்டம் மூலம் சில வெற்றிகள் சாத்தியமாகியுள்ளன.

இந்தியாவில் அடிமைகள் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இந்தியாவை காலனிப்படுத்தியிருந்த பிரிட்டிஷ்காரர்கள், அன்று தமது சாம்ராஜ்யமெங்கும் அடிமை முறையை ஒழித்து விட்டதாக அறிவித்த போதும், இந்தியாவில் ஏனோ விட்டுவைத்தனர். பின்னர் சுதந்திரமடைவதற்கு சில தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியாவில் அடிமைகள் இல்லையென்றும், "பண்ணையடிமைகளும்", "சுரண்டப்படும் உழைப்பாளிகளும்", அல்லது "ஏழைகளும்" மட்டுமே இருப்பதாக புதிய விளக்கம் கூறினர். இன்றைய இந்திய அரசும் அதே சொல்லாடலை பயன்படுத்துகிறது.

நாடு முழுவதும், சுமார் எட்டு மில்லியன் விவசாய அடிமைகள் உள்ளனர். சில பருத்தி விவசாயிகள், அதிக விளைச்சலை தரும் என்ற நம்பிக்கையில், சிறுமிகளை பருத்தித் தோட்டங்களில் தொழில் புரிய வைக்கின்றனர். உலகில் வேறெந்த நாட்டையும் விட, இந்தியாவில் தான் அதிக குழந்தைத் தொழிலாளர் உள்ளனர். வாரணாசி கம்பளம் தயாரிக்கும் நெசவாலைகளில், பிஹாரி சிறுவர்கள் ஒவ்வொருநாளும் 15 மணித்தியாலங்கள், கூலியற்ற வேலை வாங்கப்படுகின்றனர். கடுமையான வேலை காரணமாக, கண்பார்வை குறைவதுடன், எலும்பும் வளைவதால் சில சிறுவர்கள் நடப்பதற்கு ஊன்றுகோலை பாவிக்க வேண்டியுள்ளது. ஃபிரோசாபாத் நகரில் 1993 ம் ஆண்டு வரை, சேரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தலித் சிறார்களை விற்கும் "சிறுவர் சந்தை" செயற்பட்டு வந்தது. அங்கே வந்து சிறுவர்களை வாங்கிச் செல்லும் முதலாளிகள், தமது தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் 350 மில்லியன் வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளது. அங்கே இப்போது 83,000 லட்சாதிபதிகளும், 15 கோடீஸ்வரர்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் விதிவிலக்குகள். பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா இன்னமும் குழந்தைத் தொழிலாளரை வைத்திருப்பதை ஒழிக்கவில்லை. 14 வயது வரையான கட்டாய இலவச கல்வி இன்னமும் செயல்வடிவம் பெறவில்லை. சாதி ஒழிப்பும் அவ்வாறே சட்டத்தில் மட்டுமே உள்ளது. பிற வளர்முக நாடுகளைப்போல நகரங்கள் வளர்ந்தாலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இன்னமும் நாட்டுப்புறங்களில் வாழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியாமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்கின்றனர்.


_______________________________________________________________________
-A Crime So Monstrous-
by E. Benjamin Skinner
Published by : Mainstream Publishing Company (Edinburgh)
_______________________________________________________________________

5 comments:

புரட்சிக்கவி said...

இந்தக் கட்டுரை நெஞ்சைப்பிழிகிறது.இந்தியா ஒளிர்வதாக அரசியல் பிசாசுகள் சொல்வதும், பத்திரிக்கைப் பூசாரிகள் ஓதுவதும், ஒரு விரக்தியான மனநிலையேத் தருகிறது. இந்தியா முழுவதிலும் இதே நிலைமைதான் உள்ளது. ஏன், மத்தியதர மத்திய குடும்பங்கள் வரை இதேப் போராட்டம் தான் உள்ளது.
இவர்கள் கல்வி,திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காக, கடன் பட்டு அந்தக் கடனைக் கட்டுவதற்காகவே, ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள். நீதிமன்றங்கள் போன்ற பகாசுர நிறுவனங்களும், வட்டிக்கட்டத்தவறும் போது வருகின்ற வழக்குகளை சாட்சிகள் அடிப்படை என்று விசாரித்து, டிகிரி செய்கிறார்கள். மக்கள் வட்டிக் கட்டிக் கட்டியே சாகிறார்கள். என்று தீரும் இந்த அடிமையின் மோகம் ?????????

அறிவுடைநம்பி.

ஆர். அபிலாஷ் said...

well written. i must read this book. ur writeups r good.

Abilash
Chennai

Che Kaliraj said...

இந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிமை என்று வரும்போது கோவில்களில் காணப்பட்ட தேவதாசி முறை கூட அடிமைமுறைதானே. அவர்கள் திருமணம் செய்ய கூடாது. ஆண்களின் போக பொருள்களாகவே நடத்தப்பட்டனர். சரி அது கூட தற்போது ஒழிக்க பட்டு விட்டது போல் ஆகி விட்டது எனக்கூறினாலும். பல செங்கல் சூளைகளில், பல தீப்பெட்டி, வெடிமருந்து தொழில் சாலைகளில் இன்னமும் தொடர்கிறது பாதுகாப்பற்ற முறைகளில் இன்னமும் தம் இன்னுழப்பை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே. இம்முறை ஒழிய கடுமையான சட்டங்கள் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும். அப்படி தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் தவறு செய்தவர் ( அடிமையாக வைத்திருந்தவர்) தீவிரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

J.P Josephine Baba said...

தமிழகத்தில் செங்கல் சூளைகளில் அடிமைகள் உண்டு தான். ஆனால் படித்த ஒரு வர்கத்தை பிபிஒ என்ற பெயரில் நவீன அடிமைகளாக உருவாக்கி வருகின்றனர். அவர்கள் நிலை வெளியில் வர இன்னும் பல காலங்கள் ஆகலாம்... தமிழ்கத்தை பொறுத்த்வரை ஏழைக்ளுக்கும் தலிதுகளுக்கு இருக்க்கும் ஏக்கம் தாக்கம் படித்தவர்களிடம் இல்லை என்பதை குறிப்பிட வேண்டியதே. ஒரு கழிவறை சுத்தம் செய்பவர் ஒரு நாள் 3 மணி நேர வேலைக்கு 300 ரூ தந்தால் வேலைக்கு வருவேன் இல்லை என்றால் இல்லை என்று சொல்ல இயலும் போது படித்தவன் 1000-3000 க்கு அடிமை வேலை செய்ய தயங்குவது இல்லை.

Unknown said...

”நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நிலை கெட்ட மனிதரை நினத்து விட்டால்” என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கும் ஒவ்வொரு “விழா நாளும்” வேடிக்கை நாட்கள்தானோ ?
தலைவர்கள் சாகும்வரை பதவியிலேயே இருந்துவிட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே சென்று விடுவதும் ஒரு காரணமோ? அவர்களது பொது வாழ்வுக்கு வயது உச்சவரம்பு கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீர வாய்ப்புக் கிடைக்குமோ ?